சதை உண்ணும்…

இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு கடந்த வருடங்கள் போல் அல்லவே அல்ல என்பது புறநடை அல்லவே என்பதாகிவிட்டது. அது இயற்கையின் இயல்பிற்குத் தலைகீழாக்கப் போயிற்று. உலகு இன்று அனலாகக் கொதிக்கிறது. இந்த உலகு மனிதர்களின் செய்கைகளால் கொதிக்கிறது என்பதைப் பலர் நம்புகிறார்கள். சிலர் அதை இன்றும் நம்ப மறுக்கிறார்கள். மனித அறிவை, ஆராய்ச்சியை இன்றும் கேள்வி கேட்காது நம்பும் அளவிற்கு அவை விருத்தி அடையவில்லை என்பதை இது சுட்டிக் காட்டுவதாக இருக்கலாம். எது எப்படியோ உலகு கொதிப்பதை இந்தக் காலத்தில் வாழும் மனிதர்களால் நன்கு உணர முடியும். முடிந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத மனிதர்களும் உண்டு என்பது மறைக்க முடியாத உண்மை. இந்தியாவில் குடிப்பதற்கு நீரே கிடையாது குடங்களோடு தெருவில் நின்று அதற்காகப் போராடுகிறார்கள். வெக்கை தாங்காது புகையிரதத்தில் சென்றவர்கள் செத்து மடிகிறார்கள். இருந்தாலும் நோர்வேயில் வாழ்பவர்களுக்கு இப்போது எந்தவித எதிர்மறையான விளைவுகளும் இல்லை என்பதே ஆறுதலான உண்மை. அதற்கு மாறாக இங்கேயும் வெப்பமாக, அதை அனுபவிக்கும் தினமாக நாட்கள் பல தொடராக மலருகின்றன. அப்படி மலர்ந்த ஒரு நாளில் குமுதன் குடும்பம் திய்வ்கொல்மன் சென்று தீர்த்தமாடி வருவதாய் முடிவு செய்து இருந்தார்கள். குமுதன் குடும்பம் என்றால் ஆறு ஏழுபேர் கூட்டமாகச் செல்வார்கள் என்று எண்ணத் தேவையில்லை. அவர்கள் சராசரி நோர்வே மக்களைவிடச் சிக்கனமான குடும்பம். குமுதனுக்கு அன்பான, அழகான மனைவி உள்ளாள். அவளுக்கு றஞ்சிதா என்று பெயர். அவனது செல்வ மகனுக்கு அபின் என்று பெயர். உண்மையில் இந்தத் தீர்த்த திருவிழா அவரை எண்ணியே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தீர்த்தமாடிப் அத்தோடு அங்கேயே உணவு வாட்டிச் சாப்பிட்ட பின்பு ஆறுதலாக மலையே வீட்டிற்குத் திரும்பி வருவதாக அவர்களது திட்டம். திட்டமிட்டால் பின்வாங்குவது குமுதனின் அல்லது ரஞ்சிதாவின் வழக்கம் இல்லை. அவர்கள் தேவையான பொருட்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
தோலில் சூடு சுள்ளிடும் அளவிற்கு அன்று சூரியனின் வெள்ளிக் கதிர்களின் தனது வீரவிளையாட்டை நடத்திக் கொண்டு இருந்தது. சென்ற உடனேயே ஒரு முறை குமுதனும் அபினும் ஓடிச் சென்று கடலில் மூழ்கிக், கழித்துக் குளித்து வந்தார்கள். அதற்கு இடையில் ரஞ்சிதா அடுப்பு மூட்டி உணவு வாட்டத் தயார் செய்து இருந்தாள். அத்தோடு வர்த்தகப் பழத்தைத் துண்டு துண்டாக வெட்டுவதற்குக் கத்தியும் எடுத்து வந்ததிருந்தாள். அதை அப்போதே வெட்ட வேண்டும் என்று எண்ணியவள் அதை மாற்றிக் கொண்டு சாப்பிட்ட பின்பு இறுதியாக வெட்டலாம் என்று எண்ணினாள். ஆனால் அந்தக் கத்தியை அபின் கண்டு விட்டு அதை எடுத்து வர்த்தகப் பழத்தைத் தான் வெட்டுவதற்கு முயற்சி செய்தான். இறைச்சி வாட்டும் அக்கறையிலிருந்த ரஞ்சிதாவும், குமுதனும் அதைப் பின்பு கவனிக்கவில்லை. அரன் கத்தியோடு விளையாடிக் கொண்டு இருந்தவன் திடீரென வீரிட்டு அழுதான். அப்பொழுதே அவன் கத்தியை வைத்து விளையாடியதை அவர்கள் முற்றாக மறந்து போனது அவர்களுக்கு விளங்கியது. அவன் அந்தக் கத்தியால் கட்டை விரலில் வெட்டி, அதனால் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அதைக் கண்ட குமுதன் பாய்ந்து அடித்து அவனது விரல்களை அழுத்திப் பிடித்துக் கையை உயர்த்திப் பிடித்தான். அரன் அப்படியும் அழுது கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் இரத்த ஓட்டம் நின்றுவிட்டது. ஆனாலும் காயம் பாலைவன நிலம் போலச் சிவப்பாக வெடித்துக் கிடந்தது.
முதலுதவிப் பெட்டியைக் கொண்டு வந்து இருக்க வேண்டும். அதைக் கொண்டு வராததால் அவனது விரலுக்குக் கட்டுப்போட முடியவில்லை. இரத்த போக்கு ஒருவாறு நின்று போயிற்று. அதனால் அவன் காயத்தைப் பற்றி மறந்து போய் இருந்தான். அதைப் பற்றித் தேவையில்லாது ஏன் ஞாபகப்படுத்த வேண்டும் என்று ரஞ்சிதாவும் எதுவும் பேசாது இருந்தாள். அரனால் சும்மா இருக்க முடியவில்லை. அவன் குமுதனை மீண்டும் நீராட வருமாறு அழைத்தான். குமுதனுக்கு அவன் சந்தோசமே முக்கியமாக இருந்தது. அதனால் அவன் அவனை அழைத்துக் கொண்டு நீராடச் சென்றான். அங்கே சென்ற பின்பு முதலில் காயம் எரிவதாகப் புகார் செய்தவன் சிறிது நேரத்தில் அதை மறந்து சந்தோசமாக நீராடினான். அவனது சந்தோசத்தைப் பார்க்கப் பார்க்க குமுதனுக்குப் பூரிப்பாய் இருந்தது. விளையாட்டும் நீச்சலுமாக நேரம் விரைவாகச் சென்றது. அத்தோடு பசிக்கவும் தொடங்கியது. மீண்டும் திரும்பி வந்த போது இறைச்சி வாட்டப்பட்டுத் தயாராக இருந்தது. அவர்கள் வந்த உடனேயே சுடச் சுட அதை ரஞ்சிதா பரிமாறினாள்.   அதைக் குமுதன் வாங்கிச் சாப்பிட்ட அளவிற்கு ஆர்வமாக அரன் வாங்கிச் சாப்பிடவில்லை. விளையாட்டுப் புத்தி என்று எண்ணிய ரஞ்சிதா அவனைக் கட்டாயப்படுத்தி ஊட்டினாள். சிறிது சாப்பிட்டவன் அதை வாந்தியாக வெளியே எடுத்தான். அதைப் பார்த்த ரஞ்சிதாவுக்குக் கவலையாக இருந்தது. அவள் குமுதனைப் பார்த்து,
‘என்னப்பா இவன் கடல் தண்ணியைக் குடிச்சிட்டானே? சாப்பிடுகிறானும் இல்லைச்… தெண்டிச்சுச் சாப்பிட்ட வைச்சதையும் சத்தி எடுத்துப்போட்டான்.’
‘அப்பிடி அவன் தண்ணி குடிச்ச மாதிரி இல்லையே. ஏன் சத்தி எடுத்தான் எண்டு தெரியேல்ல. கொஞ்சம் விளையாடினான் எண்டாச் சரியாகீடும்.’
‘அவன் குளிச்சது காணும்… நாங்கள் கொஞ்சம் வெள்ளன வீட்டை போவம்.’
‘ம்…. நீ சொல்லுகிறதும் சரிதான்.’ என்றவன் அரனைப் பார்த்து,
‘இங்க வா அரண்.’ என்று கூப்பிட்டான்.

‘என்னப்பா…?’ என்ற வண்ணம் அரண் அங்கே வந்தான். வந்தவன் குமுதனின் மடியிலிருந்தான். இருந்தவனின் மேலில் எதேச்சையாக கை வைத்த போது அது அனலாகக் கொதிப்பதாக அவனுக்குத் தோன்றியது. வாந்தியும் எடுத்து இருக்கிறான் அத்தோடு மேலும் இப்படிக் கொதிக்கிறது என்றவுடன் அவனுக்கு சாதுவாகச் சஞ்சலம் தோன்றியது. அவனைப் பார்த்துக் கொண்டு இருந்த ரஞ்சிதாவுக்கும் அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் பயத்தை உண்டு பண்ணியது. அவள் தனது ஆதங்கத்தை அவனிடம் கேட்டாள்.
‘என்னப்பா யோசிக்கிறியள்? நீங்கள் ஒண்டும் பேசாமல் இருக்கிறதைப் பார்க்கப் பயமா இருக்குது.’
‘உடம்பு கொதிக்குது. அதுதான் ஏன் எண்டு தெரிய இல்லை.’
‘அப்ப கெதியாப் போவமே அப்பா?’
‘ம்… அதுதான் நல்ல ஐடியா எண்டு நினைக்கிறன்.’
‘சரி அப்ப வெளிக்கிடுவம்.’
இருவரும் புறப்பட்டு வண்டியை நோக்கிச் சென்றார்கள்.

அரணின் நிலைமையை உணர்ந்து கொண்ட ரஞ்சிதா அவனை மடியில் வைத்துக் கொண்டு பின்னாசனத்தில் இருந்தாள். அரனின் மேல் இப்போது வெப்பமூட்டி போல் கொதித்தது. அவன் ஏதோ வேதனையால் அனுங்கத் தொடங்கிவிட்டான். ரஞ்சிதாவுக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாகவும் பயமாகவும் இருந்தது. அவள் அவனது கையை ஆசனத்திலிருந்து எடுத்து மடியில் வைத்தாள்.
‘அம்மா…’ என்று அரன் அலறினான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. ஏன் இப்படி அழுகிறான் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை. அவள் அவன் கையை மெதுவாகத் திருப்பிப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் காயம் இறைச்சி போல இல்லை அதைவிட ரோஜா நிறத்தில் சிவந்து இருந்ததோடு அதைச் சுற்றிய பகுதியிலும் அதன் தாக்கம் இருந்ததைக் கவனித்தாள். வெட்டுக்காயம் இப்படி மாறியதை அவள் இதுவரையும் கண்டதில்லை. அதைவிட அந்தக் காயத்தில் ஒரு இடத்தில் தசை கறுப்புப் புள்ளியாகத் தொடங்கி இருந்தது. ரஞ்சிதா அதைப் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே சில கணங்கள் எதுவும் பேசாது யோசித்துக் கொண்டு இருந்தாள். அவள் எதுவும் பேசாது இருப்பதைப் பார்த்த குமுதன்,
‘என்ன பேசாமல் இருக்கிறாய்? அவன் அனுங்கிறான்… அவனைப் பாரு…’
‘ஐயோ…. எனக்குத் தலை சுத்துகிறமாதிரி இருக்குது. அதோடை எனக்குப் பயமா இருக்குது?.’
‘என்ன ரஞ்சிதா… ஏன் அப்பிடிச் சொல்லுகிறாய்? என்னத்துக்கு இப்ப இப்பிடிப் பயப்படுகிறாய்?’
‘அவன்ரை கையை நீங்கள் பிறகு கவனிக்க இல்லையே? இது சாதாரண வெட்டுக் காயம் மாதிரித் தெரிய இல்லை. ஏதோ காயத்துக்குள்ளால விசம் ஏறுகிற மாதிரி வித்தியாசமாய் தெரியுது. ஓமப்பா அப்பிடித்தான் இருக்குது.’
‘அப்ப டொக்ரரிட்டைப் போவமே?’
‘போங்க. கெதியாப் போங்க.’
வண்டி பாதையை மாற்றி விரைவாகப் பயணித்தது. ஸ்தூர்காத்தாவில் இருக்கும் அந்த அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் செல்வதற்கு அரை மணித்தியாலம் தேவைப்பட்டது. அது இருவருக்கும் அரை யுகம் என்றால் அரனுக்கு ஒரு யுகமாக வேதனையில் கழிந்தது.
அங்கே சென்றதும் வண்டியை நிறுத்திவிட்டுக் குமுதன் அரனைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான். அவன் அப்படி ஓடியதால் வண்டிச் சாவியை எடுத்து அதற்குக் கட்டவேண்டிய தரிப்பிடப் பணத்தைக் கட்டித் துண்டை எடுத்து வைத்துவிட்டு ரஞ்சிதாவும் அவசரமாக உள்ளே ஓடினாள். குமுதன் ஓடிய அவசரத்தைப் பார்த்துவிட்டு ஒரு தாதி வந்து அரனைப் பார்த்தாள். அவன் அரனின் காயத்தைக் காட்டினான். அவள் அதை உற்றுப் பார்த்தாள். ஏனோ அவள் முகம் சட்டென மாறியதை அவனால் நன்கு அவதானிக்க முடிந்தது. அவள் உடனே சென்று மருத்துவரை அழைத்து வந்தாள். அவரும் அரனின் காயத்தைப் பார்த்தார். பின்பு உடனடியாக தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் வரவழைத்தார். அத்தோடு ஏதோ மருந்தை இரத்த ஒட்டத்தில் செலுத்துவதற்குப் பொருத்தினார். அரன் தொடர்ந்தும் முனுகிக் கொண்டு கிடந்தான். அவர்கள் செய்வதை எல்லாம் பார்த்த குமுதனும், ரஞ்சிதாவும் எதுவும் விளங்காது திகைத்துப்போய் நின்றார்கள்.

அம்புலன்ஸ் வந்தது. ரஞ்சிதாவையும் அரனையும் அதில் ஏற்றி எங்கோ அனுப்பினார்கள். அதுவரையும் கதைப்பதற்கு நேரம் இல்லாது ஓடித் திரிந்த மருத்துவர் அப்போதுதான் குமுதனைப் பார்த்து,
‘மன்னிக்க வேண்டும். உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்லவே நேரம் கிடைக்கவில்லை. அவரது காயத்தின் ஊடாக இறைச்சி உண்ணும் பாக்டீரியா தாக்கி இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இப்போது அவரை றிக்ஸ்கொஸ்பிற்றல் அனுப்பி வைத்திருக்கிறேன். நீங்கள் அங்கே சென்று அவரைப் பாருங்கள். அங்கே மருத்துவர்கள் உங்களுக்கு மேற்கொண்டு விளக்கம் தருவார்கள். கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறேன். மன்னிக்க வேண்டும். எனக்கு நிறைய அலுவல்கள் இருக்கின்றன. நான் மேற்கொண்டு நோயாளிகளைக் கவனிக்க வேண்டும்.’
‘சரி.’ குமுதன் தலையை ஆட்டினான். அவனுக்கு உண்மையில் எதுவும் விளங்கவில்லை.
அதற்குமேல் அவன் அங்கே நிற்க விரும்பவில்லை. அவன் வண்டியை எடுத்துக் கொண்டு றிக்ஸ்கொஸ்பிற்றலுக்குச் சென்றான். அங்கே ரஞ்சிதா அவசர சத்திர சிகிச்சைப் பகுதிக்கு வெளியே இருந்த கதிரை ஒன்றில் மடியில் தலைவைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டு இருந்தாள். குமுதனுக்கு அது ஏன் என்று விளங்கவில்லை.  அவன் அருகில் சென்று அவள் தலையை மெதுவாகத் தடவினாள். நிமிர்ந்தவள் அவனைக் கட்டிப் பிடித்து ஓவென்று சத்தமாகக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். குமுதன் அவள் வாயை முதலில் பொத்தினான். எதுவும் விளங்காது அவளை அணைத்த வண்ணம் சிறிது நேரம் இருந்தான். பின்பு அவளை இறுக்கி அணைத்தபடியே,
‘எதுக்கு இப்ப இப்பிடி அழுகிறாய்? எல்லாம் சரியாகீடும். நீ பயப்பிடாதை.’ என்றான்.
‘சரியாகாது அப்பா.’
‘ஏன் அப்பிடிச் சொல்லுகிறா?’
‘கை எழுத்து வாங்கிக் கொண்டு போயிட்டாங்கள். விரலை எடுக்க வேணுமாம்.’
அவள் குரல் எடுத்து மீண்டும் அழுதாள். அவன்  திடீரென மயங்கி நிலத்தில் விழுந்தான்.

எதிரிகள்

சுகுனாவும் சந்திரனும் அன்று கடைக்குச் சந்தோசமாகவே சென்றனர். அப்படியே ஒவ்வொரு முறையும் அவர்கள் செல்வார்கள். திரும்பி வரும்போது அவர்கள் வானிலை மாறிவிடும். அது மனித இயற்கை. எதிர்பார்ப்புடன் புறப்படும் பயணங்கள். எதிர்பார்ப்பு எப்போதும் மனஸ்தாபங்களின் கருவறை. திரும்பி வரும்போது அது குழந்தையாக அவர்கள் கைகளில் தவழும். பின்பு…? அப்படி அதிசயமாக வானிலை மாறாது இருந்தால் அது புறநடையே. அல்லது அது கணக்குப் பார்க்காத விட்டுக்கொடுப்பாய் இருக்கும். கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வெளியேறும் நேரம் சுகுனா அதிஸ்ரலாபச்சீட்டுப் பதிவு செய்து வாங்க வேண்டும் என்று சந்திரனைக் கேட்டாள். சந்திரனுக்கு அதிஸ்ரத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அந்தப் பணத்தைச் சேர்த்தாலே அதிஸ்ரமாக ஒரு தொகை வங்கியில் சேர்ந்துவிடும் என்பது அவன் எண்ணம். ஏற்கனவே அவன் அட்டையிலிருந்து நிறையக் கழிந்து விட்டது. அதனால் அவன் அவளைப் பார்த்து,
‘இப்ப இது தேவையே? இந்தக் கிழமை வேண்டாம். வாற கிழமை பார்ப்பம்.’ என்று நழுவும் வழியைப் பார்த்தான். அவள் விடவில்லை.
‘இந்தக் கிழமை நிறையக் காசு விழும். எடுத்தா நல்லது.’ என்றாள்.
‘அது விழுந்தாத்தானே?’
‘விழும்… எடுப்பம்.’
‘என்னிட்டைக் காசில்லை. உன்னிட்டைக் காசிருந்தா எடு.’
‘நான் காட் கொண்டு வரேல்லை.’
‘ஓ என்னோடை கடைக்கு வரேக்க மட்டும் நீ காட்டைக் கொண்டு வராத.’ என்றான் சந்திரன்  கோபத்தோடு.
‘பெரிய காசு இது. பெரிசாக் கதைக்கிறியள்…’ அவள் கோபமானாள்.
‘கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்தால் இதுவும் பெரிய காசாய் வரும்.’
‘ம்… நீங்க சேர்த்து எடுத்துக் கொண்டு போங்க.’

கூறியபடி சுகுனா அவனை எரிப்பது போல முறைத்துப் பார்த்தாள். அதே நேரம் அவள் கூறியதின் அர்த்தம் அவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணியது. அதன் பின்பு அவனோடு அவள் எதுவும் கதைக்கவில்லை. இது எங்கே போய் முடியும் என்பது பற்றிச் சந்திரனுக்கு நன்கு தெரியும். தெரிந்தாலும் எல்லாவற்றிற்கும் தான் என்ன பணமரமா என்கின்ற எண்ணத்தில் அவன் கொடுக்க மறுத்தான். காசு அட்டையை அவள் வீட்டில் வைத்துவிட்டு வருவது இது முதல் தடவை அல்ல. கொண்டு வந்தால் தனது பணத்தில் செலவாகிவிடும் என்பதில் அவள் குறியாக இருப்பாள். அத்தோடு தன் பணத்தை மட்டும் கரைப்பதில் ஆர்வத்தோடு இருப்பாள் என்கின்ற அவிப்பிராயமும் அவனிடம் உண்டு.

சுகுனா மேல் அளவு கடந்த காதல் சந்திரனுக்கு உண்டு. அவளை எண்ணினால் அவன் கண்களில் நீர் கோத்துக் கொள்ளும். ஏன் என்பது அவனுக்குத் தெரியாது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்பது போல… அப்படி ஒரு உணர்வு. இது ஒரு முகம். இதற்கு எதிராக மறுமுகமும் உண்டு. அது அளவுகடந்த வெறுப்பாக அவள்மேல் படரும். அவளைக் கண்ட நாள் முதல் அவளோடு எக்கணமும் பிரியாது சேர்ந்து வாழவேண்டும் என்பது அவன் பேரவா. அதே போல் அவளை விட்டு விலகி எங்காவது போய்விட வேண்டும் என்பதும் அவன் மனதிற்குள் எழும் அடங்கா அவா. வாழ்க்கை இவ்வளவு சிக்கலாக இருக்கும் என்று அவன் எண்ணியது இல்லை. இன்று அதை எளிமையாக்கும் வழி அவனுக்குத் தெரியவில்லை. அவள் சில வேளைக் காதலால் கசிந்து… கலந்து… அணுவைப் பிரித்தாலும் எம் உறவைப் பிரிக்க முடியாது என்பதாகப் பிணைந்து கிடப்பாள். அப்போது இனி எப்போதும் எம்மிடையே எந்த வேறுபாடும் நிச்சயம் வரவே முடியாது என்று அவன் எண்ணுவான். அந்தப் பிணைப்பு எந்தக் கணத்திலும் தெறிக்கும்… மீண்டும் எரிமலை எப்போது வெடிக்கும்…? என்பது யாருக்கும் தெரியாது. அதன் பின்பு அவள் வெறுமையாகக் கிடக்கும் அறைக்குள் வேகமாகச் சென்று அடைந்து கொள்வாள். அப்போது அவனுக்கும் கோபமாக இருக்கும். இவளிடம் தான் ஏன் கெஞ்ச வேண்டும் என்கின்ற வீராப்போடு தங்கள் அறைக்குள் அல்லது கோலில் இருக்கும் சோபாவில் வந்து இருப்பான். அல்லது படுப்பான். இருந்தாலும் மனம் புயல் கொண்ட கடலாக ஆர்ப்பரிக்கும். இப்படி எவ்வளவு காலம் என்கின்ற எண்ணம் அலையலாகத் தோன்றும். எங்காவது… எல்லாவற்றையும் துறந்து… அமைதி தேடி ஆன்மீகத்தில் தொலைய மனது உந்தும்.
அவள் அறைக்குள் அடைந்து கொண்டால் ஒரு இரவு கடக்க வேண்டும். அது கடந்தால் அவளே அவனைத் தேடி வருவாள். சிரிப்பாள். கொஞ்சுவாள். எதுவும் நடக்காதது போல் கதைப்பாள். சில வேளை மன்னிப்புக் கேட்பாள். எல்லாம் மாறியது… இனிச் சந்தோசமே என்று எண்ணி இறுமாந்து இருப்பான். ஆனால் புயல் மீண்டும் பலமாக வீசும். அந்தப் புயலைக் கண்டு அவன் மனதிலும் பலமான சூறாவளி எழுந்து கூத்தாடும். ஆணும் பெண்ணும் வேறு வேறு உலகங்கள். அவை என்றும் ஒத்துப் போகவே முடியாதவை. அவை இரண்டும் எண்ணுபவை அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். பெண் இதயத்தைப் பயன்படுத்தினால் ஆண் மூளையைப் பயன்படுத்துவான். ஆணிற்கு இடது பக்க மூளை பெண்ணிற்கு வலதுபக்க மூளை. பெண் உணர்ச்சியில் தத்தளித்தால் ஆண் வரவு செலவுக் கணக்குப் பார்ப்பான். இரண்டும் இருவிதமா எதிர்ச் சக்திகள் கொண்ட துருவங்கள். ஆனால் அவை இரண்டும் ஒன்றை ஒன்று கவரும் சக்தி கொண்டவை. அதே வேகத்தில் எதிர்ச் சக்தியை தமக்குள் உருவாக்கும் திறனும் கொண்டவை. அவை சேர்ந்து இருக்கவும் வேண்டும். அவற்றால் சேர்ந்து இருக்கவும் முடியாது. இயற்கை அப்படியே படைத்திருக்கிறது. இயற்கை தனது தேவையைப் பூர்த்தி செய்யத் தனது படைப்புக்களை மயக்குகிறது. அந்த மயக்கம் இருக்கும் வரைக்கும் சமாதானம். அது முடிந்ததும் அங்கே யுத்தம் மூண்டுவிடும். எவ்வளவிற்கும் படித்து இருக்கலாம். எந்த ஞானத்தையும் பெற்று இருக்கலாம். சாந்தத்தைப் போதனையால் மனதில் ஏற்றி இருக்கலாம். இருந்தும் யுத்தம் மூளும். அதன் பின்பு சமாதானம் பிறக்கும். சமாதானத்தை இயற்கை கொண்டுவருவது போல யுத்தத்தையும் அதுவே அவர்களுக்கு உள்ளே பொதிந்து வைத்திருக்கிறது.
கால காலமாய் இதைப் பலரும் அறிந்து இருந்தாலும் இணைப்புக்கள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ நடைபெறுகின்றன. அங்கே யுத்தமும், சமாதானமும் அடிக்கடி வந்து போகின்றன.
பெண்ணும் ஆணும் சேர வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. ஆனால் அவை சேரும். இயற்கை அதன் சூட்சுமத்தை அவர்களில் புதைத்து வைத்திருக்கிறது. உலகத்தில் உள்ள அனேக உயிரினங்கள் இந்த மாய வலைக்குள் அகப்பட்டவையே.
அன்று கடையால் வந்த பின்பு கதவடைப்பால் சமையல் அறை மூடப்பட்டு இருந்தது. சந்திரனுக்கு வேறு வழி இல்லை. இணையத்தில் இரைதேட அவர்கள் வீட்டிற்குக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றார்கள். சாப்பிடச் சுகுனாவையும் கூப்பிட்டான். அவள் வரவில்லை. அதிஸ்ரலாபச் சீட்டை வாங்கிக் கொடுத்து இருக்கலாம் என்று அப்போது அவனுக்குத் தோன்றியது. உச்சியில் ஏறிய பின்பு தோன்றினால் என்ன தோன்றாமல் விட்டால் என்ன என்பதும் அவனுக்கு விளங்கியது. அடுத்த நாள் சுகுனா அவனைத் தேடி வந்தாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
‘என்ன கோபம் மாறீட்டுதா?’
‘வேறை என்ன செய்கிறது. நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத் தண்ணிதான் எண்டு முடிவாப் போச்சுது. இனிக் கேவிச்சு என்ன செய்கிறது?’
‘அப்ப ஏன் கோபிக்கிறாய் நீ.’
‘நீங்கள் செய்கிறதைப் பார்த்தா கோபம் வராமல் என்ன செய்யும்?’
‘பிறகு ஏன் சமாதானம் இப்ப?’
‘மனம் மாறிடுதே… உங்களை விட முடியல்லையே?’
‘மாறத இயற்கை. அதன் தேவை.’
‘என்ன?’
‘ஒண்டும் இல்லை… கிட்ட வா.’ என்றான் அவன்.

இன்னும் சில பயித்தியங்கள்…

இன்னும் சில பயித்தியங்கள்
இறந்து போன கனவுகளில்
இன்றைய அவர்கள் ஆதங்கம்
மனதில் ஊறவைக்கும் பரிதாபம்
இனி விதி செய்வதற்கு
எவருக்கும் இடம் இல்லாத
எம் வரலாறு.
அவர்களால் இடப்பட்ட முற்றுப்புள்ளி
ஏன் அவர்கள் பக்கங்களில் பதியவில்லை?

நெருஞ்சி முள்ளு

நெருஞ்சி முள்ளு

இன்னும் பேசப்படாதவை, இனியும் பேசப்படாதவை பற்றிச் சிறிது பேசலாம் என்கின்ற எண்ணத்தில் உருவான எனது சிறிய முயற்சி. போராட்டம் முடிந்தாலும் போராடும் இனமாக வாழப் பிறந்ததாக ஈழத் தமிழ் இனம். அதன் அவலங்கள் தொடர்கதையே. அதைப்பற்றி ஒரு சிறிய சாளரத்தைத் திறக்கும் என்முயற்சி.

உதயம்

இந்திரன் அந்த விகாரைக்குள் புகுந்தான். புத்தரை அங்கே கண்டு கொள்ளலாம் என்கின்ற திடமான நம்பிக்கை அவனிடம் இருந்தது. இந்திரன் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டான். பௌத்த துறவி போலக் காவி தரிக்காவிட்டாலும் அவனும் காவி தரித்திருந்தான். தலை மொட்டையாக மழிக்கப்பட்டு இருந்தது. முகத்திலும் துளியளவு ரோமம் இல்லை. அதுவும் சுத்தமாக மழிக்கப்பட்டு பளிங்காக மினுமினுத்தது. அவன் இன்னும் பௌத்த துறவியாக மாறிவிடவில்லை. எதுவாக மாறவேண்டும் என்பதைப் பற்றி அவன் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதற்கு முன்பு புத்தரைக் காணவேண்டும் என்பது அவனுடைய அடங்காத அவா. அந்த அவாவோடே அவன் அந்த விகாரைக்குள் புகுந்தான். புத்தர் உயிரோடு இருக்கிறாரா? இன்று அவர் இல்லை என்று இந்த உலகம் நம்பினாலும் அவரைக்காண வேண்டும் என்பது அவனது நம்பிக்கையுடன் கூடிய அவா. அவரைக் கடவுள் ஆக்காது இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். யாரும் அதைக் கேட்கவில்லை. இது பற்றி இந்திரனுக்குத் தெரியாது. இந்திரனாலும் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. அவனும் கடவுள் என்றால் அர்ச்சுனனின் கண்ணன் போல் நேரே வந்து பிரபஞ்சத்தையே தன்னில் காட்ட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்புக் கொண்டவன். அதனால் அவன் எண்ணம் அவரைப் பார்ப்பது மடுமாகவே இன்று இருந்தது? கடவுள் கோயிலில் இருப்பார் என்பதை இந்திரன் நம்பினான். அதைப் போல புத்தர் இங்கே இருப்பார் என்பதையும் அவன் முழுமையாக நம்பினான். அவன் நம்பிக்கையோடு விகாரைக்குள் காலடி எடுத்து வைத்தான். கால் குளிர்ந்தது. உடல் சிலிர்த்தது. உள்ளம் குளிர்ந்தது. மிகுதி ரோமங்கள் குத்திட்டு நின்றன. அவன் கண்கள் ததும்பின. உள்ளம் கோடைக் காலத்துப் பனியாக உருகிக் கண்களால் அது அருவியாகப் பெருகிக் கொட்டியது. புத்தர் எப்போதும் அமைதியை விரும்பியவர். என்றும் கோபத்தைத் துறந்தவர்.
உள்ளே புத்தரின் காலடியில் அன்று மலர்ந்த வெண்தாமரை மலர்கள். இந்திரன் தனது மனதும் அப்படி இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். புத்தரின் அந்த உருவம் எதை அவர் வெறுத்தாரோ அதனாலேயே செய்யப்பட்டு இருந்தது. இருந்தாலும் இந்திரனுக்கு அதில் ஒரு சாந்தம் தெரிந்தது. அது அவனை அமைதிக்குள் தள்ளியது. எரியும் தீபங்கள் அவன் மன அழுக்கை எரிப்பதாக இருந்தது. அமைதி, சாந்தம் பரவ அவன் மனது ஒருநிலைப்படத் தொடங்கியது. புத்தர் அதே சாந்தத்தோடு, அதே அமைதியோடு… அவர் இன்று இவனுக்காகப் பேசுவாரா? இந்திரன் புத்தரைப் பார்த்துக் கொண்டு நின்றான். மாறாத அதே சாந்தம். அதே அமைதி. ஆனால் அவர் பேசவே இல்லை. அவர் பேசாது விட்டால்… அவன் கண்கள் கலங்கின. கவலை பெருகியது. மனம் அலைபாயத் தொடங்கியது. பலர் வெண்தாமரை மலர்களைக் கொண்டு வந்து அர்ப்பணித்தனர். சிலர் செந்தாமரை மலர்கள் அர்ப்பணித்தனர். வந்தவர்கள் வழிபாடு முடித்து நகர்ந்தனர். இந்திரனால் முடியவில்லை. இறைவனாகப் புத்தரை இமைக்கும் கணமாவது நிஜமாகப் பார்த்துவிட வேண்டும் என்கின்ற அடங்காத அவன் ஆசை. அதை யாரிடமும் சொல்லிவிட முடியாது. சொன்னால் இவன் பயித்தியக்காரன் என்று நகைப்பார்கள். இந்திரன் அசையாது நின்றான். கண்கள் உருகும் மெழுகாகச் சிந்தின. இந்திரன் நின்றான். ஒரு மணித்தியாலம் நின்றான். பல மணித்தியாலங்கள் நின்றான். ஆலயம் மூடும் வரைக்கும் நின்றான். இறுதியாக அவர்கள் அவனை வெளியேற்றினர். இப்போது புத்தரை எண்ண அவனுக்கு வெறுப்பாக இருந்தது. இனி என்ன செய்வது என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவன் சோகமாக நடந்தான்.

*

இந்திரன் வெள்ளைச் சாறம் கட்டி இருந்தான். வெள்ளை மேற்சட்டை அணிந்திருந்தான். தலையில் வெள்ளைக் குல்லாவும் அணிந்து இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவனை விலத்திக் கொண்டு பலர் உள்ளே சென்றார்கள். அது ஒரு வெள்ளை மசூதி. அரச காலத்தில் வெள்ளை மாபிள் கற்களால் கட்டப்பட்ட அந்த மசூதியின் நிலமும் வெள்ளையாக மினுங்கியது. அவன் இப்படி நிற்பதை சிலர் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றார்கள். இந்திரனுக்கு இங்காவது இறைவனைப் பார்த்துவிட வேண்டும் என்று மனது கிடந்து துடித்தது. இங்கே வந்துவிட்ட அவனுக்கு இப்போது என்ன செய்வது என்று விளங்கவில்லை. இருந்தாலும் இறைவனை இங்காவது பார்த்துவிட வேண்டும் என்கின்ற ஆசை அவன் நினைவையும் கண்ணையும் மறைத்தன. அவன் மெதுவாக உள்ளே சென்றான். சிலர் அவனைப் பார்த்து நகைத்தனர். எதற்காக நகைக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவனும் முகம், கை, கால் அலம்பினான். ஆவலோடு அல்லாவைக்காண அவன் உள்ளே சென்றான். உள்ளே சென்ற அவன் மலைத்தான். திகைத்தான். பிரமிப்பில் உறைந்தான். தங்கம் பதித்த தூண்கள். எங்கும் நிறைந்த சித்திரங்கள். வைரமாய் ஒளிரும் கண்ணாடிச் சுவர்கள். நிலத்தின் செங்கம்பள விரிப்புக்கள். இந்திரனுக்கு ஒருகணம் தன்மீது கோபம் வந்தது. பார்க்க வந்ததை விட்டுவிட்டுப் பராக்குப் பார்ப்பதை எண்ணிக் கவலை வந்தது. அங்கே சிலைகளை வைத்துச் சித்திரவதை செய்யும் முறை இல்லை. அதுவும் அவனுக்கு அன்னியமாக இருந்தது. சிலைகள் இருந்த இடத்திலேயே இறைவனைச் சந்திக்க முடியவில்லை. இங்கு அது முடியுமா? என்கின்ற சந்தேகம் எழுந்தது. இந்திரன் தன்னைக் கடிந்து மனதை ஒருநிலைப்படுத்தினான். முட்டுக்கால் இட்டு மற்றவர்களோடு இருந்தான். கண்கள் மூடிக் கைகள் ஏந்தி அல்லா… அல்லா என்று உள்ளுருகி வேண்டி அந்த அஸ்ரத் தொழுகையைத் தொழுதான். எவ்வளவு நேரம் அவன் அப்படிப் பிரார்த்தித்தான் என்பது விளங்கவில்லை. அல்லா, அல்லா என்று அவன் மனம் உருகியது. இந்திரன் என்று அவர் அழைப்பார் என்று கண்ணை முடிக் காத்திருந்தான். எதுவும் கேட்கவில்லை. எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. யாரோ அவன் தோழில் கைவைத்தார். அவன் கண்களைத் திறந்தான். கிழவர் ஒருவர் அவனைப் பார்த்துப் பரிதாபமாய் சிரித்தார். இந்திரன் கலங்கிய கண்களோடு வெளியே வந்தான். அவனுக்குச் செத்துவிடலாம் போல இருந்தது. அவன் சிறிது நேரம் வெளியே நின்ற அழுதான். இருந்தாலும் அவனிடம் நம்பிக்கை இருந்தது. இன்னும் பல இடங்கள் இருக்கின்றன என்கின்ற துணிவு வந்தது. அவன் அதனால் மேற்கொண்டு நடந்தான்.

*

இந்திரன் துறண்கெய்மில் இருக்கும் அந்தப் புகழ் பெற்ற கருங்கற் தேவாலயத்திற்குள் இருந்தான். இது பதினோராம் நூற்றாண்டில் அரசர் இரண்டாவது ஊலாவிற்காகக் கட்டப்பட்டது. பின்பு பல மாற்றங்களைத் தாங்கி இன்று கருங்கற் தேவாலயமாக… ரோமாபுரியின் சிற்பக் கலையோடு, யேசுபிரானை ஞாபகப்படுத்தும் ஒரு முக்கிய தலமாக நோர்வேயில் இருக்கிறது. யேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று பலர் நம்புகிறார்கள். சிலர் காத்து இருக்கிறார்கள். நம்பிக்கையே வாழ்க்கை. அதுவே கடவுள் என்பது அவர்கள் எண்ணம்.
இந்தத் தேவாலயம் நோர்வே அரசகுடும்பத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்று என்கின்ற எந்தத் தகவலும் இந்திரனுக்கு இப்போது முக்கியம் இல்லை. அவன் தேடுவது அவனுக்கு மட்டுமே தெரியும். அதை வெளியே சொல்லவும் அவனால் முடியவில்லை. இன்றாவது அது நிறைவேற வேண்டும் என்பதே அவன் அடங்காத அவா. ஆயிரத்து எட்டு நூறு நபர்களை உள்ளடக்கக்கூடிய அந்தத் தேவாலயத்தில் இன்று அதிக கூட்டம் இல்லை. இருக்கும் கூட்டத்திற்கு பிரார்த்தனையும், பிரசங்கமும் நடக்கப் போகிறது. அது முடிய இந்திரனுக்காக யேசு காட்சி தருவார் என்பது அவன் இன்றைய அசைக்க முடியாத நம்பிக்கை. பூசைக்குப் பல சுதேசிகள் வந்து இருந்தார்கள். இரண்டு வெளிநாட்டவர் வந்து இருந்தார்கள். எல்லோரும் அமைதியாக குருவானவருக்காகக் காத்திருந்தார்கள்.

சிறிது நேரத்தில் எதிர்பார்த்தது போலக் குருவானவர் வந்தார். தனது ஆசனத்தில் ஏறி யேசுபிரானைப் பற்றி, இறையுணர்வோடு வாழ வேண்டிய வாழ்வைப் பற்றி நீண்ட நேரமாக விரிவாக உரையாற்றினார். இந்திரன் யேசுபிரானை எண்ணினான். சிலுவை சுமந்து இரத்தம் சிந்தினாலும் அவர் உயிர்த்து எழுந்தார். இன்று அவர் உயிர்த்து வந்து தரப்போகும் காட்சி பற்றிக் கனவு கண்டான். அவன் எதிர்பார்ப்பிற்கு எதிராக குருவானவர் ஆறுதலாக… இது எப்போது நிறைவுறும் என்கின்ற பொறுமை அற்ற நினைவோடு அவன்…
ஒருவாறு அவர் தனது பிரசங்கத்தை முடித்தார். கூட்டம் கலையத் தொடங்கியது. இந்திரன் கண்ணை மூடினான். தனது பிரார்த்தனைக்கான பலனை இன்று பார்த்து விடுவேன் என்கின்ற நம்பிக்கையோடு காத்திருந்தான். அவன் பிரார்த்தனை தொடர்ந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்று அவனுக்குத் தெரியாது. ‘நான் வந்துவிட்டேன்’ என்கின்ற குரல் வரும் என்று கண்ணை மூடிக் காத்திருந்தான். ‘நீங்கள் வெளியே செல்ல வேண்டும்.’ என்று நோர்வே நாட்டு மொழியில் யாரோ கூறியது அவன் காதில் விழுந்தது. அவன் கண்ணைத் திறந்தான். சிவபெருமானால் மட்டுமே இந்திரனை எரிக்க முடியும். என்னால் எதுவும் செய்ய இயலாது என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது. தனக்கு முன் யேசுபிரான் வரவில்லை என்கின்ற தோல்வி மனதோடு அவன் எழுந்தான். புயலாகத் தேவாலயத்தை விட்டு அழுதுகொண்டு வெளியேறினான்.

*

ஈழத்துச்சிதம்பரம். மார்கழிமாதத் திருவெண்பாத் தேர்த் திருவிழா. நடன நாதன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி இருந்தான். வாசம், வர்ணம், நாதம், பிரகாசம் நிறைந்த அவன் தலத்தில் ஒற்றைக்காலைத் தூக்கிப் பிரபஞ்சத்தைத் தன்னில் காட்டும் அவன் நர்த்தனத்தை மனதில் கண்டு இந்திரன் மெய் சிலிர்த்தான். சிவபதம் என்பது இந்த ஆடல் அரசனின் காலில் சரணடைவது அல்லவா என்பது இந்திரனுக்குப் புலனாகியது. எங்கும் ஓளி வெள்ளம் ஆகியது. இந்த ஒளி வெள்ளத்தில், இரதோற்சவ நேரத்தில், இறைவன் இன்று வருவான். தன் ஆடலை நிறுத்தி என்னை ஆட்கொள்வான். அந்த அவா இன்று நிறைவேறப் போகிறது என்கின்ற மகிழ்வில் அவன் திளைத்தான். ஆடல் நாயகன் உள் வீதி வலம் வந்து, இரதமேறி, சக பரிவாரங்களோடு பல இரதங்கள் பவனிவர வெளி வீதி சுற்றி முடித்து, இரதம் விட்டு இறங்கி, மீண்டும் வசந்த மண்டபம் வரும் வரைக்கும் இந்திரன் ஆடல் நாயகனைக் கண்ணீரோடு பார்த்த வண்ணம் வலம் வந்தான். வசந்த மண்டபத் திரை மீண்டும் இழுத்து மூடப்பட்டது. பின்பு திறந்து ஆடல் நாயகனுக்குக் கற்பூர ஆராதனை நடத்தப்பட்டது. பிரசாதத்தோடு எல்லோரும் கலையத் தொடங்கினார்கள். இந்திரன் நம்பினான். நடராச தரிசனம் கிடைக்கும் என்று காத்திருந்தான். கூட்டம் கலைந்து கரைந்து போனது.
‘இந்திரா வா. மணிவாசகர் சபையில அன்னதானம் போடுறாங்கள். போய்ச் சாப்பிடுவம்‘ என்று கூறிய யாரோ அவனது தோழில் கைவைத்து அவனைத் தள்ளிக் கொண்டு சென்றார்கள். ‘ஆடல் நாதா இது என்ன சோதனை?’ அவன் கண்கள் கண்ணீரால் நிறைந்து பார்வை அழிந்தது.

*

நான்கு உருவங்கள் அவன் முன்பு தோன்றின. அவை அவன் முன்பு அந்தரத்தில் ஆடின. அவற்றின் பின்னே இன்னும் பல உருவங்கள் தோன்றின. அவை எல்லாம் திடீரென ஒன்றாகின. ஒன்றாகியவை ஒளியாக அவனுள் புகுந்தன.

*

இந்திரன் விழித்தான். உடல் தெப்பமாக வியர்த்து இருந்தது. கனவுகளின் வால்களாகச் சில நினைவுகள். அவனுக்கு இதுவரை காலமும் விளங்காது இருந்த ஒரு உண்மை இன்று விளங்கியதாய் தோன்றியது.

புத்தரின் கடைசிக் கண்ணீர்

புத்தரின் கடைசிக் கண்ணீர்

பத்தின் ஐந்து சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு இது.

 

முகமூடிகள்

பாட்டிக்குப் பற்கள் எதுவும் அற்ற பொக்கை வாய். அந்த வாயில் எப்போதும் தவழும் புன்சிரிப்பு. இந்தக் காலம் போல அந்தக் காலத்தில் பொக்கை வாய்க்குப் பற்கள் கட்டியது இல்லை. பல் இல்லாது வாழ்ந்த பாட்டி பழைய கலாச்சாரங்களின் உறைவிடம் என்று சொல்லலாம். கச்சைக் கட்டாது சேலை கட்டும் காலத்தைச் சார்ந்தவர் அவர். ரமணனுக்குப் பாட்டியின் வாசம் தெரியும். அவரின் பாசம் தெரியும். சாப்பாட்டைக் குழைத்து வாயில் அன்போடு ஊட்டினால் அதில் இருக்கும் சுவை விளங்கும். பாட்டி உணவோடு நின்றுவிடாது ரமணனுக்குப் பலவிதமான அறிவும் ஊட்டினார். அந்தப் பாட்டி ரமணனுக்காக ஒரு முகமூடி செய்தார். அது ஒரு அழகான, அற்புதமான முகமூடி. அதில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தன. அந்தச் சிறப்பு அம்சங்களை ரமணனிடம் சேர்த்துவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடே பாட்டி அதை வனைந்தார் என்பது ரமணனுக்கு விளங்கத் தொடங்கியது. ரமணனுக்குப் பாட்டி மீது மிகவும் பாசம். பாட்டி சொல்லது அர்த்தம் நிறைந்த நாம் பின்பற்ற வேண்டியவையே என்கின்ற அசையாத நம்பிக்கையும் இருந்தது. பாட்டி வனைந்த முகமூடியை உடனடியாக அவனிடம் பாட்டி கொடுத்துவிடவில்லை. அதற்கு மேலும் மேலும் அவர் அழகூட்டினார். இறுதியில் இறக்கும் தறுவாயில் பாட்டி ரமணனிடம் அந்த முகமூடியை முற்றுமாய் கையளித்தார். ரமணன் அதைப் பெருமையோடும் பொறுப்போடும் பெற்றுக் கொண்டான். பெற்றுக் கொண்டதோடு மட்டும் நிற்காது அதை அணிந்தும் கொண்டான். அது அவனுக்கு அழகாக இருந்தது.
பாட்டி இறந்த பின்பு அவன் கையில் அவர் தந்த முகமூடி அவர் நினைவாக எப்போதும் இருந்தது. அதை அணிந்து கொள்வதில் அவனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. அதில் பொதிந்து கிடந்த அனைத்து அம்சங்களையும் அவன் ஆழ்ந்து கவனிப்பான். அது அவனுக்கு அடங்காத பூரிப்பை உண்டு பண்ணும். இவ்வளவு கைவண்ணமும் அறிவும் பாட்டியிடம் இருந்ததை அவன் அவர் உயிரோடு இருந்த போது முழுமையாக அறிந்து இருக்கவில்லை.
காலம் ஏவுகணையாக வயதுகளைப் பின்தள்ளி வாழ்க்கையை முன்நகர்த்தியது. பாட்டி போன பின்பு அம்மா ரமணனை அதிகம் பார்த்துக் கொண்டார். அவருக்குப் பாட்டி கொடுத்த முகமூடி பற்றித் தெரியும். அதை ரமணன் அணிவதையும் பார்த்து இருக்கிறார். அவருக்குத் தானும் ஒரு முகமூடி செய்து ரமணனுக்குக் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எப்போதோ உருவாகி இருந்தது. ஆனாலும் நிறைய வீட்டு வேலைகள் அவருக்கு இருந்தன. இருந்தும் கஸ்ரப்பட்டு நேரம் ஒதுக்கி அதற்கு அவர் செயல் வடிவம் கொடுத்தார்.
அவர் அதைச் சிறிது சிறிதாகச் செருக்கித் தனக்குத் தெரிந்த சித்திரங்கள், வர்ணங்கள் என்று அதில் பொதிந்து, அதை ஒரு கலைப் பொக்கிசமாக உருவாக்கத் தொடங்கினார். ரமணன் அதைப் பார்த்து இரசித்தான். அதை அம்மா மொத்தமாக ஒரு நாள் தன்னிடம் தருவார் என்பது அவனுக்குத் தெரியும். அது தனது கைக்கு வரும் காலத்திற்காக அவன் காத்திருந்தான். அம்மா அதை ஒரு நாள் அவனிடம் எதிர்பார்த்தது போலக் கொடுத்து அவனைக் கவனமாக வைத்திருக்குமாறு கூறினார். அதை அவன் பெருமையோடு வாங்கி அணிந்து அழுகு பார்த்தான். அவனுக்கு அம்மா மீது அளவுகடந்த அன்பாக இருந்தது. அம்மா முகமூடி செய்வதை ரமணனின் அப்பா அவதானித்துக் கொண்டு வந்தார். அவருக்கு அதைவிட அழகான முகமூடி ஒன்று செய்து ரமணனுக்குக் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் அதைச் செயற்படுத்தினார். அவர் அப்படி ஒரு முகமூடி செய்வது யாருக்கும் தெரியாது. ரமணனுக்கும் அது தெரியாது. அப்பா தனக்காக இவ்வளவு நேரம் செலவழித்துச் செய்வார் என்று அவன் எண்ணி இருக்கவில்லை. ரமணனின் அப்பா செய்த முகமூடியை அவர் உடனடியாக ரமணனிடம் கொடுத்துவிடவில்லை. அவர் அது ரமணனின் அம்மா செய்ததைவிட அழகாக, யொலிப்பாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்தார். அதற்காக அதிக காலம் செலவழித்தார்.
அப்படிச் சில காலம் கழிந்த பின்பு ரமணனிடம் அப்பா தனது அந்த முகமூடியைக் கொடுத்தார். ரமணன் அதை எதிர்பார்க்காததால் திகைத்துப் போய்விட்டான். அதைப் பார்க்க அது பாட்டி, அம்மா ஆகியோர் தந்ததைவிட மிகவும் அழகாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் அதை மிகவும் பெருமையோடும், ஆர்வத்தோடும் அப்பாவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டான். பாட்டி, அம்மா, அப்பா ஆகிய மூவரும் ரமணனுக்கு முகமூடி செய்து பரிசாகக் கொடுத்ததை பார்த்த அக்காள் இரகசியமாக ரமணனுக்காக ஒரு முகமூடி செய்தார். அவர் முகமூடி செய்தது யாருக்கும் தெரியாது. ஒரு நாள் திடீரென ரமணனின் முன்பு வந்து அதைப் பரிசாகக் கொடுத்தார். ரமணனுக்கு மிகவும் சந்தோசமாகவும், திகைப்பாகவும் இருந்தது. அவன் அக்காவிற்கு நன்றி கூறிய வண்ணம் அதையும் வாங்கி ஆசையோடு அணிந்து கொண்டான்.
அது அத்தோடு நின்றுவிடவில்லை. அக்காளைப் பார்த்த அண்ணனும் ஒரு முகமூடி செய்து கொடுத்தான். அதைப் பார்த்த தம்பி தங்கச்சி ஆகியவர்களும் தங்களால் இயலுமான வரையில் செதுக்கி, அழகுபடுத்திய முகமூடிகளை ரமணனுக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அவன் அவற்றையும் வாங்கி ஆனந்தமாய் அணிந்து கொண்டான். இவற்றைக் கேள்விப்பட்ட ஆசிரியர்கள், சக மாணவர்கள், நண்பர்கள் என்று அவனிடம் பல முக மூடிகள் பரிசாக வந்து சேர்ந்தன.
இப்படிக் கிடைத்த எண்ணற்ற முகமூடிகளை அணிந்து அணிந்து அவன் அழகு பார்த்தான். இப்படியாக அழகு பார்த்துப் பார்த்து தனது முகத்தையே அவன் மறந்த ஒரு நாளில் அவனுக்குத் தனது முகம் எப்படி இருக்கும்? என்கின்ற எண்ணம் திடீரென எழுந்தது. அதைத் தான் இப்போது பார்க்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டது.
அவன் தனது அறைக்குச் சென்றான். கண்ணாடி முன்னே நின்று ஒவ்வொரு முகமூடியாக அவற்றை அகற்றத் தொடங்கினான். அவனுக்குத் திடீரென பயம் ஒன்று உருவாகியது. தனது முகம் இந்த முகமூடிகளைப் போல் அழகானதாய் இருக்காவிட்டால் என்கின்ற பயம் உண்டாகியது. அதனால் கவலையாக இருந்தது. அவன் முகமூடிகளை அகற்றுவதை நிறுத்தினான். வெகுவாக அதைப் பற்றி எண்ணி எண்ணிக் குழம்பினான். இறுதியில் எப்படியாக இருந்தாலும் அந்த முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு மீதம் இருந்த முகமூடிகளையும் வெறியோடு களைந்து எறிந்தான். கடைசியாக அவனால் அவனது சொந்த முகத்தைப் பார்க்க முடிந்தது. அதில் நிறைய ஒளி இருந்தது. தெளிவு இருந்தது. உண்மை இருந்தது. எதற்காக அதை மறைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ரமணன் அதன் பின்பு அந்த முகமூடிகளை அணிவதே இல்லை. ஆனால் அவனுக்கு முகமூடி கொடுத்தவர்களுக்குத் தாங்கள் கொடுத்த முகமூடியைத் தொடர்ந்தும் ரமணன் அணியாதது மிகவும் மன வருத்தம் கொடுத்தது. அவர்கள் வருத்தம் பற்றி அவன் இப்போது கவலைப்படவில்லை. அவனுக்குத் தனது சொந்த முகத்தைப் பார்ப்பதிலேயே நிம்மதியும், திருப்தியும் உண்மையும் இருந்தது.
அவன் அந்த முகமூடிகளை ஒரு பையில் அள்ளிச் சென்று பக்கத்தில் ஓடும் ஆற்றில் வீசி எறிந்துவிட்டான்.

%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this: