எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தன்குடி கீழையூர் கிராமத்தில்
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திற்கு வருத்தமானவர்களைப் பராமரிக்க ஒரு முகாம் இருந்தது. ஒரு கட்டத்தில் கழகத்திற்குப் பணம் வருவதில்லையா அல்லது வந்த பணம் திசைமாறிப் போனதா என்பது புரியவில்லை. அரிசி எப்போது வரும் என்பது புரியாத புதிராகிற்று. சிங்கள அரசை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட எங்களுக்கு வயிற்றுக்காக போராட வேண்டி நிலை. இப்போது வரும் அப்போது வரும் என்று பொருட்கள் எப்போதும் வருவதாய் தெரியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் இனி பொறுக்க முடியாது என்கின்ற நிலை. எங்கு எப்படி உணவு தேடுவது என்பது
புரியாத தயக்கம். எனினும் எங்கள் தலைமைகளைவிட பக்கத்தில் இருக்கும்
விவசாயிகளை நம்பலாம் என்று தோன்றியது. நானும் இன்னும் ஒரு தோழரும் பக்கத்தில் உள்ள அந்த விவாசாயின் வீட்டிற்குச் சென்றோம். அவர்களுக்கு எங்களை கண்டதும் தலைகால் புரியாத மகிழ்ச்சி. நாங்கள் தெண்ட வந்திருக்கும் விசயம் அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஈழவிடுதலையை, விடுதலை போராளிகளை ஒருகாலத்தில் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு நேசித்தார்கள் என்பதை வருணிக்க என்னிடம் சொற்கள் இல்லை. எங்களுக்கு முதலில் மோர் வந்தது. பசித்த வயிற்றுக்குத்தான் தெரியும் அதன் அருமை. அதன் பின்பு நாங்கள் தயக்கத்தோடு எங்களுக்கு பொருட்கள் வராததைப்பற்றியும் தற்போது கடனாக அரிசி வேண்டும் என்பதைப் பற்றியும் கூறினோம். அவர்களிடம் எந்த தயக்கமும் இருக்கவில்லை. உடனடியாகவே அரிசி ஒரு உரப்பையில் கட்டி தரப்பட்டது. பசியில் அன்று வாடிய எங்களுக்கு அவர்கள் செய்த அந்த உதவியை என்றும் மறக்க முடியாது. அந்த ஏழை விவசாயிகள் இன்றும் ஈழம்பற்றி கனவு காண்பார்கள் என்பது எனக்கு தெரியும்.

நாங்கள்???