துருவத்துப் பொங்கல்

வெப்பத்தைக் குளிருறிஞ்ச
வெளிச்சத்தை மாத்திரமே
கள்ளன் பெண்டாட்டிபோலத்தரும்
துருவத்துச் சூரியன்.

முற்றத்தில் வெள்ளிநட்சத்திரமான
பனித்துளிகள் மினுங்க
மண்ணடுப்புகளும் சுள்ளிவிறகுகளும்
அந்தக்கால நினைவுகளிலுறங்கும்

புதுபானைகளும் சட்டிகளும்
பழைய கதைகளாக…
வரையாத கோலத்தில்
மெழுகாத பளிங்கடுப்பில்
புதிதாக ஏறும் பழைய
உலோகப் பானைகள்…

தலைப்பாகை சாய்ந்துவிட்டல்
பளிங்கடுப்பிற்கு களங்கமென
பாதியிலே அரிசியிட்டு
பதற்றத்திலே புக்கையாக்கி

தாமரைப்பூ மாமிக்கு
தாராளமாய் படைத்துவிட்டு
நாங்கள் உண்டுமகிழும்
நல்ல தைப்பொங்கல்