காரைநகரில் மிகவும் கண்டிப்பான ஆசிரியராய் இருந்தாலும் பிழைசெய்தால் மாத்திரம்அடிபோடும் ஆசிரியராய் அமரர் சி.துரைராசா. அவரை செல்லமாகத் துரையர் என்று அழைப்போம். எதற்கு அடிக்கிறார்கள் என்பதே புரியாது பல ஆசிரியா்களிடம் அடி வாங்குகின்ற காலமது. துரையர் எங்களுக்கு ரீயுசன் சொல்லித்தந்தார். அதுவும் ஒன்பதாம், பத்தாம் வகுப்பிற்கு மட்டும். ஆண்மாணவர்கள் இரவில் அவர் வீட்டில் தாங்கி படிக்கலாம். அல்லது அவரிடம் படிக்க போவதாகச் சொல்லிவிட்டு களவாகப் படம்பார்க்க போகலாம். அங்கு படிப்பதற்கு ஏற்ப மேசை, கதிரை, அமைதி, வெளிச்சம் என்பன இருக்கும். படிக்கும் போது குழப்பம் விளைவிக்கும் மாணவர்களுக்கு
உதவாக்கரை என்கின்ற திட்டலோடு தராளமாக அடியும் விழும். நான் அமைதி. அடியில் இருந்து எப்போதும் தப்பித்துக் கொள்ளுவதில் சந்தோசம். ஆங்கில ஆசிரியை வந்தால் மட்டும் ஐயாவுக்கு அண்ட சப்தமும் அடங்கிவிடும்.

எதற்காக நான் அவரைப்பற்றிச் சொல்லுகிறேன் என்றால் தமிழ் என்று நான் படித்தது அவரிடம் படித்த இலங்கை ஒலேவல் தமிழ் மட்டுமே. அதில் எங்களுக்கு கம்பராமாயணம், பாரதச்சுருக்கம், நாட்டார்பாடல் என்பன இருந்தன. எனக்கு கிடைத்த வரமாக அவரிடம் தமிழ் படிக்க முடிந்ததை இன்று நினைக்கிறேன். அவர் கம்பராமாயணத்தையும் பாரத சுருக்கத்தையும் படிப்பித்த சுவை கம்பன் கேட்டிருந்தால் அவர்வீட்டில் கதியால் நடுவதற்காய் கொடுக்கு கட்டியிருப்பான். அந்த சுவை என்னுள் இலக்கியம் பற்றிய ஒரு சிறு
பொறியை தட்டிவிட்டிருந்தது என்பதை நான் அப்போது அறியவில்லை. அறியும் இன்னாளில் அமரர் இல்லை. இன்று இருந்திருந்தால் மீண்டும் அவரிடம் தமிழ்படிக்க போயிருப்பேன். பாவம் கம்பன் கதியால்நட வந்திருக்க வேண்டும்.

என்றும் அவருக்கும் அவர் தந்த தமிழுக்கும் நன்றி உள்ளவனாக.