1972 எங்கள் வீடு குடிபூரல் காரைநகரில்(பழைய காரைதீவு) நடந்தது. லவுட்ஸ்பீக்கர் கட்டித்தான் அந்த கொண்டாட்டம். டானப்படக் கட்டியதோடு
குடிபூரல்… பின்பு அம்மா அந்த டானாவை இழுத்து நாச்சுவர் வீடாக்கியது
வேறு கதை. இரண்டு அறை, மூன்று அறை என்கின்ற போது வாயைப்பிளக்கும் ஐரோப்பாவே!!!! எங்கள் வீட்டில் சமையல் அறையைவிட ஏழுஅறைகள், நாலு விறாந்தைகள், ஒரு கோல். அதைவிட மாட்டுமால் வேறாக… வீட்டின் தரம் குறைவென்றாலும் விஸ்தீரணம் பெரிது.
யன்னல், கதவு, கூரை, சுவர், ஓட்டக்கல் இருந்தா அது எங்களுக்குப் போதும்.
வேப்பமரம், பனைமரம், கிளி, குயில், காகம், நாய்,பூனை, ஆடு,மாடு, கோழி,அணில் என்பதோடு இதில் பட்டியலின் நீளம் கருதி விடப்பட்ட
பல விஷமான, விஷமற்ற ஜந்துக்களும் வளவிற்குள் வந்து போகும்.
பிள்ளையார் கோவில் மணியோசை இன்றும் என்மனம் ஏங்கும் உயிரோசை…
அதைப்பற்றி இப்போது கதைக்க வேண்டாம். எங்களைச் சுற்றி அப்புத்துரை, ஐயாத்துரை, ஆறுமுகம், நீலகண்டன்,சோமன் என்று(ம்) மறக்க முடியாத பெயர்கள். முகங்கள். கூலிபெற்றாலும் மனிதம் நிறைந்த மனிதர்கள்.

ஐயா பதுளையில் இருந்து எனக்கு புறோக்கிறாசிக் கோடுடன் வந்தார்.
அது ஒரு பச்சைநிறக் கோட். அதில் பொன்னிறமாக மினுங்கும் சதுரப் பெட்டிகள். செப்பு பொத்தான். கழுத்தில் குஞ்சம். இரண்டு பக்கமும் பொக்கேற்.
அதைப் போட்டோண்ண சின்ன அற்வகேற் மாதிரி ஒரு பௌவுசு.
குருக்கள் தண்ணி தெளிக்கக் கூடாது என்பதற்காக நான் ஓடிய நியாபகம்.
அந்த கோட்டைப் அணிவித்து நீ புறோக்கிறாசி ஆகவேணும் எண்டு ஐயா சொன்ன அறிவுரை. நான் புறோக்கிறாசி ஆகவில்லை. ஏதோ ஒன்றில் காலத்தை ஓட்டுகிறேன். வீடுகுடிபூரலில் அந்தக் கோட்டோடு வலம்வந்ததே ஒருவித உச்சிக் கௌரவம். புறோக்கிறாசிக் கோட் அந்தநேரத்தில்
எங்கள் ஊரில் யார் போட்டார்கள்? பின்பு வந்த பணக்காறார்களை புதுப்பணக்காறார் என்று சொல்லுவார்கள். பாவம் நீலகண்டன் பெண்டாட்டி. பெட்டியில் சோறு வாங்கியதாக நியாபகம். நீலகண்டன் பெண்டாட்டிக்கு சின்னம்மா என்று பெயர். நான் சின்னம்மா என்று பாசத்தோடு கூப்பிட்டேன்.
தம்பி நீலகண்டன் பெண்டாட்டி எண்டு கூப்பிடு என்றார்கள்.
அவர்களின் உலகம் அப்படி. நாங்களாவது மாறுவோமா?

செரி ஐயாவைப்பற்றி வருவோம்.

ஐயா என்றால் எனக்கு பயம். பயம் என்றால் எனக்கு ஐயா. வினையாக இரண்டு வந்திற்று. ஒன்று ஐயாவுக்கு இருந்த கோபம். இரண்டாவது மாட்டுமாலுக்குள் இருந்த பெயின்ற்ரின்னை நான் தட்டி ஊற்றியது.
கோபத்தில் ஐயா தலைமுடியில் பிடித்து என்னை அந்தரத்தில் துாக்கியதாக நியாபகம். அடுத்தநாள் காய்ச்சல். ஊரில் குளறி என்று ஒருவர். அவர்வந்து
வீபூதி போட்டு மந்திரம் ஓதினார். காய்ச்ல் மாறிவிட்டது. எனக்கு உயிரியல் பற்றி அப்போது தெரியாது. தெரிந்தாலும் புரியாத சங்கதி நிறைய…
கல்லுவரம்பால் தண்ணீர் குடத்துடன் வந்த நான் தடுக்கி விழுந்தேன். மூச்சுவிட முடியாத வேதனை. என்னை துாக்கி வைத்து ஏதோ மந்திரம் சொன்னார். மூச்சுவிட முடிந்தது. ஐயா விஞ்ஞானிகளே என்னை அர்த்தம் கேட்காதீர்கள்.

ஐயாவில் பிழையில்லை. அவர் வாழ்ந்த சமுதாயத்தில் அதுதான்
முறை. தப்புக்குத் தணடனை அடிதான். புறோக்கிறாசிக் கோட்டுடன்
பதுளையில் இருந்து வந்த அக்கறைக்கு அடி ஒரு பொருட்டில்லை.
அவர்களின் பிராயத்தனம் அபரிவிதமானது. இப்போதுதான் அது புரிகிறது.
ஆறு, எட்டு என்று பெற்றுவிட்டு அவற்றைச் சமாளித்தது பெரும் கெட்டித்தனம்தான்.

இன்று ஐரோப்பாவில் வாழ்ந்து கொட்டை போட்டபின் கோபத்தில் பிள்ளையை அடித்தேன் என்கின்ற போது ஐயாவின் அருமை புரிகிறது.
உண்மையாகச் செல்கிறேன் அவருக்கு அடிக்க உரிமை இருக்கிறது. எங்களுக்கு…? மனதை தொட்டுப் பாருங்கள்…?

அந்த புறோக்கிறாசிக் கோட்டிற்கு என்றும் அழியாப் பொருமை.