எங்கள் ஊரில் இரண்டு சண்டியர்கள் இருந்தார்கள். ஒருவன் சாவில் மற்றவன் வாழ்வு என்பதைக் கொள்கையாகக் கொண்ட இவர்கள்கூட அரசியலை மாற்றுவதற்காய் சமரசம் செய்து கொள்வார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்கின்ற விளையாட்டு, ஒரு சிறிய காலத்திற்கு மட்டும் நடக்கும். பின்பு அது தலைகீழாய் மாறும். செரி இந்தச் சண்டியரை விட்டுவிட்டு இலங்கை வரலாற்றை ஒரு முறை சிறிது திரும்பிப் பார்ப்போம்.

சுதந்திரத்தின் பின்பான இலங்கை வரலாறே மனித உரிமை மீறலோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். எழுபதுவரைக்கும் சிங்களவரால் மீறப்பட்டு வந்த இந்த அத்துமீறல்கள் பின்பு சிங்களவா், தமிழர்கள், சில சந்தர்ப்பங்களில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் ஆகிய அனைவராலும் அவ்வப்போது தாராளமாக எந்த மனச்சாட்சி இன்றி மீறப்பட்டுவந்தது. இதை எப்போதும் மூடிமறைத்து தங்களுக்கு எதிராக இருந்தவர்கள் கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுப்பதே ஒவ்வொரு இனத்தைச் சார்ந்தவர்களும் செய்துவந்த மனிதத்திற்கு இழுக்கான செயலாகும். நாங்கள் 1983 கலவரத்தை எட்டமுதலே சிங்களவர் செய்த மனித உரிமை மீறல்களைவிட, தமிழ் இளைஞர்களும், சிங்களவருக்குச் சார்பான தமிழ் அரச இயந்திரங்களும் செய்த கொடுமையான மனித உரிமை மீறல்களைப் பற்றி எல்லோரும் நன்கு அறிவோம்.

உண்மையில் சிங்கள அரசால் அவ்வப்போது மீறப்பட்டு வந்த மனித உரிமைகள் ஒரு புறம் எங்களை வாட்டியது. மறுபுறம் ஈழப்போராட்டகாலத்தில் எமது இளைஞர்களால், எமது மக்களுக்கு நித்தமும் இழைக்கப்பட்ட கொடுமைகள் சொல்லி மாளாது. பெண்பிள்ளைகளைப் பறிகொடுத்து ஒவ்வொரு முகாமாகத் தேடிப் பழிகிடந்த தாய்தந்தையரை வயது வித்தியாசம் இல்லாது பச்சை மட்டையால் அடித்த கதையை இன்றும் கேட்கலாம். அப்போதெல்லாம் அந்த மனித உரிமைகளைப் பாதுகாக்க நாட்டில் இருந்தே பலர் போராடினார்கள். குரல் கொடுத்தார்கள். அதற்காக தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். அந்த நேரங்களில் தமிழ்நாட்டில் இருந்து அல்லது புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து மாற்றுக்கருத்தாளா்கள் எனப்படுபவர்களால் மட்டுமே சிலவேளை விமா்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்காக அவர்கள் தண்டிக்கப் பட்டார்கள். சிலரின் உயிரும் பறிக்கப்பட்டது. இப்படியான நேரங்களில் தமிழ்நாட்டு அறிவுஐீவிகள் எப்போதும் மௌனம் காத்ததாகவே வரலாறு உண்டு. பெரும் தொகையான புலி ஆதரவாளர்கள் அரசை மாத்திரம் எடுத்ததிற்கெல்லாம் விமர்சனம் செய்தவர்கள், புலிகள் செய்யும் கொடுமைகள் ஒன்றையும் பேசாது மூடிமறைத்து ஆயிரம் மாயிரம் மனித உரிமை மீறலுக்குத் துணை போனதோடு, சிலதை நியாயப்படுத்தியும் இருந்தார்கள். பிழைகள் சுட்டிக் காட்டப்படவேண்டியவை. மனிதன் அனுபவத்தின் ஊடாக ஆவது திருந்திக் கொள்ள வேண்டியவன் என்பதை அவர்கள் முற்றுமாக மறுத்து நின்றார்கள்.

மாறி மாறி வந்த மனித உரிமை மீறல்களால் அநேகமான அப்பாவிகள் அல்லது அடிமட்ட உறுப்பினர்களே பலியானார்கள். எந்த மனிதவுரிமை மீறலை இயக்கங்கள் குற்ற உணர்வில்லாது நியாயப் படுத்தி பாவித்து வந்ததோ அதே மனித உரிமை மீறல் ஒருநாள் தங்கள் மீது ஒட்டுமொத்தமாய்த் திரும்பும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் நாட்டில் எதிரியை அழிக்கும் போது ஈவு இரக்கம் காட்டப்படுவதில்லை. சொந்த இனத்தை உயிரோடு யாழ்பாணத்தில் தீயிட்டபோது இந்த மனிதஉரிமைச் சண்டியர்கள் எங்கே போனார்கள். பட்டினத்தாரின் தன்வினை தன்னைச்சுடும் ஒட்டப்பம் வீட்டைச்சுடும் என்பது செரியாக இருந்திருக்கிறது. தங்களின் உயிருக்காக புலிகள் அப்பாவிகளின் உயிர்களைப் பணயம் வைத்தபோது இந்த மனிதநேயச் சிங்கங்கள் எல்லாம் எங்கே பதுங்கி இருந்தன? எப்போது ஒருமனிதன் பக்கச்சார்பாகக் கதைக்கிறானோ அப்போது அவன் கதைப்பதில் நியாயமும் இருக்கப் போவதில்லை. அவனது ஆத்மாவும் அப்போது மரணித்து இருக்கும்.

அரசு மனித உரிமை மீறலில் எப்போதும் ஈடுபட்டு வந்திருந்தாலும் அரசோடு கூட்டு வைத்து, சமரசம் பேசி, பணம் வேண்டி, மாற்று இயக்கத்தை வேட்டையாடி, யுத்தம் தொடங்கி, போர்நிறுத்தம் செய்த போதெல்லாம் மனித உரிமை மீறல்களைவிட, இராஐாதந்திரம் துருத்திக் கொண்டு நின்றது என்கிறார்கள். இன்று அந்த இராஐதந்திரம் தோற்று புலிகள் இல்லாது அழிக்கப்பட்டதால் ஒரு சிறு மகாநாடு வைப்பதுகூட மனிதவுரிமை மீறியவர்களை ஆதரிப்பதாக இருக்கிறது. இங்கேயும் தனிமனிதர்களின் அரசியலுக்காக மட்டுமே மனித உரிமை பற்றிப் பேசப்படுகிறது. உண்மைக் காரணத்தைவிட ஓழிந்து நிற்கும் காரணம் ஆயிரம்.

இங்கு தங்களை மனிதநேயப் பாதுகாவலர் என்பவா்கள் கண்களில் எப்போதும் அரசு செய்வதே கண்களில் படுகிறது என்பதும் ஒருகாலத்தில் இவர்கள் புலிகள் எதைச் செய்தாலும் அவர்களுக்கு ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தவர்கள் என்பதும் நிதர்சனம். இப்போது எல்லாம் அழிந்த பின்னும் அதே மனப்பாண்மையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை. எமது நோக்கம் யாரது மனித உரிமை மீறலையும் ஆதரிப்பது அல்ல. யார் குற்றம் செய்தாலும் அது குற்றமே என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாது கூத்தாடுவது தமிழ் அரசியலின் சாபமாய் இருக்க வேண்டும்.

எங்கள் ஊரில் இரண்டு சண்டியர்கள் இருந்தார்கள். ஒருவன் கொல்லப்பட்டு விட்டான். மற்றவன் உயிரோடு இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் உயிரோடு இருக்கும் சண்டியனோடு கதைக்ககூடாது என்று அயலுார்காறன் சொல்லலாம். அவர்கள் திண்ணையில் சுதந்திரமாய்க் காலை ஆட்டிக் கொண்டு இருக்கலாம். நான் அப்படி இருக்க முடியவில்லை. என்னிலமை அப்படி இன்றில்லை. என்றும் இருந்ததில்லை. இன்னும் உயிரோடு இருக்கும் சண்டியன்தான் எங்கள் ஊர் விதானையாக இருக்கிறான். காலையாட்டிக் கொண்டு இருக்கும் அயலுார்காறன் சொல்வதைக் கேட்பதா, நாளும் வதைப்படும் நான் முடிவெடுப்பதா. நீ சண்டியன்கீழ் வாழுபவன் உனக்கு முடிவெடுக்கும் உரிமை இல்லை என்கிறார்கள் அயலுார்காறர்கள். சண்டியன் நல்லவனா அல்லது அயலுார்காறன் நல்லவனா? இரண்டு பகுதியும் என்னுரிமையில் விளையாடுகிறார்கள் என்பது புரிகிறது. அதுவும் எனக்கு நியாயம் வேண்டித் தருவதாகக்கூறி எனது உரிமையை மறுக்கும் இவர்களிடம் நான் கையேந்த வேண்டி உள்ளது. வெளியூரில் இருந்து வீரம் பேசுபவர்களுக்கு ஒன்று புரியவில்லை. அவர்களின் வீரப்பேச்சினால் எங்களுக்கு இங்கு பாராட்டுக் கிடைப்பதில்லை. இருந்த கூப்பனையும் எங்கள் விதானை பறித்துக் கொண்டுவிட்டார் என்பதைச் சற்று புரிந்து கொள்வீர்களா?