சிங்களதேசமே
வென்றுவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்.
சிங்களதேசமே
தமிழரின் சுகந்திர
தாகத்தை கொன்றுவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்

ரோம சாம்பிராச்சியம்
வெற்றிகளைத்தான்
கண்டது
மனிதத்தில் மட்டும்
மரித்துப் போனது

பெளத்தம் தானம் கேட்டது
தமிழரின் இரத்தத்தை
எப்போது கேட்பதாகச்
சொன்னது சகோதரா?

நீங்கள் இறுமாந்து
இருக்கிறீர்கள்
உங்கள் வாரிசுகள்
வருங்காலத்தில்
தலைகுனிவார்கள்

கொடுப்பதில் மகிழ்வுற
முடியாத நீங்கள்
புத்தரை அழைத்துவந்து
கேளுங்கள் இரத்தம்தான்
அவனுக்குத் தானமாக வேண்டுமா
என்று?

மனிதம் பேசிய மகானின்
சீடர்கள் மனிதத்தைத்
தொலைத்த பின்பு
நடைப்பிணமாக
இலங்கையின்
மக்களாகி விட்டீர்கள்.

நீங்கள் பலயுகங்கள்
கழிந்தபின்பு தேடப்போவதை
நான் இன்று புரிந்து கொண்டேன்.
சகோதரா! நம்மினம் இழைத்த
பிழைகளை மன்னித்து விடுங்கள்
நீங்கள் அந்த மகானின்
வாரிசுகளாய் இருந்தால்.