மனித ஜன்மங்களாகி நாங்கள் நிறையக் கற்பனை செய்கிறோம். அது வரமாகவும் அமைகிறது. சாபமாகவும் முடிகிறது. நாளைக்கு நான் உயிரோடு இருப்பேனா என்பதைக் காலனைத் தவிர வேறு யாராலும் 100 வீதம் அடித்துச் சொல்ல முடியுமா? காலனே கற்பனை என்றால்? மரணம் கற்பனையா?
வாழ்கை என்பதே எம்மிடம் இருக்கும் இந்தக்கணங்கள் என்பதின் சுவாரசியம் அல்லவா?

எனது நண்பர் உடுத்துப் படுத்து மனைவியோடு திருமணவைபவத்திற்கு வந்தார். சந்தோசமாக இருந்தார். அவருக்கு அந்தக் கணங்கள்தான் உண்மை.
காலனின் கணக்கு அவருக்குத் தெரியாது. தெரிந்தால் மனிதகுலம் வாழாது.
அடுத்து அன்புலன்ஸ் வந்தது. அவருக்கு வருங்கால வாழ்வு பற்றி எவ்வளவு கற்பனை இருந்திருக்கும்? இன்று இந்தச் சந்தேசம் வேண்டாம் என்றிருந்தால்
அவருக்கு அதுவும் வாழ்கையில் கிடைத்திருக்காது. வருங்காலம் என்பது கற்பனையான எதிர்பார்ப்பு. கற்பனைக்காக கிடைக்கும் வாழ்வை வாழாது விடுவது வாழ்வின் தத்துவப் புரிதல் இன்மையாகும். உண்மையா? இல்லையா? இரவில் படுக்கும் போது சிந்திக்க வேண்டும். நாளைக்கு நான் முகப்புத்தகத்திற்கு வராவிட்டால் சிலவேளை நான் இல்லாமலே போயிருக்கலாம். இப்போது எழுதுவதுதான் உங்களைப் பொறுத்தவரை நிஜம். வாழ்கை இதுதான். இருக்கும் வரைக்கும் இன்பமோ துன்பமோ நுகர்ந்தவைதான். அதைப் போலவே போகங்களும். கோடிக்கணக்கில் பணம்
இருந்தாலும் தங்கத்தைச் சாப்பிடமுடியாது. ஏழையாய் இருந்தால் என்ன? பணத்தில் புரண்டால் என்ன? தாவரவுண்ணி அல்லது அனைத்துமுண்ணி…
(தாவரவுண்ணி விலங்குண்ணி) பணவுண்ணி, பொன்னுண்ணி ??? கிடையாது.

எங்கள் கருத்துக்கள் நன்றாக இருக்கிறதா என்பது முக்கியம் இல்லை. அதில் உண்மை இருக்கிறதா என்பதுதான் முக்கியம். என்கருத்தின்படி என்னால் 100 வீதம் வாழமுடியாவிட்டால் நான் என்கருத்துப்படி வாழ்பவன் இல்லை. அப்படி வாழ்வதாகப் பொய் சொல்வதிலும் அதன்படி நான் ஒழுகவில்லை என்று உண்மை சொல்வது மேல். மற்றவர்கள் வரையும் ஒவியத்திற்காய் என் முகத்தைச் சிதைத்துக்கொள்ள முடியாது.

நல்ல மனிதர் என்று மற்றவரை எப்பிடிக் கண்டு பிடிப்பது? முதலில் அனைவரும் அப்பாவிகளான அவதாரம். பாவிகளும், துரோகிகளும் பதுங்கும் மனித உருவம். பழக்கம் புரியவைக்கும் புதைந்திருக்கும் மனித முகங்களை…
நல்ல மனிதன் என்பவன் யார்? எப்பிடி இருப்பான். ஒருநாளைக்கு நல்லவனாக இருப்பவன் மறுநாளும் நல்லவனாக இருப்பானா? சுயநலம் வரும்போது அவன் எப்பிடி மாறுவான்? வள்ளலா நடிக்கிறவன் உண்மையில் எப்படியானவன். உதவி செய்கிறேன், இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன் என்று விளம்பரம் செய்வனின் உள்ளம் உண்மைதானா? தலையில் குட்டி, நிலத்தில் விழுந்து கோயிலைச்சுற்றி, அர்ச்சனை செய்வதால் மனதின் அழுக்கு அகலுமா? செய்த பாவம் தொலையுமா? தொலைந்தால் கடவுளுக்கு என்ன பெயர்? கடவுளே கையூட்டு வாங்கினால் மனிதன் எப்படி?

வாழ்க்கையைச் சிக்கலா நினைத்தால் சிக்கல்தான். சிக்கலே இல்லாத வாழ்வும் இல்லை. எதிர்பார்ப்பு குறைந்தால் இன்பம். நான் என்னுடைய எதிர்பார்ப்புக்களை குறைத்தால் அன்று அமைதியான மனிதனாவேன்.
நன்கு யோசித்து முடிவுக்கு வரவேண்டும். வாழ்கை என்கின்ற கப்பல் சுழலுக்குள் போவதா? அமைதிப்பயணம் செய்வதா? அதற்கு வழி? எதிர்பார்த்ததையும் எமக்குக் கிடைத்ததையும் சமாதானம் செய்வதாக ஒரு நிலைக்கு வருவோமா? அன்று எமக்கு அமைதி வரும். வாழ்வில் இன்பம் வரும். இல்லறத்தில் முக்தி வரும். இல்லை என்றால் வெறுப்புவரும். துறவியாகும் நினைப்பு வரும்.

வாழ்க்கை… இது உங்களுக்காக எழுதினேனா அல்லது எனக்கு எழுதினேனா? நின்மதியான உங்கள் துாக்கத்தை கெடுத்து விட்டேனா?
மன்னிக்கவும்…