1939941_905794892771670_4029215581012108398_n

தாக்கமான விமர்சனங்கள் தங்கத்தைப் புடம்போடுவது போல. குதற்கமான விமர்சனம் அதை வைப்பவரின் குணத்தின் வின்பமாக. இரயாகரன் நவதாரள – தமிழினவாத, சைவ வேளாள யாழ் மையவாதத்தின் பிரதிநிதியே எஸ்.பொ என்று எழுதுகிறார். இவருக்கு எஸ்.பொவோடு எவ்வளவு பரீட்சயம் இருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியாது. அவர் போட்டுக்கொண்ட உக்கிப்போன சிவப்புச்சட்டைக்கு ஏற்ப விமர்சனம் என்கின்ற பெயரில் வசைபாடுவதைப் பார்க்கும்போது மிகவும் மனவருத்தமாய், அருவெருப்பாய் இருக்கிறது. எஸ்.பொ தமிழ்த் தேசியத்தில் அதீதபற்றாய் இருந்தார் என்பது உண்மையாக இருக்கலாம். மனித உணர்வுக்கு உட்பட்டதாய், மகனை இளந்த தந்தையாக, சிங்கள பௌத்த இனவாதத்தை தமிழ் வன்முறை இனவாதத்தால் எதிர்க்க வேண்டும் என்கின்ற கட்சியில் அவரும் இருந்தார் என்பதும் உண்மை. மனிதன் என்பவன் அப்படித்தான் இருக்க முடியும். சிவத்த மட்டைக்குள் இருக்கும் ஒற்றைகளைப் பாடமாக்கிவிட்டு இயந்திரம்போல் நடக்கவோ எழுதவோ முடியாது. இவர் பேசும் சமதர்மம் எந்த நாட்டில் நடைமுறையானது? சிவப்புச்சட்டையைப் போட்டுக்கொண்டு தனிமனித வாழிபாடாட்டைத் திணித்து, மனிதர்கள் கடவுள்கள் ஆனகதை நாங்கள் கண்ட சரித்திரம். அவர்கள் சாய்த்த அப்பாவி மனிதர்களின் தொகை பல மில்லியன்கள். முதலாளித்துவம் மனித அறமற்றதாய் தோன்றுவது உண்மையாக இருக்கலாம். அதற்காக இந்த உலகில் இசங்களின் பெயரால் பல மில்லின் மக்களைப் பலிகொண்டவர்களிடம் என்ன அறம் இருந்தது என்று சொல்ல முடியுமா? சமதர்மம் பேசுபவர்களின் நவீன சமூகச் சொற்களில் என்ன அர்த்தம் இருக்கிறது?

முதலாளித்துவத்திற்கு வக்காளத்து வாங்குவது என்நோக்கம் இல்லை. இன்று அதன் பேய்க்கூத்தில்தான் இரயாகரனும், நானும், நீங்களும் சாப்பிட்டு சல்லாபித்து வாழ்கிறோம் என்பது உண்மை. கட்டுரை எழுதும் இவர் கலப்பை தூக்கிச் சென்று பொதுவுடமை பேசுவாரா? எஸ்.பொ கலப்பையைவிட கெட்டியாகப் பேனாவைப்பிடித்து உழைத்தார் என்பதை நான் கண்கூடாகக் கண்டவன். அந்த கடும் தவத்திற்கு அங்கீகாரம் எதிர்பார்த்திருக்கலாம். எஸ்.பொ அதை எதிர்பார்த்தவர் இல்லை. தமிழ் தேசியத்திற்கு எதிராக கதைத்தபோதும் அதையும் பொறுமையாகச் செவிமடுத்தவர் அவர் என்பதே என் அனுபவம்.
மதிப்பீடு என்பது சமூகம் சார்ந்ததா அல்லது தனிமனிதன் சார்ந்ததா என்பது இந்த யுகத்துக்கே பொருந்தாத உக்கி கேள்வி ஒன்று. ஜிப்சனின் படைப்புக்களை நோர்வே மக்கள் படைத்தார்கள் என்று சிவப்பு வரலாறு எழுதலாமா? எல்லோரும் நலமாக, வளமாக, சமாதானமாக உரிமைகளைப் பெற்று வாழவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. அதற்காகப் பரீட்சித்துத் தோத்துப்போய்விட்ட பொருளாதார அரசியல் கொள்கைகளைக் கோட்பாடுகளை இந்த யுகத்திலும் வேதமாய் எடுத்துக் கொண்டால் வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறியது என்பதைவிட வேறு என்ன சொல்ல முடியும்.

எனக்கும் சென்னையில் பொதுவுடமைபற்றிப் படிக்கும்போது மிகவும் இனித்தது. அது இரசியாவின் மூர்மன்ஸ் என்னும் வடநகரத்திற்குச் சென்று பார்த்தபோது அடியோடு வெறுத்தது. கசந்தது. அரசிடம் அணுகுண்டு இருந்தபோது மக்களிடம் மலிவு வொட்காவும் கூப்பன் பாணும்தான் இருந்தன. எஸ்.பொவின் தனிமனித உழைப்பில் உருவான படைப்பிற்கு சமூகத்தைக்கொண்டு எதற்கு மதிப்பீடு செய்ய வேண்டும்? எஸ்.பொ சமூகத்திற்காக தனது உழைப்பையும் ஆத்மாவையும் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதை ஒற்றைகளைப் பாடமாக்கிவர்களால் ஒத்துக்கொள்ள முடியாது. மனிதன் இரசிப்பதற்கு, அவனுக்குச் சில கருத்துக்களை சொல்வதற்கு, தன் இருப்பின் பதிவை இடுவதற்கு, அத்ம தருப்தி அடைவதற்கு, மொழியில் விளைந்த காதலினால் இலக்கியம் படைக்கப்படுகிறது. இயந்திரமாய்  எப்படி வாழ்வது என்பதற்கு இலக்கியம் எதற்கு?

நவதாரள யாழ் வெள்ளாள சாதிய மேலாதிக்க சிந்தனையில் நாங்கள் வாழ்கிறோம் என்றால் எல்லோரும் இப்போது வெள்ளாளச் சிந்தனையோடு வாழ்கின்றோம் என்பதாகிறது. பின்பு எதற்காக கறுப்புச் சட்டையும் சிவப்புச்சட்டையும் மரணத்திற்குப் போவதை மார்பில் அடித்து இழுத்து வருகிறீர்கள்? இன்றைய உலகில் சாதிப்பிரச்சனையை கூர்மையாக்குவதும் அதைநினைவு படுத்துவதும் இவர்களின் சொற்பிரயோகம்தான். அந்த சொற்பிரயோகங்கள் அதை வீறுகொள்ள வைக்கிறது என்பதை ஏனோ மறந்து அல்ல தெரிந்தே தங்களது சுயநலத்திற்காகவோ பாவிக்கிறார்கள். ஈழத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் அது தன்வீரியத்தை இளக்கும்போது அதற்கு எதற்காக உசுப்பேத்த வேண்டும்? அதே சொற்பிரயோகங்கள் எதிர்திசையில் இருந்து வந்தால்? வரவேண்டும் என்பதுதான் இவர்கள் எதிர்பார்ப்போ என்பது தெரியவில்லை. இந்த நொண்டும் இம்சை இன்றைய சமூகவலைத்தளங்களில் ஒரு புதுக்கலாச்சாரமாக உருவாகிவருகிறது.

கற்கால மதத்தை விடமுடியாத மனிதர்களுக்கும், காலவதியான சட்டைகளோடு அலைபவர்களுக்கும் பெரிதாக வேறுபாடு இருக்க முடியாது. அவர்களின் நம்பிக்கை பிழையென்பதை அவர்களுக்கு உணர்த்துவது மிகவும் கடினமானதே. அதற்காக அதே கண்ணோடு ஒருமனிதனின் உழைப்பை, தியாகத்தை, ஈழத்தமிழர்களின் இலக்கியத்தில் இருந்த நம்பிக்கையை, காதலை, ஒரு மேதையின் ஞானத்தை வசைபாடுவதைப் பார்க்கப் பொறுக்க முடியவில்லை. பாரதிக்கு இல்லாத ஞானக்கிறுக்கா எஸ்.பொ விடம் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை. இனியாவது ஆக்கபூர்வமான விமர்சனத்தை வையுங்கள். உங்கள் பொதுவுடமைக்கொள்கை வசைபாடத்தான் என்றால் அதைத்தூக்கி ஏறியுங்கள்.

அடக்குமுறைகளைக் காப்பது அல்ல மனிதம். அதேவேளை தனிமனித உழைப்பை களவாடுவதோ, பிடுங்கிக் கூறுபோடுவதோ, இம்சிப்பதோ பொதுவுடமையாகாது. மதிக்கப்படவேண்டிய மனிதர்கள் இழிக்கப்படுவது ஒன்றும் புதியவரலாறு இல்லை. அதுவும் பொதுவுடமை என்கின்ற கோசத்தோடு வாழ்பவர்களால் செய்யப்படுவது மிகவும் அவமானமானது. எஸ்.பொவின் இலக்கிய உழைப்பை எந்தத்தார்மீகத்தோடு இவரால் இப்படி வசைபாட முடிந்தது? வசையால் வாழும் போலி ஆசை இவருக்கும் வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. உங்களால் இலக்கியம் படைக்க முடியாவிட்டலும் படைப்பவர்களை இவ்வளவிற்கு இம்சிக்காமல் இருத்தல் மேன்மையானது. அதுவே நீங்கள் தமிழுக்கு செய்யும் பரோபகாரமாய் இருக்கும். சிலவேளை உங்கள் பொதுவுடமையில் தமிழ் என்கின்ற மொழியே தேவையில்லையோ என்பது எனக்குத் தெரியாது.