Support independent publishing: Buy this e-book on Lulu. Support independent publishing: Buy this book on Lulu.

மானிடம் வீழ்ந்ததம்மா

என்னுரை

5.83x8.ma-frontpng

மனிதர்களாகிய நாங்கள் யேசுபிரானாய், புத்தபிரானாய், காந்தியாய் மனிதம் போதித்த மகான்கள் போல மனிதத்தின் உச்சியை அடையவேண்டாம்;; அதன் பாதாளத்தைத் தரிசிக்காமல் இருப்பதே நாங்கள் செய்யும் பாக்கியமாகும். மனிதம் மதிக்கும் மனிதனாக இருத்தல் மனிதப்பிறவியின் பயன்;. இந்த நவீன உலகத்தில் மனிதம் மிதிக்கப்படுகிறது. அதற்குச் சுயநலத்தோடு மனச்சாட்சிக்கு எதிராக நியாயம் கற்பிக்கப்படுகிறது. அகிம்சை பேசிய காந்திதேசமே, குருதி தோய்ந்த கைகளை முதுகிற்குப்பின் மறைத்த வைத்தவண்ணம் சட்டாம்பி வேலை செய்கிறது.

வரலாற்றை மனிதன் மறக்கும் போது அது மீண்டும் மீண்டும் உயிர்பெற்றுக் கொள்ளும். உலகம் பல மனிதநேயச் சுடலைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. வசதிக்கு ஏற்ப அவற்றை மறக்கப் பார்க்கிறது. சுடலைகளை மறந்ததால் உருவாக்கப்பட்ட பிணமலைகளை இரண்டாம் உலகயுத்தம் கண்டது. கருவாடாக்கப்பட்ட நிர்வாணப் பிணங்களின் காட்சிகள் மனிதநேயரின் மனதைவிட்டு என்றும் அகலா. அந்தக் காட்சிகள் நினைவில் உள்ள மனிதனால் அதே தவற்றை மீண்டும் செய்ய முடியாது. மனிதன், வாழ்வதற்காய் மறதியோடு படைக்கப்பட்ட மிருகம். அதற்காக வரலாற்றை மறந்தால் அது மீண்டும் மனிதத்திற்குச் சோதனையாகும். இன்றைய யூதர்களாக நிறமான வந்தேறுகுடிகள் ஐரோப்பா எங்கும் பரந்து வாழ்கிறார்கள். மனிதனின் மிருகமுகம் முன்வருகிறது. சுதேசிகளின் வெறுப்பு, நிறமான மனிதர்கள்மேல் பாய்கிறது.

உலகம் பிரயாணிக்கக்கூடாத தடத்தில், தெரிந்தோ தெரியாமலோ பிரயாணிக்கிறது. வரலாறு மீண்டும் உயிர் பெற்றுவிட்டது. போகங்கள் தங்களுக்கு மட்டுமே என்கின்ற சுயநலத்தில் வெறுப்புகள் விளைகின்றன. மனிதம் வதைபடுகிறது. பொருளாதாரத்தில் மனிதநேய ஆதாரங்கள் அடிபட்டுப் போகின்றன. சிறிய தவறுகள் தட்டிக் கேட்கப்படாத போது, அதுவே பெரிய தவறுகளின் விளைநிலமாகிறது. மனிதம் வஞ்சிக்கப்படுவதைப் பார்த்தும் பாராமல் இருப்பது எதற்கு உரம் இடுவதற்கு? மனிதகுலம் இனியாவது விழிப்படைய வேண்டும். நாசகாரமான அந்த வரலாற்றை மீண்டும் ஓடவிடலாகாது. அதை நிறுத்தப் போராடவேண்டும்.

அந்த நாசகாரம் உலகத்தில் மீண்டும் ஏற்படக்கூடாது என்கின்ற ஆதங்கத்தில் இந்த நாவல் எழுதப்பட்டது. நான் நாவலுக்குள் செல்லவில்லை. அது உங்கள் சுவைப்பிற்கு.

இந்த நாவலை ஈழத்து இலக்கிய மேதை அமரர் எஸ்பொவின் பார்வைக்கு அனுப்பியிருந்தேன். அவர் அதை வாசித்துவிட்டு, தியாகலிங்கத்தின் உன்னதமான படைப்புகளில் இதுவும் ஒன்று எனக் கூறினார். முதிர்ந்த இலக்கிய மேதையின் அந்த வார்தைகள் என் பாக்கியம். இலக்கிய உலகத்திற்கும் எனக்குமான தொடர்பை ஏற்படுத்தியவர் அமரர் எஸ்பொ. அவரது அந்த உதவியே இன்று உங்களோடு நான் தொடர்ந்தும் என் படைப்பினுடாகப் பயணிக்க உதவி செய்தது. அந்த நன்றிவிசுவாசம் என்மனதைவிடடு அகலாது. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இந்த நாவலின் எழுத்துப் பிழைகளை மனமுவந்து திருத்த உதவிய நண்பர் இளவாலை விஜயேந்திரன் அவர்களுக்கு எனது நன்றிகள். என் இலக்கியப்பயணத்திற்கு உலகெங்குமிருந்து ஆதரவுதரும் வாசகர்களாகிய உங்களுக்கும் எனது மனமாhந்த நன்றிகள்.

அன்புடன்
இ.தியாகலிங்கம்

மானிடம் வீழ்ந்ததம்மா

Support independent publishing: Buy this e-book on Lulu. Support independent publishing: Buy this book on Lulu.