நீதி, அநீதி, அறம், தர்மம், சரி, பிழை, நல்லது, கெட்டது என்கின்ற வின்பங்களுக்கு நிரந்தரமான நிலை கிடையாது. அது பாத்திரத்திற்கு ஏற்ப திரவம் வடிவம் பெறுவது போல மனிதனுக்கு மனிதன் அவன் எண்ணத்திற்கு ஏற்ப வடிவம் எடுத்துக்கொள்ளும். தத்துவங்களும் இசங்களும் அப்படியே. அதன் உண்மைத் தன்மை, அதன் வடிவம், மனிதனுக்கு மனிதன் அவன் எண்ணத்தைப் போல மாறுபடுகிறது. உலக மனித கற்பிதங்களும் மனிதனுக்கு மனிதன் அதன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும். இன்றைய மனிதனின் ஞான தத்துவமாய் கருதப்படுவது நாளைய மனிதனின் குப்பையாகலாம். அன்றைய அசடன் இன்றைய ஞானியாகப் போற்றப்படலாம். வடிவம் அது சாரும் இடம் நேரத்தைப் பொறுத்தது. இந்தத் தொடர்பைப் புரிந்து கொள்ளாது ஒன்றில் வெறித்தனமான பற்று வைத்தால் மற்றவர்கள் பைத்தியக்காறராய்த் தோன்றலாம்.

எனது வடிவம் என்னைப் பொறுத்தது. உனது வடிவம் உன்னைச் சார்ந்தது. உனது வடிவத்தால் எனது வடிவத்தை மாற்றிவிட முடியாது. ஆகச் சார்புநிலை தாண்டிய தத்தவங்களோ, விளக்கங்களோ மனிதனால் படைக்கப்பட முடியுமா என்பது கேள்வியே. காலம், சமுதாயம், அவன் வாழ்பனுபவம் அவனின் தத்துவத்தில் பிரதி பலிக்காமல் இருக்காது. அடக்கப்படுபவன் அடக்கப்படுவது அருமை என்பானா? அறிவாழி என்று தன்னை பற்றி எண்ணுபவன் எப்படிச் சுற்றிச் சுற்றி இசங்களைப் பற்றிக் கதைத்தாலும் அது கண்ணாடிப் பாத்திரத்தில் விடப்படும் திரவம்தான். சார்பு நிலையோடு அதன் வடிவம் உருவாகும். ஆக இன்றைக்கு எது பொருத்தமோ அதைத் தெரிவு செய்வது புத்திசாலித்தனமா? அல்லது நேற்றயதைப் பிடித்தக்கொண்டு தொங்குவது புத்திசாலித்தனமா? தங்கம் என்பதிற்காக கடித்துச் சாப்பிட முடியுமா? மாற்றுக் கருத்தை வழியைத் தேடியதாலேயே இன்றைய பொருளாதாரச் சமுக வளர்ச்சி சாத்தியமானது. அந்தத் தேடலும் விளைவும் அனைத்துக்கும் பொதுவானது.சிலருக்கு மதம். சிலருக்கு இசம். இன்றைய மனித சமுதாயத்திற்கு எது வேண்டும் என்பது பற்றி இந்தச் சார்பு நிலை இல்லாது எவரால் சிந்திக்க முடிகிறது? எங்கு நாம் சேருகிறோம் என்பதைப் பொறுத்து எங்கள் வடிவமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வடிவத்தை எப்போதும் விமர்சனத்தோடு பார்க்கிறோமா அல்லது விசுவாசத்தோடு பார்க்கிறோமா என்பதில் வேறுபாடு இருக்கிறது. கண்மூடித்தனமான விசுவாசம் நல்ல அபிவிருத்திக்கான வழியாகாது.
ஏழ்மையான சிந்தனைகளாக இருந்தாலும் எல்லோருக்கும் விளங்கும் சிந்தனைகளாக இருக்க வேண்டும் என்பது என் பாத்திரத்திற்குள் சரியாகப் பொருந்துகிறது என்பதற்காக எல்லோரது பாத்திரத்திற்கும் அது சரியாகப் பொருந்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.