5.83x8.ma-frontpng
இந்த நாட்டில் உள்நாட்டுச் சண்டையொன்று நடைபெற்றது. அதில் இரத்தம் ஆறாக ஓடியது. மனித உயிர்கள் செல்லாக்காசாய்; வேட்டுக்களால் காவுகொள்ளப்பட்டனர். சித்திரவதைகள், கொலைகள் என்பன எங்கும் மலிந்து கிடந்தன. மனிதப் பிணங்கள் உரிமைகோராது தெருக்களில் புழுத்துப்போயின. எந்தவிடத்திலும், எப்போதும் எவருயிரும் பறிக்கப்படலாம் என்கின்ற நிச்சயமற்றநிலை நெடுநாளாக ஆட்சிசெய்தது. அது மனிதத்தை உயிரோடு எரியூட்டியது. ஓடிய இரத்தத்தின் சுவடுகளைக்கூடப் பேரினவாதம் மறைத்து, சிறுபான்மை இனத்தின் இருப்பைத் திட்டமிட்டுச் சீரழித்தது. மனிதம் என்றும் வெட்கிக்குனியும் அவமானத்தைப் புத்தரின்மைந்தர்கள் வெற்றிக் கிரீடங்களாக அணிந்துகொண்டனர்.

ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் மனதில் தாங்கள் இரண்டாந்தரம் என்னும் வடுக்கள் நிரந்தரமாகின. ஒருதாய்க்குப் பிறந்த மூன்று பிள்ளைகளை விதம் விதமாய் நடத்திய உணர்வு பலருக்கும் இலங்கையின் சுதந்திரத்தின்பின் உண்டாகிற்று. பெரும்பான்மை இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் இனவெறியை அரசியல் ஆயுதமாகக் கூச்சமின்றிப் பயன்படுத்தினர். அது சிங்கள அரசியலுக்குரிய தனிப்பண்பாகிற்று. அடக்கிவைத்து ஐக்கியம்காணும் அரசபயங்கரவாதம் தொடரலாயிற்று.

அப்துல் காதருக்குச் சிறுபான்மை இனத்தின் போராட்டம் நெஞ்சில் இரணமான வேதனையைப் பிரசவித்தது. ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறாம் ஆண்டு ஐப்பசி மாதத்திற்கு முன்பு தானும் ஒரு தமிழன் என்கின்ற தமிழ்த்தேசியவாதத்தில் ஊறி, அதன் போதையில் மயங்கிக் கிடந்தான். சாவகச்சேரி, கிளிநொச்சி, மன்னார் போன்ற இடங்களில் இருந்து முஸ்லீம் மக்கள் புலிகளால் விரட்டப்படுகிறார்கள் என்பதை அவனால் அப்போது இம்மியளவும் நம்பமுடியவில்லை. தமிழரின் இனவிடுதலையைச் சீரழிக்கும் நோக்கோடு, கொச்சையாகப் பரப்பப்பட்ட வதந்தியாக அதை எண்ணிப் புறந்தள்ளிவிட்டான்.

ஐப்சிமாதம் முப்பதாம்திகதி புலிகளின் ஒலிபரப்பிகள் யாழ்ப்பாணத்திற் திடீரென மூலை முடுக்கெல்லாம் உயிர் பெற்றுக்கொண்டன. அவை உதிர்த்த சொற்களின் அர்த்தங்களை இன்றும் அவனால் நம்பமுடியவில்லை. ஒஸ்மானியக் கல்லுரியில் அவர்கள் மேலும் எறிந்த சொல்லணுகுண்டுகள் தமிழ் முஸ்லீம் இனங்களை நிரந்தரமாகத் துண்டாடின.

ஒளிவுமறைவாக யாழ்ப்பாணத்திற் தமிழருக்கும், தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கும் இருந்த உரசலை புலிகள் இனவாதமாக அறிமுகம் செய்துவைத்தார்கள். தேசியவாதத்தின் துணையோடு மண்ணையும், உரிமையையும் மீட்போம் என்றவர்கள்… தோழமையினத்தின்… சொந்தவினத்தின்… உரிமைகளைப் பறித்து தக்கவைக்க முடியாத மண்ணை மட்டும் மீட்டார்கள். இந்த நிகழ்வினால் காதருக்கு தமிழ்த்தேசியம் என்கின்ற போதை காலால் கரைந்து போயிற்று. மீதமாய் மிஞ்சியது முஸ்லீம் என்கின்ற மதத்தால் ஆட்கொள்ளப்பட்ட கலாசார அடையாளம் மட்டுமே. தமிழ்த் தேசியவாதத்திற்கும்… தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கும் இருந்த பிணைப்புக்கள் அன்றோடு அறுந்தன… அவை ஒட்டமுடியா உடைந்த ஓடுகளாயின. அவை தொடர்ந்தும் இணையமுடியாத தண்டவாளங்களாக… இரு சிறுபான்மை இனங்களாக… இலங்கையில் நலிவுறும் வேகம் அந்நாளில் இருந்து உச்சத்தை அடைந்தது.

புலிகளியக்கத்தின்; இந்தச் செயல் இரண்டாம் உலகமகாயுத்தத்தில் போலந்து நாட்டுக்காரரை சொந்த வீட்டால் வெளியேற்றி… அங்கு ஜேர்மனியர்களைக் குடியேற்றிய நாஜிக்களைவிட மோசமானதாய் அமைந்தது. இந்த வரலாற்று உண்மையை இன்றும் பலராற் புரிந்துகொள்ள முடியவில்லை. சகோதர இனத்திற்கு எதிராக நடந்த இந்த நிகழ்வு யாழில் மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்திற்று. கரவுகொண்ட இனங்கள் பகைகொண்ட இனங்களாகின. ஈழத்தமிழினம் தன்னலத்தோடு மௌனம் காத்தது. தனியனானது.

ஐம்பது ரூபாயுடன் அபலைகளாக முஸ்லீம்களை வெளியேற்றி… அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்த இயக்கமொன்றை விடுதலை வீரர்களென ஒர் இனம் குருட்டுத்தனமாக நம்பியது. பாவத்தின் பயன்களைப் பார்த்தாகிற்று. எங்களின் கழுத்தை நாங்களே அறுத்துக்கொண்ட சங்கதி இன்று புரியலாயிற்று.

ஐம்பது ரூபாயோடு புறப்பட்ட அப்துல்காதரின் பயணம் முதலில் புத்தளத்தில் கரைதட்டியது. பின்பு அங்கு நிலைகொள்ள முடியாமல், காத்தான் குடியிற் பல இன்னல்கள் மத்தியில் நிரந்தரம் கண்டது. அங்குதான் அப்துல்காதர் தங்கள் இனத்தைக் காப்பாற்றப் பெரும்பான்மை இனத்தோடு சேர்ந்து ஆயுதம்தூக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டான்.

ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறாம் ஆண்டு ஆவணிமாதம் மூன்றாம் திகதி நூற்றி நாற்பத்தி ஏழு சகோதரர்களின் உயிரைப் பலிகொண்ட அராஜகத்தைப் புலிகள் காத்தான்குடியில் அரங்கேற்றினர். அது அவர்கள் போராளிகள் அல்லர் பயங்கரவாதிகள் என்கின்ற கூற்றை மீண்டும் உறுதி செய்தது. பயங்கரவாதிகள் என்னும் முத்திரையைத் தங்கள்மேல் குற்றிக் கொண்டு, தமிழர்களின் உண்மையான போராட்டத்தை நலிவுறப் பண்ணினார்கள் என்பது காதரின் எண்ணம். அதை இன்றும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளதது அந்த இனத்தின் சாபமாகும். அதுவே தொடர்ந்தும் உலகம் அவர்களின் உரிமையின் நியாயத்தைப் புறக்கணிக்கச் செய்கிறது. இந்த உண்மைகளைச் சொல்பவர்களுக்கு இன்றும் துரோகிகள் பட்டம் தரப்படுகிறது.

அப்துல்காதருக்கு அந்த ஆயுதம் பொது எதிரியோடு சேர்ந்துஇ சகோதர இனத்திடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தூக்கப்பட்ட ஆயுதமென நியாயம் கூறப்பட்டது. ஐம்பது ரூபாய் அனுபவத்தின் பின்பு, அப்துல்காதருக்கும் அதில் அசைக்க முடியாத நியாயம் இருப்பதாய்த் தென்பட்டது.

அப்துல்காதருக்குச் சிறுகச், சிறுக மனம் மரத்துக்கொண்டு வரும்போதுதான் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மேலான தாக்குதல் பதினொராந்திகதி ஐப்பசிமாதம் இரண்டாயிரத்து ஓராம் ஆண்டு நடந்தது. அதை அவன் சரியென்று முதலில் ஏற்றுக்கொண்டவன் அல்லன். அதற்கான தண்டனையாக முஸ்லீம் மக்கள் எங்கும் ஒடுக்கப்படுவதையும், அவமானப்படுத்தப்படுவதையும் அவனாற் தாங்க முடியவில்லை. அது அவனுக்கு கொதி உலையில் இருக்கும் ஈயத்தைக் கொண்டுவந்து இதயத்திற்குள் வார்ப்பதான வேதனை தந்தது. அதுவே இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டும் என்கின்ற வெறியை உண்டுபண்ணியது. அவனால் இயன்ற உதவியாக ஒரு துரும்பாவது எடுத்துக் கொடுக்கவேண்டும் என்கின்ற பரபரப்பு அவன் மனதில் தொற்றியது. அதன் பயனாகப் பாவம் புண்ணியம் என்கின்ற அலசல் தனக்கு இங்கு வேலை இல்லையென்று அவனைவிட்டுப் போயிற்று. பேரினவாதச் சிங்களவரும், பேரினவாதத் தமிழர்களும் அழிந்து போவது அவன் மனதில் இனிச் சஞ்சலத்தை உற்பத்தி செய்யாது. அந்த நிலைக்கு அவன் தன்னைத் திடமாக மாற்றிக்கொண்டான். காலம் மென்மையான உணர்வுகளை அறுத்து அவன்மீது வன்மத்தைச் சவாரி செய்யவிட்டது.