Uma_Maheswaran

umamaheswaran

அந்தச் சமயத்தில் திம்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் சென்னையில் தங்கியிருந்தோம். எங்கள் தொழில் அரசியல் கற்பது. அப்போது தாடி வளர்க்கும் காலம். அதுவும் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அது முக்கிய அடையாளம். திம்புப் பேச்சு வார்த்தையின் தோல்வி பற்றி வாசுதேவா வந்து விபரித்தார். ஐயுறவோடு மேசைக்குச் சென்று வெறுங்கையோடு வந்த கதையது. அதற்குக் கடும்போக்கும் ஒரு காரணம். சிங்களத்தின் கைவிரிப்பு அடுத்த காரணம்.

அரசியல் வகுப்பு முடித்த பின்பு எங்களை மாங்குளம் என்னும் தாஞ்சாவூரில் உள்ள முகாமில் சிலகாலம் அரசியல் படிப்பிப்பதற்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது முகாமிற்கு வரும் சாப்பாட்டின் அளவில் அதிகமான கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டிருந்தது. பணத்தின் வரவில் பஞ்சமா? அல்லது வந்த பணம் பாதை மாறிப் போய்விட்டதா? பணமரங்கள் ஐரோப்பியச் சிறையில் கம்பி எண்ணுகிறார்களா? என்பது எவருக்கும் தெரியாது. முகாமில் இருப்பவர்களுக்கே உணவு வழங்க முடியாவிட்டால் எப்படி இயக்கம் நடத்தமுடியும்? இந்தப் பிரச்சனை ஒரு நாள் பெரிதாக வெடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். புயலுக்கு முன்னான அமைதியில் முகாம்.

அந்த நாள் விரைவாக வந்தது. அந்த முகாமில் இருந்தவர்கள் முகாமிற்குத் தரப்பட்ட சீனியை மிச்சம் பிடித்து அலுவலகத்திற்குள் வைத்திருந்தார்கள். இது ஒரு பிரச்சனையாக வரும் என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை. அன்று மாலை றேசன் வண்டி வந்தது. அதில் இருந்து இறங்கிய மணியம் அலுவலகத்திற்குள் சென்றார். அலுவலகத்தில் என்ன வைத்திருக்கிறீர்கள் என்று ஆராய்வது அவர் வழக்கம் இல்லை. வழமையாக முகாமிற்குக் கொடுக்க வேண்டிய றேசனை இறக்கிவிட்டு அவர் சென்று விடுவார். இம்முறை பொருட்கள் இறக்கும் முன்பு ஏதும் மிச்சம் வைத்திருக்கிறீர்களா என்கின்ற மணியத்தின் துப்பறியும் ஆராய்ச்சியில் சீனி தட்டுப் பட்டு விட்டது. மணியம் சீனியின் அளவைக் குறைத்தே தருவேன் எனக்கூற, அங்கு நின்றவர்கள் தங்களுக்குக் கொண்டு வந்ததைத் தரவேண்டுமென அடம்பிடிக்க, படியளப்பவன் என்னையே எதிர்க்கிறீர்களா என்பதாக மணியம் முறைக்கத் தகராறு ஒன்று உருவாகியது. அங்கு நின்ற சில தோழர்கள் தங்கள் சொந்தப் பிரச்சனையாக இதை எடுத்துக் கொள்ள, மணியத்திற்கும் தோழர்களுக்குமிடையில் கடும் இழுபறியாக அது விஸ்வரூபம் எடுத்தது. அதில் யாரோ சனியனை நாக்கில் வைத்து மணியத்தை கெட்ட வார்த்தையிலும் திட்டி இருக்க வேண்டும். மணியம் இந்தப் பிரச்சனையால் பொருட்களை இறக்காமலே கோபமாக வண்டியைச் திருப்பிக்; கொண்டு ஓரத்தநாடு சென்றுவிட்டார்.

அதன்பின்பு மீண்டும் முகாமில் மாயமான அமைதி. இது பயம் தரும் தற்காலிக அமைதி. சுழல் காற்றின் முதற்பகுதி அடித்து ஓய, அதன் ஆபத்தான மையப் பகுதிக்குள் ஆறுதல் அடைவதான அற்ப சந்தோசம். என்ன நடக்கப் போகிறது என்கின்ற அச்சத்தில் எல்லோரும் உறைந்து போய் இருந்தனர். முதலில் நடந்த அரசியல் பிரச்சனையும், அதற்கான தண்டனைகளாக சந்ததியார் உட்பட பலர் கொல்லப்பட்டதும், பி முகாமில் பலருக்குத் தண்டனை நீடித்ததும் இன்னும் அனேகரது நினைவில் பசுமையாக இருந்தன. எல்லோரும் புயலின் மறுபகுதியின் தாக்குதலுக்காகக் காத்திருந்தார்கள்.

இயமன் எருமைமாட்டிலும் வரலாம் மனிதர்களால் செய்யப்பட்ட நவீன ஜீப்வண்டிகளிலும் வரலாம் என்பது போல அந்த ஜீப் இறுமிக் கொண்டு முகாமிற்குள் புயலாக வந்தது. அது இன்று கொட்டான் தடியோடு நின்று நிறுத்தம் சொல்பவனுக்கு நிற்காது உள்ளே புகுந்தது. பயத்திலும் அதிர்ச்சியிலும் பலரும் உறைந்து போயினர். ஒரு சிறிய பிரச்சனையாக ஒருவருக்குத் தோன்றுவது மற்றையவருக்கு எவ்வளவு பூதாகாரமாகத் தோன்றலாம் என்பது புரிந்தது. இவர்களின் சாப்பாட்டுப் பிரச்சனை இன்று பூதாகாரமாய் வளர்ந்து பெரியவர் வடிவில் முகாமில் வந்து நின்றது. இந்தப் பிரச்சனையின் சூத்திரதாரிகளாய் அரசியல் படிப்பிப்பவர்கள் அடையாளம் காணப்படலாம். அப்படி அடையாளம் காணப்பட்டால் எங்கோ ஒரு காட்டிற்குள் முகவரி இல்லாத புதைகுழியில் இந்த உலகத்தில் எங்கும் பதியப்;படாத இறப்புக்களில் ஒன்றாகப் போகவேண்டி வரலாம் என்பது மெல்லப் புலனாகிற்று. அந்த உண்மை உதைக்க என் கைகால் நடுங்கியது.

அலுவலகத்தினுள் அதிகாரமான பலத்த கர்ச்சனை கேட்டது. யாருக்கு என்பது புரியவில்லை. சிறிது நேரத்தில் விசில் அடித்துப் பரேட் கூட்டப்பட்டது. எல்லோரும் நடுக்க மெடுத்த நோய்க் கோழிகளைப் போலப் போய் கழுத்தைத் தொங்கப் போடமுடியாது பரேட்டில் வில்லங்கத்திற்கு விறைப்பாக நின்றார்கள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாதாம். பெரியவரைச் சாதுவாகத்தான் பார்த்ததுண்டு. அன்று பெரியவர் மிகவும் கோபமாகக் காணப்பட்டார். சடைத்த சுருள் முடியும், அடர்ந்த மீசையும், பளபளக்கும் கண்ணும் இன்று வேள்விக்குத் தயாரான ஐயனாரைப் போன்று பயத்தைத் தந்தது. அவர் முகத்தில் இருந்த சாந்தம் எங்கோ ஓடி ஒளிந்து விட்டது. பெரியவர் நவீன கட்டப்பொம்மனாக, அனல் பறக்க, அப்பாவிகளின் தலையைக் கொய்வதற்கு தயாராக நிற்பது போல்த் தோன்றியது. அவரது கூரிய பார்வையைத் தாங்க முடியாதவர்களாய் பலர் இராணுவ விதியை மீறித் தலை குனிந்தனர். பெரியவர் கோபமாகப் பேசினார். அவர் பேசியது நியாயமாகக்கூட இருக்கலாம். அதை பெரிதாக கிரகிக்க முடியவில்லை. பெரியவரின் கோபம் உச்சக் கட்டத்தை அடைந்த போது அந்த வசனங்கள் எல்லோரது காதிலும் பழுக்க காய்ச்சிய இரும்பாய்ப் பாய்ந்தன. விலை மதிக்க முடியாத வாழ்க்கைகூட சிலவேளைகளில் வீட்டில் பூச்சிகளின் வாழ்க்கையாகிவிடும் என்பதை அந்த சொற்கள் சுட்டிக் காட்டின. எல்லோரும் விறைத்துப் போய் நின்றார்கள். பெரியவர் மணியத்தோடு பிரச்சனைப் பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும், மற்றவர்களுக்கு தண்டனையும் கொடுக்குமாறு கூறிவிட்டு, கோபமாக ஜீப்பில் ஏறிச் சென்றுவிட்டார். நாங்கள் அதைத் தொடர்ந்து மூச்சுவிடாது மண்ணில் புரண்டோம்.
பெரியவர் போனபின்பும் அவரின் அந்த வார்த்தைகள் இன்னும் பலரது காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது. அதைச் சொல்லும் போது அவ்வளவு பயத்தையும் மீறி யாரோ சிரித்தது பெரியவருக்கு இன்னும் ஆத்திரத்தை உண்டு பண்ணியது. வன்முறை மீது நாங்கள் காதல் கொண்டவர்கள் அல்ல என்பது பெரியவரின் வாசகம். என்றாலும் புலிவாலைப் பிடித்ததுபோல, ஆயுதத்தைப் பிடித்தவர்கள் அதைக் கைவிடுவதாக வரலாறுகள் இல்லை. அதை யாருக்கு எதிராக நீட்டுவார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. அதுவே அவரின் விதியும் ஆகியது.

பெரியவர் கோபத்தில் ‘ஊராய் இருந்தால் உங்களை யெல்லாம் சுத்து சுத்து தள்ளி இருப்பன்’ என்று சுட்டு என்பதைச் சுத்து எனக் கொன்னை தட்டக் கூறியதில் யாரோ சிரித்துவிட்டான். ஆனால் அதில் இருந்த வெறுப்பும் கோபமும் பலரைக் கதி கலங்க வைத்தது. அவர் நிலை மத்தளம் போல என்பதை முகாமில் இருப்பவர்கள் எப்படி அறிவார்கள்? இயக்கம் ஈடாடிப் போய் இருந்த அன்றைய நிலையில் பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்கின்ற ஒருவித நம்பிக்கை மாத்திரம் சிறிது தென்பைத் தந்தது.
அந்த நிகழ்ச்சிக்குப் பின்பு முகாம்களில் சாப்பாட்டுப் பொருட்களைச் சேர்த்து வைப்பது இல்லை. அந்த வாரத்திற்குத் தரப்படுவதை அந்த வாரத்திலேயே உபயோகித்து முடித்து விடுவது உண்டு. சாப்பாட்டுப் பொருட்களும் முன்புபோல் இப்போது வருவதில்லை. எல்லாமே ஒருவித தளர்வை நோக்கிச் சென்று கொண்டு இருந்தன.

இது எனது எங்கே என்கின்ற நாவலில் வந்ததில் ஒரு பகுதி.

பெரியவர் என்பது தமிழீமக்கள் விடுதலைக் கழகத்தில் செயல் அதிபர் அமரர் உமாமகேஸ்வரனைத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். குறுக்குவழிச் சாணக்கியத்தில் அவர் வல்லமை பெற்றவர் அல்ல. அவரிடம் சித்தாந்தத் தெளிவு இருந்தது. சித்தாந்தம் வேறு நடைமுறை வேறு. ஜேவிபியை நம்பி மொத்த இலங்கையிலும் புரட்சி வெடிக்கும் என்கின்ற கனவு அவரிடம் இருந்தது. சித்தாந்தச் செயற்திட்டம் பிழைத்த போதும் குறுகிய கால ஆதாயத்திற்காய் போராட வேண்டும் என்று அவர் முழு மூச்சாக ஈடுபடவில்லை. அப்படி ஈடுபட்டிருந்தால் ஆயிரம் மாயிரமான தோழர்களை இந்தியா தந்த ஆயுதங்களோடு இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கலாம்.
ஒரத்தநாடு சங்கரலிங்கம் என்கின்ற மனிதரோடு அவருக்குப் பழக்கம் இருந்தது. அந்த ஒரத்தநாடு சங்கரலிங்கம் பிற்காலத்தில் எனக்கும் பழக்கமானார். இப்போது அவரும் இவ்வுலகில் இல்லை. அவரின் கூற்றுப்படி வெற்றி பெறமுடியாத இந்த யுத்தத்திற்காக இளைஞர்களைத் தான் இந்தியா தரும் ஆயுதங்களுடன் இலங்கைக்கு அனுப்பி அங்கு அவர்களைப் பலிகொடுக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்ததாகச் சங்கரலிங்கம் கூறியிருந்தார்.

ஒரு வகையில் மனிதாபிமானமும் அரசியல் தெளிவும் உள்ள ஒரு போராளி அவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பின்பு நடக்கப் போவதைப்பற்றிய ஓரளவு தீர்க்க தரிசனம் அவரிடம் இருந்திருக்கிறது. அவருடைய அரசியல் அறிவு ஜனநாயக நீரோட்டத்தில் கலந்த பின்பும் ஈழத்தமிழருக்கு உபயோகமாய் இருந்திருக்கும். அதற்கு அவரை தோழர்களே விட்டு வைக்கவில்லை. அதைவிட எதற்காக மாலைதீவில் ஆசைப்பட்டார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நேர்மையான அரசியல் புரிந்த அளவிற்கு சூதாட்ட அரசியலையும் அதைப் பயிலும் மனிதர்களையும் அவரால் நிதானிக்க முடியாமல் இருந்திருக்கலாம்.
இன்று ஆயிரம் மாயிரம் கடந்த காலப் போராளிகள் உயிரோடு இருப்பதற்கு முகுந்தனின் அரசியற் தெளிவோ அல்லது மனிதாபிமானமோ காரணம் என்பதை மறுக்க முடியாது. அல்லது எதற்கும் பெறுமதியற்று, எலும்புகளும் உக்கி இருக்கும் என்பதை மாற்ற முடியாது போயிருக்கும்.

முகுந்தன் பிழைகள் இல்லாத போராட்டத்தை நடத்தாவிட்டாலும் பேரழிவு இல்லாமல் ஆயுதப் போராட்டத்தை முடித்துக்கொண்டது எமது இனத்திற்குச் செய்த பேரூபகாரமே என்று எமது இனத்தின் இருப்பே ஈடாடும் இன்று என்னால் நினைவுகூர முடிகிறது.