5.83x8.ma-frontpng

1

1.1 இந்தியா

ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டிற்கும் இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டிற்கும் இடையில் பலவருடங்கள் மழைக்கால ஆறாக வேகமாக உருண்டோடின. இந்தியாவின் பொருளாதாரப் பேரவாவில் அது காந்தியின்தேசம் என்னும் முகத்தை நிரந்தரமாக இழந்திற்று. அந்தத் தேசம் காந்தியம் தொலைத்து… மனிதம் துறந்து… வெகுதூரம் காந்தியின் கனவுக்கு எதிர்ப்பாதையிற் குருட்டுத்தனமாய்ப் பயணம் செய்தது. சினிமாவில் மூழ்கிவிடுகின்ற இந்திய மக்களின் மறதிக்கு இருபத்தியொரு வருடங்கள் இருபத்தியொரு யுகங்களாகிவிட்டன. இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் இந்துத் தேசியவாதக் கட்சியொன்றை இந்தியமக்கள் பெரும்பான்மைப் பலத்தோடு தம்மை ஆளத் தெரிவுசெய்தார்கள். ‘பெரிய பொய்களாய்க் கூறுங்கள் மக்கள் இலகுவாக நம்பிவிடுவார்கள்’ என்றான் ஹிட்லர். அது எங்கு நம்பப்படாவிட்டாலும் இந்தியாவிலும், ஈழத்திலும் நம்பப்படும். உலகம் முழுமையும் வரலாறுகள் மனித இனத்தால் மறக்கப்படுவது வழமையாகிறது. மறக்கப்பட்ட வரலாறு மீண்டும் திருப்பி எழுதப்படவேண்டியது வரலாற்றுக் கட்டாயமாகிறது. ஆயிரம் சோகவரலாறுகள், உலகம் இருக்கும் வரையும் அதன் முதுகைப் புண்ணாக்குவது ஓயப்போவதில்லை என்பது மீண்டும் உண்மையாகும் காலம் வந்தது.

முஸ்லீம்களுக்கு எதிராக மும்பாயில் ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றி இரண்டு, ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டுகளில் நடந்த கலவரத்தின் சீழ் அம்மக்களின் மனதில் துர்நாற்றத்தோடு தொடர்ந்தும் காயாது வடிந்தது. அந்த கலவரத்தின் கொடுமையை உணராத இந்துமத வெறியர்கள் மீண்டும் கத்திகளைத் தீட்டத் தொடங்கினர். அவர்கள் ஒரு வரலாற்றை மறந்து… அதையே மீண்டும் திருப்பியெழுதத் திட்டமிட்டனர். உலகத்தில் மனிதத்தை மதிக்கின்ற இடமுண்டா என்கின்ற கேள்வியின் இடையறா எதிரொலிப்பு. இந்தியாவில் வாழும் சில முஸ்லீம்களின் நினைவில் சொந்த நாட்டையே அன்னியமாகப் பார்க்கும் நிலவரம். நாடு ஒருவனை அன்னியப்படுத்தும்போது அவன் அந்த நாட்டை அன்னியமாகப் பார்ப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகி விடுகிறது. வெறுப்பு என்னும் விசநாகங்கள் பல, மனிதமனங்களின் இருட்டான மூலைகளில் சுருண்டு கிடக்கின்றன. அவை சீறிப்பாயும் போது அழிவை அறுவடை செய்கின்றன.

எளியவனுக்கு வலியவன் மீது ஏற்படும் தார்மீகக் கோபத்திற்குப் பதிலாக, வலியவனுக்கு எளியவன் மீது ஏற்படும் கோபமே இந்த நவீன உலகில் எங்கும் தாண்டவமாடுகிறது. அது, இந்தப் புதியயுகத்தின் சாபம் கலந்த சோகமான விதியாகிவிட்டது. ஏழைகள் மேலும் மேலும் எங்கும் ஏழைகளாக… பணக்காரன் மேலும் மேலும் எங்கும் பணக்காரனாக… சுரண்டப்படுபவன் மேலும் மேலும் சுரண்டப்பட… அடிமைகள் மேலும் மேலும் அடிமைகள் ஆக… இனவெறி, மதவெறி, சாதிவெறியென மனிதன் தனது கோரமுகத்தை மட்டும் கூர்மையாக்கிக்கொண்டு வருகிறான். அதன் அசிங்கம் அவனுக்குப் புரிந்தாலும்; சுயநலத்திற்காய் அதைப் புறம்தள்ளி வைக்கிறான்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழைகளின் உற்பத்தியை, வறுமையின் செழிப்பைக் குறைத்துவிடவில்லை. அது சேரிகளின் வளர்ச்சிக்கு மேலும் உரமூட்டியது. வசதிகள் பெருகப் பெருக, வசதி படைத்தவனின் ஆசைகளும் பெருகிக்கொண்டே சென்றன. ஆசையின் கோரப்பிடியில் வன்மங்கள்கூட நியாயங்களாக்கப்பட்டன. அனுதாபங்களற்ற மனிதர்களின் பார்வை வேட்டையாடும் விலங்குகளைவிடக் கோரமாகியது.

அன்று இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு ஆனிமாதம் பதினாறாம் திகதி சனிக்கிழமை. இந்தியாவில் தேர்தல் முடிந்து சிலநாட்கள் அமைதியாகக் கழிந்து போயின. சில இந்துத் தீவிரவாத அரசியல்வாதிகள் மனதில் சாம்பல்பூத்த நெருப்பாக வெறுப்பும், கோபமும், காலம் பார்த்து… கட்டளை நோக்கிப்… பதுங்கி இருந்தன. முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழுமிடங்களில் மட்டும் அந்த இந்துத் தீவிரவாதக்கட்சி படுதோல்வியடைந்த வேதனை அவர்களை வாட்டியது. அது அந்தக் கட்சியினருக்குத் தாங்கமுடியாத வெறுப்பை அந்தச் சிறுபான்மையினர்மீது ஏற்படுத்தியது. இந்துத்துவத்திற்கு அடங்கி அடிபணியாத ஒரு சிறுபான்மை இனத்தை வேரோடு கருவறுத்து… இனச்சுத்திகரிப்பு செய்யவேண்டும் என்கின்ற அந்தக் கட்சியின் மறைமுகக் கொள்கையை நடைமுறைப்படுத்தச் சந்தர்ப்பம் பார்த்து அவர்கள் காத்திருந்தார்கள். உலகெங்கும் சிறுபான்மையிரைத் தங்களுக்குள் கரைப்பதற்கோ, அல்லது கருவறுப்பதற்கோ பல நாடுகள் உன்னிப்பாகச் செயல்படுகின்றன. அதைப் பூசிமெழுகுவதற்கு ஆயிரம் சமாதானம் சொல்லப்பட்டாலும், திரைமறைவுக்குப் பின்னே வக்கிரமான திட்டங்கள் சந்தடி இல்லாமல் நிறைவேற்றப் படுகின்றன.

தங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்துவிட்டதான வக்கிரமான சந்தோசம் அவர்கள் அடிமனதில் இப்போது களைகட்டத் தொடங்கலாயிற்று. இம்முறை அயோத்தி மசூதி போன்ற பிரச்சனைக்காகக் காத்திருக்கும் பொறுமை அவர்களிடம் இருக்கவில்லை. கட்சியின் கட்டளைப்படி அதைத் திட்டமிட்டு சனிக்கிழமை இரவு தொடங்குவதாய் முடிவெடுக்கப்பட்டது. கலவரங்களைச் செயற்கை முறையில் உண்டுபண்ணுவது கல்வி அறிவு குறைந்தவர்கள் வாழும் நாட்டில் சிரமமாய் இருப்பதில்லை. குளவிக்கூட்டிற்கு கல் எறிவது போல, அதை இலகுவாகச் செய்துவிடமுடியும்.

அந்த இரவுச் சந்தைக்கு அருகில் சற்று மறைவான இடமொன்று, இருட்டில் ஒளிந்து விளையாடியது. அந்த இருட்டிற்குள் அம்மன் கோவிலொன்று பாழ்பட்டுப்போய்க் கிடந்தது. அந்த கோவிலுக்கு முன்னால் லொறியொன்று வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து வயிறு ஒட்டிப்போன பசுமாடொன்று கீழே இறக்கப்பட்டது. மூன்று முஸ்லீம்கள் கத்தி, சம்மட்டி போன்றவற்றோடு இறங்கினார்கள். பின்பு அவர்கள் யாருடனோ கைத்தொலைபேசியிற் கதைத்துவிட்டு, பசுமாட்டைச் சம்மட்டியால் அந்தக் கோவிலுக்கு முன்பு வைத்து அடித்தார்கள். அது அலறியடித்தவண்ணம் நிலத்தில் விழுந்தது. பின்பு விரைவாக அதன் கழுத்தை அறுத்து இரத்தத்தை அந்தக் கோவிலின் முன்பு ஓடவிட்டார்கள். அதன் தோலைச் சிறிது உரித்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் எதிரத்;திசையில் பல மனிதர்கள் அவசர அவசரமாய் ஆயுதங்களோடு அம்மன் கோவிலை நோக்கி வந்தார்கள்.

அதைக் கண்ட அம்மூவரும் மீண்டும் லொறிக்குள் ஏறித் தங்கள் உடைகளை அவசரமாக மாற்றிக்கொண்டனர். கை, கால்கள் கட்டி வைத்திருந்த மூன்று முஸ்லிம்களின் கட்டுக்களை அவிழ்த்து, அவர்களை லொறிக்கு வெளியே தள்ளினார்கள். என்ன நடக்கிறது என்பதை அந்த முஸ்லீம்கள் ஊகிக்க முன்பு, லொறியில் இருந்து பாய்ந்த அந்த வஞ்சக இந்துக்கள் கீழே கிடந்த முஸ்லீம்களைத் தாக்கத் தொடங்கினார்கள்.

எதிரே அவசரமாக வந்த அந்தக் கூட்டம் அவர்களோடு சேர்ந்துகொண்டது. அத்தோடு இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு மும்பைக் கலவரம் ஆரம்பமாகியது. முதலில் கொல்லப்பட்ட மூன்று முஸ்லீம்கள் தாங்கள் எதற்குக் கொல்லப்படுகிறோம் என்பதே புரியாது இந்திய நாட்டில் பிறந்ததிற்காய் உயிர்விட்டார்கள். அந்த ஊழித்தாண்டவம் ஆடிமுடிந்தபோது, பிணங்களும், அழியா வடுக்களும் மட்டுமே மிஞ்சின. அந்த வடு சொந்த நாட்டிற்கு எதிராகப் பலரையும் சிந்திக்கத் தூண்டியது. ஆட்சிக்கு, வந்த இந்துக் கட்சிக்குப் பெரும்பான்மை மக்களிடம் அதீத வரவேற்புக் கிடைத்தது. அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்கள் முஸ்லீம் மக்களின் சுதந்திர வாழ்வுக்கான அத்தனை பக்கங்களையும் இறுக்கமாக அடைத்தன. அவர்களின் கோபமும் இயலாமையும் அந்தநாட்டின் வீழ்ச்சியே தமக்கு விடுதலை தரும் என்கின்ற வெறியைப் பற்றவைத்தது. யூதர்களின் உரிமையை ஹிட்லர் பறித்தபோது யாராலும் தட்டிக்கேட்க முடியவில்லை. முஸ்லீம்களின் உரிமை இந்தியாவில் பறிக்கப்படும்போதும் யாரும் காத்திரமாகத் தட்டிக்கேட்கவில்லை. பொருளாதாரக் கணக்கில் மனிதாபிமானம் தொலைந்து போயிற்று. காலந்தாழ்ந்து பேசப்படும் நியாயங்களில் கருணை இருந்தென்ன, காருண்யம் வடிந்தென்ன? அவை அழிவுகளின் கல்லறையில் நின்றுதானே கூக்குரல் எழுப்பமுடியும்? சிலகாலத்தில் அதையும் மறக்க முடியும். இந்தியாவின் தயவில் நடந்த மனிதப் படுகொலைக்கு ஈழம் ஒரு வரலாற்றுப் பாடமல்லவா?

1.2 இலங்கை

இரண்டாயிரத்துப் பத்தொன்பதாமாண்டு தை மாதம் பதின்மூன்றாந் திகதி ஞாயிற்றுக்கிழமை. அனல் தணியும் அந்த மாலை நேரத்து அந்திவானத்தில்… சிவந்து அக்கினிக் கோளமாக ஆதவன் பரிணமித்து… மெல்ல மெல்ல அவன் கடலைத் தொட்டு… தட்பவெட்பம் பார்ப்பதான தவிசில் காலலம்பத் தொடங்கினான். இரத்தத்தில் ஆதவன் காலலம்புவதாக இராவணதேசத்து முகில்கள் அவன் முன்னே தீக்குளித்துக் கொண்டன. வேறுசில முகில்கள் கொலைக்களத்தைத் துடைத்து வந்ததாகச் சூரியனைச் சுற்றி நின்று ஒப்பாரி வைத்தன. அவை போர்க்களத்தின் நிறம் இதுதான் என்கின்ற நிர்வாணம் காட்டின. அது பார்ப்பார் மனம்கதறக் கடந்தகால வரலாற்றை மீண்டும் நினைவுகளில் ஓடவிட்டது. சாட்சிகள் இல்லாத சாவுகளை சதா பார்க்கும் எனக்கே நீ சாவுநிறம் காட்டுகிறாயாவெனக் கேட்டவண்ணம்… இரத்த ஆழியில் மெல்ல மூழ்கி, கோர உலகில் இருந்து விடுபட எண்ணினான் கதிரவன். முடிவின் நிறம்காட்டிச் சலித்த மேகங்கள் சோகத்தால் கருமை எய்தி… போகுமிடம் தெரியாது மெல்ல அலமலக்கப் பட்டன. இரத்த வெடுக்கு எங்கும் வீசுவதால், பாதை தெரியாது பயணம் புறப்பட்டதாய் வானிற் தள்ளாடின.

பண்டாரநாயக்கா விமானநிலையம் யுத்தச் சுவடுகளைத் தனது மேனியில் அழிந்துபோன வடுக்களாக்கிவிட்டது. இப்பொழுது அமைதியை ஆரத்தழுவி… இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு… மிடுக்கோடு… இலங்கையின் பெரிய விமான நிலையமாகத் தொடர்ந்தும் பயணிகளை வரவேற்றது. விட்டுக்கொடுக்காத சுயநல அரசியலில், குட்டிச்சுவராகிப்போன நாடொன்றின் பிரதான விமான நிலையம் என்கின்ற உறுத்தல் அதற்கு உண்டா என்பது அதற்கு மட்டுமே வெளிச்சம்.

அப்துல் காதர் ஐந்தடி எட்டு அங்குலம் உயரமானவன். மாநிறமான அவன் கண்களில் பொறுமை தொலைந்து கோபம் பொங்கி வழிந்தது. நிலைகொள்ள முடியாத ஒருவித அவதியில் அவன் தவித்தான். கடிகாரத்தை அடிக்கடி பார்த்தான். கைக்குட்டையை எடுத்து முகம், கழுத்து என்பனவற்றிற் பொங்கி வந்த வியர்வையைத் துடைத்தான். காத்திருப்பு அவஸ்தைதான். அது காதலாக இருந்தாலும், கடமையாக இருந்தாலும் காத்திருப்பு அவஸ்தைதான்.

காதர், தலையில் முஸ்லீம்கள் அணியும் வெள்ளைத் தொப்பி ஒன்றை அணிந்திருந்தான். மதநம்பிக்கைக்கு ஏற்ப மீசை தாடி வைத்திருந்தாலும் அதன் அளவின் பஞ்சம்; அவன் அழகைக் கூட்டிற்று. காலத்திற்கு ஏற்ப மதமும் நவீனப்பட வேண்டும் என்பதில் அவனுக்குச் சற்று விருப்புண்டு. இமாம்கள் போல் கத்தரிக்கோல் படாத தாடியுடன் அலைவது அவனுக்கு இரசிக்கவில்லை. அதேவைளை மதநம்பிக்கையை முற்றுமாய்ப் புறக்கணிக்கும் துணிவும் அவனிடம் இருந்ததில்லை. மதம் என்பது மனிதனில் இருந்து பிரிக்க முடியாத உயிர்நாடி என்பது அவன் முடிவு. அல்லா காட்டியவழி இப்போது இங்கு நிற்பதற்குக் காரணமென்று எண்ணிக்கொண்டான்.

மொத்தத்தில் மதத்திற்கும் நவீன யுகத்திற்குமான சமாதானத்தில் குறைக்கப்பட்ட, முற்றுமாய் மழிக்கப்படாத தாடியும் மீசையும் அவனது முகத்தை அரைச்சந்திரனாக்கியது. அவன் வெள்ளை நிறத்தில் சேட்டும் நீலநிற ஜீன்சும் அணிந்திருந்தான்.

அப்துல் காதருக்குப் பரந்துகிடக்கும் பண்டாரநாயக்கா விமானநிலையத்தைப் பார்க்க வெறுப்பாக வந்தது. ‘மதிப்புக் கொடுக்கப்பட வேண்டிய சக மனிதர்களுக்கோ, அல்லது சகவினங்களுக்கோ மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை. சுயநலமும், குறுகிய எண்ணமுமே பெரும்பான்மை அரசியல்வாதிகளின் கலாசாரம் ஆகிவிட்டது. சிறுபான்மை இனங்கள், என்றும் பெரும்பான்மையின் அடக்குமுறையில், அதிகாரத்தில், திமிர்த்த அவர்களின் மேலாண்மையில் அவமானப்படுகின்றன’ என அவன் மனதிற்குள் எண்ணி வெதும்பினான்.

‘கூட்டிற்குள் வைத்துக் குயிலைக் கூவச்சொல்லும் உலகம்’ என்கின்ற பாட்டுவரிகள் அவன் நினைவில் வந்தன. ‘வலுவில் சிறைவைக்கப்பட்ட பெண்டாட்டியின் அவஸ்தையோடு வாழும் சிறுபான்மை இனங்கள் பரிதாபத்துக்கு உரியனவே’ எனவும் அவன் எண்ணினான்.

இந்த உணர்வுகள், அப்துல்காதர் உயிருடன் இருக்கவே அவனது புறத்தோலை மூர்க்கமாக உரிப்பதான வேதனை தந்தன. சிறுபான்மை இனத்தின்மேல் சந்தேகம் காட்டேறியாகத் தலைவிரித்தாடிய நாடு. ஒருவித மௌனத்திலும்… அதன் மயக்கத்திலும்… எரிமலைகள் உறங்குவதுபோலத் தற்போது நிசப்தமாய்க் கிடக்கிறது. இந்த நாட்டில் பிராயச்சித்தங்கள் இல்லாத பாவங்கள் மட்டுமே நடந்தேறும்ளூ நடந்தேறின. பின்பு அவை மறக்கப்படும்ளூ மறக்கப்பட்டன. அந்த அக்கிரமத்தால் வடுக்களைப் பெற்றவர்கள் மனது மாத்திரம் சாந்தி அடையாது பல சகாப்தங்களாய் அணையாத் தீபங்களாய் எரியும்ளூ எரிகிறது. தப்பிற்குத் தண்டனை கொடுக்கப்படாத நாடு என்னும் அசிங்கத்தை சுமப்பதுபற்றிப் பெரும்பான்மை மக்களுக்கு மனச்சாட்சி உறுத்துவதாய்த் தெரியவில்லையென எண்ணினான்.

சிறுபான்மை என்கின்ற, கைகால் வழங்காத முடங்களின்மேல் இரக்கத்திற்குப் பதிலாய், பெரும்பான்மை என்கின்ற வல்லோன் ஈவிரக்கமற்று வன்மம்தீர்த்த வரலாறுகள் வேப்பெண்ணையாக இன்றும் பலரது வாயிற் கசப்பதான அருவருப்பு தொடர்கதையாகிவிட்டது. சிறுபான்மையின் உரிமை என்பதைப் பகைமையாக எண்ணும் பெரும்பான்மையின் கோரப்பிடிகளுக்குள் அகப்பட்டு நலிந்து போன அந்த இனங்கள் மௌனத்தால், தங்கள் இருப்பை மாத்திரம் தக்கவைத்து கொண்டனவாக, ஆத்மாக்களை இழந்த பிரேதங்களாக… ஒர் அவல வாழ்வை வரித்துக் கொண்டன. அதுதான் இந்த நாட்டின் பௌத்த பெரும்பான்மையினரின் அழகாகத் தொடர்கிறது.

இந்த நாட்டில் உள்நாட்டுச் சண்டையொன்று நடைபெற்றது. அதில் இரத்தம் ஆறாக ஓடியது. மனித உயிர்கள் செல்லாக்காசாய்; வேட்டுக்களால் காவுகொள்ளப்பட்டனர். சித்திரவதைகள், கொலைகள் என்பன எங்கும் மலிந்து கிடந்தன. மனிதப் பிணங்கள் உரிமைகோராது தெருக்களில் புழுத்துப்போயின. எந்தவிடத்திலும், எப்போதும் எவருயிரும் பறிக்கப்படலாம் என்கின்ற நிச்சயமற்றநிலை நெடுநாளாக ஆட்சிசெய்தது. அது மனிதத்தை உயிரோடு எரியூட்டியது. ஓடிய இரத்தத்தின் சுவடுகளைக்கூடப் பேரினவாதம் மறைத்து, சிறுபான்மை இனத்தின் இருப்பைத் திட்டமிட்டுச் சீரழித்தது. மனிதம் என்றும் வெட்கிக்குனியும் அவமானத்தைப் புத்தரின் மைந்தர்கள் வெற்றிக் கிரீடங்களாக அணிந்துகொண்டனர்.

ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் மனதில் தாங்கள் இரண்டாந்தரம் என்னும் வடுக்கள் நிரந்தரமாகின. ஒருதாய்க்குப் பிறந்த மூன்று பிள்ளைகளை விதம் விதமாய் நடத்திய உணர்வு பலருக்கும் இலங்கையின் சுதந்திரத்தின்பின் உண்டாகிற்று. பெரும்பான்மை இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் இனவெறியை அரசியல் ஆயுதமாகக் கூச்சமின்றிப் பயன்படுத்தினர். அது சிங்கள அரசியலுக்குரிய தனிப்பண்பாகிற்று. அடக்கிவைத்து ஐக்கியம் காணும் அரசபயங்கரவாதம் தொடரலாயிற்று.

அப்துல் காதருக்குச் சிறுபான்மை இனத்தின் போராட்டம் நெஞ்சில் இரணமான வேதனையைப் பிரசவித்தது. ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறாம் ஆண்டு ஐப்பசி மாதத்திற்கு முன்பு தானும் ஒரு தமிழன் என்கின்ற தமிழ்த்தேசியவாதத்தில் ஊறி, அதன் போதையில் மயங்கிக் கிடந்தான். சாவகச்சேரி, கிளிநொச்சி, மன்னார் போன்ற இடங்களில் இருந்து முஸ்லீம் மக்கள் புலிகளால் விரட்டப்படுகிறார்கள் என்பதை அவனால் அப்போது இம்மியளவும் நம்பமுடியவில்லை. தமிழரின் இனவிடுதலையைச் சீரழிக்கும் நோக்கோடு, கொச்சையாகப் பரப்பப்பட்ட வதந்தியாக அதை எண்ணிப் புறந்தள்ளிவிட்டான்.

ஐப்பசிமாதம் முப்பதாம்திகதி புலிகளின் ஒலிபரப்பிகள் யாழ்ப்பாணத்திற் திடீரென மூலை முடுக்கெல்லாம் உயிர் பெற்றுக்கொண்டன. அவை உதிர்த்த சொற்களின் அர்த்தங்களை இன்றும் அவனால் நம்பமுடியவில்லை. ஒஸ்மானியக் கல்லூரியில் அவர்கள் மேலும் எறிந்த சொல்லணுகுண்டுகள் தமிழ் முஸ்லீம் இனங்களை நிரந்தரமாகத் துண்டாடின.

ஒளிவுமறைவாக யாழ்ப்பாணத்திற் தமிழருக்கும், தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கும் இருந்த உரசலை புலிகள் இனவாதமாக அறிமுகம் செய்துவைத்தார்கள். தேசியவாதத்தின் துணையோடு மண்ணையும், உரிமையையும் மீட்போம் என்றவர்கள்… தோழமையினத்தின்… சொந்தவினத்தின்… உரிமைகளைப் பறித்து தக்கவைக்க முடியாத மண்ணை மட்டும் மீட்டார்கள். இந்த நிகழ்வினால் காதருக்கு தமிழ்த்தேசியம் என்கின்ற போதை காலாற் கரைந்து போயிற்று. மீதமாய் மிஞ்சியது முஸ்லீம் என்கின்ற மதத்தால் ஆட்கொள்ளப்பட்ட கலாசார அடையாளம் மட்டுமே. தமிழ்த் தேசியவாதத்திற்கும்… தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கும் இருந்த பிணைப்புகள் அன்றோடு அறுந்தன… அவை ஒட்டமுடியா உடைந்த ஓடுகளாயின. அவை தொடர்ந்தும் இணையமுடியாத தண்டவாளங்களாக… இரு சிறுபான்மை இனங்களாக… இலங்கையில் நலிவுறும் வேகம் அந்நாளில் இருந்து உச்சத்தை அடைந்தது.

புலிகளியக்கத்தின்; இந்தச் செயல் இரண்டாம் உலகமகாயுத்தத்தில் போலந்து நாட்டுக்காரரைச் சொந்த வீட்டால் வெளியேற்றி… அங்கு ஜேர்மனியர்களைக் குடியேற்றிய நாஜிக்களைவிட மோசமானதாய் அமைந்தது. இந்த வரலாற்று உண்மையை இன்றும் பலராற் புரிந்துகொள்ள முடியவில்லை. சகோதர இனத்திற்கு எதிராக நடந்த இந்த நிகழ்வு யாழில் மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்திற்று. கரவுகொண்ட இனங்கள் பகைகொண்ட இனங்களாகின. ஈழத்தமிழினம் தன்னலத்தோடு மௌனம் காத்தது. தனியனானது.

ஐம்பது ரூபாயுடன் அபலைகளாக முஸ்லீம்களை வெளியேற்றி… அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்த இயக்கமொன்றை விடுதலை வீரர்களென ஒர் இனம் குருட்டுத்தனமாக நம்பியது. பாவத்தின் பயன்களைப் பார்த்தாகிற்று. எங்களின் கழுத்தை நாங்களே அறுத்துக்கொண்ட சங்கதி இன்று புரியலாயிற்று.

ஐம்பது ரூபாயோடு புறப்பட்ட அப்துல்காதரின் பயணம் முதலில் புத்தளத்திற் கரைதட்டியது. பின்பு அங்கு நிலைகொள்ள முடியாமல், காத்தான்குடியிற் பல இன்னல்கள் மத்தியில் நிரந்தரம் கண்டது. அங்குதான் அப்துல்காதர் தங்கள் இனத்தைக் காப்பாற்றப் பெரும்பான்மை இனத்தோடு சேர்ந்து ஆயுதம்தூக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டான்.

ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறாம் ஆண்டு ஆவணிமாதம் மூன்றாம் திகதி நூற்றி நாற்பத்தி ஏழு சகோதரர்களின் உயிரைப் பலிகொண்ட அராஜகத்தைப் புலிகள் காத்தான்குடியில் அரங்கேற்றினர். அது அவர்கள் போராளிகள் அல்லர் பயங்கரவாதிகள் என்கின்ற கூற்றை மீண்டும் உறுதி செய்தது. பயங்கரவாதிகள் என்னும் முத்திரையைத் தங்கள்மேல் குத்திக் கொண்டு, தமிழர்களின் உண்மையான போராட்டத்தை நலிவுறப் பண்ணினார்கள் என்பது காதரின் எண்ணம். அதை இன்றும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளதது அந்த இனத்தின் சாபமாகும். அதுவே தொடர்ந்தும் உலகம் அவர்களின் உரிமையின் நியாயத்தைப் புறக்கணிக்கச் செய்கிறது. இந்த உண்மைகளைச் சொல்பவர்களுக்கு இன்றும் துரோகிகள் பட்டம் தரப்படுகிறது.

அப்துல்காதருக்கு அந்த ஆயுதம் பொது எதிரியோடு சேர்ந்து, சகோதர இனத்திடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தூக்கப்பட்ட ஆயுதமென நியாயம் கூறப்பட்டது. ஐம்பது ரூபாய் அனுபவத்தின் பின்பு, அப்துல்காதருக்கும் அதில் அசைக்க முடியாத நியாயம் இருப்பதாய்த் தென்பட்டது.

அப்துல்காதருக்குச் சிறுகச் சிறுக மனம் மரத்துக்கொண்டு வரும்போதுதான் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மேலான தாக்குதல் பதினொராந்திகதி ஐப்பசிமாதம் இரண்டாயிரத்து ஓராம் ஆண்டு நடந்தது. அதை அவன் சரியென்று முதலில் ஏற்றுக்கொண்டவன் அல்லன். அதற்கான தண்டனையாக முஸ்லீம் மக்கள் எங்கும் ஒடுக்கப்படுவதையும், அவமானப்படுத்தப்படுவதையும் அவனாற் தாங்க முடியவில்லை. அது அவனுக்குக் கொதி உலையில் இருக்கும் ஈயத்தைக் கொண்டுவந்து இதயத்திற்குள் வார்ப்பதான வேதனை தந்தது. அதுவே இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டும் என்கின்ற வெறியை உண்டுபண்ணியது. அவனால் இயன்ற உதவியாக ஒரு துரும்பாவது எடுத்துக் கொடுக்கவேண்டும் என்கின்ற பரபரப்பு அவன் மனதில் தொற்றியது. அதன் பயனாகப் பாவம் புண்ணியம் என்கின்ற அலசல் தனக்கு இங்கு வேலை இல்லையென்று அவனைவிட்டுப் போயிற்று. பேரினவாதச் சிங்களவரும், பேரினவாதத் தமிழர்களும் அழிந்து போவது அவன் மனதில் இனிச் சஞ்சலத்தை உற்பத்தி செய்யாது. அந்த நிலைக்கு அவன் தன்னைத் திடமாக மாற்றிக்கொண்டான். காலம் மென்மையான உணர்வுகளை அறுத்து அவன்மீது வன்மத்தைச் சவாரி செய்யவிட்டது.

கணணியுகம் தகவல் தொடர்பிற்கான தூரத்தைத் தொலைத்து, தூரதேசம் இருப்பவனையும் சடுதியாக அருகிற் கொண்டுவந்து நிறுத்துகிறது. காத்தான் குடிக்கும் கராச்சிக்குமான தகவற் பரிமாற்றத்திற்கான நேரம் மில்லிசெக்கனாய்ச் சுருங்கிப் போயிற்று. ஒருகரையில் உட்புகுத்தப்படும் செய்தி அடுத்தகணமே மறுகரையில் வெளியே துள்ளி வருகிறது.

தொடர்ந்தும் விமானநிலையத்திற்கு வெளியேநின்று சிந்தனையில் அல்லாட அவனுக்குப் பிடிக்கவில்லை. அனுமதிச்சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டால் என்னவென அவன் ஒருகணம் எண்ணினான். உள்ளே சென்றால் அந்திச்சூரியன் சாய்ந்தபின்பும் அனல் தடவிவரும் காற்றின் வேண்டா உரசலில் இருந்தும், வாகனங்களின் கதறலிடம் இருந்தும், மனிதர்களின் அவசரத்தில் விழும் இடியில் இருந்தும் விடுதலை பெறலாம் என்பதாக அவனுக்குத் தோன்றியது. அதைத் தடுப்பதாக விமான நிலையத்தின் ஒவ்வொரு மூலையிலும் தொங்கும் இயந்திரக் கண்கள் தன்னைக் கோணம் கோணமாகப் படம்பிடிப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் தனது அந்த எண்ணத்திற்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தான்.

விமான நிலையத்திற்கு முன்பு நின்று அதிகமாக மினக்கெடுவது தன்னைத்தானே காட்டிக்கொடுப்பது போன்றதான காரியம் என்பதை அப்துல்காதர் மிகவும் திண்ணமாக நம்பினான். அதற்காகவே, அவன் நேர அட்டவணை பார்த்து உறுதிப் படுத்தியபின்புதான்; விமான நிலையத்திற்குப் புறப்பட்டு வந்தான். என்றாலும் ஏதோ பிரச்சனையாக இருக்க வேண்டும். நேரஅட்டவணைப்படி எதுவும் நடக்கவில்லை. திரும்பிச்சென்று ஹனிபாவோடு வானில் இருந்து கதைக்கலாமென எண்ணினான். பின்பு சிலவேளைகளில் அதுவும் யாராவது உளவுப்பொலீஸாரின் கண்ணில் பட்டுவிடுமோ என்கின்ற எண்ணத்தில் அதைத் தற்காலிகமாகத் தவிர்த்தான்.

காதர் அவர்களது படத்தை ஒருமுறை எடுத்துப் பார்த்தான். இலங்கை விமான நிலையத்தில் இறங்கியதும் அவன் காதரின் தற்காலிகக் கைத்தொலைபேசிக்கு போன் செய்வதாக ‘கிறிப்ரிங்’ செய்யப்பட்ட மின்னஞ்சலில் எழுதியிருந்தான். சாஹில் காதரோடு மட்டும்தான் தொடர்பு வைத்திருந்தான். அவன்தான் இதற்குத் தலைமை தாங்கும் விமானியாகச் செயற்படுவான் என்பது காதரின் ஊகம். காதர் முஸ்லீம் என்கின்ற வகையில் ஒரு சிறு உதவியே செய்ய முன்வந்திருந்தான். மிகுதியை அவர்களது அரச உளவு நிறுவனமோ, அல்லது வேறு ஏதாவது பலம்வாய்ந்த அமைப்போ செய்ய வேண்டுமென எண்ணிக்கொண்டான். அவ்வளவு அதிசத்திவாய்ந்த தொழில் நுட்பம் தனிமனிதரிடம் இருக்கமுடியாது என்பது அவன் எண்ணமாகியது. இந்த நிகழ்வின் பின்பு, உலக அரசியலிலே தலைகீழாக மாறுமெனக் காதர் எண்ணிக்கொண்டான். ‘கராச்சியில் இருந்து வரும் அவன் இன்னும் போன் பண்ணவில்லை. போன்பண்ணிக் காரணத்தைக் கூறினாலாவது அமைதியாக இருக்கலாம்’ எனக் காதர் எண்ணினான். அவன் அதைச் செய்யாது விட்டது, தீமிதிக்கும்போது கால் தடக்கியதான அந்தரத்தை அப்துல்காதருக்குக் கொடுத்தது.

கராச்சியில் இருந்து அந்தக் குறிப்பிட்ட விமானம் வருகிறது என்பதும், அது குறித்த நேரத்தில் பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கும் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். அப்படி அந்த விமானம் குறித்த நேரத்தில் வந்திருப்பதை அப்துல் காதர் அறிந்து கொண்டான். அப்படியென்றால் அட்டவணை பிழைக்கவில்லை என்பது இப்போது புரிந்தது. விமானம் வந்துவிட்டாலும் ஏன் சாஹிலும் அவனது கூட்டாளியும் இன்னும் வெளியே வரவில்லை என்பது மட்டும் அவனுக்குப் புரியவில்லை. போனமுறை நால்வரைக் கூட்டவந்தபோது இவ்வளவு நேரம் தாமதமாகவில்லை. அவர்கள் சிறிது நேரத்தில் வெளியே வந்துவிட்டார்கள். ஆசைகள் அறுத்து அர்ப்பணிப்போடு செய்யப்படும் புனிதப்பணி இது. அல்லா விரும்பினால் மட்டும் அவனுக்காகச் செய்யும் பணி. அவன் பணியில் மனிதனின் முழுக்கவனமும் கடமையில் மட்டுமே குவிந்திருக்க வேண்டும். அப்படியான மனிதர்களுக்கு விமான நிலையத்தில் காலத்தை வீண்விரயம் செய்ய அலுவல் ஏதும் இருக்கின்றதா என்பதாகக் காதர் எண்ணினான்.

முதல் முறை வந்து இறங்கியவர்களை அவதானமாய்க் கொண்டுபோய்ச் சேர்த்த பெருமை அப்துல்காதரைச் சாரும். புத்தளத்திற்கு அனுப்பப் பட்டவர்களும் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்வதாக வரும்போது ஹனிபா சொல்லி அறிந்துகொண்டான். அது முதற்கட்டம். இது இரண்டாவதும் கடைசியுமான கட்டம். இதுவும் அல்லாவின் புண்ணியத்தால் நல்லபடியாக நடக்கவேண்டுமென காதர் அல்லாவிடம் இறைஞ்சினான்.

நடுக்கடலில் இருந்து விமான உதிரிப் பாகங்களைக் கடத்திவந்து, ஒரு பகுதியைப் புத்தளம் அனுப்பி வைத்திருந்தார்கள். அதற்கான ஏற்பாட்டைக் காதர் செய்ய வேண்டியிருந்தது. காத்தான்குடியில் நின்றவர்கள் அந்தச் சிறிய விமானத்தைச் சிலநாட்களில் உருவாக்கி விட்டார்கள். அது இரவிரவாய் நடைபெற்ற திகிலூட்டும் சம்பவங்களாய்த் தொடர்ந்தது. யாருக்கும் இம்மியளவு தகவலும் கசிந்து விடக்கூடாது என்பது பெரும் சோதனையாகிற்று. ஆறிப்போன யுத்தத்தால் பாதுகாப்புப் படையின் அவதானம் குறைந்து போனது. என்றாலும், சிங்கள இராணுவத்தின் பிரசன்னம் முற்றாக ஒழிந்து போகாது பயமுறுத்துகிறது. அதற்குள் வெட்டியோடுவது திகிலைத் தருகிறது.

காதருக்கு அவர்களின் கடத்தல் வேலை புரிந்தது. இந்த முறைகளை இவர்கள் ஒன்றும் முதன்முறையாகவோ அல்லது புதிதாகவோ இங்கு செய்யவில்லை. இலங்கை வரலாற்றில் ஏற்கெனவே பாரிய அளவில் ஒருகாலத்தில் இது நடைபெற்றது. அது ஒரு நாட்டிற்குச் சமனாக ஆயுதபலம் கொடுக்கும் அளவிற்கு விஸ்தீரணமாயிருந்தது. அதைப் பிரதியெடுத்தே இவர்கள் இப்போது இதைச் செய்கிறார்கள். இவர்கள் புலிகள் மனதில்கூடச் செய்ய நினைக்காத ஒரு காரியத்தைச் செய்யப்போகிறார்கள். உலகவரலாற்றில் நிரந்தரமாகப் பதியப்படப் போகின்ற ஒரு நிகழ்வாய் இது இருக்கப்போகின்றது. அந்த நினைவு அப்துல்காதருக்குப் போதையான ஒருவித நடுக்கத்தைத் தந்தது. அவர்கள் முழுமையாகத் தாங்கள் என்ன செய்யப்போகிறார்கள் எனக் கூறாவிட்டாலும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைக் காதரால் ஊகிக்க முடிந்தது. அவர்களிடம் அதற்கான தொழில்நுட்பவசதி இருந்தது.

மனிதனுக்குக் கிடைக்கும் மகத்துவமான அமைதி எதுவென்றால் உரிய நேரத்தில் கிடைக்கும் தகவல். காதர் இதை எங்கும் அடித்துக் கூறுவான். அது எதிர்வினையாகும் போது அவனைப் பைத்தியம் பிடித்துக்கொள்ளும். அது நிம்மதியைப் பிடுங்கிவிட்டு குழப்பத்திற்குள் ஓடென விரட்டிக் கலைக்கும். காதர் அந்தக் கொடுமையை இப்போது அனுபவித்தான். அவன் பைத்தியமாகும் நிலையில் இருக்கும்போதுதான் கைத்தொலைபேசி சிணுங்கியது.

சாஹில் புகைப்பிடிப்பான் என்பது தெரியும். அதற்காக ஆபத்தான இடத்தில் நின்று அதை வாங்க எண்ணியதைக் காதராற் புரிந்துகொள்ள முடியவில்லை. காதருக்கு அது அவன்மேல் சற்றுக் கடுப்பைச் தந்தது. சிறிய தவறுகள்கூடப் பெரிய வரலாறுகளை மாற்றி எழுதிவிடும் என்பதைப் புரியாத மடையனாக இருக்கிறானே என்பதாக மனதிற் சினம் கொண்டான்.

சாஹிலும், சலீமும் வருவது உறுதியாகியவுடன் காதர் ஹனிபாவைக் கைத்தொலைபேசியில் அழைத்தான். சாஹிலும், சலீமும் விமான நிலையத்தை விட்டு வெளியே வரவும்; அந்த இரண்டு வாகனங்களும் விமானநிலையத்தின் வாசலில் வந்து நிற்கவும் சரியாகிற்று.

‘அஸ்ஸலாமு அழைக்கும்’ என்றான் காதர். பின்பு சாஹில் பதில் கூறுவதற்குக் காத்திராது வாகனத்தின் பின்கதவைத் திறந்து அவனைத் தள்ளாக்குறையாக ஆசனத்தில் இருத்தினான். விரைவாகச் சென்று அவன் சாரதியின் பக்கத்தில் இருந்த ஆசனத்திலேறி அமர்ந்தான். வாகனம் புறப்பட்டது. அது விமானநிலையத்தைத் பின்தள்ளித் தனது இலக்கை நோக்கி அர்ச்சுனன் விட்ட அம்பாகப் பாய்ந்தது.

ஹனிபாவும் தாமதியாது சலீமைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். இதன்பின்பு இனி மீண்டும் விமான நிலையத்திற்கு வரும்போதுதான் காதருடன் கதைக்க முடியும் என்பது ஹனிபாவுக்குப் புரிந்தது. மீண்டும் சந்திப்பதற்கான கால இடைவெளியில் என்னவெல்லாம் நடக்கும் என்கின்ற கவலை அவனை அரிக்கத் தொடங்கியது.

சாஹில் நல்ல நிறமாகவும் உயரமாகவும் தோன்றினான். அவன் வட இந்தியர்களின் தோற்றத்தில் அலட்சியம் காட்டினான். அவனில் எந்தவிதப் பயமோ, கவலையோ, நடுக்கமோ இருக்கவில்லை. பதிலாக மென்முறுவல் ஒன்று எப்போதும் அவன் இதழ்களில் இடைவிடாது தவழ்ந்தது. பெண்கள் இவன் கண்களைக் கண்டாலே போதுமெனக் காதர் எண்ணிக்கொண்டான். அல்லாவுக்காக அவன் செய்யப்போகும் அர்ப்பணிப்பை எண்ணிக் காதர் அவனது அசண்டையீனத்தைப் புறக்கணித்தான்.

சாஹில் வெளியே சிரித்தாலும் உள்ளே புழுங்கினான். அதைக் காதராற் புரிந்துகொள்ள முடியவில்லை. சாஹில் தன்னிடமுள்ள ஒரு கவலையை யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது தவித்தான். அந்தத் தகவல் பாகிஸ்தானிய உளவுப்படை அதிகாரி ஒருவரால் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அந்த அதிகாரி ஒரு கடும் முஸ்லீம் தீவிரவாதியாக இருந்தார். அந்தத் தகவல் மாத்திரம் பிழையாக இருந்தால் இந்தத் திட்டத்தாற் பலர் சிறைவாசம் மட்டுமே அனுபவிக்க வேண்டி வரும் என்பதும் அவனுக்குத் தெரியும். அந்த தகவலின்படி அணுமின்நிலையங்களில் இருந்த விமானஎதிர்ப்பு ஆயுதங்கள் கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகவும், புதிய ஆயுதங்கள் வருவதில் சில எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வந்திருந்தது. இப்போது அந்த அணுமின்நிலையங்கள் வெறுங்கையோடு, வில்லை இழந்த இராவணனாய், பாதுகாப்பற்று நிற்பதாய்த் தகவல் கிடைத்தது. அத்தோடு தாக்குதல் நடத்துவது என்றால் இதுவே ஒரு சந்தர்ப்பம் என்பதும் அவனுக்குப் புரிந்தது. அவன் அதை யாரிடமும் கூறவில்லை. விமான எதிர்ப்புப் பற்றிக் கேள்வியெழுந்த போது அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதாக அந்த அதிகாரியை நம்பிப் பதிலளித்துவந்தான். அவன் உதடுகள் சிரித்தாலும் மனதிற்குள் அந்தக் கவலையின் பளுவில் அவன் புழுங்கினான். விமான எதிர்ப்பு அயுதங்கள் பழுதாவது சிறிய விடயம். அதை உடனடியாக மாற்றி இருக்கலாம். இந்திய அதிகாரிகளின் அசண்டையீனம் அதைத் தள்ளிப்போட்டது. அது சாஹிலுக்கு இனித்தது. ‘இன்ஷா அல்லா’ என அவன் எண்ணிக்கொண்டான்.

1.3 காத்தான்குடி

மீன்பாடும் நகரையும் ஆரையம்பதியையும் இடையறுத்துத் தனித்துவமாக நின்றது காத்தான்குடி. அங்கே தென்னஞ்சோலைக்குள் ஓளிந்து கிடக்கும் வீடொன்றில் சாஹில் பாதி இரவும் பாதி நாளுமான நேரத்தை நிம்மதியாகத் தூங்கிக் கழித்தான். மதியம் பதினொரு மணி அளவில் சாஹிலைக் கடற்கரை ஓரத்தில் இருந்த வாடி விட்டிற்குக் காதர் அழைத்துச் சென்றான். அங்கே அவனுக்காக றாகீன், றாமீஸ் ஆகிய இருவரும் காத்திருந்தனர். அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த விமானத்தைச் சரிபார்த்துச் செப்பனிட்டார்கள். அவர்கள் உருது மொழியில் நிறைய வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டதில் காதருக்கு அரை குறையாகவே சிலது விளங்கியது.

இது ஒரே ஒரு முறை மட்டும் பரீட்சித்துப் பார்க்கக்கூடிய காரியம். அந்த ஒரு முறையோடு வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுவிடும். வரலாறு எழுதப்படுமா இல்லையா என்பது ஒருசில மணித்தியாலங்களில் பகிரங்கமாகிவிடும். இந்த விமானத்தை ஏற்றிச் செல்வதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட படகு தயாராக நிற்கிறது. இரவோடு இரவாக விமானத்தை அந்தப் படகிலேற்றிக் கடல்மார்க்கமாகப் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படியான ஏற்பாடு புத்தளத்திற்குக் கொண்டு சென்ற விமானத்திற்கும் நடைபெறும் என்பதைக் காதர் அறிந்துகொண்டான். தாக்குதல் சொல்லி வைத்தது போன்று ஓரேநேரத்திற்கு நடக்க வேண்டும். சிலகணங்கள் பிந்தினாற்கூட மெத்தமும் பாழாகிப்போய்விடும். அப்படித் தவறு நேராது தடுப்பதற்கான தொழில்நுட்பம், நவீன கருவிகள், திட்டங்கள் போன்றவை பல இடங்களில் இருந்தும் சேகரிக்கப்பட்டுத் தற்போது தயார் நிலையில் இருக்கின்றன. இந்திய விமானப்படை பற்றிய நடுக்கம் மாத்திரம் உள்ளுர அவர்களைக் குதறி எடுத்தது. அதற்குத் தன்னிடமிருக்கும் விடைபற்றி, சாஹில் அதிகமாக விபரிக்கவில்லை.

றாடாரில் விமானத்தைக் காட்டாது பறப்பதற்குப் பல யுத்திகளைக் கையாண்டாலும்; அது நூறுவீதம் பாதுகாப்பு அளிக்காது என்பது அவர்களுக்குப் புரிந்தது. அதனால் காத்தான்குடியில் அல்லது புத்தளத்தில் இருந்து இலக்கை நோக்கிப் பறப்பது என்கின்ற திட்டத்தை அவர்கள் கைவிட்டனர். அப்படிப் பறந்திருந்தாற் பல விடயங்கள் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல இலகுவாக இருந்திருக்கும். அந்த உத்தியில் தாராளமாக ஆபத்து இருப்பதைப் புரிந்து கொண்டனர். அதற்குப் பதிலாக விமானத்தை இலக்கிற்கு அருகே கடல் மூலம் எடுத்துச்சென்று, அங்கிருந்து பறந்து செல்வதாகத் திட்டமிடப்பட்டது. இந்த முறையிலும் போக்குவரத்தின்போது நிறைய ஆபத்துக்கள் வரும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனினும் அதைவிட வேறுதேர்வு அவர்களிடம் கைவசம் இருக்கவில்லை. இந்திய விமானப்படை தயாராகுவதற்கு முதலே தாக்குதலை நடத்திவிடும் அவகாசம் இதில் கிடைக்கும்.

இவை எல்லாமே கணிப்பீட்டின் அடிப்படையிலான திட்டங்களே. நடைமுறை ஒருபோதும் கணிப்பீட்டின்படி இருப்பதில்லை. அது எதிர்பாராத சிக்கல்களை எதிர்பாராத நேரத்திற் கொண்டுவரும். அப்படியான சந்தர்ப்பங்களில் என்ன செய்யவேண்டும் என்பதையும் திட்டமிட்டார்கள்.

அநீதிக்குமேல் அநீதி இழைக்கப்படும்போது அழிவுகள், கொலைகள் நியாயமாக்கப்படுகின்றன. மனச்சாட்சி மரத்துப்போகின்றது. மரத்த மனச்சாட்சியை மிதித்தவண்ணம்; பழிக்குப்பழி என்கின்ற கோரப்பாய்ச்சல் முன்னுக்குவருகிறது.
மரத்த மனச்சாட்சி அவன் செய்யப்போகும் காரியத்தில் இருக்கும் அநீதிபற்றிய கவலைகளைத் துடைத்தது. அழிவுகளும், அநீதிகளும் மட்டும்தான் நியாயத்தைக் கேட்பதற்கான செவிகளைத் திறக்கும் என்றால்; அதைப் பாவிப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. இந்த நியாயங்கள் அநியாயங்களாக வருங்காலச் சந்ததியாற் சபிக்கப்படுமா அல்லது புகழப்படுமா என்பது பற்றித் தர்க்கிக்க அவன் இப்போது விரும்பவில்லை. அது பாத்திரத்தில் விடப்படும் நீரைப்போன்றது. இந்திய உபகண்டத்தில் இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரிநாடு அழிவதுபற்றி அவன் கவலைகொள்ளவில்லை. முகலாயர்கள் முழுமையாகத் தங்கள் வேலையை முடித்திருந்தால், இன்று இந்தியா முஸ்லீம்நாடாகத் திகழ்ந்திருக்கும். தங்களைப் போன்றவர்களுக்கு இந்த நிலை வந்திருக்காது என்று அவனுக்குத் தோன்றியது.

வங்காளவிரிகுடா அலைகளை இழந்து அமைதியில் மூழ்கும்போது அவளின் தயவில் பயணம் தொடங்கவேண்டிய நிர்ப்பந்தம். பாக்குநீரிணை பொதுவாக அமைதி காப்பதுண்டு. பெரும் அலைகளை அது பிரசவித்துக் கொந்தளிப்பது குறைவு.

வங்காளவிரிகுடா கடக்கும் பயணம் பலநாட்களைத் தின்னும் பயணம். அது நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டது. அதற்கேற்ப உபகரணம், உணவு போன்றவை முறைப்படி பொதிசெய்யப்பட்டு;ப் படகில் எற்றப்பட்டது. விமானத்தை ஏற்றியபின்பு அது வெளியே தெரியாதவண்ணம் மறைத்துக் கட்டப்பட்டது. காற்று எந்தச் சந்தர்ப்பத்திலும் அதை நிர்வாணம் ஆக்கிவிடாது மீண்டும் மீண்டும் கவனமாகப் பரிசோதிக்கபட்டது. இளகிய கட்டுகள் மீண்டும் இறுக்கப்பட்டன.

இரண்டு நாட்கள் கழித்து வங்கம் அமைதியாகத் தூங்கியபோது அவர்கள் பயணம் தொடங்கியது. காதரும் ஹனிபாவும் தமது புதிய வேலையைத் தொடங்குவதற்காக மத்தியகிழக்கு நாடு ஒன்றிற்குச் செல்லக் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கி இருபதாந் திகதி புறப்பட்டார்கள். மத்திய கிழக்கில் சிறிது காலம் வேலை செய்துவிட்டு எப்படி என்றாலும் ஒரு ஐரோப்பிய நாட்டிற்குச் சென்றுவிடுவது அவர்கள் திட்டமாகியது.

1.4 தாக்குதல்

மூன்று நாட்கள் திகிலோடு இடைவிடாது உறவாடும் பயணம். நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடக்கும் எலியும் பூனையும் விளையாட்டில் திகிலிற்குக் கொண்டாட்டம். அதுவே சாஹிலுக்குப் பெரும் திண்டாட்டம். யாரிடமும் சந்தேகம் என்னும் பேயை எழுப்பாது இருபத்திமூன்றாம் திகதி அதிகாலை ஒரு மணிக்கு, இலக்கிற்கு அருகே உள்ள மசூதியை அண்டிய கடற்கரைக்குப் படகு வந்திற்று. ‘இன்ஷா அல்லா’ அந்த நிகழ்வு எல்லோரையும் ஆனந்தக்கூத்தாட வைத்தது. ஆண்டவனுக்கு நன்றி கூறிக்கொண்டவர்கள் மேற்கொண்டு தமது அலுவலைப் பார்க்கத் தொடங்கினார்கள். ஒரு நாள் தாமதித்துப் புத்தளத்தில் இருந்து புறப்பட்டவர்களும், தமது இலக்கைத் தடையின்றி அடைந்தார்கள்.

ஏற்கெனவே தொடர்பு கொண்டதற்கு அமைய இன்னும் இருவர் விமானத்தைப் படகிலிருந்து இறக்கிக் கடலில் மிதக்கவிட, அண்டிய கரையில் இருந்து படகை நோக்கி வந்தார்கள். விமானத்தை இறக்கிய பின்பு சாஹிலைத் தவிர மற்றவர்கள் அவசர அவசரமாய்ச் சென்று விடுவார்கள் என்பதே அவர்கள் திட்டமாகும். அவர்கள் சென்னை விமான நிலையத்தின் ஊடாக மத்தியகிழக்கு நாடு ஒன்றிற்குப் பயணமாகும் ஏற்பாடுகள் மிகவும் அவதானமாகச் செய்யப்பட்டிருந்தன. அதேபோலத் திருவனந்தபுரத்தால் மற்றவர்கள் செல்வதற்கும் ஒழுங்காகிற்று. திட்டமிட்டபடி இந்தக் கடல்விமானம் காலை ஐந்தரைக்குத் தாக்குலை நடத்தும். அதில் எந்தத்தவறும் ஏற்படக்கூடாது என்பதும், இரண்டும் விமானங்களும் ஓரேநேரத்தில் தாக்குதல் நடத்தவேண்டும் என்பதும் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டிருந்தன.

படகில் இருந்த விமானம் வந்தவர்கள் துணையோடு அதிக சிரமம் இன்றிக் கடலில் இறக்கிவிடப்பட்டது. அதற்கான வசதிகளும், கருவிகளும் அவர்களிடம் இருந்தன. பின்பு இயந்திரங்கள் வேலைசெய்கிறதாவென ஒருமுறை பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. அதன்பின் சாஹிலிற்கு விமானம் பறப்பதற்கு முதல் செய்ய வேண்டியவை பற்றி மிகவும் ஆறுதலாக றாகீனும், றாமீசும் விளங்கப் படுத்தினார்கள். இறுதியில் சாஹிலிடம் விடைபெற்றுக்கொண்டு; அவர்கள் வந்தவர்களோடு புறப்பட்டு மசூதியை நோக்கிச் சென்றார்கள். ஒளிகள் இன்றிய அந்தக் கடல்விமானத்தில் நேரம் வரும்வரையும் சாஹில் காத்திருந்தான். சிறுவயதில் படித்த அவனது மதப்பள்ளி ஞாபகம்;;; வந்தது. சுவர்க்கத்தில் இடம்கொடுக்க அல்லா காத்திருப்பான் என்று அவன் நம்பினான். சுவாத் பள்ளத்தாக்கும் அதன் நினைவுகளும் அவனை வருடிச்சென்றன. அதைவிட அழகான சொர்க்கத்தின் கதவுகளை அல்லா திறந்துவைத்திருப்பதாக அவன் எண்ணிக்கொண்டான். ‘இன்ஷா அல்லா’ என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டான்.

கணங்கள் யுகங்களாகக் காலங்கள் நகரமறுப்பதான பிரமையில் சாஹில் அவஸ்தைப்பட்டான். எல்லாம் குறித்த நேரத்தில் நடைபெறவேண்டுமென அவன் கடவுளைப் பிரார்த்தித்தான். இருவர் மாத்திரமே இந்தப் புனிதப் போரில் உயிரிழக்கவேண்டி வரும் என்பதை அவன் வலுவாக நம்பினான். மற்றையவர்கள் விமானத்திலேறி இந்த நாட்டை விட்டுப் புறப்பட்டு விடுவார்கள். பின்பு இந்திய அரசால் அவர்களை இலகுவில் தண்டித்துவிட முடியாதென அவன் எண்ணினான். பின்பு அப்படித் தப்பித்தவர்கள் சிலகாலத்தில் எப்படியோ தமது தாய்நாட்டைச் சென்றடைந்து விடுவார்கள். புனிதப் போரின் வெற்றியை அப்போது அங்கே அவர்கள் கொண்டாடுவார்களென அவன் புளகாங்கிதம் அடைந்தான். அவன் உதடுகள் ஒரு ஹிந்திப்பாட்டை மெல்ல முணுமுணுத்தது. புனிதப்போரும் ஆண்டவனின் சுவர்க்கமும் அவனது மூளையை நிறைத்தன. அவன் அல்லாவின் அழைப்பிற்காய்க் காத்திருந்தான்.

அழைப்பு நேரம் வந்தது. சரியாக ஐந்து முப்பதுக்குச் சாஹில் விமானத்தை இயக்கினான். சென்னை விமானநிலையக் கண்காணிப்புக்கோபுரத்தில் இருந்து அந்தக் ‘கொல்வ்எயார்’ விமானத்திற்குப் பறக்கும் அனுமதி கிடைத்தது. அது ஓடுதளத்தைப் பின்தள்ளி ஆகாயத்தை நோக்கி உந்திப் பாய்ந்தது ‘நான் தப்பினேன்’ என்ற வண்ணம் இராட்சதப் பறவையாக வானில் பேரிரைச்சலோடு பாலைவனத்தை நோக்கிப் பறந்து சென்றது.

சாஹிலின் விமானம் மசூதிக்குச் சமாந்தரமாகக் கடலிலோடி வேகமெடுத்தது. அது மொஸ்க் வீதியைத் தாண்ட வானில் தாவிப் பறக்கத் தொடங்கியது. சாஹில் அவதானமாக அதைக் கடல் நீரோடு தொட்டும் தொடாமலும் பறக்குமளவு உயரத்தில் வைத்துக்கொண்டான். சாஹில் விமானத்தை தொடர்ந்தும் கருமாரி அம்மன் கோவில், கால்பாக்கம் டீஏஈ ‘னுயுநு’ மருத்துவமனை என்பவற்றிற்குச் சமாந்தரமாகப் பறப்பில் ஈடுபடுத்தினான். சாஹிலுக்கு வாழ்வின் இறுதி முடிவைத் தான் வலுக்கட்டாயமாக வரவழைத்திருப்பது தெரியும். அவன் அதைப் பெரும்புனிதமாக எண்ணிக் கவலைகளைப் புறம்தள்ளினான். தொடர்ந்தும் அமைதியாக இலக்கை நோக்கி விமானத்தைச் செலுத்தினான். இந்த வாழ்வின் முடிவில் சுவர்க்க வாழ்வின் கதவு திறந்து இருக்கிறது என்பதில் அவனுக்கு இமாலய நம்பிக்கை. சாஹிலின் விமானம் காமாட்சி அம்மன் கோவிலைத் தாண்டிப் பறந்தது. சாஹில் விமானம் எங்கு இருக்கிறது என்பதை விமானத்தில் பொருத்தப்பட்டு இருந்த நவீனமுறையில் கடைசியாகத் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் ‘புPளு’
இன் துணையுடன் கணித்தான். யாராவது அவதானித்து சந்தேகக்கண்ணோடு நோக்க முதல், விமானம் உரிய இடத்தை அடைந்துவிடவேண்டும் என்பது சாஹிலின் ஒரே குறிக்கோளாகியது.

சென்னை விமானக்கண்காணிப்புக் கோபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு சந்தேகப் புள்ளிகளால் அங்கே ஒரே அமளி உண்டாகியது. திருவனந்த புரத்திலும் சிறு குழப்பம் உண்டாகியது. அது என்ன என்பதை உறுதிப்படுத்த முடியாத அல்லாட்டத்தில் அவர்கள் தொலைபேசியில் பொன்னான நேரத்துளிகளை மண்ணாக்கினார்கள். அந்த மர்மப்புள்ளிகள் பற்றி இந்திய விமானப்படையும் ஆராய்ந்தது. அதேவேளை யுத்தவிமானங்கள் இலக்கை நோக்கிப் புறப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டன.

நாராயணன் ஆலயத்தை அண்டியதும் சாஹில் விமானத்தை ஆலயத்திற்கு எதிராகக் கடலை நோக்கிச் செலுத்தினான். பின்பு அதைத் திருப்பி நேராக அணுமின் நிலையத்தை நோக்கி அதிவேகத்தோடு செலுத்தத் தொடங்கினான்.

சாஹிலுக்கு அவனது நண்பர்கள் இந்தத் திட்டத்தை முதன்முதற் கூறியபோது அவனாற் சற்றும் அதை நம்பமுடியவில்லை. அணுவுலையின் மொத்தச் சுவர் பற்றிய அறிவு அவனுக்குத் ஓரளவிற்கு இருந்தது. விஎன்எஸ் 41 ‘ஏNளு-41 யுசைஉசயகவ’ விமானத்தையும் அந்தப் புதியரகக்குண்டையும் வைத்து ஒரு பிரளயமே நடத்தலாம் என்பதை அவர்கள் பரிசோதித்துக் காட்டியபோது அவன் வாயடைத்துப் போய்விட்டான். சில வல்லரசுகளின் உளவுஸ்தாபனங்களிடமே இல்லாத அறிவு தனிமனிதர்கள் கைக்கு எப்படி வந்தது என்பது அவனுக்கு முதலில் வியப்பைத் தந்தது. பின்பு அது தமது நாட்டின் உளவுஸ்தாபனத்தில் இருப்பவர்களின் இரகசிய ஆசீர்வாதத்தோடுதான் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்துகொண்டான்.

இப்படியான வெடிதிறன் கொண்ட வெடிபொருட்கள் தனிமனிதர் கைக்கும் கிட்டும் என்கின்ற உண்மை அன்று அவனைப் பெருவியப்பில் ஆழ்த்தியது. உளவுஸ்தாபனங்களில் இருக்கும் எல்லோரையும் நம்பமுடியாது என்பது அவனுக்கு அதிர்ச்சியான உண்மையாகிற்று. இன்று இந்தியாவுக்கு எதிராக நாங்கள் செய்வதை நாளை பாகிஸ்தானுக்கு எதிராகவும் யாராவது செய்யலாம் என்பதும் அவனுக்குப் புரிந்தது. தான் செய்யப்போகும் காரியத்தின் பரபரப்பில் அந்தத் தொழில்நுட்பத்தின் பிறப்பிடம்பற்றி அவன் மேற்கொண்டு அதிகம் கவலைப்படவில்லை. இந்த தொழில்நுட்பத்தைப் புனிதப் போருக்காய்ப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்ததுபற்றி அவன் அளவற்ற புளகாங்கிதம் அடைந்தான். சில அழிவுகளால் மட்டும்தான் சிலர் கண்களைத் திறக்க முடியும் என்றால் அவை தவிர்க்கமுடியாதவையென அவன் முடிவு செய்துகொண்டான். அல்லா உலக முஸ்லீம்களை இப்படியான அழிவில் இருந்து காக்க வேண்டுமென இறைஞ்சினான்.

சாஹில் விமானத்தின் வேகத்தை உச்சத்திற்குக் கொண்டுசென்றான். அவனது இலக்கு அணுவுலையின் கருவறையை நோக்கியபடி நிலைகுத்திற்று. அவன் அல்லாவை மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டான். அவன் வாய் ‘அல்லாஹீ அக்பர்’ரென இடைவிடாது மனனம் செய்தது.

சென்னை விமான நிலையமும், வேறு ஒரு இராணுவ விமானக் கண்காணிப்புநிலையமும், பறக்கும் மர்மப்புள்ளி ஒரு விமானம் என்கின்ற முடிவுக்கு வந்திருந்தன. அதையடுத்து உடனடியாக இந்திய விமானப்படைக்கு அவை தகவல் அனுப்பின. இந்தியாவின் நவீன யுத்த விமானங்கள் அடுத்த கணமே இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்தன. அவை ஒளியின் வேகத்தில் செல்லும் தொழில் நுட்பத்தை கொண்டிராமை விமானக் கண்காணிப்பறையில் இருப்பவர்களுக்குக் கணங்களை யுகங்களாக்கின.

சாஹிலும் சலீமும் ‘அல்லாஹீ அக்பர்’ எனக் கத்தியவண்ணம் தங்கள் விமானங்களைக் குறித்த இலக்குகள் மேல் மோதினர். அவர்களின் சுவர்க்கம் சில வினாடிகளில் இருண்டு போயிற்று. கட்டுப்பாட்டு அறையின் திரைகளில் இருந்த மர்மப்புள்ளிகள் நிரந்தரமாக மறைந்து போயின. அதைப் பார்த்தவர்கள் திகைத்தனர்.

சில கணங்களின் பின்பு தாக்குதலுக்குச் சென்ற விமானங்கள் மனித குலத்திற்குச் சொல்லக்கூடாத செய்தி ஒன்றைத் தமது வானொலி மூலம் சொல்லின.

1.5 அணுவாயுத யுத்தம்

அணுவுலைகள் மேலான தாக்குதலை அடுத்து இந்திய மத்திய அரசு மின்னல் வேகத்திற் கூடியது. உணர்ச்சி அரசியல் நடத்தும் அந்த இந்து அதிதீவிரவாதத் தேசியக்கட்சியால் தொலைநோக்குச் சிந்தனைகள் புறக்கணிக்கப்பட்டன. கண்ணிற்குக் கண், பல்லுக்குப் பல் என்பதான கொள்கையை நடைமுறைப் படுத்தவேண்டுமென அதன் பல அங்கத்தவர்கள் கொதிநிலை அடைந்த அணுவுலைபோல் கொதித்தனர். அந்தக் கட்சி அப்படித்தான் செய்யும் என்கின்ற பயமே உலகத்தை உயிர்வாயு எடுக்கவிடாது உறைய வைத்தது. எது உலகத்தில் நடக்கக்கூடாதெனப் பயந்து கோர்ப்பசோவும் றேகனும் ஒப்பந்தம் செய்தார்களோ அதுவே நடக்கும் காலம் வந்ததாய் வல்லரசுகள் திகைத்தன.

இந்திய உளவுஸ்தாபனங்களான சீபிஐக்கும் றோவிற்கும் சில தகவல்கள் கிடைத்தன. அதையிட்டு அவர்கள் தங்களது தலைமையலுவலகத்தில் அவசரமாய்க்கூடி வாதித்தனர். அவர்களுக்குக் கிடைத்த தகவலின்படி முதலில் இத்தாக்குதல் இலங்கையில் இருந்து தயாராகிப் புறப்பட்டது என்பது தெளிவாகிற்று. அத்தோடு இத்தாக்குதலைத் தயார் செய்து நடத்தியவர்கள் பாகிஸ்தானியர் என்றும், அதற்கு இலங்கையிலும் இந்தியாவிலும் சில அதிதீவிரவாத முஸ்லீம்கள் உதவி செய்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிற்று. மேலும் எங்கிருந்து எப்படித் தாக்குதல் நடந்தது என்பது பற்றியும் அதில் விளக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டும் தகவல் சேகரிப்பதிலும், விசாரணை செய்வதிலும் அவர்கள் முழுமையாக ஈடுபட்டனர். அவர்கள் இந்தத் தகவல் அடங்கிய தமது முதலாவது கூட்டறிக்கையை மத்திய அரசிற்கு அவசரமாக அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டில் நடந்த அணுவுலைத் தாக்குதலை அடுத்து நாடெங்கும் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே காட்டுத்தீயெனக் கலவரம் மூண்டது. முஸ்லீம்களுக்கான அடையாளத்தை எந்த மனிதனிலோ அல்லது சொத்துக்களிலோ இந்து அதிதீவிரவாதக் கலகக்காரர்கள் கண்டால், அவற்றைத் தாக்கி அழித்தனர். சில இடங்களில் மனிதர்கள் மீது சந்தேகம் வந்தபோது ஆண்களை அரைக்குக்கீழ் நிர்வாணமாக்கி, யாரென அடையாளம் அறிந்தனர். பின்பு அவர்கள் முஸ்லீம்களாக இருந்தால் அவர்களைத் தாக்கினர்ளூ கொன்றனர். எரித்தனர். ஊழித்தாண்டவத்தில் சுடலைப்பொடி பூசுபவனுக்கு சுடலைகளை விஸ்தரித்துக் கொடுத்தனர். அது அவர்களுக்குக் கைலாச விலாசம் தரும் என்று நம்பினர்.

கலவரத்தைத் தடுக்க விரும்பியோ விரும்பாமலோ மத்திய அரசு நாடுதழுவிய ஊரடங்குச் சட்டத்தை அறிவித்தது. அந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போதுகூடப் பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டு, அவர்களது சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எந்தெந்த வீட்டில் முஸ்லீம்கள் குடியிருக்கிறார்கள் என்கின்ற பட்டியல்கள் இந்துக் குண்டர்கள் கையில் இருந்தன. அதற்குக் கணனி போன்ற செல்போன்கள் உதவி செய்தன. சில இந்து அதிகாரிகள் அந்தக் கைங்கரியத்திற்கு உதவினர். பட்டியல்கள் பட்டியல்களாக முஸ்லீம்களின் விபரங்களை அனுப்பி வைத்தனர். அதை வைத்துக்கொண்டு இந்துக் குண்டர்கள் முஸ்லீம்கள்மீது குறிதவறாது ஆக்ரோசமாய்த் தாக்குதல் நடத்தினர். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே சில இடங்களிற் தாக்குதலை நடக்கவிட்டுத் தங்களது இந்துத்துவ வெறியைத் தீர்த்துக் கொண்டனர். அனுமன் வைத்ததீ ஆழியைத்தாண்டி வந்து இந்தியாவில் பற்றியதாக நாடு எரிந்தது.

மத்திய அரசு இரவுபகலாய்த் தொடர்ந்தும் நாட்டின் நிலைமை பற்றி ஆராய்ந்தது. இரசியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் தமது விசேட உதவிப்படையினரைக் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். இரசியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து விசேட அரசியல் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வந்தார்கள். அதேவேளை அந்நாட்டுப் பிரதமர்கள், ஜனாதிபதிகள் இந்தியப் பிரதமரோடு நேரடி வீடியோ தொலை பேசியில் எந்தவித வீபரீதமுடிவுக்கும் வரவேண்டாமென மன்றாடிக் கேட்டுக்கொண்டார்கள். இந்தியா இப்போது யுத்தத்தில் குதித்தால் உலகமே யுத்தத்தில் குதிப்பதாகிவிடும். கதிர்வீச்சு உலகம் எங்கும் காவிச் செல்லப்படுவதற்குக் காற்றிற்கு யாரும் தடைபோட முடியாது. மனிதன் தனக்குத் தானே தடைபோட்டாலும் காற்று படைக்கப்பட்ட சுதந்திரத்துடனேயே இன்றும், என்றும் எனும் இயற்கை விதியைத் தடுக்க முடியாது.

இந்தியாவின் பொருளாதாரச் சக்கரம் நகரமறுத்தால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடும் என்கின்ற பயம் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. உலகமயமாக்கலின் பின்பு எங்கே எந்தச் சக்கரம் நின்றாலும் உலகம் முழுமையும் அதன் அசைவு பாதிக்கிறது. ஒரு பங்குச் சந்தை தழும்பினால் அதன் தாக்கம் தொடரலையாக எங்கும் பரந்து செல்கிறது. றேகனுக்கும் தட்சருக்கும் இப்படிச் சொந்தப் பொருளாதாரச் சக்கரங்கள் சறுக்கும் என்று புரிந்திருந்தால் பேசாது விருந்து சாப்பிடுவதோடு அலுவலை முடித்திருப்பார்கள். இப்போது இந்தியச் சக்கரத்தை எண்ணி ஐரோப்பாவும் அமெரிக்காவும் நடுங்க வேண்டியதாகிற்று.

தனது நெற்றியை இரண்டாகப் பிளந்தது போல், இந்தியப் பிரதமர் குங்குமப்பொட்டை நடுநெற்றியில் இழுத்திருந்தார். வெண்ணிற ஆடையில் அவர் பளிச்சென்று தோன்றினார். அவரது வழுக்கற் தலை எண்ணை சுரந்து ஒளிபட மினுங்கியது. அவர் நாடிக்குக் கைகளை முட்டுக்கொடுத்து மூளையின் கனதிக்கு கைகளின் பலம் சேர்த்துக்கொண்டார். நெற்றியிற் சுருக்கம் அதிகமாகக் குடியேறச் சிந்தனையில் அசைவற்றிருந்தார். இந்தியப் பிரதமருக்குத் தாங்கள் எடுக்கப்போகும் ஒவ்வொரு முடிவக்குமான பலாபலன் என்னவாக இருக்கும் என்பது தெரியும். தமது அரசியல் வாழ்வு பாதுகாக்கப்படுவதோடு, நாடு ஒட்டு மொத்தமாய் அழிவதையும் தடுக்கவேண்டும் என்பது அவருடைய பிரச்சனையாயிற்று. கட்சியின் பல உறுப்பினர்கள், பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இனி இல்லாது ஒழிக்கவேண்டுமெனக் கறுவினார்கள். அப்படியான தலைவெடிக்கும் தீவிரவாதத்தோடு இருப்பவர்களின் தொகையே அந்த இந்துத் தேசியவாதக் கட்சியில் அதிகம். அவர்களைத் திருப்தி செய்யமுடியாதவிடத்து அக்கட்சியின் இருப்பும் கேள்வியே. அத்தால் பிரதமர் ஆசனமும் காலியே. அவர்களைச் சமாளித்து… நாட்டையும், தமது அரசியல் வாழ்வையும் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்கின்ற தலையிடியில் அவர் குழம்பிப்போனார்.
பின்பு, பிரதமர் மந்திரிகளோடு பல மணித்தியால விவாதம் நடத்தினார். அந்த விவாதத்தில் இலங்கையும், மாலைதீவும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரும் சக்திகளை அடையாளம் காணமுடியாமல் இருக்கின்றன என்கின்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். அந்த இந்துத் தேசியவாதக் கட்சியின் அரசாங்கம் அயல் நாடுகளின்மேல் ஏற்கெனவே வெறுப்புற்றிருந்தது. பௌத்தமும் இஸ்லாமும் கால்களை வாருவன என்கின்ற கவலையிற் துவண்டது. அதுவும் இலங்கையின் விலாங்குக் குணம் அவர்களை இன்னும் கொதிகொள்ள வைத்தது. இதற்கு இந்திய அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்கின்ற கேள்வி எழுந்தது. இலங்கையை ஆக்கிரமித்தால், அந்த நாட்டைத் தக்க வைத்துக்கொள்வதற்கு அதிக படையும் வளங்களும் தேவைப்பபடும் என்கின்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அத்தோடு உலகத்தின் கடுமையான எதிர்ப்பையும் தாங்கள் சம்பாதிக்க வேண்டிவரும் என்பதும் எடுத்துக் கூறப்பட்டது. அத்தால் இலங்கையை ஆக்கிரமிப்புச் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. பின்பு இலங்கையின் பாதுகாப்பைப் பலப்படுத்துவது என்கின்ற திட்டத்தின்கீழ் இரண்டு லட்சம் துருப்புகளையும், அதற்குத் தேவையான ஆயுதங்களையும் அங்கு அனுப்புவதாய் இந்திய அரசு முடிவெடுத்தது. இந்த முடிவுக்கும் பலநாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்பது புரிந்தாலும், தமது நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேறவழி இல்லை என்பதாக அவர்கள் முடிவு செய்தார்கள். சீனா என்ன சொல்லப்போகிறது என்பது பற்றிய கவலை அவர்களை அரித்தது என்றாலும், தமது திட்டத்திலிருந்து அவர்கள் சிறிதும் பின்வாங்க விரும்பவில்லை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு யுத்தம் ஏற்படுவதையோ, அதனால் ஏற்படும் கதிரியக்கத்தால் நாடுமுழுவதும் பாதிக்கப்படுவதையோ சீனா விரும்பாதென இந்தியா கணித்தது.

இலங்கை அரசிற்கு இந்த முடிவை இந்தியா அறிவித்தபோது அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இது இந்தியா எதிர்பார்த்த ஒன்றே. இலங்கையரசு தங்கள் தன்னாட்சியில் யாரும் கைவைக்க முடியாதென வாதாடியது. தங்களிடம் மிகவும் திறமையான யுத்தத்தில் வெற்றிகளைப் பெற்ற இராணுவம் இருப்பதாகவும், அவர்கள் இந்தப் பிரச்சனையை முறையாகக் கையாள்வார்கள் என்றும் வாதிட்டனர். தங்களது இராணுவம் தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதியாகப் பார்த்துக்கொள்ளும் என்றார்கள். அந்த வாதங்கள் இந்தியாவிடம் பயனளிக்காத அடுத்த கணமே அவர்கள் சீனாவை நாடி ஓடினார்கள். சீனா தன்னையும் தன் வளங்களையும் முதலில் பாதுகாத்துக்கொள்ள எண்ணியது. இந்தியா தற்போது இருக்கும் ஸ்திரமற்ற நிலையில் அதனோடு முரண்பட விரும்பவில்லை. இறால் பிடிப்பதற்காகச் சுறாக்களைப் பலியிடுவது இல்லை என்பதை அது நன்கு அறிந்து வைத்திருந்தது. இலங்கைக்கு உதவி செய்யப்போய்த் தானும் ஒர் அணுவாயுத யுத்தத்தில் மாட்டிக்கொள்ள அது விரும்பவில்லை. தற்போதைய இந்தியாவின் இராணுவப் பிரசன்னத்தை ஏற்குமாறு சீனா இலங்கைக்கு அறிவுரை வழங்கியது. பிரச்சனை சிறிது தணியும் போது இந்தியாவோடும் ஐக்கியநாடுகள் சபையிலும் தாங்கள் அதைப்பற்றிப் பேசி ஒரு சாதகமான முடிவை வாங்கித் தருவதாய் வாக்களித்தது.

இலங்கையரசு, இந்தியப்படைகளை மூன்றாவது தடவையாகத் தனது நாட்டிற்குள்ளே நுழையவிட்டது. இந்தியா இலங்கையின் தன்னாட்சியைமீறி இரண்டாவது முறையாக இலங்கைக்குள் பிரவேசித்தது. இலங்கை அரசு தன் இயலாமையில் இரு அரசுகளுக்கும் இடையே இருந்த தொடர்புகளைச் சிலகாலம் ஸ்தம்பிதம் அடையச்செய்தது. தனது தன்னாட்சியை இந்தியா மீறிவிட்டதாக இலங்கை ஐநாவிடம் முறைப்பாடு செய்தது. ஐநாவில் எல்லா வல்லரசுகளும் வழக்கத்துக்கு மாறாக அமைதிகாத்தனர். யானையின் பாதையில் எறும்புகள் பலியிடப்படுவதை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அடுத்து உலகில் என்ன நடக்கும் என்கின்ற திகிலில் பல நாடுகள் உறைந்து போயின. இலங்கையின் பிரச்சனை ஒரு பொருட்டாக அவர்களுக்குத் தோன்றவில்லை.

பல மக்களால் வெறுக்கப்படும் பயங்கரவாதிகள் ஒரு யுத்தத்தைத் தொடங்கிவிட்டார்கள். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தீவிரவாதிகள் அதை ஊதிப் பெருப்பிப்பதற்குத் தயாரானார்கள். இந்திய அறிவியலாளர்கள் அணுவாயுத யுத்தத்திற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கப்போவதில்லை. அதிகாரம் அவர்கள் கைகளில் இல்லாதவரைக்கும் அவர்கள் கருத்துகள் செவிடன்காதில் ஊதப்பட்ட சங்காகின.

அணுவுலைகளைத் தகர்த்ததிற்குப் பதிலடி கொடுக்காமல் விடுவது கோழைத்தனம் ஆவதோடு பயங்கரவாதிகளுக்கும், அதை ஆதரிக்கும் நாடுகளுக்கும் கிடைத்த வெற்றியும் ஆகுமென இந்திய எதிர்க்கட்சிகள் கோசமிட்டன. இப்படித்தான் அக்கட்சியின் பிரச்சாரம் இருக்குமென இந்திய அரசு கணித்திருந்தது. இந்த அரசியல் பெரும் சூதாட்டத்தில் தனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்துத் தேசியக்கட்சி ஆராய்ந்தது. ஒன்றும் செய்யாது இருந்தால் தமது கட்சியின் எதிர்காலம் பாழாகிவிடும் என்கின்ற நிதர்சனம் இமயமாகப் பிரதமர் முன் எழுந்துநின்றது. அணுவாயுத யுத்தத்தைத் தொடங்கினால் அது கட்டுப்பாடில்லாது போய்விடலாம். அப்போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் முற்றுமாய் அழிந்து போய்விடுகின்ற ஆபத்தும் உள்ளது. இந்த உண்மை அந்த இமயத்தையும் தாண்டிப் பிரதமரைப் பயமுறுத்தியது. அது பிரதமரின் நிம்மதியைத் தின்று தொலைத்தது. அணுவாயுத யுத்தம் கட்டுப்பாட்டை இழந்தால் அந்தப்பழி பின்பு தங்களைவிட்டு அகலாது நிலைத்துவிடும் என்பதும் பிரதமருக்கு நன்கு புரிந்தது. ஒர் அணுகுண்டு வெடித்தாலே உலகத்தின் தூற்றலுக்கும் வீண்பழிக்கும் காலகாலமாக முகம் கொடுக்கவேண்டி வரும். அது ஒன்றுடன் நின்றுவிடாது தொடர் கதையாகும்போது எப்படி இருக்கும் என்பதை அவருக்குக் கற்பனை செய்யவே பிடிக்கவில்லை.

தற்போது இரண்டு கதிர்வீச்சுக் கசிவுகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்தியநாடு, யுத்தத்தால் இன்னும் அதிக தாக்கத்திற்கு உள்ளாகும். பல நகரங்களில் மக்கள் வாழமுடியாது போகும். பல மில்லியன் மக்கள் சில கணங்களில் அழிந்து போவார்கள். இந்தியப் பொருளாதாரம் படுகிடையாகும். பல மில்லியன் மக்களைக்; கதிர்வீச்சும், அதனாற் பீடிக்கும் நோய்களும் பாதிக்கும். அது அதிக காலத்திற்குத் தனது பிடியைவிடாது அழுத்தும். இப்படிப்பட்ட பல உண்மைகள் பிரதமரை ஓயவிடாது அந்தரத்திற் பந்தாடின.

அணுகுண்டுகள் உலகத்தில் பாவிக்கப்பட்டதின் பேரவலங்களை இன்றும் நாகசாகி, ஹிரோசிமா விளம்புகின்றன. அதைவிடச் சுனாமி புக்குசிமாவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இது என்றும் மனிதசமுதாயத்தின் ஞாபகத்தில் துருத்தும் செய்தி. அதன் தாக்கம் மனிதனின் பாரம்பரிய அலகுகள் ஊடாக கடத்தப்படுகிறது. அந்த வரலாற்றைக் காந்தி பூமியான இந்தியாவில் மீண்டும் நடத்துவதற்கு அவரது மனது சங்கடப்பட்டது.

பதில் தாக்குதல் நடத்தாவிட்டால் பயங்கரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளும் மேலும் மேலும் இந்தியாமீது தாக்குதல் நடத்துவார்கள். பயங்கரவாதத்தைக்கண்டு இந்தியா அஞ்சுவதாக அது வரலாறு எழுதும். அதற்கு எமதுநாடு ஒருபோதும் இடம்கொடுக்க முடியாது. எந்தப் பயங்கரவாதிகளுக்கும் அடிபணிந்ததாக இந்திய வரலாறு இருக்கக்கூடாது. மக்கள் இருக்கும் மனநிலையில் பதிலடி கொடுக்காதுவிட்டால் அரசைக்கூட இரவோடு இரவாகக் கவிழ்த்து விடுவார்கள் என்பதாக மீண்டும் மீண்டும் எண்ணிய இந்தியப் பிரதமர் ஒரு முடிவுக்கு வந்தார்.

அவர் முதலில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்துவரும் பாகிஸ்தானைத் தண்டிப்பதென முடிவு எடுத்தார். அதை எப்படித் தண்டிப்பது என்பதிற் குழப்பம் நிலவியது. பொருளாதாரத் தடையென்கின்ற பேச்சு உடனடியாகவே மறுதலிக்கப் பட்டது. அதன் தாக்கம் இந்தப் பெரிய தாக்குதலுக்கு ஈடாகாது என்பதோடு, அதைச் சீனா முறியடித்துவிடும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்குத் தகுந்த தண்டனை இராணுவரீதியான தாக்குதல்தான் என்றாலும், அது அணுவாயுதப் பாவிப்பாக இருக்கக்கூடாது என்கின்ற அபிப்பிராயம் நிலவியது. அதுவும் இந்தியா முதலில் அணுவாயுதத்தைப் பாவித்தது என்கின்ற அவப்பெயர் வருவதாக அது அமையக்கூடாது என்பதில் இந்தியப்பிரதமர் மிகவும் அக்கறை காட்டினார். மதத்தைச் சாட்டி, இனத்தைச் சாட்டி, மனிதப் பயத்தைக் காட்டிப் பதவிக்கு வருவது சுலபம். அப்படிப் பதவிக்கு வந்தபின்பு பதவியென்னும் அடங்காக் குதிரையில் இருந்தவண்ணம் மனிதத்தை மீறுகிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டு எழாது சவாரிசெய்வது மிகவும் அவஸ்தையான விடயம் என்பது அவருக்குப் புரிந்தது.

கடைசியாக மந்திரி சபையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இருபத்தி நான்கு மணித்தியாலத்திற்குள் இந்திய உளவு நிறுவனம் கொடுக்கும் பெயர்ப் பட்டியலில் உள்ள அனைவரையும் பாகிஸ்தான் கைதுசெய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் பாகிஸ்தான் மீது மரபு ரீதியான தாக்குதல் நடத்திப் பயங்கரவாத மையங்களை அழிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுமென அறிவிக்கப்பட்டது. இதனால் வரும் எந்த விளைவுக்கும் பாகிஸ்தானே பொறுப்பு எனவும் அதில் திட்டவட்டமாய்ச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. பாகிஸ்தான் கடந்தகாலத்தில் இழுத்தடிப்புச் செய்ததுபோல் இம்முறையும் சுத்துமாத்துச் செய்தால் இரத்தம் சிந்துவதை அதனால் தடுக்கமுடியாது என்பதையும் இந்தியா வலியுறுத்தியது.

இந்த அறிவிப்பைப் பாகிஸ்தானுக்கு அனுப்பிய இந்தியப் பிரதமர் தமது இராணுவத்தை எல்லை நோக்கி நகர்த்துமாறு தளபதிகளுக்குக் கட்டளையிட்டார். அத்தோடு அணுவாயுதம் உட்பட எல்லா ஆயுதங்கள், அதற்கான படைகள் என்பனவற்றை அதியுச்சத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அவர் பணித்தார்.

பாகிஸ்தான் அரசு இந்தியாவின் இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ந்து போயிற்று. இந்தியாவில் நடக்கும் ஏதாவது ஒரு பயங்கரவாதச் செயலுக்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்வது அநீதியென அது கொதித்தெழுந்தது. அவர்களது உள்நாட்டுப் பாதுகாப்பிற்குத் தங்களை உத்தரவாதம் தருமாறு வெருட்டுவதை எந்தப் பயங்கரவாதத்தில் உள்ளடக்குவது என்பது தெரியாது அது திகைத்தது. சொந்த நாட்டிலேயே உள்நாட்டுப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாது பாகிஸ்தான் தவிக்கும்போது, மேலும் பளுவேற்றுவது அவ்வரசிற்கு இந்தியாமீது சினத்தை உண்டுபண்ணியது.

பொருளாதார வளர்ச்சியின்பின் இந்தியாவின் வாலைப் பிடித்துக்கொண்டு ஓடும் நாடுகளின் தொகை அதிகரித்துவிட்டது. இன்னும் சிலகாலத்தில் சீனாகூடத் தனது அரசியலை மாற்றிக்கொள்ளலாம். தத்துவங்கள் எல்லாம் அழகாகப் பேசப்படுவதற்கு மாத்திரமே. கூட்டிக் கழிப்பதில் மிச்சம் வருமென்றால் உக்கிப்போன சிவப்புச்சட்டைகளைக் கிடப்பில் போடுவதற்கு யாரும் தயக்கம் காட்டுவதில்லை. நிர்வாக வசதிக்காய் அழகான சர்வாதிகாரத்தையும், பொருளாதார முன்னேற்றத்திற்காய் முதலாளித்துவத்தையும் வைத்திருக்கும் ஒரு நாட்டை நம்புவதும் இரண்டு தோணியில் கால் வைத்தது போன்றதுதான் என்கின்ற அபிப்பிராய மாற்றம் பாகிஸ்தானிடம் தற்போது ஏற்பட்டது.

இந்தியாவின் அறிவிப்பு வந்தவுடனேயே பல பாகிஸ்தானிய அரசியற் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்யத்தொடங்கிவிட்டன. அப்படி இருந்தும் கிடைத்த பட்டியலை வைத்துப் பாகிஸ்தானரசு அந்தப் பயங்கரவாதிகளைக் கைது செய்ய முயற்சித்தது. அப்படிக் கைதுசெய்து இந்தியாவிடம் கொடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து மேலும் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கின. அந்த ஆர்ப்பாட்டங்கள் உள்ள10ர்க் கலவரமாய் மாறின. பொலீசும், இராணுவமும் அவர்களை அடக்குவதில் முழுக்கவனத்தையும் செலுத்தத் தொடங்கினார்கள். அந்த அமளியில் பாகிஸ்தான் அரசுக்குக் கைதுசெய்யக் கொடுக்கப்பட்டிருந்த காலம் சடுதியாக முடிவடைந்தது. அந்தப் பட்டியலில் இருந்த இருவர் மாத்திரமே அப்போது கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்தார்கள். அவர்கள் அந்த விபரத்தை இந்திய அரசுக்கு அறிவித்தார்கள்.

இந்தியப் பிரதமர் சினத்தில் துடித்தார். ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் இந்த ஏமாற்றுவித்தை தொடர்ந்துகொண்டே வந்தமை வரலாறு எனக் கர்ச்சித்தார். ‘அவர்கள் திருந்தப்போவதில்லை. பெரும் நாசத்தை உண்டுபண்ணி; இந்தியாவின் ஒரு பகுதியை அழிக்கும் பயங்கரம் நடந்தபோதுகூட இந்தியா பொறுமை காத்திருக்கிறது. பாகிஸ்தானியரால் பொறுப்பை உணரமுடியவில்லை’ எனக் கத்திவிட்டு வெறுப்பிற் கைகளை ஓங்கி மேசையில் குத்தினார். அங்கு இருந்தவர்கள் அவரைப் பரிதாபமாய்ப் பார்த்தார்கள். வியர்வையால் அவர் குங்குமம் கரைந்து இரத்தமாய் மேசையில் ஓழுகியது.

இந்தியப் பிரதமர் முப்படைத் தளபதிகளையும் அழைத்துத் தாக்குதலுக்கான ஒப்புதலை வழங்கினார். இந்தியா தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்த செய்தி சில கணத்தில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தைச் சென்றடைந்தது. பாகிஸ்தான் அரசு அதை அறிந்து சற்றுத் தடுமாற்றம் அடைந்தது. பின்பு பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு யுத்தம் தொடுக்குமென்றால், அது ஒரு புனிதப்போராகவே இருக்கும் எனவும், அதற்காகத் தாங்கள் எந்த ஆயுதத்தையும் பாவிக்க முடியுமெனவும் அது முடிவு செய்தது. முப்படைகளையும் அணுவாயுதங்களையும் தயார் செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் தனது இராணுவத் தளபதிக்குக் கட்டளையிட்டார்.

இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு தை மாதம் இருபத்தியாறாம் திகதி அதிகாலை இந்திய யுத்தவிமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்தன. அதை எதிர்கொண்டு பாகிஸ்தானிய விமானங்கள் சண்டையிட்டன. இந்திய ஏவுகணைகளும் பாகிஸ்தான் இலக்குகளைத் தாக்கின. இந்திய மரபுவழி ஏவுகணை ஒன்றை அணுவாயுதம் தாங்கிவரும் ஏவுகணையெனத் தப்பாகக் கணித்த பாகிஸ்தான் தனது அணுவாயுதம் தாங்கிச்செல்லும் ஏவுகணைகளை அதன் தலைகளோடு இந்தியாவை நோக்கிச் செலுத்தியது. இந்தியா அதைப்பார்த்து முதலில் அதிர்ந்து போனாலும் உடனடியாகச் சமாளித்துக்கொண்டு, தானும் தனது அணுவாயுத ஏவுகணைகளைப் பெரும் பொதிகளோடு பாகிஸ்தானை நோக்கிச் செலுத்தியது. உலகம் சமாதானம் செய்துவைக்க எண்ணமுதல் நடந்துவிட்ட இந்த நிகழ்வினால் மூச்சிழந்து போயிற்று. இருநாட்டிலும் ஏற்படும் அனர்த்தத்திற்கு அது மௌனசாட்சியாகியது. மனிதம் மீண்டும் ஒருமுறை அற்ப மனிதர்களால் அழிவதை யாரும் தடுக்கமுடியவில்லை. உலகக் காவலன் என்கின்ற அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்து போயிற்று. அவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லுவதற்குக்கூட இங்கே சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. அன்று உலகின் பாரத்தைக் குறைக்கப் பஞ்சபாண்டவர் தோன்றினார்கள் என்றது பாரதம். இன்று பிரிந்த பஞ்சபாண்டவர்பூமி அணுவாயுதத்தோடு போரிட்டு உலகப் பளுவைக் குறைத்தது. பஞ்சபாண்டவருக்குப் பதிலாக அவர்கள் பூமியிற் தயாரிக்கப்பட்ட அணுவாயுதம் இன்று பரந்தாமனுக்குச் சேவை செய்தது.

1.6 பொருளாதாரவீழ்ச்சி

யுத்தத்திலீடுபட்ட இந்தியா, பாகிஸ்தான், அதைச் சுற்றியிருந்த அயல்நாடுகள் பாரிய கதிர்வீச்சிற்கு உட்பட்டன. அத்தால் அந்த நாடுகளில் வாழ்ந்த குடிகள் பலவிதமான உபாதைகளுக்கு இலக்காகினர். கதிர்வீச்சாற் பாதிக்கப்பட்டுப் பெருவாரியான மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகள், தாவரங்கள் என்பனவும் இறந்து போயின. மீதமாய் இருந்தவர்கள் நோய்வாய்ப்பட்டனர். மீதமாய் இருந்தவையும் நோய்வாய்ப்பட்டன. நோய்வாய்ப்பட்டதால் வேலை செய்யக்கூடிய மனிதர்களின் தொகை குறைந்தது. கதிர்வீச்சாற் பாதிக்கப்பட்ட இடங்கள் விவசாயம் செய்ய உகந்தில்லையென அரசாங்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டன. அத்தால் விவசாயம் செய்யும் நிலம் முன்பைவிட மிகவும் சுருங்கிற்று. எஞ்சிய மனிதர்கள் பஞ்சத்தில் அல்லாடினர். மனிதரை மனிதர் உண்ணும் பஞ்சம் தலைவிரித்தாடியது. நரமாமிசமா வாழ்வை முடித்துக்கொள்வதா என்கின்ற தெரிவுகள் உயிர்வாழ்ந்த மனிதர்கள் முன்னே கொண்டுவரப்பட்டன.

இந்திய பாகிஸ்தான் யுத்தத்தைத் தொடர்ந்து, உலகைப் பெரும் பொருளாதாரவீழ்ச்சி விழுங்கத் தொடங்கியது. அது மில்லியன் மில்லியனான மக்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்தது. உலகம் எங்கும் வேலையில்லாப் பிரச்சனையும், பட்டினியும் தலைவிரித்து ஆடியது. அதன் தாக்கம் வறியநாடுகளை அதிகம் வாட்டிற்று. அதேவேளை ஐரோப்பிய நாடுகளையும் அந்தப் பிரச்சனைகள் விட்டு வைக்கவில்லை. இந்தியா, பாகிஸ்தானோடு அதைச் சுற்றி இருந்த நாடுகளில் வசித்தவர்கள் சகமனிதரை உண்ணவிரும்பாது ஐரோப்பாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினார்கள். அங்கு தமக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குமென அவர்கள் நம்பினார்கள்.

அதீத வசதிகளோடு ஆடம்பரமாய் இருந்தவர்களுக்குத் தங்கள் வசதி குறைவதையோ, அல்லது வேலையில்லாமல் போவதையோ பொறுக்க முடியவில்லை. ஏற்கெனவே மொத்தப் பிரச்சனைக்கும் நிறமான வந்தேறுகுடிகள்தான் காரணம் என்கின்ற வெறுப்பில் இருந்த ஐரோப்பியர்களுக்கு மேலும் அதிகமான நிறமான வந்தேறுகுடிகள் ஆசியாவில் இருந்து வருவது பிடிக்கவில்லை. அதுவும் சில முஸ்லீம்நாடுகளில் இருந்து அகதிகளாய் மக்கள் வந்து இறங்குவது அவர்களை மிகவும் வெறுப்படையச் செய்தது. அப்படி வரும் முஸ்லீம்கள் தமது மதத்தைத் தூக்கிப்பிடித்து வன்முறைகளில் ஈடுபடுவதோடு, அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்று, தங்கள் இனத்தைப் பெருக்கிச், சுதேசிகளைச் சிறுபான்மை ஆக்குகிறார்கள் எனப் பல சுதேசிகள் நம்பினார்கள். முஸ்லீம்களின் இரண்டாவது பரம்பரையின் ஒரு சிலர் மனித வெடிகுண்டுகளாய், பயங்கரவாதிகளாய்… ஆபிரிக்கா, ஆசிய, அமெரிக்கா போன்ற இடங்களிலும் ஐரோப்பாவிலும் வெடித்த வரலாறு அவர்களை மேலும் பயமுறுத்தியது. அதை நன்கு அறிந்த அதிதீவிரவலதுசாரிகள் தங்கள் பயங்கரவாதங்களை மறைத்து முஸ்லிம்கள்மேலான பயத்தை ஊதிப் பெருப்பித்து ஒவ்வொரு நாடாக ஐரோப்பாவில் ஆட்சிகளைப் பிடிக்கத் தொடங்கினார்கள்.

எல்லாத் துன்பத்திற்கும் இந்த நிறமான வந்தேறுகுடிகளே காரணமென்று அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இந்த நிறமனிதர்களைத் தங்கள் வளமான நாடுகளில் இருந்து வெளியேற்றுவதே இதற்குத் தகுந்த தீர்வைத் தரும் எனவும் அதிதீவிர வலதுசாரிகள் சுட்டிக்காட்டினார்கள். பொருளாதார வீழ்ச்சியை அனுபவித்த மக்களும் அதை இலகுவாக நம்பத் தொடங்கினார்கள்.

இந்த நிறமான வந்தேறுகுடிகளை ஐரோப்பாவை விட்டு வெளியேற்றுவதற்கு அதிதீவிர வலதுசாரிகளைவிடச் சிறந்த அரசியல்வாதிகள் இருப்பதாய் அம்மக்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஆதரவு அந்த அதிதீவிர வலதுசாரிகளை நோக்கித் திரும்பத் தொடங்கியது. மனிதத்துக்கு எதிரான செயல்களை வைத்து, மக்களின் உணர்ச்சியைத் தூண்டி, அரசியலைப் பிடிக்கிறோம் என்பதை அந்த அதிதீவிர வலதுசாரிகள் அறிவார்கள். அறிந்தாலும் பதவிக்கும் அதிகாரத்திற்கும் முன்னே மனிதம் என்பதற்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கத் தேவையில்லையென அவர்கள் எண்ணிக்கொண்டார்கள். மனிதம் என்கின்ற பெயரில் ஒட்டுண்ணிகள் தங்கள் நாட்டைப் பாழ்படுத்துவதாயும் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். மனிதப் பிணங்களின்மேல் சாம்ராச்சியம் கட்டப்படுகிறது என்கின்ற உண்மையைத் தங்களுக்கே உரியதாக்கிக் கொண்டார்கள்.

மனிதவுரிமைகளை மீறிய தலைவர்கள் பல ஆண்டுகளாக அந்த நாட்டு மக்களின் ஆதரவோடு ஆண்ட வரலாற்று உண்மைகள் உலகம் முழுமையும் நிறைந்து கிடந்தன. மனிதம் மதிக்கப் படுகிறதா இல்லையா என்பதைவிட மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நிறைவேற்றவேண்டியது அரசியல் வாதிகளின் கடமை என்பது அதிதீவிர வலதுசாரிகளின் வாதமாகியது. அப்படியான அரசியல்வாதிகளையே மக்கள் பதவியில் வைத்திருக்கிறார்கள். அதிலும் சூரர்களாய் இருப்பவர்கள், தாங்கள் பெரும்பான்மை அரசாங்கமாய் வரும்போது, தங்களுக்குச் சாதகமாய்ச் சட்டங்களை மாற்றி, எதிர்க்கட்சிகளை நீர்மூலம் செய்து, அடக்குமுறையை மாற்றுக் கருத்தாளர்கள்மீது கட்டவிழ்த்துவிட்டு, நிரந்தர மன்னர்களாய் முடிசூடிக்கொள்கிறார்கள். அதற்கு இந்த நிறமனிதர்களின் நாடுகளே நல்ல முன்னுதாரணமாக இருந்திருக்கின்றன. ஹிட்லரின் கிரீடத்தை மிஞ்சும் கனவுகளோடு அதிதீவிர வலதுசாரிகள் வலம் வந்தனர். அந்த உண்மையை வெளிப்படையாகச் சொல்லித் தங்கள் இருப்பை ஆரம்பத்திலேயே ஆட்டம்காணச் செய்துவிடாது, மிகவும் கவனமாக அவர்கள் பொறுமை காத்தனர். அதேவேளை மக்களிடம் நிறமனிதர்களைப் பற்றிய அவதூறான பிரச்சாரத்தின் மூலம் அதிகமாக வெறுப்பேற்றினார்கள். அவர்களின் வாக்குகளைப் பொறுப்பேற்றார்கள்.

இந்திய இந்து அதிதீவிரவாத அரசியல்வாதிகளும், பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் சொந்த மக்களின் அழிவுக்கும் சொந்தநாட்டின் வீழ்ச்சிக்கும் ஏதுவானார்கள். மீதம் இருந்தவர்களில் ஒருபகுதி ஐரோப்பாவில் அடைக்கலம் கேட்க, நிறமான மனிதர்களென அங்கு அவர்களுக்கு அதிதீவிர வெள்ளை அரசியல்வாதிகள் முடிவுகட்டத் திட்டமிட்டனர். இந்த அனர்த்தத்தைப் பார்த்து இந்தியாவும் பாகிஸ்தானும் அதிர்ந்து போயின. ஹிட்லரின் பார்வை ஆரியத்தின் பிறப்பிடத்திலேயே வீழ்ந்ததாக அவர்கள் முகம் சுருக்கம் கண்டது. தாங்களும் பதவிமோகத்திலும் மதவெறியிலும் ஹிட்லரின் ரூபம் எடுத்துவிட்டது காலம் கடந்து புரிந்தது. அந்தக் கொடுமை அவர்கள் மக்களை ஐரோப்பா நோக்கிக் கலைத்தது. அங்கு அவர்களுக்கு வேண்டப்படாத மனிதர்களுக்கு உணவுகூடத் தேவையில்லை என்கின்ற பழைய தத்துவம் தூசிதட்டப்பட்டது. அது புரிந்தபோது இந்தியாவும் அதைச் சுற்றிய நாடுகளும் அஞ்சி நடுங்கின.

அயல்நாட்டு அரசியலில் காலம்காலமாக விளையாடியவர்களுக்கு ஒருநாள் தாங்கள் அந்த விளையாட்டிற்குப் பலியாவோம் என்பது புரியாமலிருந்தது. அது திடீரென நிதர்சனமான போது, காந்தி தேசத்திற்கு மீண்டும் காந்தியின் போதனை ஞாபகத்திற்கு வந்தது. காலத்தின் படிப்பினையாக அழிவு சுனாமியாக அடித்துக்கொண்டு போனபின்பு எந்தப் போதனையும் அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை.