2.1 நோர்வே

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு சித்திரை மாதம் எட்டாம் திகதி புதன்கிழமை பதினைந்து மணிபோல் நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தின் மத்தியில் அமைந்திருந்த ‘ஒஸ்லோ சிற்றி’ எனப்படும் வர்த்தக மையத்திற்குள் மூன்று வெள்ளைக் கார்கள் தொடராக நுழைந்தன. அதில் ஒன்றைச் செம்படையான சுருள் முடியுள்ள ஆபிரிக்கன் ஓட்டிச்சென்றான். அவன் முஸ்லிம்கள் அணியும் உடை தரித்திருந்தான். அவன் ஒட்டகத்தின் உயரத்தோடு போட்டியிடுபவனாய், அவனது தலை காரின் முகட்டைச் செல்லமாக முட்டி மோதியது. அவன் சோமாலிய நாட்டைச் சார்ந்தவன். மற்றைய காரைத் தடித்த அரேபிய நாட்டுக்காரன் ஓட்டிச் சென்றான். அவனது முகத்தின் அடையாளத்தை அழிக்கும் ஆக்ரோசத்தோடு ரோமத்தின் ஆக்கிரமிப்பு. வெள்ளையாக நீட்டு அங்கி அணிந்து குளிருக்காக அதன்மீது ஜக்கெற் தரித்திருந்தான். அவன் முகத்தில் இரக்கமே இல்லாத முரட்டுத்தனத்தின் இறுக்கமான தழுவல். இந்த உலகம் அழிந்துவிடவேண்டும் அல்லது இஸ்லாம் வசப்படவேண்டும் என்கின்ற வெறி அவனில். இறுதிக் காரை ஒர் ஒல்லியான அப்கான் நாட்டைச் சார்ந்தவன் ஓட்டிச்சென்றான். நல்ல உயரமாக இருந்த அவனது முகம் மழிக்கப்பட்டுப் பளிச்சிட்டாலும் ஆறாச்சோகம் அதில் ஆறாகப் பாய்ந்தது. அல்லாவின் ஒற்றையாட்சி இல்லாத இவ்வுலகைக் கருவறுப்பேன் என்பதாக அவன் விழிகள் பிரண்டன. அவன் ஐரோப்பியர் போல உடையணிந்திருந்தான்.

ஒஸ்லோ சிற்றிக்குள் எள்ளு எறிந்தாலே நிலத்தில் விழாத அளவிற்கு மக்கள் நிறைந்து வழிந்தனர். நாளை பெரியவெள்ளிக்கான விடுமுறை தொடங்குகிறது என்கின்ற அவசரத்தில் ஓடிவந்து கடைசிநேரக் கொள்முதல் செய்யும் அலையலையான மக்களின் கூட்டம் அதற்குள். அது நகர இடமில்லாது அலைமோதியது. குமுறும் கோளத்தின் மேல் நின்று கூத்தாடும் மனிதர்கள் போலச், சமுகக் குமுறல்கள் மறைந்துகொண்ட சலனமில்லா இயக்கத்தில் அம்மக்கள் சுறுசுறுப்பாக இயங்கினர். ஏட்டிக்குப் போட்டியான வன்முறை எங்கும் தலைவிரித்து ஆடும் காலமிது. மனித இனத்தின் சாபம் பதவிமோகம் கொண்ட, மதத்திடம் கண்ணை இழந்து, கற்கால வாழ்வை இன்றும் மெச்சும், சகமனிதர்களையும் அவர்களது உயிர்மையை, உரிமையைப் புரிந்துகொள்ளாத தலைவர்களும் அவர்களின் ஆட்சியும். பதவிக்காக, மதத்திற்காக, தப்பான வேதங்கள் ஓதப்பட்டு வெறியெனும் சாத்தான்களுக்குப் பூசை செய்யப்படுகிறது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் கொடு என்பது பழைய வேதமாகிவிட்டது. கொல்! கொன்றால் உனக்காகச் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் என்பது புதிய வேதமாகிவிட்டது. அதை நம்பிப் பல மனிதர்கள் விளக்கிற்குப் பலியாகும் விட்டிற் பூச்சிகள்போற் தாங்களும் அழிவதோடு மற்றவர்களையும் அதற்குள் இழுத்துச் சென்று விடுகிறார்கள்.

ஆசியாவில் ஏற்பட்ட கதிர்வீச்சின் கோரத்திற் சிதைந்த மானிடத்திற் குடிபுகுந்த வருத்தங்கள், திரிபுகள் அவர்களை எங்கும் துரத்திச் சென்றன. அது மானிட அவலங்களை மலிவுப் பொருளாக்கிற்று.

ஐரோப்பாவில் பல பத்து ஆண்டுகளாகவே குடியேற்றம் என்பது சுதேசிகளால் நஞ்சாக வெறுக்கப்பட்டு வருகிறது. சுதேசிகள் வெறுத்தாலும் நடைமுறை வாழ்வில் அதை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக உலக வியாபாரம், ஐநாவின் சட்டங்கள், பரோபகாரிகள் என்கின்ற பழைய பெயர், பத்துக் கட்டளைகள், எஞ்சியிருக்கும் மனிதநேயம் ஆகியவை குறுக்கே நிற்கின்றன. அந்த மனிதநேய விட்டுக்கொடுப்பை இப்பொழுது கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகள் மறந்து போயின. அதற்குப் பதிலாக அகதிகளைக் கொடுமைப்படுத்தியும், காவல் அரண்கள் அமைத்தும், தடுக்க முயற்சிக்கின்றன. அப்படி முயன்றும் அது பெரும் பயன் அளிக்கவில்லை. அதையும் மீறிவரும் அகதிகளை எவ்வித அடிப்படி வசதிகளும் இன்றி நடுத்தெருவில் விட்டார்கள். ஒருநாள்… ஒருநேரம்… தேவாலயம் கொடுக்கும் உணவு அவர்களுக்குக் கிட்டும். மறுநாள்… மறுநேரம்… அது கைக்கெட்டாத கனவாகும். வருத்தம் ஒருபக்கம், வதைக்கும் பசி மறுபக்கம் சொறி நாய்கள் போலத் தெருவில் அவர்கள் வாழ்க்கை நடத்துவதோடு வன்முறையாளரிடமும் வதைபட்டனர்.

ஐரோப்பிய வாழ்வு பற்றி அதீத கனவுகளோடு வந்தவர்களைப் பிச்சையெடுக்க விட்டபோது அவர்கள் துவண்டு போயினர். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க எண்ணிய கதையாக, வீடுமனைகளோடு இருந்தவர்கள் ஆதிவாசிகள் போன்று வெட்டவெளியிற் குடும்பம் நடத்த வேண்டியதாகிற்று. வரலாற்றைப் பின்நோக்கிப் பார்க்கும் அசௌகரியத்தைத் தடுப்பதாக ஐரோப்பாவின் சிலநகரங்களில் அது இன்னாளில் மீண்டும் உயிர்ப்புப் பெற்றது. வேலை செய்து சுதந்திரம் எய்து என்கின்ற பழைய வசனத்திற்குப் பதிலாக, உதவியின்றி சுதந்திரம் எய்து என்கின்ற புதிய வசனம் எழுதப்படாத நடைமுறையாயிற்று. பூங்காக்களில் மலர்வாசம் விடைபெற்றுப் போக, பிணநாற்றம் மெல்லக் குடிபுகுந்தது. இந்த அவலம் செல்வம் கொழிக்கும் மேற்கு ஐரோப்பாவில் பல அகதிகளுக்கு யதார்த்த வாழ்வானது. கட்டப்படாத சமாதிகளும் கல்லறையில்லாத அடக்கங்களும் பெருகலாகின.

அகதிகளின் வரவு கிரேக்கத்தோடு நின்று விடவில்லைளூ அது முழு ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மனிதன் ஒரு சமுக மிருகமென்றாலும் தனது குடும்பத்திற்காய் வளங்களைச் சேர்ப்பது அவன் முதற்தாகம். அந்தச் சுயநலம் பாதிக்கப்படும்போது அவன் வனவிலங்கு. அதற்கான எல்லைகள் எப்போதும் நகரக்கூடியவை. வளங்களிற் பங்கீடு என்று வரும்போது மனிதம் நத்தையாக ஓட்டிற்குள் இழுத்துக்கொள்ள, மிருகத்திற்கான குணங்கள் மூர்ப்பெய்தி நிற்கும். அப்போது டார்வினின் கோட்பாடு மட்டுமே உயிர்பெற்றுக்கொள்ளும். அது தான் எப்போதும் உண்மையென்று மார்பு தட்டும்.

ஐரோப்பிய மற்றும் உலகவளங்களும் அவர்கள் வைத்திருக்கும் தொழில்நுட்பமும் பங்கிடப் போதுமாய் இருந்தாலும், அதைப் பங்கிடுவதன் மூலம் தங்கள் இருப்பில் தளர்ச்சியோ அல்லது வீழ்ச்சியோ ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மீண்டும் பலசாலிகள் வாழும் தத்துவத்தை அகதிகள்மேற் பாயவிட ஐரோப்பா தயாராகியது. எல்லைகளை விஸ்தரித்து… ஐரோப்பிய ஒன்றியம் என்கின்ற இராட்சதனாய் வளர்ந்துவிட்ட அமைப்பில் மிதவாதிகள் ஓரங்கட்டப்பட, அதிதீவிர வலதுசாரித் தேசியவாதிகளின் கைப்பொம்மையாகியது. இந்தப் பயங்கரம் சிந்திப்போரை வெகுவாகத் திணற வைத்தது. இதன் மாற்றம் உலகத்திற்கு என்னவிதமான புதிய பாடத்தைப் புகட்டப்போகிறது என்கின்ற நினைப்பும், யதார்த்தமும் அவர்களை அதிரவைத்தன. மனச்சாட்சியுள்ள மனிதர்கள் நிம்மதியற்று அலைந்தனர். வரவிருக்கும் உலகவரலாற்றை எண்ணி வேதனைப்பட்டனர்.

வரலாறு புரிந்தவர்கள் காலத்தோடு வாழும் இடங்களை மாற்றுகிறார்கள். நிலைமையை அறிந்த அந்த நாடுகளும் தமது குடியேற்றச்சட்டத்தை இரும்பாக்கி ஓட்டைகளை நுட்பமாக அடைப்பதில் மும்மரம்காட்டத் தொடங்கின. விரிந்த எல்லைகளைக் கட்டுப்படுத்துவதுபற்றி விலாவாரியாக ஐரோப்பிய அரசுகள் பேசத்தொடங்கின.

ஏற்கெனவே நீண்டகாலமாய் ஐரோப்பாவில் வாழ்ந்துவிட்ட வந்தேறு குடிகளுக்கும் தற்போது இங்கு நடக்கும் கொடுமை தாங்கொணா இரணத்தை உண்டுபண்ணியது. அவர்கள் தங்களால் இயலுமானவரை உணவு, உடை, கூடாரங்கள் என்பனவற்றைச் சேகரித்துத் தற்போது ஐரோப்பாவிற்கு வருகின்ற அகதிகளுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டார்கள். அதையும் பல அரசாங்கங்கள் அவர்களது நிர்வாக அலகைக்கொண்டு இழுத்தடிப்புச் செய்தன… தடுத்தன. உதவிகள் அகதிகள் வரவை ஊக்குவிக்கும் என்பதாக மனிதம் மறுத்தன.

இரண்டாவது பரம்பரையாக வாழ்ந்த வெளிநாட்டவரிற் சிலர் கடும் தீவிரவாதிகளாய் மாறினர். அவர்கள் இந்தக் கொடுமையைக் கண்டு துடித்தனர். அந்தத் துடிப்பை அறிந்த சில மதபோதகர்கள் அவர்களைப் பல நாடுகளில் அணுகினர். ஆத்திரத்தில் கொதிக்கும் அவர்களின் மூளையைச் சலவை செய்தனர். மதபோதை ஏற்றினர். இஸ்லாமின் அழகிய போதனைகளைத் திரித்து வன்முறை நியாயமெனப் போதித்தனர். பொதுமக்களின்மேற் தாக்குதல் செய்வதற்கு அவர்களை ஏவினர். இந்த விதமான மூளைச் சலவைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சிலர் அதற்குப் பலியானார்கள். அது ஏற்கெனவே இருந்த மனித வெடிகுண்டுகளின் தொகையை அதிகரித்தது. இஸ்லாமியத் தீவிரவாதமும் பிறமததத் தீவிரவாதங்களும் வலதுசாரிகளின் தீவிரவாதமும் குருட்டுத்தனமாக மனிதம் கொல்லப் பேய்க் கூத்தாடின.

வந்துகுடியேறியவர்களில் முதற்பரம்பரையினருக்குத் தாங்கள் வாழும் நாட்டின் சந்து பொந்துகள் புகுந்து வெளியேறும் தகைமை மட்டமாக இருந்தது. தமக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுவரும் ஆற்றலும் அவர்களிடம் குன்றியிருந்தது. அதிலும் சிலர் புறநடையாக இருந்திருக்கிறார்கள். இரண்டாவது பரம்பரையான வந்தேறுகுடிகளின் வாரிசுகளுக்கு இப்படியான விடயம் ஒரு சவாலாக இருப்பதில்லை. அந்த நாட்டிற்கு அல்லது அந்த நாட்டின் மக்களுக்கு எதிராக ஒருவிடயம் செய்யவேண்டுமென்றால், அதை அவர்கள் இலகுவாக நடத்தி முடிப்பார்கள். அப்படித் தாக்குதல் நடத்துவதற்குப் பெரிய பாதுகாப்பான இலக்குகளைத் தேடிப்போய்த் தவண்டையடிப்பதிலும், மக்கள் அதிகம் கூடும் எளிதான இடங்களே அவர்களுக்குத் தேவைப்பட்டன. அதற்கு ‘ஒஸ்லோ சிற்றி’ எனப்படும் வர்த்தக மையம் மிகவும் பொருத்தமாகிற்று. தீவிரவாதம் என்பது கண்ணில்லாத வெறிபிடித்த மிருகம். அது எங்கே பாயும்… யார்மீது பாயும்… எதற்குப் பாயும்… எப்போது பாயும்… எதுவும் புரியாத குழப்பம். அதன் பாய்ச்சல் கொடூரமான அழிவைத் தரும் என்பது மட்டும் நிச்சயம். அது சொந்த உறவுகள் மாள்வது பற்றிக்கூடக் கருணைகாட்டாது, கரிசனைப்படாது, கவலைகொள்ளாது. இந்தக் கூட்டத்தில் எத்தனை அப்பாவி முஸ்லீம் குழந்தைகள் வருங்காலக் கனவுகளில் மிதக்கிறார்கள் என்பதுபற்றிக்கூட அவர்கள் இரக்கம் காட்டமாட்டார்கள்.

வாகனத்தை உள்ளே ஓட்டிச் சென்றவர்கள் அவற்றை முதலாவது தளத்தில் உள்ள தரிப்பில் அருகருகாக நிறுத்தி வைத்தார்கள். பின்பு ஏதோ சில அலுவல்கள் செய்தார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கமராவில் பதிந்துவிடாது அவதானமாய்த் தங்களை மறைத்துக்கொண்டார்கள். பின்பு அவசரமாக மேற்தளத்திற்குச் சென்று அந்தக் கட்டிடத்தைவிட்டு வெளியேறினார்கள்.

வெளியே வந்தவர்களுக்கு அல்லாவின் சுவர்க்கத்தை அடைந்த சந்தோசமாயிற்று. அவர்களுக்காக அங்கே காத்திருந்த காரொன்றிலேறி அவர்கள் சுவீடன் நாட்டை நோக்கிப் பயணித்தனர்.

அவர்கள் புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் சென்றபின்புதான் அந்த அதிர்வு ஒஸ்லோவின் மையத்தை உலுக்கியது. நிலநடுக்கமாக இருக்கவேண்டுமெனப் பலரும் முதலில் ஊகித்தாலும், ஏற்பட்ட பேரொலி அதற்கு மறுப்புத் தெரிவித்தது. நகரமே அந்த அதிர்வால் மூச்சிழந்து போயிற்று. தொழிற்கட்சி அரசுக்கு எதிராக நோர்வேயின் ஜனநாயகத்தை ஆட்டம் காணவைக்க, இரெண்டாயிரத்துப் பதினொராம் ஆண்டு யூலை மாதம் இருபத்தி இரண்டாம் திகதி அதிதீவிர வலதுசாரியால் வைக்கப்பட்ட குண்டை இது மீறிற்று. அந்த ஞாபகம் மக்கள் மனதில் உடனே எழுந்திற்று. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவர்களைத் தாக்கியது. மீண்டும் மீண்டும் தங்கள் நாடு பயங்கரவாதிகளால் தாக்கப்படுவது அவர்களுக்கு நடுக்கத்தை, பயத்தை, வெறுப்பை, கோபத்தைத் தந்தது.

இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின்பு அமைதியை ஏகபோகமாய் அனுபவித்த நாடு என்கின்ற பெருமை நோர்வேக்கு உண்டு. காயங்கள், இரத்தங்கள், உத்தரிப்புகள், சாவுகள் போன்ற அவலங்கள் பெருந்தொகையாக நடக்காது காப்பாற்றப்பட்ட சுவர்க்கபூமியாக அது வடதுருவத்தில் நீண்டு கிடந்தது. அதன் அமைதிக்கு வித்தாக, வளத்தின் பெருக்கத்தால் மக்களின் சுபாவத்தில் விளைவித்த சாந்தமும், ஜனநாயகத்தில் இருந்த நம்பிக்கையும், சட்டத்தை மதிக்கும் தன்மையும், மனிதாபிமானத்தின் விசுவாசமும், பேச்சுவார்த்தை மூலம் எதற்கும் விடைகாணலாம் என்கின்ற தைரியமும் பக்கபலமாகின. இதன் காரணமாக யுத்தம் என்பது நோர்வேக்குத் தொலைதூரமாகியது. இங்கு ஒரு சில முறைகள் பயங்கரவாதத்தாக்குதல் திட்டமிடும் கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. இரத்தம் தோயாத இந்தப் பூமியின் அமைதி அதிதீவிர வலதுசாரியால் இரெண்டாயிரத்துப் பதினொராம் ஆண்டு யூலை மாதம் இருபத்தி இரண்டாம் திகதி அன்று கொல்லப்பட்டது. அது நோர்வேக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி. இஸ்லாமியர் தாக்குவார்கள் என்கின்ற பயத்தோடு இருந்தபோது உள்வீட்டான் தாக்கியதை நம்பமுடியாத தவிப்பு. உண்மை என்கின்றபோது ஏற்பட்ட கொந்தளிப்பு, கவலை, ஒற்றுமை. வன்முறையை ஒட்டுமொத்தமாக எதிர்த்த பிணைப்பு. என்றும் மனதையுருக்கும் அந்தக் காட்சிகள். றோஜாக்களின் குவியல்கள். ஒரு பயங்கரவாதியிடம் இவ்வளவு வெறுப்பு இருக்கும் என்றால் எங்களிடம் ஒட்டுமொத்தமாக எவ்வளவு அன்பு இருக்கும் என்கின்ற உலகே வியந்த வசனம். காலம் மாறிவிட்டது. அதன் முகம் மாறிவிட்டது. புலிவருகிறது புலிவருகிறது என்று புலியே வந்துவிட்டது.

அதன்பின்பும் தொடர்ந்த இஸ்லாமிய அதிதீவிரவாதிகளின் வேட்டை வடதுருவத்தை அண்டிய நோர்வேயையும் விட்டுவைக்கவில்லை. அது புதிய வரலாறு ஆகிற்று. சமாதானத்திற்குத் தூதுபோய்ச் சில சச்சரவுகளை நோர்வே கொள்முதல் செய்தது. தனிப்பட்ட எந்த நாட்டின் மீதோ, இனத்தின் மீதோ யுத்தம் நடத்தாவிட்டாலும், நேற்றோவின் பின்னும், அமெரிக்காவின் பின்னும் அலைந்து தேவையில்லா வம்புகளை விரும்பியோ விரும்பாமலோ நோர்வே சம்பாதித்தது. முகமதுவின் கேலிச்சித்திரத்தைச் சில பத்திரிக்கைகள் பிரசுரித்தபோது, இங்கு வாழ்ந்த முஸ்லீம்கள் கொதித்தனர். உலக முஸ்லீம்கள் கொதித்தனர். ஐரோப்பியப் பத்திரிக்கை சுதந்திரம்பற்றி ஆத்திரமுற்றனர். வன்முறையாற் பதில்சொல்லச் சிலர் விருப்புற்றனர். வேட்டை தொடங்கினர்.

நோர்வே மீது பொதுவாக எதிர்ப்பு வருவதில்லை. வந்தாலும் அது அதிக காலம் நீடித்து நின்றதும் இல்லை. பொருளாதாரச் சார்பு நிலைகள் அதிகம் சமாதானத்தைக் கொண்டுவந்துவிடுகின்றன. நோர்வேயின் எண்ணெய் வளத்திற்கும் தொழில்நுட்பத்திற்குமாய்ப் பல நாடுகள் அதன் நட்பை நாடி நின்றன. கடலுணவின் அட்சய பாத்திரமாய் எல்லையற்று நோர்வேக் கடல் விரிந்து கிடப்பதும் மற்றுமொரு உண்மை. அந்த உண்மை புரிந்த நாடுகள் பல.

ஓஸ்லோவின் மத்தியபகுதி மீண்டும் யுத்தகளமாகிற்று. அந்த நகரத்தின் ஒவ்வொரு மூலையிலும் அபாய ஓசைகள் ஒலித்தன. விசேட பாதுகாப்புப் படை, பொலீஸ், தீயணைப்புப் படையெனப் பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எங்கும் மின்னுகின்ற வாகனங்களும் அவற்றின் சத்தமுமான அலங்கோலம். பச்சை ஹெலிக்கப்டர்கள் வசதி கிடைத்த இடத்தில் இருப்பதும் எழுவதுமாய்க் காயப்பட்டவர்களை உள்வாங்கின. அதிர்ச்சியோடு கட்டடங்களை விட்டு வெளியேறிய மக்களும், புதினம் பார்க்கும் மக்களும், செய்தி சேகரிப்பவர்களுமாகத் தெருவெங்கும் கூட்டம் கூடியது. பொலீஸ் அவர்களை இடிபாடுகளுக்கு அருகே நெருங்கவிடாது தடைகள்பரப்பித் தடுத்தனர். மீட்புபப்ணிக்காக மோப்பம் பிடிக்கும் நாய்கள், பாரிய கிரேன்கள், லொறிகள் என்பனவற்றோடு மீட்புப் பணியாளர்களும் கொண்டுவரப்பட்டனர். இரவு செல்லச் செல்ல குளிரின் கோரம் தோலுரித்து அசிங்கம்காட்டும். அதற்கு முன்பே அலுவல்கள் மும்முரமாக நடைபெற்றன. உயிருடன் மனிதர்களை மீட்பதென்றால் சம்பவம் நடந்து சில மணித்தியாலங்களில் மீட்க வேண்டும். நேரம் கரையக் கரைய நம்பிக்கையும் கரையும். சிக்குப்பட்ட மனிதவுயிர்களின் ஆயுள் கேள்வியாகும்.

காயப்பட்டவர்களில் பெரும்பகுதியினரை அம்புலன்ஸ்களில் ஏற்றி ‘உல்லவோல்’ மருத்துவமனை, ‘றிக்ஸ்கொஸ்பிற்றல்’ போன்றவற்றிற்கும் ஓஸ்லோவிற்கு வெளியே இருக்கும் வேறு சில மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். மற்றவர்களை அவசர சிகிச்சைக்காக ஹெலியில் ஏற்றிச் சென்றார்கள். உயிர் இழந்த உடலங்கள் அடையாளம் காணப்பட ஒரு கூடாரத்திற்குள் வைக்கப்பட்டன. நோர்வே மக்கள் இந்த அனர்த்தத்தை நம்ப மறுத்தனர். ஒஸ்லோவில் மீண்டும் இப்படி நடந்தது பழைய வடுக்களை அவர்களுக்கு நினைவுபடுத்தியது. அதிர்ச்சியின் தாக்கத்தில் மக்கள் கூட்டம் அங்குமிங்குமாக அலைமோதியது. சோகங்கள் கருமேகங்களாக அவர்கள் வதனங்களில் இறங்கிய கோலம். சிலர் பித்துப்பிடித்தவர்கள் போல அங்குமிங்கும் ஓடினர். பலர் அனர்த்தத்தைப் பதிவுசெய்வதில் மும்முரம்காட்டினர்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த அவலத்தை ஒட்டி இருபத்தி நான்கு மணிநேர நேரடிச் சேவை செய்தன. நோர்வேயில் நடந்த இரண்டாவது மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாக அது வர்ணிக்கப்பட்டது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம்போல, மும்பாயின் தாஜ்ஹொட்டேல் போல, நோர்வேயின் முக்கிய அடையாளச் சின்னமான வானளவாவ உயர்ந்த அரசகட்டடம் ஏற்கெனவே தாக்கப்பட்டது. அந்தப் பயங்கரவாதி அத்தோடு நிற்காது ‘உத்தொய்யா’ என்னும் தீவிற்குப் பொலீஸ் வேடத்தில் சென்று தொழிற்கட்சி இளைஞர்களைச் சுட்டுக்கொன்றான். இம்முறை ‘ஒஸ்லோசிற்றி’ பயங்கரவாதத்திற்கு இலக்காகிவிட்டது. பயங்கரவாதிகள் திட்டமிட்டு வெடிகுண்டு வைத்துத் தகர்த்துள்ளார்கள் என்பது பெரும் அதிர்ச்சியையும், சினத்தையும் மக்களுக்கு உண்டுபண்ணியது. அந்தத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துத் தடுக்கமுடியாதது பற்றிய விசனக் கேள்விகள் தலைகாட்டத் தொடங்கின. பயங்கரவாதத்திற்கு நிறமென்ன, இனமென்ன, மதமென்ன என்பது சிலருக்காவது புரிந்தது.

தொலைக்காட்சி நிறுவனத்தின் விமர்சகர்களின் கணிப்பீட்டின்படி கிட்டத்தட்ட ஆயிரம் பேராவது இறந்திருக்கலாமெனக் கூறப்பட்டது. அன்றையதினத்தின் விசேடத்தை ஒட்டி அதிக மக்கள் அங்கு குவிந்து இருந்ததொன்றும் வியப்பில்லை. அதுவே பெரும் அழிவைக் கொண்டுவந்துவிட்டது. அதிக அளவு உயிர்ச்சேதம் வரவேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் நோக்கமாக எப்போதும் இருக்கிறது. அதற்கு ஏற்பத் திட்டமிட்டு அந்தக் குண்டை அந்த நேரத்தில் வெடிக்க வைத்திருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். அழிவின் அதிர்வலை எங்கும் அலையலையாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இரவிரவாகப் பலமணி நேரத் தேடுதலில் நூற்றுக் கணக்கான பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதீவிர வலதுசாரிக் கட்சியொன்று ஐரோப்பாவின் மாற்றத்திற்கு ஏற்ப நோர்வேயிலும் ஆட்சிசெய்தது. நீண்டகாலமாக இடதுசாரிகளாலும் வலதுசாரிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த அக்கட்சி ஒஸ்லோவில் வெளிநாட்டவர் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்;, முஸ்லீம்கள் பெருகி நோர்வே மக்களைச் சிறுபான்மையாக்கப் போகிறார்கள,;; இஸ்லாம் எங்கள் மதத்தைக், கலாசாரத்தை, அழிக்கப் போகின்றது என்கின்ற பயத்தைக் காட்டி நோர்வேயின் ஆட்சியைப் பிடித்தார்கள். இனங்களுக்கு, மதங்களுக்கு இடையேயான வெறுப்பும், அதனால் உண்டாகும் பயங்கரவாதமும் உலகை என்றும் காணாதவாறு இப்போது அச்சுறுத்தியது. அது நோர்வே நாட்டையும் வலுவாகப் பீடித்தது.

அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே வெளிநாட்டவரை அகதிகளாக நாட்டிற்குள்ளே வரவிடாது தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு உள்ளவர்கள் வெளிநாடு சென்று திருமணம் செய்து மணமகனை, அல்லது மணமகளைக் கூட்டிவருவதை அந்த அரசு முற்றாகத் தடைசெய்தது. தயவு தாட்சண்யம் இன்றி ஏதாவது ஒரு காரணம் கிடைத்தாலும் வெளிநாட்டுக்காரரைப் பிடித்து அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பியது. கைதிகளாய் இருந்த வெளிநாட்டுக்காரரை உடனடியாக நாடு கடத்தியது. மொழிப்புலமை இல்லாத வெளிநாட்டவரின் குடியுரிமையைப் பறிப்பதற்கான திட்டம் தீட்டியது. சுதேசிகளின் வெறுப்பால் வேலை வாய்ப்புக்களில் வெளிநாட்டவருக்கு இன்னும் அதிக பிரச்சனைகள் உருவாகின. அரச நிறுவனங்களே நேர்முகப் பரீட்சைக்கென அவர்களைக் கடன்வழிக்குக் கூப்பிட்டுப் பின்பு திருப்பியனுப்பின. தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டவரின் பெயரைப் பார்த்துவிட்டே அவர்களது விண்ணப்பங்களைக் குப்பைக்குள் வீசின. பலர் வேலையிழந்து தவிக்கலாயினர். அதைவைத்தே வெளிநாட்டுக்காரர் சும்மா இருந்து சாப்பிடுகிறார்களென அந்த கட்சி பிரச்சாரம் செய்தது. அது மேலும் சுதேசிகளிடம் நிறமான மனிதர்களுக்கு எதிரான வெறுப்பை வலுப்படுத்தியது. வெறுப்பிற்கு வெறுப்பு வெளிநாட்டவரிடமும் விளைந்தது.

பிழையான கைகளில் அரசியல் அதிகாரம் போனால்… அது எந்த அரசியல் முறையானாலும்… அரசுக்கு எதிரானவர்கள் மீது அது கடுமையாகப் பாய்கிறது. அப்படி அரச எதிரிகளாகச் சித்தரிக்கப்படுபவர்களை யாரும் காப்பாற்ற முடியாது போய்விடுகிறது. இதுவே சரித்திரமும், தற்போதைய நடைமுறையுமாகியது. வலதுசாரிகளும், இடதுசாரிகளும் தங்கள் மக்களையும் அவர்களின் முடிவுகளையும் பார்த்து ஊமைகளாகக் கண்ணீர் வடித்தனர். இரண்டாம் உலகமகா யுத்தம் நோர்வேக்குத் தந்த பாடங்கள் இவ்வளவு இலகுவாக மறக்கப்பட்டுப் போயிற்று என்பது அவர்கள் நெஞ்சைப் பிழிந்தது. தாங்கள் பதவியில் இருக்கும்வரை அதற்கான விழிப்புணர்வைப் போதுமான அளவு செய்யவில்லையோ என்கின்ற குற்ற உணர்வு அவர்களை வாட்டலாயிற்று. ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு அந்நாட்டு மக்கள்தான் விரும்பி வாக்களித்தார்கள். ஜனநாயகத்தின் மூலம்தான் அவன் ஆட்சியைப் பிடித்தான். பதவிக்கு வந்தவுடன் அவன் சட்டங்களை மாற்றினான். பின்பு எல்லோரையும் அடக்கிச் சர்வாதிகாரியாக உருவெடுத்தான். வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் பல சர்வாதிகாரிகளை மக்கள்தான் தெரிவு செய்கிறார்கள். சிலகாலத்திற்குச் சர்வாதிகாரம் வாழலாம். ஜனநாயகம் அப்போது அராஜகத்தின் முன்பு சரணாகதி அடையலாம். பாரதப் போர்போல இறுதியில் நியாயம் வெல்லும். ஜனநாயகத்திடம் அது இருந்தால் ஜனநாயகம் வெல்லும். சர்வாதிகாரங்கள் தோற்றுப் போகும். நோர்வே மக்களும் அப்படி மாறுவார்களென இடதுசாரிகளும், வலதுசாரிகளும் சமாதானம் அடைந்துகொண்டார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டம் ஒன்றிற்குச் சென்ற நோர்வேப் பிரதமர் அவசர அவசரமாக நாடு திரும்பினார். அந்தப் பெண் பிரதமர் தங்களது கடும்போக்கே நாட்டிற்கு நன்மை பயக்கும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். அதனால் தனது நாட்டிற்கு வருகின்ற கெட்ட பெயர்களைப் பற்றி அவர் அலட்டிக்கொள்ளவில்லை. அவர் செய்தி அறிந்தது தொடக்கம் நிலைகொள்ள முடியாது கொதித்தார். கோபத்திற் துடித்தார்.

இவரைப் போன்ற தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் நேர்மையான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான தங்கள் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை முறையாக மக்கள் முன்பு வைப்பதில்லை. அப்படியாக நேர்மையான முறையில் அரசியலில் வெற்றிக்கனிகளைப் பெற்றுவிடும் நம்பிக்கை அவர்களிடம் இருந்ததில்லை. அதற்கு மாறாக அவர்கள் பிழையாகப் போகின்ற அரசியலுக்கு யார்மீது பழிபோடலாம் என்பதைக் கண்டுபிடிப்பார்கள். அதன்மூலம் சுதேசிகளை வெறுப்பேற்றுவார்கள். அந்த வெறுப்பில் மக்களின் சிந்திக்கும் திறமையை மழுங்கடிப்பார்கள். பின்பு அவர்களில் ஏறிச் சவாரி செய்வார்கள். அவர்களுக்குத் துணையாக நிறைய உதாரணங்களை வரலாறு தந்துவிட்டுச் சென்றிருக்கிறது. இந்தத் தீவிர வலதுசாரிகளுக்குச் சமுகத்தில் நொய்ந்து போனவர்களை எதிர்ப்பதும், திறந்த மதுக்கொள்கையை நேசிப்பதும், பணக்காரர்களுக்கு வரிச்சலுகை அளிப்பதும், வரவில்லாது செலவுசெய்வோம் என்பதாகப் பொய்யாகப் புளுகு வாக்குக் கொடுப்பதும் முக்கிய பணியாகும்.

நோர்வேநாட்டுப் பிரதமர் அடுத்தநாட்; காலை பயங்கரவாதிகளாற் தாக்கப்பட்ட இடத்தை வந்து பார்வையிட்டார். தாக்குதலும் அதைத் தொடர்ந்த அழிவுகளும் எல்லோரையும் நிலைகுலைய வைத்தன. அது மீண்டும் பழைய ஞாபகங்களைக் கொண்டுவந்து அவர்களை உணர்ச்சியின் உச்சத்திற் ததும்பவிட்டது. ஏற்கெனவே அதிதீவிர இஸ்லாமியரிற் கோபமுற்றிருந்த பிரதமருக்குக் கண்கள் இலந்தைப் பழமாய்ச் சிவந்தன. கன்னம் றோஜா நிறத்திற்கு மாறிற்று. அவர் உதடுகள் துடித்தன. கைகள் நடுங்கின. கால்களைக் கோபத்தில் உதைந்து உதைந்து நடந்ததில் சவாரிக்குதிரை வரும் சத்தம் உண்டாகிற்று. கோபத்தில் அவர் அங்கும் இங்கும் பார்த்தார். அவர் வதனம் விகாரமாகியது. அவர் பல்லை நெருமிக் கொண்டார். கட்டளையிட்டதும் தலையைத் துண்டிக்கும் மன்னர் ஆட்சிக்காலம் இல்லை என்கின்ற உண்மை அவரைக் கட்டுப்படுத்தியது. பதில் சொல்லவேண்டிய ஜனநாயகம் இந்த நாட்டின் பாரம்பரியம் என்பதை அவர் மறக்கவில்லை.

அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் பேச்சிழந்த அம்மையாருக்குத் தொடர்ந்தும் கைகால்கள் நடுங்கின. பின்பு தன்னைச் சமாளித்தவண்ணம் இறுகிய முகத்துடன் அழிவுகளைச் சுற்றிப் பார்த்தார். அதன்பின்பு நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனை கொடுக்கப்படுமென உறுதியளித்தார். பின்பு நாடுதழுவிய துக்கதினமாக அடுத்துவரும் மூன்று நாட்களும் கொண்டாடப்படும் என்பதையும் தவறாது அறிவித்தார். அதேவேகத்திற் கோபம் தணியாத முகத்தோடு பாராளுமன்றத்தை நோக்கிப் புறப்பட்டார். அவருக்கு நிறமான வந்தேறுகுடிகள்மீது வெறுப்பாகியது. இஸ்லாமியர்மீது அதைவிட வெறுப்பாகியது. தன்னுடைய கட்சியில் இருக்கும் விசுவாச நாய்க்குட்டிகளான நிறமான வந்தேறுகுடிகள் மீதே வெறுப்பு வந்தது. வெள்ளை இனத்தைத் தவிர்ந்த மற்றையவர்கள் துஷ்டர்களாகத் தோன்றினர்.

நோர்வேயில் நடந்த தாக்குதலையடுத்துக் கூட்டப்பட்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்திற் கடும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. எப்படித்தான் சத்தமிட்டாலும் சாட்சிகள் இல்லாத வழக்கும் தொலைந்து போகும் நீதியும் ஒன்றாகும். ஜனநாயகம் என்பதில் பெரும்பான்மைதான் வெற்றியின் நாயகன். தீவிரவலதுசாரிகளிடம் பெரும்பான்மை இருந்தபடியால் அவர்கள் தங்கள் விருப்பிற்கேற்பச் சட்டங்களை மாற்றினர். இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின்பு ஐரோப்பாவில் வாழும் மக்கள் ஒரு நல்ல விடயத்தைக் கடைப்பிடித்தார்கள். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது செய்து அராஜகம் தலைதூக்காது பார்த்துக் கொண்டார்கள். அது சர்வாதிகாரத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சவக்குழியிற் புதைத்து வைத்தது. அந்த நிலைமை தற்போது மாறிற்று. பெரும்பான்மை பெற்றுவிட்ட தீவிர வலதுசாரிகளுக்கு, இந்த நாட்டின் ஜனநாயகத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டுச் சர்வாதிகார ஆட்சி நடத்தலாம், அல்லது பொம்மை ஜனநாயக ஆட்சி ஒன்றை வைத்துக்கொண்டு, தாங்கள் நினைத்தவற்றைச் செய்து முடிக்கலாம் என்கின்ற துணிவு வந்தது. அதற்கான வாக்குப் பலம் அவர்களுக்குப் பாராளுமன்றத்திற் கிட்டியது. இன்னும் அவர்கள் அந்த அளவிற்கு நோர்வேயின் ஜனநாயகத்தின் தரத்தைக் குறைக்கவில்லை. அதன் எல்லையில் மதில்மேற் பூனையானார்கள். எந்தப்பக்கம் சாய்வார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருந்ததில்லை. காற்று அடிக்கும் திசையும் பலமும் அறிந்தவர்கள் கதிகலங்கினர். காற்று அடிக்கத்தொடங்கியது. அது பலமாக அடித்தது. அதற்கான வலுவான காரணம் கிடைத்தது. இனி நடந்த தாக்குதலைப் பொதுமைப்படுத்துவதும் தனிமைப்படுத்துவதும் அவரவர் விருப்பிற்கேற்ப நடக்கும்.

பாராளுமன்றத்திற் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்களுக்கு ஏற்பாகவராது என்பது தெரிந்தும் நிறைவேற்றப்பட்டன. அது நோர்வே மக்கள் அநேகரை ஒருமுறை தங்களின் கடந்த தேர்தல் முடிவுகள் பற்றிச் சிந்திக்கவைத்தது. அந்தச் சட்டத்தின்படி எல்லோருக்கும் புது அடையாள அட்டை வழங்கப்படுவதாயிற்று. அந்த அடையாள அட்டையில் அவர்கள் பிறந்த நாடு, மதம் என்பன மேலதிகமாகச் சேர்த்துக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டது. அத்தோடு அந்த அடையாள அட்டையிற் கண்ணை வைத்து மனிதரை அடையாளப்படுத்தும் வசதியும் சேர்க்கப்பட்டது. அந்த அடையாள அட்டை இல்லாதவர்களை எங்குவைத்தும் கைதுசெய்யும் அதிகாரம் பொலீஸக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியான கடும்போக்கே குற்றங்களையும், பயங்கரவாதத்தையும் குறைத்துப் பயங்கரவாதிகளை இலகுவாக கைதுசெய்ய உதவுமென்றும் பரவலாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் பலமிழந்த எதிர்க் கட்சிகள் தெருவுக்கு இறங்கினார்கள். இது அப்பட்டமான இனவாதச் செயல் என்று ஆர்ப்பரித்தனர். அதிகாரமற்றவர்களின் ஆர்ப்பாட்டம் அபலைகளின் கூக்குரல் போலாகிற்று. ஆர்ப்பாட்டங்களிலும் காவலர்கள் முன்பைவிட அதிக ஆக்ரோசமாக வன்முறையைப் பாவிக்கத் தொடங்கினார்கள். அது பலருக்கும் ஜனநாயகத்தின் முகம் கோரமாகிக்கொண்டு போகும் நடுக்கத்தைக் கொடுத்தது. பலரது நினைவை அது மீண்டும் தூசிதட்டியது. ஐரோப்பாவின் ஈனவரலாறு பல அறிவுஜீவிகளை நடுங்கவைத்தது.

2.2 ஐரோப்பா

இஸ்லாமியத் தீவிரவாதமும், வெளிநாட்டவரின் வருகையும் ஐரோப்பாவின் பழைய வரலாற்றை மீண்டும் அக்கறைக்குக் கொண்டுவந்தன. அப்போதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்குட் பலப்பரீட்சை பார்த்துக்கொண்டன. முடிவு, தமது முகத்தைத் தாங்களே கோரமாக்கிக்கொண்டது மட்டுமல்லாது மில்லியன் மில்லியனான மக்களை அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி ஏற்றுமதி செய்தனர். யுத்தத்தின்பின் மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்ட அந்த நாடுகள்; அவர்களின் அவலத்தைத் தீர்த்து வைக்காது வேறுதிசையிற் கவனம் செலுத்தின.

தொடர்ந்தும் நிறமான வந்தேறுகுடிகளால் ஐரோப்பா நிறைந்து வழிவது பல சுதேசிகளுக்கு வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாய் அமைந்தது. அப்படித் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் அகதிகளுக்குக் கதிர்வீச்சால் உண்டான நோய்களைக் குணப்படுத்த அல்லது அவர்களைப் பராமரிக்கச் சாதாரண அகதிகளுக்குச் செலவழிப்பதைவிட அதிகமாகச் செலவழிக்க வேண்டியதாயிற்று. இது ஐரோப்பிய அரசுகளுக்கு இன்னும் அதிக பாரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. அகதி முகாங்கள் மட்டுமல்லாமல் பல புதிய மருத்துவமனைகளையும், அதற்கான வசதிகளையும் செய்யவேண்டிய கட்டாயம் அவர்கள் கழுத்தைப் பிடித்தது. இந்த மேலதிகப் பளுவை எண்ணி ஐரோப்பிய நாடுகள் திகைத்துப்போயின. அவர்கள் அகதிகளின் வரவைக் கட்டுப்படுத்திச் சொந்த நாட்டிலேயே வைத்து அவர்களைப் பராமரிக்கவேண்டும் என்கின்ற வேலைத் திட்டத்தை முன்னெடுத்தாலும் அகதிகளின் வரவைத் தொடர்ந்தும் கட்டுப்படுத்துவது மிகவும் பெரிய சவாலாகியது. இந்தியா, பாகிஸ்தானோடு அதைச் சுற்றிய நாடுகளில் அகதிகளைத் தங்கவைத்துப் பராமரிப்பதை அவ்விடங்களில் இருக்கும் கதிர்வீச்சின் தாக்கம் தடுத்தது. அத்தோடு பரம்பரை பரம்பரையாக பரம்பரையலகில் ஏறிவிட்ட ஆசியரின் ஊழற் கலாசாரம் ஐரோப்பியரை வெறுப்படையச் செய்தது. பணம் கொடுத்தாலும் அகதிகளின் வரவை நிறுத்த முடியாது என்பது அவர்களுக்குப் புரிந்துபோயிற்று.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருந்த நாடுகளிலும், மற்றைய பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய அதிதீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றன. தூரதேசத்தில் நடந்தவை இன்று ஐரோப்பியரின் வீட்டு முற்றத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அந்த வன்முறை கண்ணற்றுத் திசையற்றுப் பலர்மீதும் பாய்ந்தது. சிறிது கண்ணை மூடினாலே அங்கங்கே வெடித்துச் சிதறியது. பயங்கரவாதத்தின்கீழ் வாழ்வதென்பது எப்படியான மனநோயை உண்டுபண்ணும் என்பதைப் பல ஐரோப்பியர்கள் அனுபவிக்கத் தொடங்கினர். பயங்கரவாதத்திற்கு எதிரான அரச பயங்கரவாதங்களும் அதே மனநோயைச் சிலருக்குத் தந்தது. ஆபிரிக்கா, ஆசியா, மத்தியகிழக்கு என்பதின் தொடரில் ஐரோப்பாவும் கடைசியாகச் சேர்ந்திற்று.

ஒரு தாக்குதலை இலகுவாகச் செய்துவிட முடியும் என்பதும் அதற்கு எதிராகப் பாதுகாப்புச் செய்வது கடினம் என்பதும் பொதுவான இராணுவ விதியாகும். அந்த விதிக்கு ஐரோப்பாவும் தப்ப முடியாது போயிற்று. இப்படி அதிதீவிர முஸ்லீம்களின் பயங்கரவாதத் தாக்குதல் தொடரும்போதும் ஐரோப்பாவை நோக்கிய அகதிகளின் வருகையும் நிற்கவில்லை. ஹிட்லருக்கு வாய்த்த கொமினிசமும் யூதர்களும் போல அதிதீவிர வலதுசாரிகளுக்கு முஸ்லீம் தீவிரவாதமும் வந்தேறுகுடிகளும் வாய்த்தார்கள். அவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்தத் தயாரானார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பதவிகள் மெல்ல மெல்ல ஐரோப்பாவின் அதிதீவிர வலதுசாரிகளின் கையிற் சிக்கிக்கொண்டன. அந்த வசதியானது பரந்த அளவில் ஒரு திட்டத்தை அமைத்து அங்கத்துவ நாடுகளிலும் அதை நிறைவேற்றுவதற்கு இலகுவாகிற்று.

நோர்வேயில் நடந்தது போன்ற தாக்குதல்கள் பல ஐரோப்பிய நாடுகளிலும் நடந்து வந்தன. அதன் காரணமாக நோர்வேயும் வேறு சிலநாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிற்கும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரவேண்டும் என்று வற்புறுத்தின. அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் நோர்வே போன்ற அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி அதை மத்திய தகவல் மையம் ஒன்றுடன் இணைத்து வைத்திருக்க வேண்டுமென அபிப்பிராயப்பட்டன. முதலில் அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பின்பு அது வடிந்தாலும் நம்பிக்கையீனம் பலரைத் திண்டாடப் பண்ணியது. லண்டன் மாநகரையே வெளிநாட்டவருக்கான ‘கெத்தோ’வாய் விட்டுக்கொடுத்த இங்கிலாந்து இதை முதலிற் கடுமையான சந்தேகத்தோடு நோக்கலாயிற்று. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அடையாள அட்டை நோர்வேயிற் பாவிக்கப்படுவதின் நகல் போலவே அமைந்திற்று. அத்தோடு அதில் உள்ள தகவல் அனைத்தும் ஒன்றுதிரட்டப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதுவான தகவல் மையத்தில் சேமிக்கப்பட்டன. அத்தகவலை எல்லா ஐரோப்பிய நாடுகளும் பெற்றுக்கொள்ளக் கூடியதாகிற்று. கொஞ்சம் அறிவுள்ள கணினி நாசகாரராலும் அதைப் பெறலாம் என்பதும் மறு உண்மையாகிற்று. அத்தகவல்கள் பயங்கரவாத நாசகார வேலைகளைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் உதவுமென வெளிப்படையாக நம்பப்பட்டது. அதிதீவிரவலதுசாரி அரசுகள் அதைவிடப் பல உள்நோக்கங்களை அந்த அட்டைக்குள் பொதிந்தனர் என்பது மறைக்கப்பட்டது.

முதலில் இதற்குச் சிலநாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பயங்கரவாதத்தால் உண்டாகும் அச்சுறுத்தலை எண்ணி அனேக நாடுகள் பின்பு ஒத்துக்கொண்டன. அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் எந்த ஒரு மூலையில் ஒருவனைப் பிடித்து அவனது எண்ணைக் கணணியில் புகுத்தினாலோ, அல்லது அவனது கண்ணை அடையாளப் படுத்தினாலோ, அவனது வாழ்க்கை வரலாற்றை அவர்கள் அறிந்துகொள்ளும் வசதி கிடைக்கப்பெற்றது. இது ஒருவகையிற் குற்றவாளிகளைக் கண்டறியவும், அதனால் குற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்றாலும் இனரீதியான ஒடுக்குமுறைக்கும் வழிகோலலாமெனச் சிறுபான்மையினரால் அஞ்சப்பட்டது. அந்தக் கருத்தை ஆளும் வர்க்கம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் திட்டமே அதுவென்பதை வரலாறு சொல்லக் காத்திருந்தது.