THIRUMOOLAR1இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும் அடங்காத மோகத்தில், அதனால் விளைந்த அபரிமிதமான இச்சையில், அதுவே அவர்கள் உடலில் ஏறிய உந்தும் வேதனையான காமத்தின் வீறுகொண்ட பரிணாமிப்பில், அழியும் கழிவுகளில் இருந்து அழியும் மெய் என்னும் பொய்யை அவன் தற்காலிகமாய் இந்த அவனியில் தரிக்கும் சாபத்தைப் பெற்றதனால், இயற்கை அல்லது இறைவனின் நியதிக்குக் கட்டுப்பட்டு, மானிடனாக வந்து அவன் பூமியில் அவதரிக்க, அவன் சக பிறப்பும் அவனோடு கூட வந்து அவதரித்தது. தேவன் பாகன் என நாமம் தரித்து அவர்கள் இந்த ஞாலத்தை மோகத்தால், கமத்தால், வீரத்தால் வேகமாக ஆளும் ஆசை கொண்டு அவசரமாக நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தனர்.

அலையும் மனிதனைப் போன்று அவன் உள்மனதும் நிலையான சிந்தனை அற்று, அலையெழும் கடலில் அகப்பட்ட ஓடம் போல் தேவன் வாழ்வும் குளப்பத்தில் தொடங்க, அசுரச் செயலையே தனது தர்மமாக்கி, அதுவே நியாயம் என்று, அவ்வழியே நீயும் செல்ல வேண்டும் என்று தேவனை அவன் உடன்பிறப்பு ஒவ்வொரு கணமும் தன்திசையில் பலமாக இழுத்தது வந்தான்.

எங்கிருந்து வந்தோம் என்பதோ, எங்கு நாம் இனிப் போவோம் என்பதோ கண்டவர் விண்டிலை-விண்டவர் கண்டிலை என்பதான புரியாத ஞானமானாலும், எங்கிருந்தோ வந்த எமக்கு இப்பூமி இடைக்காலமே என்பதைப் புரிந்த தேவன், ஈட்டும் செல்வமோ, ஈனப்புகழோ, இம்மிய அளவு தன்னோடு வராது என்பதைப் புரிந்தான்.
புரிந்தென்ன? நாங்கள் யார் என்பது புரியுமா என்கின்ற பாகனின் ஆணவத்தில் தேவனும் தன்னிலை இழந்து, அழிந்து, இறுமாப்புக் கொண்டு தனக்குத் தனக்கு என்னும் அற்ப மானிடப் புத்தியோடு அவன் பாவங்களைச் சேர்க்கலானான். மோகத்திலும், காமத்திலும், மதுவிலும், பொருளிலும் அவன் தன் மனதை இழக்கலானான். அதனால் உலக மாயையின் பாதாளத்தில் விழுந்து, வாழ்வின் மோட்சத்திற்கான வழி புரியாது பாவ மலைகளை முன்வைத்து வலியில் துடித்தான்.

உடன் பிறந்தவனைத் தேவனால் பகைக்க முடியவில்லை. ஆனால் பாவங்களை அவனால் சுமக்க இயலவில்லை. இதற்கு விடுதலை என்ன என்பதும் அவனுக்குச் சற்றும் புரியவில்லை. காலம் அவனை குமாரப் பருவத்தின் முற்றிய நிலைக்கு சூறாவளி கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனதாய் வேகமாக இழுத்துச் சென்றது. ஆசை, அகங்காரம், காமம், குரோதம் என்று அவன் பாவ மூட்டைகள் பாகனின் பிடிவாதப் போதனையாலும், அதை மூடத்தனமாக ஏற்கும் பாகன் மேல் தேவன் கொண்ட அபரிமிதமான பாசத்தால் வளரலாயிற்று. வீட்டின் ஒவ்வொரு சந்தையும் அவை அபகரித்தன.

காலம் செல்லச் செல்ல தேவனால் இனிப் பாவத்தைச் சுமக்க முடியாது என்கின்ற வெறுப்பு வந்தது. அந்த வெறுப்புப் பாகன் மேல் சினமாகத் திரும்பியது. எப்போதும் தன்னை நிழலாகத் தொடர்ந்து பாவத்தை தன் மேல் ஏற்றும் அவனைக் கொல்ல வேண்டும் என்கின்ற வெறி வந்தது. பின்பு அதை யெண்ணி தான் இப்படி நினைத்ததே தவறோ என்று அவன் கலங்கினான், நெஞ்சுருகி வருந்தினான். பாசம் துளிர்விட்டு ஞானத்தைக் சம்காராம் செய்தது. பாகன் அதை யெல்லாம் பற்றிக் கவலைப்படாது தேவன்மேல் மேலும் மேலும் பாவத்தை ஏற்றும் பாதகச் செயலைத் தொடர்ந்தும் செய்து வந்தான்.

பாகன் அப்படிச் செய்வதால் மேலும் மேலும் வெறுப்புற்ற தேவன் இனி இதைப் பொறுக்க முடியாது என்கின்ற முடிவுக்கு வந்தான். தன்மேல் பாவத்தை ஏற்றும் பாகனைக் கொல்ல வேண்டும் என்கின்ற வெறி அவனிடம் துளிர்விடத் தொடங்கியது. தனது உடன் பிறப்பைத் தானே கொல்வதா என்கின்ற தயக்கமும், வேதனையும் அவனிடம் மேலிட்டது. கவலையும், தயவும் உற்ற அவன் பாகனிடம் மீண்டும் மீண்டும் பரிவு கொண்டான்.
தேவனின் கவலை பற்றியோ, அவனது அவஸ்தை பற்றியோ சற்றும் பொருட்படுத்தாது பாகன் ஆணவத்தோடு மேலும் மேலும் பாவகாரியங்களைத் தேவனைக் கொண்டே செய்வித்தான். இந்தப் பாகனைக் கொல்லாதவரைக்கும் தான் மனிதனாகவோ, தேவனாகவோ வாழ முடியாது அசுரனாகவே உழல வேண்டும் என்கின்ற உண்மை அவனுக்குக் கல்லைக் குடைந்தெழுதிய வல்லின எழுத்துக்களாக உறைத்தன. தனக்கு விடுதலை கிடைக்க வேண்டுமானால் பாகனை வதைத்தாக வேண்டும் என்பது அவனுக்குப் புரிந்தது. அது அவனுக்கு மலைப்பையும் கவலையையும் தந்தது.

பாகனைக் கொல்ல வேண்டும் என்று தேவன் எண்ணினாலும் அவன் தன்னைவிடப் பலசாலி என்பது தேவனுக்குப் பௌர்ணமி நிலவைப் போல் புரிந்தது. தனித்து நின்று அவனைக் கொல்ல முடியாது என்பது உறைக்க அதற்கு மாற்றுவழி என்ன என்பதைப் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்கினான். அப்படி அவன் சிந்தனையில் மூழ்கித் திரிந்த நாள் ஒன்றில் அவன் ஊருக்குக் காவியுடை தரித்த, கைலையங்கிரியில் வாழ்ந்த, உத்திராட்சைக்கொட்டையை வடங்களாகக் கழுத்தில் அணிந்த, ஜடையும் தாடியும் வைத்து முகத்தை நீள்வட்ட வெண்கலமாக்கிய, ஞானத்தையும், சாந்தியையும் பார்வையில் வீசுகின்ற சாது ஒருவர் வந்து அவ்வூருக்கு வெளியே இருந்த மடத்தில் தங்கினார்.
தேவன் அந்தச் சாதுவிடம் சென்று சரணடைந்தான். சாது உன் சகோதரனை என்னால் கொல்ல முடியாது என்றும், உன்சகோதரனை நீயே கொல்ல வேண்டும் என்றும், கொல்லும் மார்க்கத்தையும், அதற்கான மன உறுதியையும் மட்டும் தான் போதிக்க முடியும் என்று கூறினார்.

முதலில் தனித்துத் தன்னால் அது இயலுமா என்று தயங்கிய தேவன் பின்பு மன உறுதியை ஒருவாறு திரட்டிக்கொண்டு, சாதுவிடம் போதனை பெற்று, அவ்வழியில் தன் உடன்பிறப்பை அழிக்கும் உறுதி பூண்டான்.
சாதுவின் போதனைகள் முடிந்தன. தேவனின் சித்தம் தெளிந்தது. கொல்லுதல் கொல்லப்படுதல் என்று எதுவும் இல்லை என்பதாகவும், உலகில் உதித்த மானிடர்கள் பரம்பொருளின் அந்தச் செயலுக்குக் கருவிகள் மட்டுமே என்பதை அறியாது, தாங்களே கருமம் என்று தம்மைத்தாம் எண்ணுகின்ற மடமை புரிந்தவனாகவும், கொல்லுதல் என்கின்ற கருமத்தைத் தான் செய்தாலும், கொல்லும் பாவம் தனக்கில்லை என்பதை அறிந்தவனாக, தெளிந்தவனாக, பாகனைக் கொல்வது தன் தர்மம் என்று எண்ணித் துணிந்தான்.

நாட்கள் மாரியின் வேகம் பெற்றுக் கரைபுரண்ட ஆறாகக் கடந்தன. தேவன் குருவை விட்டுப் போக மனதில்லாது அங்கேயே தங்கினான். அதற்கு இங்கு பாகனின் தொல்லை இல்லாததும், நின்மதியான, திவ்வியமான சூழ்நிலை எப்போதும் வியாபித்து இருப்பதும், அவனுக்குப் பெரும் அமைதியையும், ஆறுதலையும் தந்து அங்கிருந்து நகரவிடாது தடுத்து ஆட்கொண்டது. குருவின் பார்வையே பாகனைத் தன்னிடம் இருந்து விலக்கிவைக்கும் வல்லமை உடையது என்பதைத் தேவன் புரிந்துகொண்டான். இந்த உண்மை புரிந்த தேவன் அங்கேயே நிரந்தரம் என்பது போலத் தங்கிவிட்டான்.

இதைப் பார்த்த குரு தேவனை ஒருநாள் அழைத்தார். குரு தன்னை மடத்தைவிட்டு வெளியேறச் சொல்லப் போகிறாரோ என்கின்ற கவலையோடு தேவன் அவர் முன்பு வேள்விக்குச் செல்லும் ஆடாகச் சோர்வோடு போய் நின்றான்.

அவன் நினைத்தது சரியாகிற்று. குரு தேவனைப் பார்த்தார். அவர் கண்களில் இருந்து தெறித்த ஞானம் வலுவான ஒளிக்கீற்றுக்களாக அவனைத் தாக்கியது. இந்த அருள் நீங்கி நான் எப்படிப் போவது என்று அவன் கவலைகொண்டான். வெட்டப்படும் ஆட்டிற்கேன் தான் வெட்டப்படும் உண்மை புரிந்தது என்று கவலைகொண்டான். அந்தக் கவலையில் தன்நிலை மறந்தான்.

குரு எந்தச் சலனமும் இல்லாது அவனைப் புன்னகையோடு பார்த்தார்.
நீ என்ன நிலையை இங்கு வந்தபின் எய்தினாய் என்பது எனக்குத் தெரிகிறது தேவா. அதை நீயும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நீ வந்த தடங்களைத் தரிசித்து மீள்வாய்யாக. இது குருவின் ஆணை. நீ உடனே அதனை நிறைவேற்ற ஊரைநோக்கிப் புறப்படவேண்டும் என்றார்.

தேவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. பாகனைத் தேடித் தேவன் புறப்பட்டான். அப்போது குரு மீண்டும் அவனைப் பார்த்துக் கனிவாகச் சிரித்தார். அவர் சிரித்ததன் அர்த்தம் அவனுக்கு அப்போது புரியவில்லை. தேவன் பாகனைத் தேடிச் சென்றான். அவனைக் கொன்று இனிப் பாவத்தில் இருந்து என்றும் முக்தி எய்துவது என்று அவன் எண்ணினான். மனதில் சாந்தியும் கருமத்தில் வீறும் கொண்டான்.

தேவன் தமது தாய்தந்தையரின் பாவ மூட்டைகள் நிறைந்த வீட்டிற்கு மீண்டும் வந்தான். அங்கு வந்த அவனை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அதிரடியாகத் தாக்கின. வீட்டை அடைத்திருந்த பாவ மூட்டைகளைக் காண முடியவில்லை. வீடு எந்தப் பாவ மூட்டைகளும் இல்லாது வெறுமையாகக் கிடந்தது. எங்கும் வெறுமையாகத் தோன்றியது. வெறுமை நிர்மலமாகத் தோன்றியது. இருப்பதைவிட இல்லாமை இப்போது இன்பம் தந்தது.
தேவன் குருவை எண்ணி மயங்கினான். தன் மயக்கம் தீர்த்ததே அவனுக்கு மயக்கம் தந்தது.
அவன் பிரம்மை தெளிந்த பின்பு அவன் பார்வைக்குக் கிட்டிய அந்தக் காட்சி அவனை உலுக்கி எடுத்தது. அவனால் அதை நம்ப முடியவில்லை. எப்படி இது சாத்தியம் என்பது புரியவில்லை. குருவின் கருணையின் வலு என்ன என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.

அவன் கண்களை மூடினான். குருவை அகக்கண் கொண்டு வணங்கினான். மீண்டும் கண்களைத் திறந்தான். நடுக்கூடத்தில் அது இறந்து கிடந்தது. அதன் சரீரம்தான். அதில் உயிர் இல்லை.
தேவன் குருவை மீண்டும் நினைத்தான். அப்போது அவன் மனக்கண்ணில் குரு தோன்றிச் சாந்தமாகப் புன்னகைத்தார். அது அழிந்தது. மனது நிர்மலமாகக் குருவைச் சரணடைந்து, அங்கே தரித்துவிடாது, அது பிரிந்து வந்ததை ஆவலோடு தேடியது.