5.83x8.ma-frontpng3.1 ஒஸ்லோ

ஒப்சால் ஒஸ்லோவின் புறநகர்ப்பகுதி. ஒப்சால் என்பது உயரமான இடம் என்பதைக் குறிக்கும். ஒஸ்லோவின் மையப்பகுதி கடலின் பக்கமென்றால் புறநகர்ப்பகுதியான ஒப்சால் மையத்தைவிட்டு விலகி உயரமான பிரதேசத்திற் குன்றுகளையும் காட்டுப் பகுதியையும் அண்டியிருந்தது. ஒப்சால் சிறிய நகரம். அது ஒரு தனியுலகம். ஒரு நகரத்தின் சிறுபிரதியாக அதன் மொத்தவடிவம்.

ஒப்சாலில் தொடர்வீடுகள் உள்ள பகுதிகள் பல. அதிலொரு பகுதியில் விக்னேஸ் குடியேறினான். அவன் குடிவரும்போது அங்கு வேற்று நாட்டவரையே காணமுடியவில்லை. அவன் அப்போது தனித்த வெளிநாட்டுக்காரனாய் வலம்வந்தான். விக்னேசின் மனைவி சிலகாலத்திற்கு முன்பு புற்றுநோயாற் திடீரென இறந்துவிட்டாள். விதி. அவன் இடிந்து போனான். அவனுக்குக் கிடைத்த வரம், வாழ்வின் பேறு ஒரே ஒரு அருமையான, அழகான மகள். அழகு என்பதைப்பற்றி ஆராயலாம். அதன் விதி ஆளுக்காள் மாறுபடும். காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்கின்றபடி அவள் அவனுக்கு அழகு. அவன் வாழ்வின் உயிர்நாடியாக… இவ்வுலகின் இருப்பிற்கு அர்த்தமாக… அவளை ஆரம்பப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்லும்போதும்… திரும்பி வரும்போதும்… அயலவர்கள் கண்டால்… இடைமறித்து அவளோடு கதைபேசுவர். அவளைப் பார்த்து இன்பம் கொள்வார்கள். சிரித்து மகிழ்வார்கள். அவனுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டாற் செய்துகொடுப்பார்கள். அதைப் போலவே விக்னேசும் அவர்களுக்கு உதவி ஏதும் தேவைப்படும்போது செய்துகொடுப்பான். அந்த உறவுகள் அத்தோடு ஏனோ எல்லை கண்டுவிட்டன. ஊரைப் போல வீட்டிற்கு வந்து… ஆறுதலாக முற்றத்தில் இருந்து… ஆயிரம் கதைபேசி… தேனீர் அருந்தி… பின்பு அந்த உறவு சிறிது சிறிதாகப் பலமாகி… பாசப் பிணைப்பாக உருமாறும் நிலை இங்கு இல்லை. எங்களோடு அப்படி வளரமுடியாத நட்பு, சிலவேளை அவர்கள் இனத்துக்குள் வளர்வதை அவனால் அவதானிக்க முடிந்தது. விக்னேசும் தமிழ் நண்பர்களோடு வளர்த்துக்கொண்ட நெருக்கத்தை அவர்களோடு வளர்க்க முடியாது திண்டாடினான். இனம் இனத்தைச் சாரும் என்கின்ற நச்சு வார்த்தையில்கூட உண்மை உள்ளதாவென விக்னேஸ் அடிக்கடி சிந்திப்பான்;.

நோர்வேக்கு வரும் வெளிநாட்டவர்களிற் பெரும்பான்மையோர் ஒஸ்லோவுக்குள் அடைந்து விடுவார்கள். அவர்கள் சமுக அமைப்பு அதை ஊக்குவிப்பதாகிற்று. அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என்கின்ற பிணைப்புகளை அறுத்துத் தனியே வாழ்வது அவர்களுக்கு இங்கும் அன்னியமாகிறது. கலாசார விட்டுக்கொடுப்பு இன்மையாற் பெருகிய வெளிநாட்டவரின் செறிவு ஓஸ்லோவில் பார்க்கும் இடம் எல்லாம் நிறமனிதர்களின் நடமாட்டமாகத் தோன்றியது. அது வேண்டாப் பெண்டாட்டியாக அதிதீவிர வலதுசாரிகளுக்கு அருவருப்பைத் தந்தது. அவர்கள் நிறமான வந்தேறுகுடிகள் மீது குறைகளும், குற்றங்களும் கண்டுபிடித்தார்கள்.

தங்கள் கையில் ஆட்சி இருக்கும் துணிவில் அவர்கள் பல அடக்குமுறைகளைச் சட்டத்தின்மூலம் நிறைவேற்றினார்கள். அதை ஒவ்வொரு வெளிநாட்டவரும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் மெல்ல மெல்லக் கட்டளையாக, கட்டுப்பாடாக, வன்முறையாக உணர்ந்தனர். இடதுசாரிகள் தீப்பந்தங்களோடு அதற்கு எதிராக ஊர்வலம் போனார்கள். துண்டுப் பிரசுரங்கள் அடித்து வெளியிட்டார்கள். அவர்கள் குரல்கள் கிணற்றிற்குட் போடப்பட்ட கல்லாக, சமுதாயத்தைப் பாதிக்க மறுத்தது. மனங்கள் மரத்துப்போன மக்கள். அந்த மக்களால் உருவான சமுதாயம். அது இந்த அநீதியைப் பாராது கண்ணை மூடிக்கொண்டது. தேசியவாதம், இனவெறி என்பன கதைக்கப்படும்போது சிந்தனை மழுங்கி உணர்ச்சி மேலிடுகிறது. சிலவேளைகளில் தமது இருப்புக்கு அச்சுறுத்தல் என்கின்றபொழுது சமுதாய நீதி, அநீதி பற்றிக் கவலைப்படாமற் கண்ணை இறுக மூடிக்கொள்ளும் தனிமனிதர்களுக்குப் பஞ்சமில்லை. நோர்வேயின் மனிதம் நிறைந்த சமுதாயம் தன் பண்பை மெதுமெதுவாக இழந்தது. காலப்போக்கில் அது வேறு முகம் எடுத்திற்று. விகாரமாய்த் தோன்றிற்று.

விக்னேஸ் குடியிருந்த தொடர்வீட்டுப் பகுதியில் சிறிது காலத்தில் சோமாலிய நாட்டவன் ஒருவனும் அவனது குடும்பமும் வந்து குடியேறினார்கள். அதன்பின்பு அங்கே ஒரு குர்டிஸ்தான் குடும்பமும் வாழ வந்தது. பின்னான நாட்களில், அடிக்கடி வீடு விற்பதற்கான வழிகாட்டிப் பலகை பின்னேரங்களில் சந்தியிற் குந்தியிருக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்பது விக்னேசிற்குப் புரியத்தொடங்கியது. அதைப்பார்த்து மலைப்பு உண்டாகவில்லையென்றாலும் மகிழ்ச்சி காணாமற் போயிற்று. ஏன் இந்த மாற்றம் என்கின்ற நெருடலின் வலி நெஞ்சிற்குள். எங்கு வெளிநாட்டுக்காரர் அதிகம் வந்து குடியேறுகிறார்களோ அப்பகுதியில் இருந்து சுதேசிகள் சொல்லாமற் கொள்ளாமல் கழன்று விடுவதே வழக்கமாகிவிட்டது. இலங்கையிலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர்குடிகள் இருக்குமிடத்தில் வந்து குடியேறுவதை யாரும் வரவேற்பதில்லை. அதையும்மீறி வந்து குடியேறிவிட்டால் பின்பு புறுபுறுத்துப் புறுபுறுத்து அவர்களோடு குடியிருப்பார்கள். அதற்காகத் தங்கள் இருப்பிடத்தை விட்டு ஓடியதை அவன் பார்த்தது இல்லை. வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளோ அதற்கு எதிர்மாறாயின.

சுதேசிகளின் வெளியேற்றம் நவீன ‘கெத்தோ’க்களை அங்கங்கே உருவாக்கியது. மக்களைக் கட்டாயப்படுத்த முடியாதென வலதுசாரிகள் நழுவிக்கொள்ள, எந்த அதிகாரமும் இல்லாத இடதுசாரிகள் தாங்கள் செய்த பிழைக்கு இப்போது பிராயச்சித்தம் கிடையாது அவதிப்பட்டார்கள். ‘கெத்தோ’க்கள் மாத்திரம் குஸ்டரோகிகளின் குடியிருப்புப் போல அதிவேகத்திற் பல நாடுகளில் வளர்ந்துகொண்டே வந்தன. வெறுப்பில் உருவாகும் குடியிருப்புகள் ஆதிகாலம்தொட்டு இன்றுவரை தொடர்கதையாகிறது.

*

அன்று விக்னேசின் மகள் திரி அழுதவண்ணம் வீட்டிற்கு வந்தாள். வேலையால் வந்த விக்னேசிற்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. திரி சாதாரணமாய் எதற்கும் அழமாட்டாள். தபால்களை இப்போது அவன் எடுப்பது வழக்கமில்லை. அதைத் திரிதான் எடுப்பாள். எதனால் இந்த அழுகை என்பதோ, அதற்கான காரணம் என்னவென்பதோ விக்னேசிற்குப் புரியவில்லை. பாடசாலையில் ஏதும் நடந்திருக்க வேண்டும்; அல்லது தபாலில் ஏதாவது செய்தி வந்திருக்க வேண்டுமென அவன் எண்ணிக்கொண்டான். என்னவாக இருக்கும் என்பதைச் சரியாக அவனால் ஊகிக்க முடியவில்லை. திரி தொடர்ந்தும் அழுதாள்.

காரணம் சொல்லாமல் அழுவது, கட்டிப்பிடித்து ஒப்பாரி வைப்பது என்பன எங்கள் நாட்டில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சரக்காக இருக்கவேண்டும் என்பது அவன் எண்ணம். அதை இங்கு வளரும் பிள்ளைகளும் தத்தெடுத்துக் கொண்டமை இரக்கத்தைத் தின்று கோபத்தையே விக்னேசிற்கு உண்டுபண்ணியது. பிரச்சனையைச் சொல்லாமல் அழுவது புரிந்துணர்வை உண்டுபண்ணுவதில்லை. சிலருக்கு அதைப் பார்க்கப் பரிதாபம் உண்டாகும். விக்கினேசிற்குப் பச்சாத் தாபம் எழவில்லை. அதற்குப் பதிலாக மூக்கு நுனிவரை கோபம் வந்தது.

விக்னேஸ் கோபம் தணியாதவனாய் ‘உந்த அழுகைய விட்டிட்டு என்ன நடந்ததெண்டு சொல்லுபாப்பம். ஊர் பெண்டுகளாட்டம் விசயத்தைச் சொல்லாமல் அழுதுகொண்டு நிக்கிறாய். எங்க பழகினாய் உதை?’ என்று கோபத்தில் கத்தினான். அப்பாவின் கோபம் திரிக்கு இன்னும் அதிக கவலையைத் தந்தது. தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியைப் புரிந்துகொள்ளாது அப்பா கோபப்படுகிறாரே என்பது இன்னும் அதிக வெப்பியாரத்தை அவளுக்குள் தோற்றுவித்தது. ‘நீங்களும் இப்பிடிக் கோவப்படுகிறியளே அப்பா? அநியாயம் செய்யிறாங்கள் அப்பா. இனி நாங்கள் இங்க மரியாதையா வாழேலாது’ எனக் கூறியவள் காகிதத் துவாய் எடுத்து மூக்கைத் துடைத்துக் குப்பை வாளியில் அதைப் போட்டாள். என்ன கோபம் இருந்தாலும் குப்பை வாளியிற் காகிதத்தைப் போடுவதை ஒழுங்காகச் செய்வாள் திரி. ‘என்ன நடந்தது எண்டதை விபரமாச் சொல்லு திரி’ என்றான் விக்னேஸ் தணிந்த குரலில். ‘எனக்கு, அந்த சோமாலிக்காறிக்கு, குர்டிஸ்தான்காறிக்குப் பக்கத்தில இருக்கிற கூடாத ஸ்கூல்ல இடம் கிடைச்சிருக்குது. ஆனா நீனா உட்பட மற்றைய எல்லா நொஸ்குகளுக்கும் வேற வேற இடத்தில நல்ல ஸ்கூல்ல இடம் கிடைச்சிருக்கு. திட்டமிட்டுச் செய்யிறாங்கள் அப்பா. எங்களுக்கு பல நூர்மனைவிட (சுதேசிகளை அப்படித்தான் அழைப்பது) நல்ல மாக்ஸ் கிடைச்சும் பிரயோசனம் இல்ல. முடிவு செய்யிறவங்கள் நாங்கள் நூர்மனா இல்லையா எண்டுதான் மட்டும் பாக்கினம் அப்பா. எங்கட பெயரே நாங்கள் யார் எண்டதை எப்பவும் காட்டிக்கொடுக்குது.’ என்று கூறித் திரி தொடர்ந்தும் அழுதாள்.

விக்னேசுக்கு இப்போது எப்படி ஆறுதல் கூறுவது என்று புரியவில்லை. திரிக்குச் சுதேசிகளின் பெயரில் ஒன்றை வைத்திருக்கலாம். அப்படி வைத்திருந்தாலும் தமிழ் அடையாளம் விட்டுப் போகாத தனது பெயர் துருத்திக்கொண்டு பின்னால் நிற்பது அவனுக்குப் புரிந்தது.

அவர்கள் இப்போது சிலவற்றைச் சட்டமாக இயற்றிச் செய்கிறார்கள். பலவற்றை இயற்றாத சட்டமாய் நடைமுறை வாழ்வில் நிறைவேற்றுகிறார்கள். விக்னேஸ் வேறு வேலை செய்திருந்தால் இப்போது வேலை இல்லாது திண்டாடியிருக்க வேண்டும். அவன் மருத்துவம் சம்பந்தப்பட்ட வேலை செய்வதால் அதைத் தொடர்ந்தும் காப்பாற்றி வருகிறான். இது ஒரு புதிய வரலாற்றுக் காலம். இதில் எப்படி உயிர்வாழ்வது என்பது விடைகாண முடியாத வினாவாகலாம். வரலாறுகள் வசதிக்கு ஏற்ப மறக்கப்படுவது மனிதகுலத்தின் மரபாகப் போய்விட்டது. எது நடந்தாலும் ஊருக்கு அஞ்சி இனியும் பரதேசம் போவதற்குத் தான் தயாராக இல்லையென விக்னேஸ் முடிவு செய்தான்.

திரி மீண்டும் ஒரு காகிதத் துவாய் எடுத்து மூக்கைத் துடைத்துக் குப்பை வாளிக்குள் எறிந்தாள். ‘என்ன செய்யிறது திரி? எந்தக் கூப்பாடும் இனி இங்க சரிவராது. நாங்கள் கிடைக்கிறத வைச்சு திறமையா முன்னுக்கு வாறத்துக்கு வழியைப் பார்க்க வேண்டியதுதான்’ என்றான். ‘நாங்கள் எப்பிடி அப்பா திறமையா வரமுடியும்? படிப்பிக்க வாத்திமாரே இல்லாத ஸ்கூல்ல நாங்கள் படிச்சு எப்பிடி முன்னுக்கு வரமுடியும்? முழுக்க முழுக்க நாங்கள் இனிச் சுயமாத்தான் படிக்கவேணும். சரி நாங்கள் படிச்சாலும் மாக்ஸ் அவங்கள்தானே போடோணும் அப்பா? இங்க இனித் தொடர்ந்து இருந்தா எங்கட வாழ்க்கை வீணாகிறது நிச்சயம்’ என்றாள் அவள். சிறிது நேரம் யோசனையோடு நின்ற விக்னேஸ் வெறுப்போடு ‘எங்க இனி ஓடுவம்? எத்தினைதரம் ஓடுவம்? எல்லாமே வெறுத்துப்போச்சுது’ என்றான்.

‘உங்களுக்கு வெறுத்துப் போச்சுதப்பா. எங்களுக்கு இப்பதான் வாழ்க்கையே ஆரம்பமாகுது. நாங்கள் அமெரிக்காவுக்கு போயிட்டா என்ன?’ என்றாள் திரி ஆதங்கத்தோடு. ‘கொஞ்சம் சமாளிப்பம் அம்மா. அங்கயும் எப்பிடி அரசியல் மாறுமெண்டு தெரியாது. அதையும் பொறுத்திருந்துதானே பாக்கோணும்?’ என்றான் விக்னேஸ். ‘எப்பிடியெண்டாலும் அங்க பிரச்சனை வராதுதானே அப்பா?’ என்று கேட்டாள் திரி. ‘அதுக்கு ஒரு உத்தரவாதம் இல்லையம்மா. அங்கையும் ஐரோப்பிய வாரிசுகள்தானே இருக்கினம். அதைவிட யாரிட்ட ஆயுதமும் அதிகாரமும் இருக்குது எண்டதைப் பொறுத்துத்தான் நீதி அநீதி நிச்சயமாகும் எண்டது விளங்குதே? வெள்ளையள்தானே அமெரிக்காவிலும் ஆளுறவை. கறுப்பர் ஆட்சிக்கு வந்தது அதிசயம். அது தொடர்ந்து நடக்கும் எண்டதுக்கு ஒரு உத்தரவாதமும் கிடையாது. சட்டத்தை நடைமுறைப்படுத்திறது வெள்ளைப் பொலீஸ்தானே?’ என்றான் விக்னேஸ். ‘நீங்கள் ஏனப்பா என்னை நிறையப் பயப்படுத்துறியள்?’ என்றாள் திரி.

‘உன்னைப் பயப்படுத்துறதில்லை என்ர நோக்கம். நடந்த வரலாற்றைத்தான் சொன்னனான். தனக்கெண்டு வந்தா மனிசனுக்கு எந்தப் பொதுநீதியும் முக்கியமா இருக்காது. மனிதன் சிந்திக்கத் தெரிஞ்ச மிருகம். யார் கையில் அதிகாரமும், பதவியும், நவீன ஆயுதமும் இருக்குதோ அவைதான் மற்றவையின்ர தலைவிதியை நிர்ணயிப்பினம். அதில எங்களுக்கு நல்ல அனுபவம். அந்த மனிசருக்குச் சரியாக இருக்கிறது, உலகப் பொது நியதியாகவோ, பாவ புண்ணியத்திற்கு ஏற்றதாகவோ இருக்கோணும் எண்டில்ல’ என்றான் விக்னேஸ். ‘அப்பிடியெல்லாம் வரக்கூடாது அப்பா. இந்த நாட்டவர் பிழையைக் கெதியா உணர்ந்து திருந்திக்கொள்ள வேணும். அதுக்கு எல்லாருமாப் போராடவேணும். ஒரு உன்னதமான நாட்டிலும் இப்படி நடந்தது என்கின்ற அவமானம் ஒருபோதும் நோர்வேக்கு வரவே கூடாதப்பா’ என்றாள் திரி. ‘எல்லாருடைய விருப்பமும் அதுதான். இனிப் பதவியையும், அதிகாரத்தையும் வைச்சிருக்கிற மனிசர்கள் என்ன செய்யினம் எண்டுறதைப் பொறுத்திருந்துதான் பார்க்கோணும்;’ என்றான் விக்னேஸ்.

3.2 எரிப்பு

வெறுப்பு என்பது ஒரு சிறு புள்ளியாகப் பிறக்கிறது. அது பின்பு பனிப்பந்துபோல வழியில் கிடைப்பதைத் தின்று கொழுத்துப் பூதாகரமாகிவிடுகிறது. வலதுசாரிக் கடும்போக்காளரிடம் இருந்த வெறுப்பு என்னும் நஞ்சு மக்கள் என்னும் ஆற்றிற் கலந்து வேகமாகப் பரவத் தொடங்கியது. அதிதீவிரவாத வலதுசாரிகள் திரும்பத் திரும்பக் கூறிய பெரிய பெரிய பொய்களைச் சாதாரண மக்கள் பலமுறை கேட்டுக் கேட்டு உண்மையென நம்பத் தொடங்கினார்கள். அப்படி நம்பத் தொடங்கிய மக்கள் வெளிநாட்டவரை எப்படி நடத்த வேண்டுமென அதிதீவிர வலதுசாரிகள் கூறுகிறார்களோ அதையும் நியாயமென ஏற்கத்தொடங்கினார்கள். பல அநியாயங்கள் நியாயமாகச் சித்தரிக்கப்பட்டன. அதை எதிர்த்தவர்கள் எதிரிகளாக, காட்டிக்கொடுப்பவர்களாக அடையாளம் காணப்பட்டனர். சில சுதேசிகள் அநியாயத்திற்கு எதிராகப் போராட நினைத்தாலும், தாங்கள் அடையாளப்படுத்தப்பட்டு முத்திரை குத்தப்படுவதால் தமக்கு மாத்திரமன்றித் தமது பிள்ளைகள், உறவினர் என்போருக்கும் துன்பம் ஏற்படும் என்பதை நினைத்து மௌனமானார்கள். அப்படி இருந்தும் எதையும் பொருட்படுத்தாமற் சிலர் போராட முன்வந்த அந்தச் சம்பவம் விரைவில் நடந்தது.

அரசின் மனநிலைக்கு ஏற்பத்தான் மக்களும் சட்டத்தின்மேல் வைத்திருக்கும் மதிப்பை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். அரசு மற்றைய இனங்களை இரண்டாந்தரமாகப் பார்த்தபோது மக்களில் ஒரு பகுதி அவர்கள் மீது வன்முறையைப் பாவிப்பதில் நியாயம் உண்டு என்கின்ற முடிவுக்கு வருகிறார்கள். ஐரோப்பா முழுவதிலும் அந்த மாற்றம், மக்களின் மனதைக் கறையான் அரிப்பதுபோல அரிக்கத் தொடங்கியது. அவ்வப்போது அங்கும் இங்குமாக நிறமனிதர்கள் மீது தாக்குதல் நடைபெறத் தொடங்கின. கிழக்கு ஐரோப்பாவில் முதலில் அவ்வகையான தாக்குதல்கள் நடக்கத் தொடங்கின. நிறமாய் இருந்தால் அவர்கள் எந்த மதம் அல்லது இனம் என்கின்ற வேறுபாடு இல்லாது தாக்கப்பட்டார்கள். இஸ்லாமியரின் அடையாளம் அவர்களைக் காணும் இடமெல்லாம் தாக்குதலுக்கோ அல்லது அவமானத்திற்கோ உள்ளாகும் வகையில் கிழக்கு ஐரோப்பாவில் நிலைமை விரைவாக மாறியது. சில முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை வேண்டாம் என்று தூரத்தே எறிந்தபோதும், தோலின் நிறம் அவர்களைக் காட்டிக்கொடுத்தது. கிழக்கு ஐரோப்பாவில் நடந்து வந்த நிகழ்வுகள் மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த, நிறமான வந்தேறுகுடிகளுக்கு அதிகக் கவலையையும், பயத்தையும் தந்தது. தமது வாழ்க்கை வருங்காலத்தில் எப்படி அமையப் போகின்றது என்கின்ற கேள்வி அவர்களை உலுப்பியது. வேர்கள் அறுத்து வேறுதேசம் வந்த கூட்டத்தை வெறுப்புப் பலி கேட்டபோது அவர்கள் துடித்துப் போய்விட்டார்கள். வாழ்வதற்கு வேறு வழி தெரியாது திகைத்தனர்.

*

அன்று வெள்ளிக்கிழமை. இரவு பத்து மணி இருக்கும். பதினான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் முகத்தை முழுமையாக மறைத்தவண்ணம் மூன்று பிளாஸ்ரிக் பைகளிற் சிவப்புநிறப் பெயின்ரோடு அந்தக் குறிப்பிட்ட ஒழுங்கைக்குட் சென்றான். அது தனித்தனி வீடுகள் கொண்ட ஒஸ்லோவின் ஒரு குடியிருப்புப் பகுதி. அவனுக்கு எந்தெந்த வீடுகளில் யார் யார் குடியிருக்கிறார்கள் என்பது நன்கு தெரியும். அவன் பகலில் செய்தித்தாள்கள் வினியோகிக்கும் வேலை செய்பவன். அதன் வசதியிற் பெற்ற அனுபவம் அவனுக்கு வீடுகளை அடையாளம் காண்பதில் உதவிசெய்தது. அவன் அடையாளம் கண்ட வீடுகளுக்கு முன்பாக அந்த பெயின்ற் பொதிகளைப் போட்டு உடைத்தான். பின்பு எதுவும் நடவாதது போல அவ்விடத்தை விட்டு வேகமாக நகர்ந்து சென்றான். பலர் அந்த அடையாளப்படுத்தலைக் காணவில்லை. கண்டவர்கள் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. தெருவிற் கிடக்கும் அடையாளம் பற்றி வீட்டில் இருந்து ஆராய்ச்சி பண்ணுவது சிலவேளைகளிற் பைத்தியக்காரத்தனமாய் இருக்கலாம். அடையாளங்கள் பல தற்செயலானவை அல்ல என்பதைச் சிலர் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

இரவு நான்கு மணி இருக்கும். அந்த ‘யூ’ வடிவ ஒழுங்கையில் இருந்த வீடுகள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன. அதன் ஒரு முகப்பில் அந்த கறுப்புநிற ‘பென்ஸ்’ வான் வந்து நின்றது. அதில் இருந்து மூவர் மெதுவாக இறங்கி வந்தார்கள். தங்களை அடையாளம் கண்டுவிடாதவாறு அவர்கள் முகத்தை மறைக்கும் தொப்பி அணிந்திருந்தார்கள். மூன்று பெரிய கொள்கலன்களில் எதையோ தூக்க முடியாது தூக்கிக்கொண்டு அவர்கள் வந்தார்கள். பின்பு அந்த ‘யூ’ வடிவ ஒழுங்கையில் இறங்கித் தெருவை அவதானமாய்ப் பார்த்தவண்ணம் நடந்து சென்றார்கள்.

முதலாவது சிவப்புமை அடையாளம் கண்டதும் அவர்களில் ஒருவனின் நடை தடைப்பட்டது. அவன் தனது கையில் இருந்த ஒரு கொள்கலனை வைத்திருக்க மீதிக்கலன்களோடு மற்றவர்கள் மேற்கொண்டு அந்த ஒழுங்கையில் நடந்தனர்.

முதலாவது வீட்டில் நின்றவன் சிறிது நேரம் அந்த வீட்டில் ஏதாவது அசுமாத்தம் உள்ளதாவென உற்று நோக்கினான். அப்பிடி எதுவும் தென்படவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு அந்த வீட்டை அண்மித்தான். பின்பு மெதுவாக அந்தக் கொள்கலனைத் திறந்து ஏதோ ஒரு திரவத்தை அவ்வீட்டைச் சுற்றி அதன் சுவர்கள் நனையுமாறு ஊற்றியவண்ணம் வந்தான். பின்பு அவன் ‘லைற்றர்’ ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு, தனது மணிக்கட்டைப் பார்த்தவண்ணம், நெருப்பில் நிற்கும் அவஸ்தையோடு அங்கு நின்றான். சிறிது நேரத்தில் திருப்திப்பட்டவனாய் லைற்றரைத் தட்டி ஒரு கடதாசியில் கொளுத்தி அதைச் சுவரோரம் எறிந்தான். பின்பு ஓட்டமும் நடையுமாக அவ்விடத்தை விட்டுச் சென்றான்.

அவன் ஓட்டமும் நடையுமாகத் தமது வாகனத்தை நோக்கிப் போனான். அப்படிப் போகும்போது இன்னும் இருவீடுகளில் இருந்து தீச்சுவாலைகளினால் உண்டான வெளிச்சத்தை அவனால் அவதானிக்க முடிந்தது. அவன் தமது திட்டம் நிறைவேறிய திருப்தியோடு வாகனத்தை நோக்கி விரைவாக நடந்தான். தன்னோடு கூடவந்தவர்கள் மறுகரையால் அங்கே வருவார்கள் என்பது அவனுக்கு நன்கு தெரியும். அவன் வாகனத்தை அடைந்தபோது மற்றவர்களும் மறுபாதையால் அங்கு வந்துவிட்டார்கள். வாகனத்தில் எல்லோரும் ஏறியவுடன் அது வெகுவிரைவாக அவ்விடத்தை விட்டுப் பாய்ந்து சென்றது.

ஊசி நுழையத் திண்டாடும் தோலின் துவாரத்திலும் வாய்வைத்து வெப்பத்தை உறிஞ்சும் நுளம்பான குளிர். இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தை முறியடித்து வாழ்வதற்கு வெப்பம் சுவர்கள் ஊடாக வெளியே போகாத அடைப்பான வீடுகள். அதை இவர்கள் வீடு கட்டும்போது நன்கு கவனித்துக்கொள்வார்கள். காலம் காலமாகக் கடத்தப்பட்ட அறிவு. இங்கு எப்போதும் குளிரைத் தாங்கவேண்டும் என்கின்ற நோக்கோடு வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்கள் தேர்ந்தெடுக்கப்படும். அப்போது நெருப்பு இலகுவில் தின்னும் பொருட்கள் அதில் அதிகமாக வந்து சேர்ந்துவிடும். இந்த வீடுகளில் குளிருக்கு இருக்கும் பாதுகாப்பு, தீயேற்பட்டால் அதற்கு மாறான படுகுழியாகும். இந்த வீடுகள் மிகவிரைவில் தீப்பற்றிக் கொள்வதோடு நச்சு வாயுக்கள் நிறைந்த ஒரு பொறியாகவே உருவாகிவிடும். அதற்குள் அகப்படும் கணங்கள் புரியமுதல் ஆள் மயங்கிவிடும் நிலைவரும்.

இந்த வீடுகளில் தீப்பற்றும்போது சில நிமிடங்களே வாழ்விற்கும் சாவிற்குமான சந்தர்ப்பத்தைத் தரும் நேரமாகிறது. பலவேளைகளிற் தீயணைப்புப்படை வரமுதலே வீடு பெருமளவிற் தீப்பற்றிவிடும். பின்பு தீயணைப்புப்படை தீயை அணைத்து முடிக்கும். இறுதியில் வெறும் கரியே மிஞ்சி இருக்கும். இன்று மூன்று வீட்டில் தீப்பற்றிக்கொண்டது. அந்த மூன்று வீடுகளும் வெளிநாட்டவருக்குச் சொந்தமானவை. அதற்கான அடையாளத்தையே மாலையில் அந்தச் சிறுவன் இட்டுச்சென்றான். அது ஒரு திட்டமிட்ட அடையாளமிடும் வேலை என்பது இப்போது புலனாயிற்று.

வீடுகள் தீப்பற்றிக்கொண்ட தகவல் தீயணைப்புப் படைக்குக் கிடைத்துவிட்டது. அவர்கள் பெரும் சத்தத்துடன் வருவது கேட்டது. அதற்கிடையில் அந்த மூன்று வீடுகளும் பாரிய அளவில் தீப்பற்றிவிட்டன. ஒரு வீட்டில் குடியிருந்த சோமாலிய நாட்டுக்காரர்கள் வெளியே வந்துவிட்டார்கள். மூன்று பிள்ளைகளும் தாய் தந்தையுமாக மொத்தம் அவர்கள் ஐந்து உருப்படி. அவர்கள் தங்களது காருக்குள் ஏறி இருந்துகொண்டார்கள். எரியும் வீட்டிற்கு எதுவும் செய்ய முடியாதவர்களாய் அவர்கள் நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள்.

அடுத்த வீட்டிற் குடியிருந்த தமிழ்க் குடும்பமும் தமது இரண்டு பிள்ளைகளோடு வெளியே வந்துவிட்டார்கள். தமிழர்கள் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இங்கு பெற்றுக்கொள்வது மிக அரிதாகிவிட்டது. அவர்களும் சுதேசிகளைப் போல இரண்டு பிள்ளைகளுக்கு மேல் தங்களால் சமாளிக்க முடியாது என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இங்கு தாய் தகப்பன் மட்டுமே பிள்ளைக்கு எல்லாம் என்றாகிவிடுகிறது. மற்றைய உறவுகள் புகைப்படத்திலும், வீடியோக்களிலும் மாத்திரமே பதியப்பட்டு இருக்கின்றனர். மிஞ்சிப்போனால் அவர்கள் குரல்களைக் கேட்கலாம். சிலவீடுகளில் வீடியோ தொலையேசியிற் பார்க்கலாம். பக்கத்தில் இருந்து உதவிசெய்ய முடியாத தூரம் அந்த உறவுகளைப் பிரித்து நின்றது. தனித்து இரண்டு பிள்ளைகளைச் சமாளிப்பதே பெரிய பொறுப்பாகிவிடுகிறது. ஆணும் பெண்ணும் வேலைசெய்ய வேண்டிய கட்டாயம் மேற்குலகெங்கும். நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் இப்படிக் குடும்பத்தைச் சுருக்கினார்கள். ஈழத்தில் தமிழர் யுத்தத்தில் அழிந்தனர். இன்னும் அகதிகளாய் வெளியேறுகிறார்கள். யுத்தம் நடந்தபோதுதான் இலங்கையில் அதீத இனப்பெருக்கம் ஏற்பட்டது. தமிழர்கள் மிகச்சிறிய சிறுபான்மையாவது சட்டென இலங்கையில் நடந்தேறிவிட்டது. வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் சுயநலம்பிடித்த கிணற்றுத் தவளைகள். சொந்த நாட்டில் தமது இனத்தின் இருப்பை நலியவிட்டு, வந்த நாட்டைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். நோர்வேத் தமிழர், கனடாத் தமிழர், பிரஞ்சுத் தமிழர் என்கின்ற பறங்கிப் பெருமையிற் பூரிக்கின்றனர். இப்போது தமிழர்கள் பரவலாகத் தங்கள் கலாசாரத்தைக் கட்டிக்கொண்டு அழுவதிலும்பார்க்க இசைவாக்கம் அடைவதே உன்னதம் என்பதை அறிந்து செயற்பட்டாலும், அவர்களின் தோலும் பெயரும் எப்போதும் காட்டிக்கொடுக்கிறது. அவர்களின் பிள்ளைகள் தமிழை மறந்த மொறீசியஸ் மக்களாகத் தமிழ்ப் பெயருடைய கறுப்புப் பறங்கியரானார்கள் என்பது விக்னேசின் எண்ணம்.

அந்தத் தமிழ்க் குடும்பமும் குளிருக்கு அஞ்சித் தமது காரில் ஏறினார்கள். பின்பு அவர்கள் அந்தக் காரைத் தமது எரியும் வீட்டில் இருந்து சற்றுத் தூரம் தள்ளி நிறுத்தினார்கள். அவர்கள் காருக்குள் இருந்து திகைப்புடனே எரியும் வீட்டைப் பார்த்தார்கள். தீயணைப்புப்படை விரைவாக வரவில்லையே என்பது அவர்கள் ஆதங்கமாகிற்று. வீடு எரிந்த போது எல்லா விதிமுறைகளையும் மீறி அவர்கள் தங்கள் போட்டோ அல்பங்கள், நகைகள் போன்ற சில பொருட்களை எடுத்து வந்துவிட்டார்கள். எரிந்தால் மீளப்பெறமுடியாத பொக்கிசங்கள் அவை என்பது உண்மையே. வீடு எரியும்போது எப்படி நடக்க வேண்டும் என்கின்ற முறைக்கு அது எதிரானதும் மெய்யே.

மூன்றாவது வீட்டில் இருந்து எவரும் வெளியே வராதது எல்லோருக்கும் வியப்பைத் தந்தது. ஆட்கள் நெருங்க முடியாத அளவிற்கு நெருப்பு அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டதில் எவரும் உள்ளே போய்ப் பார்ப்பதற்கும் முயற்சிக்கவில்லை. அந்த வீட்டில் வடஇந்தியாவைச் சார்ந்த ஒரு குடும்பம் குடியிருந்தது. அவர்களின் தாய் தந்தையரும் அங்கு வசித்து வந்தார்கள். அவர்கள் அடிக்கடி இந்தியாவிற்குப் போவதும் திரும்பி வருவதுமாய் இருப்பதில், வீட்டில் சிலவேளை ஆட்கள் இருப்பதில்லை. இன்று சிலவேளை ஆட்கள் இல்லையா என்கின்ற எண்ணம் பலருக்கும் எழுந்தது.

பக்கத்து வீட்டிற் குடியிருந்த ‘வீடார்’ என்பவன் நித்திரைக் கலக்கத்தோடு அங்கு வந்து நின்றான். அவனுக்குப் பக்கத்து வீட்டிற் குடியிருக்கும் லார்சும் வந்து நின்று வேடிக்கை பார்த்தான். பின்பு வீடாரைப் பார்த்த அவன் ‘இந்த வீட்டில ஆட்கள் இல்லையா வீடார்?’ என்று கேட்டான். ‘தெரியல்ல. வீட்டில் ஆட்கள் இல்லாவிட்டால் தபால் எடுக்கச்சொல்லி இருப்பார்கள். அப்பிடி ஒன்றும் எனக்கு சொல்லவில்லையே? கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்று வரும்போது தாத்தாக்காரனைக் கண்டேன். பின்பு வேறு எங்கேயாவது போய்விட்டார்களோ தெரியவில்லை. நாங்கள் இப்பொழுது வீட்டிற்குக் கிட்டே நெருங்கமுடியாது. இனித் தீயணைப்புப் படை வந்துதான் பார்த்துச் சொல்லவேண்டும்’ என்றான்.

அவர்கள் அப்படிக் கதைத்தவண்ணம் நிற்கும்போதே தீயணைப்புப் படையினர் அவசர அவசரமாக அலறியவண்ணம் வந்தார்கள். அந்த வாகனங்கள் அதே அவசரத்தோடு ஒழுங்கைக்குட் புகுந்தன. பின்பு ஒவ்வொரு எரியும் வீட்டிற்கும் ஒவ்வொரு வாகனம் முதலிற் சென்றது. அவர்கள் தமது வாகனத்தில் இருந்தும், தெருக்குழாயில் இருந்தும் நீரை எரியும் வீட்டைச் சுற்றி முதலில் பீச்சியடித்து அவற்றை நனைத்தனர். பின்பு எரியும் வீடுகளை நோக்கி அடிக்கத் தொடங்கினார்கள்.

தீயணைப்புப் படைக்குப் பின்னால் பொலீசும் அம்புலன்சும் தமது ஒலங்களுடன் வந்தன. சனங்கள் விடுப்புப் பார்ப்பதற்காய் ஓடு சுமக்கும் நத்தைகளைப் போன்று ஜக்கெற்றுக்குள்ளால் தலைகளை நீட்டிய வண்ணம் அங்கு கூடிவிட்டார்கள். தீயணைப் புப்படை தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததையடுத்து, அந்த வடஇந்தியரின் வீட்டைச் சோதனை செய்தார்கள். சிறிது நேரத்தில் இரு பிணங்கள் காத்திருந்த அம்புலன்சில் ஏற்றப்பட்டன.

மூன்று வீடுகள் ஒரே நேரத்தில் சொல்லி வைத்தது போல் எரிந்தது அங்கிருந்த மக்களுக்கு இயற்கையாகவே சந்தேகத்தை உண்டுபண்ணியது. பொலீஸாருக்கும் அது பார்த்தவுடனேயே புரிந்திற்று. தீயணைப்புப் படை முழுமையாகத் தமது வேலையை முடித்தும் அந்த வீடுகளைச் சுற்றிப் பொலீஸார் தடுப்பு நாடாக்களை இழுக்கத் தொடங்கினார்கள். அதன் பின்பும் நெருப்பின் சூடு ஆறும்வரை பொலீஸார் காத்திருக்க வேண்டும். சூடாறிய பின்புதான் அவர்கள் தங்களது பிரிசோதனைகளை நடத்தி, இந்தத் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்கின்ற காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள். இங்கு மின்சாரக் கோளாறினால் அல்லது வேறு சில காரணங்களாற் தவறுதலாக வீடுகளில் தீபற்றிக்கொள்வதுண்டு. அதைவிடத் திட்டமிட்டு விட்டிற்குத் தீவைத்து, காப்புறுதிப் பணம் பெறுபவர்களும் உண்டு. மற்றவரின் சொத்துக்களைத் தீயிட்டு அழிக்கும் சில விசமிகளாலும் பல வீடுகள், தேவாலயங்கள் போன்றவை தீபற்றிக்கொள்வதும் உண்டு. ஓரு காலத்தில் சாத்தானுக்கு ஆதரவானவர்கள் தேவாலயத்திற்குத் தீவைத்து மகிழ்ந்தனர். இந்தத் தீ எதனால் எற்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பதே தற்போது பொலீஸாரின் முக்கிய வேலையாகும். அவர்கள் அதன்படி ஒழுகுவார்களா என்கின்ற சந்தேகம் சிலருக்கு இருந்தது.