5.83x8.ma-frontpng3.3 ஆர்ப்பாட்டம்

சில வாரங்கள் கழித்தே பொலீஸ் அந்தப் பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டியது. அவர்கள் இதை ஏதோ காரணங்களுக்காகக் கடத்த முயல்கிறார்கள் என்பதாய்ச் சில பத்திரிகையாளர்கள் நோண்டத் தொடங்கிய பின்பே அந்தப் பத்திரிகையாளர் மகாநாட்டை வேண்டாவெறுப்பாக ஓஸ்லோவிற் கூட்டினார்கள். பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு வழக்கத்தைவிட அதிகமாக நிருபர்கள் வந்து காத்திருந்தனர். எல்லோருக்கும் மூன்று வெளிநாட்டவரின் வீடுகள் ஒரே நேரத்தில்; எப்படி ஒரு குறிப்பிட்ட ஒழுங்கையில் தீப்பற்றும் என்கின்ற வினாவிற்கு விடை வேண்டும் என்பதான ஆர்வம். அத்தோடு இது வெளிநாட்டவருக்கு எதிராகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்ட வன்முறை என்பதைப் பொலீஸார் ஒத்துக் கொள்கிறார்களா? இதற்கு விலையாக இரண்டு உயிர்கள் பலியெடுக்கப்பட்டு இருக்கிறதே, அதற்கு என்ன பதில் கிடைக்கிறது என்கின்ற மனிதம் தேடுவதில் அவர்கள் ஈடுபட்டார்கள்.

பொலீஸார் தங்களின் விசாரணைப்படி அந்த மூன்று வீடுகளும் திட்டமிட்டே தீக்கிரையாக்கப்பட்டு இருப்பதாயும், அது ஒரு பாரிய சமுகக் குற்றம் என்றும், அதற்கான குற்றவாளிகளைத் தாங்கள் தேடுவதாயும் வழமைபோலக் கூறினார்கள்.

பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டுக்காரர்களே என்கின்ற கேள்வி வந்தபோது, இது இனரீதியான எண்ணத்துடன் செய்யப்பட்ட தாக்குதல்தான் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது என்றும், அதற்கான விடையை விசாரணையின் முடிவில்தான் கூறமுடியும் என்றும் சமாதானம் சொன்னார்கள். சிலர் இந்தப் பதில்களைக் கேட்டுப் பொலீஸார் மழுப்புகிறார்களோ என்று எண்ணினார்கள்.

தாங்கள் இன்னும் தீவிர வலதுசாரிகளிடம் சோரம் போகவில்லை என்பதை நிருபிப்பதுபோல அடுத்தநாட் பத்திரிகைகள், அந்தச் சம்பவத்திற்கு இனரீதியான வெறுப்பே காரணம் என்பதாயும், இனியாவது இப்படியான தாக்குதல்கள் இடம்பெறாது நாட்டையும், அதன் பெயரையும் அரசாங்கம் காப்பாற்றவேண்டும் என்றும் எழுதியிருந்ததோடு, இப்படியான மாற்றத்திற்கு அதிதீவிர வலதுசாரிகளின் அரசியலும் ஒரு தூண்டுகோல் ஆகும் எனக் குற்றம் சாட்டினார்கள். இந்தக் குற்றச்சாட்டு அதிதீவிரவலதுசாரி அரசாங்கத்திற்கு அறவே பிடிக்கவில்லை. இப்போது ஐரோப்பா இருக்கும் நிலையில், பத்திரிகைகளும், மற்றைய ஊடகங்களும் பொறுப்பான முறையிற் கருத்துகளை வெளியிடவேண்டும் என்றும், அதைவிடுத்து இப்படிப் பொறுப்பற்ற முறையிற் கருத்துகளை வெளியிட்டால், தாங்கள் பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய சட்டங்களை இனிவரும் காலங்களில் இறுக்கவேண்டி வரும் எனவும் அது எச்சரித்தது.

அந்த எச்சரிக்கையைப் பல ஊடகங்கள் ஆபத்தென்று தெரிந்தும் தங்களுக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டன. இந்த ஊடகங்களே சிலவேளைகளில் வெளிநாட்டவர்களால் ஏற்படும் சிறிய பிரச்சனையைப் பூதாகாரப்படுத்திப் பணம் சம்பாதித்த காலம் உண்டு. இன்று தாங்களே அந்த மருந்தைச் சுவைக்கவேண்டி வந்தபோது, அவர்களால் அதைத் தாங்க முடியவில்லை. பத்திரிகையாளரின் இந்த எதிர்ப்பு ஒருவகையில் நன்மை பயக்கும் என்பது பொதுவான கருத்தாயிற்று. ஒரு நாட்டின் ஜனநாயகம் செயற்படுவதற்குப் பலமான எதிர்க்கட்சி வேண்டும். எதிர்க்கட்சி நலிந்து போய்க்கிடக்கும் ஒரு நாட்டில் ஆகக்குறைந்தது பலமான, நேர்மையான ஊடகங்களாவது இருக்கவேண்டும். இரண்டும் இல்லாத ஒரு நாடு ஜனநாயகத்தைப் பெயருக்கு வைத்திருந்தாலும் நடைமுறையிற் சர்வாதிகாரத்திலேயே மிதக்கும். அப்படிப் பலநாடுகள் மிதந்திருக்கின்றன. இந்த நாடும் அப்படியான ஒரு அவலநிலைக்குட் சென்றுவிடாதிருக்க இனியாவது ஊடகங்கள் விழிப்பாக இருக்கும் என்பதாய்ப் பலருக்கும் அன்று ஒரு சிறு நம்பிக்கை பிறந்தது.

பொலீஸ் அதை ஒரு இனவாதத் தாக்குதலென ஒப்புக்கொண்டதும், ஊடகங்களும் அதை ஆமோதித்துச் செய்தி பரப்பியதும், ஓஸ்லோவிற் பெருங் கொந்தளிப்பை உண்டுபண்ணியது.

அந்தக் கொந்தளிப்பை வெளிப்படுத்தும் விதமாக வெளிநாட்டவர்கள், இடதுசாரிகள், முற்போக்கு வலதுசாரிகள், சுதேசிகளெனப் பலரும் ஒரு மாபெரும் ஊர்வலத்திற்கு ஒழுங்கு செய்தார்கள். அப்படி ஒழுங்கு செய்யப்பட்ட ஊர்வலத்தை இடதுசாரிக் கட்சியில் இருப்பவர் தலைமைதாங்கிச் செல்வதாகிற்று. அவர் ஒரு வெளிநாட்டுப் பாரம்பரியத்தில் வந்த இரண்டாவது பரம்பரையைச் சார்ந்தவர். கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களோடு அதிகமான மாற்றுக் கட்சியினரும், அதன் வெளிநாட்டுப் பாரம்பரியத்தில் வந்தவர்களும், சில சுதேசிகளும் கலந்து கொள்ள வருவதாய்த் தகவல் வந்திற்று. அந்த ஊர்வலம் மத்திய புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட ஆயுத்தங்கள் செய்யப்பட்டன. இனவாதத்திற்கு எதிரான இடதுசாரி இளைஞர்கள் தாங்களும் அந்தக் கூட்டத்தில் பங்குபெறவேண்டும் என்று வாதாடினார்கள். அப்படி அவர்கள் வந்தால் இந்தக் கூட்டத்தை நவநாஜிக்கள் எப்படியாவது குழப்புவார்கள் என்பதை கூறிக் கூட்டத்தை ஓழுங்கு செய்பவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியதாகிற்று. இனவாதத்திற்கு எதிரான இடதுசாரி இளைஞர்கள் தங்களை ‘ப்ளிற்ஸ் (Blitz)’ என்று அழைப்பார்கள். இவர்களது அனேக கூட்டங்களும், ஊர்வலங்களும், வன்முறையில் முடிந்த வரலாறுகள் உண்டு. அவர்களும் இந்த ஊர்வலத்தில் வரவேண்டும் என்பதை யாராலும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. நல்ல எண்ணம் அவர்களிடம் இருந்தாலும் அவர்கள்மேற் பூசப்பட்ட சாயம் அதற்குத் தடையாகக் குறுக்கே நின்றது. நல்ல எண்ணங்களையும் வன்முறை கெடுத்துவிடும் என்பதற்கு அவர்கள் நல்ல உதாரணமாகினர்.

வரவேண்டாம் என்பதையும் மீறித் தன்னிச்சையாக ‘ப்ளிற்ஸ்’ இல் இருப்பவர்கள் வந்துவிடலாம். அப்படிச் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அப்படி வரும்போது அவர்களை நவநாஜிகள் பார்த்துவிட்டால், கைகலப்பு எற்படலாம் என்கின்ற கவலை அந்த ஊர்வலத்தை ஒழுங்கு செய்த பலரையும் தொற்றிக்கொண்டது.

அன்று வழக்கத்துக்கு மாறாக அதிகமான பொலீஸாரின் நடமாட்டம். வழமையாக இப்படியான ஊர்வலங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளோ பொலீஸின் நடமாட்டமோ இருப்பது கிடையாது. அன்று அதன் தார்ப்பரியம் வெகுவாக மாறிப் போயிற்று. நவநாஜிகள் இந்த ஊர்வலத்திற்கு எதிராக அணிதிரளலாம் என்கின்ற ஐயம் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு உண்டு. அதை முறியடிப்பதற்காகவே இத்தகைய பாதுகாப்பு எற்பாடு நடைபெறுகிறது என்கின்ற சமாதானம் எல்லாரையும் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்தது. அது ஒருவிதப் பாதுகாப்பு உணர்வையும் தந்தது.

ஊர்வலம் பிற்பகல் ஐந்து மணிக்கு மத்திய புகையிரத நிலையத்தில் தொடங்கி ‘கால்யோகன்ஸ்காத்தா’வால் (ஒஸ்லோவில் அரசமாளிகைக்கு செல்லும் பிரதான பாதை) செல்வதாக கூறப்படிருந்தது. பின்பு பாராளுமன்றத்தடியில் கூட்டம் நடைபெற்று அங்கு மகஜர் கையளிக்கப்படும் என்பதாகவும் தகவல் வந்தது.

எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கூட்டம் அன்று கூடியது. எல்லோரும் தீப்பந்தங்களோடு தயாராக நின்றனர். நவநாஜிகளோ அல்லது வேறு அதிதீவிர தேசியவாதிகளோ இடையில் வேண்டுமென்று ஊர்வலத்தைக் குழப்பலாம். அது பின்பு கலகமாக உருக்கொள்ளலாம். இந்தப் பயம் எருமைமாடுபோல் வழியை அடைத்தவண்ணம் நிற்பதான உணர்விற் கூட்டத்தை ஒழுங்கமைத்தோர் பலர் அவஸ்தைப் பட்டார்கள்.

மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும், கிழக்குப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்த வெளியில் மக்கள் வந்து குவியத் தொடங்கினார்கள். நேரம் நான்கு ஐம்பத்தி ஐந்தை அடையவும் பலரும் தங்கள் பந்தங்களைக் கொழுத்தினர். எதற்காக இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது, அதில் அமைதியைக் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதுபற்றி ஒரு சிறிய உரைக்குப் பின்பு ஊர்வலம் நகரத்தொடங்கியது. மக்கள் பயப்பட்டது போல ஆரம்பத்தில் எதுவும் நடவாதது அவர்களுக்கு நிம்மதியைத் தந்தது.

ஊர்வலம் நகர்ந்து பாராளுமன்றத்தை அடைவதற்குச் சற்றுத் தொலைவு இருக்கும்போதுதான் பொலீஸாரின் அந்த அணிவகுப்பு பலருக்குத் தெரிந்தது. அவர்களுக்குச் சுனாமி மலையேறி வந்ததான திகைப்பு. அந்த வியூகம் பாராளுமன்றச் சுரங்கநிலையத்தைத் தாண்டப் பரிபூரணமாகத் தெரிந்தது. ஏன் எதற்கு இந்த வியூகம் என்பது புரியாது பலர் விழித்தனர். அது அவர்களுக்குப் பயம்கலந்த திகைப்பை உண்டுபண்ணியது. ஒரு அமைதியான ஊர்வலத்தின் வழியை மறித்தவண்ணம் எதற்காக இவ்வளவு பொலீஸார் நிற்கிறார்கள் என்பது பலரையும் பயமுறுத்தியது. நடக்கக்கூடாதது நடந்துவிடுமோ என்கின்ற கலக்கம் பலரிடம் தோன்றியது. அமைதியான நாட்டின் மறுமுகம் என்னவென்பது எவருக்கும் தெரியாது. அந்தத் தெரியாத இருட்டுக் குகைக்குள் நுழையப்போவதான அந்தரத்தில் அவர்களுக்கு மூச்சுமுட்டியது.

பொலீஸார் மிகவும் பலமான ஒரு தடையை அவர்கள் போகவேண்டிய வழியை மறித்து உருவாக்கி வைத்திருந்தனர். பொலீஸாரின் அப்படியான வியூகம் அன்று பலரையும் அதிசயப்பட வைத்தது. முதலிற் கிட்டத்தட்ட ஐம்பது பொலீஸார் இறுக்கமான நிரையாக தங்களை ஒருவரும் தாண்டிப் போகாதவாறு பாதையை மறித்தவண்ணம் நின்றார்கள். அடுத்ததாக அவர்களின் பின்னால் இன்னும் ஒரு முப்பது பொலீஸார் இரண்டாவது வேலியாக அங்கே நின்றார்கள். அதைவிட இன்னும் இருபத்திநான்கு பொலீஸார் மூன்றாவது வேலியாக அதற்குப் பின்பு நின்றார்கள். அதைவிட இன்னும் இருபது பொலீஸார் முன்றாவது வேலிக்குப் பின்பு நான்காவது வேலியும் அமைத்து நிரையாகி நின்றனர். அத்தோடும் அவர்கள் வியூகம் முடியவில்லை. அதன்பின்னே பத்துக் குதிரைகள்மீது பொலீஸார் அசைக்கமுடியா, அஞ்சத்தக்க மிருக மதில் கட்டினர். அதன்பின்பும் எட்டுப் பொலீஸ் வான்கள் அங்கே ஒரு சீனச்சுவரை உருவாக்கின. அதைவிட அங்குமிங்குமாகப் பல பொலீஸார் கடமையில் ஈடுபட்டனர். சில பொலீஸார் சிவிலில் பணியாற்றினர். என்றுமே கண்டிராத மாபெரும் பாதுகாப்பு அரண்கள் அங்கு அமைக்கப்பட்டு, ஊர்வலத்தின் வழி மறிக்கப்பட்டது. அது ஓடிவரும் ஆற்றை மறித்துக் குறுக்கே கட்டிய பேரணையாக மக்கள் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தத் தயாரானது.

பத்துப் பொலீஸார் இடக்கைப் பக்கமாக இருந்த ஒழுங்கைக்குட் கிட்டத்தட்ட இருபது நவநாஜிக்களை மறித்து வைத்திருந்தனர். இந்த இருபது நாஜிகளுக்காகவா இப்படிப்பட்ட பிரமாண்டமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்பது ஊர்வலத்தில் வந்தவர்களுக்குப் புரியவில்லை. இதன் உள்நோக்கம் என்னவென்பது பலருக்கும் திகிலை உண்டுபண்ணியது.

சரித்திரகாலம்தொட்டுச் சுயமாக இயங்கிவந்த பொலீஸ் இப்போது தீவிரவலதுசாரிகளின் கட்டளைப்படி இயங்குகிறது. அதன் எண்ணத்தில் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. அந்தத் தெளிவற்ற நிலை அங்கு திகிலாக அடர்ந்து அவர்களை அழுத்தியது. அது கரியமிலவாயுவை மட்டும் சுவாசிக்கும் அந்தரத்தை ஊர்வலத்தில் வந்த மக்களுக்குத் தந்தது.

ஊடகவியலாளருக்கும் இந்தப் பாதுகாப்பு வியூகம் ஐமிச்சமான, அதிசயமான கரிசனை தந்தது. அவர்கள் அந்த வியூகத்தை ஆவணப்படுத்துவதில் மிகவும் அக்கறை கொண்டனர். கூட்டம் பொலீஸின் முதல் வேலியை அடைந்து தனது வேகத்தை முற்றுமாய் இழந்து அணையை மீறமுடியாத வெள்ளமாய் ஸ்தம்பித்து நின்றது. இன்னும் நூறுமீற்றர் சென்றிருந்தால் அது தனது இலக்கை அடைந்திருக்கும். அங்கு அரசியற் கூட்டம் முடிய, இந்த மக்கள் தானாகக் கலைந்து, பெருநகருட் கரைந்துபோய் இருப்பார்கள். நகரம் மீண்டும் தனக்கே உரித்தான அமைதியில் ஆழ்ந்திருக்கும். அந்தச் சுமுகமான நிகழ்வு ஏதோ காரணத்தாற் தடுக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டது.

கூட்டம் ஸ்தம்பித்தவுடன் ஒரு பொலீஸ்காரார் ஒலிபெருக்கியோடு வியூகத்திற்கு முன்னே வந்தார். அப்படி வந்த அதிகாரி ‘நவநாஜிகளும் இன்று ஊர்வலம் வந்ததால் இங்கே இரு பகுதியையும் ஊர்வலமாகச் செல்ல நாங்கள் அனுமதிதர முடியாமைக்கு வருந்துகிறோம். எனவே இருபகுதியையும் அமைதியாக இங்கிருந்து கலைந்து போகும்படி வேண்டிக் கொள்கிறோம். எந்த வன்முறையிலோ அல்லது பொலீஸ் அதிகாரிகளை எதிர்ப்பதிலோ தயவு செய்து ஈடுபடவேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.’ என அறிவித்தார்.

இது அதிதீவிரவலதுசாரி அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பெயரில் பொலீஸால் செய்யப்படும் திட்டமிட்ட செயல் என்பது மெதுவாக பலருக்குப் புலனாகத்தொடங்கியது. இருபது நவநாஜிக்கள் எங்கே? அநியாயாமாகப் பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நியாயம் கேட்டுப் புறப்பட்ட ஆயிரமாயிரம் மக்கள் எங்கே?

பொலீஸார் இரண்டு தரப்பையும் ஒரே தராசில் போட்டு நிறுத்தார்கள். நீதியற்ற பொய்த்தராசில் இனவாதமும், நிறவாதமும் பளுவாக ஏறிற்று. இப்படியான பொலீஸின் ஈனச்செயல் மக்களுக்கு வேதனை தந்தது. பொலீஸ் மீண்டும் மீண்டும் கலைந்து செல்லுமாறு கூட்டத்திற்கு உத்தரவிட்டது. அந்த இடதுசாரி அரசியல்வாதிகள் பொலீஸாரிடம் நிறைய வாதிட்டுப் பார்த்தார்கள். அதற்கு அவர்கள் இணங்க மறுத்ததுமின்றி உடனடியாகக் கலைந்து செல்லுமாறும் அடிக்கடி கட்டளை பரப்பத் தொடங்கினார்கள். அதையடுத்துச் சில ஊடகவியலாளரும் பொலீஸாரோடு தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். பொலீஸார் அவர்கள் சொல்வதையும் கேளாது அவர்களையும் அவ்விடத்தைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்கள். பொலீஸிற்கும் அவர்களை எதிர்த்துக் கதைத்தவர்களுக்குமான சொற்பிரயோகம் வரவரக் கடுமையாகி வந்தது.

இப்படியே இழுபறி தொடர, மக்கள் அசைய மறுத்து அந்தந்த இடத்தில் தெருவில் அமர்ந்தார்கள். அது பொலீஸாருக்கு மிகவும் கோபமூட்டியது. அவர்கள் மீண்டும் மீண்டும் கலைந்து போகுமாறு உத்தரவிட்டார்கள். மக்கள் அதைக் காதிற் போட்டுக்கொள்ளாது தொடர்ந்தும் போகமறுத்து அங்கேயே உட்கார்ந்தனர். இதைப் பார்த்த பொலீஸார் ‘சிறிது நேரத்திற் கலைந்து போகாவிட்டால் நாங்கள் பலத்தைப் பிரயோகித்து உங்களைக் கலைக்கவும், கைது செய்யவும் நேரிடும்’ என எச்சரித்தனர். மக்கள் அதற்கும் பயந்து விடவில்லை. அவர்கள் அப்படியே அசையாது இருந்தார்கள்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

என்னும் பாரதியின் கவிதையை நினைவுபடுத்தும் வீரத்தோடும் மனவுறுதியோடும் அம்மக்கள் வீதியிற் தொடர்ந்தும் வீற்றிருந்தனர்.

பொலீஸார் பொறுமையை இழந்துனர். அரசு கொடுத்த அதிகாரத்திற் திமிர்த்தனர். நெஞ்சை நிமிர்த்தி நிராயுதபாணிகளோடு யுத்தத்திற்குற் தயாராகினர். எங்கும் அமைதி… பிரளயத்திற்கு முன்பான அமைதி… வன்முறை என்னும் ஆழிப்பெருக்கு விழுங்கப் போகும் பலிகளுக்கான அமைதி. அவலங்களுக்கு முன்னான அந்த அரக்க அமைதி இரக்கமின்றிக் கனத்து நின்றது.

பொலீஸார் திடீரெனச் சில கண்ணீர்ப் புகைக்குண்டுகளை மக்களுக்குள் வீசி எறிந்தார்கள். அதையடுத்துக் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயோதிபரெனப் பலரும் பயத்தில் ஓடத்தொடங்கினார்கள். அதில் பெண்களும், குழந்தைகளும் குரலெடுத்து அழுதவண்ணம் எழுந்து ஓடினார்கள். ஆண்கள் கத்தியவண்ணம் ஓடினார்கள். இந்த அமளியில் சில சிறுபிள்ளைகள், வயோதிபர்கள், ஓடமுடியாதவர்கள் தவறுப்பட்டு மற்றவர்களின் கால்களுக்குள் மிதிபட்டனர்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பொலீஸார் பலரைத் தாக்கினார்கள். குதிரையோடு நின்ற பொலீஸாரும் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டார்கள். அது இன்னும் கலவரத்தை உண்டுபண்ண, மக்கள் எதையும் பொருட்படுத்தாது சிதறி நாலாபக்கமும் ஓடினார்கள். அந்த அமளியிற் சில குழந்தைகள் பலியாகப் போகும் ஆபத்துப்பற்றி எவராலும் சிந்திக்க முடியவில்லை.

‘ப்ளிற்’சைச் சாhந்தவர்கள் பொலீஸாரைத் திடீரெனக் கற்களாற் தாக்கினர். அதையடுத்துப் பொலீஸார் அதிகமாகக் கண்ணீர்புகைக்குண்டு எறிந்தவிட்டு றப்பர் ரவைகளால் மக்களை நோக்கிச் சுட்டனர். குதிரையில் இருந்த பொலீஸார் தடியடிப் பிரயோகம் செய்தார்கள். சில பொலீஸார் கோபத்தில் தமது கைத்துப்பாக்கியாற் சுட்டனர். எங்கும் குழப்பம். இரணம். அவலமான ஓலம். பாலும் தேனும் பாயும் ஒஸ்லோவில் இரத்தவெள்ளம் ஓடும் யதார்த்தம். ‘முங்கி’ன் ஸ்கிறீக் (அலறல்) நாலு திசைகளிலும் ஓயாது ஒலித்த நிஜம்.

அதையடுத்துப் பொலீஸார் சிலரைக் கைதுசெய்தனர். அவர்களிற் சிலருக்குக் காயங்களால் இரத்தம் வழிய வழியத் தெருவிலே படுக்க வைத்தார்கள். பிளாஸ்ரிக் விலங்கிட்டார்கள். கைதுசெய்த சிலரைப் பொலீஸ் வான்களில் ஏற்றினார்கள். எங்கோ அனுப்பி வைத்தார்கள்.

பாராளுமன்றத்தைச் சுற்றிய பகுதி யுத்தகளமாய் மாறியது. அந்த நவநாஜிக்களை மட்டும் பொலீஸார் எதுவும் செய்யவில்லை. அவர்களைத் தாக்குதல் மும்மரமாக நடக்கும்போது, பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தூர இடத்திற் பொலீஸார் விட்டுவிட்டார்கள். அரச ஆசிர்வாதமும் அதை நிறைவேற்றும் காவலர்களுமாகிய காலம். அந்த நிகழ்வை அவர்கள் அறியாவண்ணம் சில ஊடகங்கள் கவனமாக ஆவணப்படுத்திக்கொண்டன.

வெளியே நடக்கும் இந்த அமளியைப் பொருட்படுத்தாது, காதிலே வாங்கிக்கொள்ளாது பாராளுமன்றத்தில் அன்று ஊடக அராஜகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தின்மேல் விவாதம் நடந்தது. நோர்வேயின் ஜனநாயகத்தின் அடிக்கற்களில் ஒன்று மக்கள் விழித்திருக்கும்போதே பெயர்த்துச் சூறையாடப்பட்டது. பாராளுமன்றத்திற் பலமற்ற எதிர்க்கட்சிகளின் சொற்கள், வீசப்படும் குப்பைகளாக நிலத்திற் கிடந்து நெளிந்தன. அதை அதிகாரத்தில் இருப்பவர்கள் காலால் மிதித்துச்சென்றனர்.

அன்றிரவே ஊடகங்களில் ஒஸ்லோவில் நடந்த அனர்த்தம் பற்றியும், அதில் நான்கு சிறுவர்களும் ஒரு பெண்ணும் நசிபட்டு மரணம் அடைந்தது பற்றியும், ஐந்துபேர் சுட்டுக்கொல்ப்பட்டதைப் பற்றியும், பலபேர் கைது செய்யப்பட்டதைப் பற்றியும் தகவல்கள் வெளிவந்தன. பொலீஸ், தங்களின் கட்டளையை மீறியதாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டது எனச் சாதித்தது. இந்தக் கூட்டத்தில் நவநாஜிக்கள் எப்படித் திடீரென வந்து குதித்தார்கள்? அவர்கள் எப்படி, யார் துணையோடு திடீரென மறைந்தார்கள்? அமைதியாக இருந்த மக்கள் மேல் ஏன் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசிக் கலவரத்தைப் பொலீஸார் உண்டு பண்ணினார்கள் என்கின்ற கேள்விகளுக்கு அவர்கள் மழுப்பலாகப் பதில் அளித்தாலும், ஊடகங்கள் இது திட்டமிட்ட அதிகார வெறிச் செயலெனக் குற்றம்சாட்டத் தொடங்கின. அதன் வாயை அடைப்பதுதான் தனது முக்கியமான பணி என்பதைப் புரிந்துகொண்ட அந்தத் தீவிர வலதுசாரி அரசாங்கம் தனது புதிய சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியது.

*

அந்தத் தீவிர வலதுசாரி அரசாங்கம் எதிரியின் குரல்வளையை அறுத்துவிட்டாற் கூக்குரல்கள் வெளியேவராது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தது. ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பலநாடுகள் ஜனநாயகக் குரல்வளைகளைக் கடித்துக் குதறுவதிற் குறியாகவிருந்தன. ஈசல்களாக வந்து குவியும் வந்தேறுகுடிகளின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கு அந்த அரசுகளுக்கு அதீத அமைதி தேவைப்பட்டது. அந்த அமைதி… பயம் கலந்த அமைதியாக, மூச்சுவிடுவதுகூட மற்றைய மனிதனுக்குக் கேட்டுவிடுமோ என்கின்ற அச்சத்தில் நடுங்கும் அமைதியாக, யாரிடம் இருந்தும் எந்தக் கேள்விகளும் எழாத நிலையாக, நினைத்ததைத் தாங்கள் செய்யும் வசதியாக இருக்க வேண்டுமென அவர்கள் எண்ணிச் செயற்பட்டனர்.

ஜனநாயகம் என்கின்ற பெரும்பான்மை அறிந்து செயற்படும் சடங்கை அவர்கள் வெறுத்தார்கள். அந்தச் சடங்கு எதையும் ஒழுங்காகச் செய்யவிடாது, கேள்விகள் கேட்பதில் செயற்பாட்டின் வேரை அறுத்து, பலாபலன்களைச் சிதறடிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது என்பது அவர்கள் கருத்தாகிற்று. பெரும்பான்மை கிடைத்துவிட்டால், பிறகெதற்குப் பாராளுமன்ற விவாதம் என்பது அவர்கள் எண்ணம். தங்களின் செயற்பாட்டிற்கு ஜனநாயகம் முட்டுக்கட்டை என்கின்றபோது அதைப் பிடுங்கி எறிவதே சரியான வழி என்பதில் அவர்கள் முழு நம்பிக்கை கொண்டார்கள். ஜனநாயகம் என்கின்ற விருட்சத்தின் ஒவ்வொரு வேரையும் வெட்டி, கடைசியாக ஆணிவேரையும் வெட்டி, செத்த மரமாக்கி அதைப் பிடுங்கி எறிவது அவர்கள் திட்டமாகியது.

ஒஸ்லோவில் நடந்து முடிந்த பிரச்சனைக்குப் பின்பு சுதேசிகளுக்கும் வந்தேறு குடிகளுக்குமான இடைவெளி மெல்ல மெல்ல அதிகரிக்கலாயிற்று. அதுவும் முஸ்லீம் மக்கள்மீது சுதேசிகளுக்கு இருந்த வெறுப்புப் பல மடங்காயிற்று. நோர்வே இஸ்லாமிய மயமாக்கப்படுகிறதெனத் தீவிர வலதுசாரிகள் ஏற்கெனவே வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியிருந்தனர். தாங்கள் பதவிக்கு வந்தால் இஸ்லாமிய மயமாக்கப்படுவதை நிறுத்துவதாகச் சவால் விட்டார்கள். பதவிக்கு வந்ததும் அப்படியான சட்டங்களை அவர்கள் படிப்படியாக நடைமுறைக்குக் கொண்டுவந்தார்கள். முதலில் தாய்நாட்டில் இருந்து மணமகன் அல்லது மணமகளை எடுப்பதற்கு வந்தேறு குடிகளுக்குத் தடைவிதித்தார்கள். பின்பு அந்தச் சட்டத்தைச் சுதேசிகளின் மேலும் பாயவிட்டார்கள். சுதேசிகள் எதிர்த்ததிற்குச் சட்டம் எல்லோருக்கும் பொதுவென நியாயம் கற்பித்தார்கள். அதன்மூலம் ஒரு பகுதி நோர்வே மக்களின் வெறுப்பை வந்தேறுகுடிகள் மீது கூர்மையாக்குவதில் வெற்றிகண்டார்கள். தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்படும் பெண்களால் ஏற்படும் இனக்கலப்பால், தங்கள் இனத்தின் சுயம்; அழிந்து போவதாய் மறைமுகமாக அதிதீவிர வலதுசாரிகள் பிரச்சாரம் செய்தார்கள். அந்தப் பெண்கள் தனியாகப் போகும்போது சிலர் அவர்களை இழிவாகப் பேசினர். சிலவேளைகளில் வன்முறை பாவித்தனர்.

முன்பு வந்தேறு குடிகளைக் கண்டால் முகமன்கூறிப் புன்னகை புரிந்துசென்ற பெரும்பான்மைச் சுதேசிகள் இப்போது அவர்களைக் காணும்போது நரகத்தைப் பார்ப்பது போல வெறுப்போடு அவதியுற்றனர். சிலர் முகத்தை மறுபக்கம் திருப்பிச் சென்றார்கள். வந்தேறு குடிகளின் முதலாவது பரம்பரையால் இந்தச் செயலைச் சகிக்க முடிந்தாலும், இரண்டாவது பரம்பரையால் அதைச் சகிக்க முடியவில்லை. அவர்களுக்கு இது வியப்பாகவும் கவலையாகவும் இருந்ததோடு ஆத்திரத்தையும் ஊட்டியது. அவர்கள் பிறந்து… வளர்ந்து… ஒடித்திரிந்த பூமியிது. அவர்களால் தாய்நாடென உரிமை கொண்டாடப்பட்ட நாடு இது. இதுவே அவர்களுக்குத் தெரிந்த உலகம். அது இரவோடு இரவாகப் பறிக்கப்பட்டுவிட்டதான கோபத்தில் அவர்கள் துடித்தார்கள். அந்த நிறமான நோர்வேஜியப் பிரஜைகளைச் சுதேசிகள் திடீரென நீங்கள் இனி இந்த நாட்டிற்குத் தேவை இல்லை என்பதுபோல நடத்தத் தொடங்கினார்கள். அது நிறமானவர்களின் ஆத்மாவைக் கொன்றது. அணுப்பிரிவதாக அவர்களிடம் கோபத்தை உண்டுபண்ணியது.

வரலாறு விசித்திரமானது. அது சுழற்சி முறையில் மானிடத்தைத் தரிசிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். யூதர்களை ஐரோப்பாவில் நாஜிகள் வதைத்தார்கள். மௌனமாக அந்த மாபெரும் படுகொலை நடந்து முடிந்தது. அந்தப் பிரமாண்டமான தொழில் மயமாக்கப்பட்ட கொலைத் தொழிற்சாலைகளை இனி வரலாறு காணாமற் போகவேண்டுமென எல்லோரும் ஆசைப்பட்டார்கள். மனிதத்தைக் காக்கும் ஆசைகள் வரலாற்றிற் பலதடவை நிராசை ஆகிற்று. எந்த ஜனநாயகம் உரிமை தருகிறதோ அதே ஜனநாயத்தைப் பெரும்பான்மையுடன் கையில் எடுத்துக்கொண்ட சிலர் மற்றைய மனிதர்களின் அல்லது இனங்களின் குரல்வளையை நசிக்கிறார்கள். நசித்திருக்கிறார்கள். மனிதத்தை, மனிதனை வேட்டையாடியிருக்கிறார்கள். மனிதம் தின்று பதவி காத்திருக்கிறார்கள். இரத்தம் தோய்ந்த கைகளால் இரட்சனை செய்கிறார்கள்.

ஆபிரிக்காவில் இலட்சக் கணக்கில் உயிர்கள் பலியானபோது, ஆசியாவில் ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியானபோது, காந்திதேசமே அப்பாவிப் பெண்களின் கற்பையும், உயிரையும் சூறையாடியபோது, இந்திய அகிம்சாவாதிகள் வங்கத்தில் பாடம் புகட்டியபோது, பின்பு முள்ளிவாய்க்காலில் அப்பாவிகளின் இரத்தத்தை ஆறாக்கிப் பதிவிரதத்தை நிறைவேற்றியபோது, காஷ்மீரியரைத் தொடர்ந்தும் துவசம் செய்யும் போது, ஐரோப்பாவின் பின்வளவில் ஆயிரம் ஆயிரமாய் உயிர்கள் பறிக்கப்பட்டபோது, கொசவோவைத் தவிர்த்த மற்றவர்களின் குரல்கள் பொருளாதாரக் கூட்டல் கழித்தலில் புறந்தள்ளப்படலாயிற்று. பல இனங்கள் வேண்டாப் பெண்டாட்டியாக… மற்றைய இனங்களோடு சேர்நது வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறது. அந்த இனங்கள் எதிரியுடன் நிர்வாணமாகப் படுக்கையைப் பகிர்வதான அவஸ்தையில் நெளிகின்றன. தாங்கொணாச் சித்திரவதைப்படுகின்றன. அங்கே மனிதம் தூக்கிலிடப்பட்டு, ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினருக்கு அடிமையாகச் சேவகம் செய்துவருகிறது.

ஒரு காலத்தில் நாஜிக்களால் வதைபட்ட யூதர்கள் இன்று முஸ்லீம்களைப் பலஸ்தீனத்தில் வதைக்கிறார்கள். அதே முஸ்லீம்கள் மத்தியகிழக்கில் வேலைக்குச் செல்லும் ஆசியரை வதைக்கிறார்கள். வெள்ளையரிடம் இந்தியா ஒருகாலத்தில் கையேந்தி நின்றது. அதே இந்தியா பின்பு தன்னைச் சுற்றியிருந்த அயல்நாடுகளில், தனது நாட்டிற்குள் எனப் பரவலாக ஈவிரக்கமின்றி மகாத்மாவை மறந்து மனிதத்தை வேட்டையாடுகிறது. அகிம்சையில் பிறந்தநாடு பின்பு பாவப்பட்டவர்களின் இரத்தத்தில் கொழுக்கிறது. அகிம்சை தின்கிறது. அதர்மம் பேசுகிறது.

சுழற்சிமுறையில் மனிதத்தை மறக்கும் மனிதர்களால் மனிதம் தொடர்ந்து இன்னற்ப்பட்டுத் துடிக்கிறது. ஒருகாலத்தில் மனிதம் பறிபோவதாய் ஒப்பாரிவைத்தவர்கள் அவர்கள் முறைவந்தபோது மற்றவர்களை எட்டிமிதிக்கிறார்கள். மனிதத்தைச் சூறையாடினர். மொழி பேசும் மிருகங்களிடம் மனிதத்தை எதிர்பார்ப்பதா என்பதில் மனிதம் நிரந்தரமாய்த் தலைகுனிந்து வெட்கிற்று.

மனிதனாய்ப் பூமியில் அவதரித்த அனைத்து மனிதமிருகங்களும் மனிதத்திற்காய் வாழ்ந்ததாய் வரலாறு கிடையாது. தமது நலனுக்காய் அதை நசிக்க யாரும் பின்னின்றதும் இல்லை. அந்த வரலாறு எப்போதும் முற்றுப்புள்ளி காணாது, தொடர்கிறது. அது காந்தியின் நாடாக இருந்தால் என்ன, கௌதமபுத்தரின் நாடாக இருந்தால் என்ன, பிதாசுதன் பிறந்த இடமாய் இருந்தால் என்ன, அல்லா அவதரித்த பூமியானால் என்ன அதற்கு விதி விலக்கு இருப்பதில்லை. அந்த மகான்கள் அகிம்சையை எவ்வளவு போதித்தார்களோ அதற்கு நேரெதிராய் அவர்களது வாரிசுகள் நடைபயிலுகின்றனர். எந்தக் குற்ற உணர்வும் இல்லாது தொடர்ந்தும் அது நடைபெறுகிறது. நியாயப்படுத்தப் படுகிறது.

ஐரோப்பாவில் வேலை பெற்றுக்கொள்வதற்கான போட்டியில் முதலில் வெளிநாட்டுப் பெயருடையவருக்கான கதவுகள் மூடப்பட்டிருந்தன. முதலாவது பரம்பரையைச் சார்ந்தவர்கள் அந்தக் கொடுமையை நீண்டகாலம் அனுபவித்து வந்தார்கள். பின்பு அது மெதுமெதுவாக இரண்டாவது பரம்பரைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தங்களை இந்நாட்டு மன்னர்களென எண்ணி வாழ்ந்தவர்களுக்கு அது உச்சந்தலை அடியாகியது.

வெறுப்பின், இனவெறியின் கோரப்பிடி அத்தோடு நின்றுவிடவில்லை. சமுதாய நிகழ்ச்சிகளிற் பாகுபாடு காட்டப்பட்டது. பல இடங்களுக்குப் போக, எழுதாத தடை விதிக்கப்பட்டது. தோலின் நிறம் மறைக்கமுடியாத அடையாளமானதாய்ப் பலர் அவஸ்தைப்பட்டார்கள். உயிரியலின் இசைவாக்கத்தை ஊனக்கண்ணாற் பார்ப்பதில் அறிவிலிகளுக்கு ஆயிரம் தடுமாற்றங்கள். தங்களின் ஆதாயத்திற்காய்ப் பாவப்பட்டவர்களைக் கண்டுபிடித்து, அதன்மூலம் ஆதாயம் தேடும் குரூரங்கள் தொடர்ந்தன. எதையும் ஆழச் சிந்திக்காமல் இந்தப் பிரச்சாரத்தை நம்பும் பெரும்பான்மை அப்பாவிகள் பரிதாபத்திற்கு உரிய வன்முறையாளராகினர். அவர்கள் மூளையை நச்சு எண்ணங்கள் மேயத் தொடங்கின. இவையனைத்தின் மொத்த வடிவமாகத் தற்போது ஐரோப்பா உருமாறிற்று. அங்கு ஜனநாயகம் திருட்டுப்போவது தெரியாது குருட்டுத்தனமாய்த் தோலையும், முக்காட்டையும் பார்த்தார்கள். முக்காடு அணிபவர்களிற் சிலரும் விட்டுக்கொடுப்பை மறந்தனர்.