5.83x8.ma-frontpng4.1 ஏதென்ஸ் பலியெடுப்பு

திரி கிரேக்கத்தைப் பற்றிப் பாடசாலையில் படித்ததில், அந்த நாட்டைப்பற்றி நிறைய விடயங்கள் அறிந்து வைத்திருந்தாள். நோர்வே மக்களின் விடுமுறைக்கான சொர்க்கங்களில் முதன்மையான நாடுகளில் அதுவும் ஒன்றாகும். அந்த வருடம் விடுப்பிற்கு ஏதென்சில் தற்போது நடப்பது உண்மைதானா என்பதைப் பார்த்து வரவேண்டுமென அவள் விக்னேசை அரித்தாள். எங்கள் இருப்பே கேள்விக்குறியான நேரம், மற்றவர் இருப்புப் பற்றிக் கதைக்கும் பலம் எமக்கு இல்லையென விக்னேஸ் வாதாடினாலும் திரி விடுவதாய் இல்லை. அவள் அந்த வருடம் விடுமுறைக்கு அங்கு செல்ல வேண்டுமென அடம்பிடித்தாள். விக்னேஸ் வேறு வழியின்றி அவளுடன் புறப்பட்டான்.

திரியின் கனவில் இருந்த புராதன ஏதென்ஸ் எப்போதோ சிதைக்கப்பட்டு முகமிழந்து அகோரமாய்ப் போயிற்று. சரித்திர காலத்தில் இருந்து கிறிஸ்தவ கலாசாரத்தின், ஜனநாயகத்தின், நவீன அறிவியலின் பிறப்பிடமாய்ப் பெருமை கொண்டிருந்த நகரத்தின் புகழை மெல்ல வன்முறை, இனவெறி, வெறுப்பு ஆகியன எரிகுழம்பாகத் தின்னத் தொடங்கின. அந்த நகரத்தின் பவளங்களாக வர்ணிக்கப்பட்ட பூங்காவனங்கள் அசிங்கத்தை அரங்கேற்றும் இடங்களாக மாறின.

காலம் அண்டத்தில் அசைவுகளுக்கு கட்டுப்பட்டதாயினும் பூமியில் மாற்றத்திற்கு வாழ்க்கைப்பட்டது. ஆசியாவிலிருந்து வருகின்ற வந்தேறு குடிகளின் படையெடுப்பு ஐரோப்பாவைக் கதிகலங்க வைத்தது. தனக்குத் தனக்கு என்னும் போது சுளகு படக்கு படக்கு என்குமாம் என்பது சரியாகிற்று. ஐரோப்பாவின் வளங்களிற் பிச்சைக்கார நாட்டான் எல்லாம் பங்கு போடுவதா என்கின்ற கோபம் ஒருசாரார் மனதில் ஆவேசமாய் உருப்பெற்றது. அதிதீவிர வலதுசாரிகளும், அதற்கும் அப்பாற்பட்டவர்களும் இதற்குத் தாங்கள்தான் விடைகாண வேண்டும் என்பதாய் வன்முறையைக் கையில் எடுத்துக்கொண்டார்கள்.

அகதிகளின் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான படையெடுப்பின் வாயிலாகக் கிரேக்கம் விளங்கியது. அது கிரேக்க நாட்டினருக்கு அந்த நிறமான வந்தேறுகுடிகள்மேல் அதிக வெறுப்பை உண்டுபண்ணியது. வந்தேறுகுடிகளை நாட்டிற்குள் வராது தடுப்பதே அவர்களின் பெரும் போராட்டமாகியது. எவ்வாறு போராடியும் அவர்கள் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கமுடியவில்லை. அவர்கள்மேல் உண்டாகும் பெறுப்பையும் தணிக்க முடியவில்லை.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து நோர்வேக்குள் வரும் வந்தேறுகுடிகளை வந்த கையோடு அதே கிரேக்கத்துக்கு நோர்வே திருப்பி அனுப்பியது. அதுவும் அதிதீவிர வலதுசாரிகள் பதவிக்கு வந்தபின்பு எந்தவித கூச்சமும் இல்லாது அதைச் செய்தார்கள். அதற்குப் பக்கபலமாக அவர்களுக்குச் சட்டம் துணையாக நின்றது. வருபவர்களின் கைரேகை இருபத்திநான்கு மணித்தியாலத்திற்குட் பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்தந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஷடப்ளின் ஒப்பந்தம் அசைக்க முடியாத பலத்தை அதற்குக் கொடுத்தது. அதன்படி எந்த நாட்டில் ஒருவர் வந்து முதலில் இறங்குகிறாரோ, அதே நாட்டில் அவர் அகதி அந்தஸ்துக் கோர வேண்டும். நோர்வே அகதிகளை ஒருபக்கத்தாற் திருப்பிக் கிரேக்கத்திற்கு அனுப்பிவிட்டு, மறுபக்கத்தால், தனது பொலீசை அனுப்பி எப்படி அகதிகள் வரவைக் கட்டுப்படுத்தலாம் என்பதுபற்றிக் கிரேக்கத்திற்கு அறிவுரை வழங்கியது. அகதிகள் பிரச்சனையை ஐரோப்பா ஒன்றிணைந்து பங்கீடு செய்வதன் மூலமாகத் தீhத்து வைக்க வேண்டும். அதைச் சில எல்லை நாடுகளிடம் ஒப்படைத்துவிட்டுப் பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகள் வசதியாகக் கண்ணை மூடிக்கொண்டன. அந்தச் செயல் பணக்கார நாடுகள் தப்பித்துக்கொள்வதான தந்திரமாய் அமைந்தது. எல்லை நாடுகள் குமுறின. ஒன்றியத்தை விட்டு விலகமுடியாத ஏழ்மை அவர்களை வலைப்படுத்தியது. தங்கள் சுகத்திற் கைவையாதே என்கின்ற சுயநலமே எப்போதும் பணக்கார நாடுகளின் தாரக மந்திரமாயிற்று. அதைக் காக்கும் அவர்களின் அதியுன்னத இராஜதந்திரத்திற் தோல்வி வந்ததில்லை.

லஞ்சம், ஊழல் அதிகம் நிறைந்த ஐரோப்பிய நாடான கிரேக்கத்தில், பணம் எங்கே போகிறது என்கின்ற பாதை புரியவில்லை. இளவயதில் ஓய்வூதியம் அளித்தல், அதீதமாக உதவிநிதி கொடுத்தல் என்பன அதன் பொருளாதாரத்தை எப்போதும் நலிவுறப்பண்ணின.

இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின்பு, தடுப்புமுகாங்கள் அமைத்து, நாசிகளின் திட்டத்தின்படி அடைத்துவைத்தது போல, அகதிகளாய் வந்தவர்களை அடைத்து வைத்த சம்பவங்கள் புதிய ஐரோப்பாவில் யதார்த்தமாயிற்று. ஐரோப்பிய நாடு ஒன்றில் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பெரிய கைவிடப்பட்ட களஞ்சியங்களில் மக்களை மந்தைகள் போன்று அடைத்து வைத்தனர். அவர்களுக்கு மலிவாகத் தயாரிக்கப்பட்ட புறோட்டின் பிஸ்கற்களை மட்டும் உணவாகக் கொடுத்தார்கள். மறுபகுதி அகதிகளுக்கு, எந்த உதவியும் கொடுக்காது தெருவில் விட்டார்கள். அதை முதலிற் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட நாடு கிரேக்கமாகும். அதன் பின்பே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணுவாயுத யுத்தம் தொடங்கியது. அது கோடிக் கணக்கில் இந்திய உபகண்ட மக்களை ஐரோப்பா நோக்கிப் படையெடுக்க வைத்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் வரும்போதே அகதிகள் என்று சலித்தவர்கள் அணுவாயுத அனர்த்தத்தால் ஐரோப்பாவை நோக்கி அலையலையாக மக்கள் வந்தால் எப்படி மாறுவர்?

இந்தக் கொடுமை போதாது என்பதாகப் பூங்காவனங்களிற் தங்கியிருந்த அகதிகளை ஏதென்ஸ்வாசிகள் இரவு வேளைகளிற் தாக்கி, அங்கே தூங்காத வண்ணம் கலைத்ததோடு, சிலரை அவ்வப்போது கொலையும் செய்து வந்தார்கள். அதிகார வர்க்கமும் அதற்கு நன்கு துணைபோயிற்று. பொலீஸ் ஏதென்வாசிகள் முறைப்பாடு செய்தவுடன் அகதிகளை மட்டும் கைதுசெய்தார்கள். அகதிகளான சிறுவர்களைக்கூட மனிதாபிமானம் இல்லாது கைதுசெய்து சென்றார்கள். அப்படி நடந்த கைதுகளின் போது தாய் தந்தையரிடம் இருந்து சிறார்கள் கேட்டுக் கேள்வி இல்லாது மனிதநேயத்திற்கு எதிராகப் பிரிக்கப் பட்டார்கள். சில இடங்களில் அகதிகள் சேரிகள் போன்ற இடங்களில் கடதாசி மட்டைகளாற் செய்யப்பட்ட வீடுகளில் வசித்து வந்தார்கள். அதையும் அரச இயந்திரம் அழித்தொழித்து அந்த அகதிகளை இருப்பிடம் இல்லாது அலைய விட்டது. பின்பு பூங்காவனங்களிற் தங்கியவர்களை மீண்டும் மீண்டும் அடித்துக் கலைத்தார்கள்.

குழந்தைகளோடு கிரேக்கத்துக்கு வந்தவர்கள் மடியில் நெருப்பைக் கட்டியதான அவஸ்தைக்கு உள்ளானார்கள். அவர்கள் சிலவேளைகளிற் பூங்காக்களிலும், திறந்த வெளிகளிலும் தமது இரவைக் கழிக்கவேண்டி வந்தது. அப்படியான நேரங்களில் அவர்களது பிள்ளைகளைச் சிலர் கடத்தித் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சி செய்தனர். எங்கும் அதைப்பற்றி முறையிடமுடியாத, எந்த உரிமையுமற்ற நவீன ஐரோப்பாவின் அடிமைகளாக அவர்கள் போக்கிடம் இல்லாது அலைந்து திரிந்தனர்.

ஆயிரமாயிரமாக மக்கள் அகதிவிண்ணப்பங்களோடு காவல் நிலையங்களுக்கு முன்பு காத்திருந்தனர். அவர்கள் காத்திருப்பிற்குக் கிடைத்த கரிசனை மிகவும் அற்பமானது. இருபது அகதிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஒருநாளிற் பரிசிலிக்க ஏற்றுக்கொள்ளப்படுவதான எழுதாத சட்டம் நடைமுறையாகிற்று. வதைப்பதன் மூலம் அகதிகளைக் கட்டுப்படுத்தும் தந்திரமாக இது கிரேக்கத்திற் கையாளப்பட்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே நாற்றம் எடுக்கத் தொடங்கிய அகதி அரசியலை அதிகாரவர்க்கம் கம்பளத்தின் கீழ் கூட்டித்தள்ளி மறைத்தது. மீண்டும் மீண்டும் வரலாற்றின் துர்நாற்றங்கள் ஐரோப்பாவில் வீசுவதை அவர்களாற் தடுக்கமுடியவில்லை.

துருக்கியையும், கிரேக்கத்தையும் ‘எவ்ரோஸ்’ நதி சண்டைபோட்டுக் கொள்ளாதீர்கள் என்பதாகப் பிரித்து நின்றது. ஆசியா, ஆபிரிக்கா, மத்தியகிழக்குப் போன்ற இடங்களிலிருந்து துருக்கி வழியாக வரும் அகதிகள் இந்த நதியைக் கடந்தால்தான் கிரேக்கத்திற் காலடியெடுத்து வைக்கலாம். அப்படி அவர்கள் அந்த நதியைக் கடந்துவிட்டால் அது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வலதுகால் வைத்ததாக அமையும். வேட்டையாடப்படும் மிருகங்களைப்போல அகதிகளைக் கிரேக்கமும், துருக்கியும் விரட்டின. அந்த அவசரத்தில் ‘எவ்ரோஸ்’ நதியைக் கடக்க முயன்று, அந்த நதிக்குத் தங்கள் உயிரைப் பலியாக்குபவர் தொகை பெருகியது. ஆயிரம் கனவுகளோடு வந்து அப்படிப் பலியாகும் அப்பாவிகளைப் பெரிய கிடங்குகள் வெட்டி அதற்குள் கூட்டாகப் புதைத்தார்கள். அனாதை அகதிகளுக்கு இறுதிவணக்கம்கூட எதற்கு என்கின்ற நிலை அந்த நாடுகளில் உண்டாகியது. அனாதைப் பிணங்களின் பாரிய புதைகுழி ‘எவ்ரோஸ்’ நதியின் கரையோரம் பெருகுவது புதியதொரு வரலாறாகியது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த அணுவாயுத யுத்தத்தின் பின்பு அலையலையாகத் திடீரென அகதிகள் கிரேக்கத்திற்கு வந்தார்கள். அந்தத் திடீர் வரவால் கிரேக்கத்தின் முகம் முற்றுமாய் விகாரம் எய்திற்று. அவர்கள் பிரம்மாண்டமான அளவில் தடுப்பு முகாங்களை அமைத்து, அதற்குள் அகதிகளாய் வருபவர்களை அடைக்கத் தொடங்கினார்கள். அதிற் பல அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டன. நாஜிகள் போல மக்களை மிகவும் நெருக்கமாக அடைத்து வைத்ததால் அவர்களுக்குத் தொற்று வியாதிகள் பரவத் தொடங்கின. சில குறிப்பிட்ட செயற்கையாகச் செய்யப்பட்ட உணவுவகைகள் மாத்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அதிற் சுவையோ வாசனையோ இருக்க வேண்டும் என்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை. கலோரிகளின் கணிப்பு மாத்திரம் கவனத்திற் கொள்ளப்பட்டது. அது மனிதர்கள் நிறை குறைந்து, எலும்பும் தோலும் ஆகாதவகையிற் பாதுகாத்துக்கொள்ளும். அதைச் சாப்பிடுபவர்கள் மனிதர்கள் என்கின்ற கரிசனை சிறிதும் காட்டப்படவில்லை. ஏற்கெனவே பரிசோதித்தவை இப்போது கிரேக்கத்திற்குக் கைகொடுத்தன.

கதிர்வீச்சிற்கு ஆளாகியதால் நிரந்தரப் புண்களோடு அகதிகள் வந்தார்கள். அவர்களை நெருக்கமான அந்த முகாங்களில் அடைத்து வைத்ததால் உண்டான துர்நாற்றத்தைத் சகிக்க முடியவில்லை. சுகாதாரச் சீர்கேட்டினால் நோய்கள் அவர்களை இலகுவாகத் தாக்கின. கதிர்வீச்சாற் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித மருத்துவ உதவிகளும் செய்யப்படாது போக அவர்கள் விரைவில் தங்களது மூச்சை விட்டார்கள். அந்தத் தடுப்பு முகாங்கள் விரைவில் பிணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகின. அது மனிதம் கொலை செய்யப்படுகின்ற கோரமுகத்தை மனிதகுலம் தொடர்ந்தும் மறவாது, மாறாது, கொடூர விலங்கென்பதைக் கோலத்தால் மட்டும் மறைத்து வந்திருக்கிறது என்பதை உறுதி செய்தது. எத்தனைமுறை வரலாறுகளை மனிதன் படித்தாலும், அதை அவ்வப்போது தனது வசதிக்கு ஏற்ப அவன் மறந்து விடுகிறான். மீண்டும் புதிய வரலாறுகள் மூலம் பழைய புண்களைக் கிண்டும் குரூரம் செய்கிறான். அதன் இரணம் அப்பாவி மனிதர்களுக்குப் பரிசாக்கப்படுகிறது.

*

ஏதென்சுக்குப் போவது தங்களுக்குத் தற்போது பாதுகாப்பு இல்லையென விக்னேஸ் இழுத்தடித்தாலும், திரி விடாப்பிடியாக அவனையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றாள். பணத்தைக் கொடுத்தால் விலைக்கு வாங்கப்படும் வசதிகளைக் கொள்முதல் செய்வதில் அவர்களுக்கு எந்தவிதப் பிரச்சனையும் தற்போதும் இருக்கவில்லை. வருமானம் வருகின்ற தொழில்களில் கிரேக்கர்கள் எந்தவிதப் பாகுபாடும் காட்ட விரும்பவில்லை. வெளியே நடக்கும் அவலங்கள் நட்சத்திர விடுதிகளுக்கு உள்ளே தெரியவருவதும் இல்லை. அது தனி அண்டங்களாகக் கவலையின்றிப் பூமிப்பந்தில் சஞ்சரிக்கும். அங்கே கூத்தும்… ஆட்டமும்… பஞ்சமில்லாச் சிரிப்பும்… அறுசுவை உணவும், மதுவுமாக களியாட்டம் நீண்டு செல்லும் இரவுகளை உற்பத்திசெய்யும்.

ஏதென்ஸ் தனது பெருமைகளைத் துறந்து, மனிதம் மறந்து, மானிடம் மன்னிக்கமுடியாத கொடுமைகளிடம், மண்டியிட்டுக் கிடந்தது. கிரேக்கத்தை மட்டும் தனியாக அகதிகளைக் கையாளவிட்ட செயல் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நாவில் இருந்துவரும் சொற்களுக்கும் அவை போடும் வேடத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நிருபித்தது.

பொறுப்பில்லாது ஒர் அணுவாயுத யுத்தத்தைத் தொடங்கமுதல் இதன் விளைவுபற்றி ஆழமாக இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் சிந்திக்கவில்லை. காந்திதேசத்தின் புதிய அரசியல்வாதிகள் காந்தியின் அகிம்சை, போற்றப்பட வேண்டிய மனிதம் என்பன பற்றிச் சிந்திப்பதை வெறுத்தனர். உலகம் ஓடுகின்ற ஓட்டத்தில் அவையெல்லாம் இற்றுப் போன தத்துவங்கள் என்பதே அவர்கள் முடிவாகிவிட்டது. பதவியும் அத்தால் விளையும் பணமும் உலகத்தின் சொர்க்கவாசல்களைத் திறந்து வைக்கின்றன. அதை அவர்கள் முழுமையாக நம்பினார்கள். அதற்காக எதுவும் செய்வதற்கு அவர்கள் துணிந்தார்கள்.

கிரேக்கத்திற்குத் தற்போது வருபவர்கள் தடுப்பு முகாங்களுக்கு நேரடியாக அனுப்பப் பட்டாலும், ஒரு குறிப்பிட்ட தொகையினர் இன்னும் ஆங்காங்கே சில பூங்காக்களிலும், சேரிகள் போன்ற இடங்களிலும் வசித்து வந்தார்கள். இந்த நாட்களிலும் தொடர்ந்தும் அகதிகளுக்கான விண்ணப்பம் கொடுக்க முயற்சிப்பவர்களும் தங்களது முயற்சியிற் சளைக்காமல் அதைத் தொடர்ந்தார்கள். இந்தவிதமான காட்சிகளைக் கிரேக்கத்தின் அதிதீவிர வலதுசாரிகள் முற்றுமாய் வெறுத்தார்கள். தங்கள் நகரங்களை நாறடிக்கும் இந்த அகதிக்கூட்டங்களுக்கு முறையான பாடம் ஒன்று படிப்பிக்கவேண்டும் என்பதாக அவர்கள் திட்டமிட்டார்கள்.

திரி மிகவும் பிரயத்தனப்பட்டுப் ‘பெத்றோ றலி’ பொலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள விடுதியொன்றில் தங்குவதற்கு இடம் பிடித்தாள். விமானத்தால் இறங்கி விடுதிக்குச் சென்றபோது அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. விடுதியின் பல்கணியில் நின்று பார்க்கப் ‘பெத்றோ றலி’ பொலீஸ் நிலையம் முழுமையாகத் தெரிந்தமை அவளைப் புளகாங்கிதம் அடைய வைத்தது. ஏதென்சுக்கு வந்து ‘ஆக்கிறோபொலீஸ்’ போய்ப்பார்த்த காலம் இப்போது மலையேறிவிட்டது. இந்நாளில் இங்கே இப்படியும் நடக்கிறதா என்கின்ற ஆராய்ச்சியில் இளம் தலைமுறை ஈடுபடத்தொடங்கியது.

உறக்கத்தை இறுகத்தழுவிய அதிகாலை நேரம் அது. அதன் சுகத்தையும் அமைதியையும் துவம்சம் செய்வதாக அலாம் அடித்தது. அது அப்பா மகள் இருவரையும் உறக்கத்தில் இருந்து எழுப்பியது. விடுமுறைக்கு வந்த இடத்தில் திரி செய்யும் கூத்து விக்னேசுக்குச் சலிப்பைத் தந்தது. இருந்தும், அவள் மனம் கோணக்கூடாது என்பதற்காய்ப் பேசாது சமாளித்தான். திரி விக்னேசை எழுப்பித் தன்னோடு பல்கணிக்கு வருமாறு அழைத்தாள். விக்னேசுக்கு இது சற்றும் பிடிக்காவிட்டாலும் மகளின் ஆக்கினைக்காகப் புறப்பட்டு வெளியே சென்றான். ஐரோப்பாவின் அதிகாலைக்குளிர் மேனியைச் சில்லிடப் பண்ணியது.

நோர்வேயில் இருந்து ஏதென்ஸ் வரும்போது ஒரு வீடியோக் கமராவையும், ஒரு தொலை நோக்கியையும் திரி கவனமாக எடுத்து வந்தாள். அவளிடம் துப்பறியும் ஆவலும் பரபரப்பும் மிதமிஞ்சி வழிந்தன. அந்த ஆவலும் பரபரப்பும் சிக்கலில் மாட்டிவிடுமோ என்கின்ற தவிப்பில் விக்னேஸ் தவித்தான். கிரேக்கர்கள் இப்போது பழைய கிரேக்கர்களாக இல்லை. அவர்கள் சட்டத்திற்குக் கொடுத்த மதிப்பும் மிகவும் தாழ்ந்து போயிற்று. தங்களைப்பற்றித் தப்பாக ஆதாரப்படுத்தப் போகிறார்கள் என்றால் என்ன விலைகொடுத்தும் அதை அழிப்பதற்கு அவர்கள் துணிவார்கள். அதற்குக் கிரேக்கர்கள் ஒன்றும் சளைத்தவர்களாய் இருக்கமாட்டார்கள் என்பது விக்னேசின் கணிப்பு. வருங்கால, நிகழ்கால ஆபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வது மனிதனின் அடிப்படைக் குணம். கிரேக்கர்களுக்கும் அது பொருந்துமென அவன் எண்ணினான்.

திரி தனது தொலைநோக்கியால் ‘பெத்றோ றலி’ பொலீஸ் நிலையத்திற்கு முன்பு எவ்வளவு மக்கள் கூடியிருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் பார்த்தாள். நிறைய ஆண்கள், பெண்கள், குழந்தைகளென நீட்டிற்கு அவர்கள் வரிசை நெளிந்து நெளிந்து முடிவில்லாது தொடர்ந்தது. அப்படித் தொடர்ந்த வரிசை வாசுகி வாலாக இருட்டிற் கண்ணிற்குப் புலப்படாது மறைந்தது. பொலீஸ் நிலையம் திறப்பதற்கு இன்னும் அதிக நேரம் இருந்தது. இருளும் குளிரும் தொடர்ந்தும் தமது பிடியை விடாது அடம்பிடித்தன. உடல் இழக்கும் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கிடுகிடுத்தது. சூரியனின் தென்துருவப் பயணம் இன்னும் முடியாத அவஸ்தை தொடர்ந்தது.

கிரேக்கத்தில் அகதிகளைக் கையாளும் முறை மிகவும் கவலைக்கு உரியதாகிற்று. பொலீஸாரின் கைகளில் அகதிகளுக்கான முடிவை எடுக்கும் எல்லா அதிகாரத்தையும் அந்தநாடு வழங்கிவிட்டது. அது தனிமனிதர்களின் கையிற் பலரது வாழ்வை ஒப்படைத்ததோடு, அகதிகளின் மனித உரிமைகளை மறுப்பதற்கான திறவுகோலாய் அமைந்திற்று. நடைமுறையில் கிரேக்கத்தில் இருந்த அகதிகள் எந்தவித உரிமையும் இல்லாது, மிருகங்களைவிடக் கேவலமான நிலையில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தெருவில் நடத்தப்படும் அந்த வாழ்க்கைக்குக்கூடத் தண்டனை தரப்படும் காலமாக மாறிப்போயிற்று. இந்தக் கொடுமைகள் சிறிது சிறிதாக வெளியே கசியத் தொடங்கியது. அது இப்போது அப்பட்டமாய் நிரூபணமாகியது. அதன் தாக்கம் கிரேக்கத்தின்பால் அனுதாபத்தை வரவழைப்பதற்குப் பதிலாய், கதிர்வீச்சுப் போன்ற கோபத்தை ஐரோப்பாவில் வாழும் வந்தேறு குடிகளுக்கும், மனச்சாட்சி உள்ள ஒருபகுதி சுதேசிகளுக்கும், அக்கறையுள்ள இடதுசாரிகளுக்கும், காருண்யமுள்ள மதவாதிகளுக்கும் உண்டு பண்ணியது. அவர்கள் நினைவுகள் என்றும் புதைக்க முடியாத வரலாறுகளை அடிக்கடி வேதனையுடன் தடவிப் பார்த்துக்கொண்டன.

திரி தொலைக்காட்டியை வைத்த கையோடு தனது வீடியோக்கமராவை எடுத்துக் காவல் நிலையத்திற்கு முன்பு நின்ற மக்களைப் படம்பிடித்தாள். விக்னேசுக்குத் தெருவில் போகும் ஓணானை எடுத்து மடியில் வைத்துக்கொண்டதான அவஸ்தையாகியது. மக்களின் நிலையும் பரபரப்பும் அவனுக்கு மிகவும் அச்சத்தைத் தந்தன. நிறமான வந்தேறுகுடிகள் இரண்டாம்தரப் பிரசைகளாக மிகவும் வேறுபடுத்தி நடத்தப்படும் நிலைக்கு உலக மாற்றம் நோர்வேயைச் சட்டென இட்டுச் சென்றது. கிரேக்கம் ஐரோப்பிய நாடாக இருந்தாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது வறியதொரு நாடாகும். அதற்குச் சுமைகூடும் போது அது கற்காலத்தின் தீர்வுகளை முன்நிறுத்துகிறது. நாங்கள் அதற்கு என்ன செய்ய முடியுமென எண்ணிய விக்னேசிற்குக் குளிரில் அங்கு தொடர்ந்து நிற்க அலுப்படித்தது. அவன் மீண்டும் சூட்டை நாடி அறைக்குட் சென்றுவிட்டான்.

திரி அவர்களைச் சிறிது நேரம் வீடியோப் பிடித்தாள். பின்பு இது போதுமென எண்ணிய போது வாகனம் ஒன்று மிகவும் வேகமாக அந்தப் பக்கத்தை நோக்கி வந்தது. திரிக்கு ஏனோ அந்த வாகனத்தைப் பார்க்கத் தன்னை அறியாமல் ஒருவித ஐயம் எழுந்தது. அந்த வாகனம் ஏனோ சீற்றத்தோடு அதிவேகமாகச் சீறிப்பாய்ந்து வந்தது.

திரி வாகனத்தையும் அதில் இருந்தவர்களையும் கிட்டவாக ‘ஃபோகஸ்’ பண்ணி வீடியோப் பிடிக்கத் தொடங்கினாள். ஒரு கணம் அவளால் அதை நம்ப முடியவில்லை. மீண்டும் அவசர அவசரமாக அவள் அதை ‘ஃபோகஸ்’ பண்ணிப் பார்த்தாள். சந்தேகமே இல்லை. அவை இயந்திரத் துப்பாக்கிகளே என்பதை அவள் முடிவு செய்துகொண்டாள்.

திரியால் அதிக நேரம் சிந்திக்க முடியவில்லை. மெதுவாக முட்டுக் காலில் இருந்து தொடர்ந்தும் அந்த வாகனத்தைப் படம்பிடித்தாள். அவள் எதிர்பார்த்த அவலம் அங்கு நடந்தது. வாகனத்தில் வந்தவர்கள் அங்கு நின்றவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். நான்கு இயந்திரத் துப்பாக்கிகளாற் தங்களது படுகொலையை அவர்கள் அரங்கேற்றினார்கள். திரி மிகவும் தாழ்வாகத் தன் தலையைப் பதித்துக்கொண்டாள்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானவர்கள் குருவிகள் போல் நிலத்தில்; விழுந்தார்கள்ளூ அட்டையாகச் சுருண்டு வேதனையோடு துடித்து உயிரைவிட்டார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே குறிவைக்கப்பட்டார்கள். அவர்கள் எந்தப் பெறுமதியும் அற்ற விலங்குகள் போலச் சுட்டு விழுத்தப்பட்டார்கள். அவர்களின் அவல ஓலம் பிரபஞ்சத்தின் மூலைகள் தேடிச்சென்றது. இரத்தம் தெருவை நனைத்தது. மனிதம் ஏதென்ஸ் தெருக்களில் அவலமாக மீண்டும் மீண்டும் மரித்துப்போனது. அதைத் திரியால் சில கணங்கள் நம்பமுடியாவில்லை. அவளுக்கு வயிற்றைப் புரட்டிச் சத்தி வரும்போலத் தோன்றியது. கைகள் குளிராக வியர்த்தன. அவள் திறந்த சோடாவாகத் தொடர்ந்து கொட்டாவி கொட்டாவியாக விட்டாள். அந்த வாகனம் அகதிகளைச் சுட்டுத்தள்ளிய பின்பு வேகமாக மறைந்து போய்விட்டது.

சூட்டுச் சத்தம் கேட்டுப் பரபரப்பாக விக்னேஸ் வெளியே ஓடிவந்தான். அவனுக்குச் சட்டென நிலைமை புரிந்தது. அவன் அவசரமாகப் பாய்ந்து திரியை உள்ளே இழுத்துச் சென்றான். யாராவது திரி படம் எடுத்ததைப் பார்த்துவிட்டாற் தங்கள் உயிருக்கு நிச்சயம் ஆபத்து வரும் என்பது அவனுக்குப் புரியலாயிற்று. ‘என்ன மடத்தனம் செய்துகொண்டு நிக்கிறாய்? எங்களுக்கு எதிரா நாங்களே ஆபத்தை விலை கொடுத்து வேண்டுறதே?’ என மகளைப் பார்த்துக் கடிந்துகொண்டான். அவள் அவன் பேசியதற்குப் பெரிதும் கவலைப்பட்டவளாகத் தெரியவில்லை. தான் பார்த்ததை நினைத்துத் தேம்பித் தேம்பி அழுதாள். விக்னேசால் அதன்பின்பு அவளைத் திட்ட முடியவில்லை. சிறிது நேரத்தின் பின்பு தன்னைச் சமாளித்தவண்ணம் திரி கதைக்கத் தொடங்கினாள்.

‘ஏனப்பா தேவையில்லாமல் பயப்பிடுறியள்? நாங்களே அப்பாவியள கொலை செய்யிறம்? கொலை செய்தவங்களைப் பிடிக்கிறதுக்கு எங்களிட்ட நல்ல ஆதாரம் இருக்குது. அதை நாங்கள் பொலீஸிட்ட கொடுக்கோணும். வாங்கப்பா பொலீஸக்குப் போட்டுவருவம்’ என்றாள். விக்னேசுக்கு அழுவதா சிரிப்பதா என்று முதலிற் புரியவில்லை. பின்பு சற்றுக் கோபமாக ‘உனக்கு என்னடி விசரே? இங்க பொலீஸ், நவநாஜிகள் எல்லாரும் சேர்ந்துதான் உந்தக் கூத்தைச் செய்திருப்பாங்கள். நாங்கள் எங்களிட்ட ஆதாரம் இருக்கெண்டு பொலீஸக்குப் போனா எங்களத்தான் தூக்கி முதல்ல உள்ள போடுவாங்கள். இப்ப இருக்கிற நிலைமையில நோர்வேல உதைக்கொண்டேக் குடுத்தாலே அதுதான் அங்கையும் நடக்கும். உனக்கு உதை எடுத்த அளவுக்கு உதால வரப்போற ஆபத்தைப் பற்றிச் சிந்திக்கத் தெரியேல்ல. இது ஒண்டும் இப்ப விளையாட்டில்ல. தேவையில்லாமல் நாங்கள் மாட்டக்கூடாது. நீ முதல்ல உடுப்புகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளிக்கிடு பாப்பம்’ என்றான். ‘ஏனப்பா இப்பிடிப் பயப்படுறியள். அது ஒண்டும் நடக்காது. அந்தரப்படாதேங்கோ அப்பா. சரி நான் இப்ப பொலீசுக்கு போகேல்ல. வீடியோ எடுத்ததை யாரும் இருட்டில பாத்திருக்கமாட்டினம். அமைதியா இருங்க அப்பா.’ என்றாள் திரி. ‘நீ அவங்கள வீடியோ எடுத்தமாதிரி உன்ன யார் எடுத்தாங்களோ தெரியாது. கதைய விட்டிட்டு உடுப்பை எடுத்துக்கொண்டு வெளிக்கிடு’ என்று கூறிய விக்னேஸ் புறப்பட்டான். அப்பாவை மனதிற்குட் திட்டியவண்ணம் அதற்குமேல் வாதம்புரிய விரும்பாதவளாய்த் திரியும் புறப்பட்டாள்.

கீழே வரவேற்பறைக்குச் சென்ற விக்னேஸ், அங்கிருந்த பெண்ணிடம் அறையைக் காலி செய்வதாகக் கூறினான். அவள் சற்றும் நம்ப முடியாதவளாய் இவர்களைப் பார்த்தாள். அவள் அதை எதிர்பார்க்கவில்லை என்பதாக அந்தப் பார்வை சில கணங்கள் இவர்களை நோண்டியது. பின்பு அவள் தனக்கு இது சம்பந்தம் இல்லாத விடயம் என்பதுபோலக் கணக்கைப் பார்த்துப் பற்றுச்சீட்டை கொடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்ட விக்னேஸ் அவளிடமே ஒரு வாடகைக்காரை அழைக்குமாறு கேட்டுக்கொண்டான்.

வெளியே அந்த விடுதி தொடக்கம் ‘பெற்றோ றலி’ காவல் நிலையம் தாண்டிச் செல்லுமளவிற்குப் புதிதாக உருவாக்கப்பட்ட தடுப்புகள் நீண்டு சென்றன. பொலீஸாரும் அம்புலன்ஸ் சேவை செய்பவர்களும் அவசர அவசரமாகப் பிணங்களையும், காயப்பட்டவர்களையும் அகற்றினார்கள். திரிக்குத் தனது கமரா மறுக்க முடியாத ஆயிரம் உண்மைகளை வெளியே சொல்லும் என்பது புரிந்தது. எத்தனைபேர் இறந்து போனார்கள் என்பது அவளுக்குச் சரியாத் தெரியவில்லை. ஆகக் குறைந்தது ஐம்பது பேராவது இறந்து போயிருக்க வேண்டுமென எண்ணினாள். ஆதாரத்தைக் கொடுக்காது தப்பி ஓடுகிறோமோ என்கின்ற குற்றவுணர்வு அவளை வாட்டியது. அப்பாவின் நடுக்கத்தை எண்ணிப் பேசாது நின்றாள்.

வாடகைக் கார் வந்ததும் அவசர அவசரமாக அதில் இருவரும் ஏறினார்கள். வாகனம் விமான நிலையத்தை நோக்கிப் புறப்படும் போது இரண்டு பொலீஸார் விடுதிக்குள் நுழைவதை விக்னேஸ் அவதானித்தான். ஒவ்வொரு கைத்தொலைபேசியிலும் மனிதர்கள் கமராக்களோடு அலையும் காலமிது. அதைவிட உல்லாசப் பயணிகள் நிறைந்த நகரமிது. யாராவது அதிகாலை நடந்த நிகழ்வைப் படம் எடுத்திருக்கலாம் என்பது பொலீஸின் சந்தேகமாக இருக்கும். ஏற்கெனவே பல விடயங்களை மறைத்துள்ள பொலீஸ், இந்த விடயத்தையும் வெளியே கசியவிட விரும்பாது. தங்களிடம் ஆதாரம் இருப்பது தெரிந்தால் கடவுச் சீட்டுகளையும், கமராவையும் பிடுங்கி வைத்துவிட்டு, தடுப்பு முகாங்களில் தன்னையும் மகளையும் அடைத்து விடுவார்களோவென விக்னேஸ் பயந்தான். முதலாவது கொலை செய்யும் வரைதான் மனிதனுக்குக் குற்ற உணர்வோடு சேர்ந்த நடுக்கமிருக்கும். முதற் கொலை செய்துவிட்டால், பின்பு அது பலருக்கு கத்தரிக்காய் வாழைக்காய் வெட்டும் கதையாகத்தான் இருக்கும். கிரேக்கம் எப்போதோ முதலாவது கொலை செய்தாகிவிட்டது. இனி இங்கு கத்தரிக்காய் வாழைக்காய் வெட்டும் கதைதான் என்பது விக்னேசிற்குப் புரிந்தது.

விக்னேஸ் அதீதமாய் வியர்த்துப் போனான். அவன் வியர்த்துப் போனதைப் பார்த்த திரிக்குப் பரிதாபமாகியது. அப்பாவின் பயத்திற்கும், அவதிக்கும் அவளால் முழுமையான அர்த்தம் காண முடியவில்லை. ‘நான் எடுத்ததை ஒருவருமே பார்த்திருக்க முடியாது. அப்படி இருக்கச் சந்தேகத்தின் பெயரில் எவ்வளவு பேரை அவர்கள் கைது செய்ய முடியும்? அதுவே அவர்களுக்கு எதிரான பிரச்சாரமாகாதா? அப்பாதான் தேவையில்லாது அவதிப்படுகிறார்’ என்பதாக அவள் எண்ணினாள். அப்பாவிடம் அதைச் சொன்னாற் துள்ளிக்குதிப்பாரோ என்கின்ற பயத்திற் பேசாது இருந்தாள். சாரதி ஒருமுறை இவர்களைப் பார்த்தான். பின்பு எதுவும் பேசாது வண்டியை விமான நிலையத்திற்கு ஓட்டிச்சென்றான்.

ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தை வாடகைக்கார் சென்றடைந்த போது, விக்னேசுக்குச் சிறிது தைரியம் வந்தது. அவன் விறுவிறென்று வாடகைக் காருக்குப் பணம் கொடுத்துவிட்டுப் பெட்டியை இழுத்தவண்ணம் விமான நிலையத்திற்குள் ஓட்டமும் நடையுமாகச் சென்றான். திரிக்கு அன்று அப்பாவைப் பார்க்க வியப்பாக இருந்தாலும், அந்த நிலைமையில் அமைதியைப் பேணப் பேசாது அவர் பின்னே நடந்தாள்.

விமான நிலையத்தினுள் விக்னேஸ் விசர் பிடித்தவன் போலத் திரியையும் விட்டுவிட்டு ஒடினான். அவள் அவனைப் பார்த்துத் தலையை ஆட்டியவண்ணம் அப்பா போகும் திசையில் ஆறுதலாகச் சென்றாள். முதலில் ‘நோர்வேஜியன்’ என்கின்ற நோர்வே விமானநிறுவன அலுவலகத்தை அணுகி ஒஸ்லோவுக்கு அடுத்த விமானத்தில் செல்லப் பயணச்சீட்டிற்கு முயற்சி செய்தான். அது பலனளிக்கவில்லை. அவன் சளைக்காது ‘எஸ்ஏஎஸ்’ என்கின்ற ஸ்கண்டிநேவியன் விமான நிறுவனத்தின் அலுவலகத்தை அணுகினான். அதில் இருவருக்கும் இடம் கிடைத்தது. விலை பற்றி விக்னேஸ் அப்போது கவலைப்படவில்லை. அப்பாவின் குணம் திரிக்குத் தெரியும். அவர் வரப்போகும் ஆபத்தில் இருந்து தப்பினாற் போதும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அப்போது பணம் ஒரு பொருட்டாக அவருக்குத் தெரியாது எனத் திரி எண்ணினாள். அப்பாவின் பயத்தில் நியாயம் இருக்கலாமோ என்கின்ற எண்ணமும் இடைக்கிடையே எட்டிப் பார்த்தது. அதன்பின்பு நடப்பது நடக்கட்டுமென அப்பாவைத் தொடரலானாள்.