5.83x8.ma-frontpngஒஸ்லோ விமான நிலையத்தில் இருந்து விக்னேசும் திரியும் அப்போதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்பாவின் அதிதீவிர உணர்ச்சிவசத்தால் சற்றுத் திகைப்பும், சலிப்பும் அடைந்திருந்தாள் திரி. விடுமுறை பாதியிற் குழம்பிய கவலை வேறு. சிறிது நேரத்திற் குளித்துவிட்டு வந்தவள் தனது கமராவை எடுத்தாள். அதைப் புரட்டிப் பார்த்தாள். இதைப் பார்த்த விக்னேஸ் துடித்துப்பதைத்து அதை அவளிடம் இருந்து பிடுங்கினான். அதை எதிர்பாராத திரி ‘ஏனப்பா இங்கயும் அதைப் பிடுங்கிறியள்?’ என்று சினத்தோடு சிணுங்கினாள். விக்னேஸ் சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திய பின்பு ‘இங்கபார் திரி… ஐரோப்பா இப்ப நல்லாய் மாறிப்போய் இருக்குது. இதை நீ இப்ப எங்கயாவது குடுக்க, அதை வைச்சே நாங்கள் அதிதீவிர வலதுசாரிகளின்ர எதிரியள் எண்டு முத்திரையக் குத்திப்போடுவாங்கள். பிறகு ஏதாவது ஒருசந்தர்ப்பத்தில எங்களையும் பிடிச்சு எங்கையும் அனுப்பிப் போடுவாங்கள். இதெல்லாம் இந்த ஐரோப்பாவிலேயே நடந்த விசயங்கள். அப்பிடிச் செய்யிறதுக்கு இப்ப இருக்கிற நிலமேல ஒரு பொய்வழக்க அவங்களால உருவாக்கமுடியும். தயவு செய்து நீ இப்பிடியான சிக்கலில மாட்டக்கூடாது. பலவருசத்துக்கு முதலே வந்தேறு குடிகளுக்கான சட்டங்களை கிரேக்கம் கிடப்பில போட்டிட்டுது. அப்ப ஈரானைச் சேர்ந்தவங்கள் வாயைத்தைச்சுச் சாப்பாடு சாப்பிடாமல் போராட்டம் நடத்தினவங்கள். வசதியாகச் சொந்த நாட்டில் இருந்தவர்கள் ஏதென்ஸ் தெருக்களில சேரிகள் அமைச்சு வாழ்ந்தாங்கள். ஈரானியர்களைப்போல அப்கான் நாட்டவங்களும் போராடினாங்கள். அதால எதாவது பிரயோசனம் இருந்ததா?. இல்லை. பிறகு வந்த காலத்தில மனிதத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் அகதிகளை மோசமா விலங்குகளைப் போல நடத்தினாங்கள். இப்ப நிலமை இன்னும் மோசமாய்ப் போயிட்டுது. அந்த நிலைமை சிலகாலங்களில இங்கையும் வரும். அது அகதிகளுக்கு மட்டும் இல்லாமல் மொத்த வெளிநாட்டவரையும் பாதிக்கும். அதுவும் நிறமான தோலுடையவர்கள் எண்டுற எங்களைக் கெதியாப் பாதிக்கும். நாங்கள் முந்திரிக்கொட்டை போல முதலிலேயே பலியாகிறது புத்தி இல்லை… விளங்குதா திரி’ என்றான் விக்னேஸ். அவன் பயத்திலும் கவலையிலும் குழம்பிப் போனதாகத் தோன்றியது.

‘எனக்கு விளங்குதப்பா. அதை நாங்கள் பாடசாலையில, வேலையில, தெருவில எண்டு எல்லா இடத்திலும் அனுபவிக்கத் தொடங்கீட்டம். ஆனா அதை நாங்களும் மறைக்கிறதால ஐரோப்பாவில இப்பிடி ஒரு கொடுமை நடக்குது எண்டது உலகத்துக்கு தெரியாமல் போயிடுமெல்லோ? நாங்கள் இயலுமானவரை உலகத்திற்கு என்ன நடக்குதெண்டு எடுத்துச் சொல்ல வேணும். நாங்கள் இப்ப நேரடிச் சாட்சியா இருக்கிறம். ஆனா இண்டைக்கு ரீவியில வெளிநாட்டவருக்கு இடையிலான சண்டையில் ஏதெனில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று கிரேக்கப் பொலீஸ் பச்சப்பொய் சொல்லும் அப்பா. எங்களிட்ட அதற்கு நேர் எதிரான ஆதாரம் இருந்தும் அதை இந்த உலகத்துக்கு தெரியாமல் மறைக்கிறது நாங்கள் எங்களப் போன்றவர்களுக்குச் செய்யிற துரோகம் இல்லையா அப்பா? எப்படியாவது இந்த ஆதாரம் வெளி உலகத்திற்கு தெரியோணும். கிரேக்கம் மறைக்கிறதில ஒருதுளியாவது வெளி உலகத்திற்குக் கசியவேணும். நல்ல மாமாக்களாய் நடிச்சுக்கொண்டு, அத்தனை துரோகத்திற்கும் பின்னிற்கிறவங்களை அடையாளம் காட்டவேணும். நான் சொல்லுறது சரியா அப்பா? எங்கட உயிர்கள் பெறுமதியானவைதான். அதுக்காக அநியாயத்துக்கு எதிராகக் கிடைச்ச ஆதாரத்தை இருட்டடிப்புச் செய்யிறதில என்ன நியாயம் இருக்கு அப்பா? சொல்லுங்க’ என்றாள்.

‘நீ சொல்லுறது உனக்கு இப்ப சரியாக இருக்கலாம். உன்னுடைய வயதும் அதின்ர வேகமும் அப்பிடி. இப்பிடித்தான் நாங்களும் சின்னவயசில திசைமாறிப் போயிருக்கிறம். அதைவிடு. அதுக்காக நாங்கள் அந்தக் கொலைகளுக்குச் சாட்சி எண்டு இதைக் கொண்டுபோய் மீடியாவுக்குக் கொடுக்கவோ, அல்லது பொலீஸிட்டப் போகவோ உன்னை விட முடியாது. அதுகின்ர விளைவுகள் தொடர்கதையாகும்’ என்றான் விக்னேஸ். ‘அப்படியென்டா நீங்கள் என்னதான் செய்யலாம் எண்டுறியள் அப்பா?’ என்றாள் திரி.

விக்னேஸ் சிறிது நேரம் சிந்தித்தான். ‘ஒருவகையில் இந்த ஆதாரம் வெளியே வருவது இனி நடக்கப்போகும் மாபெரும் அவலங்களைக் குறைக்கலாம். அதற்காக என்றாலும் இதை வெளிப்டுத்துவது நல்லதே. அப்படி வெளிப்படுத்துவதாய் இருந்தாலும் எங்களது பெயர் எவ்வகையிலும் வெளியே தெரியாது பாதுகாத்துக் கொள்ளவேண்டும்’ என்பதாக மனதிற்குள் ஓர் முடிவுபண்ணினான்.

அதை எப்படிச் செய்வது என்பது அவனுக்குப் புரியவில்லை. பின்பு போலியாக மின்னஞ்சல் ஒன்றை உருவாக்கி… அந்த முகவரியில் இருந்து இந்த வீடியோவை அனுப்பிவிடுவது எனத் தீர்மானித்தான். அதுவும் வீட்டில் இருந்து அனுப்புவது பாதுகாப்பாய் இருக்காது என்பதை அறிந்தவன், மத்திய புகையிரத நிலையத்திற்குச் சென்று, அங்கு உள்ள ‘நெற்கபே’யில் இருந்து அதை அனுப்ப முடிவு செய்தான். பின்பு திரியைப் பார்த்து ‘சரி நான் இதை ஏதாவது மீடியாவுக்கு அனுப்பீட்டு வாறன். ஒரு ‘பென்றைவ் ‘ எடுத்தா’ என்றான். திரி கொண்டுவந்து கொடுத்த ‘பென்றைவ்’வில் அந்த வீடியோவை ‘எம்பிதிறி’ ‘ஃபைலா’க்கிப் பதிந்தான். பின்பு திரியைக் கவனமாக வீட்டில் இருக்குமாறு பணித்துவிட்டு மத்திய புகையிரத நிலையத்தை நோக்கிச் சென்றான்.

‘ஃபைல் ‘கள் பகிர்ந்து கொள்ளும் ஒர் இணையத்தளத்திற்குத் தனது வீடியோவை முதல் தரவேற்றம் செய்தான். பின்பு அதன் முழு முகவரியை மின்னஞ்சல் மூலமாகப் பல பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்தான். அவன் பணி அத்தோடு முடிந்தது. அதன் வினை அதன் பின்பு தொடங்கியது.

பத்திரிகைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் அந்த வீடியோ உண்மையானதா என்பதை நிரூபித்த பின்பே வெளியிட்டார்கள். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதிதீவிர வலதுசாரிகளின் பிரச்சாரத்தில் மூளைச்சலவை செய்யப்பட்ட பலரும், அதைப் பெரிதுபடுத்தாது புறம்தள்ளினார்கள். நம்ப மறுத்தனர். சிலர் இப்படியான பிரச்சனைகளுக்கு இதுதான் தீர்வாக இருக்கமுடியுமென வன்மமாக எண்ணினார்கள். சிலர் மாத்திரமே அநியாயத்திற்கு எதிராகப் பொங்கி எழுந்தார்கள்.

அந்த வீடியோ வெளிவந்ததைத் தொடர்ந்து பல நகரங்களிலும் கிரேக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்பன நடந்தன. அதில் நிறமனிதர்களே பெருவாரியாகப் பங்குகொண்டார்கள். சுதேசிகள் பலர் பயத்தில் அதில் இருந்து ஒதுங்கிவிட்டார்கள். அதிதீவிர இடதுசாரிகளும் அதிகம் துணிந்த சில இடதுசாரிகளும், கருணையுள்ள மதவாதிகளும், மனிதத்தை மதிக்கும் சிலரும் மட்டும் இந்த நிறமனிதர்களோடு ஊர்வலங்கள் போவதற்குத் துணிந்து வந்தார்கள். அதிகமான அரசாங்கங்கள் அந்த ஊர்வலங்களை ஊடகங்களில் இடம்பிடிக்காதவாறு பார்த்துக்கொள்ள ஊடகங்களுக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்தன. அந்த அழுத்தங்களையும் மீறிச் சில ஊடகங்கள் கேள்விகளை எழுப்பின. அந்த விவகராம் ஒரளவிற்கு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

கிரேக்க அரசாங்கம் சில அரசுகளிடம் இருந்து கிடைத்த அழுத்தங்களை அடுத்து அந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பு திரிக்கு ஓரளவு நிம்மதி தந்தாலும் விக்னேஸ் இது ஒரு கண் துடைப்பு மட்டுமே என்பதாய்க் கருதினான். அவன் தங்கள் நாட்டின் சரித்திரத்தில் இப்படி எத்தனை கண்துடைப்புகள் நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தான். அந்தச் செய்தியும், அதன் இழப்பும் தொடர்ந்து வந்த செய்திகளில் மூழ்கிச் சிலகாலத்திற் காணாமற் தொலைந்து போயிற்று. உலகத்தின் நடப்பே அப்படித்தான். முழித்திருக்க மறந்துபோகும் வேகத்தில் அது இயங்குகிறது என்பது அவன் புரிதல். அவன் கணிப்புப் பிழைக்கவில்லை. உலகசரித்திரம் பிழைக்கப்போவது அவனை மிகவும் வருத்தியது.