5.83x8.ma-frontpngவிக்னேஸ் அன்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். தெருவில் வாகனத்தை நிறுத்தாது தனது கராஜில் அதை நிறுத்துவதுதான் அவன் வழக்கம். இன்றும் விக்னேஸ் தனது வாகனத்தைக் கராஜில் நிறுத்தப்போனான். அப்போது இதற்கு முன்பு பார்த்திராத கறுப்பு வாகனமும், அதனுட் சிலரும் தரிப்பிடத்தின் வாசலில் தமது வாகனத்தை நிறுத்திவிட்டு… அதற்குள் இருந்தார்கள். பார்ப்பதற்கு அவர்கள் சற்று வித்தியாசமாகத் தோன்றினார்கள். அவர்கள் முகங்கள் நன்றாகத் தெரியவில்லை. இவர்கள் ஏன் இங்கு தரித்து நிற்கிறார்கள் என்பதாக எண்ணிய விக்னேசுக்கு ஒன்றும் புரியவில்லை. தனது வாகனத்தை அவசரமாக கராஜில் நிறுத்திவிட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு விரைவாக நடக்கலானான்.

தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வந்த விக்னேஸ் பயத்துடனே அவர்களைப் பார்க்காது தனது வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போனான். அவனுக்கு ஒடிவிடவேண்டும் என்கின்ற உந்தல். உதறல். வெட்கமும் தன்மானமும் அதற்கு இடம் கொடுக்காது இழுத்துப் பிடித்தன. அவன் அதையும் மீறி வேகமாக நடந்தான். என்றும் இல்லாத பயம் இன்று அவனைக் கிலிகொள்ள வைத்தது. அவர்கள் உருவம் அதற்குக் காரணமானது. இந்த இடத்தில் நிற்பது அதைவிடப் பிரமிப்பானது. காலம் கெட்டுப்போய்விட்டது. எதுவும் நடக்கலாம். எங்கும் நடக்கலாமென எண்ணியவண்ணம் விரைவாக அடியெடுத்து வைத்தான்.

திடீரென அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய ஆட்கள் அவனை நோக்கி ஒடிவருவதைக் கண்டான். அதைப் பார்த்தபோது அவனுக்கு அதிர்ச்சியாகியது. மயக்கமே வந்துவிடும்போற் தலைசுற்றியது. அவர்கள் இப்போது முகமூடி அணிந்திருந்தார்கள். கண் இமைக்கும் பொழுதிற்குள் அவனைக் கறுப்பு முகமூடியால் மூடினார்கள். பின்பு தூக்கிச் சென்று வாகனத்திற்குட் போட்டார்கள். கையையும் காலையும் ஷரேப்|பால் இறுக்கிப் பிணைத்தார்கள்.

விக்னேசிற்குத் தனது வாழ்க்கை இன்றோடு முடிந்துவிடுமோ என்கின்ற பயம் மூர்க்கமாக இதயத்தை அழுத்தியது. அது நரம்புகள10டாக மின்சாரமாய் மூளையில் ஏற, மூளை அதை மொழிபெயர்த்து, பயமாக அவனை உறைய வைத்தது. முருகா என்னை இவர்கள் ஒன்றும் செய்யாது விடவேண்டுமென அவனைக் கேளாது அவன் நா தன்பாட்டில் முணுமுணுத்தது. அவன் இயலாமையில் தனது வாழ்வின் முடிவைக் கடவுள் கையில் கொடுத்தான்.

அவர்கள் விக்னேசை வாகனத்தின் இருக்கைக்குக் கீழே போட்டுக் காலால் மிதித்தனர். மீண்டும் மீண்டும் சப்பாத்துக் கால்களால் உதைந்தார்கள். உடம்பின் அனைத்துப் பாகங்களிலும் பாகுபாடு இன்றிச் சரமாரியாகச் சப்பாத்துக் கால்களாற் குத்தினார்கள். விக்னேஸ் வலியிற் துடித்தான். மூக்கால் இரத்தம் வருவதை வெப்பக் கோடுகளாய் உணர்ந்தான். அது வாயிற்பட்டுக் கரித்தது. வாழ்க்கையே முடிந்து போகும் உண்மையும் நெஞ்சிற் கரித்தது. சில கணங்கள் முருகனை மறக்க வேண்டியதாயிற்று. ‘என்னை அடிக்காதேங்க என்னை அடிக்காதேங்க’ என அவன் அவர்களிடம் நொஸ்கில் (நோர்வே மொழி) மன்றாடினான். அவன் வேண்டுதலும் மன்றாட்டமும் அவர்கள் காதில் விழவில்லை. அவர்கள் அவனைத் தொடர்ந்தும் தாக்கினார்கள். விக்னேசுக்குத் தான் இப்படியே செத்துவிடுவேன் என்கின்ற எண்ணம் எழுந்தபோது மயக்கம் வந்தது. அதன்பின்பு அவர்கள் அடிப்பதை நிறுத்தினார்கள். அந்த வாகனம் ஒரு மலையில் இருந்த சிறிய வீடொன்றை நோக்கிச் சென்றது.

*

கண்விழித்தபோது மரத்தாலான சிறிய வீட்டிற்குள் அவன் கட்டி வைக்கப்பட்டிருந்தான். அந்த வீடு ஒரு மலையில் இருப்பதை அவனால் அவதானிக்க முடிந்தது. அந்த வீடு ஒரே ஒரு அறையை மட்டுமே கொண்டது. விக்னேசுக்கு எதிரே ஒருவன் முகமூடி அணிந்தவண்ணம் நின்றான். முகமூடியில் இருந்த ஓட்டையால் அந்த மனிதனது கண்கள் கூர்மையான ஒளிக்கீற்றாய் மின்னின. அவன் கண்களின் சிவப்பு நிறம் விக்னேசைக் கதிகலங்க வைத்தது. அந்த மனிதன் கைளிற் பெரிய பெரிய வண்ணங்களிற் பச்சை குத்தப்பட்டிருந்தது. வினாயகர் கையில் இருக்கும் சுவாஸ்திகா பல வண்ணங்களில், வடிவங்களில் அவன் மேனியில். அந்த சுவாஸ்திகாவைப் பார்க்க விக்னேசிற்கு நடுக்கமெடுத்தது. அந்த அடையாளம் பிள்ளையார் கையில் எதற்காக இருந்தது என்பது விக்னேசுக்குத் தெரியாது. உலக வரலாற்றில் அது எந்த இடத்தைப் பிடித்தது என்பது விக்னேசுக்குத் தெரியும். அது கிட்டத்தட்ட எழுபத்தி ஒன்பது மில்லியன் மக்களைப் பலியெடுத்தது என்பது அவனுக்குப் புரியும். அதைப் பச்சைகுத்திக் கொள்ளுமளவிற்கு ஒருவன் வருவானானால் அவனிடம் எவ்வளவு வெறுப்பு இருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது. இவனிடம் அன்பைக்கொடுத்து வெறுப்பை அகற்ற முடியாது. அதுவும் நிறமனிதர்களின்மேல் பொங்கும் வெறுப்பை இவர்களிடமிருந்து அகற்றமுடியாது. அந்த உண்மை அவனை அச்சப்படுத்தியது. எருதற்ற இயமன் பாசக்கயிறற்று அவன் முன்னே தோன்றினான். அனல்கொண்ட கண்ணால் அவனை அற்பமாகப் பார்த்தான். இயமனின் அந்தப் பார்வையை நினைக்க விக்னேசிற்குத் தலை கிறுகிறுத்தது. மீண்டும் மயக்கம் வந்துவிடும்போலத் தோன்றியது.

நோர்வேயில் கடந்தகால வரலாற்றில் ஒருசில கொலைகள் நடந்தன. அது ‘பென்சமீன் ஹர்மென்சன்’ என்னும் வளர்ப்புப் பிள்ளையைக் கொலைசெய்தபோது உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்பொழுது நவநாஜிகளின் பெருக்கமும், ஆளுமையும் நிறமான மனிதர்களைக் கலங்கடித்தன. அந்தக் கொலை ஒரு துன்பகரமான செயல் என்றாலும், அது நோர்வே மக்கள் எவ்வளவு மனிதத்தை நேசித்து நின்றார்கள் என்பதைக் காட்டிற்று. ஒஸ்லோ நகரத்தையே அது உலுக்கியதை இன்றும் விக்னேசால் மறக்க முடியாது. அதற்கு எதிராகத் திரண்ட மக்களின் தீப்பந்த ஊர்வலம் இன்றும் அவன் நினைவில் பசுமையாக ஜொலிக்கிறது. அது நிறவெறிக்கு எதிரான நோர்வே மக்களின் ஒருமித்த கருத்தை அன்று வெளிப்படுத்தியது. மனிதத்தில் தாங்கள் வைத்திருக்கும் விசுவாசம் பற்றி நவநாஜிகளுக்கும், உலகத்திற்கும் உரத்துக் கூறியது.

அந்த மக்கள் இப்போது மாறிவிட்டார்கள். ‘அடிமேல் அடிக்க அம்மியும் நகரும்’ என்பதுபோலப் பிரச்சாரத்தின் மேற் பிரச்சாரம்செய்ய மக்கள் மாறத் தொடங்கினார்கள். வெள்ளை இனத்தின் எதிரியாக இஸ்லாத்தையும், அதன் கட்டுப்பாடுகளையும் காட்டி அதிதீவிர வலதுசாரிகள் கடுமையாகப் பிரச்சாரம் செய்தார்கள். அதற்கு அடுத்ததாக ஒட்டுமொத்த நிறமனிதர்களையும், அவர்களது கலாசாரத்தையும் கூண்டில் ஏற்றினர். குறைகள் கண்டுபிடித்தனர். இறுதியில் இல்லாமற் செய்யப்படவேண்டிய பாவிகளை அடையாளங் காண்பதில் வெற்றிகண்டார்கள்.

சுதேச இளம் பெண்களை ஒழுக்கமில்லாதவர்கள் என்பதாக, குரன்லாண்டில் வைத்துச் சில கடும்போக்கு இஸ்லாமியர் தாக்குதல் நடத்தினர். அப்படியான சிந்தனை உள்ள நிறமான வந்தேறுகுடிகள் சிலர் தாடிகளோடு அலைகிறார்கள் என்பதில் ஐயம் இல்லை. அது தங்களுக்குத் தாங்களே எண்ணையை ஊற்றிப் பற்றவைத்துக் கொள்வதான ஆபத்தை விலைக்கு வாங்குவது. அப்படியான தனிமனிதர்களின் செயல் அனாகரிகமானதே. தங்களது மருந்திற்குத் தாங்களே முதல் நோயாளர்களாக, பலிக்கடாக்களாகப் போகும் நிலை வந்தது. முதலில் இஸ்லாமியரை நோக்கியே நவநாஜிகளினதும், சில சுதேசிகளினதும் வெறுப்பு மூர்க்கம்கொண்டது. பின்பு அது எல்லா நிறமனிதருக்கும் பரந்தது. நிறமான வந்தேறுகுடிகளை அவர்கள் எதிரிகளாக எண்ணினர். அவர்களை ஓழித்துக்கட்ட வேட்கை கொண்டனர். அதற்கான விடை அவர்களிடம் தயாராகிற்று.

அந்த நவநாஜி விக்னேசை நோக்கிக் கோபமாகப் பேசத் தொடங்கினான்.

‘கறுத்தப் பண்டியே, பெரிய அறிவாளி என்கின்ற நினைப்பாடா உனக்கு? கிரேக்கத்தில் எடுத்துவந்த வீடியோவை நீ அழித்திருக்க வேண்டும், அல்லது அதை வெளியிடாமல் விட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் அதை வெளியிட்டு எவ்வளவு பெரிய பிரச்சனையை உருவாக்கினாய்? அதற்குப் பதில் நீ உன் உயிரை இன்று விடவேண்டும். பார்த்தாயா? எப்படி அது எங்களுக்குத் தெரியும் என்று பார்த்தாயா? எங்களுக்கு விசுவாசமானவர்கள் எத்தனைபேர் பொலீஸில் இருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா? நீ எல்லா நடவடிக்கைகளையும் கவனமாகச் செய்தாய் என்கின்ற நினைவோடு இருக்கிறாய். ஆனால் ஏதெனில் இருந்து உன்னை நாங்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டோம். பின்பு நீ ‘சென்றால்ஸ்தஸ்சூன்’ (மத்திய புகையிரதநிலையம்) சென்று, அங்கே உள்ள ‘நெற்கபே’யில் இருந்து அந்த வீடியோவை அனுப்பியதும் எங்களுக்குத் தெரியும். நீ அதில் உன்னை மறைக்கத் தவறிவிட்டாய். எல்லாவற்றையும் கவனித்த வீடியோ காட்சிகள் இப்போது எங்களிடம் இருக்கின்றன. அது உனக்குத் தெரியுமா? பொலீஸ் நினைத்தால், உன்னைப் பயங்கரவாதியெனக் கைதுசெய்து ஆதாரம் சோடிக்கும். ஆனால் உன்னைப் போன்ற கறுப்பர்களை உயிரோடு வைத்து உணவு போடுவது அல்ல எங்கள் நோக்கம். எங்கள் நோக்கம் களையெடுப்பது. கறுப்பர்களைக் களை எடுத்து வெள்ளை இனத்தைச் செழிக்க வைப்பது’ என்றான் அவன். கோபத்திற் கையை ஓங்கிக் குத்த வருவது போல விக்னேசை நோக்கிச் சைகை காட்டினான். விக்னேஸ் எப்படியாவது சமாளித்து, இவனிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென எண்ணினான். திரியை எப்படியாவது உயிரோடு திரும்பிப்போய்ப் பார்த்து விடவேண்டும் என்கின்ற அடங்காத ஆசை அவன் மனதில் கரையிற் தூக்கி வீசப்பட்ட மீனாகத் துடித்தது. அவன் கெஞ்சியாவது உயிர்ப் பிச்சை கேட்கும் சாதாரண மனித குணத்திற்கு இறங்கினான். கெஞ்சினான். மன்றாடினான்.

‘அது தவறுதலாக நடந்துவிட்டது. தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் அப்படி எல்லாம் நடக்கமாட்டேன். என்னை நம்புங்கள்’ என்றான் விக்னேஸ். ‘வாயை மூடு கறுத்தப்பண்டி. உனக்கு போதிப்பதற்கோ அல்லது மன்னிப்பு வழங்குவதற்கோ இங்கு உன்னைக் கொண்டுவரவில்லை. உன்னைப் போன்ற கறுப்பர்கள் இந்த உலகத்தை அசிங்கப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு விடுதலை தந்து இந்த உலகத்தைச் சுத்தப்படுத்துவதுதான் எங்கள் பணி. அதைத்தான் உனக்கு ஏற்கெனவே கூறியிருந்தேன். எங்கள் பணி உன்னோடு ஒஸ்லோவில் மீண்டும் ஆரம்பமாகப் போகிறது.’ என்றான் கோபமாக. அதே வேகத்தில், தனது காலைத் தூக்கி நிலத்தில் உதைத்தான். அதைப் பார்த்த விக்னேஸ் ஒருகணம் நடுங்கிப் போய்விட்டான். பின்பு அவன் கோபமாக வெளியே செல்ல மூன்று முகமூடி அணிந்தவர்கள் கையில் ‘பேஸ்போல்’ கட்டைகளுடன் உள்ளே வந்தார்கள். விக்னேசுக்கு அதைப் பார்க்கவே உயிர் போய்விடும் வேதனை உடலெல்லாம் பரவியது. மயக்கம் வந்தது.

*

விக்னேசுக்கு நினைவு வந்தபோது உலாத்திற்குச் சென்றுவரும் காட்டுப்பகுதியில் அவர்கள் அவனைப் போட்டிருப்பதை உணர்ந்தான். அவனைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. உடம்பெல்லாம் இரத்தம் வழிந்து காய்ந்துபோயிருப்பதை அவனால் உணர முடிந்தது. கைகால் முறிந்திருக்க வேண்டும். அவனால் அவற்றை அசைக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் மயக்கம் தரும் வலி அவனை அலையலையாகத் தாக்கியது. தாகத்தில் நாக்கு வரண்டு சொரசொரத்தது. அதைச் சொல்வதற்கோ, கையை அசைத்துக் கேட்பதற்கோ உடலில் சக்தி இருக்கவில்லை. பல மனிதர்கள் பலவிதமாக அவனைப் பார்த்தார்கள். சில மனிதர் வெறுப்பில் எச்சில் உமிழ்வதைப் போன்று தோன்றியது. சிலர் ஐயோ பாவம் என்கின்ற பார்வையால் அனுதாபப்படுவது போன்று இருந்தது. வானம் பல வர்ணமாகத் தோன்றியது. ஆகாயத்தில் பறப்பதாய்… சூரியனை நோக்கிக் கையை நீட்டிக் கொண்டு போவதாய்… அவனை மத்திய புள்ளியாக வைத்து வானம் சுற்றியது. மேலே இருப்பது சூரியனா, அல்லது சூரியனே இல்லாத பிரபஞ்சமா? விக்னேசுக்கு மீண்டும் மயக்கம் வந்தது. அந்த மனிதர்களின் விம்பங்கள் கலங்கிப்போகக் கண்கள் இருண்டுகொண்டன.

சில மணித்தியாலங்கள் கழித்து மீண்டும் விழிப்பு வந்தபோது அவன் மருத்துவ மனையில் இருப்பது புரிந்தது. நல்ல மனிதர்கள் உலகத்தில் இன்னும் இருக்கிறார்கள். திரி கவலையோடு அவனது முகத்தையே வெறித்துப் பார்த்தாள். விக்னேசுக்குத் தனது வாழ்வில் கிடைத்த அதிர்ஷ்டம் பற்றி நம்பமுடியவில்லை. விக்னேஸ் கண்விழித்ததைக் கண்ட திரி அப்பாவின் நெற்றியில் ஆசையாக… அவசரமாகப் பல முத்தமிட்டாள். அவளுக்கு உலகத்தில் இருக்கும் ஒரேயொரு சொந்தம் அவன். அப்பா இல்லாத வாழ்வை அவளால் நினைத்துப் பார்க்க முடியாது.