5.83x8.ma-frontpngகாலம் வேகமாகக் கழிவதற்கு நித்திய வரம் பெற்றது. அதன் கழிவில் உலகத்தில் வந்துவிடும் சடுதியான மாற்றங்கள். அதன் தற்போதைய வேகத்தைவிட விவேகமே உயிர்வாழ்வதற்கான உத்தியாக நிறமான வந்தேறுகுடிகளுக்குத் தேவைப்பட்டது. ‘கெத்தோ’ மயமாகிவிட்ட ஒஸ்லோவின் சில பகுதிகளில் நிறமான வந்தேறுகுடிகளே தனியினமாகினர். வேறுசில இடங்களிலும் நிறமான வந்தேறுகுடிகள் முன்பு தனிவீடு வாங்கினார்கள். அப்படித் தனிவீடுகள் வாங்கியவர்களிற் பலர் தங்கள் வீடுகளைப் பயத்தில் சுதேசிகளுக்கு விற்றுவிட்டு, சுதேசிகள் தொடர்ந்தும் குடியிருக்கும் மாடிக்கட்டங்கள் பார்த்து இப்போது வீடுகள் வாங்க முயற்சித்தார்கள். அப்படிப்பட்ட வீடுகளை வாங்குவது நிறமனிதர்களுக்குப் பெரும்பாடாகியது. சுதேசிகள் ஒர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் அதிகமாய் குடியிருந்தால், நிறமான மனிதர்களுக்கு அங்கு வீட்டை விற்க மறுத்தார்கள். நிறமான மனிதர்கள் அதிகவிலை கொடுத்தாலும் அதை அவர்களுக்கு விற்க அவர்கள் விரும்பவில்லை. அதேவேளை சுதேசிகள் குறைவாக இருந்த கட்டடங்களில் நிற மனிதர்கள் இலகுவாய் வீடு வாங்க முடிந்தது. அப்படியான வீடுகள் வரும் காலத்தில் இனவெறியரின் தாக்குதலுக்கு இலக்காகும் என்கின்ற பயம் நிறமான வந்தேறுகுடிகளை அலைக்கழித்தது.

சுதேசிகளும் நிறமான வந்தேறுகுடிகளும் துருவங்களாகி… மெது மெதுவாகப் பிரிந்து செல்வது… அதிதீவிர வலதுசாரிகளுக்கு உள்ளுரப் பெரும்மகிழ்வைக் கொடுத்தது. அவர்கள் இதைத் தடுத்துநிறுத்தாது அது தனிமனித சுதந்திரம் என்கின்ற வகையில் ஊக்கம் கொடுத்து வந்தார்கள். இந்தவிதமான ‘கெத்தோ’க்கள் நிறமான வந்தேறுகுடிகளை மட்டும் கொண்டதாக அமைந்ததால் அவர்கள்மேற் தாக்குதல் செய்பவர்களுக்கு அது இலகுவாகியது. அந்தக் குறிப்பிட்ட தெருவில் சென்று தாக்குதல் நடத்தினாற் கொல்லப்படுபவர்கள் எல்லோரும் நிறமான வந்தேறுகுடிகளாய் இருப்பார்கள் என்பது அவர்கள் கணிப்பாகியது. நிறமான வந்தேறுகுடிகளைப் பலவீனமான ஓர் இடத்தில் தள்ளி இருப்பது பற்றி அதிதீவிர வலதுசாரி அரசாங்கம் கரிசனை காட்டவில்லை.

இரவில் நிறமான வந்தேறுகுடிகள் இப்போது எங்கும் போக விரும்புவதில்லை. முன்பும் ஆபிரிக்க நாடுகளைச் சார்ந்தவர்கள்தான் அதிகம் அப்படிச் செல்வார்கள். எதாவது பிரச்சனை வந்தாலும் எதிர்ப்பதற்கு ஏற்ப உடல்வாகு அவர்களிடமுண்டு. ஆசியர்கள் எப்போதும் கொக்கேசியரைவிடச் சிறியவர்களே. அது உடல்ரீதியாக கொக்கேசியரை அல்லது ஆபிரிக்கரை எதிர்கொள்வதிற் சிக்கல்களை ஏற்படுத்தியது.

இப்போது இரவில் ‘டிஸ்கோ’ போன்ற இடங்களுக்குப் போகின்றவர்கள் சிலவேளை பிணங்களாக ஆற்றிலோ அல்லது கடலிலோ மிதப்பதும் வழமை. அதிதீவிர வலதுசாரி அரசாங்கம் பதவிக்கு வரும்போது அதிக காவலரை நியமிப்பதாகப் பசப்புவார்த்தை கூறியது. பின்பு அதை வழமைபோலக் காற்றிற் பறக்க விட்டது. காவலர்களுக்கு ஒதுக்கப்பபடும் நிதி மிகவும் குறைந்ததில் அவர்களின் சேவை அரைவாசியாகியது. அதுவும் நிறமான வந்தேறுகுடிகள் கொலை செய்யப்படுவதுபற்றி அந்த அதிகாரிகள் அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை. கடமைக்காகச் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு விசாரணைகளைக் கிடப்பிற் போட்டுவிடுவார்கள்.

பொலீஸின் அக்கறையின்மை நவநாஜிகள், அதிதீவிரவாலதுசாரிகள் போன்றவர்களைச் சுதந்திரமாகச் செயற்படவிட்டது. அவர்கள் தற்போது நிறமான வந்தேறுகுடிகளைக் கொலை செய்வதிற் பயமின்றிச் செயற்படத் தொடங்கினார்கள். நோர்வேக்குள் இந்த மாற்றங்கள் கடைசியாகத்தான் பிரவேசித்தன. அப்படியான மாற்றங்கள் முதலிற் கிழக்கு ஐரோப்பாவையும், பின்பு மேற்கு ஐரோப்பாவின் வறிய நாடுகளையும் பீடித்தன. அதன்பின்பு மேற்கு ஐரோப்பாவின் செல்வந்த நாடுகளையும் அது ஆட்கொண்டது. இறுதியில் ஸ்கண்டிநேவியன் நாடுகளையும் அது பீடித்துவிட்டது.

வறுமையான நாட்டில் மட்டும்தான் நவநாஜிக்கள் முளைவிடுவார்கள் என்பதாக வரலாறு கிடையாது. தொண்ணூறுகளில் நோர்வேயில் அது முளைவிட்டபோது நோர்வே பணக்கார நாடுகளில் ஒன்றாகவும், வசதியான நாடாகவும் இருந்தது. வசதி இருப்பவர்களுக்குத்தான் அதிகமான வெறுப்பும் வருவதாய் அது புதிய வரலாறு காட்டிநின்றது. அப்போதைய அரசாங்கம் அதன்மீதுகாட்டிய கடுமையான அக்கறையில் அது அடங்கிப்போயிற்று.

சில மனிதர்கள் தாழ்வுமனப்பான்மையுடன் மற்றைய மனிதர்களைப் பார்த்து எப்போதும் வெறுப்புக் கொள்கிறார்கள். அப்படி வெறுப்பு ஏற்படும் போது, மற்றைய மனிதர்களைத் தாக்கச் சிறுபிள்ளைத்தனமான காரணங்கள் துணையாகின்றன. வெறுப்பில் இருக்கும் அவர்களைப் போன்றவர்களும் அக்காரணங்களைப் பரிபூரணமாக நம்புகின்றனர். அமெரிக்காவில் நடந்த ஒன்பது பதினொன்றிற்குப் பின்பு இஸ்லாமியர்மீதான வெறுப்பை ஊட்டுவது இப்படியானவர்களுக்கு மிகவும் எளிதாகியது.

தற்போது இந்தியா பாகிஸ்தான் யுத்தத்திற்குப் பின்பு, அனைத்து நிறமான வந்தேறுகுடிகளையும் அழித்தொழிப்பதற்கான காலம் வந்துவிட்டதாய் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அது மேலும் பல அங்கத்தவரை அப்படியான அமைப்பிற்குள் உள்ளிழுத்துக்கொள்ள வசதியாகியது. அதை நவநாஜிகள் மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தத் தொடங்கினார்கள். இந்தச் செயற்பாடு தங்களுக்கு ஆபத்தாய் வராதவரைக்கும் கண்டும் காணாமலும் அதிதீவிர வலதுசாரிகளின் அரசு காலம்கடத்தியது. அது பலருக்கும் தாங்கமுடியாத விசனத்தை உண்டுபண்ணியது. எப்படி இவர்களாற் கடந்தகால ஐரோப்பிய வரலாற்றை மறக்க முடிந்தது என்கின்ற கேள்வியே பலர் மனதிலும் எழுந்தது.

*

விக்னேஸ் திடீரென விழித்துக்கொண்டான். அவனுடம்பு வியர்த்து, வியர்வையில் தெப்பமாக நனைந்திருந்தது. தன்னை நான்கு நவநாஜிகள் கலைத்துக் கலைத்துச் சுடுவதாய்க் கனவுகண்ட ஞாபகம் அவன் மூளையைவிட்டு அகலவில்லை. என்ன கனவு இது என்பதாக எண்ணியவண்ணம் திரும்பவும் படுக்க முயன்றபோது, அம்புலன்ஸ் பொலீஸ் ஆகியவற்றின் சத்தம் திடீரெனக் கேட்கத் தொடங்கியது. எங்கேயாவது ஏதாவது பிரச்சனையாக இருக்குமென நினைத்தான். கட்டிலைவிட்டு எழுந்து இருக்க மனம் இல்லாதவனாய்த் தொடர்ந்தும் அப்படியே படுத்தான். அம்புலன்சும் பொலீசும் பிரதான பாதையாற் போகாது தங்களது ஒழுங்கைக்குள் இறங்கிய சத்தம் கேட்டவுடன் விக்னேஸ் படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தான். என்னவாக இருக்கும் என்பதைப் பார்த்துவிட வேண்டும் என்கின்ற ஆவல் அவனை உந்தித் தள்ளியது. அவன் தனது உடுப்புகளை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டான். திரி எழுந்து விட்டாளாவென ஒருமுறை அவளது அறைக் கதவை மெதுவாகத் திறந்து பார்த்தான். அவள் ஆழமான தூக்கத்தில். அவன் அவளை எழுப்பிவிடாது கதவை மூடிவிட்டுப் போகும் போது வெளிக்கதவை மெதுவாகப் பூட்டினான். பின்பு ஒட்டமும் நடையுமாக நீல ஒளிவரும் திசையை நோக்கிச் சென்றான்.

அந்த வீடு விக்னேசின் வீட்டில் இருந்து நானூறு மீற்றர் தொலைவில் இருந்தது. அதில் ஒரு சோமாலியக் குடும்பம் குடியிருந்தது. அவர்கள் வழமையான பாரம்பரியச் சோமாலியக் குடும்பத்தைப் போன்று அல்லாது சுதந்திரமாக, சுயமாகப் பழகும் மனிதர்கள். அந்தச் சோமாலிய மனைவியோ அல்லது அவரின் மகளோ முக்காடு போட்டுக்கொண்டு போனதை விக்னேஸ் ஒருபோதும் கண்டதில்லை. அவர்கள் தங்கள் கலாசாரதத்தை மறக்காவிட்டாலும் நவீனத்தையும் சுதந்திரத்தையும் தத்தெடுத்துக் கொண்டவர்கள்.

அவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் உள்ளனர். அந்த ஆண்பிள்ளைகள் பதினெட்டு வயதிற்கும் இருபத்திரண்டு வயதிற்கும் இடைப்பட்டவர்களாய் இருந்திருப்பார்கள். எப்போதும் கூட்டாக நண்பர்கள் போலத் திரிவது அவர்கள் வழக்கம். விக்னேஸ் அவர்களை இடைக்கிடை தெருவிற் காண்பான். சிலவேளை அவர்கள் காரில் ஏதோ ஒரு மொழியில் பாட்டுக் கேட்டவண்ணம் கைகாட்டிவிட்டுச் செல்வார்கள். விக்னேசும் பதிலுக்குக் கைகாட்டுவான்.

இந்த வெறுப்பிற்கு மத்தியிலும் சில நோர்வே நாட்டு இளம் பெண்கள் அவர்கள் வீட்டிற்கு வந்து போவதை விக்னேஸ் பார்ப்பான். அப்பெண்களை அந்த இளைஞர்கள் தங்கள் கார்களில் ஏற்றிச் சுற்றித் திரிவார்கள். இளம் சமுதாயத்தின் மத்தியிலும் வெறுப்பு விதைக்கப்பட்டது. எனினும் அதைப் புரிந்துகொண்டு துணிவாகச் சில இளைஞர்கள் கலந்து பழகினர். அதைப் பார்க்கும் போது விக்னேசிற்கு நம்பிக்கை உருவாகும். கறுப்பரோடு சேர்ந்து திரிவதற்காய் நவநாஜிகளிடம் அப்படியான சுதேச இளைஞர்கள் அடி வாங்குவதும் உண்டு. அதற்கும் அஞ்சா உள்ளங்களே கலப்பதற்குத் துணியும்.

அங்கே என்ன நடந்தது என்பதை அறிய வேண்டும் என்கின்ற ஆவலை விக்னேசாற் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் ஓட்டமும் நடையுமாக அந்த வீட்டை நோக்கிச் சென்றான்.

அவன் அங்கு போகும் போது கிட்டே நெருங்காதவாறு பொலீஸ் தடுப்பு நாடாக்களை இழுத்துவிட்டார்கள். அது விக்னேசை உள்ளே போகவிடாது தடுத்தது.

சிறிது நேரத்தில் அவசர அவசரமாக அந்தச் சகோதர்களின் தாயைக் கொண்டு சென்று அம்புலன்சில் ஏற்றினார்கள். அந்த அம்புலன்சும் மின்னல் வேகத்தில் அவ்விடத்தைவிட்டு அகன்று சென்றது.

மேலும் அதிகமான பொலீஸார் பொலீஸ் கார்களில் வந்து இறங்கினார்கள். புகைப்படங்கள், தடயங்கள் எனப் பல வேலைகளில் அவர்கள் எல்லாரும் மூழ்கிப்போயினர். மற்றைய குடும்ப அங்கத்தினருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத ஒருவித தவிப்புடன் விக்னேஸ் நின்றான். அது அவனுக்கு அடக்கமுடியாத அவஸ்தையாகத் தலையைக் குடைந்தது.

விக்னேஸ் அங்கு நின்று அலுத்துப்போனவனாய் வீட்டிற்குத் திரும்புவதற்கு எண்ணிய போழுது ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து அம்புலன்சில் ஏற்றினார்கள். விக்னேசால் அதை நம்பமுடியவில்லை. கூடிநின்றவர்கள் அதிர்ந்து போயினர். யாராலும் அதை நம்ப முடியவில்லை என்பதாக அவர்கள் முகங்கள் ஆச்சரியத்தில் விரிந்திற்று. தனது வீட்டிற்கு அருகே இப்படியும் நடக்குமா என்பதை விக்னேசால் கற்பனை செய்ய முடியாவில்லை. ஐந்து பேரையும் வெள்ளைப்பையிற் போட்டு மூடி அவற்றை ஏற்றியபின்பு பொலீஸார் மேற்கொண்டும் தடயங்கள் சேகரிப்பதில் ஈடுபட்டார்கள்.

விக்னேசுக்கு அதற்குமேல் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. அவன் தனது வீட்டை நோக்கி நடக்கலானான். மனதிற் பெரும் சங்கடமாகியது. கால்கள் தள்ளாடுவது போலத் தடுமாறினான். தொடர்ந்தும் அவனால் இப்படியும் நடக்குமா என்பதை நம்ப முடியவில்லை. அந்த உண்மையை ஜீரணிக்க முடியாமற் தவித்தான். தலை சுற்றுவதாய் அவஸ்தைப் பட்டான்.

அடுத்தநாள், பத்திரிகையாளர் மகாநாட்டில் பொலீஸ் அவர்கள் சுடப்பட்டு இறந்ததாகச் செய்தியை வெளியிட்டது. விக்னேஸ் ஒருகணம் திடுக்குற்றுப் போய்விட்டான். சம்பவம் நடக்கும்போது தான் கனவு கண்டதான உணர்வில் உடல் கூசிற்று. பொலீஸ் தாங்கள் குற்றவாளிகளை மிகவிரைவிற் தேடிப் பிடிப்போமென வழமைபோலச் சம்பிரதாயமாக உறுதியளித்தது.

இந்தக் கொலையை ஓட்டியும் ஒஸ்லோவில் ஊர்வலம் நடந்தது. அதிலும் ஊர்வலத்திற் சென்றவர்களைப் பொலீஸார் கடுமையாகத் தாக்கினார்கள். விக்னேசுக்குத் தோள்மூட்டில் அடி விழுந்தது. கொலைகள், ஊர்வலங்கள் பொலீஸாரின் கண்மூடித்தனமான தடியடி என்பன இப்போது ஓஸ்லோவில் வழமையான ஒன்றாகிவிட்டது. இந்த நிலையில் இனி எப்போதாவது மாற்றம் வருமா என்பது ஒருவருக்கும் புரியவில்லை. அதை எண்ணி விக்னேஸ் குழம்பினான். வேறு நாடுகளுக்கு ஓடுவது இதற்கு விடையாக அவனுக்குத் தெரியவில்லை. இலங்கைக்கு மீண்டும் திரும்பிப்போய் வாழமுடியாத அளவிற்கு அங்கு கதிர்வீச்சின் பாதிப்புத் தொடர்கிறது. மனிதர்களிலும் பெரிய மாற்றங்கள் ஒன்றும் நடந்து விடவில்லை. பல யுகங்களின் பின்பு முதன்முதல் உண்மையான அகதி என்றால் என்ன என்பதை அவன் இப்போது உணர்ந்தான். உடல் கூசியது. மனம் வெந்தது. அவமானம் தின்றது. இனி எங்கு போவது என்பது புரியாது திகைப்பு மேலிட்டது.