5.83x8.ma-frontpng

அன்று விக்னேஸ் கடிதமெடுக்க மறந்து போய்விட்டான். தொலைக்காட்சியிற் செய்திகள் முடிந்ததும் கடிதம் எடுப்பதற்குத் திறப்போடு வெளியே சென்றான். மெதுவாகத் தபாற் பெட்டியைத் திறந்து கடிதத்தை எடுத்தான். பின்பு அதைப் பூட்டிவிட்டுத் திறப்பை எடுத்துக்கொண்டு திரும்பினான். அப்போதுதான் அவன் அதைத் திடீரெனக் கவனித்தான். வீட்டின் முன்பாகச் சிவப்பாகப் பெயின்ற் ஊற்றப்பட்டு இன்னும் ஈரமாக இருந்தது. விக்னேசிற்கு ஒருகணம் உடம்பெல்லாம் ஆடிப்போயிற்று. அதன் அர்த்தம் என்ன என்பது அவனுக்கு நன்கு புரியும். முதலில் பொலீஸக்குப் ஃபோன் பண்ண எண்ணினான். பின்பு அந்த எண்ணத்தைக் கைவிட்டான். ‘எங்களை நாங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’ என்பதாக நினைத்தான். எங்கும் வெறுப்பு நிறைந்து கிடக்கிறது. யாரையும் நம்ப முடியாது. பொலீசும் அப்படியே. பொலீசுக்கு ஆறுதலாக அறிவிப்பதென முடிவெடுத்தான். ஒரு கணம் மேற்கொண்டு என்ன செய்வது என்பது அவனுக்குப் புரியவில்லை. அடுத்த கணமே வீட்டில் இனி இருப்பது ஆபத்து என்பது அவனுக்குப் புரிந்தது. விக்னேஸ் அவசரமாய் உள்ளே ஓடிச் சென்றான். அங்கு என்ன செய்வது என்பது புரியாது அந்தரப்பட்டான். பின்பு திரியின் அறையை நோக்கி ஓடினான்.

பேய்போல வந்த அப்பாவின் செயலைத் திரியாற் சிலகணம் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்பு கட்டிலால் எழுந்து அப்பாவைப் பார்த்து ‘என்னப்பா பேய் கலைக்கிற மாதிரி ஓடியாறியள்?’ எனக் கேட்டாள். ‘அவசரம் திரி… வெளிக்கிடு… கெதியா வெளிக்கிடு… வீட்டை எரிக்கப் போறாங்கள். மினக்கெடாமற் கெதியா வெளிக்கிடு’ என்றான் விக்னேஸ். திரிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்பாவைப் புரியாது வியப்பாகப் பார்த்தாள். இதைப் பார்த்த விக்னேஸ் ‘என்ன திரி பேசாமல் மலைச்சுப் போய் நிக்கிறாய்?’ என்றான். ‘பிறகு என்னப்பா வந்தியள்… வெளிக்கிடு வெளிக்கிடு எண்டுறியள்… என்ன விசயமெண்டு ஒழுங்காச் சொல்லுங்கோவன் அப்பா?’ என்றாள். ‘ஐயோ நீயொருத்தியடி. எங்கட கதவுக்கு நேர பெயின்ற் ஊத்தி இருக்கிறாங்கள். இரவைக்கு வீட்டிக்கு நெருப்பு வைக்கப் போறாங்கள்’ என்றான். ‘தெரியும் அப்பா. பெயின்ற ஊத்தினா நெருப்பு வைப்பாங்கள்’ என்றாள் திரி. ‘அப்ப வெளிக்கிடு’ என்றான் விக்னேஸ். ‘அதுக்கு நாங்களேன் அப்பா வீட்ட விட்டு ஓடோணும். பொலீசுக்குச் சொல்லிப்போட்டு என்ன நடக்குதெண்டு இருந்து பாப்பம்’ என்றாள் திரி. விக்னேசுக்கு கோபம் வந்து. ‘அடி அறப்படிச்ச விசரி, இப்ப பொலீஸிலயே ‘ரசிஸ்ற்’ பிடிச்சவனெல்லாம் தன்ர குணத்தை வெளிப்படையாக் காட்டத் தொடங்கீட்டாங்கள். நீ அடிச்சுச் சொன்னாலும் வீடு எரிஞ்சபிறகுதான் இங்க வருவாங்கள். யாரும் கேட்டாத் தங்களுக்குத் தலைக்குமேல வேலை இருந்ததெண்டு சொல்லுவாங்கள். நீ இந்த வீட்டுக்க கிடந்து வெந்து சாகப் போறியே?’ என்றான். ‘சரியப்பா அப்ப நான் வெளிக்கிடுகிறன். எதை எடுக்கிறது எதை விடுகிறது எண்டுதான் எனக்குத் தெரியேல்ல’ என்றாள் திரி. ‘இனி இல்லை எண்டு முக்கியமானதை மட்டும் எடுத்து ஒரு பாக்கில போட்டுக்கொண்டு ஒடிவா’ என்றான் விக்னேஸ்.

திரி வெளிக்கிட்டு வெளியே வருவதற்கு நீண்டநேரம் பிடித்தது. பல மணித்தியாலங்கள் செல்வதான இம்சையில் விக்னேஸ் துடித்தான். அவள் கையில் ஒரு பாரமான பை வைத்திருந்தாள். அதைவிட முதுகில் ஒரு பெரும் மூட்டை ஏற்றியிருந்தாள். விக்னேஸ் அவளிடம் இருந்து அதைப் பிடுங்கிக் காருக்குள் எறிந்தான். பின்பு வெளிக் கதவைப் பூட்டிவிட்டு அவசரமாக வந்து காரில் ஏறி அமர்ந்தான். சிறிது நேரம் யோசித்துவிட்டுப் பாலனின் வீட்டை நோக்கி வாகனத்தை ஓட்டிச்சென்றான்.

பாலன் விக்னேஸ் கூறிய கதையைக் கேட்டு முதலில் அதிர்ந்து போனான். பின்பு அவன் இரவுச் சாப்பாட்டைச் சாப்பிட்ட பின்பு இன்னும் சிலரையும் கூட்டிக்கொண்டு காரில் விக்னேஸ் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்றான். அங்கு காத்திருந்து யார் நெருப்பு வைக்கிறார்கள் என்பதைப் படம் பிடித்தால் நல்லதென அவன் பிடிவாதம் பிடித்தான்.

விக்னேசுக்கு அந்த எண்ணம் அறவும் பிடிக்கவில்லை. ஏற்கெனவே கிரேக்கத்தில் படம்பிடித்து அவன் பட்ட அனுபவங்கள் நன்கு ஞாபகம் வந்து போயின. ‘எதுக்குத் தேவையில்லாத விசயம் பாலன்’ என மழுப்பினான். ‘இல்லையண்ண இப்பிடியே விட்டா ஒவ்வொரு வீடா கொழுத்துவாங்கள். அதுக்கு இண்டைக்கு ஒரு முடிவு கட்டோணும்.’ என்றான் பாலன். ‘எனக்கும் அது விருப்பம்தான், ஆனா நாங்கள் நினைக்கிறமாதிரி நோர்வே இப்ப இல்லையெண்டு உங்களுக்குத் தெரியும்தானே? தெருவால நடுச்சாமத்தில போனாலே பொலீசே சந்தேகத்தில எங்கள மறிப்பாங்கள். நாங்கள் தங்களப் படமெடுக்கிறம் இல்லாட்டி பின்னால வாறம் எண்டு தெரிஞ்சா நவநாஜிகள் எங்களைக் கொலை செய்வாங்கள். பேசாமல், வீடுதானே எரியுது எரியட்டும் எண்டு விடவேண்டியதுதான். அதுதான் எல்லாருக்கும் நல்லது. நாங்கள் இங்க வரேக்க வீட்டைக் கொண்டே வந்தனாங்கள்? அதேபோல வீட்டைக் கொண்டே போகப்போறம்? வீடு எரிஞ்சா இன்சூரன்ஸ் தரும். உயிர் போனால் ஒருத்தரிட்டையும் வாங்க ஏலாது’ என்றான் விக்னேஸ். அவனைக் கவலையும் பயமும் கௌவியது.

‘இப்பிடிப் பயந்தாங்கொள்ளியா இருந்தம் எண்டா அவங்கள் கொப்பில ஏறிக் கூத்தாடுவாங்கள் அண்ண. அதுதானே சொல்லுவினம் குட்டக் குட்ட குனியிறவனும் மோடன் குனியக் குனிய குட்டுறவனும் மோடன் எண்டு. உதுக்கெல்லாம் வெட்டு ஒண்டு துண்டு ரெண்டு எண்டு முடிவு காணவேணும். இல்லாட்டி வீணா நெடுக இரத்தம் சிந்தவேண்டி வரும்’ என்றான் பாலன் விடாப்பிடியாய்.

‘நீர் விளங்காமற் கதைக்கிறீர். எங்கள இனிப் போராட உந்த அரசுகள் விடப்போறேல்ல. எங்கட உயிரையாவது மிச்சமா விடுங்கோ எண்டு கெஞ்ச வைப்பாங்கள். அவங்கட அரசியல் அப்பிடித்தான் போகுது. ஒரு காலத்தில அவமானமாய்த் தெரிஞ்சதெல்லாம் இப்ப அவங்களுக்கு நியாயமாய்ப் போச்சுது. இனி நரவேட்டைதான் அவங்கட பொழுது போக்கா இருக்கும்’ என்றான் விக்னேஸ்.

‘அண்ண நீங்கள் தேவையில்லாமற் பயப்பிட வேண்டாம். நாங்கள் ஒண்டும் செய்யத் தேவையில்லை. என்ன செய்யினம் எண்டதைக் காருக்க இருந்து படம் எடுப்பம்’ என்றான் பாலன்.

‘அவள் திரி ஏதென்ஸில எடுத்த படத்திற்கு என்னை ஒஸ்லோவில கொலைசெய்யப் பார்த்தவங்கள் தம்பி. அது உனக்கும் தெரியும். உது இப்ப தேவையே? அதுவும் உங்க நவநாஜிகளில ‘பாட் போய்ஸ்’ தான் இப்ப மும்முரமாய்த் திரியிறாங்கள் எண்டு ஒரு கேள்வி. அவங்கள் படு மோசமாய் அடிப்பாங்களாம். கொலை செய்வாங்களாம். எதுக்கும் ஆழமறிஞ்சு காலை விடோணும். சும்மா போய் மாட்டிப்போட்டு முழிக்கக் கூடாது. அவங்களுக்கு இப்ப வேட்டையாடுறதுதான் தம்பி வேலை. நாங்கள் ஏன் அவங்கட வழியில போய்நிண்டு இரையாவான்? சொல்லும் பாப்பம்?’ என்றான் விக்னேஸ்.

‘அண்ணை எங்களுக்குத் தைரியம் ஊட்டவேண்டிய நீங்களே இப்பிடிப் பயப்பிடுத்திறது சரியில்ல. நாங்கள் அங்க போய்க் காருக்க இருந்து என்ன செய்யுறாங்கள் எண்டதை வீடியோ எடுத்து வருவம். போகேக்க மோகனையும் றூபனையும் துணைக்குக் கூட்டிக்கொண்டு போவம். சும்மா பயப்பிடாதேங்க அண்ணை. கைகாவலுக்கு எங்கட தமிழ் ஆயுதத்தைக் கொண்டு போவம். மிஞ்சிப்போனா அதைப் பாவிச்சுப்போட்டுத் தப்பி வரவேண்டியதுதான்’ என மீண்டும் மீண்டும் பாலன் தனது திட்டத்தோடு அடம்பிடித்தான்.

‘அதை நம்ப முடியுமே? காத்து எந்தப் பக்கம் அடிக்குமோ தெரியாது? அவங்கள் எந்தப் பக்கத்தாலா வருவாங்களோ தெரியாது? சரி இவ்வளவு தூரம் நீ துணிஞ்சு நிக்கிறாய் என்னதான் நடக்குதெண்டு பார்ப்பம்’ என்றான் விக்னேஸ்.

விக்னேசுக்கு அந்த நினைவுகள் ஒருமுறை வந்து போயின. அவன் இளமையாக இருந்த காலம் அது. அப்போது ‘டிஸ்கோ’ என்கின்ற களியாட்டு நிலையங்களுக்குத் தமிழ் இளைஞர்களும் செல்வது வழக்கம். அங்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அனேகமாகத் தமிழர் பின்வாங்க வேண்டியே வரும். சிலவேளை அவர்கள் துரத்தியவண்ணம் வீட்டிற்குள் வந்தால் மிளகாய்ப்பொடிதான் ஆயுதமாகப் பாவிக்கப்படுவது உண்டு. மிளகாயை வாயில் வைப்பதையே வெறுப்பவர்கள் கண்களில் அது பட்டால் எப்படி இருக்கும்? அவர்கள் கண்ணெரிவோடு கண்தெரியாது கெஞ்சிக் கூத்தாடியது அழியாத நினைவுகளாக இன்றும்.

*

அன்று இரவு ஒரு மணிபோலப் பாலன், விக்னேஸ், மோகன், றூபன் ஆகிய நால்வரும் பாலனின் காரிற் புறப்பட்டனர். அவர்கள் முதலில் விக்னேஸ் வீட்டிற்குச் சென்றார்கள். அவர்களிடம் இரண்டு வீடியோ கமராக்களும், ஒரு பிளாஸ்ரிக் போத்தலில் தமிழ் ஆயுதமும் ஆயத்தமாக இருந்தன. அவர்கள் விக்னேஸ் வீட்டிற்கு அருகாமையில் வந்தும் அங்கு வாகனத்தை நிறுத்தாது அவன் வீட்டைக் கடந்து தொடர்ந்தும் ஒட்டிச் சென்றார்கள். எந்தவித அசம்பாவிதமும் அங்கு நடக்கவில்லை என்பதை அவர்களால் அப்போது பார்க்கக்கூடியதாக இருந்தது. பின்பு தங்களது காரை ஒரு மறைவான இடத்தில் நிறுத்தினார்கள். கமராக்களைத் தயார் செய்து வைத்துக்கொண்டு, நாஜிகளுக்காகக் காத்திருந்தார்கள். அப்படிக் காத்திருக்கும் போது மோகனும், றூபனும் எந்தக் கவலையும் இல்லாதவர்களாகப் பின் இருக்கையில் சாய்ந்து குறட்டை விட்டார்கள். அது பாலனுக்குச் சற்று எரிச்சலைத் தந்தாலும் அவன் ஒன்றும் பேசவில்லை.

‘மனிதன் எப்போது மனிதத்தை இழக்கிறானோ அப்போதில் இருந்தே அவன் மற்றைய மனிதர்களை அல்லது அவர்களின் வளங்களை வேட்டையாடத் தொடங்குகிறான். அப்படிப் பார்க்கும்போது பல மனிதர்கள் மனிதத்தோடு பிறப்பதுமல்ல வாழ்வதுமல்ல என்பது போல தோன்றுகிறது. வரலாறோ நிகழ்காலமோ அவ்வடிப்படைக் குணத்தை அவனில் இருந்து மாற்றவில்லை. மனிதன், தான் ஒரு விலங்கு என்பதை எப்போதும் தப்பாது நிருபித்து வருகிறான். அவனது நாக்கு மாத்திரம், மொழி என்கின்ற மந்திரக்கோலால், இசங்கள் என்னும் மாயப் பொடிகளைத் தூவுகிறது. மற்றைய மனிதர்களை அதன்மூலம் மயக்கப் பார்க்கிறது. அந்த இசங்கள் பலருக்கும் விளங்காத வெற்று வார்த்தைகளாக வீணே காற்றில் அலைந்து செல்கின்றன. மனிதனின் மறுமுகம் கோரமானது. அது அனைவருக்கும் விளங்கும் எளிதான வார்த்தையில், விசங்களைப் புதைக்கிறது. அறுவடையாக மனித உயிர்களைப் பறிக்கிறது. தனக்குத் தனக்கு எனப் பறக்கும் மனிதர்களைத்தான் யதார்த்தம்; காட்டுகிறது. அதில் டார்வினின் கோட்பாடும் ஹிட்லரின் செயற்பாடும் எப்பொழுதும் முகம் காட்டுகிறது’ என்பதாக விக்னேஸ் எண்ணினான்.

நவநாஜிகளுக்காகக் காத்திருந்தவர்கள் கண்கள் பார்த்துப் பார்த்து சலித்துப் போயின. கவனம் வேறு திசையிற் திரும்பத் தொடங்கிய அந்தக் கணத்தில், ஒரு வாகனம் சடுதியாக வந்து நின்றது. அதில் இருந்து நான்கு பேர் இறங்கினார்கள். அதைப் பார்த்த விக்னேசும் பாலனும் அவர்களை வீடியோ எடுக்கத் தொடங்கினார்கள். வந்தவர்களில் ஒருவன் எதேச்சையாக அதைக் கண்டுவிட்டான். அதையுணர்ந்து விக்னேஸ் கதிகலங்கிச் சித்தப்பிரமை பிடித்தவன் போல ஒருகணம் ஸ்தம்பித்தான். பின்பு சமாளித்த வண்ணம் பின்சீற்றில் இருந்தவர்களை ‘டே எழும்புங்க… எழும்புங்க’ எனக் கத்தி எழுப்ப முயன்றான். அதே வேளை அவன் படம் எடுப்பதையும் தொடர்ந்தான். மோகனும் றூபனும் எழுந்து ஷஎன்ன| என்பது போல விழித்தனர். ‘மிளகாய்த்தூளை எடுத்து வைச்சிருங்க’ என்று விக்னேஸ் கூறிவிட்டு அவர்களைத் தொடர்ந்தும் படமெடுத்தான். பாலனுக்குப் பயம் வந்துவிட்டது. கமராவை வைத்துவிட்டுக் காரை ஸ்ராட் செய்தான்.

இவர்கள் காரை ஸ்ராட் செய்வது தெரிந்தவுடன் ‘பேஸ்பால்பற்’றுடன் ஓடிவந்த நாஜிகளில் ஒருத்தன் காரின் பின் கண்ணாடியில் அடித்தான். அதற்குமேற் தாமதியாது பாலன் காரை றேஸ்செய்து எடுத்தான். பின்கண்ணாடி நொருங்கிக் கற்கண்டுத் துகள்களாய் உள்ளே கொட்டியது. அதனால் உண்டான ஓட்டையால் மோகனைப் பிடித்து இருவர் இழுக்க முயன்றனர். றூபன் மிளகாய்த் தூளை அள்ளி அவர்கள் மூஞ்சையில் அந்த ஓட்டை வழியே அடித்தான். அவர்கள் மிளகாய் தூள் எரிவு தாங்கமுடியாது நின்று தெருவில் கூத்து ஆடினார்கள். றூபன் ‘இனி வந்தா கண்ணெரிச்சல் மட்டும் இல்ல கரைச்சு பருக்கி மற்ற எரிச்சலையும் தருவம்’ என்றான்.

முன்னுக்குக் காரை மறித்த வண்ணம் நின்றவனைப் பாலன் மெதுவாக காராற் தள்ளினான். சிறிது சிறிதாய் அதன் வேகத்தை அதிகரிக்க, பயந்துபோன அந்த நாஜி திடிரென விலகினான். சுதந்திரம் கிடைத்ததான உணர்வில் இவர்களின் வாகனம் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது.

இவ்வளவும் நடந்து முடியும்போது அங்கிருந்த வீடுகளில் இருந்து பலர் எட்டிப் பார்ப்பதை நாஜிகள் அவதானித்தனர். அது அவர்களுக்கு வெட்கமாயும் அவமானமாயும் போயிற்று. தங்கள் அலுவலைச் சில கறுத்தப்பண்டிகள் குழப்பி விட்டார்கள் என்னும் ஆத்திரம் பொங்க அவ்விடத்தைவிட்டு நகர்ந்து சென்றார்கள்.

*

அடுத்தநாட் காலை வீட்டிற்கு வந்த விக்னேஸ் மண்ணெண்ணை மற்றும் அதிவீச்சாக நீர்பாய்ச்சியடிக்கும் இயந்திரம் ஆகியவற்றைப் பாவித்து அந்த நிற அடையாளத்தை அழித்தான். அதன்பின்பு தபாற் பெட்டியில், கதவில் இருந்த தங்கள் பெயர்களை அகற்றினான். ஒரு தபாற் பெட்டியெண்ணைத் தபால் அலுவலகத்தில் எடுத்து, அங்கு சென்று கடிதங்களை எடுத்து வந்தாற் பாதுகாப்பாய் இருந்திருக்கும். அந்த வசதியைத் தபாலகம் நிறுத்தியது பெரும் சிக்கலைத் தந்தது.