5.83x8.ma-frontpng‘மாக்சிசம், மாவோயிசம், முதலாளித்துவம் என்கின்ற மனிதம் காக்கமுடியாத உக்கிப்போன இசங்களால் உலகு கூறுபட்டுக் கிடக்கிறது. இந்த இசங்களில் பெரும் பிழையில்லாவிட்டாலும் அதைக் கையில் எடுத்தவர்கள் மனிதத்தோடு கையாண்டதாக வரலாறு கிடையாது. இவர்கள் தத்துவங்கள் பேசுவது மற்றைய மனிதர்களை ஏமாற்றி அடக்கி ஆள்வதற்கு என்பதாகிவிட்டது. இந்த இசங்களைவிடத் தேசியவாதம் என்கின்ற போதை பல அரசியல் வாதிகளுக்குத் தேவைப்படுகிறது. தமது வங்குரோத்துக்களை மறைத்து… மக்களை உணர்ச்சியின் உச்சத்திற்கு இழுத்து வந்து… அநீதியை நீதியாக்கி… அதை அதிகமானோர் நம்பும்படி செய்யத் தேசியம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அந்த தேசியம் என்கின்ற நச்சுப் போதனை உலகைப் பலமுறை அழித்திருக்கிறது. மக்களை மந்தைகள் ஆக்குவதற்குத் தேசியத்தைவிடச் சிறந்த இசம் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தேசியத்திற் கட்டுண்ட மக்கள் கேள்விகேட்காது எதற்கும் தலையாட்டுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் வரலாறுகள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.

அதிதீவிர வலதுசாரிகளின் மூச்சே கடும்தேசியமாகிற்று. அத்தனை அரசியல் அணிகளையும் பின்தள்ளி, அது மக்களை வெறியோடு ஆக்கிரமித்தது. பதவியென்னும் மகுடம் சூடிக்கொள்ளத் தேசியத்தைப் போல் உற்ற துணை ஏதும் உண்டோவென அது அகங்காரமாய் வினாவி நின்றது. தமது அரசியற் பலவீனங்களை மறைப்பதற்கு, அப்பாவிகளை வெறியேற்றுவது காலம் காலமாக உலகமெங்கும் பாவிக்கப்படுகிறது. அதை நியாயம் என்று கருதும் சுயநலவாதி மற்றைய மனிதர்களின் துன்பத்தையோ, இழப்பையோ, அழிவையோ எண்ணிக் கவலைப்பட போவதில்லை. மனிதத்தைத் துறந்து மனோவருத்தத்தில் அழுந்தும் அரசியல்வாதியால்… சுயநலம் மட்டுமே கண்ணாய் இருக்கும் அரசியல்வாதியால்… தேசியம் என்னும் நச்சுத் தீயை குற்ற உணர்வில்லாது பரப்பி, அதில் சூடுகாயமுடியும். இப்போது அப்படியான அரசியல்வாதிகள் உலகெங்கும் பல்கிப்பெருகிவிட்டனர்.

தேசியம் என்னும் நச்சுப் போதையின் மூலம் இனவெறியை எரியவிட்டுக் குளிர்காயும் அரசியல்வாதிகள் இருக்கும் தேசத்திற் பிறப்பதுகூட மனிதத்தை நேசிப்பவனுக்கு ரணமாகும். அந்தத் தேசத்திற் பிளவுகளும், இரத்தக்கறை படிந்த வரலாறும் என்றும் நிலையாகும். அனைத்து மனிதப் பண்பாடுகளையும் மீறி ஆயிரக்கணக்கில் அல்லது மில்லியன் கணக்கில் மக்களின் உயிரை எந்தவித குற்ற உணர்வும் இன்றி அது பறிக்கும். இரத்தம் குடிக்கும் அசுரத்தின் முகமாய்த் தேசியம் உருவேறி நிற்கும். சமுதாய டார்வின்சியம் பற்றி… பலமானவனே உலகத்தில் வாழத் தகுந்தவன் என்பது பற்றி, அந்தத் தேசியவாதிகள் எண்ணுவதோ கதைப்பதோ அவர்களுக்கு அப்போது தப்பாகப் புரிவதில்லை. அதற்கு எதிராக எண்ணுபவர்களை எதிரிகளாக்கி, பின்பு அவர்களை இல்லாது ஒழிப்பார்கள். மனித சமுதாயத்தில் இப்படியான எண்ணங்கள் அழிந்துவிடாது என்றும் நிலைத்திருக்கிறது. அதை நேரம் வாய்க்கும்போது மெல்ல உலவவிட்டுச் சூடுகாணும் பக்குவம் புரிந்தவர்கள், அதன் பாதகம் பற்றிய மனச்சாட்சி இல்லாதவர்களாக இருக்கவேண்டும்.

அதிதீவிரவலதுசாரிகளினதும், கடும்தேசியவாதிகளின் ஆட்சியில் தனிமனித வழிபாடு எப்போதும் முன்னிற்கும். அவர்கள் சிலவேளைகளில் வருமான வரிகளை நன்கு குறைத்துச் சிறுபான்மையான முதலாளிகளுக்கும், பணக்காரருக்கும் பணிவிடை செய்வார்கள். பெரும்பான்மையான ஏழைகளும் நலிவுற்றவர்களும் மேலும் மேலும் துன்பத்தில் வீழவேண்டி வரும். அதற்கு ஒரு காரணம் கண்டுபிடித்துத் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் இறங்குவார்கள்.

அவர்கள் அதற்குப் பலியாக மாற்று இனங்களை அல்லது மாற்று அரசியல் கொள்கை உள்ளவர்களை இழுப்பது ஒன்றும் புதினமாக அமையாது. வரலாற்றில் அது தொடர்கதை. என்றும் மக்களது ஞாபகத்தில் அழியாது இருக்க வேண்டியவை. அது மக்கள் மனதில் இருந்து அழிந்ததால் இன்று அவலத்தை வரவேற்கிறது. சிலவேளைகளில் அதிதீவிரவலதுசாரி அரசியல்வாதிகள் தங்களது மாயப் பேச்சால் மீண்டும் மீண்டும் வரலாற்றைத் திருத்தி எழுதச் செய்கிறார்கள். அந்தத் துன்பியலில் இருந்து மனிதம் தொடர்ந்தும் விடுபடுவதாக இல்லை.

வலதுசாரிகள் தங்கள் சுயநலத்திற்காய் எதுவும் செய்வார்கள் என்பதைச் சற்றுக் காலத்திற்கு முன்பு பிரஞ்சு நாட்டு ஐனாதிபதியாக இருந்த சர்கோசி நிருபித்தார். அவர் ஆவணி ஆறாம் திகதி இரண்டாயிரத்துப் பத்தாம் ஆம் அண்டு றொமேனி மக்களைப் பிரான்சில் இருந்து திருப்பி அனுப்பிவைத்தார். அப்போது உலகம் வாயடைத்துப்போய் நின்றது. சர்க்கோசிக்குத் தேவைப்பட்டது சொந்தநாட்டு வாக்காளரின் பெருவாரியான ஆதரவு. அதற்காக மனிதம் அவஸ்தைப்படுவதை அவர் ஒரு பொருட்டாய் எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டாவது உலகமகா யுத்தத்தில் ஹிட்லரை ஆதரித்த மக்களுக்கும் இன்று சர்கோசியை ஆதரிக்கும் மக்களுக்கும் எண்ண அடிப்படையில் என்ன வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும் என்பது பலருக்கு விளங்கவில்லை. ஒரு குறிப்பிட்ட இனத்தின் அல்லது நாட்டின் சுயநலத்தில் மனிதம் நசிக்கப்படும். அது அவர்களுக்குச் சரியாக அமையும். அதுவே மனித குலத்திற்கோ அல்லது மனச்சாட்சி உள்ள மனிதனுக்கோ சரியாக அமைந்துவிடாது.’ என்பதாக விக்னேஸ் நீண்டதொரு தத்துவ விளக்கம் பற்றி எண்ணினான்.

‘ஐரோப்பாவில் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததா என்பதைப் பலாரால் நம்பமுடியவில்லை. அப்போது ஐரோப்பிய ஒன்றியம் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அவர்கள் அதைப் பார்த்து அதிர்ந்தார்கள். அதே ஐரோப்பிய ஒன்றியமே ஒருநாள் அதிதீவிர வலதுசாரிகளின் ஆளுமைக்கு உட்படலாம் என்கின்ற ஐயம் சிலரிடம் முளைவிட்டது. அப்படி நடந்தால், பின்பு என்ன நடக்கும் என்கின்ற கற்பனை பயங்கரமானது. அவர்கள் அதைப் பயத்தோடு மனதிற்குள் ஒளித்து வைத்தார்கள். மாற்றங்கள் கதவைத் தட்டி அனுமதி பெற்று வருபவை அல்ல. எப்போதுவரும் எப்படி வரும் என்கின்ற கேள்வியோடு மனிதன் திகைக்கும்போதே, சுனாமியாக வந்து அவை தாக்கிவிடும். ஐரோப்பாவில் ஒரு சுனாமி சத்தம் இல்லாமல் வெகுவிரைவில் வரும் என்பது பற்றி எவரும் அப்போது அறிந்து இருக்கவில்லை.

ஐரோப்பாவின் ஒருநாட்டில் இருந்து வந்த ஆபத்தே பலகண்டங்களை இரண்டாவது உலகமகா யுத்தத்திற் பிடித்து உலுக்கியது. அதில் இந்த உலகம் கடுமையாக இரத்தம் சொரிந்தது. மில்லியன் மில்லியனாக அப்பாவிகளின் உயிர்கள் பலியாகின. இன்று ஒரு கண்டமே ஒன்று கூடிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் வளர்ச்சியுற்று நிற்கிறது. அது ஒருநாள் உலக அமைதிக்கு ஆபத்தாய்ப் புறப்பட்டால் யாரால் எப்படித் தடுக்கமுடியும்? அதை நிருபிக்க வேண்டிய நாள் வந்ததில் உலகு நடுங்கியது.

இது ஐரோப்பாவில் மட்டும் நடக்கும் ஒரு அநியாயம் இல்லை. உலகில் எந்தப் பாகத்திலும் இது நடைபெறலாம். இலங்கையிற் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு அது நடந்தது. சொந்த நாட்டிலேயே அவர்கள் தமிழராய்ப் பிறந்ததால் கொழும்பில்வாழத் தகுதியற்றவர்கள் என்கின்ற அடிப்படையில் இடம்மாற்றப்பட்ட நிகழ்வு ஒரு காலத்தில் நடந்தேறியது. தீவிரவாதிகளையோ பயங்கரவாதிகளையோ பிடிப்பதற்கு ஒருநாட்டின் பொலீஸ் அல்லது உளவுப் படையின் திறமை மெச்சும்படியாக அமைய வேண்டும். அதை ஒரளவிற்கு மேற்கு நாடுகளால் செய்ய முடிகிறது. அடித்தால் நெத்தியடி என்பது போலப் பிடித்தால் பயங்கரவாதிகளாய் இருக்கவேண்டும். இலங்கையில் தமிழன் என்றாலே பயங்கரவாதி என்கின்ற தப்பான அபிப்பிராயம் பெரும்பான்மையினரின் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது. துட்டகைமுனுவின் காலில் வந்த கரவு ஆயிரம் ஆயிரம் உயிர்களைக் காவுகொண்டது. இன்று தமிழினம் ஈடாடித் தவிக்கின்ற போதும் அது தணியவில்லை. இன்னும் அத்துமீறல்கள்… பழிவாங்கல்கள்…

ஆனிமாதம் ஏழாம்திகதி இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு தமிழர்கள் என்பதற்காக அவர்களைக் கொழும்பில் வைத்துப் பிடித்துப் பேருந்துகளில் ஏற்றி இலங்கை அரசு இடம்மாற்றியது. இலங்கையின் சீழ்வடிந்த கோரமான முகத்தில் மேலுமொரு ஆழமான வரலாற்று வடு மாற்றமுடியாது மறக்கமுடியாது பதிந்தாகிற்று. பதிவுகள் பற்றிப் பௌத்த புத்திரர்கள் கவலை கொள்ளவில்லை. தமிழன் என்பதற்காய்க் கொல்லப்படும் நாடொன்றில் உரிமைகளை எதிர்பார்ப்பது எங்கள் மடமையே. அகிம்சை தோற்று… ஆயுதம் வந்து… ஆயுதம் தோற்று… இனி வருவது என்ன? பௌத்தர்கள் தருவது என்ன? அடக்குமுறை?

யுத்தங்களைச் சாட்டி மனிதத்தை இழந்து நாடுகள் நீண்டகாலத்திற்குத் தங்கள் முகங்களை இழந்துவர்களாய் இருக்கவேண்டும். நாஜிகளாற் பறிபோன ஜேர்மனி முகங்களை அவர்கள் திரும்பப் பெற்றுவிட முடியவில்லை. ஜேர்மனியர்கள் கொழுத்தினார்கள், கொன்றார்கள், கற்பழித்தார்கள் என்று இன்றும் அதனாற் பாதிக்கப்பட்ட நாடுகளிற் கூறப்படுகிறது. அவர்கள் பேய்களுக்குச் சமனாகப் பார்க்கப்படுகிறது. இது மனிதத்தை இழக்கும் அனைத்து நாட்டிற்கும் பொதுவான முத்திரை.

குறுகியகால அரசியல் ஆதாயம் தேடும் சுயநலவாத அரசியல்வாதிகள் அந்த உண்மைகளை அவசர அவசரமாக அடக்கம் செய்து, தமது பிரச்சாரத்தாற் சிலகாலம் அதற்குக் கல்லறை கட்டுகிறார்கள். கல்லறைகளும் ஒருநாள் விழித்துக்கொள்ளும். அப்போது அசிங்கங்கள் அங்கிருந்து மனிதம் தேடிப் புறப்படும்.

பிரான்ஸ் மீண்டும் இரண்டாயிரெத்து பதினெட்டாம் ஆண்டு தைமாதம் தொடக்கம் மிகவும் வலுக்கட்டாயமக ஜிப்சிகளை றுமேனியாவுக்கும் வேறு அவர்களது சொந்த இடங்களுக்கும் திருப்பி அனுப்பியது. இது றுமேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்த பின்பு ஜிப்சிகளை மட்டும் அதன் பிரசைகள் இல்லை என்பதான செயற்பாடாகிற்று. அந்த உரிமை மறுப்பிற்கு அவர்கள் ஜிப்சிகள் என்கின்ற ஒரினத்திற் பிறந்ததே காரணமாகியது. வரலாற்று ரீதியாக நீண்டகாலமாகத் தண்டிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்தும் தண்டிக்கும் செயலாக அது தொடர்ந்தது. அதை பிரான்ஸ் செய்வது ஐரோப்பியர்கள் என்று மார்புதட்டிவந்த பாரம்பரியத்திற்கு மிகவும் கேவலமாக, இழுக்காக அமைந்தது.

இந்த ஜிப்சிகள் என்கின்ற நாடோடிகள் இந்தியாவின் இராஜஸ்தான் பகுதியில் இருந்து கி.மு அறுநூறாம் ஆண்டுகள் தொடக்கம் மத்திய இன்டிஸ் காலத்தில் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளை வந்து அடைந்தார்கள். இவர்களைத் தொடக்கூடாத ஹரிஐனராக ஐரோப்பியர் பார்த்ததோடு, அடிமைகளாகவும் வைத்திருந்தார்கள். இந்த ஜிப்சிகள் பலவகையான துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்ததோடு, அவர்களுக்குத் திருடர்கள், அழுக்கானவர்கள் என்கின்ற அவப்பெயரும் சூட்டப்பட்டு வந்தன. சிலவேளை கூர்ப்பு என்பதுகூட விசித்திரமாக இருக்கிறது. ஒரே இடத்தில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புறப்பட்டவர்கள், அதே இடத்தில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகள் பின்பு வந்தவரை அடிமைகளாக, தீண்டத்தகாதவராய்ப் பார்ப்பது விசித்திரமாகவே தொடர்கிறது. அதுவே வெள்ளைக்கும், கறுப்புக்குமான விவகாரமாய் போயிற்று.

பிரான்ஸ் ஜிப்சிகளைத் திருப்பி அனுப்புவதைப் பார்த்து இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம் ஆகியனவும் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பினர். ஜிப்சிகள் ஒரு நாடோடிகள். ஒரு இடத்தையே சுற்றிச் செக்குமாடாய் வாழ்வது அவர்களுக்குப் பிடிக்காது. நாடோடியாய்த் திரிந்த கால்கள் ஓயாது. ஒரே இடத்தில் நிலைத்திருக்க ஒத்துக்கொள்ளாது.

வலுக்கட்டாயமாகச் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஜிப்சிகள் மீண்டும் சிலகாலத்திற் திரும்பி மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தார்கள். இதனால் பிரான்சின் அதிதீவிரவாத அரசு அதிக கோபம்கொண்டது. அவர்களாற் தொடர்ந்தும் அகதிகளின் வரவை முற்றுமாக நிறுத்த முடியாவில்லை. அத்தோடு ஜிப்சிகளின் மீள்வரவையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் ஏற்பட்ட வெறுப்பு அவர்களைச் சீற்றம்கொள்ள வைத்தது.

அந்த அதிதீவிரவாத வலதுசாரி அரசு இரவோடு இரவாக ‘திறேபேசன்'(Trabesson) பகுதியைக் கையகப்படுத்தி, அங்கு பெரிய தடுப்பு முகாங்களை அமைத்தது. அப்படி அமைக்கப்பட்ட முகாங்களில் ஜிப்சிகளை அடைத்து வைத்தனர். அதைப் பார்க்க புதிய ஹொலகோர்ற் பிரான்சில் வந்துவிட்டதான ஒரு தோற்றத்தை அது உண்டுபண்ணியது. இங்கு சாகும் வரைக்கும் வேலை செய்வதோ, உணவே இல்லாது வாடுவதோ தவிர்க்கப்பட்டது. அது அதில் அடைத்து வைக்கப் பட்டிருந்த பல ஜிப்சிகளுக்கும் நிம்மதியைத் தந்தது. அவர்களின் சுதந்திரம் மட்டுமே தற்போது பலியாகியது. இரண்டாம் உலகமகா யுத்தத்தில் நடந்தது போலச் சுதந்திரமும் உயிரும் மொத்தமாகப் பலியாகவில்லை என்பது அவர்களுக்கு ஒருவித நிம்மதியை அந்த இக்கட்டிலும் தந்தது. அதிக மக்களை ஒரிடத்தில் அடைத்து வைத்ததாற் தொற்று வியாதிகள் பரவின. சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டன. இந்த அசௌகரியங்களை அவர்கள் சகிக்க வேண்டியதாகிற்று. அது சாவின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதைப்பற்றி மகிழ்வு கொள்ளுமளவிற்கு உலகில் சில மனிதர்கள் விகாரம் கண்டிருந்தனர். இதுவே அவர்களின் மறைமுகத் திட்டமாய் இருக்குமோ என்கின்ற ஐயம் மெல்ல எழுந்தது.

இப்படி முகாங்கள் அமைத்து மனிதர்களை அடைப்பது இப்போது உலகத்தால் ஏற்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. சித்திரை இருபத்தி மூன்றாம் திகதி இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் ஐக்கியநாடுகளின் பொதுச்செயலாளரின் வருகையால் இலங்கையில் எந்தவித மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. அந்தது உதாரணம் இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகவும் துணிவைத் தந்து. எந்தப் பொருளாதார முதுகெலும்பும் இல்லாத ஒரு வறிய நாட்டால், இந்தியாவின் அழுக்குச் சட்டையைப் பிடித்துக்கொண்டு உலகத்தை எதிர்த்து நின்று தான் நினைத்ததை செய்ய முடியும் என்றால், உலகத்தில் காலகாலமாக பணக்கார நாடகா, கலணி ஆதிக்கம் பரப்பிய பெரும் வல்லரசுகளான நாடுகள் எதற்குப் பயப்பட வேண்டும்? என அவர்கள் எண்ணினார்கள். அந்த துணிவு அவர்களைப் பயப்படாது செயலாற்ற வைத்தது. அப்படிச் செயற்படத் தொடங்கிய நாடுகள் அகதிகளின் படையெடுப்பிற்கு ஏதிராக என்ன செய்வதென முதலில் முழித்தாலும், பின்பு அதை அவர்கள் அடையாளம் கண்டனர்.

இலங்கை போன்ற நாடுகள் எதோ ஒரு காரணத்தைக் காட்டிச் சொந்த மக்களை முகாங்களில் அடைத்து வைக்க முடியும் என்றால், நாங்கள் ஏன் செய்ய முடியாது என்பது அவர்கள் வாதமாக இப்போது முளைத்தது. இலங்கை மக்கள் தாங்கள் தயாரித்த மருந்தைத் தாங்களே சுவைக்க வேண்டிய சந்தர்ப்பம் விரைவாக வந்தது. தமிழ் மக்களின் சாபமே இந்தியா தமக்கு அயல் நாடாக அமைந்தது என்பதாக அவர்களால நோக்கப்படும் காலம் மீண்டும் மீண்டும் அவர்களைத் தேடி வந்தது. அவர்கள் இரண்டாவது முறையாகவும் பலிக்கடாக்களாக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.

காலத்தோடும், அரசியல் மாற்றத்தோடும் ஐரோப்பிய நாடுகளின் பார்வையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதில், அங்கு எதிர்பார்த்த சலசலப்பு இல்லாது போனது. அது பிரான்சிற்கு மிகவும் நிம்மதியைத் தந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனேக நாடுகளில் ஒன்றில் அகதிகள் அல்லது ஜிப்சிகள் பிரச்சனையாக இருந்தார்கள். சிலநாடுகளில் அவையிரண்டுமே பெரும் பிரச்சனைகளை உருவாக்கின. அதை எதிர்த்துத் தங்களது சமுகப் பொருளாதார அமைப்புகளைக் காப்பாற்ற வேண்டியது பற்றி அவர்கள் அதிகம் கவலைப்பட்டார்கள். தங்கள் சுகபோகங்களைச் சகமனிதனுக்கு விட்டுக்கொடுக்கும்படி கூறுவது இலாபம் தரும் அரசியல் ஆகாது என்பது அந்த அரசியல்வாதிகளுக்குப் புரிந்தது. இந்தப் போராட்டமான சூழ்நிலை ஒருவகையில், பிரான்சின் திட்டத்தை ஒப்புக் கொண்டதாகவே தோன்றியது. அது பிரான்ஸ் அரசிற்குத் தொடர்ந்தும் பெரும் நிம்மதியையும், மனத்துணிவையும் அளித்தது. இந்த மாற்றத்தை உணர்ந்த இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் திரும்பித் தமது நாட்டிற்கு வரும் ஜிப்சிகளைப் பெரிய தடுப்பு முகாங்களில் இரகசியமாக அடைத்து வைத்தனர்.

ஒரு நாட்டின் பத்திரிகைச் சுதந்திரம் என்பது அரசியல்வாதிகளின் கட்டுப்பாடற்ற, மனிதநேயமற்ற, சுயநலமான செயற்பாடுகளுக்கு கைவிலங்கு இடுவதாய் எப்போதும் இருக்கிறது. ஜிப்சிகளின் துன்பம் பற்றிய கட்டுரைகள் அடிக்கடி பத்திரிக்கைகளில் வரத்தொடங்கின. ஆனால் அவர்கள் மேல் ஐயுறவும் வெறுப்பும் கொண்ட பெரும்பான்மை மக்கள், பத்திரிக்கைகள் கூறுவதை நம்ப மறுத்தனர். அதற்கு முக்கியத்துவம் கொடாது தட்டிக் கழித்தனர். சிலர் அவர்களை இல்லாது செய்ய வேண்டுமென எண்ணினர்.

சமுகச்சீர்கேடுகளை அதிகரித்து, இளைஞர்களைக் கெடுக்கிறது என்பதற்காக முதலில் ஸ்பெயின் நாடு கையடக்க உபகரணங்களில் கமராக்கள் இருப்பதைத் தடைசெய்தது. அப்படியான உபகரணங்களால் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அடிக்கடி அம்பலமாவது அதற்கு மறைமுகக் காரணமாகிற்று. ஜிப்சிகளின் முகாங்களை அப்படியான கமராக்களால் வீடியோ எடுத்து, அதை நெற்றில் போடுவது, நாட்டின் பாதுகாப்பிற்கே பங்கம் ஏற்டுத்தும் என்கின்ற வகையில் விதண்டாவாதம் முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்படியான உபகரணங்களில் கமரா இருப்பதை அந்த நாடு முதன் முதல் தடை செய்தது. இதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்குப் பதிலாக, முதலில் பேசாமல் இருந்தன. பின்பு ஸ்பெயினைப் பின்பற்றித் தாங்களும் அப்படியான கையடக்க உபகரணங்களில் கமரா இருப்பதைத் தடைசெய்யத் தொடங்கினர். ஸ்பெயின் அடுத்ததாக, கூகிளின் சற்றலைற் படங்களை எப்படித் தடைசெய்வதென ஆராயத் தொடங்கியது.

இந்த மாற்றங்கள் அமெரிக்கா, ஐப்பான் போன்ற நாடுகளை ஆச்சரியப்படுத்தின. அவர்களுக்கும், சீனாவுக்கும் பொருளாதாரமே முக்கியமாக இருந்ததால் இதில் தலையிடுவதை விடுத்து, வெட்டியோடும் தந்திரத்தைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தனர்.

ஜிப்சிகளுக்கு இப்படி நடப்பது சிறிது சிறிதாகத் தெரியவர, சில சில நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவை அதிதீவிரவாத அரசின் பாதுகாவலரான பொலீஸாராற் கடுமையாக அடக்கப்பட்டன.