5.83x8.ma-frontpng

இத்தாலியின் தலைநகரான றோமின் புறநகர்ப்பகுதியில் இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு ஆனிமாதம் பதினாறாம் திகதி கிட்டத்தட்ட நூற்றைம்பது ஜிப்சிகள் கேளிக்கைக்காகக் கூடினர். அது ஒரு கதகதப்பான மாலைப்பொழுது. ஆடவரையும் பெண்களையும் ஆடுங்கள் என்பதாகக் காற்றுத் தாலாட்டியது. அவர்கள் உண்பதற்காய் பல முழுப்பன்றிகள் அங்கு நெருப்பில் வாட்டப்பட்டன. அதைவிட நிறைய இறைச்சி வகைகள் வேகவைக்கப்பட்டிருந்தன. மதுவருந்துபவர்கள் அதை அருந்திச் சிற்றுண்டிகளைக் கொறித்தனர். மிகவும் நளினமான இசை அங்கு பரந்து பரவசமுட்டியது. அதற்கு ஏற்ப அவர்கள் நடனம் ஆடினர். ஜிப்சிகளின் நடனமும் இசையும் பிரபலமான ஒன்று. அதை அவர்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் விட்டுவைப்பதில்லை. அவர்களின் கலாசாரத்தில் திருமணம் என்பது விருத்தெரியமுதல் நடப்பதொன்றும் புறநடையல்ல. சமுதாய அமைப்பில் கணவனுக்கு அடங்கிய மனைவியோடு இறுக்கமான குடும்பமாக அவர்கள் வாழ்வார்கள். குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மனைவியின் முதல் கடமையாகும். அப்பெண்கள் அதிகமான பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது தமது சமுகப்பணியென எடுத்துக் கொள்கிறார்கள்.

மதுவின் போதையிலும் இசையின் கம்பீரத்திலும் நடனம் உச்சத்தை நோக்கி நகர்ந்தது. பலர் மகிழ்ச்சியில் ஆரவாரிக்கத் தொடங்கினர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், சிறுமியர், முதியவர்கள் என்பதாக ஒரே குதூகலமாக அந்தக் கொண்டாட்டம் களைகட்டியது. இன்றிருப்பார் நாளை இல்லை என்கின்ற வாழ்வின் நிலையாமைபற்றிப் புரிந்து, இந்தக் கணம்தான் உண்மையென்கின்ற தவிப்பில், அதை அனுபவித்துவிடும் ஆவேசம் அவர்களிடம் கொந்தளித்தது.

அவர்களின் நடனம் சிறிது நேரத்தில் பசியையும் களைப்பையும் அவர்களுக்கு உண்டுபண்ணியது. பசித்தவர்கள் தமக்குத் தேவையான உணவுகளை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போழுது அங்கே இரண்டு ஜீப்பில் இத்தாலிய நாட்டைச் சார்ந்தவர்கள் வேகமாக வந்தார்கள். அவர்களின் உடலில் குத்தப்பட்டிருந்த பெரிய பெரிய பச்சைகள் அவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டின. இதைப் பார்த்த சிலர் மெதுவாகப் பின்வாங்கத் தொடங்கினார்கள். ஒரு ஜீப்பில் ஆறுபேரும் மற்றைய ஜீப்பில் ஐந்து பேரும் இருந்தார்கள். அவர்கள் ஜீப்புகள் வேகமாக வந்தன. கைகளில் என்ன உள்ளது என்பதை ஓரளவு புரிந்தவர்கள், பாய்ந்து தங்களை மறைத்துக் கொள்ள முயற்சித்தார்கள். சிலருக்கு என்ன நடக்கிறது என்பது புரியாது நின்றார்கள். சிலர் அவர்கள் வருவதைக் கவனியாது நடனமாடினார்கள். மது மயக்கத்தில் உலக நடப்பை மறந்தவர்கள் எந்தக் கவலையும் இன்றித் தொடர்ந்தும் குதுகலாமாக ஆடினர். ஒளிபவர்களைப் பார்த்து எள்ளி நகையாடினர்.

யதார்த்தம் திகைப்போடு ரணமாக இறங்கிற்று. சிறிது நேரத்தில் தயவுதாட்சண்யம் இன்றி வேட்டுக்கள் ஜிப்சிகளை நோக்கிப் பாய்ந்தன. அதையடுத்து முதலில் அந்த நளினமான இசை அறுந்திற்று. இசைக்கருவி வாசித்தவர்களில் இருவர் பிணமாக நிலத்தில் வீழ்ந்தார்கள். நடனமாடியவர்கள், உணவு எடுத்தவர்கள், ஒடி விளையாடிய பிள்ளைகள், பெண்கள் எனப் பலரும் என்ன உடம்பில் தைக்கிறது என்பதை உணர முதல்; வேரறுந்த மரங்களாக நிலத்தில் விழ்ந்து துடித்தார்கள். அப்படி உயிர்கள் பிரியும் கோரத்தை உடனிருந்து பார்ப்பது என்றும் மறையாத நினைவுகளையும், அது உற்பத்தி செய்கின்ற பயங்கரக்கனவுகளையும் இந்த உலகில் வாழும்வரை தரும். அடங்கப்போகும் துடிப்பு, கை கால்களில் கடைசி உதறல், அதன் உச்ச வேதனை, பீய்ச்சியடிக்கும் குருதி, சோர்ந்து போகும் உடல், சிறிது சிறிதாய் அடங்கும் துடிப்பு, பிராணன் போகும் அவலம், விழியின் அசைவு அறும் நிலைப்பு, பார்க்ககூடாததைப் பார்க்கும் மனிதர்களின் அவதியாக அந்த மகிழ்வான கணங்கள் சிலநொடியில் நெஞ்சையறுக்கும் மரண ஓலமாய் மாறிற்று. எங்கும் இரத்த வெடிலும், கறையும் பரவத் தொடங்கியது. அந்த நாஜிகள் சுட்டுவிட்டு உடனடியாகச் சென்று விடாது, ஜிப்சிகளைச் சுற்றிச் சுற்றி ஜீப்பில் வலம்வந்து கேளிக்கைக்காகச் சுடுவதுபோல் சுட்டார்கள். பின்பு எங்கோ பொலீஸ் சத்தம் கேட்கத் தமது வாகனங்களை அவ்விடத்தைவிட்டு மின்னல் வேகத்தில் ஒட்டிச் சென்றார்கள்.

அந்த இடம் இன்பகரமான கொண்டாட்டத்தைத் தொலைத்து, யுத்தகளமாய்க் கூக்குரலிலும், சோகத்திலும் மூழ்கிப்போயிற்று. பிள்ளைகளைச், சகோதரனைச், சகோதரியைக், கணவனை, மனைவியை, பெற்றோரை என்பதாகப் பறிகொடுத்தவர்கள், பார்த்தவர்கள் இரத்தம் உறையப் பரிதாபமாகக் கதறி அழுதார்கள். ஏன் தங்களுக்கு இப்படி நடக்கிறது என்பதை அவர்களாற் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர்களின் அவல ஓலி எங்கும் எதிரொலித்தது. சூரியன் அந்த அதர்மத்தைக் கண்டு வெட்கித்தவனாய், சோகத்தோடு… கொடுமையான மனித இனத்தைப் பார்க்க சகியாது… முகில்களுக்குள் மறைந்து கொண்டான்.

வேட்டுச்சத்தங்கள் நகர்வரையும் கேட்டிருக்க வேண்டும். யாரோ அதையடுத்துத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். பொலீசும் அம்புலன்ஸ்சும் அவசரமாக அங்கே வந்தன. நிலைமையை உணாந்த பின்பு மேலும் அதிக அம்புலன்ஸ், பொலீஸ், ஹெலிஅம்புலன்ஸ் என்பன அங்கே வந்துசேர்ந்தன. மேலதிக பொலீஸார் பத்திரிகையாளரைச் சம்பவ இடத்திற்கு அருகே விடாது இரும்புச்சுவராகத் தடுப்புகள் அமைத்தனர்.

அதிதீவிர வலதுசாரியரசைக் காப்பாற்றும் முயற்சியிற் பொலீஸார் அதிக கவனமெடுத்தனர். அவர்களின் ஆட்சியில் இப்படித்தான் நடக்குமென எதிர்க்கட்சிகள் இதைப் பாரிய பிரச்சாரம் ஆக்கிவிடுவார்கள் என்பது அவர்களது பயமாகியது. அதனாற் பத்திரிகையாளர்கள் அதைப் பெரிதுபடுத்தாமல் இருப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு பொலீசை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

சில பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் அதையெல்லாம் மீறி ஹெலிக்கப்டர்கள் பாவித்துப் படம்பிடித்தார்கள். நேரடியாகவே அதை ஒலிபரப்பும் செய்தார்கள். பொலீஸாரால் அதைத் மேற்கொண்டும் தடைசெய்ய முடியவில்லை.

சம்பவ இடத்திற்குக் கிட்டே நெருங்கவிடாது தடுத்துவைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் செய்தி பெறுவதற்காய்த் தவித்தனர். துரத்தே நிறுத்திவைக்கப்பட்ட அந்த நிருபர்களுக்குப் பத்துப்பேர்மட்டுமே கொல்லப்பட்டார்களென உண்மைக்குப் புறம்பாகச் செய்தி கூறப்பட்டது. அவர்கள் அதை நம்ப மறுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அம்புலன்ஸ், சம்பவ இடத்தைவிட்டுச் செல்லும் அம்புலன்ஸ், காயப்பட்டவர்களின் தொகை என்பனவற்றை வைத்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்பதாகத் தமது செய்தியை அனுப்பினார்கள். அந்த செய்திக்கு ஹெலியில் இருந்து எடுத்த படங்களும் விரைவில் ஆதாரமாகின.

பின்பு வந்த தகவல்களிற் பொலீஸாரின் எண்ணிக்கை உண்மைக்குப் புறம்பானதெனவும், அவர்கள் உண்மையை ஏதோ காரணங்களுக்காக மறைக்கிறார்கள் என்பதுவும் தெரியவந்தது. இப்படிச் செய்வது இதுவரை இருந்துவந்த தகவற் சுதந்திரத்தின் நம்பகத்தன்மையை இல்லாது செய்வதாகவும், இது ஜனநாயகத்திற்கு எதிரான மிகவும் ஒரு ஆபத்தான வளர்ச்சியெனவும் விமர்சனங்கள் எழுந்தன.

தளத்தில் நின்று வேலை செய்த பொலீஸின் மீதே அதிக விமர்சனம் வைக்கப்பட்டது. இப்படியான செயலுக்குப் பொலீஸார் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பது பத்திரிகையாளரக்குப் புரிந்தாலும், உண்மையை வெளிக்கொணர்வதற்காய் அவர்கள் மீது மிகக்கடுமையான விமர்சனங்களைப் பத்திரிகையாளர்கள் வைத்தார்கள்.

இறுதியில் அறுபத்திநாலு ஜிப்சிகள் இறந்தார்கள் என்பதையும், முப்பத்தியாறு பேர் காயம் அடைந்தார்கள் என்கின்ற தகவலையும் பொலீஸார் வெளியிட்டதோடு, உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே முன்பு வெளியிட்ட தகவல்களிற் தவறு நேர்ந்ததாகவும் அவர்கள் சமாதானம் கூறினார்கள்.

பத்திரிகையாளர்கள் மருத்துவமனைகளோடு தொடர்பு கொண்டார்கள். அதன்படி பொலீஸார் இறுதியாக வெளியிட்ட தகவலே உண்மை என்பதை ஒப்புக்கொண்டு, நவநாஜிகளைக் கண்டித்தும், தற்போதைய அதிதீவிரவலதுசாரி அரசைக் கண்டித்தும் செய்திகள் வெளியிட்டனர்.

இந்தக் கொலைகளைத் தொடர்ந்து பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பாவில் உள்ள அனேகமான நகரங்களில் நடைபெற்றன. நவநாஜிகளைவிட இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் அரசிற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்பதாய் அந்த அரசுகள் கணித்திருந்தன. அவை அதை அடக்க அவர்கள் மீது அதிகமாகப் பொலீஸ் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன. இத்தாலியிற் பல அமைப்புகள் தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்துவந்தன. அது அந்த நாட்டு அரசாங்கத்திற்குச் சற்றும் பிடிக்கவில்லை. இதை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற முயற்சியில் அது மும்மரமாக ஈடுபட்டது.

அவர்களுக்கு அதீத பத்திரிகைச் சுதந்திரமும், ஆர்ப்பாட்டங்களுக்கான அனுமதியும் கண்ணைக் குத்தியது. அவர்கள் ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்து, பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளையும் தணிக்கை செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தார்கள். அதற்குச் சட்டங்களை முதலில் இறுக்க முடிவு செய்தார்கள்.

இத்தாலியப் பாராளுமன்றத்தில் அந்தச் சட்டங்களை மாற்றுவது பிரச்சனையாக இருக்கவில்லை. அவர்கள் அத்தோடு விட்டுவிடவில்லை. இரு மாத்திற்கு மேலாக ஒருவரை நீதிமன்றில் நிறுத்தாமற் கைதுசெய்து வைத்திருக்கும் அதிகாரத்தைப் பொலீஸிற்கு கொடுப்பதாகச் சட்டத்தை மாற்றி அமைத்தார்கள். இது பல ஊடகங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அதேபோல எதிர்க்கட்சிகள், இடதுசாரிகள், முற்போக்கு அமைப்புக்கள் போன்றவற்றிற்கும் அது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

வழமைபோல இம்முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பொலீஸார் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதோடு, ஊடகங்களையும் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தினர். நாட்டின் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்படாது ஒரு ஸ்திரமான அரசு அமைய வேண்டுமென்றால் இப்படியான கட்டுப்பாடுகள் முக்கியமென அந்த அரசு நம்பியது. அதைத் தனது நாட்டில் மட்டுமில்லாது ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென விவாதித்தது. அதற்கு அவ்வரசு நவநாஜிகளால் ஏற்பட்ட பிரச்சனையை மூடிமறைத்து, இஸ்லாமிய அதிதீவிரவாதிகளால் உலகத்திற்கு இருக்கும் அச்சுறுத்தலையும், அதற்குத் தேவைப்படும் பலத்தையும் வலியுறுத்தியது. அந்தச் சட்டங்களைக் கொண்டுவருவதன் மூலம் அவற்றை அடக்கி, ஐரோப்பாவிலும், உலக நாடுகளிலும் அமைதியைக் கொண்டுவரலாம் என்பதாக அது வாதிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலில் இப்படியான எண்ணத்திற்குச் சற்று எதிர்ப்பு இருந்தாலும், இஸ்லாமியத் தீவிரவாதிகளை அடக்குவதற்கு உதவும் என்கின்ற போர்வை அவர்களுக்கு நன்கு பிடித்துக்கொண்டது. அத்தோடு தமது நாடுகளிற் தங்களது நிலையை மேலும் இறுக்கிக்கொள்ள அவை உதவும் என்பதையும் அறிந்து, அதற்கு ஒப்புக்கொண்டனர்.

சில காலத்தில் ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் அந்தச் சட்டங்கள் நிறைவேற்றுப்பட்டதால், அது முழு ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், அதோடு வேறு விதத்தில் கூட்டாகச் சேர்ந்து இயங்கும் மற்றைய நாடுகளுக்கும் செல்லுபடி ஆவதாயிற்று.

அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டவர்கள் அந்தச் சட்டத்தின் சுவை எப்படி இருக்கும் என்பதை முதன் முதல் அறிந்தனர். சட்டமாற்றங்கள்… அதால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்கள்… அதற்குச் சென்றவர்கள் திரும்பிவராத மர்மங்கள்… அவர்கள் எங்கே தொலைந்தார்கள் என்கின்ற அவர்களின் உறவினரின் பரிதவிப்பு… என்பவற்றாற் கொல்லப்பட்ட ஜிப்சிகளின் மேலிருந்த அக்கறை மெதுவாக மறக்கப்படலாயிற்று. புறப்பட்டுப் போபவர்கள் திரும்பி வீடுவராத யதார்த்தம் இலங்கை, இலத்தினமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து ஐரோப்பாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

ஐரோப்பிய நாடுகளை வேவுபார்த்து வந்த அமெரிக்கா, முதன்முறை இதை ஆட்சேபித்து அறிக்கை விட்டது. அதை ஒரு பொருட்டாகவே ஐரோப்பிய ஒன்றியம் கொள்ளவில்லை. சிலர் இது ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதிது இல்லையே என்பதாகக் கிண்டல் செய்தார்கள். பின்பு ஆசிய, ஆபிரிக்க, இலத்தினமெரிக்க நாடுகள் அதைக் கண்டித்தன. அவை தமது கண்டனங்களோடு அதை நிறுத்திவிட்டன. யாரும் ஐரோப்பிய ஒன்றியத்தோடான பொருளாதாரத்தில் உரசிப் பார்ப்பதற்கு விரும்பவில்லை. சமுக நீதிகளை, மனிதத்தைவிடக் கூட்டிக் கழிக்கும் பொருளாதாரத்திற்கே அதிக மதிப்புக் கொடுக்கும் நிலையில் உலகம் பரிதவித்தது. விகாரம் கண்டிருந்தது.

தொடரும்…