5.83x8.ma-frontpng

ஜேர்மனியின் வந்தேறுகுடிகளில் அதிகமானோர் துருக்கியில் இருந்து வந்தவர்கள். அவர்கள் ஒற்றமான் பேரரசுகள் இருந்தபோதே ஜேர்மனிக்கு அதிகாரத்தோடு வந்தார்கள். பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் தொடர்ந்து ஜேர்மனியில் வாழாது தாய்நாட்டிற்கு அடிக்கடி போவதும் வருவதுமாக அவர்கள் வாழ்க்கை ஓடியது. இரண்டாம் உலகமகாயுத்தம் நடந்தபோது அவர்கள் முற்றுமாய்த் தாய்நாட்டிற்குத் திரும்பியே சென்றனர். தமது நாட்டில் சுத்தமான காற்று இருக்கும் போது நச்சுவாயு சுவாசிக்கவேண்டி நிர்ப்பந்தத்தை அவர்கள் விரும்பவில்லை. இரண்டாம் உலகமகாயுத்தம் சரித்திரமான பின்பு ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டில் வேலைக்காக ஜேர்மனில் வந்து குடியேறினார்கள். கால ஓட்டத்தில் அவர்கள் அந்த நாட்டின் பெரிய சிறுபான்மையினராக மாறினர். அவர்கள் சுதேசிகளைப் போல் இல்லாது நிறம் குன்றியவர்களாகவும், இஸ்லாம் என்கின்ற வேற்று மதத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தமை, அவர்களை ஜேர்மன் நாட்டு மக்களாகப் பல சுதேசிகளால் ஏற்றுக்கொள்ள முடியாது தடுத்தது.

தனிமனித விருப்பு வெறுப்பு வேறு, சட்டமும் அதன் நடைமுறையும் வேறு. சட்டங்கள் கொடுத்த பாதுகாப்பில் இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டில் ஜேர்மனியில் மூன்று புள்ளி ஐந்து மில்லியன் துருக்கியப் பரம்பரையினர் குடியிருந்தனர். அதன் பின்பு வந்த காலங்களில் முஸ்லீம்மக்கள் மீதும், வேற்று நிறமனிதர்கள்மேலும் அடிக்கடி வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தன. அதனால் வெறுத்துப்போன ஒரு பகுதி துருக்கியர் திரும்பவும் தமது தாய்நாட்டிற்குச் சென்றுவிட்டனர். என்றாலும் பெரும் பகுதியினர் தொடர்ந்தும் ஜேர்மனியில் போராட்டத்தோடு வாழ்ந்து வந்தார்கள்.

‘கிறெயஸ்பெர்க்'(Kreuzberg) என்கின்ற பேர்லினின் புறநகர்ப்பகுதி ஒருகாலத்தில் ‘குட்டி இஸ்தான்புல்'(Little Istanbul) என அழைக்கப்பட்டது. அங்கு குடியிருந்த பல துருக்கியர்கள் வீட்டின் விலையேற்றம் காரணமாக இடம் பெயர்ந்து விட்டாலும், இன்றும் பெருந்தொகையான துருக்கியர்கள் அங்கே வாழ்கிறார்கள். அவர்களின் கலசாரப்படி நடக்கும் திருமண வைபவங்கள் அழகாக, ஆடம்பரமாக, குதூகலமாக இருக்கும்.

இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு ஆவணிமாதம் பதினெட்டாந் திகதி காலை, ஆறு துருக்கிய இளைஞர்கள் அந்த மண்டபத்தை அலங்கரிக்கப் போனார்கள். அப்போது பிறவுண் சேட்டும், அதேநிறத்தில் அரைக்காற்சட்டையும் அணிந்த பதின்நான்கு வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள் திடுதிடுவென ஓடி வந்து துருக்கிய இளைஞர்கள் முன்பு நின்றார்கள். அவர்கள் தலைமயிரை மிகவும் கட்டையாக வெட்டியிருந்தனர். கிண்டல் செய்யும் விதமாக ‘ஹயில் ஹிட்லர்’ என்றவண்ணம் அந்தத் துருக்கிய இளைஞர்களைப் பார்த்து காலை நிலத்தில் உதைந்து ஹிட்லர் சலூட் அடித்தார்கள். அந்தத் துருக்கிய இளைஞர்கள் இதை எதிர்பார்க்காததால் ஆடிப்போய்விட்டார்கள். அதிர்ச்சியில் உறைந்து அசையாது நின்றனர்.

சலூட் அடித்த இளைஞர்கள் கையை இறக்காது அந்தத் துருக்கிய இளைஞர்களைப் பார்த்தவண்ணம் நின்றனர். துருக்கி இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. திருப்பிச் சலூட்டடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா என்கின்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது. அப்படி அவர்கள் எதிர்பார்ப்பார்களா? அப்படி ஒரு சலூட்டைத் திருப்பிக் கொடுப்போமா? அதைவிட எங்கள் கைகளை நாங்கள் வெட்டி எறிவோமா என்கின்ற எண்ண ஓட்டத்தில் அவர்கள் தத்தளித்தார்கள்.

அதில் ஒரு துருக்கி இளைஞனுக்குத் திடீரெனக் கோபம் வந்துவிட்டது. அவன் அவர்களை நோக்கி அடிக்க ஒடினான். அதைப்பார்த்த மற்றைய இளைஞர்களும் சேர்ந்து அவர்களை கலைத்தனர். இதைப் பார்த்த நவநாஜி இளைஞர்கள் தப்பி ஒட்டம் பிடித்தார்கள். கலைத்துச் சென்ற துருக்கிய இளைஞர்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவர்கள் திரும்பி வந்து ஹோலைத் திறந்து அலங்கரித்தார்கள். அந்தச் சம்பவத்தை ஒரு கோமாளித்தனமான விளையாட்டென அவர்கள் மறந்து போய்விட்டார்கள்.

*

அன்று இரவு எழுமணிபோல் அந்தத் துருக்கியத் திருமணம் களைகட்டியது. விருந்தினர் பாட்டும் கூத்துமாய் மகிழ்ச்சியின் ஆழத்திற் புறவுலக அச்சத்தை மறந்து இன்பத்திற் சுகித்தனர். அன்று சனிக்கிழமை. பலருக்கும் ஓய்வான நாள். அழைக்கப்பட்டவர்கள் எல்லோரும் வைபவத்திற்கு வந்ததான தோற்றம். ஹோல் விருந்தினர் கூட்டத்தால் நிறைந்து அலைமோதியது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்பதாகக் கூட்டம் எள்ளுவிழா இறுக்கம் கண்டது. அவர்கள் பேச்சும், சிரிப்பும், தேவதைகள் போன்று வந்திருந்த அலங்காரமும் சுவர்க்கலோகத்தைப் பூமிக்கு இழுத்து வந்ததாகப் பிரமைகாட்டியது.

துருக்கிய முறைப்படி பரிசாக பணம் வாங்கும் நிகழ்வு நடைபெறத் தொடங்கியது. மணமகள் ஒருவித நடனம்போல கைகளை அசைத்து, நன்றி சொல்லிச் சொல்லிப் பணத்தை வாங்கினாள். மணமகனும் நன்றி சொல்லிச் சொல்லிப் பணம் வாங்கினான். பணம் கொடுப்பவர்களும் பாரபட்சம் இல்லாது இருவருக்கும் ஒவ்வொரு தாளைக் கொடுத்த வண்ணம் சென்றார்கள்.

திடீரென இரண்டு ஜிப்புகளும் ஒரு லொறியும் வேகமாக வந்து திருமண மண்டபத்தின்முன் நின்றன. அந்த லொறியை ஓட்டி வந்தவன் திருமண மண்டபத்தின் வாசலை நன்கு மறிப்பது போல லொறியை நிறுத்திவிட்டு வாகனத்திலிருந்து இறங்கினான். அவர்கள் எல்லோரும் முகமூடி தரித்திருந்தனர். அவர்களின் உடல்களில் பச்சை குத்தியிருப்பது நன்கு தெரிந்தது. அது அவர்கள் யார் என்பதை இனம்காட்டியது. வெளியே நின்ற சில துருக்கிய இளைஞர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவர்கள் திகைத்துப் போய் அப்படியே அசையாது சிலகணங்கள் நின்றார்கள்.

ஜிப்பில் இருந்தவர்கள் படபடவெனப் பெற்றோல் குண்டுகளுடனும், சுத்தியல்களுடனும் கீழே இறங்கினார்கள். முதலிற் திருமண மண்டப வாசலுக்கும் லொறிக்கும் இடையில் மூன்று பெற்றோல் குண்டுகளை கொழுத்தி எறிந்தார்கள். பின்பு மண்டப யன்னல் கண்ணாடிகளைத் தாங்கள் கொண்டுவந்த சுத்தியல்களால் உடைத்து ஹோலுக்கு உள்ளே பெற்றோல்க் குண்டுகளை வீசியெறிந்தார்கள். வெளியே நின்ற சில துருக்கியர்கள் அவர்களைத் தடுக்கப்போக, அவர்களைச் சுத்தியலால் தாக்கிவிட்டு, மேலும் பெற்றோல் குண்டுகளை உள்ளே வீசினார்கள். பின்பு வாசலில் நிறுத்திய மற்றைய தங்களது வாகனங்களை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த இடத்தைவிட்டு மறைந்து போனார்கள். இவையனைத்தும் நன்கு திட்டமிடப்பட்டது போன்று சிலகணங்களுக்குள் நடந்து முடிந்தன. என்ன நடக்கிறது என்பதை அங்கு உள்ளவர்கள் ஊகிக்கமுதலே அவை நடந்து முடிந்தன. எங்கும் ஒரே குழப்பமும் கூக்குரலுமாயிற்று.

ஹோலுக்குள் இருக்கும் பொருட்கள், அந்தக் ஹோலின் உள்ளமைப்பை உருவாக்கிய பொருட்கள் என்பன மிகவும் எளிதிற் தீப்பற்றக்கூடியவை. அவை மிகவும் வேகமாகத் தீப்பற்றத் தொடங்கின. திருமணத்தை ஒட்டி துருக்கியர் பாவித்த நைலோன் உடுப்புகள் எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதான தீபற்றும் தன்மையுடையவை. அனைத்து எரிபொருளையும் தின்று தீயின் கோரத் தாண்டவம் ஊழிக்காகலம் வந்துவிட்டதான வேகத்தோடு பரவியது. வானை நோக்கி அது தனது நாக்களை நீட்டியதில் இன்னும் இரைதா என்கின்ற வெறி அதற்கு. பிரபஞ்சத்தையும் தாண்டி வளரவேண்டும் என்கின்ற ஆறாத வேட்கை.

பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்பதாகத் தீயோடு போராடும் அவலம் கோரமாய் விரிந்திற்று. சிலர் நிலைமை புரிந்ததும் யன்னல்களில் ஏறி வெளியே குதித்தனர். யார் யன்னலில் ஏறி முதலில் வெளியே குதிப்பது என்பதிற் பெரும் இழுபறி உண்டாகிற்று. வாசலில் நிறுத்திவைக்கப்பட்ட லொறியும் நெருப்பும் அவர்களை அப்பக்கம் அண்டவிடாது தடுத்தன. வெளியே நின்ற சில துருக்கிய இளைஞர்கள் தீயணைப்புப் படைக்கு அறிவித்தனர். கற்கள் தேடி எடுத்துவந்து மீதம் இருந்த யன்னல் கண்ணாடிகளை உடைத்து, அதனூடாக மனிதர்களை வெளியே கொண்டுவரப் போராடினார்கள்.

அப்படி அவர்களாற் சிலரைக் காப்பாற்ற முடிந்தது. பலர் புகையால் மயக்கமுற்று விழுந்தனர். சிலர் கருகி எரிந்து நெருப்போடு போராடி மயங்கி விழுந்தனர். அப்படி விழுந்த உடல்கள் அங்கங்கே கிடந்தன. நரமாமிசம் எரிந்த கந்தக நாற்றம் அந்த இடமெல்லாம் பரவியது. சிலர் அந்த நாற்றத்தைப் பொறுக்க முடியாது வாந்தி எடுத்தார்கள். அந்த நாற்றம் மனித கட்டுப்பாடுகளைத் தகர்த்து நாலாபக்கமும் பரவியது.

துருக்கிய இளைஞர்கள் சிறிது நேரம் தீயொடு போராடிய பின்பே தீயணைப்புப் படை, அம்புலன்ஸ், பொலீஸ் ஆகியன அங்கே வந்து சேர்ந்தன. தீயணைப்புபடை மிக விரைவாக அந்த மனிதர்களை மீட்டதோடு, தீயையும் அணைத்தது. அப்படி இருந்தும் நூற்றி பத்துத் துருக்கியர்கள் நச்சுப்புகை காரணமாகவும், எரிகாயங்கள் காரணமாகவும் இறந்து போனார்கள். முப்பத்தி எழுபேர் தீவிர எரிகாயங்களோடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். இருபத்தியாறுபேர் சிறிய காயங்களுக்காக மருத்துவமனைக்குச் சென்றார்கள். மீதிப்பேரிற் சிலரைப் புகையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா எனப் பரிசோதித்தார்கள்.

பொலீஸ் அங்கு வந்த ஊடகவியலாளரை அழைத்துக் கடுமையான சட்டதிட்டங்கள் பற்றி விளங்கப்படுத்தியது. ஊடகக்கட்டுப்பாடுகள் இருந்ததால் எந்த மனிதர்களையும் காட்டுவதான காட்சிகளை வெளியிடக்கூடாது எனப் பொலீஸ் கடுமையான கட்டளை பிறப்பித்தது. அதற்கு அமைய அனைத்துக் காட்சிகளும் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் அனுமதி பெற்றே வெளியிடப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினர். அதேபோல தாங்கள் தரும் தகவலை மட்டுமே ஊடகங்கள் வெளியிடலாம் என்பது பற்றியும் அவர்கள் கண்டிப்புடன் அறுவுறுத்தினர்.

இறந்தவர்களிற் சிறு குழந்தைகள் அதிகமாக இருந்தமை அந்த அவலத்தில் தாங்கொணா வேதனையாகியது. பிள்ளைகளை இழந்து பெற்றோரின் கதறல் அந்த நகரை உலுக்கிற்று. இறந்த பிள்ளைகளில் அனேகர் எரிகாயத்தோடு இறந்து கிடந்தமை சகிக்க முடியாதவாறு மனதைப்பிழியும் வேதனை தந்தது. அதற்கு அவர்களின் உடை ஒரு காரணமாயிற்று. அப்படியே சில பெண்களின் உடையும் அவர்களின் வாழ்வுக்கு உலைவைத்திற்று.

மாபெரும் அவலமாக மணமகனும் மணமகளும் ஒருவரை ஓருவர் அணைத்தவண்ணம் எரிந்துபோய் இறந்து கிடந்தார்கள். அந்த காட்சி என்றும் மறக்கமுடியாத வேதனையை, வடுவை அந்த நகரத்துத் துருக்கிய மக்களுக்கு நிரந்தரமாகத் தந்திற்று.

அடுத்த நாட் செய்தி வெளியிட்ட ஜேர்மனிய ஊடகங்கள் எவ்வளவுபேர் இறந்தார்கள் என்பதையோ அல்லது எவ்வளவுபேர் காயப்பட்டார்கள் என்பதையோ வெளியிடவில்லை. அதைப் பெரிதுபடுத்தாது சிலர் காயப்பட்டும் சிலர் இறந்தும் உள்ளார்கள் எனவும், எரிந்ததிற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதாகவும் செய்தி வெளியிட்டன. ஊடகங்களில் வந்த இந்தச் செய்தியைக்கண்டு அந்த நகரத்துத் துருக்கிய மக்கள் கொதித்தனர். அவர்கள் அன்று பிற்பகல் தொழுகை முடிந்ததும் திடீரெனத் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அனுமதி இல்லாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதிற்காய், துருக்கியரைப் பொலீஸார் இடைமறித்துத் தாக்கினார்கள். கோபமுற்ற துருக்கிய இளைஞர்கள் பொலீஸாரை எதிர்த்துத் தாக்கினார்கள். பின்பு பொலீஸின் கடுமையான திட்டமிட்ட எதிர்த்தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் கலைந்து ஓடினார்கள். ஓடும்போது கோபத்தில் வாகனங்களை அடித்து உடைத்தும், கட்டடங்களுக்கு நெருப்பு வைத்தும் நாசம் செய்தார்கள். அந்தக் கலவரம் அத்தோடு நின்றுவிடவில்லை. அடுத்து வந்த நாட்களிலும் வாகனங்களுக்கும் சொத்துகளுக்கும் தீவைக்கும் சம்பவமாக அது தொடர்ந்தது.

இச்செயல் பதவியில் இருந்த அதிதீவிரவாத ஜேர்மனிய அரசுக்குக் கடும் கோபத்தை தந்தது. அது வாகனங்களுக்குத் தீவைப்போரையோ அல்லது உடைமைகளுக்கு தீவைப்போரையோ கண்டால்; காணுமிடத்தில் சுட்டுக்கொல்லும் அதிகாரத்தைப் பொலீசுக்கு வழங்கிற்று.

அதற்குப் பின்பு பல துருக்கிய இளைஞர்கள் வீதிகளிற் பொலீஸாராற் சுடப்பட்டு இறந்தார்கள். அவர்களது பிரேதங்கள் மதமுறைப்படி அடக்கம் செய்ய முடியாது பயத்திலே தெருக்களிற் கிடந்தன. அது அவர்கள் மத்தியில் பெரும் பீதியை, கோபத்தை உண்டுபண்ணியது. அதற்குமேல் அவர்களுக்கு அரசபயங்கரவாதத்தை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பது புரியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து அவர்களைப் புனித யுத்தத்திற்குச் சிலர் ஏவினார்கள். அது பெருமளவில் எடுபடாவிட்டாலும் சிலர் அதை நம்பினார்கள். அதற்காகாச் சிலர் பெற்றோருக்கு கூறாது இரகசியமாகப் புறப்பட்டுச் சென்றார்கள். துருக்கியரின் நிலை பட்ட காலிலே படும் என்பதாகிற்று.

தொடரும்…