5.83x8.ma-frontpngதிடீரென யாரும் எதிர்பாராத முடிவை அந்த அதிதீவிரவலதுசாரி ஜேர்மனிய அரசாங்கம் எடுத்தது. அதன்படி ஜேர்மனில் வாழும் குடியுரிமை பெறாத அனைத்துத் துருக்கியரையும் இனம்கண்டு, உடனடியாக அவர்களை நாடுகடத்துவதென அது அதிரடி முடிவுசெய்தது. அதற்காக விசேட புகையிரத சேவைகளை அது ஒழுங்கு பண்ணியது.

இது ஜேர்மனியில் வாழும் துருக்கிய சமுதாயத்திற்குத் தெரிந்தபோது அவர்கள் கடுமெதிர்ப்பில் ஈடுபட்டார்கள். எதையும் பொருட்படுத்தாது அந்த அலுவலை நிறைவேற்றுவதற்குப் பொலீசுக்கு முழு அதிகாரத்தையும் அந்த வலதுசாரி அதிதீவிரவாத அரசு கொடுத்தது. பொலீஸ் கடமையை நிறைவேற்றுவதில் எந்தத் தயவுதாட்சண்யமும் காட்டாமல் செயற்படலாயிற்று. அது பல மனித அவலங்களைப் புதிய ஜேர்மனியின் வரலாறாக்கியது.

இரவோடு இரவாக ‘கிறெயஸ்பெர்க்'(Kreuzberg) இல் வசித்த துருக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டார்கள். கணவனிடம் இருந்து மனைவி, மனைவியிடம் இருந்து கணவன், பிள்ளைகளிடம் இருந்து தாய் தந்தையர் அல்லது தாய்தந்தையரிடம் இருந்து பிள்ளைகளென எந்தத் தயவு தாட்சண்யமும் இன்றிக் குடியுரிமை இல்லாது வசித்துவந்த அனைத்துத் துருக்கியரையும் கைதுசெய்து, பெரிய விளையாட்டு மைதானங்களிற் கடுமையான பாதுகாப்போடு அடைத்து வைத்தார்கள். அந்த மைதானங்களைச் சுற்றிப் பலமீற்றர் உயரத்திற்கு நவீன முட்கம்பிகளால் வேலி அமைத்திருந்தனர். அந்த வேலிகளில் இருந்த கூரிய நீட்டான கத்திபோன்ற முட்கள் தப்பி ஓடுவதைத்தடுப்பது என்பதற்குப் பதிலாகத் தன்னிடம் வந்து தற்கொலை செய்துகொள் என்பதாக துருத்திக்கொண்டு நின்றன. இப்படியான கடும்போக்கு மற்றைய இனத்தவருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவ்வரசின் நோக்கமாகும்.

பின்பு ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகையிரதங்கள் மூலம் அவர்களை உடனடியாகத் துருக்கியை நோக்கி அனுப்பினார்கள். அப்போது அதை எதிர்த்துப் போராடிய பல துருக்கியருக்குப் பிறந்த ஜேர்மன்நாட்டுக் குடிமக்களையே பொலீஸார் ஈவுஇரக்கமின்றிச் சுட்டுக்கொன்றார்கள். அதன் உண்மையான எண்ணிக்கைகள் அப்பட்டமாய் மறைக்கப்பட்டன. அதற்குத் தணிக்கை மிகவும் உறுதுணையாகிற்று. என்னதான் தணிக்கை இருந்தாலும் தொலைத்தொடர்பு யுகத்தில் இருக்கும்போது செய்திப்பரிமாற்றத்தை முழுமையாக எவராலும் தடைசெய்ய முடியவில்லை. கமராக்களை முற்றுமாக ஓழிக்க முடியவில்லை. இணையத்தளங்களில், முகப்புத்தகத்தில், ட்வித்தரில் செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து சந்தேகமான நபர்களுக்கான இணைய இணைப்புக்களை அந்த அரசு துண்டித்தது. கைத்தொலைபேசிகளைப் பிடுங்கியது. இவ்வகையான ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை மறுப்பு உலகை அதிர்ச்சியடைய வைத்தாலும் எதுவும் செய்ய முடியாத பார்வையாளராக அவர்கள் விடுப்புப் பார்த்தார்கள். இறந்தகால நினைவுகள் நிகழ்கால நடப்பைப் பார்க்கும்போது பலரையும் கிலிகொள்ள வைத்தது. மீண்டும் ஒருமுறையா என்பதை யாராலும் நினைத்துப்பார்க்க முடியவில்லை. மீண்டும் என்பது பலருக்குக் கசந்தாலும் அது சூல்கட்டிவிட்ட உண்மை பலருக்குப் புரிந்தது.

மீண்டும் மீண்டும் உரிமைகளைவிடப் பொருளாதாரத்தைப் பற்றிய கவலையே பல நாடுகளைக் கதிகலங்க வைத்தது. எதிர்த்து அறிக்ககைவிட்டாலும் சிலகாலத்தில் குழைந்த வண்ணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நாடியோடவேண்டிய அவல நிலையில் அந்த நாடுகள் இருந்தன.

அனுப்பப்பட்ட துருக்கியர்களை, துருக்கிய அரசாங்கம் ஏற்க மறுத்து எல்லையில் தடுத்து வைத்தது. துருக்கியமக்களும், பல்கேரியமக்களும் அந்த மக்களுக்கு உணவு, நீர் என்பன வழங்கினர். அரசாங்கம் இப்படிச் செய்தது அம்மக்களைக் கொதிகொள்ள வைத்தது. அதையடுத்து இருகரையிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

ஜேர்மனிய அதிதீவிரவாதவலதுசாரி அரசாங்கம் அவர்களைப் புகையிரதத்தோடு திருப்பி எடுப்பதற்கு மறுத்தது. தனது முடிவில் மனிதாபிமானம் என்னும் நெகிழ்ச்சியைக் காட்ட விரும்பவில்லை. மாறாத முடிவோடு மனிதம் மறுத்தது. தம்மக்களை மட்டும் நினைத்தது. அனுப்பிய துருக்கியரைத் திருப்பியெடுத்தால் சிலகாலத்தில் ஜேர்மன் ஒரு துருக்கிய நாடாகவே மாறிவிடும் என்கின்ற எண்ணம் பல அதிதீவிரவலதுசாரி அரசியல்வாதிகளிடம் ஆழமாக வேரூன்றியிருந்தது.

துருக்கியில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டங்களைக் கண்ட துருக்கிய அரசாங்கம் திகைத்துப் போனது. நாட்டிற்குள்ளே ஜெர்மனியால் அனுப்பப்பட்டவர்களை எடுத்தால் பல ஐரோப்பிய நாடுகள் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வருங்காலத்தில் இன்னும் அதிக மக்களை திருப்பி அனுப்புவார்களென அது அஞ்சியது. துருக்கியின் பொருளாதாரத்திற்கான அன்னியச்செலாவணியை இவர்களும், துருக்கிக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளும் அள்ளி வழங்கினர். அந்தப்பணவரவு தடைப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேவேளை மக்களை நடுத்தெருவில் விடுவதால் உள்நாட்டு மக்களின் எதிர்ப்பிற்குப் பலியாகி… தமது அரசை இழப்பதோடு, உள்நாட்டுக் கலவரங்களும் உண்டாகலாமெனத் துருக்கிய அரசு உள்ளுரப் பயந்தது.

துருக்கிய அரசாங்கம் தனது உயர்மட்டப் பிரதிநிதிகளை அவசர அவசரமாக ஜேர்மனிக்கு அனுப்பி, மரதன் பேச்சுவார்ததை நடத்தியது. எதுவும் பலனளிக்கவில்லை என்கின்றபோது அது சோர்ந்து போய்விட்டது. பின்பு தமது அரசியலையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை அது உணர்ந்தது. அத்தால் அது தனது முடிவை மாற்றிக்கொண்டது.

அதே வேளை அலுத்துப்போன மக்கள்;, யாரையும் கேளாது தங்கள் நாட்டிற்குள் புகுந்தார்கள். துருக்கியப் பொலீஸார் தங்கள் மக்களைத் தாங்களே சுட்டுக் கொல்லுவதா என்கின்ற எண்ணத்தில் எதுவும் செய்யாது மௌனம் காத்தனர். பொலீஸின் செய்கையால் அரசு அதிர்ந்தாலும் எதிர்நடவடிக்கை எடுக்காது அது மௌனம் சாதித்தது. ஜேர்மனிய அரசாங்கம் அதை ஒரு வாய்ப்பாக நினைத்து மேலும் மேலும் துருக்கியரைக் கைது செய்து அனுப்பியது. விஸ்தீரணமான வாழ்விடத்திற்கும்… விமர்சையான வழங்களுக்கும்… மக்களின் பெருக்கம் எதிரி என்கின்ற நாஜி வாதத்தை அது துசுதட்டி அழகுபார்த்தது. அதற்குத் துருக்கியரை நாட்டைவிட்டு வெளியேற்றுவது முதற்படியாக அமைந்தது. பல ஐரோப்பிய நாடுகள் இந்த நாடகத்தை உள்நோக்கத்தோடு மௌனமாகக் கவனித்தன. தமது நாட்டைப்பற்றி மட்டும் சிந்தித்தன.

துருக்கி தமது மக்களை எதுவும் செய்ய முடியாது இறுதியில் ஏற்றது. பொருளாதாரச் சுமையை எண்ணி மருண்டது. அந்த நிகழ்வு ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் பெரும் மகிழ்வைத் தந்தது. தங்களுக்கும் ஒரு வழி பிறந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த பல நாடுகள் இரகசியமாக மகிழ்வு கொண்டன. அந்த அரசுகள் அதைத் தொடர்ந்து இரகசியத் திட்டங்களை உருவாக்கின.

பல நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மேல் கடுமையான விமர்சனத்தை இம்முறை வைத்தார்கள். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் உள்விவகாரங்களிற் தலையிடக்கூடாதெனக் கடுமையாக அந்த நாடுகளை எச்சரித்தது. அத்தோடு இந்த விமர்சனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடனான பொருளாதார, அரசியல் உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் எனவும் அது காட்டமாகச் சுட்டிக்காட்டியது.

பொருளாதாரம் என்ற சொல் கேட்டதும் பலநாடுகள் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போயின. வரவும், செலவும், இப்போது தங்களிடம் இருக்கும் போகமும் அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றின. அதேவேளை அநியாயத்திற்குப் பலியாகும் மக்களிற்காக ஆட்சேபிக்க முடியாததை எண்ணி அந்த நாடுகள் புழுங்கினர்.

தொடரும்…