5.83x8.ma-frontpngஇரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதியிலேயே லண்டனின் சில புறநகர்ப்பகுதிகள் சுதேசிகளின் வெளியேற்றத்தால் தன்னிச்சையான ‘கெத்தோ’க்களாக உருமாறிவிட்டன. அங்கு பல புறநகர்ப்பகுதிகளில் நின்றால், நிறமான வந்தேறுகுடிகளை மட்டுமே பார்க்கக்கூடியதாக இருக்கும். அதையும் மீறிச் சில வெள்ளையரைக் கண்டால், அவர்கள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் சில வசதிகளைக் கருதி அங்கு தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வசிப்பவர்கள். அதைவிட நிற மனிதர்களைத் திருமணம் செய்த சுதேசிகளைக் காணலாம். மற்றைய சுதேசிகள் பட்ட மரத்தை விட்டுப் பறந்த பறவைகளாக நிரந்தரமாய்க் குடிபெயர்ந்துவிட்டார்கள். இந்த மாற்றங்கள் ஏன் நடக்கின்றன? அதை எப்படி நிறுத்துவது என்கின்ற அலசல் அப்போது இருந்த அரசிடம் இருக்கவில்லை. அவர்களின் தனிமனித சுதந்திரத்திற் தலையிடுவதா என்கின்ற மெத்தனத்தில், சமுதாயப் பிளவுகள் பலமாகக் காலுன்றின. லண்டன், சுதேசிகள் அற்ற பலகலசாரம்கொண்ட சுதந்திரமான ‘கெத்தோ’க்களான பெருநகரமாக உருப்பெற்றது.

இந்தப் புறநகர்ப் பகுதிகளில் நிற்கும்போது தெற்காசிய நகரங்களில் அல்லது ஆபிரிக்காவில் நிற்பதான உணர்வே உண்டாகும். இந்த மாற்றம் லண்டனோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு மாற்றமாக இல்லாது பல பாரிய ஐரோப்பிய நகரங்களையும் அது மெல்ல மெல்லப் பாதித்து. சிறிது சிறிதாய் அந்த நகரங்களை அது மாற்றி அமைத்தது. சுதந்திரமான அந்தப் பெரிய ‘கெத்தோ’க்கள் நிரந்தரமான பயத்தை உருவாக்கின.

இரண்டாம் உலகயுத்தத்தில் அதிகார பலத்தோடு ‘கெத்தோ’க்கள் உருவாக்கப்பட்டன. பட்டினியில் மனிதர்களை வாட்டியெடுத்து, வருத்தத்தில் மனிதரைத் தவிக்கவிட்டு, அவர்களைக் கொலைசெய்த ‘கெத்தோ’க்கள் அவை. தெருவோரங்களில் நிர்வாணமான வரண்ட மனிதப் பிணங்கள் கருவாடாக அடுக்கி வைக்கப்பட்ட வரலாற்றுக் காட்சிகள். அந்த யூதப் பிணங்களை வண்டில்களில் அடுக்கி அதை யூதரே இழுத்துச் செல்லும் கோரம். இழுப்பவனிடமும் இம்மிய தசையுமில்லா எலும்புக்கூடுகளின் வருத்தமான இயக்கம். இந்த நவீன ‘கேத்தோ’க்கள் இன்னொரு வகையானவை. நோக்கமோ திட்டமிடலோ இல்லாது மனிதனின் அடிப்படையான, மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்புத் தேடும் குணத்தினால், மற்றைய நிற, கலாசார, மதத்தைச் சார்ந்த மனிதன்மேல் இருக்கும் வெறுப்பால், புரிந்துணர்வு, அவர்கள் பற்றிய அறிவு என்பன இன்மையால் சூல்கொண்டது. ஒருவகையில் வரலாற்றுத் தொடராக. புதைந்த ஐயத்தின் விருட்சமாக. இந்தத் தன்னிச்சையான ‘கெத்தோ’க்கள் ஐரோப்பா எங்கும் பிரமிப்பூட்டும் வகையில் வளர்ந்தன. திணிப்பு அற்ற இக் ‘கெத்தோ’க்கள் பின்பு நிரந்தரமான நகர, சமுதாய அமைப்பாகிவிட்டன. அதன் மூலம் வெறுப்பு, பயம், அறியாமை என்கின்ற சகதிக்குள் வீழ்ந்த சுதேசிகளும் நிறமான வந்தேறுகுடிகளுமான இரு துருவங்களின் பிரிந்துபோகும் ஆறா வேட்கை. அது இப்போது பலரையும் சிந்திக்கத் தூண்டியது.

பெரும்பாலும் சுதேசிகளே இந்த நாடுகளின் அரசியல்வாதிகளாக இருந்து வந்தனர். அந்த அரசியல்வாதிகள் பெரும்பான்மையாக சுதேசிகள் குடியிருக்கும் பணக்காரப் பகுதியிலோ அல்லது நகரத்துக்கு வெளியிலோ குடியிருந்தனர். அவர்களுக்கு இந்தப் பிரச்சனை அயல்வீடல்ல. தொலைதூரத்து ஈனக்குரல்கள் அவர்கள் காதைத் தீண்டுவதில்லை. அவர்கள் இந்தப் பிரச்சனையை ஒரு பொருட்டாக முதலில் மதிக்கவில்லை. அதற்குமாறாக இந்தப் பிரச்சனையைக் கம்பளத்தின்கீழ் கூட்டித்தள்ளுவதான செயலில் மட்டும் கவனம் செலுத்தினர். இது ஒரு பெரும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கான முக்கியத்துவத்தை உரிய நேரத்தில் அவர்கள் கொடுக்கத் தவறிவிட்டனர். அந்த மாற்றத்தை நிறுத்தவோ, அல்லது திசை திருப்பவோ அந்த அரசியல்வாதிகள் தவறியது மாபெரும் வரலாற்றுப்பிழையாகப் பிற்காலத்திற் பதியப்படுகிறது. அதை அவர்கள் இப்போது உணரத் தொடங்கினாலும், அரசியல் வாதிகளின் சொற்களை அந்த விடயத்திற் தற்போது மக்கள் கேட்பதாக இல்லை. அந்த மாற்றம் ஒரு புள்ளியில் இருந்து உற்பத்தியாகிய அலையாக, தனது உற்பத்தி நிலையைத் துறந்து, நான்கு திசைகளிலும் விரிந்து, ஒட்டுமொத்த நீர்ப்பரப்பையும் தழும்ப வைத்தது போலச் சமுதாயத்தில் மீளமுடியா மாற்றத்தையும், அதிர்வையும் ஏற்படுத்துகிறது. மீண்டும் ஆரம்பப்புள்ளிக்கு அதை இழுக்கமுடியாது திணறவைக்கிறது.

பெரிய நகரங்களை விட்டு வெளியேறிய சுதேசிகள், சிறிய நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ குடியேறினர். அப்படியான குடியிருப்புகள் பெரிய நகரங்களைவிட்டுத் தள்ளியே அமைந்திருந்தன. அவர்களின் வேலைகள் பலமைல் தாண்டி நகரப்பகுதியில் இருக்கும். ஒவ்வொருநாளும் அதற்காக அவர்கள் பயணம் செய்யவேண்டியது கட்டாயமாகியது. அப்படி இருந்தும் அந்த அசௌகரியத்தை அவர்கள் ஏற்பது பலருக்கும் விசித்திரமாய்த் தோன்றும். மனித வெறுப்பும் அறியாமையும் எந்தவகையான அசௌகரியங்களையும் ஏற்கத் தயாராகிறது என்பது விசித்திரமே.

நிறமான மனிதர்களோடு இருப்பது மிருகங்களோடு இருப்பதற்கு ஒப்பானதா? மனிதனின் முதற் தோற்றம் ஆபிரிக்கக் கண்டத்தில் நடந்தது எனவும், அங்கு இருந்தே உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் பரவினார்கள் என்றும், அவர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து பிற்காலத்தில் இசைவாக்கம் அடைந்ததின் தோற்றமே இப்போது உள்ள இனங்களெனவும், அறிவியல் கூறுவது உண்மையாக இருந்தால்… மரபணுக்கள் உண்மை என்று நம்பினால்… பட்டதாரிகளும் அதற்கு மேல் படித்தவர்களும் இந்தச் சிறிய விடயத்தைக்கூடப் புரிந்துகொள்ளாது… தமது நேரத்தில் பலமணித்தியாலங்களை ஓடும் புகையிரதத்தில் கழிப்பதை என்னவென்று கூறமுடியும்? அதுவே இன்றைய ஐரோப்பாவின் யதார்த்தமாகிற்று.

நிறமான வந்தேறுகுடிகளைப் பார்த்து ஓடும் மனிதர்களுக்கு, காந்தியோ, நெல்சன் மண்டேலாவோ, அல்லது மாட்டின் லூதர் கிங்கோ நிறமான மனிதர்கள்தான் என்பதாவது புரியுமா? நிறமான மனிதனிலும் உலகம் போற்றும் உத்தம புருசர்கள் உதிக்க முடியும் என்பதையும், வெள்ளை இனத்திலும் ஹிட்லர், முசோலினி போன்ற, மனிதர்களால் வெறுக்கப்படும் பூதங்கள் தோன்றலாம் என்பதையும் அவர்களாற் சிந்தித்து உணர முடியுமா? ஒரு சில மனிதரைப் பார்த்து ஒட்டுமொத்த சமுதாயத்தையே மதிப்பீடு செய்வது எவ்வளவு மடைமையானது. நீ பொன்னாக இருக்கும் போது, உருக்குவதால் உன் தரம் கெட்டுப்போய்விடுமா? உன் தரத்தில் உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் அது யாருடைய தவறாக இருக்கும்?

நகரத்தை விட்டு வெளியே ஓடிச்சென்ற சுதேசிகளையும், நாட்டிற்குப் புதிதாக வந்த சனியன்கள் விடுவதில்லை. அதைச் சுதேசிகள் சிறிது காலத்தில் அனுபவித்தனர். பெரிய நகரங்கள்போல் நிறமான மனிதர்கள் அதிக அளவில் சிறிய நகரங்களில் குடியேறாவிட்டாலும், வியாபாரத்திற்காய், வேறுசில வேலைகள் செய்வதற்காய் நிறமான வந்தேறுகுடிகள் அந்தச் சிறிய நகரங்களிலும் வந்து குடியேறினார்கள். அப்படிக் குடியேறுவதைப் பெரும் பிரச்சனையாக்காது முதலில் சமுகங்கள் சுமுகமாக இயங்கி வந்தன. அந்த அமைதியில் கல்லெறிந்ததுபோலச் சில தீவிரவாதிகளும், நவநாஜிகளும் அங்கு வாழும் நிற மனிதர்கள்மீது தாக்குதல் நடத்தினார்கள்.

காய்ந்துபோய்க்கிடக்கும் காட்டுப்புல் போன்றது வெறுப்பு. அதில் நெருப்புப் படும்வரை அது புல்லாகவும், பட்டபின்பு கோரத்தண்டவம் ஆடும் அக்கினி நாக்காகவும் உருமாறும். எரிபற்றுநிலைக்கு எப்போதோ வந்துவிட்டாலும், அறிந்தோ அறியாமலோ அமைதி அங்கு நீடித்தது. பின்பு அந்த அமைதி திடீரெனத் தொலைந்து போயிற்று. இங்கே நடக்கப்போகும் சம்பவம் ஏற்கெனவே உருவாகிவிட்ட சுனாமி. அது தன் வழியிற் கிடைப்பதை உருட்டி பிரம்மாண்டமாகும்போது அதை யாரும் தடுக்க முடியாது என்பது பற்றி அவர்கள் சற்றும் கவலைப்படவில்லை.

*

நகுலன் கிங்ஸ்ரன் என்கின்ற லண்டனின் புறநகர்ப் பகுதியில், தனது பலசரக்கு கடையை விமர்சையாக இலாபத்தோடு பலகாலம் நடத்திவந்தான். பொறியியலாளராகப் பட்டம் பெற்றாலும், வேலை பெறுவதில் நிறமான வந்தேறுகுடிகளுக்கு ஏகப்பட்ட சிரமம் நீடித்தது. நிறமும், பெயரும் வேலை கொடுக்கும் நிறுவனங்களில் இரண்டாம் பட்சமான தெரிவுக்கு இவர்களைத் தள்ளின. அப்படி ஒரு வேலையைப் பெற்றாலும் பெறும் ஊதியம் கையும் கணக்குமாக மாசத்தின் கடைசி நாட்களுக்கு முன்பு முடிந்துவிம். கணவனுக்கு வேலை கிடைத்தாலும், மனைவிக்கும் வேலை கிடைக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது. யாழ்ப்பாணத்துக் கலாசாரப் பாதிப்பின் தொடர் இங்கும் இன்றும் தொடர்கிறது. அவர்கள் கோப்பை கழுவுவதற்கு உடன்பட மாட்டார்கள். அது இழிசனர் வேலை என்கின்ற நினைப்பு அழிய மறுத்து அடம்பிடிக்கிறது. கடையென்றால் இருவருக்கும் வேலை கிடைப்பதோடு, கைநிறைய வருமானமும் வரும் என்பது அவர்கள் கணிப்பாகியது. அத்தோடு தனக்குத்தானே முதலாளி என்கின்ற சுதந்திரத்தோடு திரிவதற்கு அது வசதியாகும் என்பதும் புரிந்தது. அதற்காகக் கண்டுபிடித்த வழிதான் தமிழரின் பலசரக்குக்கடை வியாபாராம். இந்தச் சுயதொழிலை இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் தமது வசமாக்கினர். பெரிய கல்வித் தராதரம் இல்லாது தொடங்கக்கூடிய தொழிலாகவும் இது அமைந்திற்று. லண்டன் நகருக்குள் அதிகமான இடங்களிற் தமிழரின் கடைகள் முளைத்தன. பின்பு அங்கு மூச்சுவிட முடியாது என்கின்ற போது அவர்கள் பார்வை வேறுபக்கம் திரும்பியது. அப்போது கண்ணிற்பட்டவைதான் இந்தச் சிறிய நகரங்கள் ஆகும்.

இங்கு நகுலனிற்கு வியாபாரம் நன்கு போயிற்று. அவன் வீடு ஒன்றையும் அந்த நகரத்தில் வாங்கினான். வருமானம்பற்றி யாரும் கேட்டால் வழமைபோல் பஞ்சப்பாட்டு பாடுவான். அது அவனது பரவணிக் குணம். அவனது பிள்ளைகளும் அங்கேயே பாடசாலை சென்று வந்தார்கள்.

அன்று வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டிக்கொண்டு நகுலன் வரும்போது ஒருசிலர் அவனது கடைக்குப் பக்கத்தில் இருந்த பேருந்துத் தரிப்பில் நின்று, அவனை நோட்டமிட்டார்கள். அல்லது நோட்டமிடுவதுபோல அவனுக்குத் தோன்றியது. இலண்டனில் காணக்கூடிய இந்த வகையான எண்ணமுள்ள மனிதர்களை இப்போது இங்கேயும் சிலவேளைகளிற் பார்க்க முடிகிறது. அது ஒன்றும் இரசிக்கக்கூடிய அனுபவமாய் நகுலனுக்குத் தித்திக்கவில்லை. அவன் அதிகம் வரலாற்றில் அக்கறை இல்லாதவன். அவனுக்குத் தெரிதந்தும் பிடித்ததும் கணக்கு மட்டும்தான். அதனாற் பார்க்கப்படும் இலாப எண்கள் இப்போது மிகவும் பிடித்திருந்தது. விசைகளையும், பளுக்களையும் கணிப்பதை எப்போதோ அவன் மறந்து போய்விட்டான். இன்று பேருந்துத் தரிப்பில் நின்று அவனைப் பார்த்த கண்களின் இலாப நட்டத்தை அவன் அலசலானான். அந்த அலசலூடே அவன் வாகனத்தை நோக்கி அவசரமாக நடந்தான்.

சிலவேளை கடையைப் பூட்டும்போது அவர்கள் வந்து கொள்ளையடித்து விடுவார்களோ என்பதாக நகுலன் பயந்தான். இவர்களைப் போன்றவர்கள் சிலவேளை கொள்ளை எதுவும் அடிக்காது நிறமனிதர்களை சகட்டுமேனிக்குத் தாக்கிவிட்டுச் செல்வார்கள் என்பது அவனுக்குத் தெரியும். தன்னையும் அப்படித் தாக்கலாம் என்கின்ற பயம் அவன் மனதில் எழுந்தது. அவர்களின் உருவங்களைப் பார்க்க நகுலனுக்கு கொலை நடுங்கியது. அதில் நின்ற நான்குபேரில் மூவர் தும்பிக்கை இல்லாத யானைகளாக நிமிர்ந்து நின்றார்கள். ஒருவன் மாத்திரமே நகுலனைப் போன்ற உருப்படி. தாக்க வந்தால் தப்பி ஒடுவதே நகுலனுக்கு கிடைத்த தெரிவு.

அவர்கள் எல்லோரும் பச்சை குத்தியதோடு மட்டுமல்லாது, ஒருகாதில் தோடுடையவர்களாக, தங்கள் பச்சை தெரியும் வண்ணம் உடையணிந்து கவர்ச்சியும் காட்டினர். அந்தக் கவர்ச்சி வந்தேறு குடிகளுக்கு ஒரு ஒருவிதமான பயத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தியது. அந்தப் பச்சையில் சுவாதிகா எனப்படும் பிள்ளையார் கையில் இருப்பது போன்ற குறியீடு இருந்தது. அதைத்தான் ஹிட்லரும் பாவித்ததாக அவன் தொலைக்காட்சியிற் பார்ப்பான். அந்த சுவாதிக்காவுக்கும் ஹிட்டலருக்கும் என்ன சம்பந்தம் என்பது அவனுக்குப் புரியவில்லை. ஆரியமும் அதன் சின்னமும் இமயத்தில் இருந்துதான் இங்கு இறக்குமதி செய்யப்பட்டது என்பது பற்றி அவனுக்கு அக்கறை இருந்ததில்லை. அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் அவர்களைப் பார்த்தபோது அவனுக்கு முதன் முதல் இன்று ஏற்பட்டது.

அவர்களின் கண்களை நகுலன் பார்த்தபோது, இரையைப் பார்க்கும் மிருகங்களின் கோபம் அதில் ஒளிந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவர்கள் கண்கள் நகுலனை அம்புகளாய்த் துளைப்பதாய் அவன் உணர்ந்தான். அவன் அதற்கு மேல் அவர்களைப் பார்க்க முடியாதவனாய், பார்வையை வாகனத்தரிப்பிடத்தை நோக்கிச் செலுத்தினான். பின்பு அமைதி இல்லாதவனாய், ஒட்டமும் நடையுமாக வாகனத்தரிப்பிடத்திற்குச் சென்றான். அவசர அவசரமாக வாகனத்தை இயக்கியவன் அந்த இடத்தைவிட்டு வேகமாக மறைந்தான்.

வீட்டிற்குச் சென்றவுடன் நகுலனின் மனைவி அவனுக்குத் தேனீர் வைத்துக் கொடுத்தாள். அதை வாங்கிப் பருகிவிட்டு, அன்றயய செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்த்தான். பின்பு இணையத்தில் அந்த சுவாதிகா வைப்பற்றி ஆராய்ந்தான். அது அதிஷ்டம் என்கின்ற குறியீடென அதில் விளக்கம் எழுதி இருந்தது. அவனுக்கு அது புரியவில்லை. அதிஷ்டத்திற்கும் அவர்கள் பார்வைக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாய் அவனால் ஊகிக்க முடியவில்லை. அவர்களின் நடத்தை அவர்களுக்கோ அல்லது அவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கோ எந்த அதிஷ்டத்தையும் தரப்போவதில்லை. அதை அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இரண்டாம் உலகமகா யுத்தத்தை இந்த அதிஷ்டக் குறியீடா கொண்டுவந்தது என்கின்ற கேள்வி அவனுக்கு வியப்பைத் தந்தது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்கின்ற கண்ணதாசன் வரிகள்தான் அவனுக்கு அப்போது ஞாபகம் வந்தன. பிள்ளையார் கையில் இருக்கும் போது, உலக்தை இரட்சித்துப் பரிபாலித்து அதிஷ்டத்தை வழங்கும் அந்த அற்புதக் குறியீடு, அற்ப மனிதனிடம் போகும் போது எப்படிக் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது என்பதைத் தான் தொலைக்காட்சியில் பார்த்த வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தான். அவனுக்கு மண்டை விறைத்தது. அவன் மேற்கொண்டும் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடாது சாப்பிடச் சென்றான். பிள்ளையார் எப்போதும் கல்லாய்ச் சமைந்திருப்பார். அவர் கையடையாளம் யாரையும் யதார்த்தத்தில் இம்சிக்காது. ஆனால் மனிதன் கொல்லும் இயந்திரமாக மாறுவது யதார்த்தத்தில் நடக்கும். நடந்தது என்பது பற்றி அவன் மேலும் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

சாப்பிட்ட பின்பு அவன் மனைவியோடு இருந்து தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சி பார்த்தான். அந்தப் பராக்கில் நாஜிகளின் நினைவு தற்காலிகமாக அகன்று போயிற்று. சுலோவின் ஸ்பரிசமும், அணைப்பும் அவனைக் கள்வெறி கொள்ளச் செய்தன. அவன் எல்லாக் கவலைகளையும் மறந்தான். அவர்களிடம் இருந்து கிளுகிளுப்புச் சத்தங்கள் தராளமாய் வந்தன. அவளின் அர்த்தமற்ற அல்லது ஏதோ அர்த்தமான சிரிப்புகளுடன் நகுலன் அவர்கள் படுக்கையறைக்குள் புகுந்தான்.

அடுத்த நாள், காலை நகுலன் ‘காஷ் அன்ட் கரி'(Cash and carry) எனப்படும் மொத்தவியாபாரக் கடைக்குப் பொருட்கள் எடுத்துவர வானில் போனான். அதனால் அன்று காலை சுலோவைச் சென்று கடையைத் திறக்குமாறு கூறினான். அவளுக்குத் துணையாகக் கண்ணன் வருவான் என்பது சுலோவிற்குத் தெரியும். இங்கு தனித்துக் கடையைத் திறப்பது இலண்டன் மாநகரத்திறகுள் திறப்பது போன்று பெரும் ஆபத்து இல்லை. காலத்தின் மாற்றத்தில் அந்தப் பாதுகாப்பு இப்போது அடிபட்டுப் போயிற்று. அவளை அந்த ஸ்திரமற்ற உணர்வு பற்றிக்கொண்டது. இலண்டனிற்குள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். களவு எடுப்பதற்காகவே பலர் கடைக்கு வருவார்கள். அவர்களைப் பார்ப்பதற்குக் கமராக்களைவிடப் பிரத்தியேகமாகப் பிடரியிலும் கண்கள் வேண்டும். அவர்கள் களவெடுப்பதைக் கண்டு கேட்டலும் அடித்து விட்டு ஓடிப் போய்விடுவார்கள். அது ஒரு போராட்டமான வியாபாரமாகும். கறுப்பர்களும் வெளிநாட்டவர்களுமே இப்படியான வேலையை அதிகம் செய்பவர்கள் என்பதும் வருத்தமான உண்மையாகும்.

குறிப்பாக ஆபிரிக்க நாட்டவர்கள்தான் அதில் மோசம் என்கின்ற கருத்துத் தமிழர்களிடம் நிலவி வந்தது. சுலோவுக்கு அந்தக் கூற்றின் உண்மை பொய் தெரியவில்லை. அது பிழையாக இருக்கலாமெனப் பொதுவாக எண்ணுவாள். சிலவேளை ஆபிரிக்க நாட்டில் இருந்து வந்திருக்கும் ஒருசிலர் செய்வது எல்லோரது மதிப்பையும் கெடுக்கிறதென எண்ணுவாள். அந்த ஒரு சிலரைக் கண்டு பிடிப்பது இலகுவான விடயம் இல்லை என்பதும் அவளுக்குப் புரிந்தது.

அதைக் கேட்டுக் கேட்டு சுலோவுக்கும் இப்போது ஆபிரிக்க ஆண்கள் வந்தால் குலைப்பன் பிடிக்கும். அந்த அசௌகரியம் மனதையும் உடலையும் வதைக்கும். பலவேளை அவர்கள் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். சிலவேளை களவு எடுப்பதற்காகவே சிலர் வருவார்கள். ஏதாவது பொருட்களை எடுத்து அவர்கள் மறைக்க முயன்றாலும், நீ அதை எடுத்தாய் என்று கூறுவதற்கே அவளுக்குப் பயமாகிவிடும். அப்படிப் பயமாக இருந்த போதும் நல்ல தொலைவில் நின்ற வண்ணம் ஒருவனோடு ஒருநாள் சண்டை பிடித்தாள். அப்போது இவள் அதிஷ்டம் வேறு ஆண்கள் கடைக்கு வந்தார்கள். அவர்கள் வருவதைப் பார்த்த அவன் காசை கவுண்டரில் போட்டுவிட்டு ஓடிப் போய்விட்டான். சுலோவிற்கு அதனால் ஏற்பட்ட பயம் மாத்திரம் என்றுமே போகவில்லை. உழைப்பு என்றால் இப்படித்தான் என்று நகுலன் சமாதானம் சொல்லுவான். சுலோவுக்கும் வேறு வழி இருப்பதாய்த் தெரிவதில்லை. எலியும் பூனையுமான விளையாட்டை எப்போதும் எங்கும் எல்லாவற்றிலும் தொடரவேண்டிய இம்சை. வெறுத்தாலும் விலகமுடியாத வாழ்க்கை.

சுலோ கடைக்குப் போகும்போது, சில தீயணைப்பு இயந்திரங்களும், தீயணைப்புப் படையினரும் எங்கோ வேலையை முடித்துவிட்டுத் திரும்பித் தமது நிலையத்தை நோக்கிச் சென்றார்கள். எங்கேயாவது எரிந்திருக்குமென எண்ணியவள், குளிர்காலம் என்றால் இன்னும் அதிகமாய் எரியும் எனவும் எண்ணினாள். அவள் தனது வாகனத்தை நிறுத்தும் போதுதான் தங்களது கடைக்குப் பக்கத்தில் இருந்து அதிகமான ஆட்கள் வருவதைக் கண்டாள். அத்தோடு அங்கே இன்னும் ஒரு தீயணைப்புப்படை இயந்திரம் நிற்பதையும் கண்டாள்.

அதற்கு மேற் பொறுக்க முடியாதவளாய்க் கடையை நோக்கி ஆத்துப்பறக்க ஓடினாள். கடையைப் பார்த்த சுலோவிற்குத் தாங்க முடியாத அதிர்ச்சியாயிற்று. அவள் தலையில் கைவைத்தவண்ணம் அப்படியே நிலத்தில் இருந்தாள். அவளுக்கு உலகம் இருண்டு போய்விட்டது. எவ்வளவு நேரம் அப்படித் தன்னை மறந்து இருந்திருப்பாளோ தெரியாது. ‘இப்பிடியே இருந்தது போதும் எழும்புங்க அக்கா’ என்று கண்ணன் கூறியபோதுதான் அவளுக்குச் சுயநினைவு வந்தது. அவள் கண்ணனைப் பார்த்து ‘எல்லாம் முடிஞ்சு போச்சுது… எல்லாம் முடிஞ்சு போச்சுது…’ எனத் தேம்பித் தேம்பி அழுதாள். ‘அழாமல் வாங்க அக்கா. கிட்டப் போய்ப் பார்த்து வருவம்.’ என்று கண்ணன் கூறினான். அதுதான் சரியென ஒப்புக்கொண்ட அவள், எழுந்து கண்ணனுடன் கடைக்கு கிட்டவாகச் சென்றாள்.

கடை முற்றுமாக எரிந்து போயிற்று. கடையெரிந்தால் அந்தத் தகவல் நகுலனின் கைத்தொலைபேசிக்கு வரும். அப்படி வந்தால் நகுலன் அவளுக்குப் போன் செய்திருப்பான். அப்படிப் போன் வராமல் இருந்ததை அவளால் நம்பமுடியவில்லை. கடைக்கு அருகிற் சென்று சிறிது நேரம் நின்றவளுக்கு மீண்டும் அழுகை வந்துவிட்டது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாத வேதனையில் தேம்பித் தேம்பி அழுதாள். கண்ணனும் சமாதானப்படுத்த முயற்சி செய்தான்.

அவள் அழுவதைப் பார்த்த பொலீஸார் அவளை நோக்கி வந்தனர். பின்பு அவளைப் பார்த்து ‘கடை உங்களுடையதா’ என வினவினர். தன்னைச் சமாளித்தவண்ணம் சுலோ ‘ஆம்’ என்றாள்.

தொடரும்…