5.83x8.ma-frontpng
கிரேக்க அரசாங்கம் அன்று அவசரமாகக் கூடியது. அந்த நாட்டில் மக்களின் குழப்பநிலை அரசையே கவிழ்த்துவிடும் என்பதாக நிலமை மாறிற்று. ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை நாடான, ஏழை நாடான கிரேக்கத்தின் தலையில் தாங்கமுடியாத பளுவை ஏற்றிவிட்டு, வசதியாகத் தங்கள் கண்களை மூடிக்கொண்டன. பாராமுகம் காட்டின. கிரேக்கத்தின் முகம் அந்தப்பளுவில் அழுந்திக் கோரமாகிற்று.

உலகச் சட்டதிட்டங்களைப் பார்ப்பதா, அல்லது உள்நாட்டு அரசைப் பாதுகாப்பதா என்கின்ற கேள்வியே கிரேக்க அரசாங்கத்தின் முன்பு பூதாகரமாகியது. அரசாங்கம் என்ன செய்வது என்பது தெரியாது திகைத்தது. இந்தச் சங்கடத்தை அவர்கள் இவ்வளவு விரைவாக எதிர்பார்க்கவில்லை. சும்மாய் இருப்பதால் மட்டும் அரசைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த அமைச்சர் ஒருவர் அந்த யோசனையைக் கூறினார்.

அவரின் எளிய யோசனைப்படி, வெள்ளைநிறச் செஞ்சிலுவைச்சங்க பேருந்துக்களில் அகதிகளை ஏற்றிச்சென்று துருக்கிய எல்லைக்குள் விட்டுவிட வேண்டும். அது ஒரு பரீட்சார்த்தம்.

மேலும் அவர் அதற்கு இப்படி விளக்கமளித்தார். ‘அவர்கள் எல்லைக்குள் அகதிகளை அழைத்துச் சென்று விடும்போது என்ன நடக்கிறது என்பதை முதலிற் பார்ப்போம். அவர்கள் அதை அனுமதித்தால் வலுக்கட்டயமாக எல்லா அகதிகளையும் அனுப்பும் பணியை மேற்கொள்வோம். அகதிகள் வந்ததிற்கான பதிவுகளை நிறுத்திவிட்டு, அவர்களை ஒரு முகாமில் அடைத்துவைத்து உடனடியாக அப்படியான பேருந்துக்களில் ஏற்றி அனுப்பிவிடுவோம். இது ஒரு முயற்சி மட்டுமே. நிச்சயம் பயனளிக்குமா என்பது தெரியாது. முயற்சி இன்றி நாங்கள் தொடர்ந்தும் கையைப் பிசைந்த வண்ணம் காலத்தைப் போக்கமுடியாது’ என அவர் தனது எளிய திட்டத்தைப் பற்றி மேலும் விளக்கிக் கூறினார்.

‘இதைத் துருக்கி அரசு ஏற்றுக்கொள்ளுமா? நாங்கள் ஒரு சிறு சல்லிக்கல்லை எல்லையைத் தாண்டி எறிந்தாலே அவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அப்படி இருக்க பஸ்கள் பஸ்களாக அகதிகளை அவர்கள் பக்கம் அனுப்ப விடுவார்களா, அல்லது போர்க்கொடி தூக்குவார்களா’ என அதை ஆட்சேபித்த ஒருவர் வினாவினார். அதற்கு அந்த அமைச்சர் ‘நாங்கள் இப்படித் தத்துவ விவாதங்கள் செய்து இனியும் காலத்தைப் போக்குவதற்கு இது நேரம் இல்லை. முயற்சி செய்து பார்ப்போம், சரி வந்தால் சரி. அல்லது வேறுவழியைக் கண்டு பிடிப்போம், அல்லது இதைவிட சிறந்த வழி உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்.’ என்று மடக்கினார்.

பேருந்தூல் அனுப்பும் நடைமுறை சரிவராவிட்டால் விமானத்தால் அகதிகளைச் சொந்தநாட்டிற்கு அனுப்பி வைக்கலாம் எனச் சிலர் அபிப்பிராயம் கூறினார்கள். அவர்கள் நாட்டிற்குள் வந்ததாக எந்தப் பதிவும் இல்லாவிட்டால், அது மிகவும் வசதியாக இருக்குமென மீண்டும் ஒருவர் அபிப்பிராயம் தெரிவித்தார்.

‘விமானத்தில் அனுப்புமளவுக்கு அரசாங்கம் பணத்தை அந்த விடயத்தில் தற்போது செலவுசெய்ய முடியுமா என்பது தெரிந்தாக வேண்டும். அல்லது அதைவிட மலிவான வழிகள் வேறு ஏதாவது இருந்தால் அதைக் கையாளலாம். கப்பல் மலிவாக இருக்கும். இதற்காக விசேட கப்பல்களை அனுப்பலாம். சாப்பாட்டிற்கு செயற்கையாகச் செய்யப்படும் புறோட்டின் பிஸ்கற், பருகுவதற்கு நீர், சில மருத்துவ வசதி ஆகியன இருந்தால், அந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தலாம். ஆனால் அந்த நாடுகள் அகதிகளை ஏற்க மறுத்தாற் பெரிய பிரச்சனையாகிவிடும்.’ எனச் சிலர் அபிப்பிராயப் பட்டார்கள்.

‘சொந்த நாடுகளே அந்த நாட்டு மக்களை ஏற்கமறுத்தால், நாங்கள் அகதிகளைக் கடலில் தள்ளிவிட்டுக் கப்பலைக் கொண்டுவர வேண்டியதுதான்.’ என்பதாக ஒரு அமைச்சர் சிறுபிள்ளைத்தனமாகவும் கோபமாகவும் கூறினார். பிந்திய காலங்களில் அந்த சிறுபிள்ளைத்தனங்களையும் சிலவேளைகளில் ஆழ்கடலில் வைத்து நடைமுறைப்படுத்தினார்கள் என்று கூறப்படுகிறது.

இப்படியாகக் கிரேக்க அரசாங்கத்தின் இரகசிய கூட்டத்திற் பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. பல வாதங்களின் பின்பு, முதற்கட்டமாய்த் துருக்கிக்கு வெள்ளைநிறப் பேருந்தில் அகதிகளை அனுப்பும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதெனத் அங்கு தீர்மானிக்கப்பட்டது.

*

அன்று, பதியப்படாத அகதிகள் ஐம்பதுபேரை வெள்ளைப் பேருந்து ஒன்றில் ஏற்றினார்கள். பின்பு அவர்களை ஆயுதம் தரித்த காவலாளிகளோடு எல்லை வரையும் கொண்டுவந்தனர். அங்கிருந்து ஆயுதம் தாங்காத காவலாளிகள் சகிதம் பேருந்தை எல்லையை தாண்டி அனுப்பி வைத்தார்கள். துருக்கிய எல்லைக் காவலர்கள் இதன் தாற்பரியம் தெரியாது போலிக் கடவுச்சீட்டை நம்பி பேருந்தை உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற பேருந்து இரண்டு மணித்தியாலப் பிரயாணத்தில் ஒரு நகரத்தை அண்டியது. அங்கே வலுக்கட்டாயமாக அனைத்து அகதிகளையும் இறக்கிவிட்டுத் கடவுச்சீட்டுகளையும் எடுத்துக்கொண்டு திரும்பி அது கிரேக்கம் புறப்பட்டுச்சென்றது.

சிலமணித்தியாலத்தில் இந்தச் செய்தி துருக்கி அரசிற்கு எட்டியது. அவர்கள் இராணுவப் பேருந்துக்களோடு, நூறு அதிரடிப்படையிரையும் அந்தச் சிறிய நகரத்துக்கு அனுப்பிவைத்தார்கள்.

அந்த அகதிகளுக்குத் துருக்கிய இராணுவம் உணவும், நீரும் கொடுத்து இளைப்பாற வைத்தனர். அடுத்தநாட் காலை கிரேக்க எல்லையைத் தாண்டி, கிரேக்கத்திற்குள் அவர்களை அழைத்துவந்து விட்டனர்.

கிரேக்க அதிதீவிர வலதுசாரி அரசாங்கம் மீண்டும் கூடியது. வெள்ளைப் பேருந்துத் தோல்வியை அடுத்து என்ன செய்வது என்பதை அவர்கள் ஆராந்தார்கள். ஒவ்வொரு நாடாக, அந்தந்த நாட்டைச் சார்ந்த அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டும் எனத் திட்டமிட்டார்கள். அவர்களுக்குப் போதுமான உணவையும், நீரையும், சில மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டும் எனவும் முடிவு செய்தார்கள். அப்படியான பாரிய கப்பல்களில்… உரிய அடிப்படை வசதியோடு… அகதிகளைத் திருப்பி அனுப்புவதை அனைவரும் ஆதரித்தனர். அடிப்படை வசதிகளோடு அகதிகளை அனுப்பி வைத்தால் பலரிடம் இருந்து வரும் விமர்சனத்தைக் குறைக்கலாமென நம்பினார்கள். இந்தத் திட்டம் பலருக்கும் பிடித்தது. அப்படி அனுப்பி வைப்பது நியாயமான செயலென்று கருதினார்கள்.

கதிர்வீச்சாற் பாதிக்கப்பட்டு, நோயுற்று இருப்பவர்களை கப்பலில் இப்படி அனுப்ப முடியுமா என்கிற கேள்வியைச் சிலர் எழுப்பினார்கள். அப்படி அனுப்ப முடியாது என்பது பலரது விடையாகியது. அப்படி என்றால் விமானத்தில் அனுப்பலாம் எனச் சிலர் அபிப்பிரயம் கூறினார்கள். அவ்வளவிற்குப் பொருளாதாரத்தை அவர்களுக்காகச் செலவிட முடியாது எனப் பிரதிப் பிரதமமந்திரி மீண்டும் எதிராக வாதிட்டார். பின்பு அவரே ‘அதிலும் பார்க்க அவர்களுக்குச் சுகமான மோட்ஷ்ம் கொடுக்கலாம்’ எனச் சட்டென்று கூறினார்.

அவர் கூறியதை நம்பமுடியாதவர்களாய்ப் பலர் தவித்தனர். கிரேக்க அரசாங்கத்தின் அந்தக் கூட்டம் சிலகணங்கள் உறைந்து போயிற்று. உதவிப் பிரதமரிடம் இருந்து திடீரென இந்தக் கொடூரமான வார்த்தைகளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. உதவிப்பிரதமர் மிகவும் கடுமையான அதிதீவிர வலதுசாரி என்பது பலருக்குப் புரியும். கிட்டத்தட்ட அவரை ஒரு நவநாஜி என்றே பலர் எண்ணினர். அப்படி இருந்தும் அவரிடம் இவ்வளவு விரைவாக அந்தப் பாரதூரமான வார்த்தைகள் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. ‘வேதனையோடு இயலாது சாகக் கிடப்பவர்களுக்கு, மருத்துவர்கள் செய்வது போல, சாவதற்கான மனிதாபிமான உதவி செய்வதுதான் இந்தத் திட்டமே தவிர, இது இரண்டாம் உலகப்போரில் நடந்த நச்சு வாயு அடித்துச் செய்யப்படும் கொலைகளைப் போன்றதல்ல. இதில் சுகபோகிகளாக இருப்பவர்களை நாங்கள் எதுவும் செய்யப்போவதில்லை.’ என்று வாதிட்டார். பின்பு நிலைமையை உணர்ந்து வழிந்தார். சமாளித்தார். உண்மையில் அவரது கூற்று அதிதீவிரவலதுசாரிகளையும் நடுங்க வைத்தது என்பதே உண்மை.

எனினும் அது தொடர்ந்து வாதமாகியது. அவரது கருத்திற்குச் சிறிது சிறிதாக ஆதரவு கூடியது. அவரின் திட்டத்தை ‘மோட்சவழி’ எனப் பெயர்மாற்றிச் செய்யலாம் என்றனர். பிரதமமந்திரியோ அதைக் கடுமையாக எதிர்த்தார். தான் பதவியில் இருக்கும்வரை அப்படியான எந்தத் எந்தத்திட்டத்தையும் நிறைவேற்ற அனுமதியேன் என்பதாக அடம்பிடித்தார்.

திடீரென உதவிப்பிரதமர் ‘நாட்டின் நன்மை கருதி இதைச் செய்யவேண்டி உள்ளது. அதற்கு உங்களால் ஒத்துக்கொள்ள முடியாவிட்டால் நீங்கள் உங்கள் பதவியை யாரிடமாவது கொடுத்துவிடுங்கள். கட்டுப்பாடற்றுப் போகப்போகும் நாட்டைக் காப்பாற்றுவதற்கு வேறுவழி எங்களுக்குத் தெரியவில்லை. தயவு செய்து இதை உங்களுக்கு எதிராகச் சொல்லும் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நாட்டின் நன்மை கருதி மட்டுமே நான் இப்படி யோசிக்கிறேன்.’ என்றார். பலர் அதற்குத் கைதட்டினார்கள். பிரதமருக்குக் கோபத்தில் முகம் சிவக்க அதரத்தால் வெக்கை பறந்தது. அவரது கன்னங்களும் கண்களும் குங்குமமாய்ச் சிவந்தன. அவர் சினம் கொண்டவராக ‘நான் இந்தப் பாவத்திற்குச் சற்றும் துணைநிற்க முடியாது. எனக்கு இந்தப் பாவத்தில் ஒரு துளி சம்பந்தம் இருப்பதைகூட வெறுக்கிறேன். இவ்வளவு அசிங்கமான எண்ணமுடைய மனிதர்களோடு நான் அரசு அமைத்தேன் என்பதை எண்ணவே வெட்கப்படுகிறேன். உண்மையில் நான் இந்த நாட்டை அழிவுப்பாதையில் விட்டுவிட்டுச் செல்லமுடியாது. கட்சியின் பொதுக்கூட்டம் கூட்டி அதில்தான் என்னைப் பதவியில் இருந்து நீங்கள் விடுவிக்க முடியும். பொதுச் சபையில் உங்கள் கருத்து என்னவென்று தெரியவேண்டும். ஒரு நாட்டின் பொறுப்பை மக்களாற் தெரிவுசெய்யப்பட்டவர்களிடம் மட்டும்தான் கொடுக்க முடியும்.’ என அவர் கடும் தொனியிற் கூறினார். இப்படிப் பேசியது உதவிப் பிரதமருக்குச் சற்றும் பிடிக்கவில்லை. ‘உங்களுக்கு எங்கும் இப்போது பெரும்பான்மை கிடையாது என்பது புரியிவில்லையா? இங்கு உங்களுக்குப் பெரும்பான்மை இருந்தால் கட்சிக்கு எடுத்துச் செல்லுங்கள். இல்லாவிட்டால் மரியாதையாகக் கட்சியை விட்டு இப்பொழுதே விலகிச் செல்லுங்கள். மந்திரிசபை உங்களால் நியமிக்கப்பட்டதாய் இருக்கலாம். இருந்தாலும் மந்திரி சபையிலும் கட்சியின் பிரதிநிதித்துவம் இருக்கிறது. இங்கு என்ன பிரதிபலிக்கிறதோ அதுவேதான் கட்சிப்பொதுக்கூட்டத்திலும் பிரதிபலிக்கும். அதுவேதான் மக்களின் கருத்தாகவும் இருக்கும்.’ என்றார் கோபமாக. ‘இது என்னை வலுக்கட்டாயப்படுத்திப் பதவியில் இருந்து விலக்குவது போல இருக்கிறது. அப்படிப் புரட்சி செய்தால் அதற்கு என்ன தண்டனை உண்டு என்பது புரியுமா?’ என்றார் பிரதமர் பயமுறுத்தும் தொனியில். ‘நாங்கள் இதற்குமேல் இவரோடு கதைத்துப் பிரயோசனம் இல்லை. உங்கள் பூச்சாண்டியை இத்தோடு நிறுத்துங்கள். நாங்கள் கட்சியை அவசரமாகக் கூட்டுவோம். அப்போதுதான் இவர் எந்த உலகத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வார்’ என்றார் உதவிப்பிரதமர். ‘தேவையில்லை… எதற்காகப் பிரதமருக்கு பயப்படவேண்டும்? முதலில் இங்கு வாக்கெடுப்பு வைப்போம். பின்பு வேண்டுமென்றால் கட்சியைக் கூட்டுவோம்.’ என்றார் ஒரு மந்திரி. அவருக்கு ஆதரவாகப் பலகுரல்கள் ஒலித்தன.

அதையடுத்துப் பிரதமரின் விருப்பிற்கு எதிராக வாக்கெடுப்பு நடந்தது. பிரதமர் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை இழந்துபோனார். வாக்கெடுப்பு முடிந்த பின்பு வெறுப்போடு தனது ராஜினாமாக் கடித்திற் கையெழுத்து வைத்தார்.

பலரது வேண்டுகோளுக்கும் இணங்க, உதவிப்பிரதமர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

சிறிது நேரத்திற் பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்பட்டது. குடும்ப விடயம் காரணமாகப் பிரதமர் உடனடியாகவே பதவி விலகிவிட்டார் எனவும், உதவிப்பிரதமர் பிரதமராகப் பதவி ஏற்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் நன்மை கருதி இப்படித்தான் அறிக்கை விடவேண்டும் என்று முடிவாகிற்று. பிரதமரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், நிம்மதி வேண்டிப் பேசாது மௌனமானார்.

பிரதமர் சிறிது நேரத்தில் அரசியல் அபலையாக அங்கிருந்து வெளியேறினார். அரசியல் அபலையானாலும் பெரும் பாவத்தில் இருந்து தப்பித்த நிம்மதியை அவர் சுகித்தார். அந்த நாட்டைவிட்டே விரைவில் வெளியேற வேண்டும் போல் அவருக்கு இருந்தது.

செய்தி காட்டுத் தீயெனப் பரவத் தொடங்கியது. பல பத்திரிகை நிருபர்களுக்கு அந்த முடிவின்மீது கடுமையான சந்தேகம் இயற்கையாகவே எழுந்தது. இவ்வளவு அவசரமாகப் பிரதமர் பதவி துறந்ததின் மர்மத்தை அறிய அவர்கள் துடித்தார்கள்.

சில மணித்தியாலத்திற்குள்ளாகவே புதிய பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அகதிகள் பிரச்சனையை ஒழித்து, நாட்டைப் பழைய நிலைமைக்கு ஒருவருடத்தில் தன்னால் கொண்டுவர முடியுமென அவர் வாக்குறுதி அளித்தார்.

மக்கள் அதை நம்ப மறுத்தனர். எல்லா அரசியல்வாதிகளைப் போலவே இவரும் வாக்குறுதிகளை மட்டும் நல்லாக அள்ளி வீசுகிறாரென எண்ணினர். துணைப் பிரதமரின் கடும்போக்குத் தெரிந்த பத்திரிகையாளரும், சில மக்களும் இந்த மாற்றத்திற்குப் பின்னே ஏதோ சதியிருக்க வேண்டுமென நம்பினார்கள். அப்படி ஏதாவது இருந்தால் அது மிகவிரைவில் வெளிவர வேண்டுமென அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஊகங்கள் இருந்தாலும் வாய் திறக்கும் துணிவு அற்றவர்களாய்ப் பலர் அடங்கிப் போனார்கள். அரசுகள் வன்முறையைப் பாவிப்பதற்கு எப்போதும் தயங்குவது இல்லை என்கின்ற உண்மை மக்களின் பேச்சுச்சுதந்திரத்தை மெல்லக் களவாடியது. அதற்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியமும் அதில் உள்ள நாடுகளும் சட்டங்களை மிகவும் இறுக்கின. அவர்கள் ஜனநாயத்தின் குரலைப் பிடுங்கிவிட்டு ஜனநாயகம் என்னும் பெயரில் சத்தமில்லாது சர்வாதிகாரத்தை நடத்தினார்கள்.

தொடரும்… தயவு செய்து உங்கள் கருத்தையும் இயலுமானால் பதிவு செய்யுங்கள்.