5.83x8.ma-frontpng
கிரேக்கத்திற் புதியபிரதமர் பதவியேற்றவுடன் பழைய மந்திரி சபையைத் தலைகீழாக மாற்றி அமைத்தார். மாற்றுக்கருத்தாளர்கள், ஜனநாயக விசுவாசிகள், மனிதநேய அபிமானிகள், பழைய பிரதமரின் விசுவாசிகள் ஆகியோரை மெதுவாகத் தனது அரசாங்கத்தில் இருந்து ஓரங்கட்டினார். அதற்குப் பதிலாக எதிர்க்கேள்வி கேட்காத தனது விசுவாசிகளை உள்ளே கொண்டு வந்தார். தங்களுக்குப் பிரச்சனையாக இருந்த இடதுசாரிக் கட்சியொன்றைத் திட்டமிட்டு ஒரு பொய் வழக்கில் மாட்ட வைத்தார். பின்பு தங்களுக்கு இருந்த பெரும்பான்மையில் அந்தக் கட்சியைத் தடைசெய்தார். முக்கியமானவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார். மற்ற கட்சிகளின் பலத்தையும் ஊடுருவல் மூலம் குறைத்துத் தனது பதவியின் பலத்தைக் கூட்டினார். பயமும் சர்வாதிகாரமும் அனைத்துக் குரலையும் எதிர்த்தெழாது மௌனிக்க வைத்தன. அநியாயத்திற்கு எதிரான அந்த மௌனமே சர்வாதிகாரத்தின் உரமாகியது.

மூன்று மாத்தில் ஜனநாயகத்தைத் தொலைத்து, அந்த நாடு ஒரு சர்வாதிகார ஆட்சிக்குள் முழுமையாகப் புதைந்து போயிற்று. அதன்பின்பு அந்த அதிதீவிர வலதுசாரிப் பிரதமர் பிரச்சனையின் மூலகாரணங்களை எப்படிப் பிடுங்கி எறிவது என்கின்ற செயற்திட்டத்தில் மும்மரமானார்.

ஐந்து பெரிய கப்பல்களில் அகதிகளாய்த் தடுப்பு முகாங்களில் அடைத்து வைத்திருப்பவர்களை திரப்பி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மந்திரி சபையில் கதைத்தது போலச் சில வசதிகள் செய்யப்பட்டன. முகாங்களில் இருந்தவர்கள் வலுக்கட்டாயமாக் கொண்டுவரப்பட்டுக் கப்பல்களில் ஏற்றப்பட்டார்கள். அதற்கு ஒத்துழைக்க மறுத்தவர்களைப் பொலீஸார் கடுமையாகத் தாக்கினர். எந்தவித ஊடகங்களும் அந்தச் செய்திகளைச் சேகரிக்கவோ, தணிக்கையின்றி வெளியிடவோ இடமளிக்கப்படவில்லை.

ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு, ஆபிரிக்காவிற்கு, மத்திய கிழக்கிற்கு எனத் தனித்தனியான கப்பல்கள் தயாராகின. அந்தக் கப்பல்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏற்றி அனுப்பத் திட்டமிட்டனர். உலகத்தின் கண்டனங்களைக் குறைக்க, தாங்கள் மனிதாபிமானமாக நடந்து கொண்டோம் என்பதைக் காட்டும்வகையில் சில ஒழுங்குகள் செய்யப்பட்டன. அகதிகளுக்கு உதவுவதற்கு ஒரு மருத்துவக் குழுவும் அக்கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது.

கப்பல்களுக்குள் எந்தவிதப் புரட்சி அல்லது கலகம் ஏற்பட்டுவிடாது இருப்பதற்காய்ப் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. கப்பலில் வேலை செய்பவர்களுக்குச் சகல வசதிகளும், வழமையான உணவும் வழங்கப்பட்டது. அகதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளும், செயற்கைப் புறோட்டின் பிஸ்கற்களும், குடிப்பதற்கு நீரும் கொடுக்கப்பட்டது. அந்த அகதிகள் குளிப்பதற்கு மழையை நம்ப வேண்டியதாகிற்று. அவர்களின் ஐரோப்பியக் கற்பனைகள் வதைமுகாங்களிலும், அசௌகரியக் கப்பற் பயணத்திலும் முடியுமென அவர்கள் கற்பனை செய்திருக்கவில்லை. இப்போது உயிரோடு விட்டுவைத்த வகையில் அவர்கள் நிந்மதி அடையவேண்டியதாகிற்று.

தாங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு இருந்ததைவிடப் பிச்சைக்காரர்களாக, மீண்டும் சொந்தமண்ணை வந்தடைவது அகதிகளுக்கு மிகவும் வேதனை தந்தது. உயிரின் பெறுமதி என்பது எல்லாவற்றையும்விட மேலானது என்பது இப்போது அவர்களுக்குப் புரிந்தது. காந்தீயம் மரித்த காந்திதேசம் போரைத் தொடங்காது விட்டிருந்தால் தாங்கள் சுவர்க்கத்தைவிட்டுப் போயிருக்க வேண்டி வந்திருக்காது என்று எண்ணினர். இப்போது சுவர்க்கத்தை நரகமாக்கிய பின்பு அந்த நரகத்தில் வாழவேண்டியது அவர்கள் விதியாகியது.

அதேவேளை கிரேக்கத்தின் மிகச் சிறந்த பொறியிலாளர்கள், தொழில் வல்லுனர்கள், மருத்துவர்கள் எனப் பலதரப்பட்ட நிபுணர்களையும் அழைத்துப் பிரதமர் ஒருவிடயம் பற்றி இரகசியமாக, இரவுபகல் ஓய்வின்றியும் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் இந்த விடயம் வெளியுலகிற்குத் தெரிந்துவிடலாகாது என்பதில் மிகவும் அக்கறை காட்டினார். கட்டி முடிந்த பின்பு கட்டியவர்களுக்குக் காலன் காட்டுவது பற்றியும் மனதிற்குள் திட்டமிட்டார்.

முதற்கட்டமாக அனுப்பபட்ட கப்பல் ஆசிய, மத்தியகிழக்கு நாடுகளைப் பல இன்னல்களுக்கு மத்தியிலும், சில அகதிகளின் உயிரிழப்பிற்கு மத்தியிலும் சென்றடைந்தது. அந்த நாடுகள் அகதிகளைக் கப்பலால் நாட்டிற்குள் இறங்கவிடாது தடுக்க முயற்சித்தாலும், அகதிகள் அதை உடைத்து எறிந்துவிட்டுத் தமது சொந்த நாட்டிற்குள் சென்றார்கள். வசதியான வாழ்வை எண்ணி ஐரோப்பியப் புதைகுழிகளில் இனியும் விழுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. கதிர்வீச்சு என்றாலோ, பட்டினி என்றாலோ சொந்த நாட்டில் அனுபவித்து விடுவதென அவர்கள் முடிவு செய்தார்கள். தெரியாத தேசத்து சுவர்க்கத்தைவிடத் தெரிந்த தேசத்து நரகம் அவர்களுக்கு மேலாகப்பட்டது. ஐரோப்பாவில் இருந்து வரும் அகதிகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பும் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மற்றைய சில நாடுகளுக்கும் வலுவில் வழங்கப்பட்டது. ஏற்கெனவேமருத்துவ வசதிகள், உணவு என்பன இந்த நாடுகளில் தட்டுப்பாடாய் இருந்த நிலையில், ஐரோப்பாகூட இரக்கமின்றி அகதிகளைத் திருப்பி அனுப்பியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தும் அவர்களைப் பராமரிப்பதைத் தவிர அவர்களுக்கு மாற்று வழி இருக்கவில்லை.

அதேநேரம், கிரேக்கப் பிரதமரின் முயற்சியில் அந்தப் பாரிய திட்டம் உருக்கொண்டது. அதற்காகப் போக்குவரத்து வசதியோடு அமைந்த ஒதுக்குப்புறமான இடம் ஒன்று பரம இரகசியத்தோடு தெரிவு செய்யப்பட்டது. அது காடுகளோடான மலைப்பாங்கான இடமாகவும், நகரத்தைவிட்டு அதிகம் ஒதுங்கிய ஒரு பகுதியாகவும் இருந்தது. அந்தப் பிரதேசம் தெரிவுசெய்யப்பட்டுப் பணிகள் துரிதமாக முடுக்கிவிடப்பட்டன. அந்த இடத்திற்கும் வெளியிடத்திற்குமான போக்குவரத்து, புகையிரதம் மூலம் மட்டும் இடம்பெறவேண்டும் என்பதற்காக புதிய தண்டவாளங்களை அமைத்தனர். பிரதமர் தனது கைப்பட அந்தப் புதிய கட்டடத்தை வரைந்திருந்தார். அதற்குள் இருக்க வேண்டிய வசதிகள் பற்றிய விபரங்கள் மிகவும் தெளிவாக நுணுக்கமாக விபரிக்கப்பட்டு இருந்தன. பிரதமரின் அந்தத் திட்டத்தைக்கூட வரலாற்றைப் படித்தவர்களால் வாசித்து அறிந்து கொள்ள முடியும் என்பதை அவர் அறிந்து இருந்தாலும், இதற்குச் சரியான முடிவு இதுதான் என்பதில் அவர் மிகவும் உறுதி காட்டினார். அந்தத் திட்டம் மிகவிரைவில் செயற்படவிருந்தது. அப்படிச் செயற் படுத்தும் பொழுது, அங்கு வேலை செய்பவர்களுக்கு எந்தவிதமான மனவியற் பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காய் விசேடமான ஏற்பாடு செய்யப்பட்டது. அதிதீவிர வலதுசாரிகள், நவநாஜிகள் ஆகியோரில் இருந்து ஐநூறு பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புக்கள் இடம்பெற்றன. அந்தப் பாடத்திட்டம் அவர்கள் செய்வதை நியாயப்படுத்துவதோடு, எந்தவிதக் குற்ற உணர்வையும் பெற்றுக்கொள்ளாது அவர்களை அதிலிருந்து காப்பாற்றுவதாக அமைந்தது. மனரீதியாக அந்தக் கொடூரத்தைத் தாங்குவதற்கு அவர்கள் தயார் செய்யப்பட்டார்கள். மனமே அற்ற மனிதர்களாக வாழ அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள்.

பிரதமரின் திட்டப்படி ஒரு முறையில் பத்தாயிரம்பேரைக் கொள்ளக்கூடியதாக அந்தப் பிரமாண்டமான இரகசிய அரங்கம் எல்லா வசதிகளோடும் அமையும். அது முழுக்க முழுக்க ஒரு சினிமா அரங்கம் போல இருக்கும். அந்த அரங்கத்தை வெளியே நின்று பார்க்கும் போதே, உள்ள செல்ல வேண்டும் என்கின்ற ஆவலை அது தூண்டும். அதற்காகாப் பல வரைபுகளைப் பரிசோதித்து, புத்த விகாரை போன்ற வரைபு ஒன்று அவரால் தெரிவுசெய்யப்பட்டது.

உலகத்திற் கடைசியாக வந்துள்ள தொழில்நுட்பமே அங்கு பாவிக்கப்பட் வேண்டும். உள்ளே வந்தவர்களுக்கு தேவையான வசதிகள் இருந்தாலும் வெளியே தொடர்புகொள்ளும் வசதிமட்டும் அங்கு இருக்காது. இன்பமான உணர்வோடே வருபவர்கள் உள்ளே செல்ல வேண்டும். என்ன நடக்கப் போகின்றது என்கின்ற சிந்தனையோ பயமோ அவர்களிடம் இருக்கக் கூடாது. அந்த அளவிற்கு உள்ளழகு அவர்களை மயக்க வேண்டும். வரலாற்றில்விட்ட தவறுகளை அவர் நுட்பமாகத் திருத்தினார். மனிதத்தை அதில் மட்டும் பேணினார்.

வந்து இறங்குபவர்களை அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் மிகவும் பண்பாக வரவேற்க வேண்டும். பின்பு சாதாரண லோகங்கள், வெடிமருந்து, தொலைத்தொடர்புக் கருவிகள் போன்றவற்றை அடையாளம் காணும் கருவியின் பரிசோதனையின் பின்பு அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். மண்டபத்திற்குட் பொருத்தப்பட்ட உலோகங்கள் மிகவும் வித்தியாசமானவை. முதன்முதல் உலக கட்டடக்கலையில் இங்கு மட்டும்தான் பாவிக்கப்பட்டிருந்தது. அந்த அதிவிசேஷ உலோகம் அதிகளவு வெப்பத்தை நீண்ட நேரம் தாங்கக்கூடியது. மற்றைய சாதரண உலோகங்கள் அந்த வெப்பத்தைத் தாங்காது உருகிப்போய்விடும். அதனால் மண்டபத்தின் செயற்பாட்டிற் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த விதிமுறை கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாசாவுக்கே சவால்விடுவதாக அது இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்பினார். அத்தோடு அங்கு முஸ்லீம் தீவிரவாதிகளையும் கொண்டுவரவேண்டி இருக்கலாம். அப்படிக் கொண்டுவரும்போது தற்கொலைத்தாக்குதல் செய்து, அந்தச்சாலைக்கு ஏதாவது பழுதை எற்படுத்திவிடலாம். எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த இந்த ‘ஸ்கானிங்’ மிகவும் வசதியாக அமையும். அதைவிட மனிதர்களைப் பயமுறுத்தாத வகையில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படும். இப்படி நடக்கும் செய்தி வெளியே போகாதவாறு எல்லாத் தொடர்பு சாதனங்களும் வாங்கப்பட்டு அதற்கான போலிப் பற்று அட்டை வழங்கப்படும்.

அந்தச் சோதனையை முடித்து உள்ளே வருபவர்களுக்குச் சிற்றுண்டியும், அருந்துவதற்குக் குளிர்பானமும் கொடுக்கப்படும். எல்லோரும் அந்த மண்டபத்துக்கு வந்து சேரும் வரைக்கும் வயிறு குலுங்கச் சிரிக்கும் படங்கள் கட்டப்படும். எல்லோரும் வந்த பின்பு ஒரு பரபரப்பான படம் ஆரம்பமாகும். மக்கள் அதில் தமது கவனத்தைத் செலுத்தத் தொடங்குவார்கள்.

அந்தப் படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில் அங்கு தொழில் புரிபவர்கள் மண்டபத்தைவிட்டு வெளியேறுவார்கள். பின்பு கதவுகள் தானாகச் சத்தம் இல்லாது தாளிட்டுக்கொள்ளும். அடைக்கப்பட்ட அந்த அமைப்பு உடனே தொழிற்படத் தொடங்கும். மண்டபத்திற்கும் அதன் சுற்றாடலுக்குமான காற்றோட்டம் மூடப்படும். பின்பு மெதுவாக அந்த மண்டபம் முழவதும் வாசனையற்ற மயக்க மருந்தை அவர்கள் சுவாசிக்கும் காற்றிற் பரப்பிவிடும். அதை யாரும் உணராதவாறு மிகவும் நுட்பமாக அது செயற்படுத்தும். அதன் இயக்கம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவதானமாக கவனிக்கப்படும். அந்த அளவிற்கு அவர்கள் தொழில்நுட்பத்தை அங்கு பயன்படுத்தினார்கள். மயக்க மருந்தைச் சுவாசித்த மனிதர்கள் மயங்கிச் செல்லும்போது நச்சுவாயு மெதுவாக அந்த மண்டபத்திற்கு தாராளமாய் நிரப்பப்படும். மயங்கிய மனிதர்கள் அதைச் சுவாசிக்கும் போது எந்த வேதனையும், சத்தமும், அனுங்கலும், துடிப்பும், பயமும் இல்லாது ஆயிரக்கணக்கில் அமைதியாக உயிர்களை விடுவார்கள். முதன்முதல், துன்பத்தில் இருந்து மிகவும் மனிதாபிமான முறையில் உயிர்களை விடுவிக்கும் உன்னதமான திட்டம் இதுவெனக் கிரேக்கப்பிரதமர் அதை வர்ணித்தார். துடிக்கத் துடிக்கக் கொல்வது அவர் திட்டம் இல்லை. அது அவருக்கு அறவே பிடிக்காத ஒன்று. ஏன் அப்படி அவர்கள் செய்தார்கள் என்பது இன்றும் அவருக்குப் புரியவில்லை. இது அனைவருக்கும் உதவிசெய்யும் நோக்கோடு திட்டமிடப்பட்ட ஒரு அற்புதமான மையமென அவர் கருதினார்.

நச்சுவாயு நிரப்பப்பட்டு மனிதர்களின் உயிர்கள் ஆயிரக்கணக்கில் பறிக்கப்பட்ட பின்பு, புதுவகையான சுவர்கள் அந்த மண்டபத்தின் அனைத்து பகுதிகளையும் அடைத்துக் கொள்ளும். அந்தச் சுவர்கள் வித்தியாசமான உலோகத்தகடுகளாலும் வெப்பத்தைக் கடத்தாத பின் படையாலும் நுட்பமாகச் செய்யப்பட்டது. அந்த உலோகம் எங்கிருந்து வரவைக்கப்பட்டது என்பது பிரதமருக்கும் அவரோடு நெருங்கியவர்களுக்கும் மட்டுமே தெரியும். தொடர்ந்து கதிரைகள் மடிந்து நிலத்திற்கு கீழே செல்ல, பிரேதங்கள் மாத்திரம் மேலே பத்திரப்படுத்தப்படும். அதையடுத்து பிரேதங்கள் உயர்த்தப்பட்டு மீண்டும் ஒரு விசேட உலோகத்தட்டுகள் நிலத்தையும் முகட்டையும் சுற்றவுள்ள பகுதிகளையும் நுட்பமாக மூடிக்கொள்ளும். பின்பு உயர்த்திகள் பதிந்து நிலத்தின்கீட் சென்று மறையும். பிரேதங்கள் இப்போது விசேட உலோகத்தளத்தின்மீது கிடக்கும். புதுவித தொழில் நுட்பத்தின் உதவியோடு பெரிய போறணை போன்று அது உருவெடுக்கும். பின்பு அதீத வெப்பத்தோடு அது சுயமாக எரியும். அந்த அதீத வெப்பத்தில் சகல மனித உடம்புகளும் சில நிமிடங்களில் நீறாகும். தகனம் முடிந்து அந்த மண்டபத்தைக் குளிரவைக்கும் பணி முதலில் தொடங்கும். பின்பு சுயமாகவே துப்பரவுப்பணி தொடங்கும். முதலில் அங்கு உள்ள இயந்திரங்கள் உட்பகுதியைத் துப்பரவு செய்து சாம்பலையும் தூசியையும் முற்றாக வெளியேற்றும். பின்பு முதல் வெப்பம் கடத்தாத உலோகச்சுவர் உள்ளிழுத்துக் கொள்ள போறனைக்கான இரண்டாவது சுவர் உள்ழிளுத்துக் கொள்ளும். அதன் பின்பு கிழே சென்ற தளம், பக்கச்சுவர்கள், கதிரைகள், கதவுகள், திரைகள் எல்லாம் மீண்டும் மேலே வந்து அந்தந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும். பின்பு வாசனைத் திரவியங்கள் தெளிக்கப்படும். அப்போது அது மீண்டும் புதிதாகக் கட்டப்பட்ட திரையரங்காய்த் தொடர்ந்தும் தனது பணியைச் செய்யத் தயாராகிவிடும். அந்த அலுவல்களை எந்தச் சிக்கலும் இன்றிச் செய்வதற்கு அதீத தொழில்நுட்பவசதியும், அழகும் கொண்டதொரு நவின கொலைத் தொழிற்சாலையாக அது அமைக்கப்பட வேண்டும் என்பது பிரதமரின் குறிக்கோள். அதற்கான கட்டுமானங்கள் பிரதமரின் விருப்பப்படி வெகு அவசரமாக நடைபெற்றன. இத்தால் வரலாறு விட்ட தவற்றைத் தானும் விட்டுவிடக்கூடாது என்பதிற் பிரதமர் மிகவும் அவதானமாக இருந்தார்.

முதலாவது கப்பற் பயணம் வெற்றி அளித்ததைத் தொடர்ந்து கிரேக்கம் மீண்டும் மீண்டும் நிறமான வந்தேறுகுடிகளை அவர்களின் தாய்நாட்டிற்கு விரைவாக அனுப்பத் தொடங்கியது. தனது முயற்சி பலனளித்ததில் அது மிகவும் பெருமைப்பட்டது. பின்பு அகதிகள் அந்தஸ்து கிடையாது இருந்தவர்களையும் இரவோடு இரவாகக் கைதுசெய்து, அனுப்பத் தொடங்கியது. அதற்கு அந்நாட்டு மக்களின் அமோக வரவேற்புக் கிடைத்தது. அதைக் கண்ட அரசு, அகதிகள் அந்தஸ்துப் பெற்றவர்களையும், அவர்களது விசாவை இரத்துச் செய்து அனுப்பியது. அப்படி அனுப்பும் போது அவர்கள் எந்தச் சட்ட நடவடிக்கையும் செய்யவிடாது தடுத்தது. பின்பு மிகவும் குறுகிய காலத்தில், குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை அது நடைமுறைக்குக் கொண்டுவந்தது. பெரும்பான்மை மக்கள் அதற்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். அதன் பின்பு அவர்களையும், அவர்களின் சொந்த நாட்டிற்குக் கிரேக்க அரசு திருப்பி அனுப்பி வைத்தது.

கப்பலில் அனுப்பிவைக்க முடியாத பலரையும் புகையிரதத்தின் மூலம் அனுப்பி வைக்க முயற்சித்தது. அதுவும் இயலாது என்கின்றபோது தடுப்பு முகாங்களில் அவர்களை அடைத்தது. பின்பு அவர்களை ‘மோட்சவழி மையம்’ எனப்படும் அந்த பிரதமரின் மனிதாபிமான மரண மையத்திற்கு அனுப்பிற்று.

கிரேக்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி மற்றைய நாடுகளையும் ஊக்கப்படுத்தியது. அவர்களும் கப்பல்கள் மூலமாகப் பலநாடுகளுக்கும் வேண்டப்படாத நிறமான வந்தேறுகுடிகளை அனுப்பத் தொடங்கினார்கள். ஏற்கெனவே ஏழ்மையில் வாடும் நாடுகள் இப்படியாக முளைத்த புதிய பிரச்சனையாற் திண்டாடின. அதைப் பற்றிய கவலை இல்லாது, அதிதீவிர வலதுசாரிகள் ஐரோப்பாவில் இருந்து அகதிகளை வேகமாகத் திருப்பி அனுப்பினார்கள்.

கிரேக்கத்தைப் போலவே பல நாடுகளும் தயவு தாட்சண்யம் இல்லாது அகதிகளின் குடியுரிமைகளைப் பறித்து, மறந்து போய் இருந்த நாடுகளைத் தாய்நாடாக்கி, அனாதைகளாக அவர்களைத் திருப்பி அனுப்பினர். பல அகதிகளின் குழந்தைகள் ஐரோப்பிய நாடொன்றே தமது தாய்நாடு என்பதாக வாழ்ந்திருக்க, திடீரென ஒரு ஆசியநாட்டை, அல்லது ஒரு ஆபிரிக்க நாட்டை உங்கள் தாய்நாடு என்று காட்டி, அங்கு அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தது. அதை அவர்கள் ஏற்கமுடியாது தவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் இதை மனிதவுரிமைமீறல் என்றும் பாராது, தங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டன. அதேவேளை சில ஆபிரிக்க ஆசிய நாடுகள் கிரேக்கத்தில் பலயுகங்களாக வாழ்ந்தவர்களை எற்கமறுத்து, விமானங்களில் அவர்களை அந்த ஐரோப்பிய நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைத்தார்கள். ஐரோப்பிய நாடுகள் தாங்கள் செய்யும் அநியாயத்தைப் புரிந்து கொள்ளாது திரும்பி வந்தவர்களை தடுப்பு முகாங்களில் அடைத்தனர். எவரும் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு மோட்சவழியே இறுதி முடிவாகிற்று.

தொடரும்…