5.83x8.ma-frontpng

கிரேக்க அரசாங்கம் அன்று இரகசிய கூட்டம் ஒன்றைக் கூட்டியது. அழகாகக் கட்டப்பட்டு… ஐந்து வலது குறைந்தவர்களுக்கு மோட்சமளித்து… பரிசோதனையிலும் வெற்றி கண்ட அந்த ‘மோட்சவழி’ மையத்தை… இனி முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்கின்ற தனது திட்டத்தை அறிவிப்பதற்கே பிரதமமந்திரி அந்தக்கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார். இப்படியான கூட்டங்களில் அறிவித்த பின்புதான் தனது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற அவசியம் கிரேக்கப் பிரதமருக்கு இருக்கவில்லை. அவருக்கு அதற்கும் மேலான அதிகாரத்தை ஏற்னவே வழங்கிவிட்டனர். எனினும் ஒரு மரியாதைக்காக அவர் அதைத் தொடர்ந்தும் செய்துவந்தார்.

ஐரோப்பாவிற் தற்போது ஆட்சியில் இருப்பவர்களின் அதிகாரம் அந்தந்த நாட்டில் எதையும் எப்போதும் செய்யும் அளவிற்கு விஸ்தீரணமாயிற்று. இலங்கையின் ஐனாதிபதியாக இருந்த ஜேயார் ஜெயவர்த்தனா கூறியதைப் பொய்யாக்குவது போல ஆணைப் பெண்ணாக்கி, பெண்ணை ஆணாக்குவதையும் அவர்களால் செய்விக்க முடிந்தது. அவர்களின் கைகளில் யார் வாழ்வது யார் மாள்வது என்கின்ற விதி ஒட்டு மொத்தமாய் ஒப்படைக்கப்பட்டது. மனிதர்களின் விதியையே நிர்ணயிக்கும் அந்த அதிகாரம் படைத்த மனிதர்கள், பேதங்களைக் காட்டித் தங்களுக்குச் சாதகங்களை ஏற்படுத்துவதிற் சற்றும் கூச்சமின்றிச் செயற்பட்டார்கள்.

அன்றயய கூட்டத்திற்கு வந்த பிரதமர் பரபரப்போடு அங்குமிங்கும் உலாத்தினார். சிறிது நேரத்தில் அவரது மனப்போராட்டம் முடிந்தது. தனது செயலிற் தப்பில்லை என்று தெளிவானார்.

பின்பு சில நாட்களில் முதற் கட்டமாக மூவாயிரம் பேருக்குப் படம் காட்டப்படும் என்பதைப் பற்றி அங்கு அறிவித்தார். அவர் எந்தவிதமான குற்ற உணர்விலும் தற்போது வாடவில்லை. அவர் வதனத்திற் கவலையொழிந்து துணிவு ஒளிவீசியது. அங்கு இருந்த எல்லோருக்கும் பிரதமரின் படம்காட்டல் என்கின்ற சொல்லிற்கு என்ன அர்த்தம் என்பது புரிந்தது. அது ஒருவித திடீர் அமைதியை அங்கு பிரசவித்தது. அந்தச் சொற்களின் அர்த்தம் என்ன என்பது புரிந்திருந்தும் யாரும் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கத் துணியவில்லை. அவர்கள் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார்கள். ஒரு சிலரிற்கு மட்டும் அது ஒருவித அசௌகரியத்தைத் தந்தது.

வராலாற்றுக் குற்றவாளிகள் பலரும் தப்பி விடுவதான வரலாறு இல்லை என்பது அவர்களுக்குப் புரிந்தது. என்றாலும் ஐரோப்பாவும் உலகமும் தற்போது மாறியுள்ள மாற்றத்திற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் சென்றாலும் தங்களைக் குற்றவாளிகளெனக் கோட்டில் ஏற்றும் நிலைமை வராது என்கின்ற துணிவு அவர்களுக்கு இருந்தது. இந்த நிறமான வந்தேறுகுடிகள்; ஐரோப்பிய மண்ணில் இல்லாது ஒழிந்தாலும், தொடர்ந்தும் ஜிப்சிகள், யூதர்கள் எனப் பலரையும் அழிக்காது இத்திட்டம் ஓயாதென எண்ணினர். அதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லும். ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பூதத்தை எதிர்ப்பதற்கு யாருக்கும் தற்போது துணிவு இல்லை. இதற்காக தாங்கள் தேவையில்லாது கவலைப்பட வேண்டியது இல்லை என்பதாக அலட்சியம் செய்தார்கள்.

திடீரென நிலைமை மாறினாலும், அடையாளத்தை மாற்றி வேறு இடங்களில் வாழ்வதற்குக் கிரேக்க அரசு அப்போதே ஏற்பாடு செய்துவிட்டது. அது அரசோடு மிகவும் நெருக்கமான ஒவ்வொருவருக்கும் மற்றவர்களுக்குத் தெரியாத இன்னும் ஓர் அடையாளத்தை இரகசியமாகக் கொடுத்தது. ஆபத்தான நேரத்தில் அந்த அடையாளத்தோடு குறிப்பிட்ட இடத்திற்கு மாறிவிடவேண்டும் என்பது அதன் திட்டமாகும். அது அவர்களுக்கு மேலும் துணிவைத் தந்தது. தங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என்கின்ற துணிவு திமிர்த்தது.

பிரதமர் தமக்குத் தற்போது படம் காட்டுவதைத் தவிர வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை என்பதையும், இதன் மூலம் நிறமான வந்தேறுகுடிகளின் தொகை குறைந்தாலே தமது பொருளாதாரமும், கலாசாரமும் பாதுகாக்கப்படுவதோடு கிரேக்கர்கள் என்கின்ற அடையாளத்தைத் தாங்கள் தக்கவைக்க முடியும் எனவும் விபரித்தார். இந்தத் திட்டத்தைக் கிரேக்கத்தில் மட்டுமில்லாது ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாகச் செயற்படுத்துவதன் மூலம்தான் ஐரோப்பிய ஒன்றியம் முழுமையும் தூய்மை அடையும் எனவும் விளக்கினார். தான் செய்யப் போகும் கொடுமைபற்றிய மனச்சாட்சியின் குத்தல் இருப்பதாக அவரது உணர்ச்சியோ சொற்களோ பிரதிபலிக்க மறுத்தன. மனிதத்திற்குச் செய்யப் போகும் படுபாதகத்தைக்கூடச் சாதாரணவிடயம் போல் அவர் கூறினார். சிலருக்கு அது வியப்பைத் தந்தது. எனினும் இருப்பை எண்ணி வாய் திறக்க மறுத்தனர், மறந்தனர்.

வேறுசிலர் அதற்கும் ஒத்துப் பாடினார்கள். பலர் தொடர்ந்தம் பயபக்தியாக மௌன விரதம் பிடித்தார்கள். அரசியல்வாதிகள் என்பது அவர்களுக்குப் பொருத்தமாயிற்று. ஆட்சேபம் இல்லாத மௌனத்தில் சர்வாதிகாரம் தொடர்ந்தது. இன்னும் சில நாட்களில் மூவாயிரம் உயிர்கள் செயற்கை முறையில் பறிக்கப்படப்போவது, தமது மத நம்பிக்கைக்கு முரணாய் இருப்பது அவர்களிற் சிலரைக் கலங்கவைத்தது. எனினும் வேறு வழிகள் இருப்பதாய் அவர்களுக்குத் தெரியவில்லை. சுயநலம் பிடித்த மனிதர்களிடம் பிதாசுதன் தோற்றார். சாத்தான் விருந்துண்ணத் தயாரானான்.

*

அன்று விசேட புகையிரதம் மூன்றில் அந்தப் பயணிகள் அரங்கிற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்குத் தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பது தெரியாது. அந்தப் புகையிரதப்பெட்டிகள் வழமையான பயணிகளுக்கான புகையிரதப் பெட்டிகளாகவே இருந்தன. இருப்பதற்கு மாத்திரமே ஆசனம் இருந்த அந்தப் பெட்டிகளில் பெரிய அசௌகரியங்கள் இன்றிப் பயணிக்க முடிந்தது. வரும் வழியில் கிரேக்கர்கள் மிகவும் மனிதாபிமானத்தோடு அவர்களை நடத்தினார்கள். அவர்கள் பயணம் ஒரு மூன்று மணித்தியாலத்தில் முடிவு பெற்றுவிட்டது. அவர்கள் உடமைகள் எதையும் எடுத்துவரவில்லை. அது தேவையில்லையென அவர்களுக்குக் கூறப்பட்டது. முகாமில் இருந்த அனைவரும் அழைத்து வரப்பட்டனர். சில நோயாளிகள் மாத்திரம் தங்களால் பிரயாணம் செய்ய முடியாது என்று தப்பித்துக் கொண்டார்கள். பெட்டியில் ஏறியபின்புதான் படம்பார்க்கப் போவதாகக் கூறினார்கள்.

படம் முடிந்ததும் அவர்களை மீண்டும் முகாமிற்குக் கொண்டுவந்து விடுவதாகச் சொல்லி இருந்தார்கள். என்றாலும் அதிதீமான பாதுகாப்பு மட்டும் அவர்கள் கூறுவதில் சிறிது ஐயுறவை சிலருக்கு ஏற்படுத்தியது. பின்பு பயணத்தின் போது இருந்த சுமுக நிலை அந்த ஐயத்தை மெல்ல அவர்களிடம் இருந்து போக்கியது.

தங்கள் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது தெரியாது பயணிகள் கூட்டம் அலைமோதியது. படம் பார்க்கப் போகும் தியேட்டரைப் பார்த்த போது அவர்கள் அதிசயித்தனர். இவ்வளவு நவீனமாக, பெரிய அளவில் ஒருபோதும் அவர்கள் தியேட்டர் ஒன்றைப் பார்த்ததே இல்லை. அதன் பிரமாண்டமும் நவீனத்துவமும் அனைத்துச் சந்தேகங்களையும் ஓட ஓட விரட்டின. அதைவிட அவர்களின் உபசரிப்பு முகாமில் கிடைத்த உபசரிப்பிற்கு நேர்மாறாக இருந்ததில் மெய்மறந்து போனார்கள். இந்தப் பெரிய நவீன தியேட்டரை எதற்காக ஒரு மலைப்பாங்கான காட்டுப்பகுதியில் கட்டினார்கள் என்பதை மட்டும் சிலராற் புரிந்துகொள்ள முடியவில்லை.

புகையிரத்தால் இறங்கிப் பலரும் விழுந்து அடித்து தியேட்டரை நோக்கி ஓடினார்கள். அழகாய் இருந்தாற் பிசாசைக்கூடத் திருமணம் செய்து கொள்ளும் மனிதர்களாய் அவர்கள் இருந்ததில் வியப்பில்லை. அவர்களின் அவசரத்திலும், ஆர்வத்திலும் உள்ளே மட்டும் நடக்கவேண்டிய காரியம் வெளியேயும் நடந்துவிடாது பாதுகாவலர்கள் அவசரமாக அவர்களை ஒழுங்குபடுத்தி அமைதியாகப் போகுமாறு பணித்தனர்.

அந்தப் புகையிரத்தில் அப்துல்காதரும், அவனது மனைவியும், மகனும் வந்தார்கள். அத்தோடு இலங்கை இராணுவத்தில் இருந்த இருவரும், அவர்களது மனைவிமாரும், பிள்ளைகளும் வந்தார்கள். அவர்கள் வன்னி யுத்தத்தில் முன்னணியில் நின்ற இராணுவத்தினர். அப்போதும் மனிதம் காப்பதாகக் கொலைகள் செய்யப்பட்டன. போராளிகளை நிராயுதபாணிகளாக்கி, நிர்வாணமாக்கி, கற்பழித்து மனிதம் வெட்கும்படி கொலை செய்தனர். அப்பொழுது இலங்கை இராணுவத்திற்கு அது சரியான செயலாகத் தோன்றியது. இன்று கிரேக்க அரசியல்வாதிகளுக்கு இது சரியாகத் தோன்றுகிறது.

அப்துல் காதருக்கு அந்தத் தியேட்டரையும், அதற்குட் தாங்கள் கொண்டு செல்லப்படுவதின் நோக்கத்தையும் நிதானிக்க முடியவில்லை. எதுவும் செய்ய முடியாதவனாய், தனது மனைவியுடனும் பிள்ளையுடனும் இறங்கிவந்தான். அவனுக்குத் திடீரென இலங்கையின் சர்வதேச விமானநிலையம் நினைவுக்கு வந்தது. அதுவும் அப்போது திருத்தப்பட்டு மினுங்கியது. விமானத்திற்கு ஏறும் இறங்கும் அதன் உட்பகுதி மீண்டும் ஞாபகம் வந்தது. அது ஐரோப்பிய விமான நிலையங்களுக்கு எந்த வகையிலும் குறையாத வண்ணம் அப்போது பளிங்காக விம்பம் காட்டியது. அதைக் கடந்து வந்தபோது தனது சாவு என்பது தொலைவில் உள்ளதென எண்ணினான். அப்படி வந்தாலும் அது மனிதனால் வராது என்று நம்பினான். விமான நிலையத்தைவிட ஆயிரம் மடங்கு இந்தத் தியேட்டர் மின்னுவதாய் அவனுக்கு தோன்றியது. அது உண்மைதானா என்கின்ற கேள்வி மீண்டும் அவனிடம் எழுந்தது.

அன்று காத்தான்குடியில் இருந்து கொழும்பிற்கு வந்து விமானத்தில் ஏறும்வரைக்கும் அவன் அனுபவித்த கணங்கள் மிகவும் அவஸ்தையானவை. அந்த அவஸ்தையான கணங்களின் வேதனையை இப்போதும் காரணம் இல்லாது உணர்ந்தான். அன்று அந்தத் தாக்குதல் உலகத்தை இவ்வளவிற்கு மாற்றுமென அப்துல்காதர் கனவிலும் நினைக்கவில்லை. இன்று அது எவ்வளவு பெரிய அழிவை உலகத்திற்கு தந்திருக்கிறது என்பதை எண்ண அவனுக்கு வேதனையாகியது. தான் ஒரு பெரிய பாவத்திற்குத் துணைபோனது அவனுக்கு இப்போது புரிந்தது. தனது பாவத்திற்கு அல்லா மன்னிப்பு அழிப்பானா என்பது அவனுக்குப் புரியவில்லை. அவன் தியேட்டருக்குள் போகும் சனங்களைப் பார்த்தவண்ணம் சிறிதுநேரம் அப்படியே நின்றான். அதைப் பொறுக்க முடியாத அவன் மகன் உள்ளே போக வருமாறு இழுத்த போதுதான் அவன் உலகஞானம் பெற்றவனாக அசைந்தான்.

பின்னால் வந்த சிங்களப் பிள்ளைகளும், காதரின் பிள்ளைகளின் பின்னாற் தியேட்டரை நோக்கி ஆர்வத்தோடு ஓடினர்.

‘அப்பா நாங்களும் போவம்’ என்கின்ற இன்னும் ஒரு தமிழ்க்குரல் அதற்கும் பின்னால் கேட்டபோது ‘அல்லாவே எனக்கு மன்னிப்பு உண்டா?’ என அப்துல் காதார் எதையோ நினைத்துப் பொறுக்க முடியாது தனக்குள் முணுமுணுத்தான்.

கிரேக்க அரசாங்கம் நாட்டில் இல்லாத அகதிகளின் உடமைகள் அனைத்தையும் உடனுக்குடன் வகைப்படுத்தி அழித்துவிட வேண்டும் என்பதாகக் கடுமையான உத்தரவு பிறப்பித்து. எந்தவித தடயங்களையும் நாட்டின் எந்தப் பகுதியிலும் விட்டுவைக்கக் கூடாதுளூ அப்படி விட்டால் அது வரலாற்றுத் தவறாகிவிடும் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தது. அதன்படி அனைத்து உடமைகளும் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அவை வகை பிரிக்கப்பட்டு, பின்பு மீள்தயாரிப்பு செய்யக் கூடியவற்றை மீள்தயாரிப்புச் செய்தனர். மிஞ்சியவற்றை முற்றுமாக அழிப்பதில் மிகவும் கவனமாகச் செயற்பட்டார்கள்.

தொடரும்…