5.83x8.ma-frontpng

கிரேக்கம் கப்பல் கப்பலாக அகதிகளைத் திருப்பி அனுப்பத் தொடங்கியதில் இருந்து கிரேக்கத்திற்கும் ஐரோப்பாவிற்குமான அகதிகளின் வருகை ஓய்ந்தது. வறிய நாடுகளில் இருந்து கிரேக்கத்திற்கு அகதிகளாய்ச் சென்ற பலரின் தொடர்பு அறுந்து போயிற்று. தாய்நாட்டில் வாழ்ந்த உறவினர்கள் தங்கள் உறவுகளை எண்ணித் தவித்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது புரியாது திகைத்தனர். அவர்கள் ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பதும், அவர்களிடம் இருந்து ஏன் ஒரு பதிலும் வரவில்லை என்பதும் பயம்தரும் மர்மமாகியது. மேலும் காலம் செல்லச்செல்ல அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, அப்படி இருந்தால் எதற்காகத் தொடர்பு கொள்ளவில்லை? என்கின்ற அச்சம் அவர்களை கதிகலங்க வைத்தது. இலங்கையில் இருந்தவர்களுக்குக் கடந்த காலங்களில் நாட்டிற் காணமற் போனவர்களிடமிருந்து எந்தத் தொடர்பும் வராது இருப்பது போல இதுவும் இருப்பதாகத் தோன்றியது. இலங்கையிற் காணமற் போகின்றவர்களின் முடிவு எப்போதும் அவலத்தில், தாங்க முடியாத வேதனையுடன், கடமை செய்வதற்குகூட ஒரு எலும்புத்துண்டும் கிடைக்காத முடிவாக இருக்கும். அடையாள அட்டையைத் தூக்கிக்கொண்டு எங்கு ஏறி இறங்கினாலும் அந்த முடிவில் மாற்றம் இருக்காது. அப்படியான முடிவா இவர்களுக்கும் ஏற்படும் என்கின்ற கேள்வி, அந்த உறவினர்களின் இரத்தத்தை உறைய வைத்தது.

பல உறவினர்கள் இலங்கை அரசுமூலம் கிரேக்க அரசோடு தொடர்புகொண்டு தங்களது உறவினர்களைப்பற்றி விசாரணை செய்ய முயற்சித்தனர். அப்போது அப்படியான பெயரில் யாரும் அங்கு இல்லையென இலங்கை மக்களுக்கு வரலாற்றிற் பழக்கப்பட்ட விடை ஒன்று பதிலாக கிடைத்தது. அதை அறிந்து அவர்கள் அதிர்ந்தனர். இந்தச் செய்திகள் காட்டுத்தீ போல ஆசிய ஆபிரிக்க நாடுகளிற் பரவியது. இப்போது ஐரோப்பாவிற்குப் போவதென்பது இடியமினின் நாட்டிற்குப் போவதாயிற்று.

அப்போழுதுதான் ஊடகங்களில் ஒரு வீடியோ வெளிவந்தது. அது பழைய கைத்தொலைபேசியைப் பயன்படுத்திக் கிரேக்கத்தில் எடுக்கப்பட்டது. அதில் பெரும் தியேட்டர் ஒன்றைக்காட்டி, அந்தத் தியேட்டர் இரண்டாம் உலகமகா யுத்தத்தில் இருந்த நச்சுவாயுக் கூடங்கள் போன்றது என்கின்ற செய்தியும் கூறப்பட்டது. அங்கே கிரேக்கத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான நிறமான வந்தேறுகுடிகள் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்றும் விபரித்தார்கள். அதைப் பலராலும் முதலில் நம்ப முடியவில்லை. கிரேக்கம் சென்று அண்மையில் நாடு திரும்பியவர்கள் அதை முதலில் நம்பினார்கள். பின்பு கிரேக்கத்துக்குச் சென்ற பலரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என்பது பலரையும் சந்தேகம் கொள்ள வைத்தது. இது அந்த கதைக்கு உயிர் உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும் என்கின்ற துடிப்பைப் பலரிடம் ஏற்படுத்தியது.

அமேரிக்கா தனது நாட்டில் அதிதீவிர வலதுசாரிகளாற் கடும்பிரச்சனையை எதிர்கொண்டாலும், இன்னும் அவர்களிடம் தமது ஆட்சியை இழந்து விடாது தக்கவைத்துக் கொண்டது. அது உடனடியாகக் கிரேக்கத்தின் மீது விசாரணை வேண்டுமென்றும், தம்மை அந்தக் கட்டடத்தை பார்க்கவிடுமாறும் கோரியது.

அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தாங்கள் அந்த விடயத்தைச் சுயமாக விசாரிப்போம் எனவும், ஐரோப்பிய ஒன்றியப் பிரச்சனையில் யாரும் தலையிடக்கூடாது எனவும் கடுமையாக் கண்டித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா வழமைபோல மௌனம் சாதித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலும் அந்த விடயம் இணையத்தின் மூலம் பரவத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அவை ‘எஸ்.டி’ அட்டைகளில் அடித்துப் பலருக்கும் வினியோகிக்கப்பட்டன. இதைப் பார்வையிட்ட நிறமான வந்தேறுகுடிகளும், சில சுதேசிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதை அடக்குவதற்குப் பொலீஸாரைக் கடுமையாக ஏவின. அதன்படியே பொலீஸார் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள்.

கிரேக்கத்தில் பொலீஸார் கடுமையாக நடந்துகொண்டது மட்டுமல்லாது, நிறமான வந்தேறுகுடிகளைக் கைதுசெய்து அவர்களை முகாங்களில் அடைத்தனர். அப்படிச் சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைப்பதற்கு ஏற்கெனவே பொலீஸிற்கு அந்த அரசு அனுமதி கொடுத்துவிட்டது. அப்படி அடைத்து வைத்திருந்தவர்களின் பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களைக் கிரேக்கப் பதிவுகளில் இருந்து நுணுக்கமாக அகற்றும் வேலை முதலில் நடந்தது. அப்படிப் பதிவுகளில் இருந்து அகற்றப்பட்டவர்கள் அதன் பின்பு இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிட்டத்தட்ட இல்லாது போயிற்று. அவர்களின் எல்லாச் சுவடுகளையும் அழிக்க முடியாவிட்டாலும், இயலுமானவரை அவர்களின் சுவடுகளை அழிப்பதில் அந்த அரசு வெற்றியும் கண்டது.

அதன்பின்பு அப்படியானவர்களை வைத்து உணவளிப்பதற்குக் கிரேக்க அரசாங்கம் விரும்பவில்லை. அவர்களுக்கும் படம்காட்டும் திட்டத்தைச் செயற்படுத்தியது. அப்படி அவர்களை அழைத்துச் சென்று படம்காட்டுவதற்குப் பொலீஸாரோடு தெரிந்து எடுக்கப்பட்ட இராணுவத்தையும் அது பயன்படுத்தியது. இப்படியான கைதிகளுக்குப் பிளாஸ்ரிக் விலங்கிட்டே படம்காட்ட வேண்டிதாயிற்று.

கைது செய்யப்படும் நிறமான வந்தேறுகுடிகளும், ஆட்சிக்கு ஆபத்தானவர்களும் நிரந்தரமாகக் காணாமற் போவதையிட்டுக் கிரேக்க மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர். அதன் பின், அரசிற்கு எதிராக வாய் திறப்பதற்கு அவர்கள் அஞ்சினர். மௌனத்தைத் தமது மொழியாய் வரித்தனர். அது கிரேக்க அரசிற்கு மேலும் துணிவைக் கொடுக்க, அவர்கள் மேலும் மேலும் நிறமான வந்தேறுகுடிகளை தேடித் தேடிக் கைது செய்து, படம்காட்டத் தொடங்கினார்கள்.

திடீரெனக் கிரேக்கத்தில் வேலையில்லாப் பிரச்சனை குறைவதாய்க் கிரேக்க அரசு புள்ளிவிபரம் காட்டியது. அது தமது அரசின் கெட்டித்தனத்தால் வந்த பயன் எனப் பிரச்சாரம் செய்தது. வேலை செய்யக்கூடிய பல இலட்சம் நிறமான வந்தேறுகுடிகளின் இருப்பு இல்லாது போனதால் வந்த தற்காலிக வேலை வாய்ப்புக்கள் என்பதை அது மூடிமறைத்தது. சுதேசிகள் அனேகமானோருக்குக் கிரேக்க அரசு வேலைவாய்ப்புக் கொடுத்தாலும், அதன் மொத்த வருமானத்தில் ஏற்பட்ட வீழ்சியை அது தடுக்க முடியாது போய்விட்டது. அவற்றை மக்களிடம் ஊடகங்கள் எடுத்துச் செல்லாதிருக்கக் கிரேக்க அரசாங்கம் ஊடகசுதந்திரத்தை முற்றுமாய்ப் பறித்தது. பின்பு அது மக்கள்மீது கட்டுப்பாட்டை மேலும் இறுக்கியது.

கிரேக்கத்தில் நிறமான வந்தேறுகுடிகளின் தொகை குறைந்து செல்லச் செல்ல இராணுவத்தின் பிரசன்னம் தெருக்களில் அதிகமாகியது. அது அந்நாட்டு மக்களின் மனதில் ஒருவித அச்சத்தை உண்டுபண்ணியது. கிரேக்கத்தின் திட்டமிட்ட நிறமான வந்தேறுகுடிகளின் அழிப்பு சத்தமில்லாது பெருவெற்றியை அளித்தது. தகவல்கள் கசிவதைத் தடுக்க அது அதிகமான இணைய இணைப்புக்களைத் தொடர்ந்தும் துண்டித்தது. கையடக்கக் கருவிகளைப் பறிமுதல் செய்தது. இருக்கும் இணைய இணைப்புகளும் கடுமையான தணிக்கைக்கும், கட்டுப்பாட்டிற்கும் உட்படலாயிற்று. இந்தச் செய்தித்தடை அந்த நாட்டின் அவலங்கள் கசிந்துவிடாது நெருப்புச்சுவராகக் காத்து நின்றது. அது தனது மரணத் தொழிற்சாலையைச் சற்றலைற்மூலம் அறியாத வண்ணம் அதிகபணம் செலவழித்து மறைப்புச் செய்ததோடு, தனது பணியை இரவில் மாத்திரம் செய்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பலர் இரகசியமாகக் கிரேக்கத்திற்கு வருகை தந்து, அதன் நகரங்களில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து வியந்தார்கள். கிரேக்கம் உலகத்தின் கருத்துக்களைக் காதிற் போடாது தனது திட்டத்தை நிறைவேற்றியது. இப்படிப் பல ஐரோப்பியநாடுகள் நிறமான வந்தேறுகுடிகளான சொந்தநாட்டு மக்களுக்கு எதிராக இயங்கின. அவை அதில் வெற்றியும் கண்டன. கிரேக்கம் தனது திட்டத்தை இப்போது யார்மேற் பாவிப்பதற்கும் பயப்படவில்லை. அது அதில் முன்னணி நாடாகத் திகழ்ந்தது. கிரேக்கம் வெள்ளை இனத்தவரை மட்டும்கொண்ட ஒரு நாடக மெதுவாக உருப்பெற்றது.

வடதுருவத்தில் இருந்த சிலநாடுகளில் ஒரு பிரச்சனை எப்போதும் புகைந்து வருகிறது. நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஆதிக்குடிகளான சாமருக்கு அதிக உரிமை கொடுக்கப்பட்டதாகப் பல அதிதீவிரவலதுசாரிகள் கருதினார்கள். சாமரில் சிலர் நிறமனிதர்களை வெறுத்தனர். அநாகரிகமாக அவர்களை நடத்தினர். வெறுப்பின் உச்சத்தில் எந்தக் கத்தி எந்தப் பக்கம் பாய்கிறது என்கின்ற வரைமுறை அங்கு இல்லாதுபோக அது எல்லாப் பக்கமும் பாய்ந்தது. சில ‘சாமர்களின்’ வெறுப்பை எதிர்கொண்ட நிறமனிதர்களின் கருத்தோ வேறாக இருந்தது. இவர்களைவிடச் சுதேசிகள் பலமடங்கு மேல் என்பதாக அவர்கள் கருதினர். மற்றவர் மீதுள்ள வெறுப்பிற்கு, மற்றைய மனிதர் பற்றிய அறிவின்மையே முதற் காரணமாய் இருந்தாலும், அது மட்டுமே காரணம் இல்லை என்பது புரிந்தது.

இதுவரைகாலமும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வந்த அகதிகளை, அவர்கள் முதலில் வந்திறங்கிப் பதிந்த இடத்திற்கே திருப்பி அனுப்பினார்கள். அப்படிச் செய்வதிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மும்மரம் காட்டின. அதைக் கிரேக்கம் தனது திட்டத்தின் மூலம் ஓரளவிற்குத் தீர்த்து வைத்தது. கிரேக்கத்தைப் பற்றிய அவதூறான செய்திகள் உலகெங்கும் பரவின. அத்தோடு மற்றைய ஐரோப்பிய நாடுகளும் கிரேக்கத்திற்கு அகதிகளை அனுப்பி வைக்கிறது என்கின்ற கருத்தும் உலகம் முழுவதும் பரவிற்று. அகதிகளை மிருகங்களைப் போலக் கப்பலில் ஏற்றி வந்து சொந்த நாடுகளில் விட்ட காட்சிகளும் தொடர்ந்தும் தொலைக்காட்சியில் உருண்டன. அது கிரேக்கத்தின்மீதும் மற்றைய ஐரோப்பிய நாடுகளின் மீதும் தணியா வெறுப்பை உலகெங்கும் உருவாக்கியது.

தொடரும்…