சர்வ உரூபிகரம் – எல்லாம் உருவமெடுக்கை எல்லா உருவமும் எடுத்தவர்கள் என்கின்ற பொருள்படக் கொடுக்கப்பட்டது.
http://www.lulu.com/shop/thiagalingam-ratnam/sarva-uruupiharam/paperback/product-22680961.html
என்னுரை
ஈழப்போராட்டம் தமிழரின் இருப்பை ஈழத்தில் வலுவேற்றவில்லை என்பது எனது தாழ்மையான எண்ணம். வலுவேற்றியதாகக் கூறுபவர்கள் எமது இனத்தின் இன்றை இருப்பைப் பற்றிய யதார்த்தத்தை உள்வாங்காதோர். சிங்கள அரசின் நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்றியது எமது ஆயுதப் போராட்டம் என்கின்ற எண்ணம் என்னிடம் உண்டு. ஆழ்ந்து சிந்திக்கும் போது அது புலப்படும். ஜெ.ஆர் ஜெவர்த்தனே அகதிகளாய்த் தமிழரை நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்ததன் சூட்சுமம் இன்றும் புரியாதவர்கள் உண்டோ? யூதர்கள் நாடொன்று அமைத்து அங்கே செறிந்து தங்கள் இருப்பைப் பலப்படுத்தினர். நாங்கள் நாட்டைவிட்டு ஓடி எமது இருப்பைப் பலவீனப்படுத்தினோம். மீதம் இருந்தவர்களையும் போராட்டம் என்கின்ற பெயரில் அழித்தோம். போராளிகளும், அரசியல்வாதிகளும் நாட்டைவிட்டு ஓடுவதற்கு எம்மை ஊக்குவித்தார்கள். அதில் வருவாய் தேடினார்கள். எங்கள் இருப்பு ஈழத்தில் இன்று கேள்விக்குறியே. இப்போது புலம்பெயர்ந்தவர்களின் வரலாற்றுக் கடமை என்ன? நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?
புலிகள் என்றும் விமர்சனத்திற்கு உட்படாதவர்கள் என்பது பலரின் எண்ணம். இந்த நாவல் புலிகளை விமர்சனம் செய்வதை நோக்காகக் கொண்டது அல்ல. புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வெளிநாட்டில் வாழ்ந்த பினாமிகள் செய்த சில கூத்துக்களின் சிறிய அம்பலம் இது. அதுவும் ஒருகோணத்தில் இருந்து பார்க்கப்பட்டது. இதற்கு மறுகோணங்கள் இல்லை என்பது எனது வாதமில்லை. அப்படியான பார்வைகளும், பதிவுக்கு வரவேண்டும் என்பது எனது விருப்பம்.
ஈழப் போராட்ட வரலாற்றை வன்முறையில் இருந்து பிரித்துவிட முடியாது. புலிகள் அதையே போராடும் ஆயுதமாகத் தரித்தவர்கள். புலம்பெயர்ந்த பினாமிகளும் அதே வன்முறையைக் கையில் எடுத்தார்கள். ஐரோப்பாவிலும் நெற்றியில் துப்பாக்கி வைத்து மிரட்டினார்கள். இருட்டிற்குள் நடந்ததாக இவை பதிவுகளில் இருந்து தப்பக்கூடாது.
போராட்டம் நடக்கும் போது வைக்கப்படும் விமர்சனம் போராட்டத்தை நலிவுறுத்தும் என்பதை எனது கருத்தில் வைத்திருதேன். இது சுயவிமர்சனம், விமர்சனம் ஆகியவற்றிற்கான காலம். விமர்சனம் என்பது மற்றவரைக் குறை சொல்வதல்ல. அவர்களைப் புடம்போடுவது. புலிகள் அழிந்துவிட்டார்கள். ஈழம் என்பது கனவாகிவிட்டது. இனி ஆயுதப் போராட்டம் என்பதே மீண்டும் வரக்கூடாது. இருந்தும் உரிமைக்கான போராட்டம் தொடர வேண்டும். உரிமைக்கான போராட்டத்தால் உண்டான கனவுகளின் சுவடுகள் நெஞ்சில் மறையாத வேதனையாகத் தொடர்கிறது.
ஆயுதப் போராட்டங்கள் வேறு இடங்களில் வெடிக்கலாம். அவர்கள் தவறுகளைத் திருத்துவதற்கு எங்கள் போராட்டம் ஒரு படமாகலாம். அதற்கான ஆதாரப்படுத்தலை அனைவரும் செய்யவேண்டும். என்னால் செய்ய முடிந்ததை நான் இங்கு செய்ய விளைகிறேன். நான் ஒரு அரசியல்வாதியல்ல. என் தர்மத்திற்குச் சரியென்பது என் எழுத்தில் பதியப்படும். அது என்னுடைய கடமை என்பதாக நான் உணர்கிறேன். பேனாக்கள் வாள் கண்டு வளைவதில்லை.
யாரையும் புண்படுத்தும் நோக்கோடு இந்த நாவல் எழுதப்படவில்லை என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். என் புரிதலுக்கு ஏற்ப எனது கோணத்தில் நோர்வே மண்ணில் அரங்கேறிய சிலவற்றைக் கோர்த்திருக்கிறேன்.
என் இலக்கியப் பயணத்திற்கு உலகெங்கும் இருந்து ஆதரவு தரும் வாசகர்களாகிய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
இ.தியாகலிங்கம்