http://www.lulu.com/spotlight/ratnamt67atgmaildotcom
ஈழத்தைவிட்டு புலம் பெயர்ந்த எமது முதற் பரம்பரையின் வாழ்வு அனுபவம்; எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அவர்கள் சமுதாய எல்லைகள் வகுக்கப்பட்டன. அவர்கள் நாடு விட்டு வேற்று நாட்டிற்கு வந்தபோதும் தாங்கள் சிறுபிராயத்தில் கற்ற சமுதாய எல்லைகளைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தனர். கடைப் பிடிக்க போராடுகின்றனர். அந்த எல்லைகளே உலகில் உன்னதமானது என்பதை வலுவாக நம்புகின்றனர். அதைத் தங்கள் உயிரான நினைக்கின்றனர். தங்களது அதே சமுதாய எல்லைகளை தங்கள் பிள்ளைகள் மேலும் கண்மூடித்தனமாய் திணிக்கின்றனர். தங்களால் எது சரியான எல்லை என்று கணிக்கப்படுகிறதோ அதற்குள் அவர்களும் நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு வேறு நடைமுறை வேறு. விட்டுக்கொடுப்பில்லாத எதிர்பார்ப்பு உறவின் முறிவுகளை வரவேற்கும்.
இங்கு பிறந்து வளரும் பிள்ளைகளின் வாழ்வு அனுபவம் அப்பா அம்மாவின் உக்கிப் போன எல்லைகளைத் தகர்க்கும். ஐரோப்பிய கலாச்சாரமே அவர்கள் எல்லைகளாகும். சில புறநடையாக இருக்கலாம். எதுவும் எழுதப்படாத அவர்கள் மூளையில் இந்தக் கலாசாரம் இலகுவாகப் பதிகிறது. அந்தச் சமுதாய எல்லைக்குள் அவர்கள் அதிகம் வாழ்ந்து வருவதால் அதை அவர்கள் தங்கள் சமுதாய எல்லைகளாக வரிக்கின்றனர். அங்குதான் பிரச்சனை உண்டாகிறது. அப்பா அம்மாவின் உக்கிய கற்பனை எல்லைகள் இங்குள் நிஜ எல்லைகளை மாற்ற முயல்கிறது.
இதுதான் என் சமுதாயம், இப்படி நான் சுதந்திரமாய் வாழலாம் என்பது விளங்கிய பின்பு, குழந்தைப் பிள்ளையிடம் மிட்டாயை கொடுத்துவிட்டுப் பறிப்பது போல் இது இல்லை உன் சமுதாயம், இது இல்லை உன் சுதந்திரம் என்பது அவர்களைக் குழப்புகிறது. எது எங்கள் கலாசாரம்? எது எங்கள் சமுதாய அடையாளம்? என்கின்ற அடையாளக் குழப்பமான இரண்டு தோணிப் பயணம் ஆரம்பமாகிறது. இந்தக் குழப்பமான அடையாளத் தளும்பல் நிலை அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு ஆபத்தானது.
AranF – Kopi

AranB
எங்கள் கலாசாரத்தைத் திணிப்பதற்குக் காட்டும் அக்கறையை அவர்களோடு சேர்ந்து, அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் ஊட்டுவதில், அவர்களின் பால்யப் பிராயத்தில் செலவிடத் தவறிவிடுகிறோம். இன்றும் அளவுக்கு அதிகமான செலவுகளை உற்பத்தி செய்து அதற்குச் சம்பாதிக்க அலைவதிலேயே புலம்பெயர்ந்தவர்களின் காலம் போகிறது. தனிமையில் அல்லது நிறுவனங்களில் காலத்தை போக்கும் பிள்ளைகள், தொலைக்காட்சி, நண்பர்கள், ஆசிரியர் என்பதாக அவர்களின் சமுதாயத்தில் ஒன்றி அந்த எல்லைகளை வரித்துக் கொள்கிறார்கள். சங்கீதமோ தமிழ் வகுப்புகளோ அவர்கள் சிந்திக்கும் மொழியையும், சிந்திக்கும் விதத்தையும், இந்தச் சமுதாயத்தைப் பார்க்கும் முறையையும் மாற்றிவிட முடியாது.
பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன் அவர்கள் தாய் தகப்பனின் கட்டுப்பாட்டை மீறி தமது எல்லைகளுக்குள் உள்ள சுதந்திரத்தை எடுக்கிறார்கள். பெற்றோரால் அதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. வருங்காலச் சந்ததி தொடர்ந்தும் தமிழர்களாய் இருக்க வேண்டும் என்பது எமது விருப்பம். விருப்பம் வேறு திணிப்பு வேறு. எதையும் நாங்கள் திணிக்க முடியாது. அது தர்மமும் அல்ல. அதுவும் இங்கு எதையும் யார் மீதும் திணிக்க முடியாது. அது சட்ட விரோதம்கூட. அப்படித் திணித்தால் அவர்கள் பதின்நான்கு வயது தாண்டியதும் தங்கள் சுதந்திரத்தை தாங்கள் எடுத்துக் கொள்வார்கள். அப்படி எடுக்கும் போது எங்கள் உக்கிய சமுதாய எல்லைகள் குறுகிய ஒரு வட்டமாக அவர்களால் தூக்கி எறியப்படும். அது பெரும் பாதிப்பாகப் பலருக்கு அமைந்த விடும்.
புலத்தில் உள்ளவர்கள் தங்கள் வருங்காலச் சந்ததிகளைப் புரிந்து தங்களைத் தாயார் செய்து கொண்டால் வருங்காலச் சமுதாயத்தோடான உறவைப் பேணிக் கொள்ளலாம். மாற்றம் காலத்தின் கட்டாயம். அதற்கு மாறாக வளைந்து கொடுக்காவிட்டால் அவர்கள் வேறு ஒரு பிரபஞ்சத்தை நோக்கிப் பயணிக்கலாம். நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்? இது ஒரு விவாதத்தின் தொடக்கமாக இருக்கட்டும்.
என் இலக்கிப் பயணத்திற்கு உலகம் எங்கும் இருந்து ஆதரவு தரும் வாசகர்கள் ஆகிய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
இ.தியாகலிங்கம்

http://www.lulu.com/spotlight/ratnamt67atgmaildotcom