krisputhamதேவி அடிவயிற்றைப் பூப்போலத் தடவிப் பார்த்துக் கொண்டாள். மஞ்சள்ப் பௌர்ணமி வந்து அடிவயிற்றில் குந்தியதாக அது கனத்தது. அதன்மேல் மலரின் மென்மையோடு மேடும் பள்ளமும் மாறிமாறி இடைக்கிடை உருண்டு ஓடிக்கொண்டிருந்தன. அந்த உருளலில் தாய்மை பொங்க, தனங்களும் கனப்பதாக அவள் உணர்ந்தாள். ‘குட்டியனால் தாமரை நிறத்துப் பிஞ்சுக் காலையும், பிஞ்சுக் கையையும் வைத்துக்கொண்டு சும்மாய் இருக்க முடியவில்லை. கருப்பையில் இருக்கும் போதே காவாலியான சிசுவாகக் கலவரம் செய்கிறான். குத்துக்கரணம் அடித்துக் குடிகாரனைப் போலக் கும்மாளம் போடுகிறான். அம்மாவுக்கு நோகட்டும் என்பதாகவே அவன் ஆட்டம் போடுகிறான்.’ எனத் தேவி போய்க் கோபம் கொண்டாள். அந்தக் கோபம் சூரியனைக் கண்ட பனித்துளியாய் அடுத்த கணம் மறைந்திற்று. மீண்டும் அவள் வதனத்தில் அவன் கும்மாளத்தை இரசிக்கும் பரவசம் ஏறிற்று.

‘நாளை மறுநாள் அவன் இருட்டிற்கு விடைகொடுத்து வெளிச்சத்தில் குளிப்பான். டார்வினின் கண்டுபிடிப்பு போல் நீரில் வாழ்வதைத் துறந்து நிலத்தில் வாழப் பழகுவான். தொப்புள்க் கொடியறுத்து, அம்மாவோடான பாசக்கொடியை மேலும் முறுக்கேற்றுவான். முறுக்கேற்றும் அன்போடு என் மார்பில் சுரக்கும் பாலை ஊறிஞ்சித், தாயின் வேதனையைத் தணிப்பான்.’ என எண்ணித் தேவி மகிழ்ந்தாள்.

தவிப்போடு இடிக்கும் சிசுவின் சேட்டை தேவிக்குச் சுகமானது. ‘இதுவரையும் அம்மாவின் வயிற்றுக்குள் இருந்த வண்ணம் கேட்டு, உணர்ந்த உலகை நேரே பார்க்க அவதிப்படுகிறான். நீருலகம் விட்டுப் பூவுலகம் பார்க்கப் பாய்ந்து பாய்ந்து வயிற்றில் மோதுகிறான். பூவுலகு பார்த்தபின் அந்த மகிழ்ச்சியில் வீரிட்டு அழப்போகின்றான்.’ எனத் தேவியின் மனதில் குட்டியனைப் பற்றிய எண்ணம் வற்றாத கடும்பாய்ச் சுரந்தது. வாடைக் காற்றாய் இதம் தந்து இன்பமூட்டியது.

இயற்கையாகப் பிறந்தால் அவன் படப்போகும் ஆக்கினையை எண்ணித் தேவி வயிற்றைப் பிளந்து அவனை வெளியே எடுக்க முடிவு செய்துவிட்டாள். அவன் மீது கீறல் விழுந்தால் அவள் இதயத்தில் அருவாள் பதியும் துடிப்பு எப்பொழுதோ முளைவிட்டாகிற்று. அது இப்பொழுது ஆழமாக வேரூன்றி, அசையாத ஆலாக விழுதுபரப்பி நிற்கிறது. அவன் ஒவ்வொரு அசைவிலும் அவள் உயிர் ஊசலாடுகிறது. பிஞ்சான அவனைத் தன் மார்போடு அணைக்கும் கணத்தை நினைத்து நெஞ்சுருகி நிற்கிறாள். அவன் தாமரைப் பாதங்கள்… தளிரிலைக் கைகள்… குவளை வாயில் ததும்பும் குறும்புச் சிரிப்பு… வெண் முத்தில் குந்தியிருக்கும் கரும் பொட்டாய் மினுமினுக்கும் கண்கள்… அவள் கற்பனையில் தன்னைத் தொலைத்து… அவனை எண்ணி, அன்னையாகும் இன்பத்தில் மூழ்கித் திளைத்தாள்.

தேவி மறுபடியும் வயிற்றில் கைவைத்தாள். குட்டியன் ஒருபக்கம் இருந்து மறுபக்கம் தாவுவது போல அவளால் உணரமுடிந்தது. ஒருகாலால் உதைத்து மறுகாலை உள்ளே வாங்குகிறான் என்பதே பொருந்துமென அவள் எண்ணிக் கொண்டாள். குட்டியன் என்பது தேவி அவனுக்குச் சூட்டிக்கொண்ட செல்லப் பெயர். பெயர் பார்க்க வேண்டுமென முதலில் எண்ணினாள். பிள்ளை பிறக்க முதல் பெயர் பார்த்தால் பிள்ளைக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்கின்ற பயத்தில் தேவி அதைத் தள்ளிக்கொண்டே வந்தாள். அந்தக் கட்டுப்பாட்டையும் மீறிக் குட்டியன் என்று அழைப்பதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை… குட்டியனின் சின்னச் சின்ன இடிகள்… அம்மாவோடு மல்லுக்கட்டும் அவன் குறும்பு… அவளைத் தாய்மையின் சுகத்தில் மெல்லத் தாலாட்டியது.

‘நாளை விடிந்ததும் மருத்துவ மனைக்குச் செல்லவேண்டும். இன்று சற்று நேரத்தோடு படுத்துக் கொள்வோம்.’ என்று தேவி முடிவு செய்தாள். கதவுகள் எல்லாம் ஒழுங்காகப் பூட்டி இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டாள். அம்மாவைக் கூப்பிட்டு தான் நினைத்ததைக் கூறிவிட்டுப் படுக்கையில் சாய்ந்தாள். பூனை ஒன்று வெளியே கத்திக்கொண்டு ஓடியது. தேவிக்குப் பூனைகளைப் பிடிப்பதில்லை. அதுவும் கடுவன் பூனையைப் பிடிப்பதில்லை. தனக்குப் போட்டி என்றால் அது தனது இனத்தையே கடித்துக் கொலைசெய்து உண்டுவிடும். அவள் பூனைபற்றி அசைபோட்ட வண்ணம் திரும்பிப் படுத்தாள்.

நித்திரை வரமறுத்தது. திடீரென மூளையில் ஒரு கதை ஞாபகம் தட்டிற்று. ‘சந்தனு மன்னன் கங்கையின் அழகில் மயங்கி அவளை மணக்க விரும்பினான். கங்கை தான் எங்கிருந்து வந்தேன்? என்ன செய்கிறேன் என்பதை மன்னன் ஒருபோதும் கேட்காவிட்டால் திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டாள். மன்னன் கங்கைக்குக் கொடுத்த வரத்தைக் காத்தான். சந்தனு மன்னனுக்கும் கங்கைக்கும் எட்டுப் பிள்ளைகள் பிறந்தன. முதல் ஏழு பிள்ளைகளும் பிறந்தவுடன் கங்கையானவள், கங்கையில் எறிந்து கொன்றாள். கங்கை தான் கொடுத்த வரத்திற்கு ஏற்ப அவர்கள் பிறந்த உடனேயே கொன்று, பிறப்பறுத்து மோட்சம் கொடுத்த செயலாகும் அது. அப்படி அவர்களுக்குப் பாவவிமோனசம் அழித்து பிறப்பறுக்கவே தன்வயிற்றில் பிறக்குமாறு கூறித் தன்கையாலேயே கொலை செய்தாள் என்கிறது கதை. பிறந்த சிசுவைக் கொன்று பிறப்பறுப்பதா? தாயே சிசுவைக் கொன்று பாவவிமோசனம் அழிப்பதா? என் சிசுவில் தூசு படுவதே என் நெஞ்சை அறுக்கும் பொழுது கங்கையால் எப்படி ஏழு சிசுவைக் கொன்று ஆற்றில் வீசமுடிந்தது? கடவுள்கள்… அவர்கள் உணர்ச்சி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். எனக்கேன் இப்பொழுது இந்த எண்ணம் வரவேண்டும்?’ சலித்துக் கொண்ட வண்ணம் தேவி சரிந்து படுத்தாள். அவள் பானை வயிறு நிலத்தை முத்தமிட்டது. சிறிது நேரத்தில் தேவி கண்ணயர்ந்து போனாள்.

அது ஒரு மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் அவள் தாதியாக வேலை செய்தாள். அவள் ஒரு அறைக்குள்ச் சென்றாள். அந்த அறையின் வெள்ளை மாபிளோடு கோபித்த வெளிச்சம் அவள் கண்ணைத் திருப்பி அறைந்தது. அந்த அறையின் தூய்மை அவளைக் கூசவைத்தது. அங்கே முதியவர் ஒருவர் படுக்கையில் கிடந்தார். அவரால் அசைய முடியவில்லை. அவர் மலங்கழிக்க உதவி செய்ய வேண்டியது அவளது கடமையாகியது. அவள் அவர் அருகே சென்றாள். திடீரென வெடித்த குழாயாக முதியவரிடம் இருந்து மலம் குடம் குடமாகப் பீச்சி அடித்தது. அவள் அதில் நனைந்தாள். நாசியில், சுவாசத்தில், சுவையில் மலம் பட்டதாக அவள் துடித்தாள். என்ன இது? என்ன இது? அறை இப்பொழுது பூட்டி இருந்தது. பூட்டிய அந்த அறையை விட்டு அவளால் வெளியேற முடியவில்லை. மலம்… எங்கும் மலம்… வெள்ளை மங்கி மஞ்சளாகியது. தேவி மலத்தில் நீந்தினாள். அருவெருப்போடு திடுக்குற்று எழுந்த தேவி படுத்திருந்த நிலத்தைப் பார்த்தாள். உடல் வியர்த்து வழிந்தது. நிலம் சுத்தம் குன்றாத சுயத்தோடு இருந்தது. நாசியில் நாற்றம் இன்னும் இருப்பதான பிரமை தட்டிற்று. ‘என்ன இழவுக் கனவு இது?’ எனச் சலித்துக் கொண்டவள் ஆயாசத்தோடு எழுந்தாள். அந்த நினைவு மீண்டும் மீண்டும் அவளுக்கு ஓங்காளத்தை வரவழைத்தது. சிறுநீர்ப்பை வெடித்துவிடுவேன் என்று வெருட்டியது.

வெளியே இரவில் போவது இயமனிடம் போவதாக யாழ்பாணத்தில் நிலைமை ஆக்கிரமிப்பு இராணுவத்தால் புதுவடிவம் பெற்றிருந்தது. எப்போது பாய்வார்கள், யார் மார்பைக் கீறுவார்கள் என்பது மர்மமாகிவிட்டது காலம் இது. மரத்திலிருந்துகூட மலசலம் கழிக்கச் சென்ற பெண்கள் மீது பாய்ந்தார்கள் என்று கூறுகிறார்கள். தேவியைப் பயம் கலைத்துத் திரிந்தது. பயம் கலைத்தாலும் சலம் கழிக்க வேண்டும் என்பது இயற்கையின் கட்டாயமாகியது. அவள் எழுந்து அம்மாவை எழுப்பினாள். மின்விளக்குகளைப் போட்டாள். யன்னலைத் திறந்து மலசலக்கூடம், வேலி என்பவற்றை ஆராய்ந்து பார்த்தாள். எதுவும் ஐயப்படும்படி இல்லை என்பது உறுதியாகிற்று. மலசலக் கூடத்திற்கும் வீட்டுச் சுவருக்கும் இடையே இருக்கும் ஓடை வாயைப் பிளந்த பூதம் போலத் தோன்றியது. பலகை ஒன்றைப் போட்டு அதை மூடவேண்டுமென அவள் எண்ணிக்கொண்டாள்.

தேவி கதவைத் திறந்து தயக்கத்தோடு வெளியே சென்றாள். அனல் அடங்கிப்போன துணிவில் ஊதல் காற்று காமத்தோடு தழுவியது. வாழைகள் நின்றிருந்தால் இன்னும் இதமாக இருந்து இருக்கும். யாழ்பாணத்தில் கிறிஸ்பூதங்களின் பயத்தில் வீட்டின் பின்புறங்கள் நிர்வாணமாக்கப்படுகின்றன. தேவியின் வாழைகளும் வெட்டிச் சாய்க்கப்பட்டன. சருகானபின் தீயிடப்பட்டன. வாழைகள் அழிந்தாலும் பயம் ஆலாய் மனதில்…

தேவி வந்த அலுவல் சுகமாக முடிந்தது. தேவி மலசலக்கூடத்தைவிட்டு வெளியே வந்தாள். கறுத்தப் பூனை ஒன்று அலறிய வண்ணம் அவள்மேல் திடீரெனப் பாய்ந்தது. அந்த ஒரு கணத்தில் கிறிஸ்பூதமே பாய்ந்தாகத் தேவி திகைத்தாள். இதயத்தைப் பிளந்ததாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் துள்ளிப் பாய்ந்தாள். அதில் எங்கே பாய்கிறேன் என்பதை நிதானிக்காது பூதம் போல வாயைத் திறந்த ஓடைக்குள் விழுந்தாள். வயிற்றில் பலமாக அடி வாங்கினாள். அம்மா என்று அவலமாகக் கத்தினாள். அந்த இடத்திலேயே எழ முடியாது கிடந்தாள். அவள் இதயம் நின்றிருக்க வேண்டும். கங்கை இங்கும் வரம் கொடுத்ததாக அது தன்பணி செய்தது. தேவி வயிற்றைப் பிடித்த வண்ணம் அலறினான். அவள் அலறல் அவலமாக நாலாதிக்கும் அலைமோதியது. பன்னீர்க்குடம் உடைந்து இரத்தமாக ஓடியது.