http://www.lulu.com/spotlight/ratnamt67atgmaildotcom

என்னுரைobelisk-vappuE
என்னுரை எழுதும் இந்தச் சடங்கை என் சோம்பல் வென்றுவிடும் போல் இருக்கிறது. இது தேவைதானா என்கின்ற கேள்வி என் கைவிரல்களைக் குறண்டிப் பிடித்துப் பின்னே இழுக்கின்றன. கதைகள் என்று ஏற்கனவே பிரசங்கிக்கும் நான் என்னுரை என்று மேலும் பிரசங்கிக்க வேண்டுமா என்கின்ற கேள்வி என்னிடம் உண்டு. அதைப் போலவே நான் படைப்பது இலக்கியமா என்கின்ற கேள்வி என்னுள் இருக்கிறது. நான் அதற்கு எனது ஆத்ம திருப்திக்கான கிறுக்கல்களே இவை என்கின்ற பதிலும் வைத்திருக்கிறேன். அதை நம்புகிறேன். புதுமைப்பித்தன் பாரதி போன்றவர்களையும் அதற்கு முந்தியவர்களையும் சில பிந்தியவர்களையும் பெற்ற தமிழ் இலக்கிய உலகிற்கு என்னால் எதுவும் செய்துவிட முடியாது என்பது எனக்குப் புரிகிறது. அத்தால் எனது ஆத்ம திருப்திக்கான கிறுக்கல்கள் நின்றுவிட வேண்டும் என்பதும் அர்த்தமாகாது. அது யாருக்கும் எதற்காகவும் அடங்காது. எந்த வரையறைக்கு உள்ளும் என்னை நுழைத்துக் கொள்வதற்கும் அது இடங்கொடுக்காது. அப்படி இடங்கொடுத்தால் எனது ஆத்ம திருப்தி அன்றோடு செத்துவிடும். எனது கிறுக்கலும் அத்தோடு நின்றுவிடும்.

மேலும் உங்களை நான் மினக்கெடுத்த விரும்பவில்லை. உங்கள் நேரம் பொன்னானது என்பது எனக்குப் புரியும். இந்தத் தொகுப்பைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால், இதில் ஓர் ஆரம்ப காலத்துத் தொலைந்து போகாத குறுநாவலும் இரு பத்தி இரண்டு சிறுகதைகளும் அடங்கி இருக்கின்றன. எனது கிறுக்கல்களை உங்களுக்கு நேரம் இருந்தால் வாசியுங்கள். விரும்பினால் அதன் குறைநிறைகளைப்பற்றி உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள். சூழல் மாசடைவதை நாங்களும் ஊக்குவிக்காமல் இருப்பதற்கு இயலுமானவரை மின் புத்தகங்களை வாங்குங்கள்.

என் இலக்கியப் பயணத்திற்கு உலகம் எங்கிருந்தும் ஆதரவு தரும் வாசகர்களாகிய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
இ.தியாகலிங்கம