துருவத்தின் கல்லறைக்கு

காரைநகரான் நோர்வே
Sight_2016_07_04_150655_675_ebook
அந்திமகாலத்திலிருக்கும் பெரியவர் ஒருவரின் வாழ்க்கைபற்றிய நினைவோடை என்றவகையில் கவனிப்பைப் பெறுகின்றது. இன்னும் அந்திமகாலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் பயனுள்ள பல அனுபவங்கள் பகிரப்படுகின்றன.

இப்புதினம் தன் அழகியலில் பின்வரும் காரணங்களால் பின்னடைந்திருப்பதாகத்தெரிகிறது.
1. ஆசிரியன் சுகி சிவம் பாணியில் பக்கத்துக்குப்பக்கம் செய்யும் அளவுக்கு மிஞ்சிய தத்துவ விசாரங்கள்.
2. நாவலாசிரியன் தனக்கான மொழியை இத்தனை நாவல்களை எழுதியபின்னும் வளர்த்துக்கொள்ளாமை.
3. ஆசிரியன் தனக்கு லகர ளகர மயக்கங்கள் உண்டென்பதை உணர்ந்துகொண்டு அதைப்பிறிதொருவரைக்கொண்டு செம்மைப்படுத்தாமை, பத்திக்குப்பத்தி குவிந்துள்ள எழுத்துபிழைகள். விறஸ், பிறண்ஸ், வியர் போன்ற பிறமொழி வார்த்தைகள் திரும்பத்திரும்ப தவறாக எழுதப்படுகின்றன.
பொம்பேயுமல்லாமல் மும்பேயுமல்லாமல் அது என்ன வம்பே?
தயிரியம், ஆவனை, அரிகண்டம் (அரிகண்டம் என்றால் வெட்டுத்துண்டுக்குச் சொல்லப்படுவது உம்: வத்தகைப்பழக்கீறல்) அருவருப்பு என்கிற அர்த்தத்திலல்ல. நிரந்தர இன்மை ( பக்: 242) என்பதுக்கு தமிழில் அநித்தியம் எனும் வார்த்தையுளது. ‘தவுனம்’ என்பதும் வட்டாரவழக்கிலான வார்த்தை.
மனைவி தேநீர் தயாரித்துக்கொடுத்தாலும் அதற்கு ‘நன்றி’ சொல்வது இவர்களது பண்பாடு. அது கலாசாரம் அல்ல. பெரியவர்களைக்கண்டால் எழுந்து மரியாதை செய்வது எமது பண்பாடு.
சூரியனுக்கு நன்றி சொல்ல விழா எடுப்பது, பொங்கல் வைப்பது எமது கலாசாரம். அது கலைகள், சடங்குகள், கொண்டாட்டங்களுடன் அவற்றின் மரபுகளுடன் தொடர்புடையது. பழக்கம்> வழக்கமாகும்போது> அதுவே பண்பாடாகிறது. இரண்டுக்குமிடையே உள்ள நூல்வேலி உணரப்படவேண்டும். இப்புதினத்தில் ‘கலாசாரம்’ என்கிற ஒற்றைச்சொல்லாடலே எல்லாவிடத்தும் பயன்படுத்தப்படுகிறது.
4. ஆசிரியர் ஹ, ஷ போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன் படுத்துவதில்லை என்கிற எண்ணம் இருப்பின் பிறமொழி வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் தவிர்த்திருக்கவேண்டும். இதனால் ’காய்’, ’கோல்’ போன்ற வார்த்தைகள் வேறு அர்த்தத்தையும் நகைப்பையும் தருகின்றன.
5. மயக்கம் தரும் அர்த்தக்குறைபாடுடைய வசனங்கள் பலவுள்ளன. குறித்துவைத்த சில: ‘நேரம் கானல்நீராயிற்று’ பக்: , ‘முருகனைப்போல வடிவு’ என்று சொல்லும் நோர்வே தாதி, (பக்: 121) இவர் பிள்ளையார் சிவனையும் உமையவளையும் சோமாஸ்க்கந்தக்கோலத்தில் கண்டிருப்பாரோ?
வாசகர்கள் எல்லோரும் சிறுவர்களாக இருப்பார்கள் எனும் எண்ணத்தில்போலும் , (பக்:168) இதுபோன்ற வளா வளா வசனங்கள் அனைத்தும் வெட்டி எறியப்படவேண்டும்.
இன்னும் நாவலில் ஆரம்பத்தில் ஆசிரியர் செய்துகொள்ளும் தத்துவ விசாரங்களையும், பக் 71,இலும் பக்:89 ,பக் 91 இல் செய்யப்படும் பிண்டம் பற்றிய விரிவுரையையும் தாக்ஷண்யமின்றி நீக்கலாம்.
அத்தியாயத்துக்கு அத்தியாயம் தாயகத்தையும் நோர்வேயையும் ஒப்பீடு செய்வதும் எதுக்கு? வாசகனுக்கும் அதுபற்றிய பார்வை இருக்குமல்லவா?
‘ஒரு கிருஸ்த்தவனாக என் பெயரன் எனக்குப் பந்தம் பிடிக்கவேண்டாம்’ எனச் சொல்லும் தந்தையின் விருப்பத்தின்மூலம் அவரை ஆசிரியர் நிஷ்டூரமாகச் சிறுமைப்படுத்திவிடுறார்.

மேலும் நாவலில் அமைப்பில் சம்பவத்தொகுப்பில் எனக்குத் தென்படும் பலவீனங்கள்.
‘துருவத்தின் கல்லறைக்கு’ எனும் தலைப்பே வாசகனை முடிவை நோக்கி இட்டுச்சென்று விடுகிறது.
கப்பலில் பணிசெய்துவிட்டு இறங்கிவரும் புத்திரனும் குமரேசனும் யாழ் சென்று தத்தம் தாயாரைக் / குடும்பத்தைக்காணாது கொழும்பிலேயே நின்று சுழன்றுவிட்டு மீண்டும் நோர்வே பயணமாகிறார்கள் என்பதில் நாவலின் நம்பகத்தன்மை குறைகின்றது.
கொழும்பிலிருக்கும் புத்திரனுடன் மூனா தொலைபேசுகிறாள். அவ்வுரையாடலில் பிரிந்திருக்கும் இணைக்கிடையே இருக்கக்கூடிய தாபமும் உயிர்ப்பும் இல்லை.
கதை நடைபெறும் காலத்தில் இலங்கையில் ஒரு போர் நடக்கிறது. ஏறத்தாழ நடுப்பகுதிக்கும் அப்பால் புத்திரன் குடும்பம் இலங்கை விஜயம் செய்யமுதல் போரின் தடயங்கள் எதுவும் புதினத்தில் காணப்படவில்லை. அதுபற்றிய பிரக்ஞை ஆசிரியருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. இலங்கை விஜத்தின்போது மட்டும் சும்மா சாட்டுக்கு ஓரிடத்தில் ஆமி செக்குங்குகள் இருந்ததாகச் சொல்லப்படுவது.
இது புதினமாகையால் புத்திரனின் பெற்றோரின் கடைசிக்காலத்தில் அவர்களுக்கு என்ன நடந்தது , அம்மரணங்கள் எப்படி ஏற்பட்டன என்பதை இன்னும் விபரித்திருக்கவேண்டும்.
குமரேசன் – கதறீனா, புத்திரன் – மூனா தம்பதியினரின் பிரிவில் உள்ள யதார்த்தம், பிறபண்பாட்டுக்கலத்தல்களின் விளைவுகள் வியாகூலங்கள் நன்றாக வெளிப்படுத்தப்படுகின்றன.
பார்ட்டியில் புத்திரன் சந்திக்கும் பழைய நண்பன் ஒருவர் (பெயர்?) தன் மகள் தம்மைவிட்டுப் பிரிந்துபோனதாய் ஒப்பாரி வைப்பாரே……….. அதே அவரின் மகளைப் புத்திரனின் இரண்டாவது பிள்ளையாகச் சிருஷ்டித்திருந்தால் புத்திரன் மீதான வாசகனின் ஈர்ப்பு இரட்டிப்பாக இருந்திருக்கும். கூடவே அச்சம்பவமும் பாத்திரங்களும் அவரின் முந்திய ’அரங்கத்தில் நிர்வாணம்’ நாவலை நினைவுபடுத்தியிருக்காது. புதினம் வழங்கிய சாத்தியங்களை இன்னும் அழகாகப்பயன்படுத்தி இன்னும் நிறைவான நாவலாகச் செதுக்கியிருக்கலாம்.