என்னுரை

front_ebook
back

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். காதலுக்குக் கண்மட்டுமல்ல எந்தப் பொறியும் கிடையாது என்கின்ற தரிசனத்தை அன்றாட வாழ்வில் காணமுடியும். காதல் செய்யும் பொழுது மூளையில் ஒருவகை ஹோர்மோன் சுரக்கிறது. அது போதைப் பொருளைவிட மேலாக மனிதரை ஆட்டிப்படைக்கிறது. புரிந்தும் புணர்வை நீக்க முடியாத இயற்கையின் கட்டளை அது. இதை நவீன ஆராய்ச்சிகள் இன்று நிரூபிக்கிறன. இதற்கு நான் ஆராய்ச்சியே தேவையில்லை என்பேன். அன்றாட வாழ்வில் நாம் காணும் கல்வெட்டுப் பதிவுகள் அவை. காதல் பித்து ஏறிவிட்டால் அன்றாட வாழ்வில் கற்பனை செய்யவே பயப்படும் செயல்கள்கூடச் செயல் ஆகிவிடும். காதலுக்காக, காமத்திற்காக, கொலைகள் நடப்பதுகூட ஒன்றும் புதுமையில்லை. சமுதாய வரம்புகள், சட்டங்கள், என்பன பற்றிய திரைகள் காதல் போதையில் தொலைந்து போய்விடும். காதல் பித்தாக்குவது மட்டுமல்ல பேதைமையும் அடையச் செய்கிறது. அறிவாளிகூட காதல் வசப்படும் போது மூடனைப் போல அலங்கோலப்படுகிறான். அது அவனல்ல. அவன் போதை. இதற்கு வயது, கௌரவம், பால், என்கின்ற பிரிவுகள் தடையாக நிற்பதில்லை.
சாப்பிட முன்பும் போதை ஏற்றிக் கொள்ளலாம், சாப்பிட்ட பின்பும் போதை ஏற்றிக் கொள்ளலாம் என்பது போன்றதே காமமாகும். காதல் என்கின்ற இணைவு காமத்தை தீர்த்து, சந்ததி பெருக்கி, இருப்பை உறுதிப்படுத்தும் இயற்கை மனிதனுக்குக் கொடுத்த பணியாகும். அதில் சிலருக்குச் சிறிய சாந்தியும் கிட்டுவது உண்டு. காதல் வந்தும் காமம் கழியலாம். காமத்திற்காகப் புறப்பட்டும் காதல் வயப்படலாம். இயற்கையின் ஒரே குறிக்கோள் சந்ததி பெருக்கல். அதைக் காக்களூ ஆணுக்கும் பெண்ணுக்குமான இயற்கையின் அழகான சரசங்களில் இருந்து அந்த ஜீவராசிகள் தப்ப முடிவதில்லை.
காதலில் இருவர் சம்பந்தப்பட்டாலே பலவித இரணங்களைத் தோற்றுவிக்கும். அதில் மூன்றாவது நபர் அல்லது ஒரு குடும்பம் சம்பந்தப்பட்டால் அங்கு நரகம் ஒன்று உருவாகும். சந்ததி பெருக்கல் சில வேளை சந்ததிகளையும் சிதைக்கும்.
காதல்ளூ அதற்காக அனைத்தையும் இழக்கச் சொல்லும். அனைத்தையும் இழந்தும் போதையில் அதைப் பற்றித் தெய்வீகம் என்கின்ற கற்பனை வளரும். புறவுலகு மறத்துத் தம்முலகு ஒன்று சமைக்க வைக்கும். அதுதான் உண்மை உலகென்றே அது வலுவாக நம்ப வைக்கும். வரம்புமுறையற்று வரும் காதல் அனேக ஏமாற்றங்களைத் தருவதாகவும் இருக்கும்.
காதலே மூச்சு என்கின்ற கற்பனையில் மிதக்கும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு அந்தக் காதலே பொய், அவன் அல்லது அவள் காதலித்தவர் பொய்யின் உருவம் என்பது தெரிகிறபோது அவர்கள் மனதில் தோன்று உணர்வுகளுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையைத் தாண்டியும் சொற் கொண்டுவர முடியாது.
காதல் போதை. அதுவே தோல்வி அடையும்போது அவனைத் தற்கொலை செய்யத் துண்டும் காலனின் பாசக்கயிறாகிறது. காதல் வயப்படாதவனுக்கு இவன் ஏன் தற்கொலை செய்தான் என்றிருக்கும். அந்தப் போதையில் அகப்பட்டவனுக்கு இனி ஏன் வாழ்வான் என்றிருக்கும். பலர் காதல் கைகூடாத போது ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதற்கு இந்தக் கதாநாயகனோடு பயணிக்கும்போது ஓரளவு புரிதல் உண்டாகும். அதற்காக அதுவே வழியென்று யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. காதலின் காயத்திற்கும் காலம் மருந்து தரும்.
காதல், ஏமாற்று, துரோகம், கோபம், துக்கம், இயலாமை, அதீத நம்பிக்கை என்கின்ற உணர்ச்சிகளில் கொந்தளித்து, தனது வாழ்வை அழித்துக் கொண்ட ஒருவனை இந்த நாவலில் நீங்கள் பார்க்கலாம். மீதி உங்கள் சுவைப்பிற்கு.
என் இலக்கியப் பயணத்திற்கு உலகம் எங்கிருந்தும் ஆதரவு தரும் வாசகர்களாகிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

இ.தியாகலிங்கம்