உலகத்தையும் அதன் இயற்கையையும் ஆண்டவன் அருளுடன் படைத்து, அதில் ஆதாமையும்,
ஏவாவையும் அழகான விருத்திக்குப் படைத்து, துணைக்கு அதே இயற்கையை மேலும்
விருத்தியாக்கித் தாவரங்களையும், மிருகங்களையும், பறவைகளையும், கடல் வாழ்
உயிரினங்களையும் பேரியக்கமாக அவர்களைச் சுற்றி ஆண்டவன் படைத்தான் என்கின்ற
ஆன்மீகம் சார்ந்த புல்டாக் கதை இந்த நூற்றாண்டிற்கு உதவாது என்பதால் தூக்கித்
தூரே எறிந்து விட்டு, விஞ்ஞானம் கூறுவது போல், பேரோசையோடு தானாகத் தோன்றிய
இந்தப் பிரபஞ்சமும், அதில் ஒரு புள்ளியாக இருக்கும் எங்கள் சூரியக் குடும்பமும்,
அதில் ஒரு தூசு போன்ற இந்தப் பூமியும், பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னே
உருவாகி, அதீத வெப்பத்தால் அக்கினிக் கோளமாய், அக்கினியின் ஈர்ப்பில்,
அக்கினியை வலம் வந்து, காலப் போக்கில் அமைதியாகி, பூமியின் மேற்பரப்பு
குளிர்மை அடைந்து, அதன் பின்பு மெதுவாக மேற்கூறியவை உருவாகி, தாவரங்களும்
மிருகங்களும் வாழ்வதற்கு உரிய சுவர்க்கமாக அது உருவெடுத்து என்கின்ற உண்மையை ஏற்றுக்
கொண்டு, மேலே ஸ்திரமாகவும், யதார்த்தமாகவும் இந்தக் கதைக்குள் செல்வோம்.

மேற்படிப் பேரோசையோடு உருவாகிய இந்தப் பிரபஞ்சத்தில்… அதனால் உருவாகிய
இந்தப் பூமியின் பிற்காலத்தில்… அமீனோ அமிலங்களின் விபத்துக்களால்
உண்டாகிய சேர்க்கையில், முதலில் ஒற்றைக் கலத்தைக் கொண்ட உயிரினங்கள்
உருவாகி, பின்பு அவை கூர்ப்பு அடைந்து, தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் என்று
தோன்றி அதன் பின் மிருகங்கள், பறவைகள், ஊர்வன எனப் பலவகையாக கூர்ப்பு அல்லது
அபிவிருத்தி அடைந்து, அவை பேரும் உருப்படியான டைனோசரில் இருந்து அன்றைய பெரும்
விபத்தால் இன்றைய உருவிற்கு மாறிக் கடைசியில் குரங்கு மனிதனாகப் பல கோடி
ஆண்டுகள் ஆகின. விஞ்ஞானம் கூறுவது போல இந்தப் பூமி பல உயிரினங்களைக் கண்டு
வந்தாலும், மனிதனின் வரவும், அதனால் இந்தப் பூமியில் வந்த மாற்றமும், மாற்ற
முடியாத மாற்றத்தை இந்தப் பூமியில் மெதுவாக ஏற்படுத்தத் தொடங்கியது. அப்படி
மாறியதில் மனிதர்களால் உருவாக்கிய மொழிகள், நாடுகள், அரசுகள்,
கலாச்சாரங்கள், அதற்கும் மேல் முக்கியமான உயிர்நாடியாக மதங்கள் என்று பல
கூறுகளாக மேலும் முன்னேற்றம் அல்லது பிளவு அடைந்து வரும் வேளையில், அந்தச்
சாத்தான்கள் இந்த மனிதர்களுக்கு உள்ளே மெதுவாக உருவாகத் தொடங்கின. அது
மனிதனின் முன்னேற்றத்தின் ஒரு கால கட்டத்தில், மனிதனின் துணையோடு, அவர்களுக்கு
இணையாக விரைவாக வளர்ந்து வரத் தொடங்கியது. அந்தச் சாத்தான்கள் மனிதத்தை
மீறிக் கொண்டு மனிதர்களுக்குத் தலைமை தாங்கித் தமது வழியில் அவர்களை
வழிநடத்தவும் தொடங்கின.

இப்படிப் பல சாத்தான்கள் பல இடங்களில் தோன்றினாலும் அவற்றை எல்லா மிஞ்சும்
பெரும் உருவெடுத்த இரண்டு கொம்பு முளைத்த வெள்ளைச் சாத்தான்கள் இந்த உலகை
பொம்மை போல ஆட்டிப் படைத்தன. தாங்கள் செய்யும் அனைத்து அநியாயத்தையும்
நியாயம் என்றார்கள். நல்லவர்களையும் கெட்டவர்களாய் மாற்றிக் காட்டினார்கள்.
அதைப் பற்றி விரிவாகச் சிறிது பின்பு பார்ப்போம்.

பல காலத்திற்கு முன்பே உலகத்தில் முதலில் உருவெடுத்த வெள்ளைச் சாத்தான்கள்
மிகவும் பேராசையுடன் பொருட்களின் மேலும் வியாபாரத்தின் மேலும் வெறி பிடித்து
உலகெங்கும் அலைந்தன. அவற்றிற்கு உலகத்தில் உள்ள பல நாடுகளை மொத்தமாகப்
பிடித்து, அங்கிருக்கும் செல்வங்களை அட்டை இரத்தம் உறிஞ்சுவது போல உறிஞ்ச
வேண்டும் என்கின்ற அடங்காத வெறி. அதனால் அவை கப்பல் கட்டிக் கடல்
மார்க்கமாகத் தூரதேசம் சென்று, அப்பாவி மனிதர்களின் இரத்தம் குடிக்கும் வேலையை
முதலில் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாக எந்தச் சங்கடமோ, மனச் சாட்சியோ, ஈன
இரக்கமோ இன்றி வெற்றிகரமாக, மகிழ்ச்சியோடு செய்து வந்தன. அப்போது அவை பல
வேளை தங்களுக்குள்ளும் சண்டை செய்து, தங்கள் இனத்தைச் சார்ந்த மற்றவர்
இரத்தத்தைக் குடிக்கவும் தயங்கியது இல்லை. அதனால் தோற்ற சில வெள்ளைச்
சாத்தான்கள் வேறு வழி இன்றித் திரும்பித் தமது தேசத்திற்கே வந்ததும் உண்டு.
அப்படித் திரும்பி வந்த சாத்தான்கள் எப்படித் தங்களுக்கு எதிரான வெள்ளைச்
சாத்தான்களை முதலில் வெல்வது என்று திட்டமிடத் தொடங்கின. அதனால் அவை
இரகசியமாக மாபெரும் யுத்தம் ஒன்றிற்குத் தயாராகின. இதற்கு முன்பே ஏற்கனவே
சென்ற பல வெள்ளைச் சாத்தான்கள் கீழைத் தேசத்திலும், ஆப்பிரிக்காவிலும் தாம்
நினைத்ததை எல்லாம் செய்து, அங்கு வாழ்ந்தவர்களை அடிமையாக்கி, விலங்குகளாகச்
சங்கிலியில் பிணைத்துச் சந்தையில் அவர்களை வியாபாரப் பிண்டமாக்கி ஆக்கியது
தொடக்கம் மிகவும் கீழ்த்தரமான சுரண்டலைத் தொடர்ந்து செய்தன. ஒரு சிறிய
பகுதியாக இருந்த இந்த வெள்ளைச் சாத்தான்கள் மீதம் இருந்த பெரும் பகுதி
மனிதர்களின் இரத்தத்தைத் தொடர்ந்தும் உறிஞ்சிக் குடித்துக் கொழுத்தன. அப்படிச்
சில வெள்ளைச் சாத்தான்கள் செய்வதைப் பார்த்த முதலில் தோற்றுத் திரும்பித்
தமது நாட்டிற்கு வந்த வெள்ளைச் சாத்தான்களுக்கு கோபமாகவும், வெறுப்பாகவும்
இருந்ததால் அவை யுத்தம் ஒன்றை எதிர்பார்த்து இரகசியமாகச் செயற்பட்டன.
யுத்தத்தின் மூலம் தாங்கள் இழந்தவற்றைப் பிடித்து அந்தச் சாத்தான்கள் செய்வது
போலச் செய்ய வேண்டும் என்று அவை அதிக பேராசை கொண்டன. அதற்காக வெறியோடு
அவை செயற்படத் தொடங்கின.

அதில் ஒரு சாத்தான் கீழைத் தேசத்தையும், ஆப்பிரிக்காவையும் பிடிப்பதோடு மற்றைய
வெள்ளைச் சாத்தான்களின் பல தேசங்களையும் பிடிக்க வேண்டும் என்று முதலில் சக
வெள்ளைச் சாத்தானிடம் தோற்ற வரலாற்றால் வன்மமாக எண்ணி எண்ணி
யுத்தத்திற்கான முன்னேற்பாட்டைச் செய்தது. அதற்கு மனிதர்களின்
மூக்கை அளந்து ஒரு காரணமும் கண்டு பிடித்தது. அதனால் இந்த உலகத்தில் வெள்ளைச்
சாத்தான்களுக்கு இடையில் மாபெரும் யுத்தம் ஒன்று மூண்டது. அதில் ஒரு கீழைத்
தேசத்து மஞ்சள் சாத்தானும் பங்கு பற்றியது என்பது வேறு ஒரு கதை.

இந்த உலகத்தில் நடந்த மாபெரும் அந்த யுத்தத்தில் இரத்தம் குடித்த இரண்டு
வெள்ளைச் சாத்தான்கள் மேலும் மேலும் மாபெரும் கொடிய சாத்தான்களாக உயிர்த்து
எழுந்தன. அவை அதன் பின்பு மிகவும் தந்திரமாக ஆளுக்கு ஒரு கொள்கையை முகமூடியாக
வைத்துக் கொண்டு இந்த உலகத்தின் இரத்தத்தை மெது மெதுவாக உறிஞ்சித் தாங்கள்
கொழுத்தன. அதற்காகத் தனக்கு எதிரான மற்றைய கொம்பு முளைத்த வெள்ளைச்
சாத்தானை அவர்களுக்கு எதிராகக் காட்டிப் பயமுறுத்துவதை அவை முதல் தந்திரமாகப்
பயன்படுத்தின. அந்த இரண்டு கொம்புமுளைத்த சாத்தான்களிடம் எதோ பெரும்
கொள்கைகள் இருப்பதாய் பல அப்பாவி மனிதர்கள் நம்பி அதைத் தங்கள் வேதங்களாக
ஓதத் தொடங்கினார்கள். அவர்களின் அந்கக் குருட்டுத்தனமான நம்பிக்கை அந்தக்
கொம்பு முளைத்த வெள்ளைச் சாத்தான்களுக்கு மேலும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.

கொம்பு முளைத்த வெள்ளைச் சாத்தான்கள், மற்றும் புதிதாகத் தோன்றி இப்போது
பலம் வாய்ந்த சாத்தான்களாக வளர்ந்து வரும் பல்வேறு சாத்தான்கள் என்பவை மற்றைய
நாட்டில் வாழ்ந்த மனிதர்களின் இரத்தத்தை மொத்தமாக எப்படிக் குடிப்பது என்பது
பற்றிச் சிந்தித்தன. அதற்கு முன்பே அந்த யுத்தம் நடந்தபோது கடுமையாக
யோசித்துச் சில சாத்தான்கள் அதற்காக முயற்சி செய்தன. இறுதியில் அதில் ஒரு
கொம்பு முளைத்த வெள்ளைச் சாத்தான் பெரும் வெற்றி அடைந்தது. அது அந்த ஆயுதத்தை
பரீட்சாத்தித்துப் பார்க்கத் தாருணம் பார்த்துக் காத்து இருந்தது. அப்போது
சாத்தான்களுக்கு இடையில் யுத்தம் நடந்ததால் அதைக் காரணமாக வைத்து பெரும் தேவை
இல்லை என்றாலும் தாங்கள் கண்டு பிடித்து அபிவிருத்தி செய்த அந்தப் புதிய
ஆயுதத்தை மஞ்சள் சாத்தானுக்கு எதிராகப் பாவித்து பல நூறு ஆயிரம் மனிதர்களின்
இரத்தத்தை சில கணங்களில் உறிஞ்சிக் குடித்ததுத் தனது பரீட்சாத்தத்தை முடித்தது.
அதைத் தொடர்ந்து அது மற்றைய சாத்தான்களையும், அப்பாவி மனிதர்களைப் பயத்தால்
பணிய வைக்கும் முயற்சியில் வெற்றி கண்டது. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு
இருந்த மற்றைய கொம்பு முளைத்த வெள்ளைச் சாத்தான் இந்தக் கொம்புமுளைத்த
சாத்தானை எதிர்ப்பதையே முழுமூச்சாகக் கொண்டதால் வெகு விரைவாக தாங்களும்
அப்படிப் பல நூறு ஆயிரம் மக்களின் இரத்தத்தை ஒரே நேரத்தில் எப்படிக் குடிப்பது
என்பதை மிகவும் முன்னேற்றமான தொழில்நுட்பத்தோடு கண்டு பிடித்து, அதைத் தமது
பரந்த தேசத்தில் பரிசோதித்துப் பார்த்தது. இப்படி இந்த இரண்டு கொம்பு முளைத்த
சாத்தான்களும் செய்வதைப் பார்த்த மற்றைய பல குட்டிச் சாத்தான்களும்
இரகசியமாகத் தாங்களும் அதைச் செய்வதில் மும்மரமாகின. இப்படியாக ஒவ்வொரு
கண்டத்திலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடிமையாகக் கிடந்தவர்களும் மெதுவாகச்
சாத்தான்களாக முளைத்து விருத்தி அடைய அடைய உலகத்தில் அமைதியாக இருந்த நாடுகள்
அச்சத்தால் நடுங்கத் தொடங்கின. இந்தச் சாத்தான்கள் எப்போதும் ஒருவருக்கு
ஒருவர் எதிராகக் கதைத்துச் சண்டை பிடிப்பதால் எப்போது தாங்கள் செய்து
வைத்திருக்கும் அந்த ஆயுதங்களைப் பாவிப்பார்களோ என்று பலர் பயந்தனர். அந்த
ஆயுதங்களை எந்தக் கணத்திலும் பாவிப்பதற்கு ஏற்ப சிறிய கட்டுப்பாட்டுப் பெட்டி
ஒன்றை அந்தச் சாத்தான்கள் தயாரித்து அதைத் தாங்கள் செல்லும் இடம் எல்லாம்
குரங்கு குட்டியைக் காவிச் செல்வது போலக் காவிச் சென்றனர். அதனால் முக்கியமாக
இரண்டு கொம்பு முளைத்த வெள்ளைச் சாத்தான்களும் மற்றைய தேசங்களையும், அதன்
மக்களையும் மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கி வந்தன.

அதே வேளை முன்பு கூறியது போல மற்றும் பல புதிய சாத்தான்களும் அங்கங்கே பலமாகி
மெதுவாக வளர்ந்துவரத் தொடங்கியதால் அவையும் கட்டுப்பாட்டுப் பெட்டி
தயாரிப்பதில் மிகவும் அக்கறை காட்டின. இப்படியாக அவை பல நிறத்திலும், பல
தேசங்களிலும், உலகின் ஒரு சில பகுதியைத் தவிர மற்றைய இடங்களில் விரைவாக
உருவெடுத்தன. அவற்றில் ஒன்று தொடர்ந்தும் வினோதமாக அகிம்சை பேசியது. வேறு ஒன்று
தாமே உருவாக்கி இசம் பற்றித் தான் செய்வதை மறைத்துப் பெருமையாகப் பேசியது. அதன்
தேசத்து மக்கள் உயிரையே அதற்கு உழைப்பாகக் கொடுத்தனர். வேறு சில சாத்தான்கள்
கண்களை இழந்து குருட்டுத்தனமாக மதம் பேசின. சில தமது பழைய சாத்தான் பரம்பரை
பற்றிப் பேசிப் பேசி மகிழ்ந்தன. ஆனால் இவற்றின் ஒரே நோக்கம் மற்றை
மனிதர்களைப் பயமுறுத்தி, அவர்களின் இரத்தத்தைக் குடிப்பதாகவே இருந்தது. அதற்கு
ஏதுவாக தாங்கள் அந்தச் சிறிய கட்டுப்பாட்டுப் பெட்டியை தயாரித்து வைத்துக்
கொள்ளுதல் என்பவையே அவற்றின் பொது நோக்காக இருந்தது. அந்தக் கட்டுப்பாட்டுப்
பெட்டியில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் பல இலட்சம் மக்களின் இரத்தத்தை
ஒரே நொடியில் குடித்துவிடலாம் என்கின்ற அளவிற்குச் சாத்தான்களின் அறிவும்,
தொழில் நுட்பமும் ஆக்கத்திற்கு இன்றி அழிவுக்கும், அச்சுறுத்தலுக்கும் பயன்பட்டன.
அவை தாங்கள் வாழ்ந்த நாட்டைக் கொழுக்க வைத்து மேலும் தாங்கள் சுகபோகமாக
வாழ்வதற்கு மற்றைய நாட்டை கபடத்தனமாயும், பலத்தைப் பாவித்தும் அடக்கி ஆழத்
தொடங்கின. அல்லது தங்களது அந்த கட்டுப்பாட்டுப் பெட்டியை எடுத்துக் காட்டிப்
பயமுறுத்தின. மொத்தமாக ஒரு சம்பவத்தில் உயிரை விடுவதிலும் சிறிது சிறிதாக
பயத்தில் இரத்தத்தை மட்டும் கொடுக்கப் பல தேசங்கள் வேறுவழி இன்றி ஒத்துப்
போக வேண்டி வந்தது. உதவி செய்வதாக கூறிக்கொண்டு உள்ளே புகுந்து அவர்களின்
இரத்தத்தை அவர்கள் அறியாமலே சாத்தான்கள் உறிஞ்சும் செயலையும் மிகவும்
தந்திரமாகவும், கபடத்தனமாகவும் செய்தன. அதையும் எளிய தேசங்கள் தாங்கிக்
கொள்ள வேண்டியதாகிற்று. இப்படி அட்டைகளாக எங்கு சந்தர்ப்பம் கிடைக்கிறதோ
அங்கு வாழும் மனிதர்களின் இரத்தத்தை அவை எந்த ஈன இரக்கமும் இன்றி உறிஞ்சின.
தங்கள் விருப்பிற்குப் பணியாத அந்த நாட்டு ஆட்சியாளர்களை மனிதம் காப்பதாகக்
கூறி மறைமுகமாகக் கொன்று, தாங்கள் இரத்தம் உறிஞ்சுவதை அனுமதிக்கும் மனிதர்களை
ஆட்சிக்குக் கொண்டு வந்தன.

இதே நேரத்தில் மேலும் சில சாத்தான்களும் பெரும் சாத்தான்களாக உருவெடுத்தன.
அற்றில் ஒன்று தான் அழகாகப் பேசிய இசத்தை தள்ளி வைத்துவிட்டு, எப்படி அழகாக
இரத்தம் குடிப்பது என்பதை ஏழை எளிய நாடுகளின் மேல் பரீட்ச்சாத்தித்துப் பார்த்தது.
பொதுவாக உதவி செய்வதாகக் கூறி அவர்களை மயக்கி, அவர்களின் இரத்தத்தைக் கபடமாக
உறிஞ்சி எடுத்தது. இது பழைய தந்திரம் என்றாலும் புதிய நாடுகள், அதுவும் இசங்கள்
பேசிய நாடுகள் செய்வது மிகவும் புதுமையாகவும், சகிக்க முடியாமலும் இருந்தது.

அதே நேரத்தில் சாத்தான்களுக்கு உலகத்தில் இருந்து மட்டும் இரத்தம் உறிஞ்சுவது
அலுப்படிக்க அவை விண்வெளியிலும் தங்கள் ஆயுதங்களை நிறுவி, அதனால் பல தேசங்களை
அச்சுறுத்தி, மேலும் இரத்தம் குடிக்கலாம் என்கின்ற உண்மையைக் கண்டு, அதைச்
செயற்படுத்தத் தொடங்கின. இப்படியாகச் இரத்தம் குடிப்பதில் சாத்தான்களுக்கு
இடையில் போட்டி தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. புதிய பல சாத்தான்களும்
அதில் சேர்ந்து மகிழ்ந்தன.

இது தொடர்ந்து நடக்கும் போது கொம்பு முளைத்த சாத்தான்களில் ஒன்று திடீரென
பக்கத்து நாட்டின் ஒரு புகுதியை வலோக்காரமாகத் தன்னோடு இணைத்துக் கொண்டது.
சாத்தான்களிடம் இருக்கும் ஆயுதங்களுக்குப் பயந்து ஒரு யுத்தம் மூளாவிட்டாலும் அவை
தங்களுக்குள் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்களை அதனால் கட்டுப்படுத்தத்
தொடங்கின. பெரிய கொம்பு முளைத்த வெள்ளைச் சாத்தான் அதை முதலில்
செயற்படுத்தியது. அது மற்றைய கொம்பு முளைத்த வெள்ளைச் சாத்தான், மற்றும் இசம்
பேசிய ஒரு புதிய சாத்தான், மற்றும் சில குட்டிச் சாத்தான்கள் ஆகியவற்றோடும்,
தனக்குப் பாதகமான வேறு சிலரோடும், தனது கொடுக்கல் வாங்கல்களைக்
கடுமையாக்கியது. அதனால் கொம்புமுளைத்த சாத்தான்கள் தலைமை தாங்க வழமை போல்
இரண்டு அணியாகப் பிரிந்து மற்றைய சாத்தானுடன் எப்படி யுத்தம் செய்வது என்று
பயிற்சி எடுத்தன. அப்படிப் பெரிய பயிற்சியைக் கண்டு பெரிய கொம்பு முளைத்த
வெள்ளைச் சாத்தான் பயத்தில் மருண்டாலும் தங்களிடம் அதைவிடப் பலமும், படையும்
இருக்கிறது என்கின்ற துணிவோடு மேலும் கொடுக்கல் வாங்கலை எப்படி இறுக்குவது
என்பதில் அது அக்கறை காட்டியது.

இந்த உலகில் எது நடக்காது, நடக்கக்கூடாது என்று சாத்தான்கள்கூட நம்பிக்கையோடு
இருந்தனவோ அது ஒரு நாள் நடந்தது. அது எப்படிச் சம்பவித்தது என்று சொல்வதற்கு
இந்தச் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியில் இன்று யாரும் இல்லை. இருந்தும்
தொலைத் தொடர்பில் தொங்கிய தகவலின்படி பெரிய கொம்பு முளைத்த சாத்தானுக்குச்
சாதுவாக விசர் பிடித்ததால் அது அந்தச் சிறிய கட்டுப்பாட்டுப் பெட்டியை எடுத்து ஒரு
நாள் விளையாடியது. அப்போது அதன் விரல் தவறுதலாக அந்த பொத்தானில் அழுத்தியதால்
இந்த உலகத்தின் கதை அத்தோடு முடிந்தது.