சுகுனாவும் சந்திரனும் அன்று கடைக்குச் சந்தோசமாகவே சென்றனர். அப்படியே ஒவ்வொரு முறையும் அவர்கள் செல்வார்கள். திரும்பி வரும்போது அவர்கள் வானிலை மாறிவிடும். அது மனித இயற்கை. எதிர்பார்ப்புடன் புறப்படும் பயணங்கள். எதிர்பார்ப்பு எப்போதும் மனஸ்தாபங்களின் கருவறை. திரும்பி வரும்போது அது குழந்தையாக அவர்கள் கைகளில் தவழும். பின்பு…? அப்படி அதிசயமாக வானிலை மாறாது இருந்தால் அது புறநடையே. அல்லது அது கணக்குப் பார்க்காத விட்டுக்கொடுப்பாய் இருக்கும். கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வெளியேறும் நேரம் சுகுனா அதிஸ்ரலாபச்சீட்டுப் பதிவு செய்து வாங்க வேண்டும் என்று சந்திரனைக் கேட்டாள். சந்திரனுக்கு அதிஸ்ரத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அந்தப் பணத்தைச் சேர்த்தாலே அதிஸ்ரமாக ஒரு தொகை வங்கியில் சேர்ந்துவிடும் என்பது அவன் எண்ணம். ஏற்கனவே அவன் அட்டையிலிருந்து நிறையக் கழிந்து விட்டது. அதனால் அவன் அவளைப் பார்த்து,
‘இப்ப இது தேவையே? இந்தக் கிழமை வேண்டாம். வாற கிழமை பார்ப்பம்.’ என்று நழுவும் வழியைப் பார்த்தான். அவள் விடவில்லை.
‘இந்தக் கிழமை நிறையக் காசு விழும். எடுத்தா நல்லது.’ என்றாள்.
‘அது விழுந்தாத்தானே?’
‘விழும்… எடுப்பம்.’
‘என்னிட்டைக் காசில்லை. உன்னிட்டைக் காசிருந்தா எடு.’
‘நான் காட் கொண்டு வரேல்லை.’
‘ஓ என்னோடை கடைக்கு வரேக்க மட்டும் நீ காட்டைக் கொண்டு வராத.’ என்றான் சந்திரன்  கோபத்தோடு.
‘பெரிய காசு இது. பெரிசாக் கதைக்கிறியள்…’ அவள் கோபமானாள்.
‘கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்தால் இதுவும் பெரிய காசாய் வரும்.’
‘ம்… நீங்க சேர்த்து எடுத்துக் கொண்டு போங்க.’

கூறியபடி சுகுனா அவனை எரிப்பது போல முறைத்துப் பார்த்தாள். அதே நேரம் அவள் கூறியதின் அர்த்தம் அவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணியது. அதன் பின்பு அவனோடு அவள் எதுவும் கதைக்கவில்லை. இது எங்கே போய் முடியும் என்பது பற்றிச் சந்திரனுக்கு நன்கு தெரியும். தெரிந்தாலும் எல்லாவற்றிற்கும் தான் என்ன பணமரமா என்கின்ற எண்ணத்தில் அவன் கொடுக்க மறுத்தான். காசு அட்டையை அவள் வீட்டில் வைத்துவிட்டு வருவது இது முதல் தடவை அல்ல. கொண்டு வந்தால் தனது பணத்தில் செலவாகிவிடும் என்பதில் அவள் குறியாக இருப்பாள். அத்தோடு தன் பணத்தை மட்டும் கரைப்பதில் ஆர்வத்தோடு இருப்பாள் என்கின்ற அவிப்பிராயமும் அவனிடம் உண்டு.

சுகுனா மேல் அளவு கடந்த காதல் சந்திரனுக்கு உண்டு. அவளை எண்ணினால் அவன் கண்களில் நீர் கோத்துக் கொள்ளும். ஏன் என்பது அவனுக்குத் தெரியாது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்பது போல… அப்படி ஒரு உணர்வு. இது ஒரு முகம். இதற்கு எதிராக மறுமுகமும் உண்டு. அது அளவுகடந்த வெறுப்பாக அவள்மேல் படரும். அவளைக் கண்ட நாள் முதல் அவளோடு எக்கணமும் பிரியாது சேர்ந்து வாழவேண்டும் என்பது அவன் பேரவா. அதே போல் அவளை விட்டு விலகி எங்காவது போய்விட வேண்டும் என்பதும் அவன் மனதிற்குள் எழும் அடங்கா அவா. வாழ்க்கை இவ்வளவு சிக்கலாக இருக்கும் என்று அவன் எண்ணியது இல்லை. இன்று அதை எளிமையாக்கும் வழி அவனுக்குத் தெரியவில்லை. அவள் சில வேளைக் காதலால் கசிந்து… கலந்து… அணுவைப் பிரித்தாலும் எம் உறவைப் பிரிக்க முடியாது என்பதாகப் பிணைந்து கிடப்பாள். அப்போது இனி எப்போதும் எம்மிடையே எந்த வேறுபாடும் நிச்சயம் வரவே முடியாது என்று அவன் எண்ணுவான். அந்தப் பிணைப்பு எந்தக் கணத்திலும் தெறிக்கும்… மீண்டும் எரிமலை எப்போது வெடிக்கும்…? என்பது யாருக்கும் தெரியாது. அதன் பின்பு அவள் வெறுமையாகக் கிடக்கும் அறைக்குள் வேகமாகச் சென்று அடைந்து கொள்வாள். அப்போது அவனுக்கும் கோபமாக இருக்கும். இவளிடம் தான் ஏன் கெஞ்ச வேண்டும் என்கின்ற வீராப்போடு தங்கள் அறைக்குள் அல்லது கோலில் இருக்கும் சோபாவில் வந்து இருப்பான். அல்லது படுப்பான். இருந்தாலும் மனம் புயல் கொண்ட கடலாக ஆர்ப்பரிக்கும். இப்படி எவ்வளவு காலம் என்கின்ற எண்ணம் அலையலாகத் தோன்றும். எங்காவது… எல்லாவற்றையும் துறந்து… அமைதி தேடி ஆன்மீகத்தில் தொலைய மனது உந்தும்.
அவள் அறைக்குள் அடைந்து கொண்டால் ஒரு இரவு கடக்க வேண்டும். அது கடந்தால் அவளே அவனைத் தேடி வருவாள். சிரிப்பாள். கொஞ்சுவாள். எதுவும் நடக்காதது போல் கதைப்பாள். சில வேளை மன்னிப்புக் கேட்பாள். எல்லாம் மாறியது… இனிச் சந்தோசமே என்று எண்ணி இறுமாந்து இருப்பான். ஆனால் புயல் மீண்டும் பலமாக வீசும். அந்தப் புயலைக் கண்டு அவன் மனதிலும் பலமான சூறாவளி எழுந்து கூத்தாடும். ஆணும் பெண்ணும் வேறு வேறு உலகங்கள். அவை என்றும் ஒத்துப் போகவே முடியாதவை. அவை இரண்டும் எண்ணுபவை அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். பெண் இதயத்தைப் பயன்படுத்தினால் ஆண் மூளையைப் பயன்படுத்துவான். ஆணிற்கு இடது பக்க மூளை பெண்ணிற்கு வலதுபக்க மூளை. பெண் உணர்ச்சியில் தத்தளித்தால் ஆண் வரவு செலவுக் கணக்குப் பார்ப்பான். இரண்டும் இருவிதமா எதிர்ச் சக்திகள் கொண்ட துருவங்கள். ஆனால் அவை இரண்டும் ஒன்றை ஒன்று கவரும் சக்தி கொண்டவை. அதே வேகத்தில் எதிர்ச் சக்தியை தமக்குள் உருவாக்கும் திறனும் கொண்டவை. அவை சேர்ந்து இருக்கவும் வேண்டும். அவற்றால் சேர்ந்து இருக்கவும் முடியாது. இயற்கை அப்படியே படைத்திருக்கிறது. இயற்கை தனது தேவையைப் பூர்த்தி செய்யத் தனது படைப்புக்களை மயக்குகிறது. அந்த மயக்கம் இருக்கும் வரைக்கும் சமாதானம். அது முடிந்ததும் அங்கே யுத்தம் மூண்டுவிடும். எவ்வளவிற்கும் படித்து இருக்கலாம். எந்த ஞானத்தையும் பெற்று இருக்கலாம். சாந்தத்தைப் போதனையால் மனதில் ஏற்றி இருக்கலாம். இருந்தும் யுத்தம் மூளும். அதன் பின்பு சமாதானம் பிறக்கும். சமாதானத்தை இயற்கை கொண்டுவருவது போல யுத்தத்தையும் அதுவே அவர்களுக்கு உள்ளே பொதிந்து வைத்திருக்கிறது.
கால காலமாய் இதைப் பலரும் அறிந்து இருந்தாலும் இணைப்புக்கள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ நடைபெறுகின்றன. அங்கே யுத்தமும், சமாதானமும் அடிக்கடி வந்து போகின்றன.
பெண்ணும் ஆணும் சேர வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. ஆனால் அவை சேரும். இயற்கை அதன் சூட்சுமத்தை அவர்களில் புதைத்து வைத்திருக்கிறது. உலகத்தில் உள்ள அனேக உயிரினங்கள் இந்த மாய வலைக்குள் அகப்பட்டவையே.
அன்று கடையால் வந்த பின்பு கதவடைப்பால் சமையல் அறை மூடப்பட்டு இருந்தது. சந்திரனுக்கு வேறு வழி இல்லை. இணையத்தில் இரைதேட அவர்கள் வீட்டிற்குக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றார்கள். சாப்பிடச் சுகுனாவையும் கூப்பிட்டான். அவள் வரவில்லை. அதிஸ்ரலாபச் சீட்டை வாங்கிக் கொடுத்து இருக்கலாம் என்று அப்போது அவனுக்குத் தோன்றியது. உச்சியில் ஏறிய பின்பு தோன்றினால் என்ன தோன்றாமல் விட்டால் என்ன என்பதும் அவனுக்கு விளங்கியது. அடுத்த நாள் சுகுனா அவனைத் தேடி வந்தாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
‘என்ன கோபம் மாறீட்டுதா?’
‘வேறை என்ன செய்கிறது. நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத் தண்ணிதான் எண்டு முடிவாப் போச்சுது. இனிக் கேவிச்சு என்ன செய்கிறது?’
‘அப்ப ஏன் கோபிக்கிறாய் நீ.’
‘நீங்கள் செய்கிறதைப் பார்த்தா கோபம் வராமல் என்ன செய்யும்?’
‘பிறகு ஏன் சமாதானம் இப்ப?’
‘மனம் மாறிடுதே… உங்களை விட முடியல்லையே?’
‘மாறத இயற்கை. அதன் தேவை.’
‘என்ன?’
‘ஒண்டும் இல்லை… கிட்ட வா.’ என்றான் அவன்.