1. பிரவேசம்

அந்த மஞ்சள்நிறப் பாரவூர்தி அலுவலகத்திற்கு முன்பு கொழுத்த எருமை போல வந்து நின்றது. அந்தக் கட்டடம் தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற இரண்டுமாடிக் கட்டடம். நீண்ட காலம் எண்ணைத் தேய்த்துக் குளிக்காதவர் தோல் போலப் பரட்டை அடித்து வெடிப்பு விழுந்த சுவர்கள். அது அதன் சொந்தக்காரருக்குக் காசு வந்தால் போதும் கட்டடத்தைக் கவனிப்பான் ஏன் என்பது போன்ற எண்ணம் இருப்பதாய் காட்டியது. அதன் கீழ்த்தளத்தில் நடைமுறை அலுவலகங்களும் மேலே செயலதிபரின் அலுவலகம் ஒன்றும் இருந்தது. அதைவிட வெறுமையாக இருந்த இடங்களில் அங்கங்கே பலர் தங்குவதும் போவதுமாகப் பரபரப்பாய் இருந்தனர். அங்கேதான் இவர்களும் நின்றார்கள். இவர்களை ஏற்கனவே விசாரித்துப் படிவங்கள் நிரப்பி, பின்பு அசையும் சொத்துக்களாய் பாய், பாத்திரம், சீருடை, பாதணிகள் என்பன கணக்குப் பார்த்து வழங்கித் தாயார் நிலையில் வைத்திருந்தார்கள்.
அந்தப் பாரவூர்தியில் இருந்து இறங்கிய இருவர் அவசரமாக அலுவலகத்திற்கு உள்ளே வந்தார்கள். அவர்களில் ஒருவர் கறுப்பாக, உயரமாக இருந்தார். அவருக்கு ஐயனாரைப் போன்ற அருவாள் மீசை. அது முகத்தில் குற்றிட்டு நின்றது. அவருக்கு அது கம்பீரத்தைவிடப் பயத்தை அதிகம் தருவதாய் இருந்தது. கம்பியின் தடிப்பில் முறுக்கு முறுக்காகச் சுருண்ட தலைமுடி. பழுக்கக் காய்ச்சிப் பளபளக்கும் இரும்பாகச் சிவந்த கண்கள். மொத்தத்தில் அவர் மிகுந்த கோபக்காரர் போலத் தோன்றினார். மற்றவர் மிகவும் சாந்தமான முகத்தைக் கொண்டவர். அவர் மாநிறம். அதிராது மிகவும் மென்மையாகப் பேசினார். அந்த இருவரும் உள்ளே சென்று அலுவலகத்தின் முன் உள்ள அறைக்குள் வேகமாகப் புகுந்தார்கள். பின்பு ஏற்கனவே அங்கு இருந்தவர்களோடு ஏதோ கதைத்தார்கள்.

அந்தப் பாரவூர்தியில் ஏற்கனவே நிறையப் பொருட்கள் இருந்தன. அலுவலகத்திலிருந்து மேற்கொண்டு பொருட்கள் அதில் ஏற்றப்பட்டன. மூட்டை மூட்டையாக ஏற்றப்பட அதற்குள் என்ன இருக்கிறது என்பது கண்ணனுக்குத் தெரியாது. அதற்கான அவசியமும் அவனிடம் இல்லை என்பது கண்ணனுக்கு விளங்கியது.
அலுவலகத்திற்குள் இருந்தவர்கள் ஒரு பட்டியலை வந்தவர்களிடம் கொடுத்தார்கள். அந்த நபர்கள் அதைக் கவனமாக வாசித்தார்கள். பின்பு எண்ணிப் பார்த்துவிட்டு வெளியே வந்தார்கள்.

காலைச் சாப்பாடாக வழங்கப்பட்ட இட்லியை ஆர்வத்தோடு இவர்கள் உண்ணும் போது,
‘B காம் போகிறவை கெதியா வந்து லொறியில ஏறுங்கோ.’ என்கின்ற சத்தம் ஒலிபெருக்கியில் கத்துவது போலக் கேட்டது. சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் முதலில் அதிர்ந்து போய்விட்டார்கள். அதற்கு மேல் அவர்களால் அதைச் சுவைத்துச் சாப்பிட நேரமும் விருப்பமும் இருக்கவில்லை. அவதி அவதியாக அள்ளி அதக்கிவிட்டு கையைக் கழுவிக் கொண்டு பாரவூர்திக்குப் பின்னே தமது சொத்துக்கள் உடன் வந்து நின்றார்கள். அவர்களைப் பார்த்து அந்தச் சுருள் முடி மனிதர் பட்டியலிட்டுக் கொடுக்கப்பட்ட பெயரையும் அவர்களுக்கு அதில் கொடுக்கப்பட்டு இருந்த எண்ணையும் வாசிக்கத் தொடங்கினார். அதில் தானும் ஒரு சிப்பாய் என்று காட்டும் அவஸ்தை இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்துச் சிலர் மனதிற்குள் சிரித்துக் கொண்டனர். அந்த விபரங்கள் ஏற்கனவே பதியப்பட்டு அதைப் பற்றி விரிவாக அலுவலகத்தில் கூறியிருந்தார்கள். இயக்கத்தில் சொந்தப் பெயர்கள் பாவிப்பதில்லை என்றும் அதற்குப் பதிலாக ஒரு புனை பெயரைக் கட்டாயம் பாவிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி அதை மாற்றிப் பாவிக்கத் தொடங்கி இருந்தாலும் இந்த எண் புதிதாக இருந்தது. கண்ணனுக்கு இராணுவத்தில் அல்லது சிறையில் பெயருக்குப் பதிலாக அதைப் பாவிப்பார்கள் என்று தெரியும். அப்படியே இங்கும் பாவிக்கிறார்கள் என்பது விளங்கியது. அப்படி என்றால் இதுவும் ஒரு முழுமையான இராணுவம் போன்றதே என்கின்ற எண்ணம் கண்ணன் மனதில் உருவானது. வண்டிக்குள் நிறையப் பொருட்கள் இருந்தன. அதற்கு மேல் ஏறி இருந்துதான் பயணம் செய்ய வேண்டும் என்பதும் விளங்கியது.

அந்தச் சுருள் முடிக்காரர் எண்ணையும், பெயரையும் ஒலிபெருக்கியின் குரலில் வாசித்ததன்படி எல்லோரும் எழுந்து ஆர்வத்தோடு வந்து ஏறுவதற்குத் தயாரானார்கள். இவர்கள் ஆர்வத்தைப் பார்த்த அந்தச் சுருள் முடிக்காரர் இவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்தார். அவர் முகத்தில் மலர்ந்த புன்முறுவல் எல்லோருக்கும் அதிசயத்தைத் தந்தது. அவர் அப்படிச் செய்ததின் அர்த்தம் என்ன என்று கண்ணனுக்கு விளங்கவில்லை. கல்லுக்குள் நிறைந்து மறைந்து இருந்த ஈரமா என்றும் அது விளங்கவில்லை. என்றாலும் அதை யாரிடமும் இப்போது கேட்க முடியாது என்பது திண்ணமாக விளங்கியதால் பேசாது ஏறும் இளைஞர்களோடு சேர்ந்து தானும் பாரவூர்தியில் ஏறத் தயாரானான். அப்போது பின்னே நின்ற சுமன்,
‘என்ன கண்ணன் யோசிக்கிறா? பயப்பிடுகிறாய் போல…?’ என்று கேட்டான்.
‘அங்… நான் ஏன் பயப்பிட வேணும்? உண்மையில பரபரப்பாய் இருக்குது. அவ்வளவுதான். பயப்பிட வேணடிய எந்த அவசியமும் இல்லை. முகாமைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்குது.’
‘சரி சரி… அது எண்டா உண்மைதான். எண்டாலும் சில வேளை வீட்டில இருந்தளவுக்குச் சொகுசா இங்க இருக்க முடியாமல் இருக்கும். அதை நாங்கள் சமாளிக்கத்தான் வேணும். எனக்கு அது பெரிய பிரச்சனையா இருக்காது எண்டு நினைக்கிறன். ஊரில ஆமிக்குப் பயந்து, பயந்து மரவள்ளித் தோட்டத்துக்கையும் பாவைப் பந்தலுக்குள்ளையும் உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு கிடக்க வேண்டிய அவசியம் இங்க இல்லைத்தானே? இதுவே பெரிய சுதந்திரம் கிடைச்ச மாதிரி. பயமற்ற ஒரு சூழல். இவ்வளவும் இருக்கிறதால நாங்கள் இங்க எதுக்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.’
‘உள்ளுக்காப் போங்கோ… உள்ளுக்காப் போங்கோ…’ என்று மீசைக்காரர் ஒலிபெருக்கியின் குரலில் திடீரெனக் கத்தினார். அதை அடுத்துப் பலரும் நினைவு வந்தவர்களாக முன்னே நகர்ந்தனர். கண்ணனும், சுமனும் தங்களது கதைக்கு ஒரு இடைவெளி விட்டு இடைவெளி உள்ள இடமாகப் பார்த்து முன்னோக்கிச் சென்றார்கள்.
பாரவூர்தி மெதுவாக அந்தச் சந்தைவிட்டுப் பிரிய முடியாது பிரியாவிடை கொடுத்தது. பின்பு மெதுவாக அது முன்னோக்கி நகரத் தொடங்கியது. அலுவலகம் இருந்த இடம் செழிப்பான இடம் போலக் கண்ணனுக்குத் தோன்றியது. அதை அங்கிருந்த வீடுகளிலும் அதைச்சுற்றிய அமைப்புக்களிலும் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது. அது செழுமையான மரங்களும், கொடிகளும் நிறைந்த பகுதியாகப் பூத்துக் குலுங்குவதையும் அவனால் கவனிக்க முடிந்தது. வாகனம் ஒருவாறு நகர்ந்து பிரதான பாதையை அடைந்தது. அந்த நகரம் யாழ்ப்பாணத்தைவிட மிகச் சிறிய நகரமாகவே கண்ணனுக்குத் தோன்றியது. சில கடைகள். சில கட்டடங்கள். வருங்காலத்தில் இதன் தோற்றம் மாறலாம் எனக் கண்ணன் எண்ணினான். வாகனத்தில் இருந்தவர்கள் எல்லோரும் பேச்சு இழந்து நகரைப் புதினம் பார்ப்பதில் ஆர்வம் காட்டினர். அந்த அமைதி கண்ணனுக்கும் தேவைப்பட்டது. அந்த நகரத்தை இரசிக்கத் தொடங்கினான். ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே கட்டங்கள் கழிந்து வயல்வெளி வரத் தொடங்கியது. சிறிது நேரம் சாலைவழியாகச் சென்ற வாகனத்திலிருந்து அனைவரும் இடங்களைப் பராக்கு பார்த்துக் கொண்டு வந்தார்கள். பிரதான பாதையால் சென்ற வாகனம் திடீரென ஒரு சவுக்கம் தோப்புக்களை ஊடறுத்துச் செல்லும் பதை வழியே இறங்கியது.

சவுக்கம் தோப்புக்கள் இவ்வளவு விஸ்தீரணமாய் இருக்கும் என்று கண்ணனோ, சுமனோ எதிர்பார்க்கவில்லை. இங்கு இருக்கும் சவுக்கு மரத்தின் தேவை அவர்களை மலைக்க வைத்தது. அந்த மலைப்போடு வாகனத்திலேயே அந்தத் தோற்றத்தைக் கடந்து செல்லப் பல நிமிடங்கள் பிடித்தன. அதன் பாதைகள் சுற்றிச் சுற்றித் திரும்பிப் போகும் வழியை ஞாபகம் வைத்திருக்க முடியாதவாறு தலை சுற்றப் பண்ணியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் சவுக்கம் தோப்புகள் கடல் போல எல்லை அற்று தெரிவதை வாகனத்திலிருந்து பார்க்கப் பார்க்க மலைப்பு மாறாது தொடர்ந்தது. இந்தப் பச்சைக் கடலுக்குள் எங்கே முகாம் இருக்கிறது என்று பலரும் ஆர்வத்தோடு தேடினார்கள். முதலில் அவர்கள் கண்ணிற்கு அது புலப்படா விட்டாலும் சிறிது நேரத்தில் உயரப் பறந்த கழகத்தின் கொடி அதைக் காட்டிக் கொடுக்கப் பலரும் ஆர்வமாக அங்கே பார்த்தார்கள். வேகமாகச் சென்ற வாகனம் மெதுவாகத் தனது வேகத்தைக் குறைத்தது. அப்போது கண்ணனால் அங்கே ஒரு தடை இருப்பதைக் கவனிக்க முடிந்தது. அது காவல் அரண் போல் இருந்தது. அத்தோடு சிறிய கோபுரம் ஒன்றும் அதற்கு அருகாக அமைத்து வைத்து இருந்தனர். அதில் ஏறி நின்று பார்த்தால் அதிக தூரத்திற்குப் பார்க்க முடியும். அதனால் யாராவது ஊடுருவுவதை விரைவாகக் கண்டு பிடித்துவிட முடியும். அவற்றைப் பார்க்கும் போது இலங்கையில் இராணுவம் அமைத்திருக்கும் தடைகள் போலவே அது தோன்றியது. அந்தக் காட்சி இவர்களும் ஒரு இராணுவம் என்பதைக் கண்ணனுக்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது.
அந்தப் பாரவூர்தி மெதுவாகச் செல்ல இருவர் திடீரென அதன் முன்பு வந்து நின்று நிறுத்துமாறு கட்டளை இட்டார்கள். இராணுவமும் இப்படித்தான் பற்றைக்குள் இருந்து புயல் வேகத்தில் பாய்ந்து வரும். ஆனால் அவர்கள் கைகளில் சுடு திறன் கொண்ட ஆயுதம் இருக்கும். இவர்கள் கையில் ஆயுதத்திற்குப் பதிலாகச் சவுக்கம் கட்டைகள் இருந்தன. சவுக்கம் கட்டைகளாக இருந்தாலும் அதை ஆயுதமாக நினைத்து வாகனம் நின்றது. உடனே அவர்கள் வந்து அதைப் பரிசோதித்தனர். பின்பு வாகனத்தின் முன்னாசனத்தில் இருந்தவர்களோடு கதைத்தனர். அவர்கள் விசாரணை முடிந்ததும் வண்டியை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

அதன் பின்பு வேகமாகச் சென்ற வாகனம் முகாமில் பரந்த வெளி போன்ற இடத்தில் போய் கடிவாளம் இழுக்கப்பட்ட குதிரை போல் நின்றது. முகாம் எதிர்பார்த்ததைவிட விஸ்தீரணமாகவே இருப்பதாய் கண்ணனுக்குத் தோன்றியது. முகாமின் மத்தியில் சதுரமாகச் சிறிய வேலியால் அடைக்கப்பட்டு அதன் நடுவே நட்சத்திர மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதன் மத்தியில் கொடிக்கம்பம் நடுநாயகமாக நாட்டப்பட்டு இருந்தது. அதிலே கழகத்தின் கொடி கம்பீரமாகப் பறந்தது. கொடிக்கம்பத்தின் அடியில் நட்சத்திரத்தில் சம்மட்டியால் உலகத்தைப் பிணைத்து இருக்கும் சங்கிலியை அடித்து நொறுக்குவதான கல் வேலைப்பாட்டால் அழகுபடுத்தப்பட்டு இருந்தது. அந்த நடு முற்றத்தைத் தொடர்ந்து மணல்பாங்கான தரை பரந்து இருந்தது. அது மிகவும் தூய்மையாக இருந்ததைக் கண்ணன் அவதானித்தான். முகாமின் மேற்குப் பக்கத்தில் தோழர்கள் தங்கும் பெருங்குடில்கள் நிரைக்கு இருந்தன. அதன் கடைசிக் குடிலாக மருத்துவக் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அவை சவுக்கம் தடிகளால் கட்டப்பட்டு கிடுகால் வேயப்பட்டு இருந்தன. அந்தக் கொட்டில்களை அடுத்து விசித்திரமான மண்வீடுகள் இருந்தன. அவை மிகவும் சிறியவை ஆகவும், மிகவும் தடித்த சுவர்களைக் கொண்டவை ஆகவும் இருந்தன. அது ஏன் அப்படி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது கண்ணனுக்குச் சற்றும் விளங்கவில்லை. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தது. அந்த மண்குடில்கள் முகாமின் வடக்குப் பக்கமாக இருந்தன. இந்தக் குடில்களுக்குப் பின்னே சவுக்கம் தோப்புக்கள் தொடர்ந்தன. முகாமின் வடகிழக்கு மூலையில் சமையல் செய்யும் கொட்டிலும், காவல் குடில் ஒன்றும், வெளியே போகும் பாதையும் இருந்தது. முகாமின் கிழக்குப் பக்கம் சவுக்கம் தோப்புத் தொடர்ந்தது. முகாமின் தெற்குப் பக்கத்தில் விசேசமான குடில் ஒன்று இருந்தது. அது சிறிய குடில். அதற்கு நான்கு சுவர்கள் இருந்ததோடு விசித்திரமான மண்குடில் போலக் கதவும் இருந்தது. மற்றைய குடில்கள் கதவுகள், சுவர்கள் அற்றுக் காற்றோட்டமா இருந்தன. தம்மிடம் இரகசியம் இல்லை என்பதாய் அவை கதை பேசின.
‘என்ன கண்ணன் யோசிச்சுக் கொண்டு நிக்கிறாய்.’ என்றான் சுமன்.
‘இல்லை காம்பைப் பார்த்தா பெரிசா இருக்குது… அதுதான்…’
‘கலவரத்துக்குப் பிறகு இப்ப இயக்கத்துக்கு நிறையச் சனம் வருகுதாம். அதால முகாங்கள் இப்பிடித்தானே இருக்கும். இதைவிட வேறை முகாங்கள் வேறை வேறை இடங்களில இருக்குது எண்டு ஒபிசில கதைச்சாங்கள். இந்த முகாங்களில ஒண்டு தேனீ எண்ட இடத்தில இருக்குதாம். அதுதானாம் எல்லா முகாங்களிலும் நல்ல முகாமாம். அங்க போனாப் பெரிய அதிஸ்ரம் எண்டு கதைச்சாங்கள். அனேகமா எல்லாருக்கும் தொடக்கம் இங்கதானாம். பிறகுதானாம் வேறை வேறை முகாங்களுக்கு அனுப்புவாங்களாம்.’
‘இவ்வளவு விசயம் நீ தெரிஞ்சு வைச்சிருக்கிறாய்.’
‘அப்ப நீ என்ன செய்தாய்?’
‘நான் அங்க இருந்த ஒரு புத்தகத்தை வாசிச்சுக் கொண்டு இருந்ததில நேரம் போயிட்டுது. உன்னோடைதான் இடைக்கிடை கதைச்சன்.’
‘ஓ அதை நானும் பார்த்தன்.’
‘பயிற்சி மட்டும் இல்லை. நிறைய அரசியலைப் பற்றியும் தெரிஞ்சு கொள்ள வேணும். அப்பதான் சனத்திற்கும் உண்மையான போராட்டத்தைப் பற்றி விளங்கப்படுத்திப் போராட்டத்தில பங்குகொள்ள வைக்கலாம். அப்பிடித்தான் உண்மையான மக்கள் போராட்டத்தை உருவாக்க முடியும். அதுதான் இலங்கைக்குச் சரியான போராட்டம் எண்டு தலைவர் தன்னுடைய பேச்சுக்களில, கட்டுரைகளில விபரிச்சு இருக்கிறார். எனக்கும் அவர் சொல்லுகிறதுதான் சரி எண்டு படுகுது.’
‘எனக்கு இது பெரிசா சரிவருமா எண்டு தெரிய இல்லை. மற்றவை இராணுவத் தாக்குதல் செய்யேக்க நாங்கள் அரசியல் கதைக்கிறதால சனத்திற்கு எங்களில எவ்வளவு பிடிப்பு வரும் எண்டு ஒரு கேள்வி இருக்குது. சினிமாப் பார்த்துப் பழகிப்போன சனத்திற்குக் கொஞ்சம் வீரசாகசங்கள் தேவைப்படுகுது. எல்லாம் சுடச்சுட உடனடியாக நடக்க வேணும் எண்டு சனங்கள் எதிர்பார்க்குங்கள். அதை நிறைவேற்றாட்டி அதை நிறைவேற்றுறவைக்குத் தங்களின்ரை சப்போட்டைக் குடுக்கப் போகுதுகள். சனத்தின்ரை சப்போட் யாருக்கு இருக்குதோ அவையாலதான் நிண்டுபிடிச்சுப் போரட முடியும்.’
‘நீ சொல்லுகிறது சனத்தின்ரை உண்மையான பங்களிப்பு இல்லை. அது வெறும் ஆரவாரம் மட்டும்தான். வெறும் ஆரவாரம் நல்ல போராட்டத்திற்கான வழியாய் இருக்காது. போராட்டத்திற்கு மக்களின் பங்களிப்பு மிக முக்கிமானது எண்டுகிறது என்னுடைய அவிப்பிராயம்.’
‘நீ சொல்லுகிறதிலும் விசயம் இருக்குது. ஆனா தத்துவம் பேசிப் பேசி யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல் விட்டிடக்கூடாது எண்டதையும் ஞாபகம் வைச்சிருக்க வேணும்.’

அவர்களின் கதை தொடர முடியாதவாறு வாகனத்தின் முன்னிருக்கையில் இருந்து இறங்கி வந்த சுருள் முடிக்காரர் அனைவரையும் பார்த்து,
‘கெதியா இறங்குங்க. இறங்கி லையினா நில்லுங்க. பொறுப்பாளர் வந்து நீங்கள் என்ன செய்ய வேணும் எண்டு சொல்லுவார்.’
அதையடுத்து எல்லோரும் பரபரப்பாய் இறங்கி நிரையாக நின்றார்கள். சிறிது நேரம் எல்லோரும் அப்படியே நிரையாகக் காத்துக் கொண்டு நிற்க வேண்டியது ஆகிவிட்டது. பலருக்கும் அது சலிப்பைத் தந்தது. ஆனால் வேறு எதுவும் செய்ய முடியாது என்பதால் தொடர்ந்தும் அமைதி காத்தார்கள். பாரவூர்தியும் அதனோடு வந்த இருவரும் இவர்களை விட்டு விலகி வடக்குப் பக்கமாக இருந்த களஞ்சியக் குடிலை நோக்கி நகர்ந்தனர். அதற்குள்ளேயே பொறுப்பாளரின் அலுவலகமும் இருந்தது. பொறுப்பாளர் சிறிது நேரம் வந்த அந்த இருவரோடும் கதைத்தார். அவர்கள் கொடுத்த பட்டியலையும் வாங்கிப் பார்த்தார். அதைக் கண்ணனால் கவனிக்க முடிந்தது. சிறிது நேரத்தின் பின்பு கழகச் சீருடையோடு முகம் பொறுப்பாளர் இவர்களை நோக்கி வந்தார். அவரோடு மேலும் ஒருவரும் வந்தார்.
முகாம் பொறுப்பாளரைப் பார்க்கச் சுமனுக்குச் சற்றுப் பயமாக இருந்தது. அவர் கிட்டத்தட்ட ஆறடி உயரம் இருப்பார். கண்கள் ஏனோ உலையால் வந்த இரும்பாகச் சிவந்திருந்தன. முகத்தில் ஒருவித விறைப்பு அப்பி இருந்தது. அந்தச் சிவப்பான கண்களின் ஒளி நெஞ்சைப் பிளப்பதான கூர்மையோடு பாய்ந்தது. அவர் கழகத்தின் சீருடையோடு தொப்பியும் அணிந்து இருந்தார். எல்லோரையும் மீண்டும் மீண்டும் துளைப்பது போலப் பார்த்தார். அது பலருக்கும் ஒருவித நடுக்கத்தைக் கொடுத்தது.
வந்தவர்கள் கட்டளையிட நின்றவர்கள் மேலும் விறைப்பாக நின்றார்கள். பின்பு அதைத் தளர்த்திய முகாம் பொறுப்பாளர் தனது பெயரைக் கூறிவிட்டு ஒவ்வொருவருடைய பெயரையும் கேட்டு அறிந்தார். அப்போது அவர் கைகளைக் குலுக்கி கண்களை மிகவும் கூர்மையாகப் பார்த்தார். அவரின் பார்வை பலரைச் சங்கடப்படுத்தியது. பின்பு முகாம் பொறுப்பாளர் இவர்களை விட்டுப் புறப்பட்டார். போகும் போது,
‘இவர்தான் உங்களுடைய முதன்மைப் பயிற்சி ஆசிரியர். இவர் பெயர் பாண்டியன். உங்களுக்கு இவர் முகாமைச் சுற்றிக் காட்டுகிறதோடு முகாமின்ரை நடைமுறையைப் பற்றி விபரமாய் சொல்லுவார். ஒண்டை மாத்திரம் நீங்கள் நல்லாய் ஞாபகம் வைச்சிருக்க வேணும். இயக்கத்தில பயிற்சிகள் கடுமையாக இருக்கலாம். இங்க நிச்சயம் சொகுசாய் வாழ முடியாமல் இருக்கும். என்ன கஸ்ரமாய் இருந்தாலும் எப்பவும் நீங்கள் இயக்கத்திற்கும், விடுதலைக்கும் விசுவாசமாய் இருக்க வேணும். அதில யாராவது தப்புப் பண்ணினால் அதை நான் ஒருநாளும் மன்னிக்கமாட்டன். அதைக் கழகமும் ஒருநாளும் மன்னிக்க மாட்டுது. நாட்டு விடுதலை எண்டு வரேக்கையே எல்லாத்தையும் துறந்து, உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராகத்தான் வந்து இருக்கிறம். அதில எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கக் கூடாது. அதையும் மீறி அப்பிடிச் செய்தா அப்பிடியானவைக்கு நான் எந்த ஈன இரக்கமும் காட்டமாட்டன். எல்லாருக்கும் இது நல்லா விளங்குதா?’
‘ஓம்… ஓம்…’
என்று பலரிடம் இருந்து ஒத்த குரல் வந்தது. கண்ணனிடம் இருந்தும் அந்தக் குரல் பலமாக வந்தது. அவர் எல்லோரையும் பார்த்துத் திருப்தியாகப் புன்னகைத்தார். பின்பு பயிற்றுனரைப் பார்த்து,
‘பாண்டியன் நீங்கள் இனி எல்லாத்தையும் விபரமாய் சொல்லுங்க. அதோடை எங்க போய் குளிக்கிறது, எங்க வெளிக்குப் போகிறது எண்டு எல்லாத்தையும் விபரமாய் சொல்லுங்க.’
‘நான் விபரமாய் சொல்லுகிறன். நீங்க போங்க.’ என்றார் பாண்டியன்.
அவர் புறப்பட்டுச் சென்றார். பாண்டியன் பயிற்சியாளர்களைப் பார்த்து,
‘சரி. எல்லாரும் என்னோடை வாருங்க. முதல்ல முகாமைச் சுத்திப் பார்க்கலாம். அதோடை நீங்கள் தங்க வேண்டிய இடத்தில உங்கடை உடைமைகளை வைச்சிட்டு தொடர்ந்து முழுமையாக முகாமைச் சுற்றிப் பாக்கிறதோடை இங்க எப்பிடி எல்லாம் நீங்கள் இருக்க வேணும் எண்டதை எல்லாம் விபரமாய் சொல்லுகிறன்.’
அவர் கூறிவிட்டு முன்னே நடக்க அவர் பின்னே பயிற்சியாளார்கள் தொடர்ந்தார்கள். கண்ணனும் அவர்களோடு நடக்கத் தொடங்கினான். அப்போது நினைவு வந்தவனாய் சுமனைப் பார்த்தான். அவனும் அவர்களோடு சேர்ந்து வந்தாலும் ஏதோ களையிழந்து உற்சாகம் குறைந்தவன் போல அவன் தோற்றம் இருந்தது. வெக்கையாலும் தாகத்தாலும் அவன் அப்படி இருக்கலாம் என்று எண்ணியவன்,
‘என்ன சுமன் எல்லாம் ஓகேயா?’
‘ஏதோ நிறையச் சொல்லுகினம். அதுதான் யோசினை.’
‘முகாம் எண்டா அப்பிடித்தானே இருக்கும். விடுதலைக்கு எண்டு வந்தா அதிகமான எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. அதிகமான எதிர்பார்ப்பு இருந்தா விடுதலைக்கான அக்கறையும், அர்ப்பணிப்பும் இல்லாமல் போயிடும். அதால எதுக்கும் நாங்கள் எங்களைத் தாயார் செய்து கொள்ள வேணும். அதுதான் புத்திசாலித்தனம்.’
‘ம்… விட்டா நீயே இப்ப பிரச்சாரம் செய்வாய் போல இருக்குது. நீ நல்ல தெளிவோடைதான் இருக்கிறாய்.’
‘நான் மட்டும் இல்லை. எல்லாரும் அப்படித்தான் இருக்க வேணும். விடுதலை எண்டு வெளிக்கிட்ட பிறகு இனி அதில எந்தத் தடுமாற்றமோ, தயக்கமோ இருக்கக் கூடாது.’

தொடரும்…