2. அறிமுகம்

‘என்னுடைய பெயர் பாண்டியன். நான் தான் உங்களுக்குப் பயிற்சியளிக்கப் போகிறவர். எனக்குத் தோழர்களோடை கடுமையா நடந்து கொள்ளுகிறதில எந்தவித உடன்பாடும் கிடையாது. தோழர்கள் தாங்களாக விரும்பி நாட்டின்ரை விடுதலைக்காக வந்து இருக்கிறார்கள் எண்டதை முழுமையா நம்புகிறன். அப்பிடி வந்தவர்களுக்கு இங்க கொடுக்கிற பயிற்சி ஒரு பொருட்டாக இருக்க மாட்டுது எண்டது என்னுடைய அவிப்பிராயம். அனேகமாக என்னை ஒருவரும் கோபம் கொள்ளவோ, கடுமையா நடந்து கொள்ளவோ வைக்கிறது இல்லை. நீங்களும் நிச்சயம் அதைக் கடைப்பிடிபீங்கள் எண்டு நினைக்கிறன். நான் சொல்லுகிறது விளங்குதா?’
‘விளங்குது மாஸ்ரர்… நால்லாய் விளங்குது.’ என்று பலரது குரல் ஓங்கி ஒலித்தது. கண்ணனும் தனது சம்மதக் குரலைப் பலமாகக் கொடுத்தான்.
‘நல்லது. அப்ப எல்லாரும் எனக்குப் பின்னால வாங்க.’
என்று கூறிய பயிற்சி ஆசிரியர் மேற்கொண்டு நடக்கத் தொடங்கினார். அவர் முதலில் வடகிழக்கு மூலையிலிருந்த சமையல் அறைக்குக் கூட்டிச் சென்றார்.  அங்கே சமையல் நடந்து கொண்டு இருந்தது. ஏதோ இறைச்சியைச் சிலர் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு அடுப்பில் சோறு பெரியதொரு கிடாரத்தில் அவிந்து கொண்டு இருந்தது. இன்னும் ஒரு கிடாரத்தில் பருப்பு சமைப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டு இருந்தார்கள். பயிற்சி ஆசிரியர் சமையல் கொட்டகையைச் சுற்றிக் காட்டிவிட்டு,
‘உங்களுக்கும் சுழற்சி முறையில் சமையல் வேலை வரும். அப்போது இயன்ற அளவு அக்கறையாக, சுவையாகச் சமைக்க வேண்டும்.’  என்றார். அப்போது சுமன்,
‘என்ன இறைச்சி சமைக்க வரும். ஆட்டு இறைச்சியா?’ என்று கேட்டான். அதைக் கேட்டுப் பயிற்சி ஆசிரியர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது சிரித்துவிட்டார். பின்பு அதனை அவசரமாக அடக்கிக் கொண்டு முகபாவனையைச் சற்றுக் கடுமையாக்கிய வண்ணம்,
‘என்ன இறைச்சியாய் இருந்தால் என்ன? உங்களுக்குத் தருகிறதைச் சமைக்க வேண்டியதுதான். அதிலை எல்லாம் எந்தக் கேள்விக்கும் இடம் இல்லை. எதிலும் தேவை இல்லாத விவாதங்கள் செய்யக் கூடாது. இது இராணுவம் எண்டது நினைவு இருக்க வேணும். சாப்பாட்டு நேரங்களைத் தவிரக் காலைத் தேநீர் வெல்லத்தோடு தருவார்கள். அதை வாங்கிக் குடித்துவிட்டு வெளிக்குப் போய் வரவேண்டும். வெளிக்குப் போவது, குளிக்கப் போவது எங்கே என்பதை நான் உங்களுக்குக் கடைசியாகக் காட்டுகிறேன். இப்போது நாங்கள் தொடர்ந்து முகமைச் சுற்றிப் பார்ப்பம். உங்கள் பொருட்களையும் கெதியாக உங்களது இடத்தில் வைக்க வேண்டும். சரி என்னைத் தொடர்ந்து வாருங்கள்.’
என்று கூறிய பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து நடந்தார். அவர் நடந்து களஞ்சியமும் அலுவலகமுமாய் இருந்த கொட்டிலுக்கு முன்பு போய் நின்றார். பின்பு தோழர்களைப் பார்த்து,
‘இங்கு நீங்கள் அதிகம் வரவேண்டிய அவசியம் இருக்காது. ஒன்று சமைக்கும் போது அல்ல முகாம் பொறுப்பாளரோடு எதாவது கதைக்க வேண்டும் என்றால் மட்டும் நீங்கள் இங்கே வரவேண்டும். அதற்கான தேவைகள் அடிக்கடி வராது எண்டு நினைக்கிறன்’  என்றார் அவர்.
‘சரி உங்களுக்கு சிக் முகாமைக் காட்டுகிறன். ஏதாவது பிரச்சினை எண்டா டொக்ரர் ரவியைப் பார்க்கலாம். அவர் உங்களுக்கு மருந்து தருவார். கடுமையான பிரச்சனை எண்டா தஞ்சாவூர் மெடிக்கல் காலோச்சிற்கு அனுப்பி வைப்பார்.’
‘உங்களை ஒண்டு கேட்கலாமா.’ என்றான்  திடீரெனச் சுமன்.
‘பிரச்சினை இல்லை. தேவையானதைக் கேட்கலாம். நான் மற்றவைய மாதிரி கடுமையாக இருக்கிறதாலா தைரியமான தோழர்களை உருவாக்கலாம் எண்டு நினைக்க இல்லை. அன்பாக நம்பிக்கை ஊட்டுவதாலா வீரமான, நம்பிக்கையான தோழர்களை உருவாக்கலாம் எண்டு நம்புபவன்.’
‘நன்றி தோழர்.’
‘சரி நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்க.’
‘இல்லை சிக் காம்பிற்கு முதல்ல இருக்கிற அந்த குட்டிக் குட்டி மண்வீடுகள் பற்றி ஒண்டும் சொல்ல இல்லையே?’
‘தேவை எண்டா நான் சொல்லி இருப்பன்தானே? தேவையில்லாத எந்த விசயத்திலையும் நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தலையிடக் கூடாது. அதை முதல்ல எல்லாத் தோழர்களும் நல்லா மனதில பதிய வைக்க வேணும். தேவையில்லாத ஆராய்ச்சி, அமைப்புக்கு ஒத்துவராது எண்டு விளங்கிக் கொள்ள வேணும். தேவையில்லாத விவாதங்கள், போராட்டத்திற்கு அல்லது கழகத்திற்கு எதிரான கருத்துக்கள் உங்களைத் தேவையில்லாத சிக்கலில மாட்டிவிடும். அதால நீங்கள் வந்தது எதுக்கோ அதை மாத்திரம் மனதில வைச்சுக் கொண்டு எப்பிடிப் பயிற்சியைக் கடுமையாகச் செய்து திறமையான தோழராய் வருகிறது எண்டு யோசிக்க வேணும். முக்கியமா இது எல்லாருக்கும் தெளிவா விளங்க வேணும். இந்த மண்குடிசை பற்றிச் சுமன் நீ அறிஞ்சு கொள்ள வேண்டியது எதுவும் இல்லை. இனிமேலைக்கு இதைப் பற்றி நீ தேவை இல்லாத ஆராய்ச்சியில ஈடுபடக்கூடாது. யாரிடமும் கேள்வி கேட்கக் கூடாது. சரியா? இதை எல்லாரும் நல்லாய் ஞாபகம் வைச்சிருக்க வேணும்.’
‘சரி தோழர். நான் தெரியாமல் கேட்டிட்டன்.’
‘இந்த முறை பருவாய் இல்லை. ஆனால் இப்பிடியான கேள்விகள் இதுவே முதலும் கடைசியுமாய் இருக்கட்டும்.’
‘சரி தோழர்.’
‘வாயைச் சும்மா வைச்சுக் கொண்டு இரு சுமன்.’ என்றான் கண்ணன் கடுமையான தொனியில்.
‘சரி விடு. இனிக் கவனமா இருக்கிறன்.’
‘அதுதான் எல்லாருக்கும் நல்லது.’
‘ம்….’
‘சரி… எல்லாரும் வாங்க. சிக் காம்பைக் காட்டுகிறன்.’
என்று கூறிய பாண்டியன் மற்றவர்களின் பதிலை எதிர்பாராது முன்னே நடந்தார். அதைப் பார்த்த தோழர்களும் புகையிரதப் பெட்டிகளைப் போல அவர் பின்னால் தொடர்ந்தார்கள். மருத்துவ முகாமிற்குப் போன போது மருத்துவர் என்று கூறப்படும் தாதிப் படிப்பையே முடிக்காத கௌரவ மருத்துவர் ரவி இவர்களைப் பார்த்துச் சிரித்த வண்ணம் நின்றார். இவரின் அதிகபட்ச சிகிச்சை பி12 ஊசி ஏற்றுதல். அதைவிட மாத்திரைகள், கலவைகள் அவர் கைவந்த கலை. இவரால் எத்தினை பேர் குணமடைந்தார்கள். எத்தினை பேர் மேலும் வருத்தக்காரர் ஆகினர் என்பது யாருக்கும் தெரியாது.
‘என்ன தோழர்… எப்பிடி வருத்தக் காரர் எல்லாம் இருக்கினம்? யோன்டிஸ்சும் , அம்மை வருத்தமும் பிரச்சனை போல இருக்குது?’
‘ஓமுங்கோ… அது இரண்டும்தான் பெரிய பிரச்சனையா இருக்குது. அதுவும் யோன்டிஸ் பெரிய பிரச்சனை. அதுக்காகச் சிலரைத் தஞ்சாவூருக்கு அனுப்ப வேண்டி இருக்குது. வெக்கையும் இங்க குறைகிற மாதிரி இல்லை. அதால எல்லாரும் குளித்து முழுகி உடம்பைக் குளிர்மையா வைச்சிருக்க வேணும்.’
‘இந்தச் சவுக்கங் காட்டுக்க எப்பிடி வெக்கை குறையும்? சமாளிக்க வேண்டியதுதான். அடிக்கடி குளிச்சு முழுகி கொஞ்சம் உடம்பைக் குளிர்மையா வைச்சிருக்கிறது புத்திசாலித்தனம். அதுக்குத்தானே ஆறு, வாய்க்கால் எண்டு இருக்குது. அதை ஒழுங்காப் பயன்படுத்துகிறது நல்லது.’
‘கூடியமட்டும் வருத்தங்கள் வராமல் சுத்தமாய் இருக்க வேணும். வாய்க்கால்ல குளிக்கிறது அதுக்கு உதவாது. ஆனா அதைவிட்டா இங்க வேற வழியும் இல்லை.’
‘ம்… நீங்கள் சொல்லுகிறதிலையும் உண்மை இருக்குது. ஆனா நாங்கள் சமாளிக்கிறதைத் தவிர வேற வழி இல்லை.’
பின்பு சக தோழர்களைப் பார்த்த ரவி,
‘உங்களுக்கு ஏதாவது வருத்தம் வந்தால் நீங்கள் இங்க வரலாம். அந்த நிலைக்கு வராமல் முதல்ல பார்த்துக் கொள்ளுங்க. சுகமில்லாமல் இருக்கிறவைக்கு மேலதிகமாகத் தயிர் தேவைப்பட்டால் இங்க கிடைக்கும். அதே நேரம் பயிற்சி செய்யும் போது ஏதாவது காயம் ஏற்பட்டாலும் இங்க உடனடியாக வரலாம். இங்க வந்தாலும் முகாமிற்கு வெளியால நிண்டே உதவி கேட்க வேணும். ஏன் எண்டால் முகாமிற்கு உள்ளுக்கு அம்மை நோயாளிகள் இருக்கலாம். அது தேவையில்லாமல் உங்களுக்கும் தொத்துகிறதுக்கு ஏதுவாக இருக்கலாம். அதால இயன்ற மட்டும் நீங்கள் பொறுமையாக வெளியாலேயே நிண்டு உதவி கேட்க வேணும். இதைவிட மேற்கொண்டு நான் சொல்லுகிறதுக்கு எதுவும் இல்லை. தோழர் நீங்கள் இவங்களைக் கூட்டிக் கொண்டு போகலாம்.’
அதை அடுத்துத் தோழர் பாண்டியன் இவர்களை அழைத்துக் கொண்டு இவர்கள் தங்க வேண்டிய குடிலுக்குச் சென்றார். அது மற்றைய குடில்களைவிட நீளமாக இருந்தது. அதற்குள் கிட்டத்தட்ட நாற்பது தோழர்கள் படுத்து உறங்கலாம் போலத் தோன்றியது. அதற்குள் நிலத்திலேயே அனைவரும் உறங்க வேண்டும். அப்படி உறங்குவதற்குப் புல்லினால் செய்யப்பட்ட பாய் கொடுக்கப்பட்டு இருந்தது. தலையணை தேவைப்படுபவர்கள் வேண்டும் என்றால் பாதணிகளைத் தலைக்கு வைத்துக் கொண்டு உறங்கலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை. கிடுகினால் வேயப்பட்ட குடில்கள் வெப்பத்தைச் சிறிது தணித்தது. அதன் சுவர்கள் அப்படியே இடைவெளி விட்டு வேயப்பட்டு இருந்தது. அதனால் காற்று வருவதற்கும் அது மிகவும் வசதியாக இருந்தது. பயிற்சி ஆசிரியர் ஒவ்வொருவரும் தங்க வேண்டி இடத்தைச் சுட்டிக் காட்டினார். தோழர்களும் தாங்கள் கொண்டு வந்த பாய், பாதணி, போர்வை, உடுப்புகள் என்பனவற்றை அங்கே வைத்துவிட்டு அடுத்தது என்ன என்பது போலத் தயங்கியபடி நின்றார்கள். பயிற்சி ஆசிரியர் அவர்களை அப்படித் தொடர்ந்தும் நிற்கவிடாது,
‘நாங்கள் மேற்கொண்டு செல்வோம்.’ என்றார்.
‘ஓம்… ஓம்…’ என்ற வண்ணம் தோழர்கள் அவரைத் தொடர்ந்தார்கள்.

பின்பு அவர் மற்றைய தோழர்கள் தங்கும் முகாமைக் காட்டினார். அந்தக் குடில்களும் அவர்கள் குடில்கள் போல இருந்தன. அதற்குள் இருந்த சில தோழர்கள் வந்து அவர்கள் பேயரையும், ஊரையும் கேட்டுக் கொண்டார்கள். என்னதான் போராட்டம் என்றாலும் அறிமுகம், நண்பர்கள் என்றால் அதில் ஊர் முதல் இடத்தில் நிற்கிறது என்பது கண்ணனுக்கு விளங்கியது. கண்ணனுக்குத் தெரிந்த ஊர்க்காரர் யாரும் இருக்கவில்லை. பக்கத்து ஊர்களைச் சார்ந்தவர்கள் அங்கே இருந்தார்கள். சிறிது நேர அறிமுகத்தின் பின்பு பயிற்சி ஆசிரியர் அவர்களைப் பார்த்து,
‘சரி உங்களுக்குக் குளிக்கிற வாய்க்காலைக் காட்டுகிறன். அதுக்குப் பிறகு ஆற்றில குளிக்கிற இடத்தைக் காட்டுகிறன். பிறகு நீங்கள் காலமையில எங்க போக வேணும் எண்டதையும் காட்டுகிறன். சரி வாங்க போகலாம்.’  என்று கூறிய பயிற்சி ஆசிரியர் நடக்கத் தொடங்கினார். அதனை அடுத்துத் தோழர்களும் அவர் பின்னால் நடக்கத் தொடங்கினார்கள். அவர் முதலில் முகாமின் முகப்பிற்குச் சென்றார். அப்படிச் செல்லும் போது நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட குடிலிருந்தது. இம்முறை அதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்கின்ற துணிவு சுமனுக்கோ அல்லது வேறு யாருக்கோ இருக்கவில்லை. அதனால் அவர்கள் அமைதியாக அந்தக் குடிலைக் கடந்து பயிற்சி ஆசிரியரோடு நடந்தனர். இருந்தாலும் பலருக்கும் அதற்குள் என்ன இருக்கிறது என்கின்ற கேள்வி உள்மனத்தில் விடை இல்லாது அலை மோதியது. இருந்தும் ஞானிகளாக அமைதி காத்தனர்.
முகாமின் முகப்பிற்கு வந்த பயிற்சி ஆசிரியர்,
‘இந்தப் பக்கத்தாலும் வாய்க்காலுக்குப் போகலாம். ஆனால் நாங்கள் இந்தப் பக்கம் இண்டைக்குப் போகத் தேவையில்லை. அதை நீங்களே போய் தெரிஞ்சு கொள்ளலாம். இப்ப நாங்கள் சமையல் அறைப் பக்கம் இருக்கின்ற வாய்க்காலைப் பார்த்திட்டுப் பிறகு ஆற்றைப் பார்க்கப் போகலாம். அதுக்குப் பிறகு நீங்கள் வெளிக்குப் போக வேண்டி இடத்தைக் காட்டுகிறன்.’ என்று கூறிய பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து சமையல் அறைப் பக்கம் நடந்தார். அவர் பின்னால் அனைவரும் நடந்தனர். சமையல் அறையிலிருந்து இறைச்சி வாசம் வந்தது. இருந்தாலும் அது ஊரில் வைப்பது போல் மணம் குணம் அற்றதாய் இறைச்சியை நீரில் அவிப்பது போல மணம் வந்தது. சிலவேளை அவித்து பின்பு பிரட்டல் கறியாக வைப்பார்களோ என்று அவன் எண்ணிக் கொண்டான்.
பயிற்சி ஆசிரியர் சமையல் அறையைத் தாண்டி அதன் பின்புறமாகக் கிழக்கு நோக்கி நடந்தார். அவர் பின்னால் அவரது புகையிரதம் பெட்டி கழறாது தொடர்ந்தது. கண் முன்னே பச்சைக் கடலாக விரிந்த வயல் பகுதி. அந்த வாய்க்கால் அதற்கு உயிர்நாடியாக ஊடறுத்து ஓடும் காட்சி. மனிதனுக்குள் இரத்தம் ஓடுவது போல் வயல்வெளியின் இரத்த ஓட்டம் அந்த வாய்க்கால்களாக.
பயிற்சி ஆசிரியர் வாய்க்காலுக்கு அருகே சென்றார். பின்பு அதற்குள் இறங்கினார். அவரின் முழங்காலுக்குச் சிறிது மேல் வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது.
‘இதுக்க எப்பிடிக் குளிக்கிறது?’ என்றான் பார்த்திபன். பியிற்சி ஆசிரியர் முதலில் சிரித்தார். பின்பு,
‘படுத்துத்தான் குளிக்க வேணும். எவ்வளவு குறைஞ்ச வளத்தோட சிறப்பாக வழுகிறமோ அவ்வளவு சிறந்த போராளியாக, தோழராக வரமுடியும். ஆதால இனிமேலைக்குப் பற்றாக்குறையை ஒரு பிரச்சினையாக் கதைக்காதீங்க. இந்த வாய்க்காலுக்க நீங்கள் படுத்துக் குளிச்சா நிறையத் தண்ணியா இருக்கும். அப்ப நீங்கள் ஈசியாக் குளிக்கலாம். காகம் தண்ணி குடிச்ச கதை மாதிரி தந்திரமாக இருக்கிறதைப் பயன்படுத்தப் பார்க்க வேணும். அதை நாங்கள் ஒவ்வொரு சின்ன விசயத்திலையும் கவனிச்சு நடந்தாத்தான் களத்தில சிறந்த போராளியாகப் போராட்டத்திற்கு முழுப் பங்களிப்பையும் செய்யலாம். நான் சொலுகிறது விளங்குதா?’
‘விளங்குது. நீங்கள் சொல்லுகிறதில நிறைய விசயம் இருக்குது. எப்பிடிக் குளிக்க வேணும் எண்ட உங்கடை ஐடியா நல்ல ஐடியாத்தான்.’ என்றான் பார்த்திபன்.
‘சரி இனி ஆற்றைப் போய் பார்ப்பம்.’ என்று கூறிய பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து நடக்கத் தொடங்கினார். அவர் பின்னால் மற்றவர்களும் நடக்க ஆரம்பித்தார்கள். அவர் தொடர்ந்து நடந்ததில் பலருக்குக் களைப்பாகவும், சலிப்பாகவும் இருந்தது. என்றாலும் யாருக்கும் அவரைக் குடைய மனத்தில் துணிவு இன்றித் தொடர்ந்தார்கள். சிறிது நேரத்தின் பின்பு ஆவலோடு அந்த ஆற்றை அனைவரும் வந்து அடைந்தார்கள். ஆறு வெகு அமைதியாக ஓடிக் கொண்டு இருந்தது. வெண் புழுதி ஆற்றுப் படுக்கை அதன்மீது அனைவருக்கும் வெல்ல முடியாத கொள்ளை ஆசையைக் கொணர்ந்தது. ஆனாலும் அதைப் பார்த்தவர்கள் கண்களில் ஒருவித சோர்வு. அந்தத் தெளிவான ஆறு மேலும் சிறிது செழிப்பாக ஓடி இருக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றியது. பார்த்த உடனேயே பலராலும் அதில் வாய்க்காலைவிடக் குறைவான உயரத்திலேயே நீர் ஓடுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. அதனால் சோர்ந்து போனவர்களைக் கனிவாகப் பயிற்சியாளர் பார்த்து,
‘மழை பெய்ஞ்சா நல்லாத் தண்ணி ஓடும். அப்ப வந்தால் சந்தோசமாய் குளிக்கலாம். நாங்கள் இப்ப இங்கயே நிற்க முடியாது. தொடர்ந்து போனால்தான் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கலாம்?’
‘ஓம்… ஓம்…’ என்று பல குரல்கள் வந்தன. அதைத் தொடர்ந்து பயிற்சி ஆசிரியர் நடக்கத் தொடங்கினார். வயல் வெளிகள் பார்க்கும் இடம் எங்கும் தொடர்ந்தன. பசுமை அலை இடைவிடாது எங்கும் மோதியது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் அல்லவா இது. அந்தச் செழுமை பார்ப்பவரை இடைவிடாது மயக்கியது. வயல்கள் ஒருவாறு முடிந்து சவுக்கம் காடு தொடர்ந்தது. அந்த வயல் முடிந்ததும் மேற்குப் பக்கமாகத் தொடர்ந்த உயரமான சவுக்கங் காட்டைக் காட்டி,
‘இங்கதான் நீங்கள் காலையில வரவேணும். உங்களோடை நிறையக் கூட்டம் அந்த நேரம் வருவினம். அப்ப நீங்கள் மேற்கொண்டு அறிய வேண்டியதை அறிஞ்சு கொள்ளுங்க. சரி இப்ப வாங்க. இப்பிடியே தெற்க போனக் கிறவுண்ட் வருகுது. அதைப் பார்த்திட்டு அப்பிடியே முகாமிற்குப் போகலாம்.’ என்ற பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து நடந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் அவசரமாக நடந்தார்கள். உச்சி வெயில் உலோகத்தையே உருக்குவது போலத் தலைமேல் கொதித்தது. எப்போது முகாமிற்குப் போவோம் என்பது பலரின் எதிர்பார்ப்பாய் இருந்தது. பயிற்சி ஆசிரியர் எட்டி எட்டி நடந்ததில் விரைவாகவே மைதானத்தை வந்து அடைந்துவிட்டார். மைதானம் மிகவும் விஸ்தீரணமாக இருந்தது. நான்கு எல்லைகளும் சவுக்கம் தோப்புக்கள் அரணாகச் சுவர் போல இருந்தன. பயிற்சிக்கா ஓடி ஓடி அவர்கள் ஓடும் பாதை புல் பூண்டு இல்லாது வண்டில் பாதை போலப் புழுதியாக இருந்தது. மற்றைய இடங்களிலும் சொற்பமாகவே ஆங்காங்கே புற்கள் இருந்தன. வெயிலில் நின்று இங்குப் பயிற்சி செய்வது கடினமாக இருக்கும் என்றே கண்ணனுக்குத் தோன்றியது. சுமனுக்கு அதைப் பற்றி எண்ணவே பிடிக்கவில்லை. அவன் எப்போது முகாமிற்குப் போவது என்ற எதிர்பார்ப்போடு அவர்கள் பின்னே பல விடை இல்லாத கேள்விக்குறிகளோடு நின்றான்.
‘இரண்டு றவுண்டு இந்தக் கிறவுண்டைச் சுற்றி ஓடினா நல்லா இருக்கும்… ஆனால் உங்களுக்கு முதல் நாள். அதனால இந்த உச்சி வெயிலில் வேண்டாம். வாங்க போவம்.’ என்று கூறிய பயிற்சி ஆசிரியர் நடந்தார். அவரோடு அனைவரும் சேர்ந்து நடந்தார்கள்.
முகாமிற்குத் திரும்பி வந்த பின்பு அனைவரையும் சிறிது நேரம் இளைப்பாறிய பின்பு, குளித்துச் சாப்பிடத் தயாராகும்படி கூறிவிட்டு பயிற்சி ஆசிரியர் சென்றுவிட்டார். அதன் பின்பு அனைவரும் ‘அப்பாடா.’ என்கின்ற நிம்மதியோடு ஓய்வெடுத்தார்கள்.
அப்படி ஓய்வெடுக்கும் போது வேந்தன் என்கின்ற பழைய தோழர் வந்து கண்ணன், சுமன், பார்த்திபன், குமரன் ஆகியவர்களைப் பார்த்துக் குளிப்பதற்குத் தான் அழைத்துக் கொண்டு செல்வதாகக் கூறினார். அது அனைவருக்கும் சம்மதமாக அவர்கள் அவரோடு புறப்பட்டார்கள். முதலில் அலுவலகத்திற்குச் சென்று சவர்க்காரம் வாங்கிக் கொண்டு பின்பு செல்லாம் என்று கூறிய அவர் அவர்களைக் கூட்டிக் கொண்டு அலுவலகத்தை நோக்கிச் சென்றார். அலுவலகத்தில் உடனடியாக ‘டுகைநடிழல’ சவர்க்காரம் கிடைத்தது. அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.
வேந்தன் முகாமின் முன்புறமாகப் போய் குளிப்பதே நல்லது என்று கூறி அவர்களை அந்தப் பக்கம் அழைத்தான்.
‘முன்பக்கம் போய் குளிப்பம். எனக்கு அதுதான் பிடிக்கும்.’ என்றான் வேந்தன்.
‘ஏன் தோழர்?’ என்றான் கண்ணன்.
‘துப்பரவை எண்ணித்தான்.’
‘அப்பிடி எண்டா அதுக்கு முன்னுக்கு யாரும் குளிக்க… கழுவ… மாட்டினமா?’
‘அது நடக்கும்தான். அதுக்காக நாங்கள் ஏன் அதிகமான அழுக்குக்கை போய் விளவேணும்? பின்னுக்குப் போகப் போக அது இன்னும் அதிகமாகும்.’
என்று கூறிய வேந்தன் முகாமுக்கு வண்டி வரும் பாதையால் சென்று பின்பு சவுக்கம் தோப்பு வழியாக நடந்து வாய்க்காலை அடைந்தான். கிணற்றில் குளித்தவர்களுக்கு வாய்க்காலில் குளிப்பது சங்கடமாய் இருந்தது. கழுவுவதும் குளிப்பதும் ஓரே வாய்க்கால் என்பது மேலும் அந்தச் சங்கடத்தை அதிகரித்தது. இருந்தும் அதற்கு மாற்றுவழி இல்லை என்பது அனைவருக்கும் நன்கு விளங்கியது. அதனால் அதை மறந்து அன்றாட வாழ்க்கையில் ஒன்றத் தொடங்கினார்கள்.

அதன் பின்பு ‘Lifeboy’ முதலில் நுரைத்தது. அவர்கள் மனதில் சந்தோசமும் அப்படியே நுரைத்துப் பொங்கியது. தஞ்சை வெயில் குளிர் நீரையும் வெந்நீராக்கியதும் உடலிற்கு ஒருவித சுகமாகவே இருந்தது. இந்த வாய்க்கால்கள் இல்லை என்றால் தஞ்சை நெற்களஞ்சியம் சுவாசம் அற்றுப் போய் இருக்கும்.
குளித்து முடித்தபோது பசி வயிற்றை அமிலமாகக் கிள்ளியது. அதனால் வேந்தனுக்கு மேலும் அங்கே தாமதிப்பதில் விருப்பம் இருக்கவில்லை. அவன் புறப்பட வேறு வழியின்றி அனைவரும் முகாமிற்கு வந்தார்கள்.