3. சுவைபுதிது

குளித்து முடித்து முகாமிற்குத் திரும்பிய போது சூரியன் நடு வானில் நின்று தலைகளைப் பிளந்தான். அதன் மூர்க்கம் தாங்காது முகாமிற்குள் சென்று அடைக்கலமாக வேண்டும் என்பதே அனைவரதும் முக்கிய குறிக்கோளாய் இருந்தது. அதனால் அவர்கள் நடையில் அசுரவேகம் காட்டி அனலிடம் இருந்து தப்பித்தனர். தங்களது குடிலுக்குள் வந்ததுமே அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இருந்தும் அப்போது அவர்கள் வியர்த்துப் போய் இருந்தார்கள். விடுதலை என்று வந்த பின்பு வியர்வை எல்லாம் ஒரு பொருட்டா என்கின்ற உண்மையை உணர்ந்து அவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர்ந்தார்கள். அப்போது சாப்பாட்டிற்கான சமிக்கை ஒலித்தது. அதனை அடுத்துத் தட்டையும் குவளையையும் எடுத்துக் கொண்டு அனைவரும் விரைந்தனர். அதில் கண்ணன், சுமன் ஆகியவர்களும் இணைந்து கொண்டனர்.
மீண்டும் வெயிலின் கொடுமை என்றாலும் அதையும் வென்ற பசியின் கொடுமை. அதை நீக்க அந்த வெப்பத்தைப் பொருட்படுத்தாது தோழர்களோடு கண்ணன், சுமன் உடன் அனைவரும் இணைந்து கொண்டார்கள். தோழர்கள் நிரையில் நின்று உணவு வாங்கினார்கள். உணவாகச் சோற்றோடு இறைச்சிக் கறியும், பருப்புக் கறியும் வழங்கினார்கள். அது என்ன இறைச்சிக்கறி  என்பது சுமனுக்கு இன்னும் தெரியாது. அது என்னவாக இருக்கும் என்று பலமுறை யோசித்துப் பார்த்துவிட்டான். அவன் ஊரில் கோழிக்கறி சாப்பிட்டு இருக்கிறான். அத்தோடு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கிறான். அதைவிட வேறு இறைச்சிகள் சாப்பிட்டதில்லை. அதையும் இனிப் பழகிக் கொள்ள வேண்டுமோ என்கின்ற எண்ணம் அவன் மனதில் வந்தது. அவன் அந்த இறைச்சிக் கறியைச் சுவைக்க ஆர்வம் கொண்டான். அது என்ன இறைச்சியாக இருக்கும் என்பதைச் சுவைத்தே அறிய வேண்டும் என்கின்ற முடிவோடு நிரையில் நின்றான். இதை அவதானித்த கண்ணன்,
‘என்ன கடுமையான யோசினை சுமன்?’ என்றான்.
‘அப்படி ஒண்டும் இல்லை.’
‘என்னவோ யோசிக்கிறாய். அதை உனக்கு வெளியால சொல்ல விருப்பம் இல்லாட்டி விடு சுமன்.’
‘ஒண்டும் விசேசமாய் இல்லை. உந்த இறைச்சியைப் பற்றினதுதான். உது என்ன இறைச்சியாய் இருக்கும்? அறியாமல் தலை வெடிக்குது.’
‘என்னவா இருந்த என்னடா? இயக்கத்துக்கு எண்டு வந்தாச்சுது. இனி தாரத்தைச் சாப்பிட்டு சந்தோசமாய் பயிற்சியைச் செய்ய வேணும். வேறை மாற்றுவழி இங்க கிடையாது.’
‘ம்… நீ சொல்லுகிறது உண்மை. சாப்பாட்டு விசயத்தில நான் கொஞ்சம் சென்சிரிவ். அதுதான். வேறை ஒண்டும் இல்லை.’
‘ம்… வா சமாளிப்பம். அதுதான் முதல் பயிற்சி.’
‘நீ சொல்கிறது சரி.’

இவர்கள் முறை வந்தது. தட்டில் முதலில் அளவு கோப்பையால் அள்ளிப் போடப்பட்ட பச்சை அரிசிச் சோறு பட்டென அச்சுப் புக்கைக் கட்டி போல விழுந்தது. அது பழக்கப்பட்ட புழுங்கல் அரிசிச் சோறாக உதிர்ந்து ஒன்றோடு ஒன்று ஒட்டாது இருக்கவில்லை. அதற்குப் பதிலாகப் பஞ்சத்தில் கிடைக்கும் வெள்ளை அரசிச் சோறாக இருந்ததே சுமனை அதிர்ச்சி கொள்ள வைத்தது. உதிரும் பஞ்சு போன்ற வெள்ளை அரிசிச் சோற்றைச் சம்பலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்பது சுமனுக்குத் தெரியும். அதுவும் பழஞ்சோறாகச் சம்பலுடன் பெரியம்மா வீட்டில் சுவைத்துச் சாப்பிட்ட நினைவு இன்னும் அவன் மனதில் இருக்கிறது. ஆனால் இதன் மணமே அவனை ஏதோ செய்தது. அந்த நினைவை அழிப்பதாக அடுத்ததாகப் பெரிய பெரிய இறைச்சித் துண்டுகளோடு மஞ்சள் நிறமான குழம்பு ஊற்றப்பட்டது. அதில் இருந்து இறைச்சிக் கறியின் வாசத்திற்குப் பதிலாக ஒருவிதமான இறைச்சி மொச்சை வந்தது. சுமன் அதை ஒருவித ஐயத்தோடு பார்த்தான். அதை அடுத்துப் பருப்பு ஊற்றினார்கள். அது இரசம் போல தண்ணீர் பதத்தில் அவனை மேலும் பயமுறுத்தியது. அத்தோடு குடிப்பதற்கு நீரும் வாங்கிக் கொண்டு நிழல் கிடைக்காததால் தமது குடிலுக்கே கண்ணனும், சுமனும் திரும்பி வந்தார்கள். பின்பு தங்களது இடத்திலிருந்து சாப்பிடத் தொடங்கினார்கள். ஒரு பிடி அள்ளிச் சுமன் வாயில் வைத்திருப்பான். அப்படி வைத்தவன் கல்லை விழுங்கியது போலக் கண்ணனைப் பார்த்தான்.
‘என்ன?’ என்றான் கண்ணன்.
‘சாப்பிட்டுப் பார்.’ என்றான் சுமன்.
கண்ணன் அள்ளி அவசரமாய் ஒருவாய் வைத்தான். சாப்பாடு என்பது உண்மையில் உடலுக்குச் சக்தி கொடுப்பதற்காய் கட்டாயமாக உண்ணப்பட வேண்டிய ஒரு பொருள். ஆனால் மனிதர்கள் அதை அப்படிச் சாப்பிடுவதில்லை. மனிதர்களின் சாப்பாட்டில் அதற்கு முதலில் அழகும், வர்ணங்களும் உண்டு. அடுத்ததாக மனதை ஈர்க்கும் வாசம் உண்டு. அதற்கு அடுத்ததாக நாவிற்கு இன்பம் தரும் சுவை உண்டு. இவற்றில் முதல் இரண்டு இல்லாவிட்டாலும் சமாளிக்கலாம். ஆனால் நாவிற்குச் சுவை இல்லாத சாப்பாட்டைச் சாப்பிடுவது  மனிதர்களுக்கு ஒருவித தண்டனை போல் ஆகிவிடும். அதையே சுமனின் முகத்தைப் பார்த்த போது கண்ணனால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அதற்காக என்ன செய்ய முடியும்? ஊரில் உண்ட அதே சுவையான சாப்பாட்டை இங்கும் எதிர்பார்க்க முடியுமா? எல்லாவற்றையும் இழக்க வேண்டும். இழந்தே ஈழத்திற்குப் போராட வேண்டும்.  இரத்தத்தையும் உயிரையும் இழக்கப் போகின்ற நாம் உணவின் சுவையை இழப்பது பற்றிச் சிந்திக்கலாமா என்று கண்ணனுக்குத் தோன்றியது.
சுமனின் முகம் மாறியது. அவன் சாப்பாட்டுத் தட்டை வைத்துவிட்டு அவசரமாகக் குடிலின் பின்னால் ஓடினான். கண்ணனால் அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. அவனும் தட்டை அவசரமாக வைத்துவிட்டு அவனைப் பார்க்கச் சென்றான். அவன் ஓங்காளித்து ஒரு முறை எடுத்துவிட்டான். கண்ணனுக்கு அதைப் பார்க்கச் சங்கடமாய் இருந்தது. கண்ணன் மீண்டும் திரும்பிச் சென்று சுமனின் நீர் குவளையை எடுத்து வந்தான். சுமன் இருந்தவாறே அந்த நீரை வாங்கி வாயைக் கொப்பளித்தான். வாந்தி எடுத்ததில் அவன் சோர்ந்து போய்விட்டான். அவனைப் பார்க்கக் கண்ணனுக்குப் பரிதாபமாகவும், கவலையாகவும் இருந்தது.
‘எழும்பி வா சுமன். றை பண்ணிக் கொஞ்சம் எண்டாலும் சாப்பிடு. இல்லாட்டி இரவைக்குத்தான் திரும்பச் சாப்பாடு தருவாங்கள்.’ என்றான்.
‘அந்த மணமே எனக்கு பிடிக்குது இல்லை. இதை எப்பிடிச் சாப்பிட முடியும்?’
‘அதுக்குப் பட்டினியா கிடக்க முடியுமா? கறியைத் தவித்துப்போட்டுச் சோத்தை மாத்திரம் எண்டாலும் சாப்பிடு. நாளைக்கு எழும்பிப் போய் சாப்பிட எண்டாலும் தென்பு இருக்க வேணும் இல்லையா?’
‘அதுதான் முதல் பிரச்சினையே. எனக்கு உந்தச் சாப்பாட்டில ஒண்டின்ரை மணமும் பிடிக்க இல்லை. பிறகு எப்பிடி நான் சோத்தைச் சாப்பிடுவன். தண்ணி மாத்திரம் குடிக்கலாம். அது எனக்கு இப்ப போதும்.’
‘வாதம் பண்ணாமல் முயற்சி செய் சுமன்.’  என்று கூறிய கண்ணன் தனது பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு மீண்டும் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்கும் அதன் மணம் மொச்சையாக இதம் தராவிட்டாலும் வேறு வழி இல்லை என்பதை உணர்ந்தவனாய் உண்ணத் தொடங்கினான். அந்த இறைச்சியின் சுவை ஏற்கனவே சாப்பிட்ட இறைச்சியின் சுவை போல இல்லாது ஏதோ கடுமையான இறைச்சியாக இருந்ததோடு அதிக கொழுப்போடும் இருந்தது. அமைப்பைப் பொறுத்தவரை நிச்சயம் மத நம்பிக்கை கிடையாது. அதனால் இது அனேகமாக மாட்டு இறைச்சியாக இருக்கலாம் என்கின்ற எண்ணம் அவனிடம் இருந்தது. கண்ணனுக்கு அதை அறிய வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தது. கண்ணன் பக்கத்திலிருந்த பழைய தோழர் சிவத்தைப் பார்த்து,
‘தோழர் நான் ஒண்டு கேட்கலாமே?’ என்றான்.
‘என்ன தோழர் கண்ணன்?’
‘இல்ல… இது என்ன இறைச்சி தோழர்?’
‘என்னவா இருந்தா என்னத் தோழர். பசிக்குத் தாரத்தைச் சாப்பிட வேண்டியதுதானே? எங்களுக்குத் தேவையானதைத்தானே அவை தருகினம். இதை எங்களுக்குத் தருகிறதுக்கு எவ்வளவு இடத்தில அவை உதவி கேட்டிருக்க வேணும் எண்டு உங்களுக்குத் தெரியுமா?’
‘ஐயோ தோழர் நான் தெரியாமல் கேட்டிட்டன்.’
‘எதை?’
‘உங்களைக்… கேட்க வந்த விசயத்தை…’
‘சரி இப்ப விளங்குதுதானே தோழர்? இனிமேலைக்கு யாரிட்டையும் இதைப் பற்றிக் கேட்காதையும். சரி இவ்வளவு ஆசைப்படுகிறதால சொல்லுகிறன். இது எருமை மாட்டு இறைச்சி. இண்டைக்குச் சமைச்சது சரியில்லை. இதையும் சிலர் நல்லாய் சமைப்பாங்கள். கிட்டடியில மாட்டிறைச்சி வரும் எண்டு சொல்லுகிறாங்கள். வந்தால் கொஞ்சம் சுவையாச் சாப்பிடலாம். அதுவரைக்கும் சமாளிக்க வேண்டியதுதான். பின்னேரம் ரொட்டி இல்லாட்டிப் புட்டு அவிப்பாங்கள். காலையில கடலையும் பாலும் கிடைக்கும். ஞாயிறு மட்டும் பாண் வரும். சிலவேளை யாரும் ஊர்காரர்கள் காட, கௌதாரி அடிச்சுக் கொண்டு வந்து கொடுப்பினம். அது எப்பவாவது அதிஸ்ரமாய் வரும் வராமலும் விடும். காலமையில வெளியில போகிறத்துக்கு முதல் பனங்கட்டியும் தேத்தண்ணியும் தருவினம்.’
‘ஐயோ தோழர் நான் சும்மா கேட்டன். நீங்கள் முழு விபரமும் சொல்லுகிறியள். தாங்ஸ் தோழர். சுமனைப் பாருங்க சாப்பிடுகிறான் இல்லை. அதுதான் தோழர்.’

‘இங்கை அதெல்லாம் பார்க்கக் கூடாது. You know, Survival of the fittest?’
‘ஓம் தோழர். போராட்டமே அதனாலதானே? எனக்கு விளங்குது. ஆனா அவனுக்கு விளங்க இல்லை. சொன்னாலும் கேட்கிறான் இல்லை.’
‘தோழர் கண்ணன் பேசாமல் விடும். அவர் தானா விளங்கிக் கொள்வார். பசிச்சா கறி வேண்டாம் நித்திரை வந்தால் பாய் வேண்டாம் எண்டு தெரியாமலே சொல்லி இருக்கினம்.’
‘ம்… நீங்கள் சொல்லுகிறதும் உண்மைதான்.’
‘சுமன் சொஞ்சமாவது சாப்பிடு சுமன்.’ என்று கண்ணன் கூறினான். பின்பு இருவரும் கை கழுவச் சென்றார்கள். சுமனுக்கு அலுப்பாக இருந்தது. கண்ணனும் தன்னை கவனிக்காது செல்கிறான் என்றும் கவலையாக இருந்தது. அவர்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றும் தோன்றியது. என்ன செய்வது என்று அவனுக்குக் குழப்பமாக்க இருந்தது. சுமன் தட்டை எடுத்தான். கறிகளைத் தள்ளிவிட்டு ஒரு வாய் சோறு எடுத்தான். அதைச் சாப்பிட வாய் அருகே கொண்டு செல்ல மீண்டும் வயிற்றைப் பிரட்டியது. அவன் அதை வெளியே எடுத்துச் சென்று கொட்டினான். தட்டைக் கழுவிக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் பாயை விரித்துப் படுத்தான்.
மீண்டும் கண்ணன் அங்கே வந்தபோது சுமன் நித்திரை ஆகிவிட்டான். அவனைப் பார்க்கக் கண்ணனுக்குக் கவலையாக இருந்தது. இருந்தாலும் இரவு சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணிக் கொண்டான். அதன் பின்பு கண்ணனும் சிறிது நேரம் நித்திரை கொண்டான். திடீரென வீளை ஒலித்தது. எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். சுமன் இயலாமையில் அந்த வீளை ஒலியைiயும் மீறித் தூங்கினான். அதைப் பார்த்த தோழர் சிவம் பதறியடித்த வண்ணம்,
‘அவனை எழுப்பும் தோழர். கெதியா எழுப்பும் தோழர். இல்லாட்டித் தேவையில்லாமல் சங்கடப்பட வேண்டி வரும்.’ என்று கண்ணனை அவதிப்படுத்தினார்.
‘அவன் அலுப்பில நித்திரை கொள்ளுகிறான்.’
‘அலுப்பெல்லாம் இங்க பார்க்க முடியாது. செக் பண்ணிக் கொண்டு வரேக்க அவன் றெடியா யூனிபோமோடை நிக்க வேணும். முதல்ல நீர் றெடியாகி நிலும். இல்லாட்டி நீரும் ஆப்பிட வேண்டி வரும். குயிக்… குயிக்…’ என்று கூறிய தோழர் சிவம் அவதியாகச் சீருடை அணிந்து கொண்டார். அந்த வேகத்தில் கண்ணனும் சீருடையை அணிந்தான். பின்பு இருவரும் சுமனின் சீருடையை எடுத்து அவன் மறுக்க மறுக்க மாட்டி விட்டார்கள். எல்லோரும் வெளியே அணிவகுப்பிற்குச் சென்று கொண்டு இருந்தார்கள். ஒருவாறு சுமனுக்குச் சீருடை அணிந்தாலும் அவன் ஒழுங்காக அணிவகுப்பிற்கு வந்து அங்கே நிற்பானா என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. அணிவகுப்பில் நிற்காவிட்டால் நிறையக் கேள்விகள் வரும். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். அதற்கு இவன் எப்படிப் பதில் சொல்லுவான் என்பது தெரியாது. ஏதாவது தப்பாகப் பதில் கூறினால் அதிலிருந்தே வாட்டத் தொடங்கி விடுவார்கள்.
சுமனுக்கும் நிலைமை சிறிது விளங்கி இருக்க வேண்டும். தள்ளாடித் தள்ளாடி எழுந்து நின்றான். ஒருவாறு அவன் கையைப் பிடித்துக் கொண்டு இருவரும் அணிவகுப்பிற்குச் சென்றார்கள். அணிவகுப்பில் எவரை எவரும் பிடிக்க முடியாது. அதனால் தங்கள் தங்கள் நிலையில் கண்ணனும் தோழர் சிவமும் நின்றார்கள். இதுவரையில் யாரும் எதுவும் கேட்கவில்லை. இனிக் கேட்டால் சுமனே பதில் சொல்ல வேண்டி வரும் என்பது கண்ணனுக்கு விளங்கியது.
அணிவகுப்புத் தொடங்கியது. சுமன் ஆடி ஆடி நின்றதை அணிவகுப்புத் தொடங்கிய உடனேயே பயிற்சி ஆசிரியர் ஒருவர் கண்டுவிட்டார். உடனடியாக அவர் வந்து அவனை அணிவகுப்பிலிருந்து வெளியே வருமாறு அழைத்தார். அதைப் பார்த்துத் தோழர் சிவம் மிகவும் கவலையானார். அவர் முகம் சட்டென்று இருண்டு விட்டது. கண்ணன் அதைக் கவனித்தான். பயிற்சி ஆசிரியரிடம் சென்று அவனுக்குச் சுகம் இல்லை என்பதை விளங்கப்படுத்தலாம் என்று எண்ணித் தோழர் சிவத்தைப் பார்த்தான். தோழர் சிவம் ‘பேசாமல் நில்.’ என்று கண்ணைக் காட்டினார். கண்ணன் விளங்காது திகைத்தான். தோழர் சிவம் மீண்டும் அசையாதே என்பது போலக் கண்ணைக் காட்டினார். கண்ணன் மிகவும் மனவேதனையோடு அசையாது நின்றான். கவலையால் அவன் கண்கள் கலங்கிக் கண்ணீர் முத்துக்கள் வெந்நீர் துளிகளாக விழுந்தன.
வெளியே கூட்டிச் சென்ற பயிற்சி ஆசிரியர் சுமனிடம் ஏதோ அதிக நேரம் கதைத்தார். உடம்பைத் தொட்டுப் பார்த்தார். பின்பும் சிறிது நேரம் நின்று கதைத்தார். யார் சுமனைக் கூட்டிக் கொண்டு போனர் என்பதில் தோழர் சிவத்திற்கு ஒருவித ஆறுதலாக இருந்தது. அந்தப் பயிற்சி ஆசிரியர் மிகவும் நிதானமாக, அன்பாக நடப்பவர். ஆனால் ஏமாற்றினால் மட்டும் தலைகால் தெரியாத கோபம் வந்துவிடும். அவர் கதைத்ததைக் கவனித்த தோழர் சிவத்திற்கு நிம்மதியாக இருந்தது. தோழர் சிவத்திற்கு ஒன்றும் இசகுபிசகாக நடக்காது என்கின்ற நம்பிக்கை அதனால் வேரூன்றத் தொடங்கியது.
சுமனை அழைத்துச் சென்ற பயிற்சி ஆசிரியர் அவனை வருத்தக்காரர்கள் தங்கும் முகாமிற்குக் கூட்டிச் சென்றார்.
முதலில் அணிவகுப்பு நடந்தது. பின்பு மாலைப் பயிற்சி தொடர்ந்தது. அதையும் முடித்துக் கொண்டு முகாமிற்கு வந்த போது சுமன் தயிரும் சோறும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்த தோழர் சிவம் கண்ணனைப் பார்த்து முதலில் கண்ணைச் சிமிட்டினார். பின்பு கண்ணனைப் பார்த்து,
‘மேலைக் கழுவிக்  கொண்டு வருவமே.’ என்று கேட்டார்.
‘ஓ போயிட்டு வருவம்.’ என்று குமரனும் எழுந்தான். கண்ணன் தயாரானதும்  அனைவரும் புறப்பட்டு மேல் கழுவ வாய்க்காலுக்குச் சென்றனர். கண்ணனிடம் பல கேள்விகள். அதையெல்லாம் தோழர் சிவத்திடம் கேட்க வேண்டும் என்கின்ற அவா. அவர் என்ன பதில் சொல்லுவார் என்பதில் அவனுக்குச் சிறு தயக்கம் இருந்தது. அதே நேரம் தயங்கினால் வேலைக்கு ஆகாது என்பதும் அவனுக்கு விளங்கியது. அதனால் மனதில் இருப்பதைக் கேட்டுவிட வேண்டும் என்று அவன் முடிவு செய்து கொண்டான்.
‘தோழர் சிவம்.’
‘என்ன தோழர் கண்ணன்?’
‘எனக்குச் சில சந்தேகங்கள் இருக்குது. நான் உங்களிட்டை அதை எல்லாம் கேட்கலாமா தோழர்?’
‘கேளுங்க தோழர்… கேளுங்க. அதுக்கு ஏன் நீங்கள் தயங்க வேணும்?’
‘இல்லைத் தோழர் கேள்வி அப்பிடி… அதாலதான்…’
‘ஓ… பருவாய் இல்லைக் கேளும்.’
‘நாங்கள் நினைச்சதைவிடச் சாப்பாடு இங்க மோசமாகத்தான் இருக்குது. நான் சமாளிப்பன். ஆனா சுமனுக்கு நிச்சயம் கஸ்ரமாய் இருக்கும். அதை ஒருமாதிரிச் சமாளிக்கலாம்.’
‘அப்ப வேறை என்னத் தோழர் சந்தேகம்?’
‘இல்லைத் தோழர்… பயிற்சி எல்லாம் எப்பிடி இருக்கும்?’
‘பயிற்சி எண்டா பயிற்சியாகத்தான் இருக்கும். அதில யாருக்கும் எந்தப் பாகுபாடும் இருக்காது.’
‘பாகுபாடு இருக்காது எண்டு தெரியுது. ஆனாக் கடுமையான பயிற்சியாக இருக்குமா?’
‘எது தோழர் கடுமையான பயிற்சி? எது தோழர் கடுமை இல்லாத பயிற்சி? தாற பயிற்சியைச் செய்ய வேணும். ஒழுங்கா அதைக் கற்றுக் கொள்ள வேணும். இதிலை கேள்விக்கு எந்த இடமும் இல்லை.’
‘தோழர் நீங்கள் சொல்லுகிறது விளங்குது. நான் ஒருமாதிரிச் சமாளிப்பன். ஆனா சுமன்தான் கஸ்ரப்படுவான் எண்டு பயமா இருக்குது.’
‘தோழர் நீங்கள் உங்களைக் கவனியுங்க. சுமன் தன்னைக் கவனிக்க வேண்டியது அவருடைய பிரச்சினை. அதுக்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது.’
‘உண்மைத் தோழர். எண்டாலும் சுமன் என்னோட வந்தவன். ஊரிலேயே அவனைத் தெரியும். அதால எனக்கு அவன் மேல அக்கறை இருக்குது. அதை மாற்ற முடியாது.’
‘நல்லது தோழர். ஆனா அது இங்க சரிவராது. சிலவேளை நீரும் அவரும் வேறை வேறை முகாமிற்கே போக வேண்டி வரும். அதால சுமனை நீங்கள் எல்லா இடமும் கவனிக்க முடியாது. அவர் அவரையே கவனிச்சுக் கொள்ள வேணும் தோழர்.’
‘நீங்கள் சொல்லுகிறது சரிதான். எண்டாலும் எனக்குக் கவலையா இருக்குது. சாப்பாட்டிலேயே அவனுக்குப் பிரச்சினை தொடங்கீட்டுது. அதுதான் கேட்டன்.’
‘விளங்குது தோழர். நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்க. சுமன் தன்னைப் பார்த்துக் கொள்ளுவார்.’
மேல் கழுவி முடிந்து எழும் போது சூரியன் மேற்கு வானை எரித்து மாஜாயாலம் காட்டிக் கொண்டு இருந்தது. அந்த ஜாலத்தைக் கண்ணனுக்கு கண்வெட்டாது  பார்த்துக் கொண்டே நிற்க வேண்டும் போல் இருந்தது. மற்றவர்களும் அதைப் பார்த்து தங்களை மறந்து இரசித்தார்கள். அதனால் சிறிது நேரம் எல்லோரும் தங்களை மறந்து மேற்கே பார்த்துச் சிலையாகி நின்றார்கள். அடுத்த அணிவகுப்பிற்கு நேரம் ஆகியது. அவர்கள் அதை எண்ணி மீண்டும் முகாமிற்கு வந்தார்கள்.

சுமன் நன்றாகத் தூங்கினான். அதைப் பார்த்த தோழர் சிவம்,
‘அவரை இனி எழுப்பி விடுங்க. அடுத்த பரேட்டுக்குப் போக வேணும். அது முடியச் சாப்பாட்டுக்கு விசில் அடிப்பாங்கள். இரவுச் சாப்பாடாவது சாப்பிடுவார்தானே?’ என்று கண்ணனைப் பார்த்துக் கேட்டார்.
‘எனக்குத் தெரிய இல்லைத் தோழர். அவரை நான் எழுப்பிறன். அப்பதான் அவற்றை நிலைமை தெரியும்.’
கண்ணன் சுமனை எழுப்பினான். எழும்பிய அவனுக்கு முதலில் தான் எங்கே இருக்கிறேன் என்பது விளங்கவில்லை. அதனால் அவன் திரு திருவென முழித்தான். பின்பு தன்னைச் சமாளித்த வண்ணம் எழுந்து உட்கார்ந்தான்.
‘சுமன் வெளிக்கிடு. விசில் அடிக்கப் போகுது. பரோட்டுக்குப் போக வேணும்.’ என்றான் கண்ணன்.
‘தெரியும். ஆனாச் சரியான அலுப்பாய் இருக்குது. உடம்பில சத்தியே இல்லை. நான் என்ன செய்ய முடியும்?’
‘என்னவா இருந்தாலும் சரி… வெளிக்கிடும்.’ என்றார் தோழர் சிவம்.
‘ஓ வெளிக்கிடுகிறன்.’
என்று கூறிவிட்டு அவன் அலுப்போடு எழுந்து வெளிக்கிட்டான்.
‘இண்டைக்கே இவ்வளவு அலுப்பு எண்டா… நாளைக்கு றெயினிங் செய்த பிறகு எப்பிடிப் பரேட்டுக்குப் போகப் போறீர்?’ என்றார் தோழர் சிவம். சுமன் அதற்குப் பதில் கூறவில்லை. கண்ணன் முதலில் சிரித்தான். பின்பு,
‘அதெல்லாம் சுமன் சமாளிப்பான்.’ என்றான்.
‘சமாளிக்கத்தான் வேணும். வேற வழி இல்லை.’ என்றார் தோழர் சிவம். இவர்கள் கதைத்துக் கொண்டு இருக்கும் போது மாலை அணிவகுப்பிற்கான வீளை ஒலித்தது. எல்லோரும் பரபரப்பாகக் குடில்களுக்கு நடு நாயகமாக இருந்த அந்தப் பரந்த மைதானத்தை நோக்கிச் சென்றார்கள். சுமனும் அவர்களோடு சேர்ந்து கொண்டான். அவன் முகத்தில் ஒருவித ஐயம் படர்ந்து இருந்தது. அவனை இப்போது பார்ப்பதற்கும் முகாமிற்கு வர முன்பு பார்த்ததிற்கும் நிறையவே வித்தியாசம் இருப்பதைக் கண்ணன் கிரகித்தான். அப்போது எல்லாம் அவன் பார்வையில் ஒரு பரபரப்பு இருந்தது. பயிற்சி செய்து போராட வேண்டும் என்கின்ற சுடர்விடும் ஆர்வம் இருந்தது. இப்போது அந்த ஆர்வம் எல்லாம் மறைந்து ஐயம் மாத்திரமே அவன் முகத்தில் தங்கி நிற்கிறது. எதனால் இவ்வளவு கெதியாக அவனிடம் இவ்வளவு பெரிய மாற்றம் என்பது கண்ணனுக்கு விளங்கவில்லை. நிச்சயம் அவன் எதிர்பார்ப்புக்கும் இங்கு நடப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்துச் செல்ல வேண்டும். அதைச் சுமன் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். விளங்கிக் கொள்வானா என்பது கண்ணனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
‘என்ன கண்ணன் கடுமையா யோசிக்கிறா?’ என்றார் தோழர் சிவம்.
‘எல்லாம் சுமனைப் பற்றித்தான்.’ என்றான் கண்ணன்.
‘அவர் விளங்கிக் கொள்வார். அது முக்கியம் எண்டது அவருக்கு விளங்கி இருக்கும் எண்டு நினைக்கிறன். என்ன சுமன்?’
‘ஓ… ஓ… விளங்குது.’ என்றான் சுமன்.
‘அது நல்லது.’ என்றான் கண்ணன்.
எல்லோரும் அணிவகுப்பிற்கு வந்து அந்தந்த இடங்களில் நின்றார்கள். அணிவகுப்புக் கணக்கெடுப்போடு தொடங்கியது. கணக்கெடுப்பில் எண்ணிக்கைகள் பலமுறை சரிபார்க்கப்பட்ட பின்பு அதை உறுதிப்படுத்தினார்கள். பின்பு முகாம் நடைமுறைகள் பற்றிக் கதைத்தார்கள். அப்போது காலையில் யாரும் பயிற்சிக்குப் பிந்தி வரக்கூடாது என்றும் அப்படிப் பிந்தி வந்தால் தயவு தாட்சண்ணியம் இன்றித் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதில் கண்ணனுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. சுமனுக்கும் அது தெளிவாக விளங்கி இருக்கும் என்றே எண்ணினான். ஆனால் அவனை இப்போது அதைப் பற்றிக் கேட்க முடியாது. அணிவகுப்பில் நிற்கும் போது ஆட்டம் அசைவு எதுவும் இருக்கக்கூடாது. இருந்தால் அதற்கும் தண்டனை கிடைக்கும். அதனால் இராணுவ விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கண்ணனுக்கோ தோழர் சிவத்திற்கோ மாற்றுக் கருத்து இருக்கவில்லை.
அணிவகுப்பு முடிந்த பின்பு மைதானத்தின் மென் மணலில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இருந்து தோழர்கள் சுவாரசியமாகக் கதைத்தார்கள். கண்ணன், சிவம், சுமன், குமரன், சோழன் ஆகியோர் சுற்றி ஒரு இடத்திலிருந்து கதைத்தார்கள். அது சுமனுக்கும் மிகவும் ஆறுதலாக இருந்தது. வெக்கை அடங்கிச் சந்திரன் தனது குளிர் கிரணங்களைப் பரப்பிக் கொண்டு இருந்தான். நான்கு கரையும் சவுக்கம் தோப்புகள் மலை போல நிமிர்ந்து அமைதி பேசின. சவுக்கு மரங்கள்கூடச் சந்திரப் பிரசன்னத்தில் சீதள அலைகளைப் பிரசவித்தது. மாலைச் சாப்பாடாக ரொட்டி செய்யும் வாசம் வந்து கொண்டே இருந்தது. ரொட்டியும் பருப்புக் கறியும் மாலைச் சாப்பாடாக வழங்கப்படும் என்பது கண்ணனுக்குத் தெரியும். சுமன் அதை விரும்பி உண்ண வேண்டும் என்பது அவன் அவாவாக இருந்தது.
‘என்ன தோழர் கடுமையா யோசிக்கறியள்?’ என்றார் தோழர் சிவம்.
‘ஒண்டும் இல்லை. ரொட்டி வாசம் வருகுது. அதுதான் பின்னேர சாப்பாடு எப்பிடி இருக்கும் எண்ட ஒரு கற்பனை தோழர்.’
‘சாப்பாடு நல்லா இருக்கும் எண்டு நினைச்சாச் சாப்பாடு நல்லா இருக்கும். சாப்பாடு கூடாமல் இருக்கும் எண்டு நினைச்சாச் சாப்பாடு கூடாமல்தான் இருக்கும். சுவை எண்டுகிறது நாக்கில தெரிஞ்சாலும் மூளைதான் அதைப் பிரதிபலிக்கிறது எண்டுகிறது உண்மை. அதால தாறது எல்லாம் நல்ல சுவையா இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டு சாப்பிட்டா அது சுவையாகவே இருக்கும். இதுக்கு எல்லாம் கடுமையா யோசிக்கக் கூடாது. நிச்சயமா இந்த உணவுப் பொருட்களைச் சேர்க்கிறதுக்கும் இங்க கொண்டு வாறதுக்கும் கழகம் எவ்வளவு கஸ்ரப்பட்டு இருக்கும் எண்டதை யோசிச்சா சாப்பாட்டில நாங்கள் சுவை பார்க்கிறதை மறந்து போக வேணும். விடுதலை எண்டு வெளிக்கிட்டு வந்து இருக்கிறம் தோழர். இப்ப இங்க வந்து எங்கடை நலத்தை எதுக்காகவும் முன்னிறுத்தக் கூடாது. எதையும் சாமாளிச்சுப் போக வேணும். நான் சொல்லுகிறது சரியா?’ என்றார் தோழர் சிவம்.
‘உண்மைதான் தோழர் சிவம். எங்களுக்கு நீங்கள் சொல்லுகிறது நல்லா விளங்குது. போராட்டத்தில சுயநலத்திற்கு ஏது இடம்? சுயநலம் பார்க்காத நாங்கள் சுவை பார்க்க முடியுமா?’  என்றான் கண்ணன்.
‘சுமன் இப்ப எல்லாம் ஓகேயா?’ என்றார் தோழர் சிவம்.
‘ஓம் தோழர்.’
‘ஊரில எப்பிடி இருந்தம் எண்டதை எல்லாம் மறந்திட்டு இங்க இருக்கிற நிலைமைக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ள வேணும். அதுதான் புத்திசாலித்தனம்.’ என்றார் தோழர் சிவம்.
‘விளங்குது தோழர்.’
‘அவன் பிழைச்சிடுவான் தோழர்.’ என்றான் தோழர் குமரன்.
கண்ணன் சுமனைப் பார்த்தான். அவன் சேர்ந்து இருந்து கதைத்தாலும் அவன் முழு இருப்பும் அங்கே இருப்பதாய் கண்ணனுக்குத் தோன்றவில்லை. எல்லாம் போகப் போகச் சரியாகும் என்று எண்ணிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் மாலைச் சாப்பாட்டிற்கான வீளை அடிக்கப்பட்டது. அனைவரும் தட்டையும், குவளையைiயும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். மனது சம்மதிக்காவிட்டாலும் வேறு வழியின்றிச் சுமனும் அவர்களோடு சேர்ந்து கொண்டான். மத்தியானம் சாப்பிட்டது போல் இப்போது இருக்கக் கூடாது என்று கழகத்தின் கொள்கைக்கு எதிராக, இரகசியமாகக் கடவுளைப் பிரார்த்திக் கொண்டான்.
சுமனுக்குச் சாப்பாடு பிடிக்காவிட்டால் என்ன? மற்றைய தோழர்களுக்கு அப்படி இல்லை என்பது போல நிரை நீண்டு, வளைந்து, வளர்ந்து நின்றது. அதன் இறுதியில் கண்ணன், குமரன், தோழர் சிவம் நிற்க இறுதியாகச் சுமன் அதைத் தொடர்ந்தான். சிறிது நேரத்தில் அவனையும் தொடர்ந்து பலர் நின்றார்கள்.
சாப்பாடாக மூன்று ரொட்டிகளும் பருப்புக் கறியும் வழங்கப்பட்டன. அத்தோடு குடிப்பதற்கு நீரும் எடுத்துக் கொண்டு வந்து மைதானத்தில் வெளிச்சம் பார்த்து அமர்ந்தார்கள். பசியிலிருந்த தோழர்களுக்கு அதற்கு மேல் கதைப்பதைவிடப் புசிப்பதில் ஆர்வம் பொங்கியது. ரொட்டியின் வாசம் அதை மேலும் நெருப்பாகத் தூண்டியது. ரொட்டியைக் கிழித்துப் பருப்பை அதில் அள்ளிப் புசிக்கத் தொடங்கினார்கள். அதைப் பார்த்துக் கொண்டு இருந்த சுமன் தானும் ஒரு துண்டை அப்படிக் கிழித்துப் பருப்புக் கறியில் சிறிதை அள்ளி வாயில் வைத்தான். அவனுக்கு மீண்டும் வயிற்றைப் புரட்டுவது போல இருந்தது. கறி இல்லாது ரொட்டியை மட்டும் சாப்பிடலாம் என்று எண்ணி ரொட்டியை மட்டும் எடுத்துச் சிறு துண்டைக் கிழித்து வாயில் வைத்தான். அதில் உப்பும் இல்லைச் சுவையும் இல்லை என்பதை அப்போது அவன் அறிந்து கொண்டான். வயிறு குளறியது. வேறு வழி எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. அவன் மெதுவாக மெல்லத் தொடங்கினான். அதைப் பார்த்த தோழர் சிவம்,
‘கறியையும் சேர்த்துச் சாப்பிடுங்க தோழர். இங்க எது தந்தாலும் பயிற்சி செய்கிறவைக்கு அவசியமான உணவுதான் தருவினம். அதில கறியை விட்டியள் எண்டாத் தேவையான சக்தி உங்களுக்குக் கிடைக்காமல் போயிடும். அதால எதையும் விடாமல் சாப்பிடப் பாருங்க. அதுதான் புத்திசாலித்தனம்.’

‘இல்லைத் தோழர். அதையும் சாப்பிட நினைச்சா நான் இதையும் சாப்பிட முடியாது. தயவு செய்து என்னைத் தெண்டிக்காதேங்க.’
‘நான் தெண்டிக்க ஒண்டும் இல்லை. உங்கடை நன்மைக்குச் சொன்னன் தோழர். அதுதான் இங்குள்ள நிதர்சனம். அதை நீங்கள் நல்லா விளங்கிக் கொள்ள வேணும். அப்பதான் பயிற்சியை முடிச்சு… வந்த அலுவலைப் பார்க்கப் போகலாம். அதுதான் எல்லாருடைய முக்கிய நோக்கம் எண்டதை மறக்க முடியாது தானே?’
‘விளங்குது தோழர். கொஞ்சம் கொஞ்சமாய் முயற்சி செய்கிறன். உங்களுக்கு என்னுடைய நிலமை விளங்கும் எண்டு நினைக்கிறன்.’
‘ம்…’
‘சுமன் சொல்லுகிறதைக் கொஞ்சம் கவனி. தந்ததை நல்லாச் சாப்பிடு. நாளைக்குக் காலையில பயிற்சி இருக்குது. பட்டினியா இருந்திட்டு அங்க போய் கஸ்ரப்படுகிறது இல்லை.’
‘எனக்கு விளங்குது கண்ணன். தயவு செய்து இப்ப நீயாவது சும்மா இரு.’
அதன் பின்பு கண்ணன் எதுவும் கதைக்கவில்லை. சுமன் அரைகுறையாகச் சாப்பிடுவதை மட்டும் அவதானித்தான். அவதானித்தாலும் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.