4. புதிய நாள்

சுமனின் அம்மா அவனுக்கு அரிசிமாப் பிட்டோடு சம்பலும், உருளைக்கிழங்குப் பொரியலும் போட்டுத் தயிரும் விட்டுக் குழைத்து ஊட்டிக் கொண்டு இருந்தார். சுமனும் அதைச் சுவைத்துச் சாப்பிட்டான். அம்மாவின் கைப்பட்டாலே தனிச் சுவை. அம்மாவே சமைத்தால் அது தெவிட்டாத தேவாமிர்தம். அந்தத் தேவாமிர்தத்தை நித்தம் உண்ணக் கிடைத்ததே எப்பிறப்பிலோ செய்த பெரும் புண்ணியம். அப்படி அவன் சுவைத்து உண்ணும் போது அவர்கள் வீட்டின் முன்பு இராணுவ வண்டி ஒன்று வந்து நின்றது. அதைக் கண்டவுடன் சுமன் யோசிக்காது வேலியைத் தாண்டி ஓடினான். அவன் ஓடியதால் ராணுவம் அவன் அம்மாவைச் சுட்டுக் கொன்றது.

‘அம்மா… அம்மா… ஐயோ… அம்மா…..’ என்று கத்திப் பக்கத்தில் படுத்து இருந்தவர்களையும் குழப்பினான் சுமன். கண்ணன் அவனின் சத்தத்தில் முழித்து விட்டதால் அவன் கன்னத்தில் தட்டினான். அவன் தட்டியதை அடுத்து முழிப்பிற்கு வந்த சுமன் என்ன நடந்தது என்பது விளங்காது விழித்தான். அவனை அப்படிப் பார்த்த கண்ணன்,
‘என்ன கனவே கண்ணடனீ?’ என்றான்.
‘ம்…. ஊரில அம்மா சாப்பாடு தார மாதிரி…’
‘மனதில உள்ள ஆசை கனவா வந்து இருக்குது.’
‘சாப்பாடு மாத்திரம் எண்டாப் பருவாய் இல்லை. ஆமி வாற மாதிரி… அம்மாவைச் சுடுகிற மாதிரி… எனக்கு என்னவோ போல இருக்குது.’
‘அது எல்லாம் சும்மா கனவு… மனப்பீதி…  பேசாமல் படு.  காலமை போட்டு முறிப்பாங்களாம்.’
‘ம்… எனக்கு ஏற்கனவே உடம்பு இயலாமல் இருக்குது.’
‘ஒழுங்காச் சாப்பிடு எண்டு எல்லாரும் அதுக்குத்தான் விழுந்து விழுந்து உனக்குச் சொன்னது. இனியாவது விளங்கும் எண்டு நினைக்கிறன்.’
‘ச்… விடு. இயலுமானவரை நான் றை பண்ணுவன்.’
‘இது ஒற்றை வழிப்பாதை.’
‘தெரியும்.’
‘இப்ப படு. கெதியாய் பொழுது விடிஞ்சிடும். பிறகு கால் குண்டியில தட்ட ஓட வேணும்.’
‘ம்…’
அவன் திரும்பிப் படுத்தான். அதனால் கண்ணன் மேற்கொண்டு நித்திரை கொள்ளக் கடுமையாக முயற்சிதான். கூவுவதற்குச் சேவல் அருகில் இல்லை. ஆனால் திடீரென வீளைச் சத்தம் பிளிறிற்று. எல்லோரும் துடித்துப் பதைத்து எழுந்தார்கள். கண்ணனும் அவர்களோடு எழுந்தான். சுமன் தொடர்ந்தும் நித்திரை கொள்வதைப் பார்க்க முதலில் என்ன செய்வது என்று அவனுக்கு விளங்கவில்லை. பின்பு யாராக இருந்தாலும் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்கின்ற உண்மை உறைக்க அவசரமாக அவனை உலுப்பி எழுப்பினான். அவன் எழாது நித்திரை கொள்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அத்தோடு ஏனோ பயமாகவும் இருந்தது. கண்ணன் சுமனைத் தெண்டி எழுப்பி இருத்தினான். அவன் சிரமப்பட்டு எழுந்து இருந்தான்.

‘நீ எழும்பி வாரியா? இல்லாட்டி நான் வெளியால போகட்டுமா? நீ விரும்பித்தானே இயக்கத்துக்கு வந்த நீ? பிறகு அதுகின்ரை கட்டுப்பாடு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடக்காட்டி அதுக்கான விளைவையும் ஏற்க வேணும். என்னால இயலுமானவரைச் சொல்லத்தான் முடியும். அதுக்கு மேல உன்னுடைய விருப்பம்.’ என்று கூறிய கண்ணன் கோபத்தோடு எழுந்தான். சுமனக்கு நிலமை சாதுவாக விளங்கத் தொடங்கியது. அவன் தெண்டித்து எழுந்தான். கண்ணன் அதற்குமேல் தாமதியாது குவளையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். சுமனும் தனது குவளையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
எல்லோருக்கும் காலைத் தேநீர் கொடுக்கப்பட்டது. வரிசையில் நின்று கண்ணனும் சுமனும் அதைப் பயபக்தியோடு வாங்கினார்கள். அது வெறும் தேநீர். அத்தோடு துண்டு வெல்லமும் கொடுக்கப்பட்டது. அதைக் குடித்து இதைக் குடித்து முடித்த பின்பு வெளிக்குப் போய் வர வேண்டும். அதன் பின்பு முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு பயிற்சிக்குச் செல்ல வேண்டும். நேரத்திற்குப் பயிற்சிக்குச் சென்றுவிட வேண்டும் என்பதில் கண்ணனுக்கு மிகவும் அக்கறை இருந்தது. அவன் தேநீரை விரைவாகக் குடித்து முடித்து விட்டுச் சுமனைப் பார்த்தான். சுமனும் ஒருவாறு அதை விளங்கிக் கொண்டு தேநீரை விரைவாகப் பருகி முடித்துவிட்டு கண்ணனோடு புறப்பட்டான். இருவரும் காலைக் கடனை முடித்து மைதானத்திற்கு நேரத்திற்கு ஒருவாறு வந்ததில் கண்ணனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

சுமனை இதுவரையும் இழுத்து வந்ததில் கண்ணனுக்கு ஒரு சொல்ல முடியாத பெருமைகூட. மேற்கொண்டு அவன் செய்ய வேண்டிய பயிற்சியை அவனே செய்ய வேண்டும். அவனுக்காக யாரும் பயிற்சி செய்ய முடியாது. அதை எல்லாம் கவனிப்பது தனது வேலை இல்லை என்பதும் அவனுக்கு விளங்கியது. என்றாலும் சுமனை எண்ணும் போது அவனுக்குத் தொடர்ந்தும் கவலையாக இருந்தது. பயிற்சிகள் தொடங்கின. அணிவகுப்பில் ஒன்றாக நின்றாலும் ஓட்டம் தொடங்கிய பின்பு அவனைக் கண்ணனால் கவனிக்க முடியவில்லை. கண்ணனுக்கே மூச்சு வாங்கியது. உடல் அனலாகக் கொதித்தது. அதைக் குளிர்விக்கக் குடம் குடமாய் வியர்த்துக் கொட்டியது. வியர்வை வழிந்து வழிந்து சூரிய வெப்பத்தில் அது காய்ந்ததில் உப்பு உடுப்பில் ஏறியது. அது வெள்ளைப் பட்டையாகத் தெரிந்தது. கண்ணனுக்கு வாயிலிருந்த உமிழ் நீர் வற்றிப் பிசினாக அது நாக்கில் ஒட்டியது. குடிப்பதற்கு நீர் கேட்க முடியாது. பயிற்சியை விட்டும் அசைய முடியாது. ஓட்டம் ஒருவாறு முடிவுற்றது. அதை அடுத்துப் பயிற்சி தொடங்கியது. அவன் வேறு வழியின்றி அதைக் கவனமாகக் கிரகித்துச் செய்யத் தொடங்கினான். கண்ணனுக்கு மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியது. மயக்கம் வந்துவிடுமோ என்கின்ற பயம்கூட வந்தது. அதை மேலும் கொடுமையாக்குவது போல ஆதவன் அனலாய் கொதித்து உச்சிக்கு மேல் எழும்பினான்.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே… என்பது உயிரோடு இருக்கும் போது உலகு மறந்த உண்மையான கவியின் வரிகள். அந்தக் கவிதை வரிகள் போல என்ன நடந்தாலும் பின்வாங்குவதில்லை என்கின்ற ஓர்மத்தோடு அவன் பயிற்சியைச் செய்தான்.
‘சுமன் என்ன ஆனான்?’ என்கின்ற ஒரு கேள்வி அவன் மனதில் திடீரென உதித்தது.
‘சமாளித்து இருப்பானா? சமாளித்து இருப்பான்.’ என்று மனதைத் திருப்திப்படுத்திக் கொண்டு அவன் தொடர்ந்தும் பயிற்சியைக் கவனித்தான்.
பயிற்சி முடிந்ததும் சுமன் எங்கே என்று தேடினான். அவனை ஒரு இடமும் காணமுடியவில்லை. அப்போது சிவம் தோழரும் பயிற்சி முடிந்து வந்தார். அவரைப் பார்த்ததும்,
‘தோழர் சுமனைப் பாத்தீங்களா?’
‘இல்லையே… நான் றெயினங் தொடங்கீனாப் பிறகு அவரைச் சுத்தமாய் கவனிக்க இல்லை. ஏன் நீங்கள் அவரை இடையில காண இல்லையா?’
‘இல்லைத் தோழர். அதுதான் கேட்டன்.’
‘சரி. தேடிப்பாரும். எங்கேயாவது நிற்பார்.’
‘சரி… நான் தேடிப் பார்க்கிறன்.’
‘தேடிப்பாரும். கிறவுண்டில இல்லாட்டிச் சில வேளை காம்பிற்குத் திரும்பிப் போய் இருப்பார். அங்க போய் பார்த்தால் ஆளைப் பார்க்கலாம் எண்டு நினைக்கிறன். முதல்ல இங்க பாரும். இல்லாட்டி காம்பிற்குப் போய் பாரும்.’
‘சரி. நீங்கள் சொல்லுகிறது சரிதான். நான் அப்பிடிச் செய்கிறன். நீங்கள் வாறீங்களா?’
‘இல்லை. எனக்கு வயித்துக்க ஒரு மாதிரி இருக்குது. ஒருக்கா வெளிக்குப் போயிட்டு வரவேணும். நீர் முதல்ல முகாமிற்குப் போம்.’
‘சரி… சரி… நான் போய் பார்க்கிறன்.’
கண்ணன் மைதானத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். எங்கும் அவனைக் காணவில்லை. மைதானத்தின் சுவர்களாக நின்ற சவுக்கம் தோப்புக்களை ஊன்றிக் கவனித்தான். எங்கும் அவன் கண்ணில் சுமன் தட்டுப்படவில்லை. இனி இங்கு நின்று தேடுவதில் பிரயோசனம் இல்லை என்பது அவனுக்கு விளங்கத் தொடங்கியது. அதனால் அவன் அங்கு மேற்கொண்டு தேடுவதை விடுத்து முகாமை நோக்கிச் செல்லும் தோழர்களோடு முகாமை நோக்கிச் சென்றான். கண்ணன் தன்னை அறியாதே விரைவாக நடந்தான். அவனுக்குச் சுமனைப் பார்த்தால் மட்டுமே நிம்மதி உண்டாகும் என்பது விளங்கியது. பயிற்சி முடிந்தால் தேடி வந்து சொல்லி விட்டுப் போய் இருக்கலாம். எதுவும் கூறாது எதற்கு இப்படிப் போனான் என்பதில் கண்ணனுக்குக் கோபம் வந்தது. கோபம் வந்து என்ன செய்வது? அவன் மிகவும் வேகமாக முகாமை நோக்கிச் சென்றான். முகாமிற்கு வந்தவன் அவர்கள் தங்கும் குடிலுக்கு முதலில் சென்று பார்த்தான். அங்கேயும் அவன் இல்லை. ‘இது என்ன கோதாரி.’ என்கின்ற அங்கலாய்ப்பு மேலோங்கியது. நல்ல வேளையாகக் குமரன் அங்கே நின்றான். அவனைக் கேட்டால் ஏதாவது விசயம் தெரிய வரும் என்கின்ற நம்பிக்கையோடு அவனிடம் சென்றான்.
‘சுமனைப் பாத்தீங்களா தோழர்?’  என்றான்.
‘இல்லையே… நான் பார்க்க இல்லையே… எங்க போனான் எண்டு தெரியாதா?’
‘இல்லை. பயிற்சி தொடங்கினால் பிறகு நானும் கவனிக்க இல்லை.’
‘பொறு வாறன். யாரை எண்டாலும் கேட்டாத் தெரியும்.’
என்று கூறிய குமரன் வேறு ஒரு தோழரை நோக்கிச் சென்றான்.

‘தோழர் சுமன் எண்டு புதுசா வந்த தோழரைக் கண்டியளோ?’
‘ஓ… ஓ… அவரைப் பார்த்தம். ஒழுங்கா றெயினிங் செய்யாமல் நல்லா வேண்டிக் கட்டினார். பிறகு தூக்கிக் கொண்டு வந்ததைக் கண்டம். பிறகு எங்கை எண்டு தெரியாது. சில வேளை சிக்காம்பில இருக்கலாம். போய் அங்க பாருங்க.’
அதைக் கேட்டதும் குமரன் சிறிது பதட்டமானான். வந்த முதல் நாளே இப்படிப் பிரச்சினை என்றால் இனிப் போகப் போக என்ன நடக்கும்? ஏன் பயிற்சி செய்ய முடியாத இவன் இயக்கத்திற்குப் புறப்பட்டான்? வினாக்கள் விடைகள் இல்லாது அவனது மண்டைக்குள் குடைந்தன.
அவசரமாகத் திரும்பி வந்தவன்,
‘சிக்காம்பில சில வேளை இருப்பான் எண்டு சொல்லுகிறான்.’
‘சிக்காம்பா? அதுக்கேன் அவன் போகிறான்? அவனுக்கு என்ன வருத்தமே? இராத்திரி ரொட்டி சாப்பிட்டவன் தானே?’
‘தெரியாது கண்ணன். இப்ப முதல்ல அவனைப் போய் பார்ப்பம்.’
‘அவன் அங்க இருக்கச் சந்தர்ப்பம் இருக்காது.’
‘நானும் அப்பிடிதான் நினைக்கிறன். எண்டாலும் ஒரு எட்டுப் பார்த்திட்டு வருவம் கண்ணன். அப்ப அந்தச் சந்தேகமும் இருக்காது இல்லையா?’
‘ம்… நீ சொல்லுகிறதும் சரிதான். சரி வா போய் பார்த்திட்டு வருவம். அப்பதான் வேறை எங்யையாவது இருக்கிறான் எண்டாவது யோசிக்கலாம்.’

அதன் பின்பு இருவரும் புறப்பட்டு வருத்தக்காரர்கள் தங்கும் முகாமிற்குச் சென்றார்கள். உள்ளே செல்லும் வரையும் சுமன் அங்கே இருப்பான் என்று கண்ணன் நினைக்கவில்லை. அதைவிட அவன் உடம்பிலிருந்து கசிந்த இரத்த அடையாளங்கள் அவனை மலைகள் வந்து நிஜத்தில் மோதியதாக அதிர வைத்தன. அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்து இருந்தான். அவனிடம் இருந்து வேதனையால் அனுங்கும் சத்தம் கேட்டது. அதைப் பார்த்த கண்ணனுக்கு அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருந்தது. மயக்கம் வந்துவிடும் போலத் தோன்றியது. அவன் அந்த உணர்வுகளைத் தள்ளி வைத்தான். சுமனை நோக்கி ஓடினான். கண்ணன் மீண்டும் மீண்டும் அதிர்ந்து போனான். சுமனின் முகம் அதைத்துப் போய் இருந்தது. போர்வையை விலக்கிப் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. மாட்டிற்குக் குறி சுட்டது போல உடம்பு எங்கும் அடி விழுந்த அடையாளங்கள் புண்ணாகத் தெரிந்தன. கண்ணனால் வேதனையைத் தாங்க முடியவில்லை. அவன் கண்கள் அவனையும் அறியாது நிலை இல்லாது பனித்தன. அவனுக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை. கண்ணனைக் கண்டதும் சுமன் எதுவும் சொல்லவில்லை. அவன் கண்கள் கட்டுப்பாடு இல்லாது பனி மலைகள் கரைவதாகக் கரைந்தன. சிறிது நேரத்தில் அவன் விம்மி விம்மி அழுதான். அவன் அப்படி அழுவதைக் கண்ணனால் பார்க்க முடியவில்லை.
‘அழாத சுமன். என்ன நடந்தது? ஏன் இப்படிக் காயம் வந்தது? உன்னை யார் இப்படி அடிச்சது?’
‘ஐயோ…..’ அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.
‘அழாத சுமன். என்ன நடந்தது எண்டு சொல்லு.’
‘சூ… நீ முகாமிற்குப் போ.’
‘ஏன்?’
‘உனக்குத் தேவை இல்லாத பிரச்சனைகள் எதுக்கு? நான் பின்னேரம் இல்லாட்டி நாளைக்கு அங்க வருவன். அப்ப கதைக்கலாம். இப்ப நீ போய் உன்ரை அலுவலைப் பார்.’
‘அப்பிடியே உனக்குக் காயம் இருக்குது. ஏன் நான் போக வேணும்?’
‘இல்லைக் கண்ணன். நீ போ. என்னை எதுவும் இப்ப கேட்காதை.’
‘ஏன்ன சுமன் இப்பிடிச் சொல்லுகிறா?’
‘அது உனக்குப் போகப் போக விளங்கும். நீ இப்ப போ. ஐயோ… தயவு செய்து போ.’  அவன் முணுகிய வண்ணம் திரும்பிப் படுக்க முயற்சித்தான்.
‘உனக்கு என்ன நடந்தது எண்டதைச் சொல்லுகிற வரைக்கும் நான் போக முடியாது.’
‘இல்லைக் கண்ணன். தேவையில்லாமல் அடம்பிடிக்காத. சுமன் சொல்லுகிறதிலையும் அர்த்தம் இருக்குது. அது உனக்குப் போகப் போக விளங்கும். இப்ப நீ என்னோடை வா. நாங்கள் போவம். காலைமைச் சாப்பாட்டுக்கு விசில் ஊதீட்டாங்கள்.’
‘தோழர் நீங்களுமா?’
‘ம்… இப்ப அமைதியா வாரும்.’
‘அவனை விட்டிட்டா?’
‘ச்… வாரும்.’
கண்ணன் கவலையோடு சுமனைப் பிரிந்து சென்றான். என்ன நடக்கிறது என்பது அவனுக்கு முழுமையாக விளங்கவில்லை. விளங்கியமட்டில் இப்படியான ஒரு தமிழ் இராணுவத்திற்கு வருவதாய் அவன் நினைத்து இருக்கவில்லை. நினைப்பது வேறு நடப்பது வேறாக இருக்கலாம். எது எப்படி என்றாலும் இது ஒரு வழிப்பாதை என்பது விளங்கியது. தங்களது குடிலுக்குத் திரும்பி வந்தாலும் மனது அமைதி இல்லாது துடித்தது. சுமனை யார் அப்படி அடித்தார்கள் என்பது விளங்கவில்லை. அதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவனது எண்ணமாக இருந்தது. அதைத் தோழர் சிவம் அல்லது தோழர் குமரனிடம் மட்டுமே கேட்டு அறியலாம் என்பது அவனுடைய எண்ணமாக இருந்தது. கண்ணன் மெதுவாகத் தோழர் குமரன் அருகே சென்றான். சென்றவன் மிகவும் தணிவான குரலில்,
‘என்ன நடந்தது தோழர். யார் சுமனை அப்பிடி அடிச்சது? எதுக்காக அவனை அப்பிடி அடிச்சிருக்கினம்? தயவு செய்து சொல்லுங்க தோழர். இல்லாட்டிப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்குது. இதை நானோ அவனோ எதிர்பார்க்க இல்லை.’
‘பயிற்சி எண்டு வந்தா பயிற்சி செய்ய வேணும். அதில யாருக்கும் எந்தச் சலுகையும் இங்க கிடைக்காது. இங்க வந்த பிறகு உழவுக்குப் பயந்த கள்ள நம்பனாட்டம் படுக்க நினைச்சா இப்பிடித்தான் அடி வேண்ட வரும். கழகத்திற்கு வெளிக்கிட்டு வரேக்கையே சுகபோக வாழ்க்கை பற்றின எந்த எண்ணமும் இருக்கக் கூடாது. அப்பிடியான எண்ணம் இல்லாட்டி எந்தப் பிரச்சனையும் இருக்காது. கழகம் கஸ்ரப்பட்டுத்தான் எங்களுக்குச் சாப்பாடு, தங்குகிற இடங்கள், தேவையான உபகரணங்கள் எல்லாவற்றையும் சேர்த்து எங்களுக்குப் பயிற்சி தருகுது. அதை நாங்கள் துஷ்பிரயோகம் செய்கிறது எண்டா ஒழுங்காப் பயிற்சி செய்யாமல் இருக்கிறதாகத்தான் இருக்கும். அப்படிச் செய்தால் அவங்கள் இப்பிடிதான் அடிப்பாங்கள். அதில அவங்களை யாரும் குறை சொல்ல முடியாது.
‘என்ன கதைக்கிறீங்கள் தோழர்? நாங்கள் என்ன அரச இராணுவத்திற்கே வந்து  இருக்கிறம்? நாங்கள் விடுதலைக்கா ஒரு விடுதலை இயக்கத்திற்கு விரும்பி வந்து இருக்கிறம். இங்க நாங்கள் எல்லாரும் சமனான தோழர்கள் தானே? தோழர் எண்டுகிறவையே தோழரை அடிப்பினமா? அது இங்க நடக்குமா தோழர்? அதைக் கழகம் அனுமதிக்குமா? என்னால இதை நம்ப முடியாமல் இருக்குது. ஒரு விடுதலை இயக்கம் எண்டுகிறதே தோழரை அடிமையா நடத்துமா? பயிற்சி செய்ய முடியாட்டி அவங்களை அடிக்கிறது அதுக்கு பதிலாகுமா? அப்படி எண்டா இது என்ன விடுதலைக்கானா போராட்டம்? நிலத்தை மாத்திரம் விடுவிக்கிறதுதான் விடுதலையா? அப்படி ஒரு விடுதலை எங்களுக்குத் தேவையா? இதை என்னால ஏத்துக் கொள்ள முடியாது. இதுதான் இயக்கம் எண்டா நான் உடனடியாகத் திரும்பி ஊருக்குப் போக வேணும்’
‘இப்படி நீர் கதைக்கிறது எண்டா நான் போகிறன். இங்க உள்ள நிலைமை தெரியாமல் நீர் கதைக்கிறீர். உம்மோடை சேர்ந்து நானும் மாட்டுப்பட விரும்ப இல்லை. நாங்கள் இயக்கத்திற்கு வந்தாச்சுது. பயிற்சியைக் கெட்டித்தனமாய் செய்து நாட்டுக்காக எவ்வளவு சிறப்பாகப் போராட முடியமோ அவ்வளவு சிறப்பாகப் போராட வேணும். அதைவிட்டிட்டு தேவையில்லாத கதை கதைச்சுத் தேவையில்லாத இடங்களில வதை படுகிறது புத்திசாலித்தனம் இல்லை. இதை முதல்ல தெளிவா விளங்கி வைச்சிரும். நீங்கள் தேவையில்லாமல் மாட்டுப்படுகிறதோடை மற்றவையையும் தேவையில்லாமல் இழுத்து விடாதையுங்க.’
‘என்ன நீங்கள் இப்பிடிக் கதைக்கிறியள்?’
‘நிலைமையை விளங்கிக் கொள்ளுங்க தோழர்… கழகத்தில என்ன நடக்குது எண்டு உங்களுக்கு விளங்க இல்லை எண்டு நினைக்கிறன். தேவை இல்லாமல் நீங்களும் சிக்கலில மாட்டிக் கொள்ளாதீங்க. நீங்கள் உங்கடை அலுவலைப் பாருங்க. சுமன் கொஞ்சம் கொஞ்சமா நிலைமையை விளங்கிக் கொள்வார். அதை விட்டிட்டு சுமனுக்கு உதவி செய்யகிறம் எண்டு நினைச்சுக் கொண்டு உங்கடை கழுத்தில நீங்களே சுருக்குக் கயிறு மாட்டிக் கொள்கிறது புத்திசாலித்தனம் இல்லை. தத்துவங்கள், கொள்கைகள் போன்றவற்றிற்கும் நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதை விளங்கிக் கொண்டு நடக்க வேணும். தவளைமாதிரிக் கத்தினா உங்களை நீங்களே காட்டிக் குடுக்கிற மாதிரி இருக்கும்?’
‘விளங்குதா தோழர்? இருந்தாலும் இதை நான் கனவிலும் எதிர்பார்க்க இல்லை. நினைச்சு வந்தது வேறை. இங்கத்தே நடைமுறை வேறை.’
‘விளங்குதுதானே? அதுக்கேத்த மாதிரி நடவுங்க. சுமனை மாதிரி நடந்தா உங்களுக்கும் அதே நிலைமைதான்.’

‘இதயம் இல்லாத விடுதலை இராணுவம் எண்டுறியள்.’
‘போராட்டத்தில வெல்ல வேணும் எண்டா வேற வழி இல்லை. அதை நாங்களும் விளங்கிக் கொள்ள வேணும். இராணுவம் எண்டா அது எந்த இராணுவம் எண்டாலும் இப்பிடிதான்.’
தோழர் குமரனும் கண்ணனும் கதைத்துக் கொண்டு இருக்கும் போது தோழர் சிவம் தான் சென்ற அலுவல்களை முடித்துக் கொண்டு மீண்டும் அங்கே வந்தார். அங்கே வந்த அவருக்குச் சுமனைக் காணவில்லை என்பது சற்று வியப்பாக இருந்தது. அதனால் தோழர் சிவம் கண்ணனைப் பார்த்து,
‘சுமன் எங்க? ஏன்; இன்னும் அவன் இங்க வர இல்லை?’ என்றார்.
‘தோழர் சிவம் அதைத்தான் நாங்களும் கதைச்சுக் கொண்டு இருந்தம். எது நடக்கக் கூடாது எண்டு நாங்கள் நினைக்கிறமோ அதுதான் இங்க வழக்கம் எண்டு தோழர் குமரன் செ;லலுகிறார். எனக்கு இது பெரிய அதிர்ச்சியா இருக்குது. உண்மையில இதை என்னால கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடிய இல்லை. தோழர் எண்டாத் தோழர் தானே? தோழமையில என்ன பாகுபாடு? விடுதலை இல்லை யுத்தம்தான் எங்களுக்கான விடிவு எண்டாப் பிறகேன் நாங்கள் இதுக்கு வாறம்? நீங்க சொல்லுங்க?’
‘கண்ணன் நீங்கள் சொல்லுகிறது ஒண்டும் விளங்க இல்லை. என்ன நடந்தது? ஏன் நீங்கள் இப்பிடிக் கதைக்கிறியள்?’
‘அதுக்குக் காரணம் இருக்குத் தோழர் சிவம். சுமன் ஒழுங்காப் பயிற்சி செய்ய இல்லை. காலமை பயிற்சியில ஓடியே இருக்க மாட்டான் போல. அவங்கள் சாதுவா வாட்டி எடுத்து இருக்கிறாங்கள். அதால அவனை வருத்தக் காரருக்கான முகாமில படுக்க விட்டிருக்கிறாங்கள். கெதியாத் திருப்பி இங்க அனுப்பி விடுவாங்கள். அதைக் கேட்டதில இருந்து தோழர் கண்ணன் கொதிக்கிறார். ஆனால் இந்தக் கொதிப்பு அவருக்கு நன்மையா இருக்காது எண்டு ஏன் விளங்குது இல்லை.’
‘ஓ… அப்பிடியே தோழர். கண்ணன் நீர் கொஞ்சம் பொறுமையா இரு. அவதானமாய் கதை. பயிற்சிக்கு எண்டு வந்திட்டுப் பயிற்சி செய்ய முடியாது எண்டா அவங்கள் விடமாட்டாங்கள். அதைப் பிழை எண்டும் முழுமையாகச் சொல்ல முடியாது. இப்பிடி ஒரு இயக்கத்தை நடத்துகிறது எவ்வளவு கஸ்ரம் எண்டு எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. அதை விளங்காமல் பயிற்சி செய்ய முடியாது எண்டாக் கொஞ்சம் கடுமையாகத்தான் இருப்பாங்கள்.’
‘என்ன தோழர் சிவம்… நீங்களும் இப்பிடிக் கதைக்கிறியள்?’
‘அதுதான் நடைமுறை தோழர் கண்ணன். நல்லா விளங்கிக் கொள்ளுங்க. தேவையில்லாத பிரச்சனையில மாட்டுப்படாதேங்க.’
‘இது என்ன போராட்டம்?’ என்றான் கண்ணன்.
‘இதுவும் போராட்டம்தான். இதைவிட மோசமாகவும் இது நடக்கலாம்.’ என்றார் தோழர் சிவம்.

கண்ணன் அதற்கு மேல் தொடர்ந்து கதைக்கவில்லை. அவன் மனது வேதனையில் வெந்தது. கழகத்திற்கு வந்தால் ஒழுங்காகப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதிலோ ஒழுங்காகப் போராடத் தயாராக வேண்டும் என்பதிலோ அவனுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தோழர் என்கின்ற அடிப்படையே நழுவும்போது அதை அவனது மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது. தோழர் என்பவன் மீது தோழர் என்பவனே அத்து மீறிக் கைவைப்பது? உடலில் காயம் வருவது போலத் தண்டிப்பது ஒரு அரச இராணுவத்திற்கு வந்ததான உணர்வையே அவனுக்கு உண்டு பண்ணியது. கழகத்தின் போராட்டத்தில் தோழர்களுக்குச் சமவுரிமை கிடையாது என்பது அப்பட்டமாய் தெரிகிறது. அப்படி என்றால் தோழர்களுக்குக் கொடுக்க முடியாத சமவுரிமையை இவர்கள் எப்படி மக்களுக்குக் கொடுப்பார்கள்? இவர்களால் அப்படி எதையாவது கொடுக்க முடியுமா? மனைவிக்குக் கொடுக்காத உரிமையை மகளுக்குக் கொடுக்க முடியுமா? கொடுப்பது என்றால் யாவருக்கும் அந்த உரிமை கொடுக்கப்பட வேண்டும். இல்லை என்கின்றபோது அங்கே சர்வாதிகாரம் கருக் கொள்கிறது. அப்படி என்றால் இங்கே என்ன நடக்கிறது?

சுமனை எண்ண எண்ணக் கண்ணனுக்குக் கவலையாக இருந்தது. இயக்கத்திற்கு எண்டு வந்தாகிற்று. பின்பு பயிற்சி செய்யப் பின்வாங்கக் கூடாது. அப்படிப் பின்வாங்குவது வந்த நோக்கத்திற்குக் கழகத்தின் எண்ணத்திற்கு என்று எல்லாவற்றிற்குமான நம்பிக்கையைச் சிதைப்பதாக இருக்கும். சுமன் அப்பிடிச் செய்யாது இருந்து இருக்கலாம். அவன் வேண்டும் என்று செய்திருக்கமாட்டான். அவன் வந்த அன்றே சாப்பாடு அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. சாப்பாடு ஒத்துக் கொள்ளாது அவளைப் பலவீனப்படுத்தி விட்டது. அதன் பின்பு கொடுக்கப்பட்ட கடுமையான பயிற்சியை அவனால் செய்ய முடியாது போனதில் அதியசம் ஒன்றும் இல்லை. அதற்காக அவனைத் தண்டிப்பது எந்த வகையில் மனிதாபிமானமாகும்? தமது சொந்தத் தோழர்களுக்கே மனிதாபிமானம் காட்டமுடியாத ஒரு கழகமும் அதன் அங்கத்தவர்களும் மக்களுக்கு எப்படி அதைக் காட்டுவார்கள்? மனிதாபிமானம் அற்றவர்கள் போராடி மக்களுக்கு என்ன கிடைக்கும்? மனிதாபிமானம் அற்றவர்களால் உண்மையில் போராட முடியுமா? போராட்டம் என்பது தத்துவ வார்த்தைகளில் புதைந்து இருக்கும் கனவு மட்டும்தானா? கண்ணனின் மனம் அமைதி இன்றித் தவித்தது. சரி பிழை என்று மனதிற்குப் பட்டதைச் சொல்லி விடலாம். ஆனால் இந்த உலகில் எதுவும் சரியாகவோ அல்லது பிழையாகவோ நிரந்தரமாக இருந்து விடுவதில்லை. அது பாத்திரத்தில் ஏந்தப்படும் நீர் போல. என்றாலும் மீண்டும் அவன் மனது வேறு வழி இன்றி பூச்சியத்தில் வந்து நின்றது.