5. தொடர்கதை

சுமனிற்கு மாத்திரம் அன்று மதிய வேளைப் பயிற்சிக்கு விலக்கு அழிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வருத்தக்காரர்களைப் பார்க்கும் மருத்துவர் என்பவர் காரணமாய் இருந்தார் என்பதைக் கண்ணன் பின்பு அறிந்து கொண்டான். மற்றவர்களுக்கு மதியம் பயிற்சி இருந்தது. அது நீண்ட நேரமாக இருக்கவில்லை என்பது பலருக்கு ஆறுதல் தந்தது. அந்த ஒரு மணித்தியாலப் பயிற்சியில் இராணுவ யுக்திகளும் அதற்கான உடற்பயிற்சிகளும் வழங்கப்பட்டன. கண்ணனுக்கு அது மிகவும் கடினமாக இருக்கவில்லை. இருந்தாலும் சவுக்கம் காட்டு வெப்பம் மிகவும் கொடுமையாக இருப்பதாய் அவன் உணர்ந்தான். அந்தப் பயிற்சிகள் களத்தில் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் கண்ணனுக்கு எள்ளளவும் ஐயம் இருக்கவில்லை. அனேகர் அதை ஆர்வத்தோடு கடுமையாகச் செய்வதையும் அவன் அவதானித்தான். அதனால் மகிழ்ச்சியாகவே அந்தப் பயிற்சிகளைச் செய்ய முடிந்தது. பயிற்சிகள் முடிவடைந்த பின்பு தோழர் சிவம் வந்து கண்ணனைப் பார்த்து,
‘தோழர் குளிக்கப் போவமா?’ என்று கேட்டார்.
‘போவம் தோழர். சுமன் என்ன செய்வானோ தெரியாது.’
‘அவரை விடுங்க தோழர். நாங்கள் கூட்டிக் கொண்டு போனா அவரைப் பின்னேரம் பயிற்சிக்கு அனுப்புவாங்கள். அந்த விசப்பரீட்சை எங்களுக்கு எதுக்குத் தோழர்? அவன் ஓய்வெடுக்கட்டும். உடம்பைத் தேற்றட்டும். ஒழுங்காப் பயிற்சியைச் செய்யட்டும். பிறகு எங்களோடை கூட்டிக் கொண்டு திரியலாம்.’
‘ம் நீங்கள் சொல்லுகிறது உண்மை. அப்ப நாங்கள் மாத்திரம் போய் குளிச்சிட்டு வருவம்.’
‘அதைத்தான் நான் சொல்கிறன் தோழர்.’
அதன் பின்பு இருவரும் முகாமிற்குச் சென்று உடுப்பு, சவர்க்காரம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குக் குளிக்கச் சென்றார்கள்.

அன்று ஆற்றில் அதிக வெள்ளம் இல்லை என்றாலும் வைரம் போன்று மிளிரும் தெளிவு அதிலிருந்தது. சூரிய ஒளி பட்டுத் தெறிப்பதைப் பார்க்கக் கண்கள் கூசின. ஓடும் நீர் ஆதலால் குளிர்மை பூண்டு உடலிற்கு இதம் தந்தது. ஆற்றில் சில இடங்களில் ஆழமாகவும் சில இடங்களில் மணல் ஏறிப் பிட்டியாகவும் இருந்தது. ஆழமான இடம் பார்த்துக் கண்ணனும் தோழர் சிவமும் இறங்கிக் குளித்தார்கள். அப்போது கண்ணன் மனதில் நெளிந்த சந்தேகங்கப் புழுக்கள் வெளியே வரத் துடித்தன. அதனால் அவன்,
‘தோழர். நான் ஒண்டு உங்களிட்டைக் கேட்கலாமா?’ என்று தொடங்கினான்.
‘ஏன் இப்பிடிப் பீடிகை போடுகிறீர். கேட்க வந்ததைக் கேழும்.’
‘இல்லை… அநியாயம் நடக்கிற போது அதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கிறியள். பேசாமல் இருக்க வேணும் எண்டு மற்றவைக்கும் சொல்லுகிறியள். அது எப்பிடி ஒரு நியாயமான போராடுகிற குணத்திற்கு ஒத்து வரும்? போராட்டம் எண்டாலே அந்நியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறதும், உரிமையை, சுதந்திரத்தை மீட்டு எடுக்கிறதும் இல்லையா? அந்த குணங்களை எல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு இப்பிடி மௌனமா இருக்கிறதை மனது எப்பிடி ஏற்றுக் கொள்ளும்? இதை நீங்கள் போராளிகளுக்கான குணமா ஏற்றுக் கொள்ளுகிறியளா?’
‘முதல்ல போராட்டம் எதிரிகளோடு மட்டும்தான் எண்டதையும் தோழர்களோடே இல்லை எண்டுகிறதையும் முழுமையாக விளங்கிக் கொள்ள வேணும். இங்க தேவை இல்லாமல் எதிர்த்துக் கதைக்கிறதாலா எங்களுக்கு உள்ள நாங்களே போராடுகிற மாதிரி இருக்கும். அது சரியா? நான் எல்லா இடத்திலும் எல்லா விசயங்களும் நியாயமா நடக்கும் அல்லது நடக்குது எண்டு சொல்ல வரயில்லை. சில வேளை பொதுவான நன்மைக்காக நாங்கள் சில உரிமை மீறல்களை, தப்புக்களைக் கண்டும் காணாமல் இருந்து கொள்ளத்தான் வேணும். அப்பிடிதான் இதுவும்.’
‘இதுகளை என்னால ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்குது தோழர் சிவம். நியாயம் எண்டுகிறது எதுக்கும் வளைஞ்சு போகிறது இல்லை. வளைய நினைச்சாலே நாங்கள் அநியாயத்திற்கு அடிபணிஞ்சிட்டம் எண்டுதான் அர்த்தம். இல்லையா தோழர். அநியாயம் என்ன வடிவில எந்த அளவில நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்க வேண்டாமா? அப்பிடிக் கேட்காமல் விட்டால் அதுவே பெரிய பெரிய தவறுகளுக்கு காரணமாகிடும் எண்டு நினைக்க இல்லையா நீங்கள்?’
‘ஒரு விசயத்தைப் பல கோணத்தில பல மாதிரிச் சிந்திக்கலாம். தற்போதைக்கு முகாம் ஒழுங்கா இயங்க வேணும் எண்டாப் பொறுப்பாளர் தொடக்கம் ஒவ்வொரு தோழர் வரையும் ஒற்றுமையா, ஒரு திசையில பயணிக்க வேணும். அதில எந்தத் தடுமாற்றமோ, மாற்றுக் கருத்தோ இருக்கக் கூடாது. அதே பயணிப்பு எதிரியை நோக்கியும் தொடர வேணும். போராட்டம் வெற்றி பெற்றால் மீதம் வரவேண்டிய உரிமைகள் எல்லாம் வந்து சேர்ந்திடும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை எண்டுகிற மாதிரி இதைக் கொஞ்சம் தூர நோக்கோடை பார்க்க வேணும்.’
‘தூர நோக்கு வேற மாதிரி இருக்கும் தோழர். முதல்ல சிங்கள இராணுவத்திற்கு எதிராக எல்லாரும் போராடுவினம். பிறகு தமிழ் இராணுவத்திற்கு எதிராய் தமிழ் மக்கள் போராட வேண்டி வரும். இந்த அநியாயங்களை இப்ப தட்டிக் கேட்காட்டி அப்பிடிதான் கடைசியில இது வந்து முடியும்.’
‘கண்ணன் நீர் சொல்லுகிறதை முழுமையா என்னால மறுக்க முடியாது. எண்டாலும் நீர் இங்க அமைதியாக இருக்க வேணும். அதுக்கு நான் இப்ப கூறின காரணங்களோடை அதைவிட வேற சில, பல காரணங்களும் உண்டு. எல்லாத்தையும் இப்ப வெளிப்படையாகக் கதைக்க முடியாது. அதால யாருக்கும் எந்தவித நன்மையும் இப்ப வரப் போகிறது இல்லை. இதுகளை எல்லாம் விளங்கிக் கொண்டு அமைதியாக வந்த காரியத்தில கண்ணாய் இருக்கிறது புத்தி எண்டுகிறது என்னுடைய கருத்து.’
‘அது என்ன சில பல காரணங்கள் தோழர்?’
‘சில விசயங்களை அறியாமல் அறிய முயலாமல் இருக்கிறது எல்லாருக்கும் நன்மையாக இருக்கும். மனித வாழ்க்கையில சில நேரங்களில இதைக் கடைப்பிடிக்கத்தான் வேணும்.’
‘என்ன சொல்ல வாறியள் தோழர் சிவம்?’
‘என்ரை வாயைப் பிடுங்காதையும் தோழர் கண்ணன்.’
‘தோழர் நீங்கள் எல்லாத்தையும் வெளிப்படையாகச் சொன்னால்தானே நாங்கள் அதுக்கேத்த மாதிரி நடந்து கொள்ளலாம். புதிசா வந்திருக்கிற எங்களுக்கு நீங்கள் தானே வழிகாட்ட வேணும்?’
‘நீர் மற்றவையின்ரை வாயைப் புடுங்கிறதிலை கெட்டிக்காரன் எண்டதில எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.’
‘சொல்லுங்க தோழர். நீங்கள் சொல்லுகிறதாலதான் மற்றைய தோழர்களைத் தப்பாகப் போகாமல் காப்பாற்ற முடியும். கதைக்காமல் மௌனமாப் பயங்காட்டிக் கொண்டு இருக்கிறது நல்லது இல்லைத் தோழர்.’
தோழர் சிவம் பேச்சு இழந்தவராய் ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தார். கண்ணனுக்குச் சலித்துவிட்டது. இனி எதைப் பற்றியும் கேட்கக் கூடாது என்று எண்ணிய வண்ணம் ஆற்று நீரில் நன்றாக மூழ்கினான். மூழ்கி மீண்டும் எழுந்த போது தோழர் சிவம் கண்ணனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றார். பின்பு அவனைப் பார்த்து,
‘கண்ணன் போவமே?’ என்றார்.
‘போவம். இல்லாட்டி விசில் அடிப்பாங்கள் எண்டு உங்களுக்குப் பயமா இருக்குதா தோழர்.’
‘அது என்னவோ உண்மைதான். அதுக்கும் பல காரணங்கள் இருக்குது. உள்ள வந்தவங்கள் வெளியால போய் உள்ளே உள்ள விசயங்களை வெளியால சொல்லிடுவாங்களோ எண்டுகிற பயம் அவங்களுக்கு. அது இயக்கத்துக்கு நல்லது இல்லை எண்டுகிறது உண்மை. அந்த ஆபத்து அரசாங்கத்தாலும் வரலாம். மற்றைய இயக்கங்களாலும் வரலாம். இந்தியாவாலும் வரலாம். அப்பிடி அனுப்பி வைக்கப்பட்டவங்கள் தப்பி ஓடுவாங்கள் எண்டுகிற ஒரு அவிப்பிராயம் பொதுவா இருக்குது. அதால கணக்கில கவனமாக இருப்பினம். அதைக் குறை சொல்ல முடியாது. ஆனாலும் இந்த நேரத்தில எல்லாம் கணக்குப் பார்க்கிற வழமை இல்லை. நீர் அவசரப்படாமல் மேல வாரும். சண்டைக்குப் பிந்தினாலும் சபைக்குப் பிந்தக் கூடாது எண்டதைக் கடைப் பிடிக்க வேணும். இண்டைக்கு எங்கயோ குளத்து மீன் வாங்கி வந்தவங்கள் எண்டு கேள்வி. சாப்பாடு நல்லா இருக்கும். அதுதான் முந்திக் கொள்ளுகிறது புத்திசாலித்தனம் எண்டு நினைக்கிறன்.’
‘அப்பிடியே தோழர் சங்கதி? இருந்தாலும் இவங்கள் தூளுக்குப் பதிலா மஞ்சள் தூளைப் போட்டுக் கறி வைக்கிறாங்களோ தெரியாது.’
‘இல்லைத் தோழர். ஸ்ராலின் இண்டைக்குச் சமையல் பொறுப்பு. அவன் நல்லாச் சமைப்பான். வாங்க போவம்.’
அன்று மத்தியான சாப்பாடு நன்றாகவே இருந்தது. ஊரில் சாப்பிடும் அல்லது இடையில் தங்கிய வீடுகளில் சாப்பிட்ட மீன் குளம்பிற்கும் குத்தரிசிச் சோற்றிற்கும் இணையாக இல்லாவிட்டாலும் முகாமில் சாப்பிட்ட சாப்பாட்டிற்கு அது தேவாமிர்தமாகவே இருந்தது.
மாலைப் பயிற்சிகள் இராணுவ யுத்திகளைப் பயிற்றுவிப்பதாகவே இருந்தன. அதற்கும் சுமன் வரவில்லை. அவனை எண்ணும் போது கண்ணனுக்குக் கவலையாக இருந்தது. இருந்தாலும் அவன் நன்றாக உடலைத் தேற்றிக் கொள்ளட்டும் என்று சமாதானம் செய்து கொண்டான். மாலைப் பயிற்சி முடிந்ததும் தோழர் சிவம் கண்ணனைப் பார்த்து,
‘நாங்கள் வாய்க்காலுக்குப் போய் மேல் கழுவிக் கொண்டு வருவம் தோழர். அப்பத்தான் நிம்மதியாய் நித்திரை கொள்ளலாம்.’ என்றார்.
‘அதுக்கு என்ன தோழர்… நல்லாப் பசிக்கவும் தொடங்கீட்டுது. வீட்டை நினைக்கக் கவலையாகவும் இருக்குது. இப்பிடி எவ்வளவு காலம்…?’

அதைக் கூறும் போது கண்ணனின் கண்கள் கலங்கிக் குரல் உடைந்து போயிற்று. இது கண்ணனுக்கான உணர்ச்சி மட்டும் அல்ல. முகாமில் பயிற்சி செய்ய வந்து இருக்கும் ஒவ்வொரு தோழர்களின் உணர்ச்சியும் அப்படியே இருக்கிறது என்பது தோழர் சிவத்திற்கு நன்கு தெரியும். விடுதலை என்பது தியாகம் என்கின்ற உரத்தில் மட்டுமே செழிக்க முடியும். அந்த அர்ப்பணிப்பிலிருந்து யாரும் விடுதலை பெற்றுவிட முடியாது. அதிலிருந்து யாரும் பொறுப்புத் துறந்து போகவும் முடியாது. அதுவே ஒவ்வொரு போராளியினதும் ஆரம்ப அர்ப்பணிப்பாக, தியாகமாக இருக்கிறது. இருக்க வேண்டும்.
‘தோழர் இதுக்காக எல்லாம் கவலைப்படக் கூடாது. எல்லாத் தோழர்களுக்கும் உறவுகள் இருக்கினம். உறவைப் பெரிதுபடுத்தினால் யாராலும் போராட வெளிக்கிட முடியாது. நாங்கள் செய்ய வெளிக்கிட்ட தியாகத்தோடே ஒப்பிடும் போது இந்த விசயங்களை எல்லாம் சின்ன விசயமா நினைச்சுப் புறம் தள்ளிக் கொண்டு போக வேணும்.’
‘வாயால அதை லேகாச் சொல்லாம் தோழர். எண்டாலும் அதை அனுபவிக்கிறது நீங்கள் நினைக்கிற மாதிரி லேசில்லை. அதுக்காக நான் வந்த இலட்சியத்தை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க போகிறன் எண்டு அர்த்தம் இல்லை. அதில எனக்கு எந்தத் தடுமாற்றமும் கிடையாது.’
‘அது நல்லது. என்ன நடந்தாலும் நாங்கள் வந்த இலட்சியத்தை எதற்காகவும் இம்மிய அளவும் மறக்கக் கூடாது.’
‘அதில பலரும் தெளிவாகத்தான் இருக்கினம்.’
‘உண்மைதான் தோழர் கண்ணன். வாங்க வாய்க்காலுக்குப் போவம்?’
இருவரும் புறப்பட்டு வாய்க்காலை நோக்கிச் சென்றார்கள். தோழர் சிவம் வாய்க்காலில் முன்பாகச் சிறிது தூரமாகக் கூட்டிச் சென்றார். ஏன் இப்போது இவ்வளவு தூரம் கூட்டிச் செல்கிறார் என்பது கண்ணனுக்கு விளங்கவில்லை. என்றாலும் அதைப் பற்றி முதலில் அவரோடு ஆட்சேபிக்காது நடந்தான். அப்படிச் சிறிது தூரம் நடந்தவன் பின்பு அதைப் பொறுக்க முடியாதவனாய்,
‘என்ன தோழர் முகம் கழுவ எத்தின மையில் போகிறதா உத்தேசம்? எங்க போனாலும் எல்லாம் நடந்த தண்ணிதான் வரப்போகுது. அசுத்தம் இல்லாத நீர் எண்டால் நாங்கள் மனிசர் இறங்கிக் குளிக்காத கிணறு தேடிச் செல்ல வேணும்.’
‘அவசரப்படாதையும் கண்ணன். பகலில பக்கம் பார்த்துப் பேசு… இரவில அதுவும் பேசாத எண்டுவினம்.’
‘அது இரகசியம் கதைக்கிறவைக்குத் தோழர். நீங்கள் எதுவும் சொல்லமாட்டியள். பிறகு எதுக்கு இந்தப் பயணம்?’
‘அப்படி இல்லைக் கண்ணன். தேவையில்லாத விசயங்களைக் கதைச்சு தேவை இல்லாத பிரச்சனையில மாட்டுப்படக் கூடாது. எனக்குச் சில விசயங்கள் தெரியும். ஆனால் அதை எல்லாம் கதைச்சால் அவங்கள் என்னையும் சந்தேகப்படலாம். அப்பிடிச் சந்தேகம் வந்தால் அதுகின்ரை விளைவு கொடுமையா இருக்கும். புத்திசாலியாப் பிழைச்சுக் கொள்ள வேணும் எண்டா அதுகளுக்கு எல்லாம் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. முதல் கதைக்கிறதில கவனமாய் இருக்க வேணும். இந்த வாயால மாட்டுப்பட்டவை பலர். அதில சிலர் அந்த மண்வீட்டுக்க சாக கிடக்கிறவை.’
சிறிது மௌனமாய் இருந்த தோழர் சிவம் மீண்டும் பேசத் தொடங்கினார்.
‘ம்… அது எல்லாம் மனவருத்தமான விசயம்தான். அரசியல் பிரச்சினையால கைதாகி வந்தவைதான் அதுக்குள்ள இருக்கினம். அதுக்கு உள்ள இருக்கிறவையோடை கதைச்சாலோ அல்லது அதைப் பற்றி நாங்கள் கதைச்சாலோ தேவையில்லாத சிக்கலில மாட்டுப்பட வேண்டி வரும். அதால நானும் உங்களோடை அதைப்பற்றிக் கதைக்க விரும்ப இல்லை. நீ நினைக்கிற மாதிரி எல்லா நடை முறையும் இங்க சரியா நடக்குது எண்டு சொல்ல முடியாது. தோழரைத் தோழன் எண்டுகிறவனே அடிக்கக் கூடாது எண்கிறதிலை எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அரசியல் கதைச்சு இயக்கத்தையே உடைக்கிறாங்கள் எண்டு தலைமை குற்றச்சாட்டு வைச்சு அவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிற நேரம் நாங்கள் என்ன கதைக்க முடியும்? தலைமையே அப்படி எதிர்க்கிறவையை அடக்க வேணும் எண்டு நினைச்சதால அது இப்ப பல இடத்திலும் பரவி இருக்குது. அதிகின்ரை பாதிப்பையே சுமனும் இப்ப அனுபவிச்சான். இயக்கத்தில பிரச்சனைக்குக் கொலையும் வன்முறையும் தண்டனையா இருக்கிறது ஒண்டும் புதிசு இல்லை. நீர் அறிஞ்சு இருக்கிறீரோ இல்லையோ தெரியாது. ஆனா இது ஆரம்பத்தில இருந்து இருக்குது. கொலை ஒண்டும் ஈழப் போராட்டத்திற்கு புதுசு இல்லை. இயக்கம் பிறக்க அதுவும் கூடவே பிறந்திட்டுது. அந்தக் கலாச்சாரத்தின் பாதிப்பே இப்ப பயிற்சி செய்ய இயலாமல் இருக்கிற தோழர் மேலையும் வன்முறையாக எந்தக் கூச்சமும் இல்லாமல் பாயிது.
ஆனாலும் உதைப்பற்றி இங்க கதைக்கக் கூடாது. கதைச்சா கதைக்கிறவையையும் மண்வீட்டிலயே வைப்பினம். மண்வீட்டில வைச்சா அதுக்குப் பிறகு எங்கடை வாழ்க்கை முழுமையாக எங்கடை கையில இருக்காது. நாங்கள் எங்கடை இனத்தின்ரை விதியை மாத்த வேணும் எண்டு இங்க வெளிக்கிட்டு வந்து இருக்கிறம். ஆனால் சில வேளை இங்க எங்கடை விதியையே எங்களால மாத்த முடியாமல் இருக்கும். அப்படியான ஒரு இக்கட்டான நிலைக்க நாங்கள் இங்க அகப்பிடக் கூடாது. அதால அரசியல் கதைக்கிறதோ மண்வீட்டைப் பற்றி ஆராய்கிறதோ எங்களுக்கு நல்லது இல்லை. இப்ப எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடையே பார்க்கிறாங்கள். அதுக்க நாங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைச்சா எங்களையும் இயக்கத்தைக் குழப்ப வந்தவங்களாக பார்ப்பாங்கள். அவங்கள் பயப்பிடுகிறதிலையும் ஒரு நியாயம் இருக்குது எண்டும் சொல்லலாம். இயக்கத்தை அழிக்கிறதுக்கு எப்பிடி ஆபத்து வரும், யாரால அந்த ஆபத்து வரும் எண்டது யாருக்கும் தெரியாது. அதால இருண்டவன் கண்ணுக்கு மருண்டது எல்லாம் பேய் எண்ட மாதிரி எல்லாரிலும் சந்தேகம் பாயுது. வேறை இயக்கம், இலங்கை அரசு, றோ எண்டு அவங்களால அனுப்பப்பட்ட யாரும் இயக்கத்திற்கு உள்ள நுழையலாம். தகவல்களை எடுத்துக் கொண்டு வெளிய போகலாம். அல்லது முகாமிற்கையே கலகத்தை உண்டு பண்ணலாம். கொலை செய்யலாம். அது எல்லாப் போராட்டங்களிலையும் நடக்கிறது. எங்கடை போராட்டத்தில அது இன்னும் அதிகமா இருக்குது. போராட்டம் எண்டால் இது எல்லாம் தவிர்க்க முடியாது எண்டு சமாதானம் சொல்லலாம். ஆனா அதை நேரடியாக அனுபவிக்கிறது கொடுமையானது. அதிகின்ரை உச்சக்கட்டமே தோழரைத் தோழர்களே சந்தேகப்படுகிறது. லெனின், ஸ்ராலின் தொடக்கம் எல்லாருக்கும் இருந்த வருத்தமே இது. நாங்கள் அவங்கடை படங்களைக் கழுத்தில தொங்கப் போட்டுக் கொண்டு திரிகிறம். பிறகு அவங்கள் செய்தது பிழை எண்டு கதைக்க முடியுமா? கதைச்சாலும் குட்டி பூர்ஸ்வா, குழப்பக்காரன் எண்டு தூக்கில தொங்க விட்டிடுவாங்கள். நீங்கள் இதை எல்லாம் விளங்கிக் கொள்ளாமல் இளம் கண்டு பயமறியாது எண்டுகிறது போல நடக்கப் பார்க்கிறியள். கவனமா இருக்க வேணும் கண்ணன். நாங்கள் சும்மா கதைக்கிறதுகூட யாருடைய காதுக்கு எட்டினாலும் எங்கடை கழுத்துக்குச் சுருக்குக் கயிறு வந்திடும். அதால திரும்பவும் நான் உமக்குச் சொல்லுகிற புத்தி என்ன எண்டா போசாமல் வந்த அலுவலைப் பாரும் தோழர். இங்கை வேறை எதையும் கண்டு கொள்ளாதையும்.’
‘என்ன நினைக்க எனக்கே கோபமாகவும், இயக்கத்தை நினைக்கப் பயமாகவும் இருக்குது. போராட்டம், விடுதலை என்கிற கற்பனை எல்லாம் சிதைஞ்சு சின்னாபின்னமாய் போன மாதிரி இருக்குது. எவ்வளவு நம்பிக்கையோடை விசுவாசத்தோடை தோழர்கள் எல்லாம் வந்து இருக்கிறாங்கள். அவங்கடை வாழ்கையைக் கத்தி மேல நடக்கிற மாதிரி ஆக்கி வைச்சிருக்கினம்.’
‘அப்பிடியா நிலைமை இருக்குது? இயக்கத் தலைமையை முழுமையா குறை சொல்ல முடியாது. அவங்களுக்கும் வேற வழி இல்லா மாதிரியான ஒரு நிலைமைதான்.’
‘சீ…’
‘கண்ணன் அதை எல்லாம் பற்றிக் கடுமையா யோசிக்காதையும். ஊரோடை ஒத்து ஓடும். இப்ப எங்களுக்கு அதை விட்டா வேற வழி இல்லை.’
‘உட்கட்சி ஜனநாயகம் அற்ற, தோழர்களே வாய் திறக்க முடியாத ஒரு இயக்கம் போராடினால் என்ன போராடாட்டி என்ன? இதால தமிழருக்கு விடுதலை கிடைக்கும் எண்டு நான் நினைக்க இல்லை.’
‘சூ… மெதுவாய் பேசும் தோழர். நீர் என்னையும் இழுத்து விட்டிடுவீர் போல இருக்குது.’
‘கோபமாய் இருக்குது தோழர். ஆத்திரமாய் இருக்குது தோழர். ஆற்றாமையாக இருக்குது தோழர். இப்பிடி எண்டு தெரிஞ்சு இருந்தா நான் இதை எண்ணியே பார்த்து இருக்க மாட்டன். இயக்கத்துக்கு வந்து இருக்கமாட்டன். வெளிநாட்டுக்குப் போகிறவங்கள் பிழைக்கத் தெரிஞ்சவங்கள் போல இருக்குது.’
‘சிங்கள ஆமியிட்டை அடிமையா இருந்து சாகிறது இதைவிடக் கொடுமைதானே? அதுக்கு எதிராக எண்டாலும் எதாவது செய்யத்தானே வேணும்?’

‘ஒரு ஆமியிட்டை விடுதலை பெற்று இன்னொரு ஆமியிட்டை அடிமையாகிற மாதிரி எல்லோ இது இருக்குது.’
‘அப்பிடி எல்லாம் நினைக்காதீங்க தோழர். எங்கடை இயக்கம் பிழையைத் திருத்தி ஒரு உன்னதமான போராட்டத்தை வருங்காலத்தில முன்னெடுக்கும். அதுக்கு நாங்களும் எங்களால ஆனதைச் செய்ய வேணும்.’
‘இது உங்களுடைய ஒரு ஆக்கப்பூர்வமான கருத்தும், நம்பிக்கையும். நானும் அப்பிடி ஒரு நல்ல பாதையில எங்கடை இயக்கமும் போராட்டமும் போக வேணும் எண்டு எதிர்பார்க்கிறன்.’
‘நம்பிக்கைதான் வாழ்கை. எல்லாம் சரியாக நடக்கும் எண்டு நம்புவம். அதைவிட முக்கியம் நாங்கள் இப்ப கதைச்சதை இங்கயே மறந்திடுகிறது. எதையும் மனதில வைச்சுக் கொள்ளாமல் வந்த போது இருந்த நம்பிக்கையோடு பயிற்சியைச் செய்யுங்க. காலம் பதில் சொல்லும். அப்ப பார்ப்பம்.’
‘ம்… நீங்கள் சொல்லுகிறது உண்மை. எங்களுக்கு அதைவிட வேற வழி இல்லை.’
‘சரி வாரும். நேரம் ஆச்சுது.’
‘சரி தோழர்.’

இருவரும் முகாமை நோக்கிப் புறப்பட்டார்கள். தோழர் சிவத்திற்கு தாங்கள் பிந்தி விட்டோமோ என்கின்ற பதட்டம். அவர் விரைவாக நடந்தார். கண்ணனும் அப்படியே விரைவாக நடந்தான். திடீரெனச் சவுக்கம் பற்றைக்குள் இருந்து வந்த இருவர்,
‘ர்யனௌ ரி’ என்ற வண்ணம் பாய்ந்து முன்னே வந்தார்கள். அவர்கள் கையில் சவுக்கம் கட்டையும் மின் விளக்கும் இருந்தன. பின்பு அவர்கள் இருவரையும் முட்டுக் காலில் இருக்கச் சொல்லி முகத்திற்கு வெளிச்சம் பாய்ச்சி யார் என்று பார்த்தார்கள்.
‘ஓ தோழர் சிவமா?’ என்றார் காவலில் நின்ற தோழர்.
‘ஓம் நேரமாகுது தோழர்.’
‘அதுதான் எங்க இவ்வளவு நேரம் மினக்ககெட்டியள் தோழர்?’
‘இல்லைக். குளிச்சுக் கொண்டு இருந்ததில நேரம் போயிட்டுது.’
‘பரேட்டுக்குப் பிந்தினா என்ன நடக்கும் எண்டு உங்களுக்குத் தெரியும்தானே தோழர் சிவம்? நீங்கள் இப்படிச் சுணங்கி வாறியள்… கெதியாப் போங்க. விசில் அடிக்கப் போகிறாங்கள்.’
‘ஓம் தோழர்… நாங்கள் வாறம். கெதியா வாரும் கண்ணன்… விசில் அடிக்கப் போகிறாங்கள்.’
இருவரும் அவசரமாக முகாமை நோக்கிப் புயல் போலச் சென்றார்கள். முகாமிற்குச் சென்ற சிறிது நேரத்தில் வீளை ஊதப்பட்டது. எல்லோரும் விரைவாகவும், ஒழுங்காகவும் முகாமின் முற்றத்தில் ஒன்று கூடினார்கள். கணக்கெடுப்பு நடக்கத் தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்பு பிழைக்கக் கூடாது. இசகுபிசகாய் பிழைத்தால் அது சரியாகும் வரைக்கும் அனைவரும் காத்து நிற்க வேண்டி வரும். அத்தால் அனைவரது விருப்பமும் கணக்குச் சரியாக இருக்க வேண்டும் என்பதே. கழகத்தின் கொள்கைக்கு எதிராகச் சிலர் களவாக மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொள்வார்கள். கணக்கெடுப்பிற்குச் சிறிது நேரம் பிடித்தது. கணக்குப் பிசகாது சரியாக இருந்தது. இன்று பிட்டுக்கு விசேசமாகத் தயிரும் கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். அதன் பின்பு அந்த அணிவகுப்புக் கலைக்கப்பட்டது. அப்படிக் கலையும் போது சுமன் அங்கு வங்து இருப்பதைக் கண்ணன் கண்டான். கண்ணன் உடனே ஓடிச் சென்று சுமனின் கையைப் பிடித்தான். கண்ணன் கையைப் பிடிக்கவும் சுமன் கண்கலங்கித் தேம்பத் தொடங்கினான். அது கண்ணனுக்கு மிகவும் மனவருத்தத்தைத் தந்தது. இதைப் பார்த்த தோழர் சிவமும் அங்கே வந்து சேர்ந்தார்.
‘இதுக்கெல்லாம் கண் கலங்கக் கூடாது. வந்த அலுவலில நாங்கள் கண்ணும் கருத்துமா இருப்பம். நடந்ததை நீ முழுமையா மற. நாளையில இருந்து புது மனிசராய் பயிற்சி செய்வம்.’
கண்ணீரைத் துடைத்த வண்ணம் ‘ம்…’ என்றான் சுமன்.
‘கண்ணன் சொல்லுகிறது சரி தோழர். நீர் நடந்ததை மறந்திட்டு இனி எவ்வளவு கடுமையா பயிற்சி செய்ய முடியுமோ அவ்வளவு கடுமையாப் பயிற்சி செய்து வந்த காரியத்தில கண்ணும் கருத்துமாய் இருக்க வேணும். ஊரில சொகுசாய் இருந்த எண்ணத்தை எல்லாம் மறந்திட்டு இங்க இப்ப இருக்கிற நிலைமைக்கு எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள வேணும்.’ என்றார் தோழர் சிவம்.
‘கண்ணன் இனி விளங்கிக் கொள்வான் தோழர். நாங்கள் இனி அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சுமனுக்கு இந்தத் திடீர் மாற்றம் பெரிய அதிர்ச்சி மாதிரி… அதாலதான் இந்தச் சிக்கல் எல்லாம். இனி அதெல்லாம் சரியாகிடும்.’
அடுத்த வீளை ஊதியது. அது சாப்பாட்டிற்கான அழைப்பு. சுமனும் அவர்களோடு சாப்பிடச் சென்றான். மாலைச் சாப்பாட்டை அவன் வேறு வழி இன்றிக் கொட்டாமல் சாப்பிட்டான். அதைப் பார்த்த கண்ணன், சிவம் ஆகிய இருவருக்கும் மனத் திருப்தியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.