6. அடுத்த நாள்

அடுத்த நாள் காலை எழுந்தது தொடக்கம் மைதானத்தில் ஓட்டம் தொடங்கும் வரைக்கும் சுமன் கண்ணனோடும், சிவத்தோடும் சேர்ந்தே வந்தான். இருந்தாலும் அவன் பதட்டமாய் இருப்பது போலவே கண்ணனுக்குத் தோன்றியது. அதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்பது விளங்கவில்லை. அதைப் பற்றிக் கதைத்தால் அவன் மேலும் கவலைப் படுவானோ என்கின்ற எண்ணம் மேலும் வலுத்தது. அதனால் அவன் சுமனோடு கதைக்கவில்லை. இருந்தாலும் வெளியே சென்ற போது கிடைத்த இடைவெளியில்,
‘சுமனை எண்ணக் கவலையா இருக்குது தோழர்.’ என்றான் கண்ணன்.
‘ஏன் எதிர்மறையாக நினைக்கிறீங்கள். அப்பிடி ஒண்டும் நடக்காது. அவன் இனியும் பின்வாங்க மாட்டான். என்றார் தோழர் சிவம்.’
‘நீங்கள் சொல்லுகிறதும் உண்மை. எதிர்மறையாக நினைக்கக் கூடாது. எண்டாலும் மனம் ஒரு குரங்கு இல்லையா?’
‘ம்… கட்டுப்படுத்தும். உம்மடை திசைக்கு நீர் அதைத் திருப்பும்.’
இவர்கள் கதைக்கும் போதே சுமன் வந்துவிட மேற்கொண்டு அவர்களால் கதைக்க முடியவில்லை. என்றாலும் தோழர் சிவம் அவனை ஊன்றிக் கவனித்தார். கண்ணன் கூறியது சரியாகவே இருந்தது. சுமனில் வெளிப்படையாகவே பதட்டம் தெரிந்தது.
‘சுமன் நீர் பதட்டப்படுகிறாயே?’ என்று தோழர் சிவம் கேட்டார். அவன் அதற்கு முதலில் பதில் அழிக்கவில்லை. பின்பு ஒருவித நடுக்கத்துடன்,
‘எனக்குப் பயமா இருக்குது தோழர்.’ என்றான்.
‘பயப்பிடாதை சுமன். உன்னால இயலும் எண்டதை முழுமையா நம்பு. நம்பிக்கையோடே பயிற்சி செய்துபார். எதுவும் கஸ்ரமாய் இருக்காது. உன் நம்பிக்கைதான் உனக்கு தைரியத்தையும், சக்தியையும் தரும். அதால நீ எதுக்கும் உன்னுடைய நம்பிக்கையைக் கைவிடக் கூடாது. நான் சொல்லுகிறது சரியா? அதை நீ நம்புகிறாயா?’
‘நம்புகிறன் தோழர். இண்டைக்கு எப்பிடி எண்டாலும் பயிற்சி செய்து முடிப்பன்.’
‘நல்லது சுமன். இந்த நம்பிக்கையை எப்பவும் எதுக்காகவும் கைவிடக் கூடாது.’
‘ம்…’
அதன் பின்பு யாரும் கதைக்கவில்லை. மைதானம் செல்லும் வரையும் அவனைப் பார்க்க முடிந்தது. தொடர்ந்தும் அவனில் பதட்டம் அப்பட்டமாய் தோழர் சிவத்திற்குத் தெரிந்தது. அது கண்ணனுக்கும் கவலையைத் தந்தது. இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒட்டம் தொடங்கியது. அதன் பின்பு அவன் அவர்கள் கண்களில் படவில்லை. ஈழத்திற்கான போராட்டத்திற்காகத் தோழர்கள் இந்த மைதானத்தில் அலையலையாக ஓடினார்கள். அந்த அலைகளில் அவன் மறைந்து போனான்.
கண்ணன் பயிற்சி முடிந்ததுமே அவனைத் தேடி மைதானம் முழுமையாகச் சுற்றி வலம் வந்தான். அலையற்ற கடலாக எங்கும் அமைதி குடிவந்த நேரம் அது. மைதானம் சோம்பல் முறித்தது. சுமனை அங்கே இல்லை. தொடர்ந்து தேடியும் எங்கேயும் அவனைக் காணமுடியவில்லை. அவன் பயிற்சி முடித்தால் மைதானத்தில் நின்று இருக்க வேண்டும். அப்படி நிற்காது எங்கே சென்றான் என்பது கண்ணனுக்கு விளங்கவில்லை. அவன் பலமுறை மைதானத்தைச் சுற்றிப் பார்த்தான். சுமனைக் காணவில்லை. தோழர் சிவம் ஒரு இடத்தில் இளைப்பாறிக் கொண்டு நின்றார். கண்ணன் அவரை நோக்கிச் சென்றான்.
‘தோழர்… சுமனைப் பாத்தியளா?’ என்று சிவத்தைக் கேட்டான்.
‘இல்லைக் கண்ணன். அவன் பயிற்சி முடியக் காம்பிற்குப் போய் இருப்பான் எண்டு நினைக்கிறன். வாரும் நாங்களும் அங்க போவம்.’
‘அப்பிடிச் சொல்லுகிறியளே தோழர்?’
‘ம்… வாரும் தோழர். அவன் அங்கதான் போய் இருப்பான்.’
‘எனக்கு அவனைக் கெதியாகப் பார்க்க வேணும் தோழர்.’
‘விளங்குது. நானும் அவனைப் பார்க்கத்தான் வேணும்.’
‘முகாமுக்கு ஓடிப் போவமா தோழர்?’
‘அலுப்பா இருக்குது தோழர் கண்ணன். இன்னொரு நாளைக்கு ஓடுவம். இப்ப நடப்பம்.’
‘என்ன தோழர்? களைச்சுப் போனியள் போல இருக்குது?’
‘கவலைப்படாதையும்… திரும்பவும் பயிற்சி இருக்குத்தானே?’
‘அது எண்டா உண்மை. அவனைக் கெதியாப் பார்க்க வேணும் எண்ட ஒரு ஆர்வத்தில அப்பிடிக் கேட்டன்.’
‘எனக்குத் தெரியும். எல்லாம் நல்லபடியா நடக்கும். அவன்ரை நம்பிக்கை மாதிரி எங்களுடைய நம்பிக்கையும் அவனுக்கு வேணும். அதுவே மனித பலம்.’
‘நீங்கள் சொல்லுகிறது விளங்குது தோழர். நானும் அவனில நம்பிக்கை வைச்சிருக்கிறன். போய் அவனோடை காலைச் சாப்பாட்டைச் சேர்ந்து சாப்பிடுவம். அப்ப அவனுக்கு இன்னும் நம்பிக்கை ஊட்டலாம்.’
‘ம்;;;… அவன் பயப்படாத வகையில…’
‘உங்களுக்கும் குசும்புதான் தோழர்.’
‘அப்படி இல்லை. அதிகமாச் சொன்னாப் பயந்து போயிடுவான். அதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேணும்.’
‘நீங்கள் சொல்லுகிறது உண்மைத் தோழர். சப்பாத்து சத்தம் கேட்டுச் சகலமும் அடங்கி அடங்கி நம்பிக்கை நகைச்சுவை எதுவும் எங்களிட்டை இல்லாமல் போச்சுது.’
‘ம்… என்தான் நடந்தாலும் எங்களை நாங்கள் இளக்கக் கூடாது. அதை இழந்து நிண்டா அதுதான் பரிதாபம்.’
முகாமிற்குச் சென்று தங்களது குடிலுக்கு இருவரும் ஆர்வத்தோடு விரைந்தார்கள். அங்கே சுமன் படுத்திருந்தான். வெக்கையைப் பொருட்படுத்தாது போர்வையால் மூடிக்கொண்டு படுத்து இருந்தான். அது கண்ணனுக்குச் சந்தேகத்தை உண்டு பண்ணியது. ‘சீ அப்படி எதுவும் நடந்து இருக்காது.’ என்று தன்னைச் சமாதானம் செய்து கொண்டான். அவனுக்குச் சுமனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
‘என்ன சுமன் அலுப்பாய் இருக்கே? ஏன் இப்பவே படுத்திட்டாய்? எழும்பு… சாப்பிடப் போக வேண்டிய நேரம் வந்திட்டுது.’
‘ம்…’ அவன் ஒரு மாதிரியாக அனுங்கினான்.
‘என்ன ஒரு மாதிரி அனுங்குகிறா? இண்டைக்குப் பயிற்சி சுலபமாய் இருந்திச்சா. நீ இங்க வந்ததாலேயே அப்பிடிதான் இருக்கும் எண்டு நினைக்கிறன்.’
‘…’
அவன் அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. அது கண்ணனுக்கு என்னவோ போல் இருந்தது.
‘என்ன சுமன் இண்டைக்கு சரியா இருந்திச்சா?’
அவன் மீண்டும் பதில் அழிக்கவில்லை. அதற்குப் பதிலாக அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்தான். மறுபக்கம் திரும்பிப் படுத்தவனிடம் இருந்து தேம்பித் தேம்பி அழும் சந்தம் வந்தது. கண்ணன் திடுக்கிட்டுப் போனான். தோழர் சிவத்திற்கும் அது ஆச்சரியமாக இருந்தது. கண்ணன் முதலில் சென்று அவன் அருகிலிருந்தான்.
‘என்ன நடந்தது?’
அவன் தொடர்ந்தும் மௌனம் சாதித்தான். கண்ணன் அவனை மெதுவாக உலுக்கி,
‘என்ன வருத்தக்காரர் மாதிரி படுத்து இருக்கிறா? எழும்பு சாப்பிடப் போவம்.’ என்றான்.
‘எனக்குச் சாப்பாடு வேண்டாம். நான் ஊருக்குத் திரும்பிப் போக வேணும். இல்லாட்டி நான் சாப்பிடாமலே செத்துப் போயிடுவன்.’
‘என்ன?’

அதிர்ச்சியாகக் கேட்ட வண்ணம் கண்ணன் சுமனின் போர்வையை உருவினான். அதை உருவி அவனைச் சாப்பாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவன் நோக்கமாக இருந்தது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருக்கும் என்று அவன் போர்வையை உருவும் போது நினைத்து இருக்கவில்லை. சுமனைப் பார்த்து அவன் மேலும் மேலும் அதிர்ந்தாலும் இப்படியும் நடந்து இருக்கலாம் என்கின்ற ஒரு பயம் அவனிடம் இருந்தது. அந்தப் பயம் இப்போது நிஜமானதில் தலை சுற்றியது. இதை அவதானித்த தோழர் சிவம் அருகில் வந்து அவனது மேனியைக் கவனித்தார். குறி கூட்டது போன்று இன்று அதிக மூர்க்கமாக அடித்திருப்பதாய் அவருக்குத் தோன்றியது. சிவத்திற்கு முதன் முதல் பயிற்சி கொடுப்பவர்கள் மீது கடுமையான கோபம் உண்டாகியது. அடிமை என்று நினைத்து விட்டார்களா என்று மனது கொதித்தது. இயக்கத்திற்கு வந்ததிற்காக யாரும் அடிமைச் சாசனம் இவர்களுக்கு எழுதிக் கொடுக்கவில்லை. அதை ஏன் இவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை? பயிற்சி கொடுத்தவர்களை நிறுத்தி வைத்து விளாச வேண்டும் என்கின்ற கோபம் அவருக்குப் பொங்கியது. என்ன செய்ய முடியும்? அப்படிச் செய்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? இதுவும் ஒரு இராணுவமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இராணுவத்தில் கேள்வி கேட்க முடியாது. சொல்வதைச் செய்ய வேண்டும். அதன் பின்பே எதைப் பற்றியும் கதைக்க முடியும். இங்கு அந்தச் சுதந்திரம்கூட இல்லை. இப்போது கேட்டாலும் நீ முகாமை குழப்ப வந்திருக்கிறாயா? அல்லது அரசியல் பிரச்சினை உண்டாக்குகிறாயா? என்று அதைத் திரித்து வினாவுவார்கள். இங்குக் கேள்வி கேட்காது சொல்வதைச் செய்து பிழைக்க வேண்டும். இது ஒரு தப்பான முன்மாதிரி. யாரும் தட்டிக் கேட்க முடியாத தர்மசங்கடம்.
‘ஐயோ இண்டைக்கும் உன்னை அடிச்சிருக்கிறாங்களாடா சுமன்? நீ ஏன்ரா இப்படி அடி வாங்குகிறாய்? பயிற்சியைத் தெண்டிச்சு ஒழுங்காய் செய்யாதிருக்கலாம்தானே?’ என்றான் கண்ணன்.
‘இயலும் எண்டாச் செய்யமாட்டனா? நீயும் விளங்காமல் கதைக்கிறா?’
‘இல்லையடா… இவங்கள் ஒழுங்காப் பயிற்சி செய்யாமல் விடமாட்டாங்கள். விளங்கிக் கொள். தோழர் இதுக்கு என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறியள்?’
‘மாட்டை அடிச்சிருக்கிற மாதிரி அடிச்சு இருக்கிறாங்கள். பயிற்சி செய்ய முடியாட்டி விட வேண்டியதுதானே? எதுக்கு இப்படி அடிச்சு இருக்கிறாங்கள்? இதைக் கேட்கப் போனா அரசியல் பிரச்சினை செய்கிறியளோ எண்டு கேட்பாங்கள். சில வேளை மண் வீட்டுக்க கொண்டே வைச்சாலும் வைச்சிடுவாங்கள். நாங்கள் இதைக் கதைக்க முடியாது. கதைச்சாலும் பிரச்சினை ஆகிடும். நடந்ததை நாங்கள் மாற்ற முடியாது. தோழர் சுமன் வாரும் போய் சாப்பிடுவம். பிறகு என்ன செய்யலாம் எண்டு யோசிப்பம். இதுக்கு எதுவும் செய்ய முடியாது எண்டு நான் நினைக்கிறன். அதுவே இப்போதைக்கு பிழைக்கிற வழி. நீங்கள் எப்படி எண்டாலும் பயிற்சி செய்துதான் சமாளிக்க வேணும்.’
‘என்னால முடியல்லத் தோழர். நீங்கள் ஆவது என்னை விளங்கிக் கொள்ளுங்க தோழர்.’
‘எனக்கு விளங்குது தோழர் சுமன். ஆனால் பயிற்சி தாரவங்களுக்கு அது விளங்காது தோழர். அதை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கோ தோழர். அவங்கள் பயிற்சி செய்யாட்டி அதுக்குப் பலவிதமா அர்த்தம் கற்பிப்பாங்கள். அதுவும் வக்கிரமான அர்த்தமே அவங்கடை கற்பனையில முதல்ல வரும்.’
‘தோழர் சுமன் எழும்பும். எப்பிடி என்டாலும் நாங்கள் இந்தக் கஸ்ரத்தில இருந்து விடுபட வேணும். அது உம்முடைய கையிலும் உம்முடைய நம்பிக்கையிலும் இருக்குது. உம்மால முடியும் எண்டதை நீர் நம்ப வேணும். அந்த நம்பிக்கைதான் உம்மை இந்தக் கஸ்ரத்தில இருந்து காப்பாற்றும்.’
‘தோழர் நீங்கள் கதைக்கிறதைக் கேட்க நல்லா இருக்குது. ஆனால் என்னால இயல இல்லை. இயலும் எண்டா நான் ஏன் அடி வாங்குகிறன். ஏன் நான் இங்க வந்து தேவை இல்லாமல் மட்டுப்பட்டன் எண்டு எனக்குத் தெரிய இல்லை.’
‘இது ஒற்றை வழிப் பாதை மாதிரி. இயக்கத்திற்கு வந்தாச்சுது. சமாளிக்க வேணும் தோழர். இப்ப வாரும் சாப்பிட. இதுக்கு ஏதாவது வழி இருக்குதா எண்டு டொக்ரரிட்டை நான் ஒருக்கா கேட்டுப் பார்க்கிறன். எதுக்கும் நீ கொஞ்சம் பொறுமையா நிலைமையை விளங்கிக் கொண்டு நடக்க வேணும். எனக்கும் நெஞ்சு குமுறுது. ஆனா என்ன செய்ய முடியும்? எழும்பும் சாப்பிட்டிட்டு வருவம்.’
சுமன் பரிதாபமாய் கண்ணனையும் தோழர் சிவத்தையும் பார்த்தான். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது என்பது விளங்கியது. பசி வேறு வயிற்றில் ஊற்றிய அமிலமாக அவனைக் கொல்லாமல் கொன்றது. வேறு வழி இல்லை. ஏதாவது சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் என்ன சாப்பிடாவிட்டால் என்ன நாளைக்கு மைதானத்திற்குச் செல்ல வேண்டும். அதை நினைக்க மீண்டும் அவனுக்குத் தலை சுற்றியது. இருந்தும் கண்ணனும் தோழர் சிவமும் ஒவ்வொரு பக்கமாக நின்று அவனைத் தூக்கி எழுப்பி விட்டார்கள்.
பின்பு கண்ணன் தன்னிடம் இருந்த சட்டை ஒன்றை அவனுக்கு அணிவித்தான். பெரும்பாலான காயங்கள் அதற்குள் மறைந்து கொண்டது. அதன் பின்பு,
‘போவமே?’ என்றான் கண்ணன்.
‘போவம்.’ என்றார் தோழர் சிவம். சுமன் அழுவதா சிரிப்பதா என்கின்ற கேள்வியில் எழுந்த ஒரு சிரிப்போடு அவர்களோடு தயங்கித் தயங்கித் தள்ளாடி நடந்தான். சிறிது தூரம் நடந்து இருப்பார்கள்,
‘என்ன நீங்கள் இரண்டு பேரும் இவருக்குப் போடிக்காட்டே?’ என்றான் சாலன். அவன் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவன். அதைக் கேட்டதும் மூவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சுமன் பயத்தோடும், பதற்றத்தோடும் மாரியில் நனைந்த கோழி போல் நடுங்கினான். தோழர் சிவம் ஒரு கணம் அதிர்ந்தாலும் தன்னை விரைவாகச் சமாளித்துக் கொண்டு,
‘என்ன தோழர் சொல்லுகிறியள்?’ என்றார்.
‘ஆங்… நீங்கள் என்ன இவருக்கு போடிக்காட்டோ எண்டு கேட்டன்.’
‘ஏன் தோழர் அப்பிடிக் கேட்கிறியள்? இயலாத தோழருக்கு உதவி செய்யக் கூடாது எண்டுறியளா தோழர்? இராணுவம் எண்டாலும் சக சிப்பாய்க்கு உதவி செய்யத்தானே வேணும்? நீங்கள் பொடிக்காட்டா எண்டு கேட்கிறது ஒரு மாதிரி இருக்குது தோழர்.’
‘சிவம் தோழர் சொன்னா அது சரியாக இருக்கும். அதே மாதிரி நாளைக்கு ஒழுங்கா றெயினிங்கையும் செய்யச் சொல்லுங்க தோழர். யாருக்கும் யார் மேலையும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எங்கடை கடமையைச் செய்கிறம். அதுக்கு எல்லாரும் ஒத்துழைக்க வேணும். தோழர் சுமன் நாளைக்கு நல்லாப் பயிற்சி செய்வார் எண்டு நினைக்கிறன்.’
‘ம்… செய்வார் தோழர். நாங்கள் கதைக்கிறம் தோழர்.’
‘சரி. நான் வாறன் தோழர். தோழர் கண்ணன்… தோழர் சுமனுக்கு உற்சாகம் கொடும். நாளைக்குச் சந்திப்பம் தோழர்.’
தோழர் சாலன் போவதைச் சுமன் வெறுப்போடு பார்த்துக் கொண்டு நின்றான். அதைத் தோழர் சிவமும் கவனித்தார். அவனுக்குப் புத்திமதி சொல்ல வேண்டும் போல் இருந்தது. என்றாலும் அது அதிகமாகிவிடும் என்று நினைத்த தோழர்,
‘நாங்கள் சாப்பிடப் போவம்.’ என்ற வண்ணம் நடந்தார்.