7. பறக்க நினைத்த பட்சி

சாப்பிட்ட பின்பு மூவரும் வந்து படுத்துக் கொண்டார்கள். படுத்துக் கொள்வது வேறு நித்திரை கொள்வது வேறு. தோழர் கண்ணனும் தோழர் சிவமும் நாள் முழுவதும் வயலில் வேலை செய்து களைத்தவர்கள் போலக் குறட்டை நாதம் பேச நித்திரை கொண்டார்கள். சுமனால் அப்படி நித்திரை கொள்ள முடியவில்லை. ஏன் நான் இங்கு வந்தேன் என்கின்ற கேள்வி உள்ளிருந்து உயிரோடு அவனை உண்டது. அவன் புரண்டு புரண்டு படுத்தான். அவனுக்குத் தன்னை எண்ண கண்கள் அடங்கா ஊற்றாக, கண்ணீர் வற்றாத ஆறாக, விம்மல் முடியாத தூறலாகக் கவலை பொங்கி வழிந்தது. அவன் அதை மற்வர்கள் கேட்காது தன்னுள் அடக்க அவஸ்தைப்பட்டான். அவனுக்கு இப்படியே இங்கிருந்து அல்லாடுவது சற்றும் பிடிக்கவில்லை. இது தேவைதானா என்கின்ற கேள்வி எழுந்தது. இருந்தும் இங்கு வந்து அகப்பட்ட பின்பு இனி என்ன செய்வது என்பது அவனுக்கு விளங்கவில்லை.
சுமன் திரும்பிப் படுத்தான். எங்கும் அமைதி. சவுக்கம் தோப்புக்கள் எங்கும் காரிருள் கவுண்டு பெரும் அரண்களாகத் தோன்றின. காவலில் நின்றவர்களின் மின் விளக்குகள் இடைக்கிடை ஏதாவது அசைகிறதா என்று உன்னிப்பாகத் தேடின? காற்று சற்றும் வீசாத ஒரு இரவு. சுமனின் மனதில் வெளியே சவுக்கம் தோப்பில் குந்தி இருந்த இருள் போலக் கவலை குந்தி இருந்து அழுத்தியது. அவனுக்கு மூச்சு முட்டுவதாய் தோன்றியது. என்ன செய்வது என்கின்ற கேள்வி விடையில்லாத விடுகதையாக அவன் நித்திரையைக் காவு கொண்டது.
அவன் மீண்டும் புரண்டு படுத்தான். நித்திரை… இந்த வாழ்க்கை… என்பன கைக்கெட்டாத தொலைவில் கைவிட்டுத் தொலைந்ததான கவலை அவனை மீண்டும் ஏறி மிதித்தன. இதற்கு விடுதலை வேண்டும் என்று தோன்றியது. எதற்கு என்பது அவனுக்கு முதலில் விளங்கவில்லை. பின்பு சாதுவாகப் புலப்பட்டது. புலப்பட்டாலும் எப்படி என்பது சற்றும் விளங்கவில்லை. ஆனால் இதை இப்படியே தொடர முடியாது என்று தோன்றியது. எப்படிக் கேட்பது? கேட்டால் என்ன சொல்லுவார்கள்? மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும்? சுமனால் நித்திரை கொள்ள முடியவில்லை. எழுந்து வெளியே சென்றால். அப்படியே எங்காவது சென்றுவிட்டால்? எங்கே இந்த முகாம் இருக்கிறது என்பது தெரியாது. எப்படி இங்கு இருந்து போவது என்று தெரியாது. ஆனாலும் தெரியாததைத் தெரிந்து கொள்வதே சுதந்திரத்தைத் தரும் என்று தோன்றியது. சுமன் எழுந்து இருந்தான். வெளியே போவது என்றால் காவலுக்கு நிற்பவர்களிடம் என்ன சொல்வது? எங்கே செல்வது என்றாலும் நேரமும் பெயரும் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும். நேரத்திற்கு வராவிட்டால் சங்கு ஊதிவிடுவார்கள். அத்தால் முகாம் அலங்கோலமாகும். அமைதி இழந்து அலை மோதும். சுமனுக்கு மனதிலிருந்து எழுந்த துணிவு காலால் கரைந்து கனவாய் போயிற்று. இருப்பதற்குக்கூடச் சக்தி இல்லாதது போல இருந்தது. சுமன் விழுந்து படுத்தான். நித்திரை வர மறுத்தது. என்ன செய்வது என்கின்ற கேள்வி மீண்டும் அவனைக் குடைந்தது. கண்ணனை எழுப்பிக் கதைக்க வேண்டும் போல் இருந்தது. அவனோடு கதைப்பதற்குக்கூடப் பயமாக இருந்தது. கதைக்காமலிருந்து என்ன செய்வது என்கின்ற கேள்வி எழுந்தது. கதைக்க வேண்டும். ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டும். அவன் மீண்டும் துணிவை வரவளைத்தான். துணிவோடு எழுந்து இருந்தான். கண்ணனை எழுப்பி அதைக் கதைப்பது என்று முடிவு பண்ணினான். மெதுவாகக் குனிந்து கண்ணனின் காதருகே வாயை வைத்து,
‘கண்ணா… கண்ணா…’ என்று கூவினான். அது மற்றவர்களுக்குக் கேட்டுவிடக் கூடாது என்கின்ற பயமும் மனதிலிருந்தது. கண்ணன் அசையவில்லை. சுமனும் அதற்கு அசைந்து கொடுப்பதாய் இல்லை. மீண்டும் மீண்டும் குனிந்து கூப்பிட்டான்.
‘சீ போ…’ என்ற வண்ணம் கண்ணன் மறுபக்கம் திரும்பிப் படுத்தான். சுமன் விடவில்லை. மீண்டும் முயற்சி செய்தான். அப்போது அந்த வழியால் சென்ற சுற்றுக் காவலுக்கு அது கேட்டுவிட்டது. அன்று மணிமாறன் சுற்றுக் காவலாய் இருந்தான். அவன் இலகுவாக யாரையும் நம்பாத ஒரு சந்தேகப் பிறவி. முகாமிற்குள் யாரும் ஊடுருவலாம். அல்லது உள்ளிருந்து யாரும் ஊடுருவிக்கொண்டு வெளியே செல்லலாம் என்கின்ற தத்துவங்களை முழுமையாக நம்புபவன். அது பிராந்தியாக இருக்குமா என்று அவன் ஒரு போதும் சந்தேகப்பட்டதே இல்லை. கழகத்தை உடைப்பதற்கே கழகத்தில் அரசியில் பிரச்சனை என்று ஒன்று உருவாக்கப்பட்டது என்பதை அவன் நம்புவதோடு அது தொடர்ந்தும் இரகசியமாக நடக்கிறது என்பதையும் அவன் வலுவாக நம்புபவன். அதனால் அவனுக்குச் சிறு சந்தேகங்களே பெரும் ஆர்வத்தை உண்டு பண்ணிவிடும். கண்கள் பூதக்கண்ணாடியாக மாறித் துருவத் தொடங்கிவிடும். அதனால் அவன் முதலில் குடிலுக்கு உள்ளே வராது சுமன் கண்ணனை எழுப்புவதை உற்றுக் கவனித்தான். அவனுக்கு அத்தால் இருவர் மீதும் சாதாரணமாகவே சந்தேகம் உண்டாகியது. அவன் அதன் பின்பு உள்ளே போனான். அப்படிப் போகும் போது சந்தேகம் அவன் தலையில் ஏறிக் குந்தி இருந்து சவாரி செய்தது.
‘என்ன தோழர் சுமன்…? உங்களுக்கு நித்திரை வரேல்லையா? என்ன ஐடியா உங்களுக்கு? ஆர் தோழர்…. கண்ணனும் முழிப்பா?’
‘இல்லைத் தோழர். கண்ணன் நித்திரையால எழும்ப இல்லை. நான் வெளியால போக வேணும். வயித்தைக் கடுமையா கலக்குது. தோழர் நிலைமையை விளங்கிக் கொள்ளுங்க. உங்கடை தத்துவங்களை இப்ப எங்களில பாவிக்காதையுங்க.’
‘ஆங்… அப்பிடியே? வெளிய போய் வந்தாப் பிரச்சனை இல்லை. வெளியவே போயிட்டியள் என்டாத்தான் பிரச்சனையாகும். வெளிக்குப் போகிறது எண்டா உசாரா கூப்பிட்டுக் கூட்டிக் கொண்டு போய் வாரும். அதுக்கு ஏன் உந்த உஸ் உஸ் தோழர்? இது தேவையில்லைத் தானே? இப்பிடிச் செய்தா அது தேவை இல்லாத சந்தேகத்தைத்தான் உண்டு பண்ணும். பிறகு என்ரை தத்துவங்களைக் குறை சொல்லக் கூடாது தோழர்.’
‘நீங்கள் தப்பா நினைக்கிறியள் தோழர்.’
‘நான் தப்பா நினைக்க இல்லை. ஆர் எண்டாலும் அப்பிடித்தான் நினைப்பினம். நிலைமை இங்கை அப்பிடிதான் இருக்குது. நீர் கெதியா போய் வாரும்.’
‘சரி தோழர்.’
‘கண்ணன் எழும்பு.’ என்று தனது பாதணியால் குத்திக் கண்ணனை எழுப்பினான். அவன் கோபத்தோடு துடித்துப் பதைத்து எழுந்தான். கண்ணன் யார் என்றாலும் அடித்திருப்பான். ஆனால் முன்னே மணிமாறன் நின்றான். அதுவும் காவலில் நின்றான். வந்த கோபத்தைப் பாடுபட்டு வாலாய் மடக்கிச் சுருட்டி வைத்துக் கொண்டு எதுவும் விளங்காது விளித்தான்.
‘தோழர் சுமன் வெளிக்குப் போக வேணுமாம். அதுதான் எழுப்பினான். நீங்கள் எழும்புகிறியள் இல்லை. அதுதான் கொஞ்சம் தட்டி எழுப்ப வேண்டி இருந்திச்சுது. கெதியா அவரைக் கூட்டிக் கொண்டு போயிட்டு வாருங்க. அடுத்த றவுண்டுக்கு வரேக்க நீங்கள் இங்க இருப்பியள் எண்டு நினைக்கிறன்.’
‘என்ன?’
‘நான் திரும்பவும் உங்களுக்கு முதலில இருந்து சொல்ல முடியாது. சுமனிட்டை விரிவாக் கேளும். இப்ப அவருக்கு வெளிக்குப் போக உதவி வேணுமாம். கூட்டிக் கொண்டு போயிட்டு வாருங்க தோழர். நான் நிறைய இடம் சுற்றி வரவேணும்.’
‘அதுக்குக் காலால குத்தியா எழுப்பிவீங்கத் தோழர்? ஏன் தோழர் இப்பிடிச் செய்கிறியள்? நாங்களும் உங்களை மாதிரித் தோழர்தானே தோழரே?’
‘நீங்கள் எழும்ப இல்லை… அதுதான் தோழர். உங்களுக்கு நொந்து இருந்தால் சொறி தோழர். இப்ப கெதியாப் போயிட்டு வாங்க.’
‘ம்… சரி தோழர். என்னடா கோதாரி உனக்கு வயித்துக்க? இதுக்கு நீ சாப்பிடாமலே இருந்து இருக்கலாம். ஒழுங்கா நித்திரை கொண்டால்தானே காலைமை பயிற்சி செய்ய முடியம்? இப்பிடி இரவில…’ என்று சுமனைப் பார்த்து புறு புறுத்தான் கண்ணன்.
‘அப்ப நான் இங்கயே இருக்கட்டா?’ என்று கோபமானான் சுமன்.
‘ஐயோ வாடா.’
‘ம்…’ என்கின்ற ஒரு கோப உறுமலோடு புறப்பட்டான் சுமன். கண்ணன் முன்பு சென்றான். சமையல் அறைப் பக்கத்தால் வெளியே வெளிக்குச் செல்லும் காவலில் பெயரையும் நேரத்தையும் பதிந்துவிட்டு இருவரும் வெளியே சென்றார்கள். காவலில் நின்றவன் தன் பங்கிற்கு. ‘கெதியாப் போயிட்டு வாங்க.’ என்றான். அதைக் கேட்ட கண்ணனிற்குக் கோபம் வந்தது. தோழர்களே தோழர்களை நம்பாத ஒரு நிலைமையில் முகாம்… கழகம்… அதன் செயற்பாடுகள்… விடுதலைப் போராட்டத்தை அழிக்கப் பாசிச அரசுகள் பல வழிகளைக் கையாளும். எமது போராட்டத்தில் அரசுகள் மட்டும் பாசிசம் இல்லை என்பதுதான் கண்ணனின் கோபம். அதை எண்ணினால் ஏன் புறப்பட்டோம் என்று எண்ணத் தோன்றும்.
திடீரெனக் காற்று வீசத் தொடங்கியது. அந்தக் கூதல் காற்று ஈரவயல்கள் தழுவிக் குத்தி முறிந்து உடல் தழுவிப் போனது. மேலிலிருந்த சட்டையைவிடப் போர்வையும் தேவை போன்ற அதன் தழுவல் வக்கிரமாக இருந்தது. அதன் தழுவலின் வக்கிரத்தை உணர்ந்த கண்ணன் அன்புக் காதலியின் அணைப்பு அந்தப் போர்வைக்குப் பதிலாக இருந்தால் எப்படி இருக்கும் என்கின்ற அபத்தமான கற்பனையில் திடீரென மிதந்தான். அவன் அதிலிருந்து விடுபட்டுத் தமது அலுவலை முக்கியப்படுத்த எண்ணினான்.
‘வா கெதியாப் போயிட்டு வருவம்.’ என்றான் கண்ணன்.
‘திடீர் எண்டு குளிருது.’
‘நான் என்ன வெக்கையா இருக்குது எண்டு சொன்னனா? குளிருதுதான். நாங்கள் கெதியாப் போயிட்டு வருவம். அவன் என்ன றவுண் டியூட்டி ஏறி விழுந்திட்டுப் போகிறான். காலால வேற உதைக்கிறான். ஊராய் இருந்து இருந்தால் மூஞ்சையைப் பேர்த்து இருப்பன். இங்க வந்த நோக்கம் வேறை. அதால எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு கூழைக் கும்பிடுபோட வேண்டி இருக்குது.’
‘அது உனக்கு இப்பதான் தெரியுதா?’ என்றான் சுமன்.
‘ஒ… உனக்கு அது ஏற்கனவே தெரியுமே?’
‘இது சரிவராது கண்ணன்.’
‘அப்ப என்ன செய்கிற யோசனை உங்களுக்கு?’
‘பகிடியை விடு கண்ணன்.’
‘வேறை என்னடா? வந்திட்டம். இனி எது எண்டாலும் அனுபவிக்க வேண்டியதுதான். வேற வழி இல்லை.’
‘மனம் இருந்தால் இடம் உண்டு கண்ணன்?’
‘நீ என்ன சொல்ல வாறாய்?’
‘நான் ஒண்டு சொல்லுவன். கோபப்படாமல் ஆறுதலாகக் கேட்க வேணும். நாங்கள் நல்ல எண்ணத்தோடைதான் வந்தம். இங்க எல்லாம் தலைகீழாக இருக்குது. இதை எல்லாம் சகிச்சுக் கொண்டு இங்க இருக்க வேணும் எண்டு எந்தக் கட்டாயமும் இல்லை எண்டு நான் நினைக்கிறன்? நாங்கள் என்ன தப்புச் செய்து போட்டுச் சிறைக்குத் தண்டனைக்காகவா வந்து இருக்கிறம்? ம்…. விடுதலைக்கு வந்து இருக்கிறம். அது பிடிக்காட்டி அதில இருந்து விலகிப் போகிற உரிமையும், சுதந்திரமும் எங்களுக்கு இருக்குதா?’
‘உனக்குச் சரியான பயித்தியம் பிடிச்சிருக்குது எண்டு நினைக்கிறன். என்னோடை இப்பிடி இனிக் கதைச்சா நானே அடிச்சு மூஞ்சையைப் பேர்த்துப் போடுவன். நீ இங்க இருந்து கொண்டு மொக்குத்தனமாய் கதைக்கிறய். இப்படிக் கதைக்கிறது எண்டா இனிமேலைக்கு என்னோடை கதைக்காதை. இப்பிடி நீ கதைக்கிறது எண்டா நாங்கள் நண்பராயும் இருக்க முடியாது… தோழராயும் இருக்க முடியாது.’
‘ஏன் கண்ணன் இப்படிப் பயந்து நடுங்குகிறாய்? நான் இங்க இருக்க வேண்டி வந்தா நீ மாத்திரம் ஊருக்குப் போவாய் எண்டு நினைக்கிறன். அப்ப உனக்கு நல்ல சந்தோசமாய் இருக்குமா?’
‘என்னடா கதைக்கிறா?’
‘என்னால இதைத் தாங்க முடியாது. இவங்கடை பயிற்சி எல்லாம் செய்ய என்னால இயலாது. இவங்கள் இப்படி அடிக்க அதை நான் பொறுத்துக் கொண்டும் இருக்கமாட்டன். இங்க இருந்து உயிரோடை வெளியேற வேணும். இல்லாட்டி அது என்ரை சாவுக்குப் பிறகாவது நடக்க வேணும்.’
‘டேய்… நீ என்ன விசர்க் கதை கதைக்கிறாய்?’
‘நான் ஒண்டும் விசர் கதை கதைக்க இல்லை. நான் என்ன செய்ய வேணும் எண்டதில தெளிவாகத்தான் இருக்கிறன். நீ உதவியா இருக்கிறது எண்டா உதவியா இரு. இல்லாட்டி நான் தனிச்சு எண்டாலும் நினைச்சதைச் செய்வன். விடுதலை எண்டு வந்து நான் செய்ய முடியாததை, விருப்பம் இல்லாததை அடிமை மாதிரிச் செய்கிற நவீன காலத்து குழந்தைப் போராளியாக இங்க இருக்கத் தயார் இல்லை. என்னால முடிய இல்லை. முடிய இல்லை எண்டா விட வேணும். இலலாட்டி நான் அதுக்கு ஒரு முடிவு கட்ட வேணும். முதல்ல எங்களுக்குச் சுதந்திரம் வேணும். பிறகு நாட்டின்ரை சுதந்திரத்தைப் பற்றிக் கதைக்கலாம். ம்… அடிமைகள் ஒருநாளும் அடுத்தவைக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுக்க முடியாது.’
‘நீ என்ன கதைக்கிறாய் எண்டு தெரிஞ்சுதான் கதைக்கிறியா? சும்மா வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் கதைக்கக் கூடாது. நீ கதைக்கிறதை யாரும் கேட்டால் சிரிப்பினம். இதை நீ இயக்கத்துக்கு வாறத்துக்கு முதல் யோசிச்சு இருக்க வேணும். இங்க வந்த பிறகு யோசிக்கக் கூடாது. இயக்கத்துக்கு வரேக்கையே உன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் அதிற்கு அர்ப்பணம் எண்டு தானே பொருள். அது விளங்காமலா இங்க வந்து இருக்கிறாய்? இது சரி இல்லைச் சுமன். இப்படி நீ நினைக்கிறதோ அல்லது கதைக்கிறதோ சரி இல்லை. இதை யாரும் அறிஞ்சால் பெரிய பிரச்சினையாய் வரும். தயவு செய்து நீ இப்படி நினைக்காதை. இப்படிக் கதைக்காதை. அது மன்னிக்க முடியாத தப்பு. நிச்சயம் எங்களைச் சிக்கலில மாட்டி விடும்.’
‘எல்லாத்தை இழக்கத் தயாராகத்தான் போராட்டத்திற்கு எண்டு வந்து இருக்கிறம். அதுக்காக எங்களை அடிமைப்படுத்த இவங்கள் யார்? சர்வாதிகாரத்திலும், பாசிசத்திலும் மிதக்கிற ஒரு இயக்கத்தால யாருக்கு விடுதலை வாங்கித்தர முடியும்?’
‘அறப்படிச்சுக் கூழ்ப்பானைக்க விழுந்த கதை மாதிரி நீயும் மாட்டுப்படுகிறதோடை மற்றவையையும் மாட்டி விடாத. சும்மா வாயை வைச்சுக் கொண்டு இரு. இல்லாட்டி மண்வீட்டுக்க இருக்கிற சில மர்ம மனிதர்கள் போல நாங்களும் விலாசம் இல்லாமல் போயிடுவம். தயவு செய்து நிலைமையை விளங்கிக்கொள் சுமன்.’
‘உனக்குப் பயமா இருந்தால் நீ என்னோடை கதைக்காமல் ஒதுங்கி இரு. ஆனா என்னால இப்படி அடி வாங்கிக் கொண்டு அடிமையா இருக்க முடியாது. நான் உயிரோடை இருக்கிறனோ இல்லையோ இந்த நரகத்தில தொடர்ந்து வாழமாட்டன்.’
‘நீ விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறாய். எது செய்கிறது எண்டாலும் அது உருப்படியா இருக்க வேணும். யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் வீம்புக்கு எதுவும் செய்யக் கூடாது. அதுவும் இயக்கம் எண்டு வந்த பிறகு நீ என்ன கதை கதைக்கிறாய்?’
‘இது வீம்பு இல்லை. நான் அடிமையாக் கிடந்தா என்னைப் போல நிறையத் தோழர்கள் அடிமையாக் கிடக்க வேண்டி வரும். இதுதான் முதல் முக்கியமான போராட்டம். இதில கிடைக்கிற வெற்றிதான் நாட்டுக்குக் கிடைக்கப் போகிற வெற்றியா இருக்கும்.’
‘ஓ… பெரிய அறிவு ஜீவி இவர். சும்மா விசர் கதை கதைச்சுக் கொண்டு இருக்காதை. றெயினிங் செய்கிறதுக்கு கள்ளம் அடிச்சுப் போட்டு இவர் இப்ப இரகசியமாப் பெரிய தத்துவம் கதைக்கிறார். வந்த அலுவலை ஒழுங்கா முடிச்சுக் கொண்டு போய் சேருவம். இனிமேலைக்கு என்னை இதுக்கு எல்லாம் கூட்டிக் கொண்டு வராதை. உன்னுடைய பயித்தியத்துக்கு நாங்களும் பலியாக முடியாது. நீ என்னோடை கதைக்கிற கதை மண்டை களண்டவன் கதைக்கிற மாதிரி இருக்குது.’
‘விளங்குது. உனக்கு உன்னுடைய அக்கறை. சரி நான் உங்களை இனி டிஸ்ரப் பண்ண இல்லை. என்ரை மேலில கை வைக்கேக்கையே நான் செத்துப் போயிட்டன். இனி என்ன நடந்தாலும் பருவாய் இல்லை. நான் விரும்பின மாதிரி என்னை இருக்க விடவேணும். இல்லாட்டி என்னை என்ரை வழியில விட வேணும்.’
‘இது ஒண்டும் மடம் இல்லை. நீ ஒரு இராணுவத்திற்கு வந்து இருக்கிறாய். அப்ப அதுக்கு ஏத்த மாதிரிதான் நடக்க வேணும். உன்ரை இஸ்ரத்திற்கு இங்க இருக்க முடியாது. எந்த இராணுவத்திலும் அப்பிடி இருக்க விடமாட்டாங்கள்.’
‘நான் இராணுவத்திற்கு வர இல்லை. விடுதலை வேண்டும் எண்டு ஒரு விடுதலை இயக்கத்திற்கு வந்து இருக்கிறன். இந்த இராணுவம் எண்ட நினைப்பே பிழை. இது எங்களுக்குப் பலம் எண்டு நினைக்காத. இதுவே எங்களுக்குப் பலவீனமாய் எதிர்காலத்தில வரப்போகுது. அடி வாங்கினதால நான் இதைச் சொல்ல இல்லை. அடிமனதில எனக்குத் தோன்றுகிறதால நான் சொல்லுகிறன். இதெல்லாம் இப்ப விளங்கப்படுத்த முடியாது.’
‘ம்… இவர் பெரிய ஞானி. சும்மா உன்ரை புல்டாவை விடு. விடுதலை இயக்கம் ஒரு இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர வேணும் எண்டா அதுக்கு ஒரு இராணுவமும் கட்டாயம் வேணும். அதுவும் பலமான இராணுவமாய், வீச்சான இராணுவமாய் அது இருக்க வேணும். அதுக்கு கடுமையாகப் பயிற்சி செய்ய வேணும். நீ அதை விளங்கிக் கொண்டு ஒழுங்காய் கடுமையாகப் பயிற்சி செய்ய வேணும். இப்பிடித் தேவை இல்லாத காரணங்கள் சொல்லிக் கொண்டு இருக்;கக் கூடாது. இது நீ உன்னையும் குழப்பி மற்றவையையும் குழப்புகிற மாதிரி இருக்குது. இதால யாருக்கும் நன்மை வரப் போகிறது இல்லை. உனக்காக ஒரு நாளும் கழகமோ அதுகின்ரை கொள்கையோ மாறப் போகிறது இல்லை. நீதான் அதுக்கு ஏத்த மாதிரி மாற வேணும். இல்லாட்டித் தேவையில்லாத சிக்கல்கள் எல்லாம் வரும்.’
‘நீ சொல்லுகிற மாதிரிப் பயந்தா நான் இங்கயே செத்துப் போயிடுவன். நான் இங்க சாகிறதுக்கு முதல் என்னால ஆனது அனைத்தையும் செய்து பார்த்திட்டுத்தான் சாவன். அதிலை எந்த மாற்றமும் இருக்காது. சீ நான் ஏன் இங்க வந்தன் எண்டு இருக்குது.’
‘இது என்ன கோதாரியடா உன்னோடை. தயவு செய்து எங்களுக்கா ஆவது உந்த எண்ணத்தைக் கைவிடு.’
‘உங்களுக்காக நான் சாகவும் தயார். ஆனால் அவங்களிட்டை அடிவாங்கத் தயார் இல்லை. எனக்காக நீங்கள் அவங்களிட்டை அடி வாங்குவியளா? சொல்லு கண்ணன்?’
‘என்னடா விசர் கதை கதைக்கிறா? நாங்கள் ஒழுங்காப் பயிற்சி செய்கிறம். நாங்கள் ஏன் அவங்களிட்டை அடி வாங்க வேணும்?’
‘முடியாதில்லை. நான்தான் எனக்காக அடி வாங்க வேணும் இல்லையா? பிறகு எதுக்கு உந்தச் சமாதானம் எல்லாம்? எனக்காக யாரும் இங்க எதுவும் செய்ய முடியாது. எனக்கான வழியை நான்தான் பார்த்துக் கொள்ள வேணும். தயவு செய்து என்னைக் குழப்பாதையுங்க. நான் எப்பிடியோ இதுக்கு ஒரு வழி கெதியாக் கண்டு பிடிப்பன்.’
‘நீ அப்பிடி என்னடா செய்ய முடியும்?’
‘ஏன் வழி இல்லை?’
‘என்ன எண்டு சொல்லு?’
‘அது ஏன் உனக்கு இப்ப?’
‘ஏதும் மொக்குத்தனமாய் செய்து மாட்டுப்படாதை. அப்பிடி மாட்டுப்பட்டா உன்னோடை கூடித் திரிஞ்ச எங்களை முதலில மண்வீட்டில போடுவாங்கள். அதுக்குப் பிறகு உன்னைவிட எங்கடை நிலைமையே மோசமாக இருக்கும். தயவு செய்து அப்பிடி ஏதும் எண்ணம் இருந்தால் அதைக் கனவிலும் திரும்ப நினைக்காதை.’
‘அதுக்கு ஒரு வழிதான் இருக்குது.’
‘என்ன அது?’
‘எல்லாரும் சேர்ந்து செய்தால்?’
‘சீ நாயே… இப்பிடிக் கதைச்சி எண்டா செவிட்டைப் பொத்தி அறைஞ்சு போடுவன். இனிமேலைக்கு என்னோடை இப்பிடிக் கதைக்காத. எனக்கு விசர் வந்தா நானே போய் அவங்களிட்டை எல்லாத்தையும் சொன்னாலும் சொல்லிப் போடுவன். தயவு செய்து என்னைப் பயித்தியம் ஆக்காத.’
‘போய்ச் சொல்லு… எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இண்டைக்கு நடந்தால் என்ன இன்னும் நாலு நாள் கழிச்சு நடந்தால் என்ன? நான் அதைப் பற்றிக் கவலைப்பட இல்லை. இவங்களிட்டை அடிவாங்கிறதிலும் செத்துப் போயிடலாம். அதால நீ என்ன செய்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை.’
‘அப்ப உனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை.’
‘அப்பிடிக் கவலை இல்லை எண்டா இப்ப நான் இங்க இருந்திருக்க மாட்டன். எனக்குச் சரி எண்டுகிறதை நான் செய்திருப்பன். எனக்கு என்னைப் பற்றிக் கவலை இல்லை எண்டுதான் சொன்னனான்.’
‘ஓ எங்களைப் பற்றிக் கவலை இருக்கு எண்டுகிறாய்?’
‘அதுக்காகத்தானே நான் இங்க இருந்து சாகப் போகிறன். அதுக்கு நீங்கள்தானே சாட்சியாக இருக்கப் போகிறியள்? நான் கவலைப்படுகிறதைப் பற்றி நீங்கள் தெரிஞ்சு கொள்ள வேணும் எண்டோ அல்லது அனுதாபம் காட்ட வேணும் எண்டோ நான் நினைக்க இல்லை.’
‘என்னடா சொல்லுகிறாய்?’
‘நான் இங்க அடி வாங்கிக் கொண்டு அடிமையாய் பயிற்சி செய்யப் போகிறது இல்லை. அது உங்களுக்கு நல்லாய் தெரியும். என்னால நீங்களும் அடி வாங்கக்கூடாது. அதுக்கு பல வழிகள் இல்லை. நிச்சயம் நான் சொல்லுகிற மாதிரி நீங்கள் ஒரு நாளும் கேட்கப் போகிறதும் இல்லை. அதால என்ரை முடிவையும் யாரும் மாற்ற முடியாது.’
‘ஐயோ… நீ குழப்பாதை. இதுக்கு நீ சொல்லுகிறதைவிட நல்ல முடிவு இருக்குது. தயவு செய்து ஒழுங்காப் பயிற்சி செய். ஒருத்தருக்கும் பிரச்சனை இருக்காது. வந்த நோக்கமும் நிறைவேறின மாதிரி இருக்கும். தயவு செய்து வீம்புக்கு அடம்பிடிக்காதை.’
‘என்னை விடு கண்ணன். நீ ஒழுங்கா பயிற்சி செய். நான் உன்னை எந்த உதவியும் கேட்க மாட்டன். நீயும் வில்லங்கத்திற்கு வந்து உதவி செய்யாதை. நீ நினைக்கிற மாதிரி என்னை விட்டு விலகி இருக்கிறதுதான் உங்களுக்குப் பிரச்சினை வராமல் இருக்கிறதுக்கு வழி. கவலைப்படாத கண்ணன். எனக்கு உங்களில எந்தக் கோபமோ, வெறுப்போ கிடையாது. எப்பவும் எனக்கு என் கண்ணன் என் கண்ணன்தான். அதிலை எந்த மாற்றமும் இல்லை.’
‘டே சுமன்… நீயும் எனக்கு அப்படித்தான். தயவு செய்து அவங்கள் சொல்லுகிறபடி கேட்டுப் பயிற்சியை ஒழுங்காச் செய்யடா? தயவு செய்து அடம்பிடிக்காத. அதால எந்தப் பிரயோசனமும் இல்லை. உயிரைக் கொடுத்துப் பயிற்சியைச் செய்யடா. நீ பயிற்சி செய்தாய் எண்டா யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது.’
‘என்னால பயிற்சி செய்ய முடிஞ்சாச் செய்வன். இல்லை எண்டா நீங்கள் எனக்காகக் கவலைப்பட்டுக் கொண்டு தேடி வரவேண்டாம். நீ சொல்லுகிற மாதிரி அது உங்களைத் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிவிடும். என்னை நான் பார்த்துக் கொள்கிறன். நீங்கள் கவலைப்படாமல் இருங்க.’
‘உன்னோடை கதைக்க முடியாது. அவங்கள் தேடி வந்திடுவாங்கள். வா போவம்.’
‘சரி.’
அதன் பின்பு சுமன் எதுவும் கதைக்கவில்லை. கண்ணனுக்கும் எதுவும் கேட்க வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கவில்லை. கேட்டாலும் சுற்றிச் சுற்றி ஒன்றையே கதைப்பான் என்பதும் விளங்கியது. அதனால் மௌனம் கனகராசி என்றே அவன் மனதில் பட்டது.
அமைதியாகவே இருவரும் வாய்க்காலுக்குச் சென்று தங்கள் அலுவல்களை முடித்துக் கொண்டு திரும்பி முகாமிற்கு வந்தார்கள். காவலில் நின்ற தென்னவன் இருவரையும் எதற்காகவோ உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையில் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்பது போல இருந்தது. அதற்கும் சில காரணங்கள் உண்டு. இங்கும் தெரிந்தும் தெரியாது சில புறநடையான சோடிகள் உண்டு. அவர்கள் சவுக்கம் தோப்புக்குள் தங்கள் ஆவலைத் தீர்த்துக் கொள்வதும் உண்டு.
கை எழுத்துப் போடும் போதுதான் அதிக நேரம் செலவு செய்துவிட்டது கண்ணனுக்கு உறைத்தது. கண்ணன் அதற்குமேல் அங்கு நிற்காது முகாமை நோக்கி விரைந்தான். இனி நித்திரை கொள்வதற்கு அதிக நேரம் இல்லை. விடிந்ததும் தேனீர் பருகிவிட்டு பயிற்சிக்குச் செல்ல வேண்டி இருக்கும் என்பது அவனுக்கு விளங்கியது.
காலைப் பயிற்சிக்கு வீளை ஊதியதும் எழுந்து கண்ணன் சுமனை எழுப்பினான். அவன் எழ மறுத்தான்.
‘வாடா ஒண்டாப் போய் பயிற்சி செய்வம். அவங்கள் நெருக்கினால் நாங்களாவது ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம். நீ தனியப் போய் மாட்டுப்படாதை. எழும்பி எங்களோடை வா. அதுதான் உனக்குப் பாதுகாப்பு. எங்களுக்கும் நிம்மதி.’ என்று கேட்டான்.
‘தேவையில்லைக் கண்ணன். நீ தோழர் சிவத்தோடை போம். நான் வாறன். என்னைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.’
‘என்னடா கதைக்கிறா சுமன்?’
‘நான் என்ன கதைக்கிறன் எண்டு தெரிஞ்சுதான் கதைக்கிறன் கண்ணன். தயவு செய்து நீ போ. நான் கெதியா வாறன்.’
‘இல்லை. ஒண்டாப் போனம் எண்டாத்தான் ஒண்டா நிண்டு பயிற்சி செய்யலாம். அதுதான் நீ எங்களோடை வாறது முக்கியம்.’
‘அது தேவை இல்லை. நான் வந்து உங்களோடை சேருகிறன். அப்ப எனக்காக நீங்கள் அடிவாங்க றெடியா?’ என்று கூறிவிட்டு அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவன் பழைய உயிர்ப்பு அற்றுப் பிணக்களை தோன்றியது போலக் கண்ணனுக்கு இருந்தது. அதைக் கண்ணன் சுமனிடம் சொல்லவில்லை. அவனோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என்று தோன்றியது. அதனால் அவன் மைதானத்தை நோக்கிப் போகும் தோழர்களோடு சேர்ந்து கொண்டான். அவன் கால்கள் நடந்தாலும் மனது சுமனைவிட்டுப் பிரிய முடியாது அங்கேயே நின்றது. இதற்கு என்ன வழி? இவனை எப்படிக் காப்பாற்றுவது? அவனுக்கு எதுவும் விளங்கவில்லை.