8. தொடர்ந்த சோதனை

ஆற்று நீர் ஓடும் போது அதன் துளிகள் அதன் ஒட்டத்தைத் தடுப்பதில்லை. அதைப் போன்றதே முகாமில் இருக்கும் ஒவ்வொரு தோழர்களின் அன்றாட வாழ்க்கையும் இருக்க வேண்டும். ஒரு தோழரின் எந்த நடவடிக்கையும் கழகத்தின் இயக்கத்திற்கு எந்த விதத்திலும் பங்கம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது. அப்படி இயக்கத்தின் ஓட்டத்திற்குப் பங்கமாக யாரும் பொதுவாக நடந்து கொள்வதில்லை. அதற்கு விதிவிலக்காக சுமன் இருப்பது கண்ணனுக்குச் சங்கடத்தையும் மனவருத்தத்தையும் தந்தது. அவனை அந்த மனவோட்டத்திலிருந்து விடுவித்து விடலாம் என்கின்ற எண்ணத்தில் அவன் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததில் அவனுக்குக் கவலையாகவும் வேதனையாகவும் இருந்தது. அவன் மனது முழுவதும் சுமனைச் சுற்றிவரக் கால்கள் மைதானத்தை நோக்கி நடந்தன.
மைதானத்தில் இறங்கிய பின்பு சுமனை நினைக்கும் அவகாசங்கள் கண்ணனுக்குக் கிடைக்கவில்லை. இப்போதாவது தனது நிலைமையை உணர்ந்து இருப்பான் என்கின்ற ஒரு நம்பிக்கையில் கண்ணன் பயிற்சியைக் கவனித்தான். இன்று பயிற்சி வழமையைவிடக் கடுமையாக இருந்தது. காலம் செல்லச் செல்ல பயிற்சி கடுமையாக இருக்கும் என்று ஏற்கனவே கண்ணன் கேள்விப்பட்டு இருந்தான். அது உண்மையாக இருக்கிறது என்பதைக் கண்ணன் அன்றைய பயிற்சியில் கண்டு கொண்டான். அதன் மூர்க்கத்தில் அவனால் அதிகம் சிந்திக்க முடியவில்லை. இருந்தும் மின்னல் போல அவன் நினைவு வந்து போயிற்று. கண்கள் அத்தினை தோழர்களையும் துழாவியது. இருந்தும் அவன் கண்ணில்படவில்லை. நிச்சயம் எங்காவது பயிற்சி செய்வான் என்பதைக் கண்ணன் நம்பினான். அவனுக்கு அதைவிட வேறு வழி இருக்கவில்லை.
காலைப் பயிற்சிகள் ஒருவாறு முடிவடைந்தன. இறுதியாக மகாமிற்குச் செல்லும் நேரம் வந்தது. அத்தால் கண்ணன் முழுமூச்சாகச் சுமனைத் தேடி வலம் வந்தான். இன்றும் வழமை போல அவனைக் காண முடியவில்லை. அவனைக் காண முடியவில்லை என்பதால் கண்ணனுக்குச் சற்றுப் பயம் உண்டாகியது. இன்றும் அப்படி நடந்து இருக்குமோ என்கின்ற எண்ணம் வந்த போது உடல் குளிர்ந்து மயக்கம் வந்துவிடுமோ என்பது போல ஒரு அவஸ்தை சில கணங்கள் உண்டாகின. அப்படி இருக்காது என்று அவன் தனக்குத் தானே சமாதானம் சொல்லிய வண்ணம் முகாமை நோக்கி ஓடத் தொடங்கினான். அலுத்துப்போய் நடந்து வந்த தோழர்கள் கண்ணன் வேகமெடுத்து முகாமை நோக்கி ஓடுவதை விசித்திரமாகப் பார்த்தார்கள். அவர்கள் பார்ப்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. அவன் தனது வேகத்தைச் சற்றும் குறைக்காது முகாமை நோக்கி ஓடினான்.
ஓடி வந்த கண்ணன் சற்றும் தாமதியாமல் விரைவாக தங்கள் குடிலுக்குச் சென்று அங்கே சுமன் இருக்கிறானா என்று பார்த்தான். அங்கு வேறு சில தோழர்கள் ஏற்கனவே வந்து இருந்தார்கள். ஆனால் சுமனைக் காணவில்லை. கண்ணன் அவர்களிடம் சுமனைப் பற்றிக் கேட்டான். அவர்கள் அதற்குத் தங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது என்று கூறிவிட்டார்கள். கண்ணன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. அவன் மனது பதைபதைத்தது. அப்படி இருக்கக் கூடாது என்று கழகத்தின் கொள்கையையும் மீறி இரகசியமாக இறைவனை வேண்டிக் கொண்டான். பின்பு தாமதியாது வருத்தக்காரர்கள் தங்கும் முகாமை நோக்கி ஓடினான். வழியில் தோழர் சிவம் அவனை இடைமறித்தார். அவரிடம் விடையத்தைக் கூற அவரும் அவனோடு சேர்ந்து வருத்தக்காரர்கள் தங்கும் முகாமிற்கு வந்தார்.
கண்ணனுக்கு மனது பதைபதைத்தது. இங்குச் சுமனைக் காணக் கூடாதே என்பது அவன் அவாவாக இருந்தது. தோழர் சிவத்திற்கும் அதே கவலையாக இருந்தது. தொடர்ந்தும் சுமன் இந்த நிலைமைக்குள் அகப்படுவது தோழர் சிவத்திற்குக் கவலையையும், மனவருத்தத்தையும் தந்தது.
இருவரும் அவசரமாக மருத்துவ முகாமிற்குள் சென்றார்கள். இவர்கள் அவசரமாக வருவதை மருத்துவர் ரவி பார்த்துக் கொண்டு நின்றார். அவருக்கு இவர்கள் இப்படி விழுந்தடித்துக் கொண்டு வருவது பிடிப்பதில்லை. ஒரு விபத்தில் சிக்கிக் காயப்பட்டிருந்தால் இப்படி வருவதில் அர்த்தம் இருந்து இருக்கும் என்பது அவர் எண்ணம். இவனோ பயிற்சிக்குக் கள்ள மடித்ததால் அடி வாங்கி வந்து இருக்கிறான். அவனை தியாகி போல இவர்கள் அவசரமாகப் பார்க்க வருவது அவனுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. தோழர் சிவத்தை அவனுக்கு ஏற்கனவே தெரியும். அவர் அனுபவம் உள்ள நீண்டகாலத் தோழர் என்பதால் அவரை அவமதிக்க அவனால் முடிவதில்லை. கண்ணன் ஒரு பொருட்டாக இல்லை என்றாலும் தோழர் சிவத்தோடு வரும்போது அவனைமட்டும் கடுமையாகச் சாட முடியாத அவஸ்தை தோழர் ரவிக்கு. தோழர் சிவம் உள்ளே சென்று,
‘ரவி… சுமன்?’
‘ஓ…’ என்று கண்ணைக் காட்டினான்.
‘என்ன நடந்தது?’
‘என்னக்கு என்ன தெரியும் தோழர்? வந்தவரைப் பார்த்தன். இடக்கையில சாதுவா வெடிப்பு இருக்குமோ எண்டு ஒரு ஐமிச்சம். மட்டை வைச்சுக் கட்டி இருக்கிறன். வீக்கம் தொடர்ந்து இருந்தால் தஞ்சாவூருக்கு அனுப்ப வேணும். மாறீடும் எண்டு நினைக்கிறன். தோழர் ஒழுங்காப் பயிற்சியைச் செய்திருக்கலாம்தானே? அதை ஒழுங்காச் செய்யாமல் எதுக்கு இவர் இப்பிடி அடி வாங்குகிறார்? பிறகேன் இங்க இயக்கத்துக்கு வந்தவர்?’
‘அவை அவையின்ரை பிரச்சனை அவை அவைக்கு. நாங்கள் எப்பிடி அதை முழுமையா உணரமுடியும்? பயிற்சி செய்ய முடிஞ்சால் ஏன் இப்படி அடி வாங்கிறான் எண்டும் யோசிச்சுப் பார்க்கலாம் தானே? ஏதோ அவனால முடியாமல் இருக்கலாம். அதை எல்லாராலும் விளங்கிக் கொள்ள முடியாது எண்டு நினைக்கிறன்.’
‘ம்… நீங்கள் சொல்லுகிறதிலையும் ஒரு அர்த்தம் இருக்குது. எண்டாலும் பயிற்சிக்கு எண்டு வந்தால் உயிரைக் கொடுத்து எண்டாலும் அதைச் செய்ய வேணும் என்டு நான் நினைக்கிறன். பயிற்சிதானே முக்கியம். அதையே செய்யாமல் விட்டால் அவங்கள் எப்பிடி விடுவாங்கள்?’
‘சரி தோழர் ரவி. எங்களுக்கும் விளங்குது. நாங்கள் இதைப் பற்றிப் பிறகு கதைப்பம். இப்ப தோழர் சுமனோடை கதைக்கலாமே?’
‘ம்…. கதையுங்க.’
அவ்வளவு துணிவாகக் கதைத்த சுமன் கண்ணனையும் தோழர் சிவத்தையும் கண்டவுடன் தேம்பித் தேம்பி அழுதான். அவனைப் பார்க்கக் கண்ணனுக்கும் தோழர் சிவத்திற்கும் பரிதாபமாக இருந்தது. அவனது முதுகில் தடவிய வண்ணம் அவனைத் தன்னோடு கண்ணன் அணைத்துக் கொண்டான். அப்படி இருந்தும் அவன் தொடர்ந்தும் தேம்பித் தேம்பி அழுதான்.
‘அழுகிறதை நிப்பாட்டும் தோழர் சுமன். நீங்கள் என்ன குழந்தைப் பிள்ளையா? நீங்களே உங்கடை இந்த நிலைமையை மாத்த வேணும். வேறை யாரும் அதுக்கு ஒண்டும் செய்ய முடியாது.’ என்றார் தோழர் சிவம்.
‘என்னால முடியல்லத் தோழர். முடிஞ்சால் நான் செய்யாமலா இருப்பன். என்னை வேறை எதுக்காவது விடச் சொல்லிக் கேட்டுப் பாக்கிறீங்களா தோழர்? எனக்குக் கேட்கச் சங்கடமாய் இருக்குது.’
‘அதையும் நீங்கள் கேட்கிறதுதான் சரியாய் இருக்கும் தோழர். நான் கேட்டா அதுக்கு என்ன சொல்லுவினமோ தொரியாது. நான் முயற்சி செய்கிறன். நீங்களும் பொறுப்பாளரிட்டை கேட்க முயற்சி செய்யுங்க. இல்லாட்டி நீ யார் இடையில தரகர் எண்டு கேட்டாலும் கேட்பினமோ தெரியாது.’
‘எனக்குக் கை வலி தாங்க முடியுதில்லை. குறையவிட்டிப் பொறுப்பாளர் இருக்கேக்க போய் கேட்கிறன்.’
‘அது புத்திசாலித்தனமான வேலை.’
‘கண்ணன் நீயும் கேட்கிறியா?’
‘அதேதான்… நான் கேட்டா உனக்கு வாய் இல்லையோ எண்டு கேட்டாலும் கேட்பினம். எதுக்கும் முயற்சி செய்து நீயே கேள். அதுதான் நான் நல்லது எண்டு நினைக்கிறன். தோழர் சிவம் நீங்கள் என்ன சொல்லுகிறியள்?’
‘தோழர் கண்ணன் நீங்கள் சொல்லுகிறது சரி. எதுக்கும் தோழர் சுமன் முதலில கேட்கிறதுதான் புத்தி. அதில ஏதும் சிக்கல் வந்தால் பிறகு கதைச்சுப் பார்க்கலாம்.’
‘சுமன் உது நல்ல மாற்றம்.’ என்றான் கண்ணன்.
‘அப்பிடி இல்லை. என்னால யாரும் நேரடியாகப் பாதிக்கப்படக் கூடாது எண்டு நினைக்கிறன்.’
‘சரி எதுவெண்டாலும் நன்மையா முடிஞ்சால் சரி.’
‘சரி அப்ப நாங்கள் வெளிக்கிடுவம் தோழர். சுமன் கையைப் பார்த்துக் கொள்ளும். இரவைக்கு வந்து பார்க்க இயலும் எண்டா வந்து பார்க்கிறம். ரவி சுமன்ரை கைக்குப் பெரிய பிரச்சினை ஒண்டும் இல்லைத் தானே?’
‘அது தெரியாது தோழர். பின்னேரம் அல்லது இரவைக்குத்தான் சரியாய் தெரியும். அப்பிடி வீக்கம் வத்தாட்டி நாளைக்கு வாற வண்டியில ஒரத்தநாடு அனுப்பி வைப்பன். பிறகு அவை தஞ்சாவூருக்கு அனுப்பி வைப்பினம். அங்க மெடிக்கல் கொலேஜ்சில வைத்தியம் பார்ப்பாங்கள்.’
‘ஓ அப்பிடியே தோழர்.’
‘ம்… எதுக்கும் வெயிற் பண்ணித்தான் பார்க்க வேணும்.’
‘சரி. தாங்ஸ் தோழர். அப்ப நாங்கள் வாறம்.’
‘சரி.’
கண்ணனும் எழுந்தான். சுமன் ஏக்கத்தோடு பார்த்தான். ஆனாலும் தொடர்ந்து அவனோடு இருக்க முடியாது. வந்த காரியத்தை ஒரு கணம்கூட மறவாது செய்து முடிக்க வேண்டும். அதிலிருந்து சற்றும் தவறுவதாகக் கண்ணனுக்கோ தோழர் சிவத்திற்கோ எந்த எண்ணமும் இருக்கவில்லை.