9. மருத்துவக் கல்லூரி

அடுத்த நாள் காலைப் பயிற்சி முடிந்து வந்ததும் வராததுமாய் கண்ணன் அவசரமாக மருத்துவ முகாமிற்குச் சென்றான். அவன் புறப்பட்ட வேகத்தைப் பார்த்த தோழர் சிவமும் அலுப்புப் பாராமல் அவன் பின்னே சென்றார். மருத்துவ முகாமில் இவர்கள் வருவதை ரவி புன்னகையோடு பார்த்துக் கொண்டு நின்றான். அவன் அப்படி நின்றதில் சிலவேளை சுமனிற்கு நன்கு குணமாகி இருக்குமோ என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டது. என்றாலும் அதை ரவியின் வாயால் கேட்டாலே உண்மை துலங்கும் என்பது விளங்கியது.
‘என்ன ரவி? எப்பிடி இருக்குது சுமனுக்கு?’
‘ஓ… அவரை காலைமை வந்த வண்டியில ஒரத்தநாட்டிற்கு அனுப்பி வைச்சாச்சுது. கை வீக்கம் குறைய இல்லை. எலும்பு வெடிச்சதோடை இரத்தக் கசிவும் இருக்கலாம் எண்ட ஐமிச்சம். அதுதான் அனுப்பி வைச்சாச்சுது. இங்க கிடந்து அடி வேண்டுகிறதிலும் இப்படியே போய் ஏதாவது வேற திசையில தன்னை வளர்த்துக் கொள்ளட்டும். அதுக்கு இது வசதியாக இருக்கும். அதிலயாவது பிழைச்சுக் கொண்டான் எண்டாச் சரி தோழர்.’
‘என்ன தோழர். இப்பிடி எண்டா காலைமை வந்து பார்த்து இருக்கலாம். அவனைப் பார்க்க முடியாமல் போயிட்டுதே…’
‘நானும் ஐமிச்சத்தில்தான் இருந்தன். ஆனால் எதுவும் தப்பாக நடக்கக் கூடாது எண்டதால அனுப்ப வேண்டியதாய் போயிட்டுது.’
‘சரி. அதுவும் நல்லதுதான். வாங்கத் தோழர் நாங்கள் முகாமிற்குப் போவம். அவன் சுகமாகி வரட்டும் பார்க்கலாம்.’
‘ம்…’ கண்ணனுக்கு நெருங்கிய நண்பன் ஒருவனை இளந்தை தாங்க முடியாத சோகம். அதே நேரம் அவன் தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டான் என்கின்ற சந்தோசம்.
ழூ
அன்று இரவு சுமன் ஒரத்தநாடு அலுவலகத்தில் தங்கினான். தோழர்களோடு சேர்ந்து சுற்றி இருந்து ரொட்டியும் பருப்பும் சாப்பிட்டான். முகாமில் சமைப்பதைவிட இங்குச் சுவையாகச் சமைத்து இருந்தது மிகவும் பிடித்துக் கொண்டது. சாப்பிட்ட பின்பு தூங்குவதற்குப் பாய் கொடுத்தார்கள். யாரோ ஒரு தோழர் போர்த்திப் படுப்பதற்குத் துப்பட்டி ஒன்றும் கொடுத்தார். பக்கத்தில் அழுக்கு நீர் தங்கி நிற்கும் இடம் இருந்தது. அதனால் நுளம்புத் தொல்லை இருந்தது. அது ஒரு பக்கம் என்றால் யோசனை மறுபக்கம் அவனைப் போட்டுப் புரட்டி எடுத்தது.
சுமனிற்கு மீண்டும் முகாமிற்குத் திரும்பிப் போவதற்குச் சற்றும் விருப்பம் இல்லை. ‘இப்போது கண்ணனும் தோழர் சிவமும் அருகில் இல்லை. இப்போது என்ன செய்தாலும் அவர்கள் மேல் பழியோ அல்லது சந்தேகமோ உண்டாகாது. ஆனால் இந்த அலுவலகத்திலிருந்து தப்ப முடியாது. அது மிகவும் ஆபத்து. இங்கே ஊனில் புழு நெளிவது போல அதிக எண்ணிக்கையில் தோழர்கள் எங்கும். இங்கு இருந்து தப்பி முதலில் தஞ்சாவூருக்கே போக வேண்டி இருக்கும். அதற்குள் அங்குத் தேடத் தொடங்கி விடுவார்கள். இங்கு எதுவும் தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும். தஞ்சாவூருக்கு முதலில் போக வேண்டும். அதன் பின்பு எப்படித் தப்பிப்பது என்று யோசிக்கலாம். தப்பிக்க வேண்டும். இனி முகாமிற்குத் திரும்பிப் போகக்கூடாது. தப்பிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். மீண்டும் பிடிபட்டால் அடித்தே கொல்வார்கள் என்பது நிச்சயம். அப்படிப் பிடிபடும் சந்தர்ப்பம் வந்தால் எப்படியாவது தற்கொலை செய்து கொள்ள வேண்டும். எந்தப் பிரச்சனையும் இல்லாது தப்பிக்க வேண்டும். தப்பித்து எப்படியாவது இங்கிருந்து மற்றாஸ் போக வேண்டும். அங்கே கவனமாக யாரோடாவது தப்பி இருக்க வேண்டும். மற்றாஸ் எப்படிச் செல்வது? கைவிரலைத் திருப்பிப் பார்த்தான். அந்த மெல்லிய தங்க மோதிரம் இன்னும் பௌத்திரமாக அவன் கைவிரலிலிருந்தது. தஞ்சாவூரில் கவனமாகச் செயற்பட வேண்டும். நிச்சயம் முடியும். அமைதியாகப் படுக்க வேண்டும். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராது நடந்து கொள்ள வேண்டும்.’
என்று பலவாறு எண்ணி எண்ணிப் புரண்டவனை நித்திரை அதிக நேரம் ஏமாற்றியது. கை வேறு சுண்டிச் சுண்டி வலித்தது. கடைசியாகத் தோழர்களிடம் கேட்டு வேதனை தணிய அவர்கள் கொடுத்த ஏதோ மாத்திரையை நம்பிக்கையோடு விழுங்கிவிட்டுப் படுத்தான். அதன் உதவியுடனும் இருந்த அலுப்பிலும் அந்த நுளம்புக் கடியையும் தாண்டி அவன் நித்திரையாகிப் போய்விட்டான். காலைத் தோழர் ஒருவர் உலுக்கி எழுப்பினார். சுமன் என்ன என்பதை ஊகிக்க முடியாது திகைப்பதைப் பார்த்துவிட்டு,
‘என்ன தோழர்?’ என்றான்.
‘நீங்கள் தஞ்சாவூருக்குப் போக வேணும்.’
‘அதுக்கு என்ன தோழர்?’
‘வண்டி வரப்போகுது. கெதியா எழும்பி வெளிக்கிடுங்க…’
‘ஓ… தாங்ஸ் தோழர்.’

சுமனுக்கு அலுப்பாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் படுத்து இருக்கலாம் போல அலுப்பு. இருந்தாலும் அவனது தற்போதைய இலட்சியத்திற்கு அது தடையானது என்பதை அவன் விளங்கிக் கொண்டான். அதனால் மெதுவாக முதலில் எழுந்து அமர்ந்தான். கைகளை முறித்துத் தனது முழிப்பை உறுதி செய்து கொண்டு எழுந்தான்.
காலைக்கடன் முடித்துவிட்டுச் சாப்பிடலாம் என்று எண்ணிய போது வண்டி வந்துவிட்டது. காலைச் சாப்பாடும் தயாராக இருக்கவில்லை. அதனால் அன்று காலைச் சாப்பாடு சாப்பிடாமலே சுமனும், குமரன் என்கின்ற யோண்டிஸ் வருத்தக் காரரும் வண்டியில் ஏறினார்கள். வண்டி தஞ்சாவூருக்குப் பொருட்கள் எடுக்கச் செல்வதால் அதில் அழைத்துச் சென்றார்கள். தஞ்சாவூரில் ஸ்ராலின் என்கின்ற தோழர் சந்தித்து அழைத்துச் செல்வார் என்பது சுமனுக்கு முதலில் தெரியாது. வண்டியிலேயே நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள் என்றே எண்ணி இருந்தான். வண்டி தஞ்சையின் செழிப்பையும் தணல் தழுவிய காற்றையும் கிழித்துக் கொண்டு தஞ்சாவூர் நோக்கிச் சென்றது. அந்த அழகில் இயற்கையின் இரசனையில் சுமனுக்குக் கை நோ கனவிலும் மறந்து போய்விட்டது. அந்த இரசிப்பில் ஆழ்ந்திருந்ததால் நேரம் சட்டென மாயமாகியது. யோண்டிஸ் வருத்தக்காரர் சுமனுக்குக் கை கொடுத்துச் சிரித்துவிட்டு அவரும் இயற்கையை இரசித்தார்.
வண்டி கிராமங்களைப் புறந்தள்ளி நகருக்குள் புகுந்தது. அதன் வேகமும் குறைந்தது கொண்டே சென்றது. இறுதியாக வண்டி தஞ்சாவூரில் ஒரு விடுதியின் முன்பு நின்றது. அந்த விடுதியின் முன்பு ஸ்ராலின் என்கின்ற தோழர் இவர்களுக்காகக் காத்து நின்றார். வண்டி நின்றதும் சாரதி வந்து இவர்களை இறங்குமாறு கூறினார். இறங்கிய பின்பு இவர்களை அழைத்துக் கொண்டு ஸ்ராலினிடம் சென்றார். ஸ்ராலின் சாரதியோடு சிறிது நேரம் கதைத்துக் கொண்டு நின்றார். அதைப் பார்க்கும் போது சாரதிக்கும் ஸ்ராலினுக்கும் நல்ல பழக்கம் இருக்கும் போலவே தோன்றியது. அவர்கள் கதைத்து முடிந்த பின்பு வண்டி புறப்பட்டது. வண்டி புறப்பட்டதும் ஸ்ராலின் இவர்களை நோக்கி வந்தார். வந்தவர்,
‘அப்ப நாங்கள் வெளிக்கிடுவமே?’ என்றார்.
‘வெளிக்கிடலாம் தோழர். காலைமை நாங்கள் சாப்பிடேல்ல. சாப்பிடாமலே கூட்டிக் கொண்டு வந்திட்டார். இப்ப தாகமாகவும், பசியாகவும் இருக்குது. ஏதாவது சாப்பிட முடியுமா?’
‘ஓ சாப்பிட வேணுமா?’
‘சாப்பிட்டா நல்லாய் இருக்கும் தோழர்.’ என்று அவரோடு கதைத்துச் சம்மதிக்க வைத்தார் அந்த யோண்டிஸ் தோழர்.
‘சரி வாங்க தோழர்…’  என்று அதன் பின்பு மூவரும் சென்று முன்னே இருந்த விடுதியில் இட்லி சாப்பிட்டார்கள். அது யாழ்ப்பாணத்தில் கண்டிராத புதுமையான சுவை. சாப்பிட்ட பின்பு தாமதியாது தோழர் ஸ்ராலினோடு மருத்துவக் கல்லூரிக்குப் புறப்பட்டார்கள்.
மருத்துவக் கல்லூரிக்கு அருகில் ஒரு அறை கழகத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தது. அதில் ஸ்ராலினோடு மருத்துவம் பார்க்க வருபவர்களும் தங்கிக் கொள்வார்கள். மருத்துவக் கல்லூரியில் ஸ்ராலினை விடுதலைப்புலி என்று மட்டுமே தெரிந்து இருந்தது. அப்போது தமிழகத்தில் அனைத்துப் போராளிகளும் அவர்களுக்கு விடுதலைப்புலிகளே. அதற்குள் இருந்த பிரிவுகள் பற்றி அவர்கள் கவலைப்பட்டதே இல்லை. தமிழகத்தில் அப்போது விடுதலைப்புலிகள் என்பதற்காகவே பல சலுகைகள் இருந்தன. இங்கேயும் அந்தச் சலுகை தவறாது இருந்தது. யோன்டிஸ் வருத்தமாய் இருந்த தோழரைச் சோதித்து மருந்து முதலில் எழுதிக் கொடுத்தார்கள். சுமனை இன்று எக்ஸ்றே எடுத்து விட்டு நாளை வருமாறு கூறி இருந்தார்கள். அதனால் மீண்டும் திரும்பி மருத்துவக் கல்லூரிக்கு அருகிலிருந்த அறையில் சுமனைத் தங்குமாறு கூறிவிட்டு, மற்றைய தோழரை அழைத்துக் கொண்டு பேருந்தில் அவரை ஒரத்தநாடு அனுப்புவதற்கு ஸ்ராலின் சென்றார். அவர்கள் சென்றதால் கிடைத்த தனிமையும் சுதந்திரமும் சுமனுக்கு ஒருவித அதிசயமாக இருந்தது. இப்படித் தனித்து விடுவார்கள் என்று அவன் நினைத்தே இருக்கவில்லை. இதைவிட்டால் இப்படி ஒரு சந்தர்ப்பம் ஒருபோதும் வராது என்கின்ற உண்மை விளங்கியது. சுமன் அவசரமாகப் புறப்பட்டான். கதவைச் சாத்தினான். தெருவில் வந்து நின்று ஏதாவது வாகனங்கள் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு நின்றான். ஒரு பாரவூர்தி வந்தது. சுமன் யோசிக்கவில்லை. கையை நிறுத்துமாறு காட்டினான். அவன் அதிஸ்ரம் வண்டி நின்றது.
‘சார் வண்டி எங்க போகுது? நானும் வரலாமா சார்?’
‘வண்டி பாண்டிச்சேரி போகுது. நீங்க பாண்டிச்சேரி வாறீங்களா சார்?’
‘இல்லை சார்… நான் மற்றாஸ் போகணும்.’
‘சரி ஏறுங்க சார். விழுப்புரம் வாங்க. அங்கிட்டு இருந்து மற்றாஸ் போகலாம்.’

‘நல்லது சார். றெம்ப நன்றி சார்.’
வண்டி ஓட்டுபவர் சராசரி உயரம் இருப்பார். ஆனால் ஐயனார் போலப் பயம் தரும் நிறமும் மீசையும் கொண்டவர். இவரைப் பார்த்துவிட்டு நிச்சயமாகப் பெண்கள் மறந்தும் இவர் வண்டியில் ஏறமாட்டார்கள் என்று சுமனுக்குத் தோன்றியது. சுமன் ஏறியதும் வண்டி புறப்பட்டது. சாரதி வண்டியை வேகமாக ஓட்டிய வண்ணம் கதைக்கத் தொடங்கினார்.
‘சார் நீங்க கேரளாவா?’ என்று தனது முதலாவது கேள்விக் கணையைச் சுமனைத் தடுமாற வைப்பதாகத் தொடுத்தார்.
‘இல்லையே… ஏன் கேட்கிறியள்?’
‘இல்லை நீங்கள் பேசுகிறது ஒரு மாதிரி இருக்குது சார்.’
‘இல்லை சார். நான் விடுதலைப்புலி. அவசரமா மற்றாஸ் போகணும். அதுதான் உங்களுடைய உதவி எனக்குத் தேவைப்பட்டது.’
‘அப்பிடீங்களா…? முதன்முறையா நம்ப வண்டியில ஏறின விடுதலைப்புலி நீங்கள்தான் சார். சிலோன்ல தொடர்ந்தும் கொடுமையா இருக்குதா? நம்மளுக்கு அங்க நடக்கிறதைக் கேள்விப்பட்டாக் கவலையா இருக்கும். கோவம் வரும். வாத்தியாரைத்தான் நம்பி இருக்கிறம் சார். நம்பள் அதைவிட என்ன செய்ய முடியும்?’
‘ஆமா சார். அங்க தொடர்ந்தும் பிரச்சினையாகத்தான் இருக்குது. வாத்தியார்தான் உதவ வேணும்.’
வண்டி தஞ்சாவூரைப் பின் தள்ளி விழுப்புரம் நோக்கிப் பயணித்தது. சுமனுக்குத் தற்போது மிகவும் நிம்மதியாக இருந்தது. என்றாலும் இந்தியாவில் இருக்கும் வரைக்கும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விழுப்புரத்தில் மெனக்கெடாது சென்னை சென்றுவிட வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். எப்படி என்பது தொடர்ந்தும் அவனுக்கு விளங்கவில்லை. அவன் கையில் பணம் இல்லை. பணம் இல்லாது பேருந்தில் பயணிக்க முடியாது. தொடர்ந்தும் அவன் பாரவூர்தியை நம்ப வேண்டும். அது சிலவேளை ஆபத்தில் முடியலாம். கையில் ஒரு மோதிரம் இராசி மோதிரம் என்று சொல்லி மன்றாடிக் கழற்றாது இருக்கிறது. அதை விற்றால் பணம் வரும் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் எப்படி விற்பது, எங்கே விற்பது என்பது அவனுக்கு விளங்கவில்லை.
‘என்ன சார் அமைதியாகீட்டியள்?’
‘ஒண்டும் இல்லை சார். ஊர் நினைவுகள்…’
‘உங்களுக்கு அப்பா அம்மா இருக்கிறாங்களா?’
‘இருக்கிறாங்கள் சார்.’
‘அவங்களை யார் பார்த்துக் கொள்ளுவாங்க? பாவம் இல்லையா சார்?’
‘பாவம்தான் சார். நாட்டிற்காக நாங்கள் வெளிக்கிட வேண்டியதாகீட்டுது. அவங்கடை நினைவு அடிக்கடி வருகுது.’
‘நீங்க விரைவா வெற்றி பெறணும். உங்க அப்பா அம்மாவோடை விரைவாகச் சேர்ந்து வாழ வேணும். எல்லாம் நல்லபடியா நடக்க வேணும் எண்டு கடவுளைப் பிராத்திக்கிறன் சார்.’
‘றெம்ப நன்றி சார். உங்களைப் போல நல்ல இதயம் உள்ள மனிசர்கள் இருக்கிறவரை எங்கடை போராட்டம் வெற்றி பெறாமல் விடமாட்டுது. திரும்பவும் தாங்ஸ் சார்.’
‘நாம எல்லாம் ஒரே இனம். நமளே உதவி செய்யாமல் நம்பிக்கை வைக்காமல் வேற யார் செய்ய முடியும் சார். ஈழத்தமிழருக்காய் பலகோடி உறவுகள் தமிழ்நாட்டில இருக்கிறம் சார். நாங்கள் எப்பவும் குரல் கொடுப்பம். உங்களுக்காகப் போராடுவம் சார்.’
‘உங்க அன்புக்கு எப்பிடி நன்றி சொல்லுகிறது எண்டே எனக்குத் தெரிய இல்லைச் சார். இந்த ஆதரவுதான் எங்களை வெற்றிபெற வைக்கும்.’
‘இது எங்கடை கடைமை சார். ரீ சாப்பிடுவமா சார்?’
‘இல்லைப் பருவாய் இல்லை.’
‘ஒரு விடுதலைப்புலிக்கு ரீ வாங்கிக்கொடுத்த பாக்கியத்தை எனக்குத் தாங்க சார்.’
சுமனிற்குப் தேநீர் அருந்தப் பணம் இல்லையே என்கின்ற ஏக்கம் மாறியது. ஓ… இப்பிடியும் மனிதர்கள் இருப்பார்களா என்கின்ற மலைப்பு உண்டாகியது. தேநீர் அருந்த வேண்டும் என்கின்ற தவனம் அவனிடம் நீண்ட நேரமாகத் தவித்தது. ஆனால் கையில் பணம் இல்லாததால் அதை யாருக்கும் தெரியாது அடக்கி வைத்திருந்தான். அந்த அவஸ்தைக்கு இப்போது விடை கிடைத்ததாக அவனுக்குத் தோன்றியது.
‘உங்க அன்பை மறுக்க முடியுமா? சரி வாங்க போவம்.’
இருவரும் இறங்கி அந்தத் தேநீர்க்கடையை நோக்கிச் சென்றார்கள். அவர் தேநீரோடு விட்டுவிடவில்லை. அத்தோடு சாம்பார் வடையும் வாங்கிக் கொடுத்தார். சுமன் எதுவும் சொல்லவில்லை. அவனுக்குப் பசிக்கத் தொடங்கி இருந்தது. அவன் கூச்சத்தைவிட்டுச் சுவைத்துச் சாப்பிட்டான். சாப்பிட்டு முடியவும் சாரதி பீடி பற்றினார். சுமனுக்கும் வேண்டுமா என்று கேட்டார். சுமன் அதற்கு வேண்டாம் என்று மரியாதையாகக் கூறிவிட்டு நின்றான்.
வண்டி மீண்டும் புறப்பட்டது.
‘உங்களுக்கு அலுப்பா இருந்த படுங்க சார். நான் விழுப்புரம் வந்த உடன உங்களை எழுப்பி விடுகிறன்.’
‘ஓ றெம்பத் தாங்ஸ் சார்.’
சுமனுக்குக் குற்ற உணர்வாய் இருந்தது. இயக்கத்தைவிட்டு ஓடுவது தெரிந்தால் இவர் இப்படி உதவி செய்வாரா என்பது அவனுக்கு விளங்கவில்லை. விடுதலைப் புலிகள் என்கின்ற இந்தச் சிகரமான நம்பிக்கை ஒருநாள் நொறுங்கிப் போய்விடும். அன்று இவர்களே எங்களை அடித்துக் கலைத்தாலும் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. அது நடப்பதற்கு முன்பு இங்கு இருந்து வெளியேறிவிட வேண்டும். விழுப்புரத்தில் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். அங்கிருந்து எப்படி மற்றாஸ் செல்வது என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். மோதிரத்தை விற்றால் பிரச்சினை இல்லை. சென்னை சென்றுவிட்டால் கொழும்பிற்குத் தொடர்பு கொள்ளலாம். அப்படித் தொடர்பு கொண்டால் மண்ணடியில் பணம் எடுக்கலாம். அதன் பின்பு கவனமாக இருந்து இப்படியே எங்காவது சென்றுவிட்டால் சரி. இந்த விபரீதமான வெளியேற்றத்திற்கு அது முற்றுப் புள்ளியாக இருக்கும். எல்லா நல்லபடியாக நடக்க வேண்டும். இறைவன் அதற்கு அருள் புரிய வேண்டும்.
‘ஏன்ன சார் நித்திரை வரலையா?’
‘இல்லை சும்மா யோசினை.’
‘சரி… சரி…’
என்ன நடந்தது என்று தெரியாது. சிறிது நேரத்தில் சுமன் தன்னை மறந்து கண்ணயர்ந்து போய்விட்டான். விழுப்புரம் வந்ததும் சாரதி அவனை எழுப்பினார். மாலை ஆறுமணி போல இருந்தது. விழுப்புரம் வந்துவிட்டதாக அவனிடம் கூறினார். சுமன் மீண்டும் மீண்டும் நன்றி கூறிவிட்டு இறங்கினான். சுமனக்குத் தனது கையில் இருக்கும் மோதிரத்தை விற்பதற்கு உண்மையில் விருப்பம் இருக்கவில்லை. இருந்தாலும் வேறு வழி இல்லை என்பது அவனுக்கு நன்கு விளங்கியது. அதனால் அவன் நகைக் கடை ஒன்றிற்குள் சென்றான். தனது விரலிலிருந்த மோதிரத்தைக் காட்டி இதை விற்க வேண்டும் என்று கூறினான். அவன் விரலிலேயே இருந்ததினால் அவர்களுக்கு நம்பியீனம் ஏற்படவில்லை. கழற்றித் தருமாறு கேட்டார்கள். சுமன் கழற்றிக் கொடுத்தான். உரைத்துப் பார்த்துவிட்டு இரண்டாயிரம் ரூபாய் தரலாம் என்றார்கள்.
‘போட்டுத் தாங்க சார்’ என்றான் சுமன்.
‘கட்டுபடியாகாது சார். நூறு ரூபா போட்டுத் தரலாம்.’ என்றனர்.
‘சரி தாங்க சார்.’
அவர்கள் பணத்தை எண்ணிக் கொடுத்தார்கள். சுமன் வாங்கிக் கொண்டு மற்றாசிற்கு செல்லும் பேருந்தை நோக்கிச் சென்றான்.