10. அகப்பட்ட அபலைகள்

முகாமின் பிரதான வாயிலுக்கு அருகாமையில் ஒரு குடிலிருந்தது. அதில் ஒரு மனிதனைச் சமுக விரோதி என்று கூட்டி வந்து அடித்துச் சித்திரவதை செய்தார்கள். யார் சமுக விரோதிகள்? அதையா யார் எப்படித் தீர்மானிப்பது? அந்தச் சமுக விரோதி என்று குற்றம் சாட்டப்பட்டவர் இன்று என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது. அதற்குள் தான் இன்று கண்ணனையும் தோழர் சிவத்தையும் வாயில் சீலை அடைந்து, கைகால் கட்டிச் சித்திரவதை செய்தார்கள். அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி தோழர் சுமன் எங்கே சென்றார் என்பது மட்டுமே. அவன் மருத்துவமனைக்குச் சென்றான் என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். அதையே அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினார்கள். சுமன் மருத்துவமனையிலிருந்து எங்கே போனான் என்பது அவர்கள் இருவருக்கும் தெரியாது என்பதை அந்தக் குள்ள மனிதனும், தடித்த சிவந்த குண்டு மனிதனும் நம்ப மறுத்தனர். இவர்கள் கழகத்தின் துப்பறியும் பிரிவின் முக்கியமானவர்கள். மனிதரைக் கொடுமையாகச் சித்திரவதை செய்வதால் துப்பறிந்து கொள்ளலாம் என்பதை நம்புபவர்கள். நல்ல வேளையாகத் தோழர் சிவத்தையும், கண்ணனையும் சித்திரவதை செய்யத் தற்போது கொட்டான் தடிகள் மட்டுமே பாவித்தார்கள். அதைவிடப் பல கொடுமையான சித்திரவதைகள் நடப்பதாகக் கேள்விப்பட்டது உண்டு. ஆனால் அதைத் தோழர் சிவமோ, கண்ணனோ நேரே பார்த்தது இல்லை. கொட்டான் தடிகளை வைத்து ஓடியவர்களை மைதானத்தில் ஓடவிட்டு மிருகத்தனமாய் தாக்குவதை பொதுவாக அனைத்துத் தோழர்களும் பார்த்து இருக்கின்றார்கள். அடித்து முறித்துவிட்டு வைத்தியம் பார்ப்பது அதைவிடக் கொடுமை. அதை உதவி என்கிறார்கள். அதன் தாற்பரியம் சிவத்திற்கு விளங்கவில்லை. தோழர் சிவத்தைப் பொறுத்தவரை இவர்கள் மனிதரே அல்ல. நினைவுகள் அறும்படி கொட்டான் தடியால் தாக்கும் சித்திரவதை தொடர்ந்தது. கண்ணனுக்கு ஒரு அடி விழுந்தால் தோழர் சிவத்திற்கு பத்து அடி என்கின்ற விகிதத்தில் அது இருந்தது. கண்ணனுக்கு அது ஏன் என்று கேட்க முடியாது. வாய் கட்டப்பட்டு இருந்தது முதல் காரணம் என்றால் கேட்டால் பதில் அல்ல அடி மட்டுமே விழும் என்பது மறு காரணம். இந்தச் சித்திரவதைகள் இரவு பன்னிரண்டு மணிக்குப் பின்பு தொடங்கும். அப்போது முகாமில் மற்றைய தோழர்கள் உறங்கி விடுவார்கள். தோழர்களை நிறுத்தி வைத்தே ஓடியவர்களுக்கு வெளிப்படையாகத் தண்டனை கொடுப்பார்கள். கண்ணனும் தோழர் சிவமும் ஓடவில்லை. ஆனால் ஓடிய சுமனுக்கு உதவி இருப்பார்கள் என்கின்ற சந்தேகம். ஒரத்தநாட்டுச் சவுக்கம் தோப்பிற்குள் தோழர்களோடு தோழராக இருக்கும் இவர்கள் எப்படித் தஞ்சாவூர் நகரத்திலிருந்த சுமனிற்கு உதவி செய்திருக்க முடியும் என்கின்ற அடிப்படை பூகோள இடைவெளிகூட அவர்களுக்கு விளங்கவில்லை. இயக்கங்கள் என்பதில் கலவரத்திற்குப் பின்பு தோழர்கள் என்பவர்கள் எந்தத் தகுதியும் இன்றி எழுந்த மானமாக உள்வாங்கப்பட்டவர்களே. அதற்கான ஒரே ஒரு முதல் முக்கிய தகுதி அவர்கள் தமிழர்களாய் பிறந்து இருக்க வேண்டும். சிங்கள இராணுவத்திற்கு அவர்கள் சிங்களவராய் இருப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல இயக்கங்களுக்கும் தமிழராய் இருப்பது மிகவும் முக்கிய தகமை. அதையும் தாண்டி ஒருசிலர் புறநடையாக இருந்தார்கள். தமிழ் இராணுவங்களின் ஆரம்பக் கொள்கைகள் வேறாக இருந்து இருக்கலாம். ஆனால் தோழர் சிவமும் கண்ணனும் பார்க்கும் தற்போதைய நடைமுறை இதுவாகவே இருந்தது. இதனால் இயக்கத்திற்குள் நிறையக் குற்றவாளிகள், குண்டர்கள், எந்தக் கொள்கையும் ஆற்ற ஆயுதத்தில் மோகம் கொண்ட வன்முறையாளர்கள் என்பதாக எந்த வரையறையும் அற்று அங்கத்தினர் உள்வாங்கப்பட்டார்கள். அவர்களே கழகத்தின் நிர்வாகத்திலும், துப்பறிவும் பிரிவு போன்ற முக்கிய பதவிகளிலும் அங்கத்துவம் வகித்தனர். அப்படி வந்தவர்களிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்? தோழர் சிவத்திற்கும் கண்ணனுக்குமான சித்திரவதை விடியும் வரை நடந்தது. அது பல நாட்கள் தொடர்ந்தது.
ழூ
சில காலத்தின் பின் கண்ணனை வருத்தக்காரரின் குடிலில் போட்டு வைத்தியம் செய்தார்கள். தோழர் சிவத்தை இருட்டறைக்குள் போட்டிருக்கிறார்கள் என்று கண்ணன் கேள்விப்பட்டான். ஆனால் அவன் இயக்கத்திலிருந்து வெளியேறும் வரைக்கும் சிவத்தை மீண்டும் உயிரோடு கண்டதே இல்லை. யாரும் கண்டதாக அவனிடம் கூறியதும் இல்லை.
கண்ணன் இயக்கம் செயலிழந்த பின்பு சென்னை சென்றான். பல மாதங்களின் பின்பு கனடாவிலிருந்த சுமனோடு தொடர்பு கிடைத்தது. அவன் உதவியோடு அவன் டென்மார்க் சென்றான்.
–முற்றும்–

பின்குறிப்பு:
இன்று கண்ணனும் சுமனும் ஆயுதமேந்திய எந்தப் போராட்டத்திலும் அல்லது அப்படி நடந்த யுத்தத்திலும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டதே இல்லை என்பதை வலுவாக நம்புவதோடு அப்படியான ஆயுதப் போராட்டங்களை முழுமையாக வெறுத்து, அப்படியான போராட்டங்களுக்கு, அல்லது அதைத்துத் தூண்டும் விசமிகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார்கள். போராட்டம், புரட்சி என்று கூறி மனிதம் வெட்கிக்கும் சித்திரவதைகளையும், மனிதவுரிமை மீறலைச் செய்வதை அல்லது அதை நியாயப்படுத்துவதை மனிதம் மதிக்கும் யாரும் ஏற்கக்கூடா என்பதே அவர்கள் இன்றைய இறைஞ்சலாக, மனமுருகும் வேண்டுகோளாக இருக்கிறது.